ரசிகை – 16

மாலை நேரம் நெருங்கியதும், பாலாஜியின் இல்லம் வண்ண விளக்குகளின் ஒளியில், திருவிழா கண்ட தேர் போல ஜொலித்துக் கொண்டிருந்தது. அபியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வீட்டின் ஒவ்வொரு மூலையும் மிக அழகாகத் தயார் செய்யப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டமான கூட்டம் இல்லாமல், மிக நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டுமே அழைத்திருந்தார்கள்.

“எனக்கு இந்த டிரஸ் புடிக்கல. எனக்கு இது வேண்டாம்…” என அபிநயா, மலரிடம் அடம் பிடித்துக் கொண்டிருந்தாள். மலர் அவளைச் சமாதானப்படுத்த முயன்று தோற்றுப் போயிருந்த நேரத்தில், சூர்யாவும் பூர்ணிமாவும் அந்த வீட்டிற்குள் நுழைந்தனர்.

சூர்யா வெளிர் நீல வண்ண கேசுவல் உடையில் இருக்க, பூர்ணிமா அதே வண்ணத்தில் ஒரு லெஹெங்கா அணிந்திருந்தாள். எல்லாம் ஐயாவின் உத்தரவு தான்! எதற்காக என்றும் இல்லாத திருநாளாக இன்று ஒரே வண்ணத்தில் உடை போடச் சொன்னான் என்று அவளுக்கு தெரியவில்லை. கேட்கும்  நிலையிலும் அவள் இல்லை…

தன் உயிருக்கு உயிரானத் தங்கையைப் பல நாட்களுக்குப் பிறகு நேரில் பார்த்த  சந்தோஷத்தில், விழி ஓரம் கண்ணீர் துளிகள் மெல்லக் கசிந்தன. அந்தச் பிஞ்சு முகத்தைப் பார்த்ததும், இப்போதே ஓடிப் போய் அவளை வாரி அணைத்து, உச்சி முகர்ந்து நூறு முத்தங்களாவது தர வேண்டும் என்று அவள் உள்ளம் துடித்தது.

அப்படி மட்டும் செய்தால் அருகில் இருக்கும் சாத்தான் அப்படியே கழுத்தை கடித்து ரத்தத்தை குடித்து விடுவான்! எனும் ஒரே காரணத்திற்காக பொறுமையாக இருந்தாள். 

‘இனி அபி அவர்கள் வீட்டுப்பிள்ளை. உனக்கு அவள் மேல் உரிமை கிடையாது…’ என்று ஒன்றுக்கு பத்து முறை சொல்லித்தான் கூட்டி வந்திருக்கிறான். எனவே தன் பாசத்தை நெஞ்சுக்குள்ளேயே அழுத்திப் பிடித்துக் கொண்டு, மிகுந்த பொறுமையோடு நின்றாள்.

அபி அப்போதுதான் அவர்கள் இருவரையும் கவனித்தாள். உடனே அவள் முகம் செந்தாமரையாய் மலர்ந்தது. கண்களில் மின்னல் தெறிக்க, துள்ளிக் குதிக்கும் கன்றுக்குட்டி போலக் குடுகுடுவென அவர்களை நோக்கி ஓடி வந்தாள். பூர்ணி தன்  தங்கைக்காக கையை விரித்துக் கொண்டு ஆசையாக காத்திருக்க, அவளோ பூர்ணிமாவை தாண்டிச் சென்று சூர்யாவை கட்டிக் கொண்டாள்.

“ஹேய், செல்லக்குட்டி…” என்று அவளை அணைத்து, முன் நெற்றியில் முத்தமிட்டான்.

“சூர்யா… சூர்யா…” என்று அவன் பெயரை ஸ்லோகம் போல திரும்பத் திரும்ப சொல்லி மகிழ்ந்தாள் அவள்‌. தன் புது உறவுகளுக்கு, அவனை அறிமுகப்படுத்த விரும்பி அலைபாய்ந்தது அவள் உள்ளம். 

