மௌனத்தால் உடைந்த காதல் 17

சுதா மகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வந்து விட்டாள்.
 

 

எவ்வளவோ கெஞ்சி பார்த்தும்,மனைவி வராமல் தாயுடன் சென்றவுடன், ரொம்ப நேரமாக கொட்டும் மழையில் நின்றான்..தன்னுடனே மகனும் அழுதபடி நிற்கவும்..
 

 

மகனை தூக்கிக்கொண்டு தாய், தந்தை அழைத்ததால், வீட்டிற்குள் நுழைந்தவன்.
 

 

ஈரத்தலையுடன் , ஈர உடையுடனே வந்து சோபாவில் தலைக்கு கைகளை கொடுத்தபடி உட்கார்ந்து விட்டான்.
 

 

” நீ என்ன இப்படி உக்காந்திருக்க? சனியன் விட்டது,பீடை ஒழிஞ்சதுனு  நினைச்சு  சந்தோஷப்படு,இனியாவது  நிம்மதியா இரு!” என்று உதயா கூற ,
 

 

வேகமாக அவளை அடிக்க கை ஓங்கி கொண்டு வந்தவன். “பொம்பள புள்ள ! தோலுக்கு மேல  வளர்ந்த பிள்ளை ,அதுவும் கட்டிக்கொடுத்த புள்ள,  இன்னொருத்தன் பொண்டாட்டி மேல, கை வைக்கக் கூடதுனு பாக்குறேன்! தொலைச்சிடுவேன் ! இன்னொரு வார்த்தை பேசினா! கொன்னு பொலி போட்டுட்டு போயிட்டே இருப்பேன்! ஜாக்கிரதை! இனி ஒத்த வார்த்தை பேசும் முன்னே யோசிச்சு பேசு! “என்றான் கண்களில் அனல் பறக்க,
 

 

“என்னடா, கூட பொறந்தவளை கை ஓங்கிட்டு வர?  கட்டினவளை அடிச்சு அடக்க ஒடுக்கமா வீட்ல இருக்க வைக்க துப்பு இல்ல , கூட பொறந்தவ கிட்ட உன் வீரத்த காட்டுற?” என சித்ரா பொங்க.
 

 

” எம்மா அமைதியா போயிடு.இல்லனு வை என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது, இந்த கையை அவகிட்ட ஓங்கி இருக்க கூடாது ,உன்கிட்ட ஓங்கி இருக்கணும் . அம்மாவா போயிட்டியே என்ன பண்ண?”என்றான் சிறிதும் ஆத்திரம் மட்டு படாமல்,
 

 

அதிர்வாக மகனை சித்ரா பார்க்கவும் .
 

 

“என்ன   அண்ணா பேச்சு பேசுற ?அம்மாவ கை ஓங்குவியா ?”
 

 

“வாய மூடிக்க. உன்னால தான் இந்த வூட்டுல இத்தனை கலகமும், அம்மாவை ஏத்திவிட்டு  ஏத்திவிட்டு நல்லா இருந்த குடும்பத்துல குழப்பம் பண்ணிட்டு திரியுற.”
 

 

“நான் ஒன்னும் இல்லாத விஷயத்தை சொல்லலையே..  இருக்குறதை தான் சொன்னேன்..”
 

 

“ஏன்மா இவ சொன்னா உனக்கு எங்க போச்சு புத்தி. இவ சொன்னதாவே இருக்கட்டும். உனக்கு தெரிய வேணாம் சுதாவை பத்தி, நீ என்கிட்ட இதபத்தி சொல்லும் போதெல்லாம் அத்தனை முறை சொல்லிருந்தேன் தான. நீ சாதாரணமா சொல்ற, உன் மக ஏத்திவிட்டதாலனு நானும் ரெண்டு மூணு நாளா உனக்கு பதிலும் சொல்லிட்டு தானே போறேன்.
 

