அத்தியாயம் 23

 

​ஒரு வலிய கரம் வந்து அந்த அலைபேசியை எடுத்து, “ஹலோ” என்றது. 

மயூரி சட்டென எழுந்து அமர்ந்து ரஞ்சனை பதற்றத்துடன் பார்த்தாள். அவன் இவளைக் கவனிக்காமல், “ஹலோ சொல்லுங்க” என்றான். 

எதிர் திசையில் சோனா என்ன சொன்னாளோ..? அமைதியாக இருந்தவன் மயூரியைப் பார்க்க, அவள் கண்கள் விரிய அவனைப் பார்த்தபடி இருந்தாள். அவன் ஏதும் பேசாமல் அலைபேசியை அவளிடம் நீட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

​மயூரிக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை. அலைபேசியைப் பார்த்தாள்; அது உயிரற்று இருக்க, மீண்டும் சோனாவிற்கு அழைப்பதா, வேண்டாமா?என்று யோசித்தாள். 

அவன் எப்பொழுது வந்தான்? எதையெல்லாம் கேட்டான்? சோனா ஏதும் சொன்னாளா? என்று பல யோசனைகள். ஏற்கனவே அவள் பரதம் கற்றுக்கொள்ளும் விஷயம் தெரிந்ததற்கே இந்த நிலைமை, இதில் இது வேறு என்று தலைவேதனையாக உணர்ந்தாள்.

​ஆனால் சோனா விடுவதாக இல்லை; மறுநாளே மீண்டும் அழைத்தாள். சோனாவிடம் உண்மையைச் சொல்லலாமா..?என்று மயூரி எண்ணினாள். ஆனால், தன் கணவன் ரஞ்சன் பெறும் கொடுமைகாரனாகச் சித்தரிக்கப்படுவான், என்று அவள் மனது முரண்பட்டது. 

இறுதியில் ஒரு முடிவெடுத்தவளாக சோனாவிற்கு அழைத்தாள். சோனா ஒரே ரிங்கில் அலைபேசியை எடுத்தாள்.

​“ஹல்லோ மயூரி குட்டி! ஷோ பண்ண வரியா? நீயாவே கால் பண்ணி இருக்க!” என்றாள் வெகு ஆர்வமாக.

​“ப்ச்..சோனா, உன் ஆர்வத்தைக் கட்டுப்படுத்து. என் நிலைமை ஷோ பண்ற அளவுக்கு எல்லாம் இல்லை,” என்றாள் மயூரி சலிப்பாக.

​“ஹ்ம்…என்ன மயூரி நீ? கால் பண்ண உடனே பிரச்சனை தீர்ந்ததுன்னு நினைத்தேன். நீ என்னடானா இப்படி சொல்ற?” என்றாள் சோகக் குரலில் சோனா.

​“ப்ளீஸ்..என் சூழ்நிலையைக் கொஞ்சம் புரிஞ்சுக்கோ. என் கணவருக்கு இதெல்லாம் பிடிக்காது. இப்பதான் அவருக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு. அவருக்குத் தெரியாமல் இத்தனை நாள் வந்தேன்,” என்றாள் மயூரி.

​“ஏய்,என்ன நீ பொய் சொல்றியா? அன்னைக்கு உன் மாமியாரைக் கூட்டிட்டு வந்திருந்தியே, அவங்க எவ்வளவு ஸ்வீட்! அப்போ உன் கணவருக்கு எப்படித் தெரியாம இருக்கும்?” என்று கேள்வியாகக் கேட்டாள் சோனா.

​“என்னால எல்லாத்தையும் உன்கிட்ட சொல்ல முடியாது. எங்க அத்தைக்குத் தெரியும், அவங்களும் அவருக்குத் தெரியாமதான் எனக்கு ஹெல்ப் பண்ணாங்க. அதெல்லாம் பெரிய கதை சோனா, உனக்கு புரியாது. சோ, நீ வேற யாரையாவது ஷோக்கு செலக்ட் பண்ணு. இனிமே நான் வரமாட்டேன்,” என்று மயூரி திட்டவட்டமாகக் கூறினாள்.

