அத்தியாயம் 18

 

​சலங்கையை உடைத்த ஆத்திரத்துடன் தன் அறைக்குள் சென்ற ரஞ்சனுக்கு நிலை கொள்ள முடியவில்லை. தனக்கு பிடிக்காது என்று தெரிந்தும், தன் தாயும் சேர்ந்து இப்படி செய்வார் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. 

மயூரியைக் கொல்லும் அளவு ஆத்திரம். புலியைப் போல் அறையினுள் நடந்தவன், “ச்ச..டிஸ்கஸ்டிங்!” என்று தலையை இரு கைகளாலும் கோதி முகத்தைத் தேய்த்தான்.

​அலுவலகம் செல்ல முடிவெடுத்தான். அறையை விட்டு வெளியே வந்து அந்த அறையைத் திரும்பிப் பார்க்க, அந்த அறை திறந்தே தான் இருந்தது. கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டு கீழே இறங்கினான்.

 கீழே அவனுக்காகக் காத்திருந்த ஆனந்திடம், “ஆனந்த், லேப்டாப்பை எடுத்துட்டு வா. ஆபீஸ் போகணும்” என்றான். 

“சார், வீட்டிலேயே பார்த்துக்கலாம்னு சொல்லித் தானே வந்தீங்க?” என்றான் அவன் தயங்கியபடி. 

“ப்ச்..இப்போ வர முடியுமா, முடியாதா?” என்று கத்தினான். 

“இதோ வந்துட்டேன் சார்” என்றவன் விரைந்து காரை எடுத்தான்.

​காரினுள் ஏறியவனுக்கு மனதினுள் அப்படி ஒரு அனல். ‘தன் தாயும் சேர்ந்தா? தனக்கென்று தன்னை நினைக்க என்று யாரும் இல்லை’ என்று சிந்தித்தவன் மனதில், ‘யார் மேலயும் பழி போடாமல் நம்மள நாமளே செதுக்கிக்கணும்’ என்ற வார்த்தைகள் ஓடியது.

 கண்களை இறுக மூடியவன், ஜன்னலை இறக்கிவிட்டு எதிர்காற்றை முகத்தில் வாங்கினான். மனது கொஞ்சம் லேசானது போல் தோன்ற, ஒரு நெடிய மூச்சினை இழுத்து விட்டவன் இருக்கையில் வாகாக சாய்ந்து கொண்டான்.

​அலுவலகம் வந்ததும் தன் அறையை நோக்கிச் சென்று, தன் மேஜையில் லேப்டாப்புடன் அமர்ந்தவன் மனம் இப்போதும் வேலையில் மும்முரமாகச் செயல்பட்டது.  வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தவன் முன்னே வந்து நின்றான் ஆனந்த்.

 “சார்…” என்றான் தயக்கத்துடன். 

“வீட்டில் நடந்த பிரச்சனையைத் தவிர வேறு எதப்பத்தினாலும் பேசு” என்றான் ரஞ்சன் லேப்டாப்பில் இருந்து கண்களை எடுக்காமலே 

“ஹ்ம்ம்..இன்னைக்கு மயூரிக்கு பிறந்தநாள்” என்றான் ஆனந்த்.

​கண்களை இறுக மூடித் திறந்தவன் ஒரு நெடிய மூச்சை வெளியிட்டான். தலையை இரு கைகளாலும் கோதிவிட்டு ஆனந்தைப் பார்த்தவன், “சோ வாட்? அதுக்கு நான் என்ன பண்ணனும்னு சொல்ற?” என்றான் முகம் இறுக. 

ஆனந்த் அவனைப் பார்த்து, “ரஞ்சன், நீ பண்றது உனக்கே சரின்னு தோணுதா? அந்தப் பொண்ணு பாவம்டா” என்றான்.

 “யாரு, அவ பாவம்? அப்போ அவளைக் கொடுமைப்படுத்துற நான் வில்லன், அப்படித்தானே?” என்றான் ஒற்றைப் புருவத்தைத் தூக்கி.

​”ப்ச்..நான் அப்படிச் சொன்னேனா? கொஞ்சம் அவளைக் கன்சிடர் பண்ணலாம்னு தான் சொல்றேன்” என்றான்.

 “எது? எனக்குத் தெரியாம எங்க அம்மாவை ஏமாத்திப் பரதம் கத்துக்கிறாளே அதையா? இல்ல, நொண்டியைக் கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு ஓடிப்போனாளே அதையா? எதை கன்சிடர் பண்ணச் சொல்ற?” என்றான் ரஞ்சன் கோபமாக. 