 

ஆனா என்ன பேச்சு பேசுற ? உன் மக ஒருத்தன் கூட ராத்திரி நேரத்துல தினம் வந்து இறங்கினான்னா இப்படித்தான் பேசுவியா ?”
 

 

“நீ என்னடா. இப்பதான் உன் மாமியாக்காரி சொல்லிட்டு போனா அடுத்து நீயா ?”
 

 

“போதுமா நிறுத்து! எந்த வீட்டு பிள்ளையா இருந்தாலும், பேச்சு பேச்சுதாமா. உன்கிட்ட எல்லாம் பேசுறதே வேஸ்ட்” என்றவன். 
 

 

“ஆனா இவங்க இவ்ளோ பேசுறாங்க நீங்க அமைதியா இருக்கீங்க அப்பா?”  என்று  தன் தந்தையை குற்றம் சாட்டும் பார்வைப் பார்த்தான்.
 

 

தன் மகனைப் பார்த்தவர், “இப்போ நீ பேசின வார்த்தையை முன்னாடியே பேசி இருக்கணும் டா. அதை நீ பண்ணாதது உன் தப்பு.  உன் அம்மா ரெண்டு மூணு டைம் கேட்டான்னு சொன்னியே, அதையாவது நீ என்கிட்ட இதுவரைக்கும் சொன்னியா ?இல்ல ,உன் அம்மா இதுவரைக்கும் என்கிட்ட இந்த மாதிரி மருமக லேட்டா வர்றது எனக்கு ஒரு மாதிரி இருக்குன்னு சொன்னாளா ?கேளு ,உன் தங்கச்சிக்காரி பேசுறான்னு ,உன் அம்மாவை ஏத்திவிட்டு வேடிக்கை பாக்குறான்னு சொல்ற. ஆனா ,இந்த நிமிஷம் வரைக்கும், இந்த விஷயம் எதுவுமே என் காதுக்கு வரல.
 

 

இன்னைக்கு நடந்தது மட்டும் தான் எனக்கு தெரியும். சரி சாதாரணமா இன்னைக்கு தான ஃபர்ஸ்ட் கேட்கிறா உன் அம்மா. அதும் ஏதோ கேட்கிறான்னு மாமியார் மருமகளுக்குள்ள நம்ம போகக்கூடாது.அப்படி போன சின்ன விசியம் , அது பெருசா ஆய்டும் நினைச்சு நான் இருந்தேன். அதுக்குள்ளே எல்லாம் நடந்து முடிஞ்சிடுச்சு, சம்பந்தி அம்மா  வந்தது, நீ அமைதியா இருந்தது.
 

 

சம்பந்தி அம்மா கேட்டதுல எதுவும் தப்பில்லையே டா. அவங்க எதுவும் தப்பா கேட்டுட இல்லையே!” என்ற தன் தந்தையை பாவமாக பார்த்தான்.
 

 

” இப்போ இந்த பேச்சு பேசி பொங்குறவன். அப்ப பேசி இருக்கணும் டா சரியா?  அப்ப நீ பேசுற ஒத்த வார்த்தைல தான் இருக்கு .என் பொண்டாட்டி அப்படி இல்லன்னு சுதா முன்னாடி, உன் அம்மாவை பார்த்து நீ சொல்லி இருந்தேனா? இத்தனையும் தேவையில்லை. சுதா இப்போ போய் இருக்காதே, எந்த நம்பிக்கையில சம்பந்தி அம்மா சுதாவை இங்க விட்டுட்டு

 

போவாங்க நீயே சொல்லு. 
 

 

உன்னை பார்த்து அவங்க கேள்வி கேட்டாங்க இல்ல ?அப்பயாவது நீ பேசி இருக்கணும் இல்ல .  பெத்தவங்கள மாமியார் முன்னாடி விட்டு கொடுக்கக் கூடாதுனு நினைச்சவன் ,  கட்டின பொண்டாட்டிய அவங்க  பெத்த அம்மா முன்னாடியும், இங்க உன் கூட பொறந்தவ முன்னாடியும்,  உன்ன பெத்தவங்க முன்னாடியும் விட்டுக்கொடுத்துட்ட இல்ல. தப்பு உன் மேல தானடா.
 

