“மடிதனில் நான் சாய்ந்து கொள்ள, குளிர் பொருந்திய உன் சேலைத் தலைப்பு என் முகத்தில் மூடிட வேண்டும் “
…. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…
பாகம் -26
“வசு எப்படி டா இருக்க ” அண்ணன் ராஜவர்மன் குரலைக் கேட்ட ஜோதா, சொல்லா முடியா மகிழ்வில் இருந்தார். எத்தனை வருடங்கள் கழித்து தன் அண்ணனின் குரலை கேட்கிறாள்.ஒன்றாக வளர்ந்தவர்கள், ராஜவர்மன் தங்கையின் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தான்.
வீட்டில் கட்டுப்பாடுகள் அதிகம் தான் அண்ணனிடம் அப்படி இல்லை. அப்பாவிடம் கேட்க வேண்டும் என்றால் கூட அண்ணனிடம் தான் முதலில் சொல்லுவாள்.
அண்ணன் சரி என்ற பிறகே அப்பாவிடம் சொல்லுவாள். அது படிப்பு விஷயமாக இருந்தாலும் சரி, வெளியே போக வேண்டுமென்றால், அவளுக்கு தேவையானதை வாங்கிக் கொள்ள, பிடித்த உணவினை வாங்கி வர இப்படி எல்லாமே அண்ணனிடம் கேட்டுத்தான்.
தங்கை தன்னை கேட்காமல் எதையும் பேசமாட்டாள், முடிவெடுக்க மாட்டாள் என்று அண்ணன் பெருமையாக நினைத்திருக்க, சின்ன சின்ன விஷயங்களில் அண்ணனிடம் கேட்டு முடிவெடுப்பவள், வாழ்க்கையில் முக்கிய விஷயத்தில் அண்ணனிடம் சொல்லாமல் முடிவெடுத்தது தான் அவனின் கோவத்திற்கு காரணம்.
அவர் காதலுக்கு எதிரி இல்லை, அவரிடம் சொல்லி இருந்தாள் சமயம் பார்த்து பக்குவமாய் வீட்டில் சொல்லி சம்மதம் வாங்கி இருப்பார். அந்த ஆதங்கம் தான் தங்கையின் மீது கோவமாய் மாறியது.
“அண்ணா நான் உன் கிட்ட சொல்ல கூடாதுனு நினைக்கல, அப்பாவும், அவரும் பேசிட்டு இருக்கும் போது, என் பொண்ணுக்கும் மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்கேனு சொன்னாராம். இவருக்கு இந்த நேரத்துல கேட்டா சம்மதிப்பாரு, லவ்னு தெரிய வேணாம், பெரியவங்க பார்த்து வச்ச கல்யாணமா தெரியட்டும்னு தான் கேட்டாராம்.
ஆனால் அப்பா விருப்பமில்லை சொல்லிட்டாராம். இவருக்கும் பெரியவங்கள கஷ்ட படுத்த விருப்பம் இல்லை. நாம பிரிஞ்சிடலாம்னு சொல்லி ஊருக்கு போய்ட்டாரு, ஆனால் அப்பா கோவப்பட்டு அவசரமா மாப்பிள்ளை பார்த்தாரு, அந்த மாப்பிள்ளை நல்லவனா இருந்திருந்தா அவர் ஊருல இருந்து திரும்பி இங்க வந்திருக்க மாட்டாரு,
அவன் ஒரு கேடு கெட்டவன், நீங்க வெளி ஊருக்கு போய்ட்டிங்க, உங்க கிட்டயும் பேச முடியல, அப்பா வீம்புக்கு என் வாழ்க்கையை நாசம் பண்ண பார்த்தாரு, வேற வழி இல்லாம தான் இவர் என்னை கூட்டிட்டு போய்ட்டாரு.
