விரக தாபம் தீருமோ விதுரா? 39

பிரதிக்ஷா கூறியதை கேட்டு மூவரும் அதிர்ந்து நின்றனர். நீ போலீஸ் ஸ்டேஷனுக்கும் கோர்ட்டுக்கும் போற வரைக்கும் நாங்க சும்மா இருப்போமா எல்லாத்துக்கும் நீ தான் காரணம்னு சொல்லி உன்னைய உள்ள தள்ளிடுவோம் ஒழுங்கா போயிரு!” என்று ரஞ்சித் சொல்ல,

“இப்ப நீ என்ன சொல்ல வர விதுரன உன்கூட கூட்டிட்டு போகணும்னு ஆசைபடுறியா? ” என்று   பிரதிக்ஷாவிடம் கேட்டார் சரஸ்வதி.

“ஆமா அத்தை மன்னிச்சிருங்க! அவருக்கு இப்படி ஆனதுக்கு காரணம் நான்தான்னு என் மனசு குற்ற உணர்ச்சில தவிக்குது, அவர கூட்டிட்டு போயி நான் பக்கத்துல இருந்து பார்த்துக்கிட்டா என் மனசு ரொம்ப திருப்தியா இருக்கும் இந்த ஒரு தடவை என்னை நம்பி எனக்கு இந்த வாய்ப்பு கொடுங்க!” என்று கதறி அழுதாள் பிரதிக்ஷா.

“சரி, நீ கூட்டிட்டு போ” என்று சரஸ்வதி சொல்ல சந்துரு அதிர்ந்து சரஸ்வதியை பார்த்தான்.

“நீங்க இன்னும் திருந்தல உங்களால தான் விதுரனுக்கு இப்படி ஆச்சு திரும்பவும் இவ கூடயே  அனுப்பி வைக்கிறீங்க. உங்க இஷ்டத்துக்கு ஆடுங்க நான் எதுவும் சொல்லல,  நீங்க எல்லாம் பாதிக்கபட்டா கூட திருந்த மாட்டீங்க!” என்று சந்துரு சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு கோபத்தோடு சென்றான். “சந்துரு சொன்னதும் யோசிக்க வேண்டியதுதான இருக்கு!” என்று ராம்தேவ் சொல்ல 

“நீங்க எதுவும் சொல்லாதீங்க அவ இஷ்டப்படி அவ புருஷன அவ கூட்டிட்டு போகட்டும், நம்ம இங்கே இருந்து கிளம்புவோம்!” என்று சொல்ல பிரதிக்ஷாவிற்கு மனம் நிம்மதி அடைந்தது.

“ஆனால் ஒரு கண்டிஷன், விதுரன் உன் கூட வர்றதுக்கு சம்மதிச்சால் நீ அவனோட அவன் வீட்டுக்கு போ,அவன் வேண்டாம்னு சொன்னா, நீ எதுவும் சொல்லாம இங்கே இருந்து போயிரணும்!” என்று சரஸ்வதி சொல்ல அதிர்ந்தாள்.

ஒரு வாரமாக தன்னை தேடாதவன் கண்டிப்பாக தன்னோடு வரமாட்டான் என்று நினைத்துக் கொண்டே மெல்லமாய் நடந்து அந்த அறைக்குள் நுழைந்தாள் 

முதலில் சரஸ்வதி, ராம்தேவ் உள்ளே நுழைய விதுரன் அவர்களைப் பார்த்து அமைதியாக அமர்ந்திருக்க, பின்னால் பிரதிக்ஷா உள்ளே நுழைந்தாள்.

அவளைப் பார்க்கவும் அவன் முகத்தில் மின்னல் வெட்டியது. அவன் கண்களில் தெரிந்த ஒளியை  சரஸ்வதியும் ராம்தேவும் பார்த்து ஒருவரை ஒருவர் கேள்வியாக பார்த்தனர்.

‘விதுரன் சம்மதிக்க மாட்டான்’ என்று நினைத்துக் கொண்டு தலையை குனிந்து கொண்டே உள்ளே நுழைந்து இருந்தாள் பிரதிக்ஷா.