 

அந்த புள்ள எம்புட்டு ஏங்கி தவிச்சி இருக்கும் .நீ ஒத்த வார்த்தை அதுக்கு சப்போட்டா பேசிட மாட்டியானு, உறுதுணையா நின்ற மாட்டியானு , அந்த புள்ள அந்த பையன் கூட வர்றது தெரியும்னு சொல்ற இல்ல, இப்ப சொல்றவன் , நீ அத அப்ப அடிச்சு பேசிருக்கணுமா இல்லையா ?

 

உங்க அம்மாவை உன் மாமியார் கிட்ட விட்டு கொடுத்திட கூடாதுன்னு நினைச்ச நீ தான் ,அவங்க பெத்த புள்ளைய அவங்க கிட்டயே விட்டுக் கொடுத்துட்டு நிக்கிற. இதுல நான் ஒன்னும் பேசறதுக்கு இல்ல டா. இது நீ தான் சரி பண்ணனும். மொத போய் தலையை துவட்டு , பையன பாரு .அப்பையில இருந்து அழுதுட்டே நின்னுட்டு இருக்கான் பாரு” என்று தன் காலோடு ஒட்டி நின்ற பேரனை காட்டியவர்.
 

 

“தலையை துவட்டி விட்டுருக்கேன்.இருந்தாலும், ஈரமா தான் இருக்கு, தலையை துவட்டி விட்டுட்டு அமைதியா படு. மணி என்ன ஆகுது பாரு, எதா இருந்தாலும், நாளைக்கு காலைல பேசிக்கலாம்.”
 

 

” அப்பா.. சுதா”
 

 

“உன் பொண்டாட்டி தான். இப்போ நீ போய் பேசினா எதுவும் சரி வராது, இந்த நேரத்துல அவங்க ஏதாவது பேசிட்டாங்கனு நீ ஏதாவது வார்த்தையை விட்டாலும் தப்பா போயிடும் .நாளைக்கு காலைல பொறுமையா பேசலாம் . விடியட்டும்  சம்பந்தி அம்மாவும், சுதாவும் பேசினா புரிஞ்சிப்பாங்க .நானும் கூட  வரேன்”
 

 

மழையும் வெளியே கொட்டியபடி இருக்க ,நேரமோ இரவு 11 மணியை தாண்டி செல்ல. எதுவும் செய்ய முடியாமல் அமைதியாக மகனுடன் தன் அறையை நோக்கி சென்றான்.
 

 

உதயா ,இன்று ஒரு முடிவோடு இருந்ததால்,சுதா வீட்டிற்கு வருவதற்கு முன்பே, தன் கணவனுக்கு போன் செய்து ,”இங்கு வீட்டுல சின்ன பிரச்சனை. அதனால என்னால வீட்டுக்கு வர முடியாது. நாளைக்கு காலைல வரேன்” என்று மட்டும் போன் செய்து சொல்லிவிட்டாள் முன்கூட்டியே, .
 

 

உதயா கணவனும்,” என்னவென்று ?”கேட்க.
 

 

” ஒன்னும் இல்லங்க. அண்ணனுக்கும் , அண்ணிக்கும்  சின்ன பிரச்சினை. புருஷன் ,பொண்டாட்டி சண்டைதான். வேற ஒன்னும் இல்ல “
 

 

” அதுல உனக்கு என்னடி வேலை? புருஷன், பொண்டாட்டி பிரச்சனைல .அதை அவங்களே பேசி தீர்த்துப்பாங்க .”என்றான்.
 

