யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று ஏட்டில் எழுதி வைத்தது போல, எல்லா ஊர்மக்களும் வாழுமிடம் தான் சென்னை. தமிழகத்தின் முதன்மை வாசிகளை தன்னம்பிக்கை வாசிகளாக மாற்றும் சென்னையில் எப்போதும், எந்த நொடியும் பரப்பரப்பு தான்.
அப்படிபட்ட சென்னையில் முக்கியமான இரண்டு இடங்கள். ஒன்று குமரன் கார்மெண்ட்ஸ் அண்ட் டெக்ஸ்டைல்ஸ். மற்றொன்று டி.ஆர் ஃபேப்ரிக் பிரைவேட் லிமிட்.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாதது இந்தியா முழுவதும் தங்களின் கிளைகளைப் பரப்பவது தான் இவர்களின் நோக்கம். அதற்க்காக இருவருக்குமிடையில் போட்டி என்பது இல்லை. ஒற்றுமையாக மட்டுமே செயல்பட்டு வருகின்றனர்.
குமரன் கார்மெண்ட்ஸ் மட்டும் டெக்ஸ்டைல் தொழில் இப்போதைக்கு தமிழ்நாட்டில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதன் நிர்வாளர் திருக்குமரன் தன் சொந்த உழைப்பினால் உருவாக்கி முன்னேறி மிகப்பெரிய இடத்தை தொழிற்ச்சங்கத்தில் பிடித்துள்ளார்.
அதீதஉழைப்பால் இரண்டு வருடங்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாதுப் போக, அவரின் மகள் ஆதுரி தான் தொழிலை விடாது எடுத்து இப்போது வரை நடத்தி வருகிறாள்.
அவரின் பிரண்மான்ட கார்மெண்ட்ஸ் தொழிற்சாலை முன்னே கருப்பு நிற கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து அழகு பதுமையாய் ஒரு மங்கையும், தின் தோள்களைக் கொண்ட ஒருவனும் இறங்கினர்.
“ஸ்ப்பா ! என்ன ஒரு வெயில் ?” காரில் ஏசியில் இருந்து வெளியே இறங்கி நின்ற நொடியே ஆதுரி கூற,
“ஹே ! இதெல்லாம் சர்வ சாதாரணம் “ என்க, முறைத்தவளோ தன் கையில் இருந்த பேக்கை வைத்து அவனின் தோள்பட்டையில் அடித்தாள்.
“வலிக்குது ஆதுரி “
“நம்பிட்டேன்டா நான். வா ரவுண்ட்ஸ் போய்ட்டு கிளம்புவோம். ஆபிஸ்ல வேலை இருக்கு “ என்கவே, சரியெனக் கூறி இருவரும் உள்ளேச் சென்றனர்.
தங்களின் முதலாளி மகளும், அவளின் பிஏ இருவரும் வருவதைக் கண்ட தொழிலாளிகளோ துரிதமாக வேலைப் பார்க்க ஆரம்பித்தனர்.
அங்கிருந்த அலுவலக அறைக்குச் செல்ல, சூப்பர்வைசர், மேனேஜர் அனைவருமே இன்முகமாக வரவேற்றனர்.
“வணக்கம் மேடம் “ என்க, அவளோ அதனை ஏற்று தலையசைத்தாள்.
“சார் வரலையா மேடம் ?”
சில நாட்களாக அவளின் தந்தை திருக்குமரன் தான் வருகை புரிந்தார்.. என்றாவது ஒரு நாள் தான் ஆதுரி வருவாள் என்பதால் அங்கிருந்தவர்கள் அவ்வாறுக் கேட்டனர்.
“அப்பா ! முக்கியமான வேலையா வெளியே போயிருக்காங்க. அதான் என்னை ரவுண்ட்ஸ் போகச் சொன்னாரு. சரி வாங்க போய் பார்த்துட்டு வந்துரலாம் “
“சரிங்க மேடம். முதல்ல எங்க போகலாம்ன்னு நினைக்கிறீங்க மேடம் “
“ஸ்டிச்சிங் “ என்று ஆதுரி கூற வரும் முன்னே,
“ஏன் உங்க கிட்ட சொன்னா தான் அங்கே கூட்டிட்டு போவீங்களா ?” குறுக்கே நின்று கேள்விக் கேட்டு மடக்கினான் உடன் வந்த துருபதன்.