பிரதிக்ஷாவை கீழிருந்து மேலாக அவன் கண்கள் எடைபோட மெலிந்து போய் அழுதழுது கண்கள் சிவந்து கண்களின் ஓரங்களில் கருவளையமும் வந்திருந்தது.

அதைப் பார்த்ததும் தனக்காக தான் கலங்கி அழுதிருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான்.ஆனாலும் ஒரு வாரமா ஏன் வந்து என்னைய பார்க்கல? என்ற கேள்வி அவனுக்குள் வர வீம்பாக கற்சிலை போல அமர்ந்திருந்தான்.

“விதுரன் உன்னைய இன்னைக்கு  டிசார்ஜ் பண்ணனும்னு சொல்லிட்டாங்க, உன்னைய நாங்க கூட்டிட்டு போகலாம்னு நினைச்சால் உன் பொண்டாட்டி நான் தான் கூட்டிட்டு போவேன்னு எங்க கிட்ட சண்டை போடுறா? நீ மட்டும் ஒரு வார்த்தை அவளோட போக மாட்டேன்னு சொன்னால் அவ எதுவும் சொல்லாம போயிருவா, நீ என்ன சொல்ற?” என்று சரஸ்வதி கேட்க,

பிரதிக்ஷாவை அலட்சியமாக பார்த்தான் விதுரன்.

அவன் பார்வையின் அர்த்தம் புரிந்தவள் “கண்டிப்பா உங்களுக்கு என் கூட வர்றதுக்கு பிடிக்காதுனு எனக்கு தெரியும்! இப்ப நீங்க இருக்கிற சூழ்நிலைக்கு கட்டாயம் ஒரு நர்ஸ் உங்கள பாத்துக்கணும் , அப்படி நெனச்சு என்னைய கூட கூட்டிட்டு போங்க! பேசாம நான் பாக்குற வேலைக்கு நீங்க  சம்பளம் கொடுத்தால் கூட நான் வாங்கிக்கிறேன்!” என்று பிரதிக்ஷா கண்கலங்கி கூற ராம்தேவ் கண்களிலும் கண்ணீர் கசிந்தது.

“சரி, நீ என்னைய பாத்துக்க அப்பாயிண்ட்மெண்ட் பண்ணப்பட்ட நர்ஸ் மாதிரி நெனச்சுக்குருங்கன்னு நீயே சொன்னதால, நான் உன் கூட என் வீட்டுக்கு வரேன்! உன்னோட லிமிட் என்னவோ, அதுக்குள்ள தான் நீ நடந்துக்கணும், நீ தேவையில்லாம எங்கிட்ட உரிமை எடுத்தால்  அப்பயே உன்னைய வீட்டை விட்டு துரத்திடுவேன்!” என்று விதுரன் பிரதிக்ஷாவை பார்த்து கூறினான்.

விதுரன் கூறியதை கேட்கவும் சரஸ்வதியும் ராம்தேவும் எதுவும் சொல்லாமல் அமைதியாக விதுரனை தூக்கி சர்க்கர நாற்காலியில் அமர வைத்து காரில் ஏற்றி விதுரனின் வீட்டிற்கு சென்றனர்.

மருத்துவர் கூறிய அனைத்து வழிமுறைகளையும் சரஸ்வதி பிரதிக்ஷாவிடம் சொல்ல பிரதிக்ஷா அனைத்தையும் கவனமாக கேட்டுக் கொண்டாள்.

“நீ பிடிவாதமா உன் கூட கூட்டிட்டு போகணும்னு சொன்னதுனால தான் நான் விட்டுட்டு போறேன், நீ நல்லபடியா பார்த்துக்க!” என்று சொல்லிவிட்டு விதுரனிடமும் சொல்லிவிட்டு ராம்தேவும் சரஸ்வதியும் அங்கிருந்து சென்றனர்.

அம்பிகாவும் ரேணுவும் வருத்தப்படுவார்கள் என்று இங்கு நடந்தது எதையும் அம்பிகாவின் காதுக்கு எட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் சரஸ்வதி. 