 

“அம்மா தான் இருக்க சொன்னாங்க “
 

 

” என்ன? உங்க அம்மாவுக்கே புருஷன் ,பொண்டாட்டி சண்டைல வேலை இல்ல. உனக்கு அங்க என்னடி வேலை ?”என்று கணவனாக அவன் அதட்டவும்.
 

 

“அம்மாவுக்கு துணையாக இருக்கேங்க. அவங்க  கொஞ்சம் பயந்து இருக்காங்க ” என்று நாடகமாடினாள்.
 

 

‘தாய் பயந்து இருப்பதாக கூறியதால் மட்டுமே ,”சரி “என்று ஒப்புக்கொண்டு உதயாவின் கணவன் துரையும் சரி என்று அமைதியாகி விட்டான்.
 

 

இரவு முழுவதும் முனகியபடி இருந்த மகனை தட்டிக் கொடுத்தபடியே, தூக்கத்தை இழந்து இருந்தான் ஆதி.
 

 

விடியலில் சென்று சுதாவிடம் பேச வேண்டும் என்ற எண்ணத்தில், அவனுக்கு தந்தை கூறியது ஒரு பக்கம் மனதை அழுத்தியது , பாரத்தை மனதிற்குள் மொத்தமாக சுமந்தது போன்று உணர்வு தான்.
 

 

உண்மைத்தானே! அவளது பார்வை தன்னை ரொம்ப நேரமாக எதிர்பார்த்துக் கொண்டு தானே இருந்தது. அவளுக்கு நான் ஆதரவாக கை கொடுப்பேன் என்ற பார்வையை மொத்தமாக அறுத்து எறிந்து விட்டேன் அல்லவா ? அதனால் தானே தாய் அழைத்தவுடன் சென்று விட்டாள்.
 

 

தான் அவளுக்கு ஆதரவாக பேசியிருந்தால் தன்னவள் சென்று இருக்க மாட்டாளே! என்பது நேரம் சென்று அவனுக்கு உணர்த்த ஒன்றும் புரியாமல், ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையில் நின்றதை எண்ணி வெட்கி தலை குனிந்தான்.
 

 

‘ எப்படியாவது உன்னை சரி கட்டிப் பேசி, கூட்டிட்டு வரணும் அம்மு! முதல்ல எங்க அம்மாவை சரி கட்டணும். நாளைக்கு காலையில முதல்ல எழுந்து’ என்று மனதிற்குள் எண்ணிய படி அனைத்தையும் அசைப் போட்டப்படி விடியலை நோக்கி காத்திருந்தான் .
 

 

இங்கு விடிய விடிய அழுகையில் கரைந்தாள் சுதா.
 

 

மகளை ஆட்டோவில் ஏற்றி அழைத்துக்கொண்டு வந்த கமலா,  அவளின்  தலையை துவட்டி விட்டு ,பேத்திக்கும் துவட்டி விட்டு, பேத்திக்கு சாப்பாடு ஊட்டி படுக்க வைத்தவர்.
 

 

மகளை ரொம்ப நேரமாக பார்த்தபடி இருந்தார் .
 

 

“இப்படியே உட்கார்ந்து என்னடி பண்ண போற?” என்றார் .
 

 

அவள் அப்படியே அப்போதும் எதையோ பறிகொடுத்தது போல உட்கார்ந்து இருக்க.

 

அவள் கன்னத்தில் ஒன்று போட்டவர்.” இம்புட்டு நாளா நீ வாழ்ந்த லட்சணம் இதுதானா சுதா ?” என்றார் மனம் தாங்காமல் அழுகையுடனே, 
 

 

எதுவும் பேச முடியாமல் , தாயை கட்டி அணைத்தபடி அழுதாள்.
 

 

அவளுக்கு மாமியார் பேசியது ஒருபுறம் இருந்தாலும், அதைக் கேட்டுக் கொண்டு கணவன் அமைதியாக இருந்தது, தன் தாய் அவ்வளவு கேட்டும் கூட கணவன் ஒரு வார்த்தை பேசாதது என்பது மட்டுமே அவள் மனதில் பதிந்திருந்தது.
 