“அவளுக்கு உன்னைப் பத்தித் தெரியாம தான் ஓடிப்போனாள். அவ எதுக்காக கல்யாணம் வேண்டாம்னு ஓடினான்னு கூட நீ அவளைக் கேட்கல. பின்ன ஏன் அவளை இப்படி டார்ச்சர் பண்ற?” என்றான் ஆதங்கமாக.

இருக்கையில் சாய்ந்து இருபுறமும் ஆடியபடி ​”ஓ..அவங்க இதெல்லாம் உன்கிட்ட சொன்னாங்களா ? என்ன காரணமாம்? என்கிட்ட பணம் இல்லனு போனாளா, இல்லை படிப்பு இல்லனு ஓடினாளா..?இல்லை யாரையாவது லவ் பண்ணாளா? என்ன காரணம்னு சொன்னா அவ உன்கிட்ட?” என்றான். 

பதில் இல்லை ஆனந்திடம். பெருமூச்சுடன், “ஆனால் உன்னுடைய நிலையை கண்டு அவ ஓடிப்போகலனு மட்டும் எனக்குத் தெரியும். அப்படியே அவ கல்யாணத்துக்கு முன்னே ஓடிப்போனாலும், உன்னை விட்டு விலகிப் போக தானே நினைச்சா? அவளை அப்படியே விட்டுருக்க வேண்டியதுதானே? அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு யார் மேலயோ இருக்கிற கோபத்தை அவ மேல திணிச்சுக்கிட்டு இருக்க ரஞ்சன் நீ” என்றான்.

​”ஷட் டப்!” என்று கத்தியவன், அவன் இருக்கையில் இருந்து எழுந்தான். கால்களின் வலி முகத்தில் தெரிந்தாலும் அதைத் கட்டுப்படுத்திக் கொண்டு டேபிளைப் பிடித்தபடி ஆனந்த் அருகே வந்தவன், அவனை முறைத்தபடி,

 “அவ என்ன வேணான்னு ஓடிப்போவா..? அதிலும் காரணமே இல்லாம போவா.? வேடிக்கை பார்த்துட்டு இருக்க அவ்வளவு பெரிய தியாகி இல்லை ஆனந்த் நான்” என்றான்.

 “சரி அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட இல்ல, அட்லீஸ்ட் அவள கஷ்டப்படுத்தாமலாவது இரு. அவதான் அம்மா கூட, என் கூட, சரளா அக்காகிட்ட கூட, ஏன் உன் கிட்டயும் அவ வெறுப்பைக் காட்டலையே? நீ எவ்வளவு கஷ்டப்படுத்தினாலும் அவ அமைதியா தான போறா? அவ இடத்தில் எந்தப் பெண் இருந்தாலும் இப்படி அமைதியா இருக்க மாட்டா ரஞ்சன். அது உனக்கே தெரியும்” என்றான்.

​ஒரு பெருமூச்சு விட்டவன், “ஆனந்த் ப்ளீஸ், அவளைப் பத்தி என்கிட்ட இவ்வளவு பேசணும்னு அவசியம் இல்லை. அதுக்கு அவளுக்குத் தகுதியும் இல்லை. சோ, போய் உன் வேலையைப் பாரு” என்று திரும்பி  இருக்கைக்கு நடந்தான் ரஞ்சன்.

 “மார்க் மை வேர்ட்ஸ் ரஞ்சன். அவளோட அருமை உனக்கு புரியும்போது எல்லாமே உன் கையை மீறிப் போயிருக்கும். சாது மிரண்டால் காடு கொள்ளாது, ஞாபகம் வச்சுக்கோ” என்றான். 

திரும்பி அவனை ஏளனமாகப் பார்த்துச் சிரித்தவன், “என்ன சாபம் விடுறியா? பலிச்சா லைஃப் இன்ட்ரஸ்டிங்கா தான் இருக்கும். என்ன, நான் அவகிட்ட கெஞ்சுற மாதிரி இருக்குமா? நினைச்சுக்கூடப் பார்க்க முடியல அந்தத் கொடூரத்தை. இந்த ஜென்மத்துல அது நடக்காது. தேவையில்லாம கற்பனை பண்ணாம போய் வேலையைப் பாரு” என்று தன் நாற்காலியில் அமர்ந்து லேப்டாப்பைப் பார்க்கத் துவங்கினான்.

