பிரபா தன் பழைய ஸ்கூட்டரை உருட்டிக்கொண்டு பேருந்து நிலையத்திற்குச் சென்றார். மதிய நேரத்து வெயில் மண்டையைப் பிளந்தது. வெயிலின் கொடுமையால் அவர் சட்டை முழுவதும் நனைந்து, வியர்வை வழிந்து கொண்டிருந்தது. அந்தப் புழுக்கத்திலும், எரிச்சலிலும் அவர் அடிக்கடி கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி காத்துக் கிடந்தார்.
சரியாக அரை மணி நேரத்திற்குப் பிறகு, புழுதியைக் கிளப்பிக்கொண்டு ஒரு அரசுப் பேருந்து வந்து நின்றது. அதிலிருந்து தள்ளாடியபடி இறங்கினார் தங்கதுரை. பெயர் தான் ‘தங்கம்’, ஆனால் அவரது உருவம் அந்தப் பெயருக்கு நேர்மாறாக இருந்தது. வறுமையால் உடல் நலிந்து, வெறும் எலும்பும் தோலுமாய் ஒரு நோயாளி போலக் காட்சியளித்தார் அவர்.
அவரைப் பார்த்ததும் கோபமாய். “உனக்காக எவ்வளவு நேரம் இந்த வேகாத வெயில்ல நான் காத்துக் கிடக்கிறது? சீக்கிரம் ஏறு…” என்று எரிந்து விழுந்த பிரபா, அவரைத் தன் ஸ்கூட்டரின் பின்னால் அமரவைத்துக்கொண்டு, பாலாஜியின் வீட்டை நோக்கி வண்டியை விரைந்தார்.
பாலாஜி அவர்களுக்காக வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தான். அவர்கள் உள்ளே நுழையும் போது பாலாஜியின் அண்ணன் வைர மணியும், அண்ணி மலர்விழியும் அபிராமியுடன் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். புதுப்பாவாடை சட்டையோடு, விளக்கி வைத்த குத்து விளக்கு போல ஜொலித்தாள் அபி. இந்த ஒரு வாரத்திலேயே, அவர்களின் அன்பான கவனிப்பின் காரணமாக, அவள் சற்று மெருகேறி தெரிந்தாள்.
பிரபா கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் அவளை ஏற இறங்க பார்த்தார். அவர் வீட்டில், வெறும் காட்டன் ஃப்ராக்கும், கருகுமணி பாசியுமே அவள் அடையாளம். அந்த தோட்டத்து திண்ணையில் மணிக்கணக்காய் யாருடனும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருப்பாள். இங்கே நடுவீட்டில், கால் கொலுசை விட, சப்தமான புன்னகையோடு விளையாடிக் கொண்டிருக்கிறாளே!
பாலாஜி, “அபி, அம்மாவோட உள்ள போய் விளையாடு” என்று அவளை அனுப்பி வைத்த பிறகே, அவர்கள் இருவரையும் ஹாலில் உட்கார வைத்தான்.
சிரித்தபடி மலரின் விரல்களைப் பற்றிக் கொண்டு ஓடிய அபிநயா, இவர்கள் இருவரையும் இன்னமும் பார்க்கவில்லை. ஆனால் தங்கதுரையின் கண்கள் அவள் மீதுதான் பதிந்திருந்தது. பாலாஜி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, தன் லேப்டாப் பேக்கிலிருந்து முக்கியமான சட்டப் பத்திரங்கள் சிலவற்றை எடுத்து அவர்கள் முன் மேஜையில் வைத்தான்.
தங்கதுரை எதைப் பற்றியும் யோசிக்காமல், கைகள் நடுங்க அத்தனை பத்திரங்களிலும் கையெழுத்திட்டுவிட்டார். அதைத் தொடர்ந்து, பிரபாவை மட்டும் தனியாக ஒரு அறைக்கு அழைத்துச் சென்ற பாலாஜி, துரிதமாக ஒரு வீடியோவையும் பதிவு செய்து முடித்தான். அடுத்த நொடியே, சூர்யா டீல் பேசிய ஐந்து லட்சம், பிரபாவுக்கு கை மாறியது!