 

மீண்டும் மீண்டும் மாமியாரின் வார்த்தைகளை காதில் ரிங்காரம் இட்டபடி இருக்க.கணவனின் மௌனம் அவளை கொல்லாமல் கொன்றது..அப்போது இவ்வளவு நாள் அவரும் அப்படி தான் நினைத்தாரா? அப்படி இல்லையெனில் ,தாய் பேசும் போது தனக்கு ஆதரவாக நின்று குரல் கொடுத்திருக்க வேண்டும் அல்லவா ?எதையுமே செய்யவில்லை என்றால், அவர் மனதில் என்ன இருக்கிறது.? என்ற கேள்வி அவளது மனதை வண்டாக குடைந்தது.
 

 

எதுவும் பேசாமல், அழுகையில் கரைந்தாள். ‘மகள் இப்படி இருப்பது சரியல்ல ‘என்று உணர்ந்தவர். அவளுக்கு சாப்பாடு ஊட்டி தட்டிக் கொடுக்க.
 

 

விடியலில் அழுதப்படியே உறங்கியும் இருந்தாள்.  காய்ச்சலும் கண்டு இருந்தது. எழுப்பி விட்டு ஜுர மாத்திரை மட்டும் போட்டு விட்டார்.
 

 

விடிந்ததும்  முதல் வேலையாக அவர் அழைத்துச் சென்றது என்னவோ வக்கீலை பார்க்கத்தான்.
 

 

“எதுக்கு மா இங்க?” என்று அவள் கேட்க.
 

 

”  இது என்ன டி கேள்வி .அங்க உன் மாமியார் அந்த பேச்சு பேசுறாங்க உன் நடத்தையையே தரக்குறைவா பேசுறாங்க, அம்புட்டையும் கேட்டுட்டு,அவங்க  பேசினதை வேடிக்கை பார்த்துட்டு இருந்த உன் புருஷனோட இனியும் நீ வாழனுமா ?” என்றார் ஆதங்கமாக, 
 

 

அவள் இன்னும் நேற்று நடந்ததிலிருந்து வெளிவரவில்லை.
 

 

மாமியார் பேசின வார்த்தை, அதை பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்த கணவனின் மௌனம் என எதையும் அவளால் ஜீரணித்துக் கொள்ள முடியாமல் இருக்க, அதிலிருந்து மீளாமல் தவித்தபடி இருந்தவளிடம் தாயின் கேள்வி, இன்னும் ரணத்தை உண்டு செய்ய, அவளது தாய் சொன்னதற்கெல்லாம் தலையாட்டி நின்றாள்.
 

 

அவளால் ஒற்றை வார்த்தை தாயை எதிர்த்து பேச முடியாத சூழ்நிலை கைதியாக நிற்கிறாள். ‘இல்லை எனக்கு அவர்தான் வேண்டும் ‘என்று கூற முடியாத நிலையில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறாள். 
 

 

வக்கீல்,” எதற்காக விவாகரத்து வாங்குறீங்க? “என்று கேட்டதற்கு கூட ,கமலா தான் அனைத்தையும் கூறி இருந்தார்.
 

 

மகளின் மாமியார் பேசிய பேச்சு, அவளது நடத்தையை சந்தேகப்பட்டு கூறிய வார்த்தைகள், அதைக் கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்த கணவன் ,என அனைத்தையும் ஒன்று விடாமல் வக்கீலிடம் கூறியிருந்தார் கமலா. 
 

 

கமலா கூறிய அனைத்தையும் எழுதிக் கொண்ட வக்கீல் கையெழுத்திட அவளிடம் பேப்பரை நீட்டினார்.
 

 

ஒரு நொடி தாயைப் பார்த்தாள்.
 