​“ஏய்..நீ என்னப்பா இவ்வளவு பெரிய குண்டைத் தூக்கிப் போடுற? மேல ஹெட் ஆபீஸ்ல இருந்து பிரஷர் தாங்க முடியல. மயூரி ப்ளீஸ், ஒரு.. ஒரு மாசம் மட்டும் எனக்காக வா. அதுக்குள்ள வேற யாராவது புதுசா ஆள் எடுத்துக்கிறேன். உன் கணவருக்குத் தெரியாம வா, அதான் உன் மாமியார் சப்போர்ட் இருக்குதானே? ப்ளீஸ் மயூரி!” என்று சோனா கெஞ்சினாள்.

​“ ப்ச்..முடியாது சோனா, அவரை.. அவர மறுபடியும் ஏமாத்த முடியாது. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ,” என்று மயூரி மறுத்தாள்.

​“ம்ம்…ம்ம்..அவ்வளவு லவ்வா உன் ஹப்பி மேல்?” என்று கேலி செய்தாள் சோனா. 

 பெருமூச்சை வெளிவிட்ட மயூரி, 

“ப்ளீஸ்…சோனா என்னால வர முடியாது “என்றவள்,அழைப்பைத் துண்டித்துவிட்டு நிம்மதி அடைந்தாள். 

சோனா புரிந்துகொள்வாள் இனி பிரச்சனை இல்லை என்று நிம்மதி அடைந்தாள்.ஆனால் அந்த நிம்மதிக்கு ஒரு நாள்தான் ஆயுள் என்று அவளுக்கு அப்போது தெரியாது.

​மறுநாள் காலை, ரஞ்சன் அலுவலகம் கிளம்பி,உணவிற்காக வந்து அமர்ந்தான். மயூரி முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டே தான் உணவைப் பரிமாறினாள். 

அப்பொழுது வாயிலில் இருந்து யாரோ மயூரியை அழைக்கும் சத்தம் கேட்டது. மயூரிக்கு அந்த குரலை கேட்டதும் லேசாக பயம் மனதை பிசைந்தாலும் அமைதியாக,ஹாலில் இருந்து வரும் வாயிலை பார்த்தாள்.

ஆனந்துடன் பிரியா வந்திருந்தாள். ரஞ்சனின் பார்வை மயூரியின் மீது நிலைத்திருந்தது.அவள் உணர்வுகளை அவன் ஆராய்ந்து கொண்டிருந்தான்.

பிரியாவின் வருகையில் திகைத்திருந்தாலும், ரஞ்சனின் பார்வையை உணர்ந்தவள். முகத்தை சீராக்கி கொண்டே..

​“க்கும்…வா…வா, பிரியா… என்ன காலையிலேயே இங்கே வந்திருக்க?” என்று தடுமாற்றத்துடன் கேட்ட மயூரி அவள் அருகே சென்று அவள் கையை பற்றிக்கொண்டாள்.

 இன்னும் ரஞ்சனின் பார்வை மயூரியை விட்டு விலகவில்லை, பிரியாவிற்கு அவன் பார்வையில் சர்வமும் நடுங்கியது.

“அது…அது… சும்மா தான் மயூரி.. உன்ன பாக்க தோணுச்சு.. “என்றாள் தடுமாற்றத்துடன். 

​“உன் பிரண்ட் அங்க இருந்து வந்து ரெண்டு நாள் கூட ஆகல, அதுக்குள்ள பாக்கணுமா?” என்றான் ரஞ்சன் உணவை உண்டபடி. 

பிரியா ஒரு அசட்டுச் சிரிப்பைச் சிரித்தாள்.

​“உனக்கு முதல்ல ஒரு கல்யாணம் பண்ணி வச்சிருக்கணும். எப்ப பாத்தாலும் இவ கூடவே சுத்திக்கிட்டு…” என்றவன், எழுந்து கையை கழுவிவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பினான். 

அவன் கார் கிளம்பும் சத்தம் கேட்டவுடன், வாயிலை பார்த்துக் கொண்டிருந்த பிரியாவின் தலையில் நறுக்கெனக் கொட்டினாள் மயூரி.

“ஸ்ஸ்.. ஆ.. வலிக்குது டி..”என்றாள் பிரியா.

​“ம்ம்.. நல்லா வலிக்கட்டும்.. ஒரு கால் கூட பண்ணாமல் எதுக்கு டி காலங்காத்தால இங்க வந்து நிக்கிற?” என்று கோபமாகக் கேட்டாள்.