“ரொம்ப நன்றி தம்பி, நாங்க கிளம்புறோம்…” என்று சொல்லிக்கொண்டே, அந்தப் பணத்தை இறுக்கப் பற்றிக்கொண்டு சந்தோஷமாய் அங்கிருந்து புறப்படத் தயாரானார். ஆனால் தங்கதுரை இருந்த இடத்தை விட்டு எழவில்லை.
“நான்… நான் என் பொண்ணு முகத்தை கடைசியா ஒரு தடவை கண் நிறையப் பார்க்கணும் தம்பி. ஒரே ஒருமுறை அவளைக் கூப்பிடுறீங்களா?” என்றார் தழுதழுத்த குரலில்.
பிரபா, “டேய், சும்மா இருக்க மாட்டியா? நீ வந்த காரியம் முடிஞ்சதுல்ல, ஊரைப் பார்த்து கிளம்பு!” என்று அதட்டினார்.
“உனக்குத்தான் வேணுங்குற அளவு பணம் கிடைச்சிடுச்சே அண்ணா. நீ போ…” என்று கூற, பிரபா விட்டால் போதும் என்று கிளம்பிவிட்டார்.
தங்கதுரை மகளை பார்க்காமல் இங்கிருந்து கிளம்ப மாட்டார் என்று பாலாஜிக்கு புரிந்து விட்டது. அவரை அபி பார்க்க கூடாது என்பதற்காகத்தான், அவசரமாய் உள்ளே அனுப்பினான். கடைசிமுறை என்று அவர் கேட்கவும் அவனாலும் உடனே மறுத்து கூற முடியவில்லை.
“அண்ணா… பாப்பாவ ஒரு தடவை கூட்டிட்டு வாரீங்களா?” என்று பாலாஜி குரல் கொடுக்க, வைரமணியும் மலர்விழியும் வேறு வழியில்லாமல் அபிநயாவை மீண்டும் ஹாலுக்கு அழைத்து வந்தார்கள்.
இருவரின் கையையும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டே மெல்ல நடந்து வந்த அபி, சோபாவில் அமர்ந்திருந்த தங்கதுரையைப் பார்த்ததும் சட்டென முகம் மாறினாள். அதுவரை அவளது வதனத்தில் நிறைந்திருந்த அந்த மழலைச் சிரிப்பு மறைந்து, ஒருவிதமான ஆக்ரோஷம் குடியேறியது. அவளுக்கு எங்கிருந்து அவ்வளவு ஆத்திரம் வந்ததோ தெரியவில்லை.
“ஆ…” என வெறிபிடித்தவள் போலக் கத்தினாள்.
“அபிம்மா…” என்று அவர் ஒரு கேவலோடு அழைக்க, அவளோ அடங்கா ஆத்திரத்தோடு கைக்கு கிடைக்கும் பொருட்களை எல்லாம் அவர் மீது தூக்கி எறிந்தாள்.
“அப்பாவ மன்னிச்சுடுடா கண்ணா… நான் பாவிம்மா… ரெண்டு புள்ளையையும் காப்பாத்த தெரியாத பாவி… என்னை மன்னிச்சிடுடா அபி” என்று அப்படியே அவள் முன் மண்டியிட்டு விட்டார்.
பாலாஜி பதறிப்போய் ஓடி வந்து அவரை தூக்கினான். அபியின் கோபம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகமானது. அவள் மூச்சை அடக்கி கத்திக் கொண்டிருப்பதைப் பார்த்துப் பயந்து போன மலர்விழி, அவளைச் சமாதானப்படுத்த மீண்டும் அறைக்குள் கூட்டிக் கொண்டு சென்றுவிட்டார்.
மீளா துயரத்தோடு நடு வீட்டில் அழுது கரைந்த தங்கதுரை, சில நிமிடங்களுக்கு பிறகு ஒருவாறு தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு எழுந்து நின்றார்.