 

” போடுடி  என்ன எதுக்கு பாக்குற?  இன்னுமும்  என் மக  அவங்க கிட்ட ஏச்சுப் பேச்சு வாங்குறத பார்த்துக்கிட்டு என்ன அமைதியா இருக்க சொல்றியா? உனக்கு நான் இருக்கேன் டி” என்று கூறிய தாயை அமைதியாக பார்த்தவள், கண்களில் வழியும் நீரை கூட துடைக்க தோன்றாமல், வக்கீல் நீட்டிய பேப்பரில் கையெழுத்து இட்டிருந்தாள் சுதா.

 

“விவாகரத்து  வாங்கிடலாம் இல்ல.அதுல உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லல  “என்று மீண்டும் மீண்டும் வக்கீல் அவளிடம் கேட்க ,
 

 

‘அவர் என்ன கேட்கிறார் ?’என்பது மனதில் பதியவில்லை , புத்தியில் ஏறவில்லை என்றாலும் , அனைத்திற்கும் தலையாட்டிய படியே வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் தாயுடன்.
 

 

இங்கே முதலில் தாயிடம் பேசியப் பின்பு மனைவியிடம் பேசுவது தான் சரியாக இருக்கும் என்று யோசித்தவன்.
 

 

விடிந்ததும் விடியாததுமாக முதலில் தன் தங்கையை அவள் வீட்டுக்கு அனுப்பிவிட்டு தான் மறுவேலை பார்த்தாள்.
 

 

“என்ன எதுக்கு அண்ணா இப்ப காலையிலே துறத்துற?” என உதயா அப்போதும் அவனிடம் வாதம் பண்ண ,
 

 

” தொலைச்சு கட்டிடுவேன்! மரியாதையா போயிடு, இல்ல மாப்பிள்ளைக்கு போன் பண்ணுவேன்!” என்று கூற,
 

 

நேற்றே தன் கணவன் வேறு புருஷன் ,பொண்டாட்டி பிரச்சினைல உனக்கு என்ன வேலை? என்று கேட்டது அவள் கண் முன் நிழலாட ..
 

 

அவனிடம் மேற்கொண்டு எதுவும் பேசாமல் ,
 

 

“உன் பையன் பேசுறான்னு கேட்டுட்டு அமைதியா போயிடாத சரியா ?”என்று தாயிடம் மீண்டும் ஏத்து விட்டே கிளம்பி இருந்தாள் தன் புகுந்த வீட்டை நோக்கி உதயா.
 

 

அவளை  முறைத்தவன்.
 

 

தன் தாயை மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு பார்த்தான்.
 

 

“என்னடா? எதுக்கு இப்போ அப்படி பாக்குற?”என்றார் வீம்பாக சித்ரா.
 

 

“நேத்து நீ என்ன பேசினேன்னு நிதானமா யோசிச்சியா?”
 

 

” இப்பயும் என்ன நான் தப்பா கேட்டுப்புட்டேன். ஊரு உலகத்துல பேசாததையா”
 

 

” ஊர் உலகத்துல பேசுறாங்க, உன் மக பேசுறா,இதெல்லாம் எனக்கு தேவையில்லை .உனக்கு என் பொண்டாட்டி பத்தி தெரியுமா ?தெரியாதா? அவ இங்க வந்து எத்தனை வருஷம் ஆகுது , இத்தனை வருஷத்துல இப்படித்தான் நடந்து கிட்டாளா?”
 

 

“அதாண்டா நானும் கேட்கிறேன். இத்தனை வருஷமா நல்லாத்தான ஒழுக்கமாக இருந்தா” என்றவுடன்,
 

 

” அம்மா!” என்று வீடே அதிரும் அளவிற்கு கத்தினான்.
 

 

“என்னடா ? குரலை உயர்த்துற?”
 