அது புரிந்தார் போல, “அபியும் நானும் சின்ன வயசுல இருந்தே ரொம்ப பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். இல்லடா கண்ணு?” என அவனே தங்கள் இருவரின் பிணைப்பை அனைவருக்கும் விளக்கினான்.

மலர், “தெரியும் தம்பி, வந்ததுல இருந்து உங்க பேரை லட்சம் தடவை சொல்லி இருப்பா. அவளோட அப்பாவும் தாத்தாவும் வேற கிரிக்கெட் ஃபேன்ஸா போயிட்டாங்க. தினமும் உங்க மேட்ச் ஏதாவது ஒன்ன வச்சு மூணு பேருமா பார்த்துட்டு இருக்காங்க…” என்று கூற, அதை பெருமையாய் நினைத்துக் கொண்டு புன்னகைத்தாள் அபி.

“நானும் எங்க அத்தையும் சீரியல் பார்க்க முடியல. எங்களுக்குனு தனியா ஒரு டிவி வாங்கி கிச்சன்ல மாட்டிக்க போறோம்” என்று சொல்லவும், அத்தனை பேரும் சிரித்து விட்டனர். ஒருத்தியைத்தவிர!

பூர்ணிமா, திருவிழா கூட்டத்தின் நடுவே, மிட்டாய்க்கு ஏங்கும் ஏழைக் குழந்தை போல தனியே நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு உறவான இருவருமே, அங்கு பூர்ணி என்றொரு ஜீவன் இருப்பதை மறந்து பேசிக் கொண்டிருந்தனர். பாலாஜிதான் அவளை தனியே அழைத்துச் சென்று அமர வைத்து, அவள் அழுது விடாத படி விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டிருந்தான். 

நல்லவேளையாக, தனுஜாவும் அவள் பெற்றோரும் அதே நேரம் பரிசுகளோடு வீட்டிற்குள் நுழைந்தனர். 

‘இனி பூர்ணியை தனு பார்த்துக் கொள்வாள்…’ என நம்பிக்கை தோன்ற, பாலாஜி மற்ற விருந்தினர்களை கவனிக்க போய்விட்டான். அவன் நினைத்தது போலவே  மற்றவர்களை விட்டு தனியே பிரிந்த தனுஜா, பூர்ணி அருகில் சென்று அமர்ந்து விட்டாள்.

“அபி உங்கள கண்டுக்கலன்னு கஷ்டமா இருக்கா அண்ணி?” என மிகச் சரியாக கணித்துக் கேட்டாள். 

விழியோரம் இருந்த கண்ணீர் துளிகளை துடைத்துக்கொண்ட பூர்ணிமா, “அவளுக்கு எப்பவுமே என்னை பிடிக்காது தனு. அதுக்கும் நான்தான் காரணம்! இப்ப அவ முகத்தை திருப்பிக்கிட்டு போறது கூட, எனக்கு பெருசா கூட வலிக்கல. இன்னைக்கு பிறந்தநாள், அவளுக்காக நான் எவ்வளவு பண்றேன். இந்த சூர்யா எனக்காக கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாம்ல? அவளோட எப்படி ஒட்டிக்கிட்டு சுத்துறான் பாரு…” என்றாள் அழுதபடி.

தனுஜாவுக்கு அவளது வார்த்தைகள் சுத்தமாக புரியவில்லை. 

‘குழந்தை மனதோடு இருக்கும் தன் தங்கையோடு, காதலனை சேர்த்து வைத்து பொறாமைப்பட்டு கொண்டிருக்கிறாளா?! என்ன ஆயிற்று இவளுக்கு…’ என்பது போல ஆச்சரியமாக பார்த்தாள். 

ஈன்ற மகளானாலும், கணவனோடு கொஞ்சி விளையாடும் நேரம், தனியே ஏங்கி நிற்கும் மனைவியாய் தவித்தது அவள் உள்ளம். 

‘எனக்கு பிடித்தவர்களுக்கு ஏன் எப்போதும் என்னை பிடிப்பது இல்லை?!’ எனும் அவளின் வலியை எத்தனை வார்த்தைக் கொண்டு  விவரித்தாலும், அதை அனுபவிக்காதவர்களால் உணர்ந்து கொள்ள முடியாது இல்லையா. எனவே அதற்கு மேல் எதுவும் பேசவில்லை பூர்ணிமா.