“அப்படியெல்லாம் இல்ல சார் “
“ஹே ! துரு என்னாச்சு ?”
“நத்திங் “ என்றதும், அங்கே அவர்கள் அணிய தனியாக உடை ஒன்று இருக்கவே இருவரும் அதனை அணிந்துக் கொண்டு அவர்களுக்காக காத்திருந்த பார்வையிடும் வாகணத்தில் ஏறினர்.
தந்தை வந்தால் என்ன செய்வாரோ அதே போன்றே ஒவ்வொரு பிரிவுக்குச் சென்று பார்வையிட்டு இருவரும் சேர்ந்தே குறிப்பெடுத்துக் கொண்டனர்.
குடவுனுக்குச் சென்று அங்கே இருந்த துணி வகைகளை பார்வையிட, “இந்த மெட்டீரியல் யார் கிட்ட வாங்குறீங்க ?” அங்கிருந்த ஒரு துணியை கையில் எடுத்து வைத்து ஆதுரிக் கேட்க,
“வழக்கம் போல நம்ம டி.ஆர் ஃபேப்ரிக் கம்பெனில தான் மேடம். எதுவும் பிரச்சனையா ?”
“இல்லை இல்லை. ரொம்ப நல்லாயிருக்கு. அதுனால தான் கேட்டேன் “ என்கவே,
“மேடம் அவங்க எப்பவும் பெஸ்ட்டா தான் கொடுப்பாங்க. நம்ம எந்த மாதிரி கேட்போம்மா அதே மாதிரி அவங்க கிட்ட இல்லைன்னா கூட இம்போர்ட் பண்ணி கொண்டு வருவாங்க “
“ஓஹோ, அப்படியா ! அப்போ நம்ம பெஸ்ட் தரலைன்னு சொல்லுறீங்களா ?”
“ஐயோ ! மேடம் அப்படியெல்லாம் இல்லை “ என்று பதறிக் கொண்டு கூறவே,
“ஏன் இந்த பதட்டம் நான் சும்மா தான் பயமுறுத்தி பார்த்தேன் “ என்க, அவரோ மெல்ல சிரிக்க, அங்கே வேலைப் பார்த்தவர்களும் புன்னகை முகமாக இருந்த ஆதுரியைப் பார்த்து இன்முகமாக வேலைப் பார்த்தனர்.
பின் அங்கிருந்து பார்வையிட்டவாறு நகர, கீழே தரையில் வைத்திருந்த துணிகள் நிறைந்த அட்டைப்பெட்டி தட்டி சட்டென நடந்தவளோ தடுமாறி விழப் போனாள்.
அதனை மற்றவர்கள் சுதாரிக்கும் முன், ஏன் அவளே உணரும் முன் கண்டு விட்ட துருபதனோ, அவளின் மெல்லிடைத் தாங்கி விழாதுப் பிடித்தான்.
“தேங்க்ஸ் துரு “ என்றவளோ நிமிர்ந்து நிற்க,
“இதெல்லாம் ஓரமா வைக்க மாட்டீங்களா ? இப்படி தான் ஆள் நடக்குற பாதையில வைப்பீங்களா ?” மேனேஜரைக் கண்டு சீற்றமோடு கத்தினான்.
“சாரி சார். ஏதோ தெரியாம ”
“என்ன தெரியாம ? நான் மட்டும் இவளை பிடிக்காம போயிருந்தா என்னாகியிருக்கும். பின்னாடி இருக்குற மிசின்ல போய் “ என்று எமோஷனல் ஆகி கத்தவே, சட்டென அவனின் கரம் பற்றி தடுத்தாள் ஆதுரி.
“துரு. காம் டவுன். வேலை நேரத்துல எதுக்கு பிரச்சனை ? அதான் எனக்கு ஒன்னுமில்லேயே ?” என அவனின் கோவத்தை தணிக்க கூறவே, ஏனோ மனம் ஆறவேயில்லை.
பின் அங்கிருந்துச் செல்ல, வேலைப் பார்த்த இருவர் தங்களுக்குள் குசுகுசுவென்று பேச ஆரம்பித்தனர்.