அங்கிருந்து வந்தாலும் ஒரு நாள் கூட ஆழாம, உங்களை நினைக்காம இருந்ததில்லை. எத்தனையோ முறை போன் பண்ணி இருக்கேன். இவர் நேர்ல கூட வந்து பார்க்க வந்தாரு, அப்பா உயிர் என்னால போகும்னு நினைக்கவே இல்லை. என்னை மன்னிச்சுடு ணா,
ஜோதாவின் அழுகை பெரும் சத்தமாய் அங்கு ஒலிக்க, அங்கிருந்தவர்களின் அமைதியில் அழுகை சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. வர்மா, அத்தையின் கை பிடித்து ஆறுதலாக நிற்க, ஆரண்யா, அம்மாவின் அருகில் செல்ல நினைத்தாலும், வர்மாவைப் பார்த்து, தயக்கத் தோடு நின்று விட்டாள்.
தங்கையின் அழுகை ஏற்கனவே அழுது கொண்டிருப்பவருக்கு மேலும் அழுகையை தர, போதும் அழுதது இனியும் தங்கையை பிரிந்திருக்க கூடாது. உடன் பிறந்தவளை அங்கே தவிக்க விட்டு நான் இத்தனை வருடங்களாக வாழ்ந்தது எதற்கு.. தன்னையே நினைத்து நொந்தவர்.
“வசுமா இனியும் அண்ணன் உன்னை விலக்கி வைக்க மாட்டேன், நான் இப்போ ஒன்னு கேட்க போறேன் நீ முழு மனசோட அதற்கு சம்மதம் சொல்லணும் ” ராஜவர்மன் கேட்க,
“எது வேணாலும் கேளுனே, என் உயிரை கூட தருவேன். நீ இப்டி பேசுனதே எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா “
“என்ன டா இப்டி சொல்லிட்ட, அதெல்லாம் இல்லை டா, உன் மருமகனுக்கு என் மருமகளை கொடு அது போதும் “
சிரித்த ஜோதா “அண்ணே நிஜமாவா சொல்ற ” ஜோதாவால் நம்ப முடியவில்லை.
அவரிடம் பேசிக்கொண்டே தன் கணவரிடம், மகளிடம் சிரித்த முகத்துடன் அண்ணன் சொன்னதை சொல்ல, வர்மா கைபேசியை வாங்கிக் கொண்டான்.
“அப்பா “அப்பாவின் மாற்றம் அவனுக்கு மகிழ்வு தான். தன் மனதை புரிந்து கொண்டு, தனக்காக யோசித்து, விட்டுப் போன சொந்ததையும் சேர்த்துக் கொண்டதில் அவனின் காதல் அவனுக்கு பெருமையைத் தந்தது போல் உணர்ந்தான்.
“சீக்கிரமா அத்தை குடும்பத்தை கூட்டிட்டு இங்க வந்திடு பா ” அதற்க்கு மேல் என்ன பேசுவது சரி என்று சொல்லி வீட்டில் இருப்பவர்களை விசாரித்து விட்டு அழைப்பை துண்டித்தான்.
ஜோத்பூரில் உள்ள அனைத்து கோவில்களுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் அழைத்து சென்று பார்த்து விட்டு, 2 நாட்கள் கழித்து அனைவரும் வர்மாவின் வீட்டிற்கு வந்தனர்.
மகிழ்வதனியும் ராஜவர்மனும் வாசலுக்கே வந்து வரவேற்றனர். புது மணத் தம்பதிகளுக்கு எடுப்பது போல், ரத்தோரையும், ஜோதாவையும் நிற்க வைத்து ஆலம் கரைத்து உள்ளே அழைத்து சென்றார்கள்.
எத்தனை வருடங்கள் ஆனாலும் தாய் வீட்டு பாசம் தனி தான். தாமதமாக கிடைத்தாலும் உறவுகளின் அன்பு மாறாது. எல்லார் மனதிலும் அத்தனை மகிழ்வு.
வர்மா வந்திருப்பதை அறிந்து அலுவலகதிலிருந்து மதிய உணவு வேளையில் வந்தான். நிலா வேலை முடித்து விட்டு மாலை வருவதாக சொல்லி விட்டாள். இருவரின் பொறுப்பும், அக்கறையும் பார்த்து வர்மாவுக்கு நிம்மதி பரவியது.
