கதிர் மருத்துவமனையில் நேத்ராவை அட்மிட் செய்து விட்டு அவள் கண் விழிப்பதற்காகக் காத்திருந்தான்.
மருத்துவமனையில் அவளைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவளுக்கு ட்ரிப்ஸ் ஏற்றி அங்காங்கே கட்டுப் போட்டிருந்தார்கள்.
நேத்ரா கண் விழிப்பதற்காகக் கதிர் அவள் அருகிலேயே தவம் கிடந்தான்.
தூங்கி கொண்டிருந்தவள் திடீரென முனக கதிர் அதிர்ந்து போய் அவளைப் பார்த்தான்.
“வேணாம். அடிக்காத. விட்டுடு”
“கதிர் சாரி கதிர்… என்ன மன்னிச்சிடுங்க” எனக் கதற கதிர் துடித்துப் போய் அவளைப் பார்த்தான்.
அவள் ஏதேதோ முனக அவன் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.
நேத்ராவின் தலையை அவன் ஆறுதலாகக் கோதிவிட அந்த ஸ்பரிசத்தில் அவள் தன் அலைப்புறுதல் மறந்து உறங்கினாள்.
என்ன தான் அவள் உறங்கினாலும் நடுநடுவே அவள் பயத்தில் அலறுவதை நிறுத்தவில்லை.
அமுதாவும் இதனை வேதனையுடன் பார்த்து உள்ளுக்குள் அழுதாள்.
முதலில் நேத்ராவை கண்டுபிடித்ததும் அட்மிட் செய்தவன் அமுதாவுக்குத் தகவல் கொடுக்க அர்ஜூன் அவளைப் போய்க் கூட்டி வந்தான்.
நேத்ராவை பார்த்த அமுதா கதறி அழ அவளைத் தேற்றியவர்கள் தாங்கள் பார்த்துக் கொள்வதாகத் தைரியம் அளித்தார்கள்.
அன்று அதிகாலையில் மீட்டு அவளை மருத்துவமனையில் சேர்க்க அவள் கண் விழிக்கவே மாலை ஆனது.
அவள் கண் விழித்ததும் முதலில் எங்கிருக்கிறோம் என்றே புரியவில்லை.
பின்னர் நடந்தது அனைத்தும் ஞாபகம் வர அவளுக்குக் கதிர் ஞாபகம் தான் வந்தது.
“பேபி” என ஒரு குரல் அழைக்க அவள் அருகில் கதிர் கலங்கிய கண்களுடன் அமர்ந்திருந்தான்.
“க… கதிர்” என ஆவேசமாக எழ
“பேபி பார்த்துடா. கைல டிரிப்ஸ் ஏறுது பாரு” என்றவன் பதற அவளோ அவனைத் தலை முதல் கால் வரை ஆராய்ந்தாள்.
“க… கதிர் அவன்… உனக்குக் காயம் எதுவும் இல்லை தானே?” என அவள் அழுகுரலில் கேட்க
“இல்லடா. எனக்கு ஒண்ணும் இல்ல. நீ டென்ஷன் ஆகாதடா” என மிருதுவாகச் சொல்ல நேத்ராவோ
“அவன்… அவன்…” என்றவள் அதற்கு மேல் வார்த்தை வராமல் தவித்தவள் தன்னை மீறி அழ ஆரம்பிக்கக் கதிர் அதில் பதறி போய் அவளை அள்ளி அணைத்துக் கொள்ள அவளோ அவனை இறுக பற்றிக் கொண்டு அழ ஆரம்பித்தவள் அவன் முகம் முழுவதும் முத்தமிட ஆரம்பிக்கக் கதிரோ திகைத்து போய் அமர்ந்திருந்தான்.
‘இவ்வளவு அன்பை வெச்சிட்டு ஏன் பேபி அப்படி சொன்ன?’ என மனதுக்குள் வேதனையாய் நினைத்தவன் அதை அவளுக்கு வெளிக்காட்டாமல் அமர்ந்திருந்தான்.
முத்தமிட்டு கொண்டிருந்தவள் திடீரென விலக அவன் காரணம் புரியாமல் தடுமாறினான்.
“என்னாச்சுடா?”
“நீ என் மேல கோபமா இருக்கே தானே? உனக்கு என்ன பிடிக்காதுல்ல?” என அவள் பயத்துடன் கேட்க அவன் கண்களில் வலியுடன் அவளைப் பார்த்தான்.