“மேடம் மேல அந்த தம்பி எவ்வளோ அக்கறை வச்சிருக்கு பார்த்தியா ? ஏதோ அததோட பொண்டாட்டிக்கு அடிபட்டது போல என்னம்மா சத்தம் போடுது “ என்க,
“அந்த தம்பி நம்மளை மாதிரி என்ன வேலை பார்க்குறவர் மட்டுமா ? நம்ம மேடம்மோட பிரெண்ட்டுல அதான் “
“இருந்தாலும் இவ்வளோ அக்கறையாவா இருக்கணும் “
“ஒரு வேலை காதலிக்காங்களோ என்னவோ ? தொட்டு தானே பேசுறாங்க. ஜோடியா ஆனாலும் நல்லா தான் இருக்கும். என்னடி சொல்லுற ஜோடிப்பொருத்தம் நல்லா தானே இருக்கு ?“
“அது உண்மை தான். முக லட்சணமும், குணமும் பக்காவா ரெண்டு பேருக்கும் பொருந்தி போய் தான் இருக்கு “ என்றவாறு தங்களின் வேலையைப் பார்த்தனர்.
நேரங்கள் கடக்க, ஒரு வழியாக அனைத்தையும் முடித்துக் கொண்டு மறுபடியும் அங்கிருந்த அலுவலக அறைக்கு வரை மாலை நான்கு மணியானது.
வேலை என்று வந்தால் இருவருமே உணவு, தூக்கம், அயர்வு அனைத்தையுமே மறந்து விடுவர்.
“ஓகே துரு. எல்லாமே நோட் பண்ணிக்கிட்டீல. கிளம்பலாமா ?”
“ஹ்ம்ம் போகலாம் ஆதுரி “ என்றவன் அங்கிருந்தவனைக் கண்டு, “இனிமே இப்படி ஏதாவது நடக்காம பார்த்துக்கோங்க. நான் ஆதுரிக்காக சொல்லலை. வயசானவங்க, கர்ப்பமா இருக்குறவங்க எல்லாம் வேலை பார்க்குற இடம் அதுனால தான் சொன்னேன் “ என்று மெல்லக் கூறவே, மன்னிப்பு வேண்டினான்.
“இனிமே இப்படி நடக்காம பார்த்துக்குறேன் சார் “ என்கவே, அந்த இடத்தை விட்டு வெளியேறி தங்களின் காருக்கு வந்தனர்.
துருபதன் காரினை இயக்க, முன்னே வந்து அமர்ந்த ஆதுரி தன் கைபேசியில் எதுவும் குறிஞ்செய்தி வந்திருக்கிறதா எனப் பார்த்தாள்.
பின் சிறிது தூரம் அவர்களின் கார் செல்ல, “துரு. உனக்கு பசிக்கலையா ? நம்ம இன்னும் லஞ்ச் முடிக்கவேயில்லை “ என்க, அவனுக்கும் பசி இருந்தது தான். அவள் உண்ணாமல் தான் எப்படி என்றே அமைதியாக இருந்தான்.
“பசிக்குது தான். சரி உனக்கு பசிக்கும்ல அப்போ பார்த்துக்கலாம்ன்னு நினைச்சேன் “ என்று அவளைக் கண்டு இளநகை மின்னக் கூறவே, தோள்பட்டையில் அடித்தாள்.
“இப்படி இருக்காதே துரு “
“வேற எப்படி இருக்கணும் சொல்லு இருந்திருவோம் “ என கிண்டலாகக் கேட்க,
“எனக்காக நீ உன் வாழ்க்கையை வீணாக்குறேன்னு தோணுது. உனக்கு பிடிச்சா வாழ்க்கையை உன் விருப்பம் போல நீ வாழணும் “
“அப்படி தான் இப்போ இருக்கேன் ஆதுரி “
“ஐ நோ, இருந்தாலும் எனக்கு ஒரு கில்ட்டி பீல்லாவே இருக்கு. சரி நீ ஏன் அவ்வளோ கோவப்படுற அந்த மேனேஜர் கிட்ட ?”
“நான் வரும் போதெல்லாம் கவனிக்கிறேன். எங்க போகணும் முதல்ல கேட்டு அவர் அந்த பிரிவுக்கு இன்பார்ம் பண்ணிறாரு. அதான் அப்படி பண்ணுனேன். நம்ம தான் எப்பவும் கவனமா இருக்கணும். யாரையும் அவ்வளோ சீக்கிரம் நம்ப கூடாது ஆதுரி “
“என் அப்பாவும் அதை தான் சொல்லுவாரு. சரி உங்க அப்பா என்ன சொன்னாரு ?”