இருவரும் சென்ற பின் பிரதிக்ஷா விதுரனை பார்த்துக் கொண்டே இருந்தாள். இருவரின் மனதிலும் ஒருவர் மற்றவரிடம் கேட்க எவ்வளவோ கேள்விகள் இருந்தும்  ஒருவர் மற்றவரிடம் எதுவும் கேட்கவில்லை.

பிரதிக்ஷா, “நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க, நான் சாப்பாடு சமைச்சிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு சமையலறை சென்று விதுரனின் உடல் நலத்திற்கு ஏற்றவாறு சமையல் செய்து கொண்டு வந்து விதுரனுக்கு கொடுக்க விதுரனுக்கு கையில் ஏற்பட்ட பிராக்சனால் எடுத்து சாப்பிட முடியவில்லை. உடனே பிரதிக்ஷா அதை வாங்கிக் கொண்டு ஊட்டி விட முதலில் அதிர்ந்து வாயை திறக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் விதுரன்.

“நீங்கள் யோசிக்கிறது  எனக்கு புரியுது, ஏற்கனவே சொன்னது மாதிரி தான். ஒரு நர்ஸா என்னையே நெனச்சுக்குருங்க, உங்களுக்கு  என்னோட பணிவிடைய மறுக்கிறதுக்கு மனசு வராது!” என்று சொல்ல விதுரனும் வாயை திறந்து பிரதிக்ஷா ஊட்டிய உணவை வாங்க ஆரம்பித்தான்.

சாப்பிட்டு முடிக்கவும் அவனுக்கு மாத்திரை மருந்தை எடுத்துக் கொடுத்துவிட்டு, அவனின் இரு சக்கர நாற்காலியை தள்ளிக் கொண்டு   கீழே அவனுக்காக  ஏற்பாடு செய்திருந்த அறைக்கு அழைத்துச் சென்றாள் பிரதிக்ஷா. அங்கு அவனை அழைத்துச் சென்று படுக்க வைத்து விட்டு வீட்டில் இருந்த மற்ற வேலைகளை எல்லாம் செய்து முடித்தாள். இதுவே அவளின் அன்றாட வேலையாகி போனது. விதுரன் சொன்னது போல் எந்த ஒரு இடத்திலும் பிரதிக்ஷா  உரிமை உள்ளவள் போல் நடந்து கொள்ளவில்லை.

விதுரனுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றியிருக்க பிரதிக்ஷாவை எப்படி அழைப்பது என்று தயக்கம் கொண்டு அவனே முயற்சி செய்து செல்ல கீழே விழுந்திருந்தான். சத்தம் கேட்டு பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தவள் விதுரன் விழுந்து கிடக்கும் காட்சியை பார்த்து அழுது கொண்டே,

“நீங்க எதுக்கு எந்திரிக்க முயற்சி செஞ்சீங்க ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் நான் வந்திருப்பேன்ல!”என்று சொல்ல விதுரன் தயங்கி நிற்க, “புரியுது, ஆனா ஏற்கனவே சொன்னது தான் , நான் ஒரு செவிலியர்னு  நீங்க நினைங்க உங்களுக்கு ஒன்னும் தோணாது!” என்று சொல்லிவிட்டு அவனை கை தாங்கலாக அழைத்துச் சென்று ரெஸ்ட் ரூமில் விட்டுவிட்டு அவனுக்காக காத்திருந்தாள். சிறிது நேரம் கழித்து அவனை அழைத்து படுக்க வைத்து விட்டாள்.

இப்படி ஒவ்வொரு நாளும் பிரதிக்ஷா அவனுக்காக பார்த்து பார்த்து செய்கின்ற விஷயங்கள் அனைத்தையும் பார்க்க விதுரனின் மனதில்  பிரதிக்ஷாவின் மேல் காதல் கூடிக் கொண்டே இருந்தது.