“என் உயிரே நீ தான்டா. உன்னை எப்படிடா பிடிக்காம போகும்?” என்றவன் சொல்ல அவளோ…
“நீ உன் மூஞ்சிலையே முழிக்காதனு சொன்னல்ல?” எனக் கேட்க அவன் அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தான்.
“பேபி சாரிடா. நான் என் பேபிட்ட போய் அப்படி சொல்வேனா?” எனச் சமாதானப்படுத்த அவளோ ஏதோ யோசித்தவள் அங்கு வந்த நர்சின் மருத்துவ உபகரணங்களில் இருந்து கத்தியை எடுத்து கையை அறுக்க
“பேபி…” “நேத்ரா” எனக் கதிரும், அமுதாவும் கத்த, கதிர் வேகமாக அவள் கையில் இருந்த கத்தியை பிடுங்கியவன் ஓங்கி அறைய நேத்ராவோ அவன் மடியிலேயே மயங்கி விழ அதில் அதிர்ச்சியானவன்…
“பேபி இங்க பாருடா. சாரிடா. கண்ண திற” எனக் கதற அமுதாவும்
“என்னாச்சு நேத்ரா? இங்க பாரு” என அழ அர்ஜூன் பதறி போய் மருத்துவரை கூட்டி கொண்டு வந்தான்.
அவளைப் பரிசோதிக்க வந்த மருத்துவரோ “என்னாச்சு? ஏன் பேஷண்ட்ட டிஸ்டர்ப் பண்றீங்க?” என அவர்களைக் கத்தியவர் நேத்ராவை பரிசோதித்து விட்டு “அவங்க ஸ்ட்ரெஸ்ஸா இருக்காங்க. தேவையில்லாம பேசி இன்னும் அவங்கள டென்ஷன் பண்ணாதீங்க” என அவர்களிடம் சொல்லி விட்டு சென்றார்.
நேத்ரா மயங்கி விழுந்ததில் கதிர் நடுங்கி போய் அவளை விட்டு எங்கும் நகரவில்லை. அவளது செய்கை அவனுக்குச் சொல்லொன்னா வேதனையைக் கொடுத்தது.
அவனுக்கு யோசிக்க, யோசிக்க எல்லாவற்றுக்கும் காரணம் தான் தானோ எனக் குடைய அவனுக்குத் துளி கூட நிம்மதி இல்லாமல் போனது.
மயக்கத்தில் இருந்தவளோ, “நான் உனக்கு வேணாம் கதிர்” எனப் புலம்பக் கதிர் அவள் கையைப் பற்ற அதை இறுகப் பற்றியபடியே அவள் உறங்கி போனாள்.
அவள் கைகள் பிடித்திருந்த விதத்தைப் பார்த்தவனுக்கோ தாய்மடி தேடும் குழந்தையைப் போலத் தோன்ற அவள் நெற்றியில் முத்தமிட்டவன் அவள் தலையைத் தடவி கொடுத்தபடியே அடுத்து என்ன செய்வதென்று யோசித்தான்.
அடுத்த ஓரிரு மணி நேரங்களில் கண் விழித்த நேத்ரா அவனை ஏக்கத்துடன் பார்க்க அவள் அருகில் அமர்ந்தவன், “கண்ணம்மா” என மென்மையான குரலில் கூற அவள் விழி விரிய அவனைப் பார்த்தாள்.
“ஒண்ணு ஞாபகம் வச்சுக்கோடா. நான் எப்பவும் உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன். நீ எதுனாலும் என்கிட்ட தயக்கம் இல்லாம சொல்லணும். நான் ஏதாவது தப்பு பண்ணா என்னைய கேள்வி கேட்க உனக்குத் தான் உரிமை இருக்கு. நான் எப்பவும் உன்னோட பக்கி தான், எரும தான். ஓகே?” எனச் சொல்ல அவள் கதிரையே கண் கொட்டாமல் பார்த்தாள்.
“நீ ரெஸ்ட் எடு. நான் வெளிய போயிட்டு வந்தறேன். கொஞ்சம் வேலை இருக்கு” எனச் சொல்ல அவள் தவிப்பாய் அவனைப் பார்க்க அவளைத் தாயன்போடு அணைத்தவன்…
“நான் உன் நல்லதுக்குத் தான் செய்வேனு தெரியுமில்ல பேபி” என்று மென்மையாக அவளிடம் சொன்னவன்
“நான் போய்ட்டுச் சீக்கிரம் வந்திருவேன் பேபி. நீ தூங்கி முழிக்கறப்ப நான் உன் பக்கத்தில இருப்பேனாம்” எனச் சமாதானம் சொன்னவன் அவளது நெற்றியில் முத்தமிட்டுச் சென்றான்.
