அத்தியாயம் 30.2 (இறுதி)

வேனலின் வெண்பூவே

 

அத்தியாயம் 30.2

 

“ரொம்ப டர்ட்டியா யோசிக்காதீங்க மேடம். சும்மா கேன்டில் லைட் வெளிச்சத்தில் பேசத்தான் போறோம்.”

“உட்காரு சிவகாமி.” என அவளை உள்ளே இருக்கும் உணவு மேசையில் நாற்காலியைத் தள்ளி அமர வைத்தான். ருத்ராவின் செய்கைகள் அனைத்துமே அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தது.

உணவு மேசையில் மெழுகுவர்த்திகளுடன் உணவும் மூடி வைக்கப்பட்டிருந்தது.

“சாப்பிடு.”

மூடி வைக்கப்பட்டிருந்த உணவைத் திறக்க அவளுக்குப் பிடித்த உணவின் வாசனை நாசியைத் தீண்டியது.

அதன் அருகில் லத்தீன் அமெரிக்க கேக் வகையான டிரஸ் லெச்சஸ் ஸ்பான்ஜ் கேக் இருந்தது. பாலின் மூன்று வகையான நிலையில் செய்யப்பட்டு அதன் மேலே அழகாக ஸ்ட்ராபெர்ரி வைக்கப்பட்டிருந்தது.

“நான் இன்னைக்கு வரலைன்னா? இதெல்லாம்?”

“வாய்ப்பில்லை. உனக்கு முன்னாடியே எனக்கு வெதர் அலர்ட் நேத்தே தெரியும். நேத்தே ரொம்ப டிப்ரஷன். நீ மேரேஜ் முடிஞ்ச டையர்டில் நேத்து முழுக்க ரெஸ்ட்டில் இருந்த. அப்ப வந்த ரிப்போர்ட் கன்ஃபார்ம் ஆகலை. ஆனால் மார்னிங் கன்ஃபார்ம் ஆகிடுச்சு.”

விழிகள் இடுங்க அவனைப் பார்த்தவள், “நான் உன்னைத் தேடி வரலைன்னா?” என்றாள்.

“அப்படியே ஹாட் ஸ்பிரிங்கில் விழுந்திருப்பேன். இல்லை வரப் புயலை நோக்கி ஜாக் மாதிரி போஸ் குடுத்து நின்னு புயலுக்கு டஃப் குடுத்திருப்பேன்.”

புருவத்தைச் சுருக்கிப் பார்த்தவளை, “திரும்பி நானே வந்து உன்னை ரூமுக்குக் கூட்டிட்டு வந்திருப்பேன். ஆனால் நிச்சயம் நீ நான் இங்க இல்லைன்னா தேடி வருவ. இதுக்கு முன்னாடியும் அப்படித்தான். இனிமேலும் அப்படித்தான்.”

“ஓவர் கான்ஃபிடென்ஸ்.”

புன்னகைத்தவன் சாப்பிடும்படி சைகை செய்ய அவள் உணவை உண்ண ஆரம்பித்தாள்.

“ருத்ரா, இத்தனை நாள் ஏன் எங்கிட்ட சொல்லலை? என்னோட எங்கேஜ்மென்டில் எடுத்த போட்டோவைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப ஷாக்.”

“தெரியலை. நான் என்னோட ஃபீலிங்க்ஸ் ரியலைஸ் பண்ணும்போது உனக்கு எங்கேஜ்மெண்ட் ஆகியிருந்தது. அப்புறம் நிறைய நடந்துருச்சு. உன்னை ஃபாரின் அனுப்ப சொன்னதும் என்னோட ஐடியாதான். உனக்கும் டைம் வேணும்னு நினைச்சேன்.”

“ஆனால் நீயும் நானும் டிஃப்ரெண்ட் கேரக்டர். செட் ஆ…”

“உன்னைப் பத்தி எனக்குத் தெரியும். என்னைப் பத்தி உனக்கும் தெரியும். எல்லாரும் குளோனிங் செஞ்ச ஆளையா மேரேஜ் பண்றாங்க! ஒவ்வொரு மனுஷனும் வித்தியாசமானவங்கதான். வீ ஹேவ் டு வொர்க் ஹார்ட் ஃபார் தட். ஹோட்டல் விஷயத்தில் நமக்குக் கிளாஷ் வரலாம். பர்சனல் லைஃபிலும் தான். இதுவரை எப்படி மேனேஜ் செஞ்சோமோ அப்படித்தான் இனியும். உன்னை நான் நல்லா பார்த்துக்குவேன். இப்ப யெஸ் சொல்லு.” என உறுதியாக அவள் விழிகளைப் பார்த்துக் கூற, காமினியின் விழிகள் தாழ்ந்து உணவைப் பார்த்தன.

“யெஸ்.” என்றாள்.

ருத்ரனின் முகத்தில் மகிழ்ச்சி பரவுவதை காமினி அடிக்கண்ணால் பார்த்தாள். அவனோ எழுந்து அவளை நாற்காலியிலிருந்து தூக்கி, “தேங்க்ஸ் சிவகாமி! ஐம் ஸோ ஹேப்பி.” என அவளை ஒரு சுற்று சுற்றிவிட்டு நெற்றியில் முத்தம் வைத்து அமர வைத்தான். காமினியுமே அந்த நொடியில் நெகிழ்ந்துதான் போயிருந்தாள்.

அப்போது அறைக்கதவு தட்டப்பட, ருத்ரன் அதைத் திறக்கச் சிவகார்த்திக்கும், சிவபொன்னம்பலமும் கைகளில் பலூன்கள் மற்றும் பூங்கொத்துடன் நின்று கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் காமினி தன் குடும்பத்தை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் கேட்டால் என்ன சொல்வது என யோசிக்க, “ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை.” என ருத்ரனை அவர் அணைத்துக் கொண்டார்.