கண்ணீரை துடைத்தபடி அவர் நடக்கையில், சுவற்றில் பெரிதாக மாட்டப்பட்டிருந்த படம் ஒன்று அவர் பார்வையில் விழுந்தது. அதில் அபி போலவே மனநலம் குன்றிய ஒரு சிறுமியின் திருவுருவப்படத்திற்கு மாலையிட்டு, விளக்கேற்றி வைத்திருந்தனர்.
அவரது பார்வையைப் புரிந்துகொண்ட பாலாஜி, “அது வித்யா, என் அண்ணனோட குழந்தை. ஒரு வருஷம் முன்னால திடீர்னு இறந்துட்டா. அவளோட இழப்பைத் தாங்க முடியாமத்தான் அபியை நாங்க தத்தெடுக்க முடிவெடுத்தோம்” என்றான்.
இப்போதுதான் தங்கதுரைக்கு அவர்கள் ஏன் அபியை உயிராகப் பார்க்கிறார்கள் என்று புரிந்தது.
பாலாஜி தன் பாக்கெட்டில் இருந்த பணத்தை கொடுத்து, “வேற ஏதாவது வேணும்னா தயங்காம என்கிட்ட கேளுங்க” என்றான்.
“எனக்கு பணமெல்லாம் வேண்டாம். நான் பூர்ணிய ஒரு தடவை பார்க்கணும் தம்பி…” என்று சொல்லி முடிக்கும் முன்பாக,
“அது முடியாதுங்க. அவ இப்ப சூர்யா கூட இருக்கா!” என்று உடனே மறுத்து விட்டான் பாலாஜி.
தான் செய்த ஒரு தவறு, தன் பிள்ளைகள் வாழ்வை இவ்வளவு தூரம் சுழற்சி அடிப்பதை நினைத்து, திரும்ப குலுங்கி குலுங்கி அழுதார் தங்கதுரை.
“அபி அதிர்ஷ்டசாலி. அவளுக்கு சீக்கிரம் நல்ல நேரம் வந்துடுச்சு. பூர்ணிக்கு நல்ல நேரம் வர இன்னும் கொஞ்ச நாள் ஆகும். அதுவரைக்கும் அவளை நீங்க பார்க்காம இருக்கிறதுதான் அவளுக்கு செய்யப் போற மிகப்பெரிய உதவி…” என்று அவரை சமாதானப்படுத்தி, பேருந்து நிலையம் வரை கூட்டி சென்றான் பாலாஜி.
சந்தோஷமான வாழ்க்கை என்பது, பல வருடங்கள் முன்பே தன் கை நழுவி போய்விட்டது! என ஏற்றுக்கொண்டு வாழப் பழகிவிட்டார் அவர். எனவே கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கிளம்ப தயாரானார்.
கடைசி நொடியில் அவன் கையைப் பிடித்து, “நானும் பூர்ணியும் மனசுறிஞ்சு எந்த தப்பும் பண்ணல தம்பி. எல்லாமே அன்னைக்கு இருந்த சந்தர்ப்ப சூழ்நிலை. இதைமட்டும் எனக்காக ஒரே ஒரு தடவை சூர்யா கிட்ட சொல்லிடுங்க” என்று கூறி, அவன் கையில் தன் கண்ணீரைக் கொட்டினார்.
‘சொன்னால் மட்டும் புரிந்து கொள்ளக்கூடிய நிலையிலா அவன் இருக்கிறான்?!’ எனும் எண்ணத்தோடு, சோர்ந்து போய் நின்றான் பாலாஜி.
பணத்தை வாங்கிக் கொண்டு சென்ற பிரபா, மொத்தத்தையும் தன் பீரோவில் பதுக்கி வைத்தார். அவர் மனைவி மங்கையும் அந்தப் பணக் கட்டுகளைப் பார்த்து, தன் கண்களையே நம்ப முடியாமல் திகைத்துப் போய் நின்றார். அந்தப் பணத்தில் பூர்ணிமாவின் கண்ணீரும், அவளது எதிர்காலமும் அடகு வைக்கப்பட்டிருப்பது அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.