 

“நேத்தே நான் பேசி இருக்க வேண்டியது . உண்மையா என்ன பெத்தது நீ தானா?  வீட்டுக்கு வாழ வந்த மருமகளை என்ன பேச்சு பேசுற?  என்ன பெத்தவங்க தான்  என் பொண்டாட்டிய அந்த பேச்சு பேசினாங்களானு நம்ப முடியாம அதிர்ச்சியில் இருந்து நான் வெளியே வரதுக்குள்ள எல்லாமே, என் கை மீறி போய்டுச்சு .
 

 

நீ பேசுனதுல இருந்து நான் வெளிய வரதுகுள்ள, அத்தை என்ன பார்த்து கேட்டது ,அவங்களுக்கு பதில் சொல்ல முடியாம நான் நின்னது,தவிச்சது எனக்கு தான் தெரியும். அவங்க முன்னாடி உன்ன விட்டுக் கொடுக்க முடியாம,  அவங்க கேட்டதுக்கும் பதில் சொல்ல முடியாம , திணறி, நீ பேசினதுல இருந்து வெளியே வர்றதுக்குள்ள சுதாவை கையோட கூட்டிட்டு போய்ட்டாங்க அத்தை.
 

தோ

ப்பாரு இப்போ போய் நான் சுதாவை பேசி கூட்டிட்டு வருவேன். இன்னொரு வார்த்தை அவளை தப்பா பேசணும்னு நெனச்சேனு வை .என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது. இது தான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட், இல்லன்னு வச்சுக்கோ, என்ன செய்வேன்னு தெரியாது”
 

 

” என்னடா செஞ்சுருவ?  என்ன செய்வ?  பெத்தவளை கொன்னு குழி தோண்டி புதைச்சுட்டு பொண்டாட்டியை கூட்டிட்டு வந்து உட்கார வச்சுப்பியோ ?”என்றார் ஆக்ரோஷமாக,
 

 

“வேணும்னா அதையும் செய்வேன்!” என்றான்  கோபத்தில்,
 

 

அவர் அவனை அதிர்வாக பார்க்க.
 

 

” இப்படித்தான் இருக்கும் நேத்து நீ அவளை பேசின வார்த்தையும் சரியா ? யோசிச்சு பேசு! இனி  ஒரு தரம் அவங்க சொன்னாங்க ,இவங்க சொன்னாங்கன்னு சொல்லிட்டு திரியாத. ஒரு பொம்பள வேலை முடிஞ்சு வரும்போது ஒரு ஆம்பள கூட வந்துட்டான்னா அவனுக்கும் அவளுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குன்றது தான் இந்த ஊர் உலகம் பேசுறதெல்லம் ,அதையே தான் நீயும் பேசிட்டு இருப்பியா ?நீ என்ன கேட்ட அன்னைக்கே சொன்னேன். அவளுக்கு வேலை இருக்கு, நம்ம தெரு தாண்டி தான் அந்த பையன் வீடு இருக்கு, நான் தான் அவன் கூட வர சொன்னேன்னு தெளிவா சொன்னேன். நீயும் சாதாரணமா கேட்கிறன்னு  சொல்லித்தான் நானும் உனக்கு பதில் சொல்லிட்டு அமைதியாக கடந்து போனேன்.
 

 

திரும்ப திரும்ப உன் மக ஏத்தி விட்டான்னு நீ அதிகமா நேத்து பேசிட்ட மா. இன்னொரு வாட்டி என் பொண்டாட்டியைப் பார்த்து அந்த வார்த்தை உன் வாயிலிருந்து வரக்கூடாது .இப்ப நான் சுதாவை கூப்பிட தான் போறேன். ஞாபகத்துல வச்சுக்கோ! அவ இந்த வீட்டு வாசப்படி மிதிக்கும் போது, நீ அவ கிட்ட பேசவே வேணாம். உன் வேலையை நீ பாரு ,அவ வேலைய அவ பாக்கட்டும் “என்ற படியே தன் தந்தையையும் அழைத்துக் கொண்டு தன் மாமியாரின் வீட்டை நோக்கி கிளம்பினான்.
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page