அவர்கள் இருவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பும் படி, அங்கே மறுபடியும் புது ட்ரஸ் பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது.

“மாட்டேன்னா மாட்டேன் தான்…” என்று தன் புது டிரஸ்சை தூக்கி எறிந்தாள் அபிராமி.

மலர், “அச்சோ, ஏன்டா கண்ணு நல்ல நாளும் அதுவுமா இப்படி படுத்துற? அபி குட்டி சமத்து பொண்ணு இல்லையா?” என்று சொல்லிக்கொண்டே தரையில் கிடந்த உடையை எடுக்க சென்றார். அவருக்கு முன்னால் இன்னொரு கை அந்த உடையை கையில் எடுத்திருந்தது.

சூர்யா, “டிரஸ் ஃபுல்லா நிறைய ஸ்டோன்ஸ் எம்பிராய்டரி வொர்க் இருக்கு. இது அபிக்கு பிடிக்காது. ஸ்கின்ல குத்தும்னு சொல்லி பயப்படுறா” என விளக்கம் தந்து கொண்டிருக்க, பூரணியின் அருகில் இருந்த தனுஜா குடுகுடுவென இங்கே ஓடி வந்தாள். 

“அவ டேஸ்ட்டுக்கு புடிச்ச மாதிரி ஒரு டிரஸ் எங்கிட்ட இருக்கு! வேணும்னா இதை போடுறாளானு கேளுங்களேன்” என தன் பரிசுப் பொருட்களிலிருந்து ஒரு உடையை எடுத்து நீட்டினாள்.

அதை பார்த்த மாத்திரத்திலேயே சூர்யாவின் பார்வை பூர்ணி பக்கம் திரும்பிவிட்டது. ஆம்! அன்று ஒரு நாள், அவன் நிறுவனத்தில் துணிகளை திருடி அவள் தைத்துக்கொண்டிருந்த அதே உடைதான். அன்றைக்கு இருந்த பிரச்சனையில், பூர்ணிமா அந்த உடைகளை தைக்காமல் விட்டு விட்டாள். ஆனால் பூர்ணி மீது அக்கறை கொண்ட தனுஜா, அவள் வெட்டி வைத்திருந்த துணிகளை தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று ஒவ்வொரு நாள் இரவும் தைத்து, இப்போது முழுமை அடைய செய்து விட்டாள். 

“ஹை… பொம்மை இருக்கு, புசு புசுனு ஸ்பான்ஞ் இருக்கு, என் செல்லத்துக்கு துப்பட்டாக்கூட இருக்கு” என நொடியில் மலர் மார்க்கெட் மேனேஜர் போல அந்த உடையை பாராட்டி பேச, அபியின் விழிகளும் அதில் அழுத்தமாக பதிந்தது.

உடனே அவள் முகத்தில் புன்னகை மலர, “நல்லாருக்கு… இது நல்லாருக்கு…” என்றாள் சந்தோஷமாக.

பூர்ணியுமே அந்த உடையை பார்த்ததும் தன் இடத்தில் இருந்து எழுந்து வந்திருந்தாள். 

மலர் அவள் மனம் புரிந்தவளாக, “அக்கா கூட போய் டிரஸ் மாத்திட்டு வர்றியா? கேக் கட் பண்ணுவோம்?” என்று மெதுவாக பிட்டு  போட்டு பார்த்தார்.

உடனே முகம் மாறிய அபி, “நான் சூர்யா கூட போறேன்” என்று சொல்லி அவன் கையை பிடித்துக் கொண்டாள். 

“சூர்யா சாரை தொல்லை பண்ண கூடாது. அவரு கொஞ்ச நேரம் பார்ட்டிய என்ஜாய் பண்ண விடும்மா…”

“அவரு பாய்! நீ கேர்ள்! அவர் எப்படி உனக்கு டிரஸ் மாத்தி விட முடியும்?…”

“நீ சீக்கிரம் டிரஸ் மாத்திட்டு வந்தாத்தான், எல்லாரும் உனக்கு கிப்ட் கொடுப்பாங்க…” என்று எத்தனையோ விதங்களில் அவள் மனதை மாற்ற எல்லோரும் முயற்சித்தனர். 