மங்கை, “பரவாயில்லைங்க, உங்க அம்மா சொன்ன யோசனை இவ்வளவு பெரிய சம்பாத்தியத்தை கொண்டு வந்து சேர்த்திருக்கு நமக்கு!” என்றார் தன் கணவனின் காதில் கிசுகிசுப்பாக.
பாலாஜி, “ஆமாடி, இதுல ஒரு லட்சத்தை வச்சே காவ்யா கல்யாணத்தை முடிச்சிடலாம். மீதிய பேங்க்ல போட்டு வச்சுக்குவோம். சின்னவளுக்கு கல்யாணம் பண்ண எப்படியும் அஞ்சு வருஷமாவது ஆகும். அதுக்குள்ள நல்ல வட்டி வந்துடும்!” என்று கூற, மங்கை வேகவேகமாய் தலையாட்டினார்.
திடீரென்று முகம் மாறிய மங்கை, “இந்த விஷயம் அந்த முத்துவுக்கு தெரிஞ்சா என்னாகுறது?” என்றார் யோசனையோடு.
“சீக்கிரத்திலேயே வீடியோ ரிலீஸ் பண்ண போறதா சொல்லி இருக்காங்க. அவனுக்கு தெரியாம மறைச்சு வைக்க முடியாது. சண்டைக்கு அப்பிட்டு வருவான். அவனை என்ன சொல்லி சமாளிக்கிறதுனு எனக்குமே தெரியல மங்கை…”
“இதனால நம்ம காவ்யா கல்யாணத்துல எந்த பிரச்சனையும் வந்துரக்கூடாதுங்க.”
“என் தங்கச்சிட்ட ஏற்கனவே இதைப்பத்தி பேசி வச்சிருக்கேன். அவ புள்ளைய பத்தி அவளுக்கு தெரியும். முத்து ஏதாவது வம்பு பண்ற மாதிரி பேசினா, அவனை அவளே அடக்கிடுவா. காவ்யா கழுத்துல தாலி ஏறிட்டா போதும், மிச்சத்தை காவ்யா சமாளிச்சிடுவா. நீ தேவையில்லாம பயப்படாத…” என்று நம்பிக்கை கொடுத்தார்.
அன்று திங்கட்கிழமை! வாரத்தின் முதல் நாள் என்பதால் அலுவலகம் பரபரப்பாக இருந்தது. பூர்ணிமாவும் தனுஜாவும் அதிகாலையிலேயே அலுவலகத்திற்கு வந்துவிட்டனர். பாலாஜிக்கு ஃபேக்டரியில் புதிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டு இருப்பதால், அங்கே வேலைப் பளு அதிகமாக இருந்தது; அதனால் அவன் இந்த பக்கம் தலைகாட்டவே இல்லை. இன்னொரு பக்கம், நம் ஊர் சுற்றும் வாலிபன் ஆர்யா, சொல்லாமல் கொள்ளாமல் தன் புது கேர்ள் பிரண்டுடன் எங்கோ போய்விட்டான்.
பெண்கள் இருவரும் தனித்து விடப்பட்டனர். தனுஜா, பூர்ணிமா பயன்படுத்த போகும் ஃபேப்ரிக்கின் தரம், அதை தைக்க பயன்படுத்தக்கூடிய நூல் வகைகள் பற்றி வாய் ஓயாமல் சொல்லித் தந்து கொண்டே இருந்தாள்.
பூர்ணிமாவும் அவள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் கவனமாக கேட்டுக் கொண்டாள். அவள் எண்ணம் முழுவதும் சூர்யாவுக்காகத் தான் தைக்கப்போகும் அந்த உடையின் மீதுதான் இருந்தது. அவன் வெறும் இரண்டு மணி நேரம் அணியும் உடைக்காக, இவள் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்தாள்.
தனுஜா, தன் பொறுப்பின் கீழ் இருக்கும் டிசைன்களை வேகமாக வெட்டி, மெஷினில் வைத்துத் தைக்க ஆரம்பித்தாள். இருவரும் டீ பிரேக் கூட எடுக்காமல் தைத்ததால், ஐந்து மணி நேர வேலை வெறும் மூன்று மணி நேரத்தில் முடிந்துவிட்டது.