தினமும் குளிக்க வைப்பது, காயங்களுக்கு மருந்து தடவி அவனைத் தூங்க வைப்பது சாப்பாடு செய்து கொடுப்பது என்று ஒரு மனைவியாக நடந்து கொண்டிருந்தாள் பிரதிக்ஷா. ஆனால் விதுரனிடம் பழையபடி சிரித்து பேசியோ கிண்டலாகவோ பேசவில்லை, காரணம் அவன் மனதில் இருந்த குற்ற உணர்ச்சி  தான்…!

ஒரு பக்கம் தனக்குத் தெரிந்தவர்கள் மூலம் மனிஷா எங்கு இருக்கிறார்கள் என்று தேடச் சொல்லி இருந்தாள்.  

விதுரன் மனதில் பிரதிக்ஷாவின் மேல் கொண்ட காதலின் அளவு மட்டும் கூடிக் கொண்டே போனது. 

இப்படியே ஆறு மாசங்கள்  வெகுவாக ஓடியது, பிசினஸில் விதுரனுக்கு தேவையான உதவிகளையும் பிரதிக்ஷா ஒரு பக்கம் செய்து கொண்டிருந்தாள்.

மனிஷாவை கண்டுபிடிக்க கூறி இருந்தவர்களிடம் மனிஷா எங்கிருக்கிறாள் என்ற தகவல் வர அவசர அவசரமாக அவ்விடம் சென்றாள் பிரதிக்ஷா.

“நீ எதுக்கு இப்ப இங்க வந்த? என்று மனிஷா கோபமாக கேட்க,” மனிஷா என்னை மன்னிச்சிரு! விதுரனும் நீயும் காதலிச்சது தெரியாம விதுரன நான் பொய் சொல்லி கல்யாணம் பண்ணிட்டேன். ஆனால்  அவரோட மனசு முழுக்க நீ மட்டும் தான் இருக்க, நான் அவர  காதலிக்கிறது உண்மை, நான் காதலிக்கிறவருக்கு அவரோட காதல கொடுக்கிறது தான் என்னோட காதல்னு நினைக்கிறேன், விதுரன பிரிஞ்சு என்னால வாழ முடியுமான்னு தெரியல, ஆனா நான் கஷ்டப்பட்டாலும்  விதுரன் கஷ்டப்படக் கூடாது, அதனால உன் கோபத்தை எல்லாம் விட்டுட்டு விதுரன பாக்கவா? ” என்று பிரதிக்ஷா கூறினாள்.

பிரதிக்ஷா கூடியதை எல்லாம் நம்ப முடியாமல்  பிரதிக்ஷாவை பார்த்துக் கொண்டிருந்தாள் மனிஷா.

“உன்னோட பிரச்சனை என்னன்னு எனக்கு தெரியும், விதுரனோட மனைவியா நான் இருக்கிறத  பார்க்க முடியலனுதான  நீ கோபத்துல வந்த, இனிமேல உங்க ரெண்டு பேருக்கு இடையில நான் எக்காரணத்தைக் கொண்டும்  வரமாட்டேன் நீ என்னை நம்பலாம்!” என்று பிரதிக்ஷா கூற 

“சரி… நான் வரேன், இனிமேல் நீ எங்களோட வாழ்க்கையில வரக்கூடாது, ஏன் எங்க கண் முன்னாடி கூட நீ வரக்கூடாது, அப்புறம் பொய் சொல்லி தான் நீ கல்யாணம் பண்ணினேன்னு உன் வாயால சொல்லி எனக்கு வாக்குமூலம் கொடுக்கணும்! இனிமேலு எனக்கும் விதுரனுக்கும் சம்பந்தம் கிடையாது, எக்காரணத்தைக் கொண்டும்  நான் வரமாட்டேன்னு எழுத்துப்பூர்வமா எழுதி எனக்கு கையெழுத்து போட்டு தரணும்! இதுக்கு எல்லாம் நீ சம்மதிச்சா நான் வரேன்” என்று மனிஷா சொல்ல, விரக்தியாக, ” நீ சொன்னதை எல்லாம் கண்டிப்பா செய்கிறேன், என்னோட விதுரனுக்காக!”என்று கண்கள் கலங்கிக் கொண்டே கூறினாள் பிரதிக்ஷா.

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page