வந்ததும் வர்மாவை கட்டி பிடித்தவன் “என்ன மச்சான் 3 மாசத்துல முடிக்க வேண்டிய மூனே நாள்ல முடிச்சிட்டு வந்த ” சந்திரமுகி படத்தில் ரஜினி,வடிவேலு கேட்பது போல் விஜய் கேட்க, சிரித்தான் வர்மா வெட்கத்துடன்.
“என் மச்சானா இது, சத்தியமா என்னால நம்ப முடியல, ராஜாஸ்தன் பாலைவனத்துல சிக்கி மாறி வந்துருக்கியே மச்சான், நான் போய் தங்கச்சியை பார்க்குறேன் ”
ஜோதா, ரத்தோரிடம் ஆசி வாங்கி விட்டு நலம் விசாரித்தவன், ஆரண்யாவிடம் சென்றான். மகிழ்வதனியிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
“என்னமா மாமியாரும், மருமகளும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க ” விஜயின் குரலில் பேச்சினை நிறுத்தி விட்டு விஜயிடம் எழுந்து வந்தவள் “எப்படி இருக்கீங்க அண்ணா, வாழ்த்துக்கள் ” நிலாவுக்கும், விஜய்க்கும் நடந்த திருமணத்திற்கு வாழ்த்துக்கள் சொல்ல,
சிரிப்புடன் வாழ்த்தினை பெற்றுக் கொண்டவன் அவளுக்கும் வாழ்த்து சொல்ல, அவளும் சிரித்தாள்.
“நான் நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க, எனக்கு ரொம்ப சந்தோஷம் ஆரண்யா, நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ பொறந்தவங்க, சின்ன பிரிவு ஆனால் உண்மை காதல் கண்டிப்பா சேரும் “
“ஆமா அண்ணா ” அவள் குனிந்த படி சொல்ல, திருமணம் என்று சொன்னதால் வந்த வெட்கம் என்று நினைத்துக்கொண்டான்.
ஊருலிருந்து வந்ததால் அன்று ஓய்வு எடுத்தவர்கள் மறுநாள் வீட்டிலேயே குடும்ப உறவுகளுக்கு மத்தியில் எளிமையாக நிச்சயம் வைத்துக் கொண்டார்கள். இருவருக்கும் வைர கல் பதித்த மோதிரம் வழங்கப்பட, அவள் தளிர் மேனியில் மென்மையாய் மோதிரத்தை போட்டு அவனும் பெற்றுக் கொண்டான்.
திருமணம் 1 மாதத்திலே நடத்திட முடிவு செய்ய, ஜோதா, ஆரண்யா இங்கேயே தங்கி விட, ரத்தோர் மட்டும் ராஜஸ்தான் சென்று விட்டார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேலை என்று திருமண வேலைகளை அனைவரும் பகிர்ந்து செய்தனர்.
நகைகள், துணிகள், பட்டு புடவை, வேட்டி, என்று எல்லாரும் ஒன்றாய் சேர்ந்து கல கலப்புடன் பேசி, சிரித்து தேர்வு செய்தனர். வர்மா, ஆரண்யாவுக்கான முகூர்த்த பட்டு புடவை, வரவேற்பரைக்கு ராஜஸ்தானிய லெகங்கா தேர்வு செய்தான். ஆரண்யாவும் வர்மாவுக்காக ஜோத்பூர் கல்யாண உடையை தேர்வு செய்தாள்.
தாமரை வண்ண பட்டுப் புடவை தங்க இழைகள் கொண்டு அவளை ஜொலிக்கசெய்தது. காஞ்சிபுரம் பட்டில் புதியதாய் மின்னும் விண்மீன் போல அவள், பட்டு, வேட்டி சட்டையில் பகலவன் போல அவனும் பார்ப்பவர்களுக்கு கண்ணில் நிறைந்து மனதில் பதிந்து போனார்கள்.
இருவரின் சிரிப்பும், அவளின் கன்னக் கதுப்புகளில் தெரியும் செம்மாதுளை நிறம் அவளின் நாணம் கொண்ட மங்கையின் அழகை வெளிக்கொணர்ந்தது. அதை அவ்வப்போது எவரும் அறியாமல் காந்த விழிகளில் படம் பிடித்து இதயப் பெட்டக்கத்தில் சேமித்து அவளுடனான இனிமைப் பொழுதுகளில் அவளிடம் சொல்லி மகிழ்ந்து கொள்ள தவிப்பையும் அடக்கி கம்பீர அழகில் பொறுமை காத்தான்.