தனுஜா, “சூப்பரா ஸ்டிச் பண்ணிருக்கீங்க அண்ணி. நாளைக்கே வேலை முடிஞ்சிடும்னு நினைக்கிறேன்” என்று கூறு பாராட்டினாள்.
பூர்ணிமா பதில் ஏதும் பேசவில்லை. அவள் மனதில் ஒரு ஆசை தலைதூக்கியது.
மெல்ல தனுஜாவின் பக்கம் திரும்பி, “தனு, எனக்கு ஒரு உதவி பண்றியா? நான் என் தங்கச்சி அபிக்காக ஒரு டிரஸ் தைக்கணும்னு ஆசைப்படுறேன். அதுக்கான மாடல் கூட என்கிட்ட இருக்கு. அதுக்கு ஏத்தபடி நம்ம ஸ்டாக்ல இருந்து கொஞ்சம் ஃபேப்ரிக் மட்டும் எடுக்கணும்…” என்று கெஞ்சும் தோரணையில் கேட்டாள்.
அதைக் கேட்டதும் தனுஜாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது.
“ஐயயோ! அண்ணி… ஆபீஸ் பொருளை பர்சனல் வேலைக்கு யூஸ் பண்ணா, நம்ம முதலாளி கொன்னே போட்ருவாரு. நான் வரலப்பா இந்த விளையாட்டுக்கு…” என்று கையை விரித்துவிட்டுப் பின்வாங்கினாள்.
“நான்தான் டிசைனிங் போட்டியில ஜெயிச்சிருக்கேனே தனு. அந்த வெற்றிக்கான பிரைஸ்ல இதுவும் அடங்கும்னு சொல்லி நான் சமாளிச்சுக்குறேன். ப்ளீஸ் தனு… என் செல்லம்ல.. என் புஜ்ஜில, என் பட்டுல…” என்று தனுஜாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு செல்லம் கொஞ்சிப் பார்த்தாள். ஆனாலும் தனுஜா அவ்வளவு சீக்கிரம் அவள் மாயாஜாலத்திற்கு மயங்குவதாக இல்லை.
பூர்ணிமாவின் முகம் அப்படியே வெற்றிலையாய் வாடிவிட்டது. அவளது சோகமான முகத்தைப் பார்த்ததும் தனுஜாவுக்கு மனசு கஷ்டமாகிவிட்டது. ஆயிரம் தான் இருந்தாலும், அன்று சூர்யாவிடமிருந்து பூர்ணிமா தானே அவளைக் காப்பாற்றினாள்?
அவனைக் ‘காண்டாமிருகம்’ என்று சொன்னதற்குப் பூர்ணிமா மட்டும் இடையில் வந்து தடுத்திருக்கவில்லை என்றால், கண்டிப்பாகத் தனுஜாவின் கன்னத்திலேயே நான்கு அறை விழுந்திருக்கும். அந்த நன்றிக் கடனுக்காகவாவது ஏதாவது செய்ய வேண்டும் என்று தனுஜாவின் மனம் இரங்கியது.
“சரி சரி… அழுதுடாதீங்க. எங்கிட்ட ஒரு ஐடியா இருக்கு…”
பூர்ணிமாவின் கண்கள் சட்டென மின்னின. “என்ன?” என்று ஆர்வமாகக் கேட்டாள்.
“நம்ம வாய்ச்சொல் வீரன் ஆர்யாவை யூஸ் பண்ணிடலாம்.”
“எப்படி?” என்று பூர்ணிமா புரியாமல் கேட்க, “பண்றேன் பாருங்களேன்…” என்ற தனுஜா, ஒரு குறும்புச் சிரிப்போடு உடனே ஆர்யாவுக்குப் போன் போட்டாள்.
அடுத்த பத்து நிமிடத்தில் ஆர்யாவோடு, சூர்யாவும் அங்கு வந்து நின்றான்.