*******
நேத்ரா கண் விழிக்கும் போது அருகில் உட்கார்ந்திருந்த கதிரின் முகம் இறுக்கமாக இருக்க அதைப் பார்த்த நேத்ரா பயந்து போனாள்.
கதிர் ஏதோ ஆழ்ந்த யோசனையில் புருவ முடிச்சுடன் அமர்ந்திருந்தவன் அவளிடம் அசைவு தெரிய கனிவுடன் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.
அவள் எழுந்து உட்கார, “பேபி ஏதாவது சாப்டறியா?”
“வேணாம் கதிர்” என மறுக்க
“கொஞ்சமா சாப்பிடு பேபி” என்றவன் சாப்பாட்டை ஊட்ட அதை மறுக்காமல் உண்டவள்,
“ஏதாவது பிராப்ளமா கதிர்?” எனத் தயக்கமாகக் கேட்க
“இல்லடா” என்றவன் திடீரென்று
“பேபி நீ மேரேஜ் பத்தி என்ன நினைக்கிற?” எனக் கேட்க
“மேரேஜா?” என விரக்தியாகக் கேட்டவள்
“மேரேஜ் எல்லாம் வேஸ்ட் கதிர். மேரேஜ் பண்றதும், கிணத்துல விழறதும் ஒண்ணு தான்” எனக் கேட்க
“உன்னை யாரு மேரேஜ் செய்யப் போறா பேபி?” என்று அசட்டையாகச் சொன்னவன் அவளைக் கூர்மையாகப் பார்க்க அவளோ ஏமாற்றமாய் உணர்ந்தாள்.
ஆனால் ஏன் இப்படி என்று அதுவும் புரியவில்லை.
“பேபி லவ் பத்தி என்ன நினைக்கிற?”
‘இன்னைக்கு இவனுக்கு என்ன ஆச்சு?’
“சொல்லுடா”
“லவ் ஒரு அழகான ஃபீல். நம்ம யார எப்படி லவ் பண்ணுவோம்னு யாருக்கும் தெரியாது” என அவள் தன்னை நினைத்து சொல்ல…
“ஏன் பேபி அப்படி சொல்ற? நீ யாரையும் லவ் பண்றியா?” எனக் கேட்க ஆமாம் எனத் தலையாட்டியவள் பிறகு சுதாரித்து இல்லையென்று தலையாட்ட தனக்குள் சிரித்துக் கொண்டவன்,
“யாரு பேபி அது?” என்று அவன் கண்களைப் பார்த்து கேட்க அந்தக் கண்கள் சொன்ன செய்தியில் கட்டுண்டவள் வார்த்தை வராமல் தடுமாறினாள்.
“சொல்லுடா” என மிருதுவாகக் கேட்க அவள் கண்களோ அவளையறியாமல் அவனையே காட்டியது.
இதற்கு மேல் அவளிடம் விளையாட வேண்டாம் என நினைத்தவன்…
“வந்து தூங்கு பேபி. நாளைக்கு வீட்டுக்குப் போய்டலாம். நிறைய வேலை இருக்கு” என அவன் மடியில் படுக்க வைக்க அவளோ அவனை இறுக கட்டி கொள்ளக் கதிர் அவளது பயத்தை உணர்ந்தவன் “தூங்குடா” என அவளைத் தட்டி கொடுத்தவன் அடுத்து என்ன செய்வது என்று சிந்திக்க ஆரம்பித்தான்.
******
அடுத்த நாள் நேத்ராவை வீட்டுக்கு கூட்டி வந்த கதிர் அவளுக்கு வேண்டியதை எல்லாம் செய்து கொடுத்தவன் அடுத்த நாள் வருவதாகச் சொல்லிவிட்டு சென்றவன் ஒரு வாரமாக வரவில்லை.
நேத்ரா அவன் வருவான் என எதிர்பார்த்திருக்க அவனோ அவள் இருக்கும் இடத்தைக் கூடச் சட்டை செய்யவில்லை.
நேத்ரா போன் செய்த போதும் கால் கட் செய்ய அவள் காரணம் புரியாமல் தடுமாறினாள்.
எப்படியோ ஒரு வாரமாக அவளைத் தவிக்க விட்டு அன்று வந்தவன் செய்த செயலால் நேத்ரா அதிர்ச்சி தாங்காமல் மயங்கி விழுந்தாள்.
