அத்தியாயம் 24

கோவிலில், முருகனின் எழில் மிகுந்த தோற்றம் வர்ஷினியின் கண்களை நிறைத்திருந்தது. அன்று செவ்வாய்கிழமை ஆதலால் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்திருந்தார்கள். முருகனை கண் குளிர தரிசித்து, கோவில் பிரகாரத்தை சுற்றி விட்டு இருவரும் சற்று அமரலாம் என்று மண்டபத்தின் படியில் அமர்ந்தனர். அப்போது ஒரு மூதாட்டியை சக்கர நாற்காலியில் தள்ளிக் கொண்டு வந்தார்கள். அதை தள்ளிக் கொண்டு வந்தவரை பார்த்ததும் வர்ஷினி, இவங்கள எங்கோ பார்த்த மாதிரி இருக்கே என்று உற்று நோக்க,  அவங்க விசாலாக்ஷி அத்தை தானே, அவங்க ஏன் இவங்களை தள்ளிக் கொண்டு வராங்க என்று நினைத்துக் கொண்டே  அவர்களை பார்க்க, விசாலாக்ஷியும் வர்ஷினியை பார்த்துவிட்டாள். ஆனால் இவளை பாராதவள் போல் அந்த மூதாட்டியை தள்ளி கொண்டு இவளை தாண்டி சென்று விட்டாள். விசாலாக்ஷி பார்க்கவே பாவமாக இருந்தாள். உடம்பில் ஒரு பொட்டு தங்கம் கூட இல்லை. தலையை கூட சரியாக வாராமலே ஒரு கொண்டை போட்டிருந்தாள். சாதாரண ஒரு நூல் புடவை தான் உடுத்தி இருந்தாள். ஆனால் முன்பு இருந்த விசாலாக்ஷி  வீட்டில் இருந்தபோதும் கழுத்தில் மூன்று தங்க சங்கிலிகள் அணிந்திருப்பாள். காதில் பெரிய வைர தோடும்  இரு கைகளிலும் அடுக்கடுக்காக தங்க வளையல்கள் இருக்கும். தினம் தினம் அவர்கள் கட்டும் சேலையின் விலையே குறைந்தது  ஐந்தாயிரம் ரூபாய் இருக்கும். அவ்வளவு செழிப்பாக வாழ்ந்தவள் இன்று இந்த கோலத்தில்  பார்க்க வர்ஷினிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அவர்களிடம் போய் பேசலாமா வேண்டாமா என்று கௌரியிடம் என்ன சொல்லி சென்று அவரை போய்  பார்ப்பது என்று ஒரே யோசனையாய் இருந்தது. சற்று நேரத்தில் கௌரி கிளம்பலாமா என்று கேட்க, வர்ஷினியும் சரி என்று சொல்லி இருவரும் எழுந்து வெளியே வர, எதிரே விசாலாக்ஷி, அந்த மூதாட்டியை தள்ளி கொண்டு சென்றாள். வர்ஷினிக்கு மனது கேட்கவில்லை. அவள் குற்றுயிராய் கிடந்த இரு சமயமும்  விசாலாக்ஷி தான் அவளுக்கு முதலுதவி செய்திருக்கிறாள். அவளை மருத்துவமனையிலும் அனுமதி செய்திருக்கிறார். முதலில் அவளிடம் கடுமையாக நடந்து  கொண்டாலும் பிறகு அவளை புரிந்து கொண்டு அவளிடம் அன்பாகத்தான் இருந்தார். அவரை இந்த நிலையில்  பார்த்தபோது வர்ஷினிக்கு என்னமோ போல் தான் இருந்தது. கௌரியிடம்  எனக்கு அவங்களை தெரியும் நான் போய் பேசிட்டு வந்திறேன் என்று சொல்லிவிட்டு விசாலாக்ஷி முன் நின்றாள்.  