“மச்சான், மலையைக் கட்டி இழுத்துட்ட. கங்கிராட்ஸ்டா!”

“மச்சான் உதவிதான் காரணம்.”

அவர்கள் மூவரும் பேசுவதை விழிகள் விரிய அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் காமினி.‌ ருத்ரன்  அவளை தூக்கிச் சுற்றி அமர வைத்த உடனே  காமினியின் சகோதரனுக்கு செய்தி அனுப்பி இருக்க, இதை எதிர்பார்த்து காத்திருந்த பெரியவர்கள் இருவரையும் அழைத்து வந்திருந்தான்.

“என்ன மினியன், ஃப்ரீஸ் ஆகி நிக்குற? இதுக்குப் புள்ளி வச்சதே நம் தந்தையார்தான். அப்பா ருத்ராகிட்ட உனக்கு மாப்பிள்ளை பார்க்கிறதைப் பத்தி பேசிட்டு இருக்க உடனே ‘காமினியை நான் லவ் பண்றேன், ‘எனக்கு அவளைக் கல்யாணம் செய்து குடுங்க அப்படின்னு சொல்லிட்டான். அப்பா அப்படியே வடிவேலு மாதிரி ஷாக் ஆகிட்டார். அப்புறம் தெளிஞ்ச உடனே அப்பாவுக்குச் சம்மதம். எனக்கு விஷயம் தெரிய வந்துச்சு. அவனைவிடப் பெஸ்டா வேற யாரு கிடைப்பா? ஆனால் இதுவரைக்கும் என்ன திட்டம் போட்டு உன்னை ஒத்துக்க வச்சான்னு மட்டும் சொல்லவே இல்லை! இருந்தாலும் உன்னைக் கட்டிட்டு என்னோட ஃபிரெண்டு அழப்போறதை நினைச்சால் அனுதாபமாக இருக்கு. அதான் பொக்கேவோட வந்தேன்.” என அவளது சகோதரன் குறுகிய விளக்கத்தைக் கூற,

“உன்னை…” என அருகில் இருந்த பூச்சாடியை தூக்கிக் கொண்டு அவனைத் துரத்த,

“அடேய் மச்சான்! மினியன் ஆரம்பிச்சுட்டா. இனி எனக்குப் பதிலா நீ அடி வாங்கு.” எனக் கத்தியபடியே ஓட அறைக்குள் இருந்த மற்ற இருவரும் நகைத்தனர்.

ஒரு வழியாக உடன்பிறப்புகள் இருவரும் அவர்களாகவே நிறுத்தக் காமினியின் அருகே வந்தார் அவளுடைய தந்தை.

“அப்பா.”

“அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம் காமினி. நீ இப்படியே இருந்துருவியோன்னு ரொம்ப பயப்பட்டேன். முன்ன மாதிரி உடம்பும் நல்லா இருக்குறது இல்லை. ரொம்ப சந்தோஷம்! உன்னை ருத்ரா நல்லா பார்த்துப்பான்.” மகளின் தலையை ஆதூரமாகத் தடவிக் கொடுத்தார். காமினியும் தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டாள். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அபிதாவும் வந்து சேர்ந்தார்.

“ரொம்ப சந்தோஷம் காமினி!” என அவரும் காமினியை அணைத்துக் கொண்டார்.

“ஆன்ட்டி… அது…”

“எனக்கும் ருத்ரா திடீர்னு உன்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்லவும் ஷாக்தான். அவனே உங்கிட்ட பேசிச் சம்மதம் வாங்கறேன். அரேஞ்ஜ் மேரேஜ் வேண்டாம்னு சொல்லிட்டான்.”

‘அப்ப நான் தான் அவுட்டா? இதுக்குப் பேருதான் ஃபேமிலி பிளானா? ச்சே பேமிலியா பிளான் பண்றதா!’ என மனதில் நினைத்தவள் தன்னை மந்தகாசத்துடன் பார்க்கும் ருத்ரசேனாவைப் பார்த்தாள். அவன் விழிகளைப் பார்க்க முடியாமல் தடுமாறியவள் அபிதாவிடம் திரும்பினாள்.

“ஆன்ட்டி, நீங்க உங்க பையன் வாழ்க்கையைப் பத்தி யோசிச்சு இருக்கலாம். இப்படி மினியன் கையில் ருத்ராவைப் பிடிச்சுக் குடுக்க முடிவு பண்ணிட்டீங்க.” எனச் சிவகார்த்திக் மீண்டும் ஆரம்பிக்க, காமினியின் விழிகள் மீண்டும் கனலைக் கக்கின.

“ஆரம்பிச்சிட்டியா நீ?” என அபிதா கேட்க, நால்வரின் முகத்திலும் புன்னகை நிறைந்திருந்தது.

“மினி…” என அவன் அடுத்துப் பேச வருவதற்குள் அவன் வாயில் கேக்கின் துண்டு ஒன்றை எடுத்துத் திணித்துவிட்டிருந்தாள் காமினி. அவர்களின் சேட்டையில் சிவபொன்னம்பலம் சத்தமாகவே சிரித்தார். அபிதாவும் சிரிக்க, ருத்ரனும் அதே அமைதியான புன்னகையில் அண்ணன் தங்கை இருவரையும் பார்த்திருந்தான். அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சியில் வெளியில் மழை பிடிக்க ஆரம்பித்தது.

 

*****

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page