 மரகதம் அவர்களைப் பார்த்து சிரிக்க அவரைப் பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தாள் பிரியா, கண்களால் அவரை மயூரியிடம் ஜாடை காட்ட மயூரியோ,

“அவங்களுக்கு எல்லாம் தெரியும் டி..சிபிஐ மாதிரி ஏற்கனவே என்னை போட்டுக் கொடுத்த அறிவாளியே..! என்னன்னு சொல்லி தொலை..!” என்றாள்,பிரியாவின் தலையில் மீண்டும் கொட்டி 

“ஸ்ஸ் அடியே கொட்டி கொட்டியே நான் குள்ளமா ஆகிருவேன் போல.. “என்றாள்.

​மரகதம் புன்னகையுடன் அருகே வந்து, “ஏம்மா பாவம் மா அந்தப் புள்ள,உன்னைத் தேடி காலைலயே வந்ததுக்கு இப்படியா கொட்டுவ?” என்றார்.

​“ம்ம்..நல்லாக் கேளுங்க ஆண்ட்டி! என்றாள் பிரியா தலையை தடவியபடி 

“அத்தை… ஜஸ்ட் மிஸ்! அவர் ஏதோ நல்ல மூடுல இருக்காரு போல. இல்ல காரை அடுத்த தெருவுல நிப்பாட்டிட்டு வந்து நின்னாலும் நிப்பாரு..நானே நேத்து சோனா கால் பண்ணப்போ அவர் எடுத்துட்டாருன்னு உயிரைக் கையில பிடிச்சிட்டு இருக்கேன். இதுல இவ வேற!” என்றாள் மயூரி உணவு மேஜையில் அமர்ந்து தலையில் கை வைத்தபடி,.

​“என்னம்மா சொல்ற?” என்று மரகதமும் அதிர்ச்சியுடன் அமர்ந்தார். 

“அய்யயோ.. உன் ப்ரென்டா இருக்குறதுக்கு, நான் டெரரிஸ்ட்னு சொல்லி ஜெயிளுக்குள்ள போயிரலாம் போலயே…!”என்று கூறியபடி மயூரி  அருகே அமர்ந்தாள்.

 “மயூரி என்ன ஆச்சு முழுசா சொல்லு” என்றார் மரகதம். முன்தினம் நடந்த அனைத்தையும் கூறினாள் மயூரி.

 “நேத்தே கால் பண்ணி என்னால முடியாதுன்னு சொல்லிட்டேன் அத்தை” என்றாள் மயூரி சலிப்புடன் ஒரு பெரும் மூச்சை விட்டு 

“அய்யயோ..அப்ப எதுக்கு எனக்கு போன் பண்ணி என் உயிரை எடுக்கிறா அந்த சோனா..! அவ சொல்லித்தான் நான் இங்க வந்தேன்..!” என்றாள் பிரியா.

 மரகதம் புரியாமல் பார்க்க மயூரி சலிப்புடன்,மீண்டும் தலையில் கை வைத்தாள்.அவளின் நிலையை கண்ட மரகதம் மயூரியின் தோளை தட்டி கூறினார்,

“ப்ச்..டென்ஷன் ஆகாத மயூரி,இரு ஒரு காபி குடிப்போம்.. அப்புறம் நிதானமா யோசிப்போம்.. “ என்றவர் சரளாவிடம் கூறினார். 

அதுவரை மூவரும் அமைதியாக இருக்க காபி கொண்டு வந்த சரளாவிடம் மரகதம்,

“ உனக்கும் ஒரு காபி எடுத்துக்கிட்டு நீயும் வந்து உட்காரு சரளா” என்றார் மரகதம்.

காபி அருந்தியபடி பிரியாவிடம் “உன்கிட்ட என்ன சொன்னா சோனா..? “ என்றாள் மயூரி.