 

அத்தை எப்படி இருக்கீங்க? என்று கேட்க, விசாலாக்ஷி, அந்த மூதாட்டியிடம் ஒரு ஐந்து நிமிஷம் இங்கே இருங்கம்மா. எனக்கு தெரிஞ்ச பொண்ணுதான் பேசிட்டு வந்திடுறேன் என்று சக்கர நாற்காலியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு அது நகர்ந்து விடாதபடி லாக் செய்து விட்டு வர்ஷினியை தனியாக அழைத்து கொண்டு சென்றார். வர்ஷினியை பார்த்து நல்லா இருக்கியாமா? நீ நல்லாத்தான் இருப்பே. உன்னை இப்படி பார்க்க எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு என்று அவர் உண்மையான சந்தோஷத்தை வெளிப்படுத்த, நான் நல்லா இருக்கேன் அத்தை. நீங்க ஏன் இப்படி இருக்கீங்க? அந்த பாட்டி யாரு என்று கேட்க விசாலாக்ஷியின் கண்களில் நீர் நிறைந்தது. என்னத்தம்மா சொல்றது! உனக்கு செஞ்ச பாவம் தான் நாங்க இப்படி இருக்கோம். உன்னை விவாகரத்து பன்ன பிறகு என் பையன் அந்த ஹேனியை கல்யாணம் பண்ணிக்கிட்டான். அந்த பொண்ணு வீட்டிலே  ஆடாத ஆட்டம் இல்லை, வீட்டிலேயே குடிச்சிட்டு நாலைந்து பசங்க கூட சேர்ந்து கூத்தடிச்சா. அதுக்கு கூட நானும் என் பையனும் ஒன்னும் சொல்லல. தினமும் குடிச்சிட்டு ஒரு பையன்  கூட வருவா. அதுக்கு கூட என் பையன் ஒன்னும் சொல்லமாட்டான். கொஞ்ச நாள் கழிச்சு எனக்கு உன் கூட வாழறது போர் அடிச்சிருச்சி,அதனாலே நான் வேறு ஒருத்தரோட போறேன்னு லெட்டர் எழுதி வச்சிட்டு போய்ட்டா. போனவ அப்படியே போயிருந்தாலும் பரவாயில்லை, என்னை அடிச்சி கொடுமைபடுத்துறாங்க, அதனால தான் நான் வந்துட்டேன். எனக்கு ஜீவனாம்சம் வேணும்னு கோர்ட்ல கேஸ் போட்டு எங்களுடைய பாதி சொத்தை எழுதி வாங்கிட்டா. இதனாலே கோபப்பட வினய் என்கிட்டேயும் ஆரியாகிட்டேயும் சண்டை போட்டு கோச்சிட்டு எங்கோ போய்டாம்மா. போனவன் இதுவரைக்கும் எங்கே இருக்கானே தெரியல. அப்புறம் ஆர்யாவுக்கு தீடீரென்னு வேலையும் போயிடுச்சி. அதனாலே இன்னும் அதிகமா குடிச்சதாலே அவனுடைய உடம்பு ரொம்ப பாதிக்கப்பட்டது. வினய் தான் அவனை விட்டு போய்ட்டானா நானும் அவனை அப்படியே விட்டுட்டு  போகமுடியுமா சொல்லு, நான் அவனை பெத்தவ இல்லையா, அதனாலே மிச்சம் இருந்த சொத்து, என்கிட்ட இருந்த நகை எல்லாம் வித்து அவனுக்கு வைத்தியம் பார்த்தேன். இருந்த பணம் எல்லாம் அவனுக்கு மருந்து வாங்கவும் அன்றாட செலவுக்குமே சரியாய் போச்சு. நாளை ஓட்டணும் இல்ல, அதனாலே தெரிஞ்சவங்க மூலம் இவங்கல பாத்துகிற வேலைக்கு வந்தேன். இவங்கள காலை ஏழு மணியில் இருந்து மாலை ஐந்து மணிவரை பாத்துக்கணும். அதுக்கப்புறம் அவங்க வீட்டு ஆளுங்க பாத்துப்பாங்க. நல்ல மனுஷங்கதான். போதுமான சம்பளம் கொடுக்குறாங்க என்று சொல்ல சொல்ல வர்ஷினிக்கு மனசு கனத்தது. எப்படி இருந்தவங்க இப்படி ஆயிட்டாங்களே என்று நினைத்துக்கொண்டு நான் ஏதாவது உதவி செய்யட்டுமா என்று கேட்க , விசாலாக்ஷி உதவி ஒன்னும் வேணாம்மா. முடிஞ்சா என்னையும் என் பிள்ளையையும் மன்னிச்சிடு என்று அவர் கைகூப்பி நிற்க, வர்ஷினி என்ன அத்தை பெரியவங்க நீங்க,  என்கிட்ட மன்னிப்பு எல்லாம் கேட்கலாமா என்று சொல்லிக் கொண்டே இருக்கையில், கௌரி வர்ஷினி அருகில் வந்து போலாமா வர்ஷினி என்று கேட்க, வர்ஷினி திடுக்கிட்டு இவன் எப்போது இங்கே வந்தான் என்று அவனை பார்க்க, அதற்குள் விசாலாக்ஷி  நான் வரேம்மா என்று அவளிடம் விடைபெற்று செல்ல, வர்ஷினி  கௌரியுடன் விசாலாக்ஷி பற்றி யோசித்து கொண்டே  தான் நடந்தாள்.        