ஆனந்த் கோபமாக வெளியே சென்றான்.​அவனும் ஆனந்தும் இப்படித்தான். தனியாக இருக்கும் போது இருவரும் நண்பர்கள்; அனைவர் முன்னிலையிலும் முதலாளி தொழிலாளி. 

ஆனந்தும் அவன் திருமணம் முடிந்ததிலிருந்து மயூரிக்காகப் பேசிக்கொண்டு தான் இருக்கிறான். ஆனால் பலன் தான் பூஜ்ஜியம். 

ஆனந்த் சென்றவுடன் நிமிர்ந்து பார்த்த ரஞ்சன், நாற்காலியில் சாய்ந்து கைகளைக் கோர்த்து யோசிக்க ஆரம்பித்தான். அவன் மனதினுள் ஆயிரம் சிந்தனைகள். அவனுக்கு ஆனந்த் கூறிய எல்லாமே எப்போதுமே மனதில் ஓடிக்கொண்டிருப்பவை தான்.

 ஆனால் அவனால் அதை நடைமுறையில் கொண்டு வரத்தான் முடியவில்லை. அவன் எவ்வளவு முயன்றாலும், முறைத்தாலும், கடிந்து பேசினாலும் அவள் மீண்டும் புன்னகையுடன்,தாயுடன் உலா வருவது அவன் மனதை அசைத்துப் பார்க்கத் தான் செய்தது.

​இருந்தும் இன்று அவள் ஆடுவதைக் கண்டபோது அவள் தனக்குத் துரோகம் செய்ததாகவே அவன் எண்ணினான். அவள் பிறந்தநாள் என்றதும் மனது லேசாகக் கசங்கத் தான் செய்தது. இருந்தும் தன் கோபத்திற்காக அவளிடம் மன்னிப்புக் கேட்கும் அளவு அவன் ஈகோ இடம் தரவில்லை. 

அவ்வப்போது அவள் குணம், நடவடிக்கைகள் அவன் மனதில் காதல் தென்றலை வீச வைத்தது உண்மைதான். ஆனாலும் அவன் மனதில் இருக்கும் குழப்பங்கள் அவனை மயூரி பற்றி நினைக்க விடாமல் செய்தது. 

பெருமூச்சுடன் கண்களை மூடி நாற்காலியில் சாய்ந்திருந்தவன், இன்டெர்க்காம் ஒலியில் நிதர்சனத்திற்கு வந்தான். அதை எடுத்து காதில் வைத்தான்.

 “எஸ், ம்ம்..வரச் சொல்லு” என்று இன்டெர்க்காமை வைத்தவன், நிமிர்ந்து அமர்ந்து முகத்தை இரு கைகளாலும் துடைத்துக்கொண்டு எதிரே இருந்த நீரை எடுத்து அருந்தினான்.

​அவன் அதை கீழே வைக்க, கதவு தட்டப்பட்டது. 

“எஸ், கம் இன் ” என்றவன் வாயிலைப் பார்த்தான். 

உள்ளே ஒரு இளைஞன் வந்தான். அவன் உள்ளே வந்த உடன் , “உட்காருங்க” என்றான் ரஞ்சன். 

வந்தவன் ஒரு கவரை அவனிடம் நீட்டியபடி அமர்ந்தான் . “நீங்க கேட்டவங்க டீடைல்ஸ் கொடுக்க மாட்டோம் என்று சொல்லிட்டாங்க. நாங்க  ட்ரை பண்ணி ஆள் போட்டு கண்டுபிடித்தோம். கொஞ்சம் நிறைய கஷ்டப்பட்டோம்” என்றான் லேசாகச் சிரித்தபடி.

மென் புன்னகையுடன் ரஞ்சனும் செக்கில் பெரிய தொகையை எழுதியவன், “எனிதிங் ஃபார் திஸ்” என்று அவன் கையில் கொடுத்தான்.

 விசாலமான சிரிப்புடன் அவன் எழுந்து சென்றான். 