“ஊருக்கு வர்ற ஒரு வருஷம் டைம் கேட்டிருக்கேன் “
“எதுக்கு துரு வயசானவரை கஷ்டப்படுத்துற ? இங்கே இருந்து எனக்காக என் கூட என்னோட பிஸ்னஸ் பார்க்கணும் உனக்கு இப்போ என்ன அவசியம் சொல்லு. நீ நினைச்சா உங்க அப்பா சொல்லுற மாதிரி உங்க ஊருல இருக்குற தொழிலைப் பார்த்தாலே லட்சத்துல வருமானம் வரும் “
“நான் ஒன்னு வருமானத்துக்காக இந்த வேலையை பார்க்கலைன்னு உனக்கு தெரியும்ல. எனக்கு கத்துக்கணும் ஆசை, அதுவுமில்லாம பிடிச்சிப் போய் என் பிரெண்ட்க்கு துணையா இருக்கேன். சும்மா ஒன்னும் இல்லையே சம்பளம் வாங்க தானே செய்யுறேன் உங்க கிட்ட “
“இருந்தாலும் துரு அன்னைக்கு நான் உன்கிட்ட நம்ம ரெண்டு பேரும் கொஞ்சம் நாள் ஒன்னா வேலை பார்க்கலாம்மா, எனக்கு உதவி பண்ணுறையான்னு சொன்னதுக்கு தானே சரின்னு சொல்லி இந்த ரெண்டு வருஷமா என் கூட இருக்கே ?”
“நீ கேட்கலைன்னாலும் நட்புக்காக நான் உனக்கு துணையா இருக்க தான் செய்வேன். இதுக்கு மேல நீ எதுவும் பேசாதே ஓகே வா “ என்றவனோ ஒரு உணவகத்தின் முன் காரினை நிறுத்தினான்.
இருவரும் இறங்கி உள்ளேச் செல்ல, ஆதுரியின் கைபேசி ஓசை எழுப்பியது.
தன் தந்தையிடமிருந்து அழைப்பு வரவே, “அப்பா ! இதோ கொஞ்சம் நேரத்துல ஆபிஸ் போயிருவேன் “ என்க,
“எங்கம்மா இருக்கே ? சாப்பிட்டீங்களா ரெண்டு பேரும் “
“ஹோட்டல்ல தான் இருக்கோம் “
“சரிம்மா. நான் வச்சிறேன் “ என்ற திருக்குமரன் இங்கே தன் கைபேசியை வைக்க, அவரின் முன்னே அமர்ந்திருந்த மனைவி உமா அவரைத் தான் கண்டார்.
“என்னங்க ? என்னாச்சு ? நம்ம ஜோசியர் சொன்னதைப் பத்தி யோசிக்கீங்களா ?”
“ஆமா. எனக்கு ஒரு யோசனை வருது. நீ அதை பத்தி என்ன நினைக்கிறேன்னு சொல்லேன். நம்ம பொண்ணுக்கு எப்படியும் மூனு மாசத்துல கல்யாணம் பண்ணனும் ஜோசியர் சொல்லிருக்காரு. இதுக்கு அப்பறம் நம்ம மாப்பிள்ளை பார்த்து அவங்களுக்குள்ள ஒத்துப்போக வைக்குறதுக்கு பதில் ஏன் நம்ம துருவை பேசக்கூடாது “
“நீங்க சொல்லுறது நல்லா யோசனையா தான் இருக்கு. ரெண்டு பேரும் ஏழு வருஷமா பிரெண்டா புரிஞ்சி தெரிஞ்சி நல்லவிதமா தான் இருக்காங்க. ரெண்டு பேர் கிட்டயும் கேட்டுக்கிட்டு துரு வீட்டுல பேசலாம் “
“சரி ஆதுரி நைட் வரட்டும் பேசுவோம். துருக்கு நம்ம தொழில் நல்லா தெரியும் அப்படிங்குறதுனால வருங்காலத்துல எனக்கு அப்பறம் அவன் பார்த்துப்பான் “ என்று இருவரும் தன் பிள்ளைகளின் திருமணத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
நினைத்தது எல்லாம் நடந்து விட்டால் பின் எப்படி சுவாரசியம் இருக்கும் ?