  

வீட்டுக்கு வந்ததும் வர்ஷினிக்கு ஏனோ மனசே சரியில்லை. வர்ஷினி  தனக்கு துன்பம் விளைவித்தவர் கூட நன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் குணம் உடையவள். அவளுக்கு விசாலாக்ஷியை நினைக்கும்போது பாவமாக இருந்தது. வர்ஷினி தன்னையுமறியாமல் சிந்தனையில் மூழ்கிக்கொண்டிருக்க, கௌரி அவள் அருகில் வந்து வினை விதைத்தவான் வினை அறுப்பான், திணை விதைத்தவன் திணை அறுப்பான் என்று சொல்ல வர்ஷினி அவனை பார்த்து நீங்க விசாலாக்ஷி அத்தை பேசினது கேட்டிங்களா? என்று கேட்டாள். ஆர்யாவின் வேலைக்கு ஆப்பு வச்சதே அவன்தானே, அது அவனுக்கு மட்டும்தானே தெரியும், அவனும் ஆமாம் என்று தலையாட்டிவிட்டு வர்ஷினி உனக்கு நல்ல மனசு இருக்கு நீ வேனா அவங்களை மன்னிச்சிரலாம், ஆனா தப்பு செஞ்சவங்க தண்டணை அனுபவிச்சு தான் ஆகணும், நீ அதை பத்தி எல்லாம் யோசிக்காதே என்று சொல்லி கொண்டே இருக்கையில் கவிதா அங்கு வந்து வர்ஷினி உன் அப்பா வந்திருக்காங்க வா என்று இருவரையும் அழைத்துக் கொண்டு போனார். 

 

கரண் வர்ஷினியை பார்க்க , வர்ஷினி வாங்க அப்பா, வந்து சாப்பிடுங்க என்று மட்டும் கூறிவிட்டு அமைதியாகிவிட்டாள். கௌரி தான் அவரிடம் நன்றாக பேசிக் கொண்டிருந்தான். அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு அப்பாவுக்கும் பொண்ணுக்கும் தனிமை கொடுத்து  அவரவர்  தங்களது அறைக்குள் சென்றனர். கரண் வர்ஷினியிடம்  வர்ஷினி உங்கிட்ட சொல்லாம உன்னை மிரட்டி கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்களே என்று என் மேல் நீ கோபமாக இருக்கிறேனு தெரியும். அதனாலே நா வருத்தப்படலம்மா. எனக்கு அது தப்பாகவும் தெரியலம்மா. ஏன்னா முதலே செஞ்ச தப்ப நான் திருப்பி செய்யல.  நான் இப்போ ஒரு நல்லவன் கிட்டத்தான் உன்னை ஒப்படைச்சிருக்கேன். கௌரி உன்னை நல்லா பாத்துப்பாருனு  எனக்கு தெரியும். உன் நல்லதுக்குதான் இதை நான் செஞ்சேன்னு கூடிய சீக்கிரமே நீ புரிஞ்சுக்குவே, நான் வரேம்மா என்று பதில் ஏதும் கூட எதிர்பாராமல் சென்றுவிட்டார். வர்ஷினிக்கு தன் தந்தையிடம் சகஜமாக பேசாதது வருத்தமாகத்தான் இருந்தது, ஆனாலும் அவர் மீது இருந்த கோபத்தில் இருந்து வெளியே வரமுடியவில்லை.  

 

அன்றே விக்னேஷும் மதுவும் தங்களுக்கு வேலை இருக்கிறது என்றும் ஒரு வாரம் கழித்து கௌரியும் வர்ஷினியும் விருந்துக்கு வரவேண்டும்  என்று அழைத்து விட்டு சென்றார்கள். அவர்கள் கூப்பிடதற்கிணங்க, புது ஜோடி இருவரும் மதுமதி கர்ப்பமாக இருப்பதால் அவருக்கு உதவி செய்ய  கூடவே கவிதாவும் அவர்கள்  வீட்டுக்கு விருந்துக்கு சென்றார்கள். வர்ஷினிக்கு அந்த கிராமம் மிகவும் பிடித்திருந்தது. நீண்ட தென்னை மரங்கள், பச்சை பசேலென்று புல் வெளிகள்,  சில்லென்று  மாசு இல்லாத காற்று, கூட்டம் கூட்டமாய் செல்லும் சிறு பறவைகள், வாய்க்கால்கள், சிறு சிறு ஆறுகள் என அனைத்துமே பார்க்க பார்க்க அவளுக்கு சலிக்கவேயில்லை. கவிதாவே இரு மருமகளுக்கும் வேலை வைக்காமல் அனைத்து வேலைகளையும் அவரே பார்த்துக்கொண்டார். 