ராஜவர்மன், மகிழ்வதனி, ஜோதா, ரத்தோர், நிலா, விஜய், வருண், நிதிஷா என அவர்களின் மேடையில் இருக்க, திருமாங்கல்யத்தை எடுத்தவன் விழிகளிலே சம்மதம் கேட்க, மூடித் திறந்திடும் மலர் போல அவள் விழிகளும் சம்மதம் தந்தது.
வைரக் கற்கள் கொண்ட நகைகளில் மின்னிக் கொண்டிருந்த அவளின் கழுத்தினில் மஞ்சள் தாலியினைக் கட்டிட, நிலா மூன்றாம் முடிச்சினை போட வர, மூன்றையும் அவனே போட்டு தன்னவள் ஆக்கி நெற்றி முத்தமிட்டு, குங்குமம் வைத்தான் வர்மன்.
ஜோதா மகிழ்வுடன் இருக்க அவள் விழியில் இருந்து சிந்திய கண்ணீரை துடைத்து விட்ட ராஜவர்மன், தங்கையை அணைத்துக் கொண்டார்.
மாலை வரவேற்பு என்பதால் மணமக்களை வீட்டிற்கு அழைத்து சென்று மீதமுள்ள சடங்குகளை முடித்து விட்டு, ஓய்வெடுக்க வைத்தனர். இருவருக்கும் பேசுவதற்கு ஆசை இருந்தும் அதற்கான தருணம் கிடைக்கவில்லை.
வர்மா நினைத்தால் ஒரு நொடியில் அதிரடியாக அவள் இருக்கும் அறைக்கு சென்று பேசிடுவான். ஏனோ குடும்ப உறவுகள்,சடங்குகள் மேல் வந்த நல்ல உணர்வினை ஏற்றுக் கொண்டான். இரவு கண்டிப்பாக தங்களுக்காக தானே காத்துக் கொண்டிருக்கிறது அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் மனதிற்கு கட்டுப்பாடுகள் போட்டுக் கொண்டான் தற்காலிகமாய்.
அடர் மாதுளை நிற லெகங்கா ராஜஸ்தானின் பாரம்பரிய நகைகள், ஜோத்பூர் கல்யாண உடையில் வர்மா, குளிர் சந்தன நிற குர்தா, அடர் செம்மை நிற பைஜாமா அணிந்து, கழுத்தில் அவனுக்கு பொருத்தமாய் இருந்த தங்கச் சங்கிலி அது அவனுக்கு கம்பீர அழகை கொடுத்தது.
நண்பர்கள், உறவினர்கள், தொழில் சார்ந்த நண்பர்கள் என அனைவரும் மகிழ்வுடன் வந்து வாழ்த்துக்கள் சொல்ல, அங்கே மகிழ்வுக்கு பஞ்சம் இல்லை.
ராஜஸ்தானிய மெல்லிய இசைக்கு ஏற்ப இருவரும் நடனமாட, அவளின் ஒவ்வொரு பார்வைக்கும் ஆடவன் றெக்கை கட்டி பறப்பது போல் உணர்ந்தான். அதை நடன அசைவினில் வெளிப்படுத்தி மெல்லிய தீண்டலில் அவளை சிலிர்க்க செய்தது. தனி உலகில் இருவரும் சஞ்சரிக்க,
கை தட்டல்கள் அவர்களின் மோன நிலையை களைத்து நிகழ் உலகிற்கு அழைத்துச் சென்றது.
கட்டிலில் இருந்த வாசனைமிக்க மலர்கள் இருந்தாலும், தன்னவன் வரவில்லை என்ற காத்திருப்பில் கட்டிலில் சாய்ந்த வண்ணம் உறங்கி இருந்தாள் அழகுப் பதுமை ஆரண்யா, மூக்க முட்ட குடித்து விட்டு அறைக்குள் தாமதமாக வந்தான் வர்மா..
வர்மாவின் இந்த செயலுக்கு காரணம் என்ன… அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்