“அதை ஏன் கேட்கிற..? இன்னிக்கு காலையோட சேர்த்து பத்து தடவை கால் பண்ணிட்டா.. உன்கிட்ட பேசி ஒரு மாசமாவது ஷோ பண்ணித்தர சொல்லணுமாம்..!”என்றாள் பிரியா சலித்தபடி 

“என்ன சொல்றதுனே தெரியலை அத்தை எனக்கு “என்றாள் கவலையாக,

​“மயூரி, அந்த சோனா கிட்ட பேசி ஒரு முடிவு பண்ணு. இந்தத் தடவை என் புள்ள என்னையும் சேர்த்து கொன்றுவான்,” என்றார் மரகதம் பீதியுடன். 

பெருமூச்சுடன்” அவளுக்கு கால் பண்றேன் அத்தை.. “என்றாள் மயூரி.

“ஸ்பீக்கர்ல போடுமா..”என்றார் மரகதம்.

பின்னர் சோனாவிற்கு ஸ்பீக்கர் போட்டு அழைத்தாள் மயூரி, அழைப்பை எடுத்த சோனாவோ 

​“அட மயூரி! உன் பிரண்டுக்கு இவ்வளவு பவர்? அதுக்குள்ள நீயே கால் பண்ணிட்ட!” என்றாள் சோனா.

“மண்ணாங்கட்டி, நான் தான் நேத்தே சொன்னேனே சோனா, என்னால முடியாதுன்னு, ஏன் இப்படி என்னை கொல்ற..?”என்றாள் மயூரி கோபமாக 

“ஏய் மயூரி, என்னப்பா இப்படி சொல்ற.. கொஞ்சம் என் நிலைமையை புரிஞ்சு பேசுப்பா.. ஹெட் ஆபீஸ்ல இருந்து பிரஷர் தாங்க முடியல, உன் ஷோ ப்ரைம் டைம்,இந்த ஒரு மாசம் மட்டும் எனக்காக.. ப்ளீஸ்.. அதோட உன் ஷோவ கெஸ்ட் இன்வய்ட் பண்ணி லைவ் ஷோவா மாத்த பிளான் பண்ணி இருக்காங்க.. மாக்ஸிமம் டூ வீக்ஸ் தான், அதுக்கப்புறம் நான் புது ஆள் எடுத்துக்கறேன் ப்ளீஸ்…மயூரி எனக்காக வா.. “என்றாள் கெஞ்சலாக 

சற்று அமைதியாக இருந்த மயூரி 

​“சரி நான் யோசிச்சுட்டு சொல்றேன்,” என்று மயூரி அலைபேசியை வைத்தாள்.

​அங்கிருந்த சரளாவும், “அம்மா, அந்தப் பொண்ணு சொல்றதும் நியாயம் தானே? இப்போ நானே எதுவும் சொல்லாம வேலையை விட்டு நின்னுட்டா உங்களுக்கு எவ்ளோ கஷ்டம்..?ஒரு மாசம் தானே, ஏதாவது சொல்லிப் போங்கம்மா,” என்றாள். 

மரகதமும் அமைதியாக மயூரியை பார்க்க 

​“அத்தை, என்ன பண்றது?” என்று மயூரி கேட்க, 

“சரளாவும் சரியாதான் சொல்றா. சோனா நிலைமையையும் யோசி. அவ உனக்காக எவ்ளோ மென்மையா பேசுறா..? அப்புறம் இன்னோர் விஷயம்..பிரியா இன்னைக்கு வந்ததுக்கும் அவன் காரணம் கேப்பானே, என்ன பதில் சொல்லுவ?” என்றார் மரகதம் கேலியாக.

மயூரி ப்ரியாவை முறைத்துவிட்டு மீண்டும் தலையில் கொட்டப் போக,பிரியா அவள் கையை பற்றி 

​மயூரியை முறைத்தபடி, 

“எடு செருப்ப நாயே! என் தலை உனக்கு என்ன ஸ்ட்ரெஸ் பாலா? கல்யாணத்துக்கு முன்னாடி பெரிய பெண்ணியம் பேசின, இப்ப என் தலையில மத்தளம் வாசிச்சுட்டு இருக்க. ஒழுங்கா மூளையை யூஸ் பண்ணுடி!” என்றாள் கிண்டலாக.

​மரகதம் சிரித்தபடி, “ஏன் மயூரி அவ என்ன பண்ணுவா.?ம்ம்..இல்லைனா நான் ஒரு ஐடியா கொடுக்கிறேன், அதை வேணா ஃபாலோ பண்ணு,” என்றார்.

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page