 

அங்கு வர்ஷினியும் மதுமதியும் மனம் விட்டு நெடு நேரம் பேசினார்கள். தங்கள் பள்ளி வாழ்க்கை, கல்லூரியில் செய்த சேட்டைகள் என்று பேச்சு நீண்டு கொண்டே போனது. இருவருக்குமே ஒருவரையொருவர் மிகவும் பிடித்து விட்டது. வர்ஷினி என்ன அக்கா சென்னையில் இருந்த உங்களுக்கு இந்த கிராம வழக்கை பிடிச்சி இருக்கா? என்று கேட்க, மதுமதி ரொம்ப பிடிச்சிருக்கு வர்ஷினி. நான் செய்ற வேலைக்கு ஏத்த மாதிரி அமைதியான இடம். சுற்றிலும் விகல்பம் இல்லாத மனிதர்கள், நாம ஏதாவது கொஞ்சம் உதவி செஞ்சாலும் அதுக்கு உயிரே கொடுக்கிற அளவுக்கு  பாச காட்டுற மனுசங்க சுத்தமான காற்று, சத்தான நல்ல உணவு, என் மனச புரிஞ்சி நடக்கிற என் கணவர், என்னை அவங்க பொண்ணு மாதிரி பாத்துகிற என் அத்தை,மாமா இதற்கு மேலே என்ன வேணும் சொல்லு, சொர்கம் மாதிரி இருக்கு என்று அவள் உணர்ந்து ரசித்து கூற வர்ஷினியும் சரி என்பது போல் தலையாட்டினாள். விறுவிறுப்பாக வண்டி இரைச்சலுடன் செல்லும் நகர வாழ்க்கை  வாழ்ந்தவளுக்கு இந்த அமைதியான கிராம வாழ்க்கை வர்ஷினிக்கும் பிடித்துத்தான் இருந்தது. 

 

கவிதா தன்  மருமகளை அமர வைத்து தானே இழுத்துப்போட்டு விருந்தை தடபுடலாக செய்திருந்தாள். அனைவரும் அமர்ந்து மகிழ்சியாக உணவருந்தி விட்டு அன்றைய நாளை அங்கேயே கழித்தனர். மறுநாள் கவிதா மற்றும் நம் புது மண ஜோடிகள் சென்னை திரும்பினர். சென்னை வந்ததும் கவிதா இருவருக்கும் ஊருக்கு தேவையான அனைத்து  ஏற்பாடுகளையும் செய்ய துவங்கினார். ரசப்பொடி, சாம்பார் பொடி, புளியோதரை பொடி மற்றும் அனைத்து பொடி வகைகளையும் அழகாக பார்சல் செய்து கொடுத்தாள். வர்ஷினி  கவிதாவிடம் இதெல்லாம் எதுக்கு அத்தை என்று கேட்க, இதெல்லம் அங்கே கிடைக்காதாம். கிடைச்சாலும்  பாக்கெட்ல போட்டு விப்பாங்களாம். அதிலே கெட்டு போகாமல் இருக்க நிறைய இரசாயனம் பொருள்கள் கலந்திருக்கும்னு கௌரி தான் சொன்னான்ம்மா. அதனாலே தான் நானே வீட்டிலே எல்லாத்தையும் பாத்து பாத்து பக்குவமா வறுத்து  அரைச்சு கொடுதிருக்கேன். ஆரோக்கியமா இருக்கிறது ரொம்ப முக்கியம் இல்லையா என்று கூறி அவளிடம் அனைத்தையும் கொடுக்க  வர்ஷினியின் கண்கள் கலங்கியது. ரொம்ப நன்றி அத்தை என்று சொல்லி வாங்கி கொண்டாள். நம்ம வர்ஷினி அமெரிக்காவுக்கு போய் என்ன அவஸ்தை பட்டானு அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போமா!  

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page