அவன் சென்றதும் ரஞ்சன் அவன் கொடுத்த கவரைப் பிரித்துப் பார்த்தான். பார்த்தவனுக்கு ஆச்சரியம், அதிர்ச்சி. விழிகள் வெளியே விழுந்துவிடும் அளவு கண்களை விரித்தான். ஒரு நிமிடம் மூச்சு நின்றது அவனுக்கு. பின் மெல்ல சுய உணர்விற்கு வந்தவன்,

 “ஓ ஷிட்! நான் என்ன பண்ணி வச்சிருக்கேன்?” என்று தலையில் அடித்தவன், 

இரு கைகளையும் தலையில் வைத்தான். மேஜை மேல் சாய்ந்து ஒரு நிமிடம் நிதானித்தவனுக்கு அவன் இதழ்களில் புன்னகை பூத்தது. மெல்ல மெல்ல அந்த புன்னகை விரிந்து ஒரு கட்டத்தில் வாய் விட்டு சிரித்தான் பெருமகிழ்ச்சியில் .”ஹோ.. ஹூ.. “ என்று கூச்சலிட்டுச் சிரித்தான். 

அவன் சத்தம் கேட்டு உள்ளே வந்த ஆனந்தைப் பார்த்து மேலும் சிரித்தான். ஆனந்த் அவனை விசித்திரமாகப் பார்த்தபடி அருகே வர, அந்த இளைஞன் கொடுத்த கவரைச் சிரித்தபடி எடுத்து தனது இழுப்பறையில் வைத்துப் பூட்டினான். பின் எழுந்து ஆனந்தைப் பார்த்துச் சிரித்தபடி வந்தவன்,

 “நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். வீட்டுக்குப் போலாமா?” என்றான். 

ரஞ்சனை விசித்திரமாகப் பார்த்த ஆனந்த் , “எதுக்கு? அந்தப் பெண்ணை இன்னும் கஷ்டப்படுத்தணுமா?”அவளுக்குப் பிறந்தநாள், ப்ளீஸ் ரஞ்சன் “என்றான் கெஞ்சலாக 

 புன்னகையுடன் அவன் முன் வந்து இரு கைகளையும் அவன் தோளில் போட்டான் ரஞ்சன் 

“ஓ.. ஆமா..வா போலாம்” என்றவன் முகத்தை இறுக்கமாக்கினான் .

​வீட்டை வந்தடைந்ததும் காரில் இருந்து இறங்கியவன், லேப்டாப்பைக் கைகளில் எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல, ஆனந்த் வராமல் இருக்கத் திரும்பி அவனை ஒற்றைப் புருவம் உயர்த்திப் பார்த்தான் ரஞ்சன். 

“உள்ள வந்து.. நான் என்ன செய்ய? பாவம் அவ. நான் கிளம்புறேன் சார்” என்றான் தன் பைக் சாவியை எடுத்தபடி.

 தோளைக் குலுக்கிவிட்டு “யுவர் விஷ்” என்று விட்டு உள்ளே சென்றான் ரஞ்சன். 

ஹாலில் யாரும் இல்லாமல் இருக்க, அடுக்களையை நோக்கிச் சென்றான். டைனிங் ஹாலில் அமர்ந்திருந்த தாயைக் கண்டான். நிமிர்ந்து பார்த்த மரகதம்.

​அவனைக் கண்டதும் பற்களைக் கடித்தபடி அடுக்களைப் பக்கம் திரும்பி, 

“சரளா, சார் வந்துருக்காரு. சாப்பாடு கொண்டு வந்து கொட்டு. நல்லா சாப்பிடட்டும்” என்றார். 

அவர் கண்கள் கலங்கி இருப்பதை கவனித்தவன் வாயைத் திறக்கவும் முன், அவனை முறைத்தபடி அவர் அறைக்குள் சென்று கதவைச் சாத்தினார்.

 சரளா “தம்பி.. “என்று அழைக்கத் திரும்பிப் பார்த்தான். “சாப்பாடு எடுத்து வைக்கவா?” என்றார் சிறு குரலில். 

அவர் கண்களும் சிவந்திருந்தது. “அம்மா சாப்பிட்டாங்களா?” என்றான். “இல்லை” என்று தலையாட்டினார் சரளா.

​ஒரு பெருமூச்சுடன், “கொஞ்ச நேரம் கழித்துச் சாப்பிட்டுகிறேன்” என்றவன் திரும்பி, மாடி அறை இன்னும் திறந்து இருப்பதை கண்டவன், மெல்ல அந்த அறையைப் பார்த்தபடி மாடி ஏறினான். 

தன் அறைக்குள் சென்று பையை வைத்தவன் சுற்றும் முற்றும் பார்த்தான். ஒரு பெருமூச்சுடன் அந்த அறையை நோக்கி மெல்ல நடந்தான்.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page