ஆனால் அத்தனை பேர் வார்த்தைக்கும் பலன் ஜீரோ தான்.

நேரம் போவதை பார்த்த சூர்யா, “சரி, நானே அவளுக்கு டிரஸ் பண்ணி கூட்டிட்டு வரேன். வாடா அபி” என்று கூப்பிடும் முன்னால் ஓடி வந்து அவன் கையை பிடித்துக் கொண்டாள்.

“தம்பி, நீங்க எப்படி…” என்று பாலாஜியின் அப்பாவும் அம்மாவும் தயக்கமாக கேட்க,

“அவ எனக்கும் பொண்ணு மாதிரிதான். அதுவும் போக, இது முதல் தடவை இல்ல. நான் ஏற்கனவே இதுக்கு முன்னால ரெண்டு தடவை அவளுக்கு டிரஸ் மாத்தி விட்டு இருக்கேன்…” என்று கூறியவன், தன் பார்வையாலேயே அத்தனை பேரையும் அச்சுறுத்தி தூர நிறுத்தியிருந்தான்.

அவன் இடையை கட்டிக்கொண்டு, “ஹாப்பி பர்த்டே… எனக்கு ஹாப்பி பர்த்டே…” என்று சந்தோஷமாக ராகம் போட்டு பாடிக்கொண்டே நடந்தாள் அபி. 

எண்ணி மூன்றே நிமிடத்தில், அவளுக்கு உடைமாற்றி கதவை திறந்து விட்டான். சாதாரண நாட்களிலேயே அவளுக்கு உடை மாற்ற குறைந்தது பதினைந்து நிமிடங்கள் ஆகும். இன்று வீடு நிறைய விருந்தினர்கள் இருப்பதால் அவள் அதிகம் முரண்டு பிடிப்பாள் என்று ஏற்கனவே எதிர்பார்த்து இருந்தாள் மலர். 

வெறும் மூன்று நிமிடத்தில் முடிவதென்றால், அவ்வளவு தூரம் அவன் பேச்சுக்கு, அபி செவி சாய்க்கும் பழக்கம் கொண்டவள் என்னும் விஷயமே இப்போதுதான் மலருக்கு புரிந்தது. 

“வா சூர்யா, கேக்கு… கேக்கு கட் பண்ணுவோம்…” என அபி சிரித்த முகமாய் சூர்யாவை தன்னோடு கூட்டி சென்றாள்.

அவன்தான் அவள் கைபிடித்து கேக்கை வெட்டினான். அவனுக்குத்தான் அபி முதலில் கேக்கை ஊட்டினாள். எல்லோரும் பரிசு தந்தாலும், தனக்கென எதுவுமே கொண்டு வராத அவன் கையை பிடித்துக் கொண்டுதான், அன்று முழுக்க உலவினாள். அவன் கையால்தான் உணவை சாப்பிட்டாள். அவனுக்கும் தன் பிஞ்சு விரல்களால் சிந்தி சிதறி ஊட்டி மகிழ்ந்தாள். 

இரண்டு மணி நேரம் அவளோடு சிரித்து பேசி விளையாடி மகிழ்வித்த சூர்யாவை, பாலாஜி கண்கள் கலங்க பார்த்துக் கொண்டிருந்தான். பத்து வருடத்திற்கு முன்பு அவன் தொலைத்த நண்பனை, இன்றல்லவோ திரும்பப் பார்க்கிறான்!

அவனுக்கே அப்படி என்றால் பூர்ணிமாவின் நிலையை சொல்லவும் வேண்டுமா? 

‘இப்படி சந்தோஷமாக வாழ்ந்திருக்க வேண்டிய உங்கள் இருவரது வாழ்க்கையையும், நான்தான் பாழாக்கிவிட்டேன்…’ என கூனிக்குறுகி, இருக்கும் இடம் தெரியாமல் ஒரு மூலையில் இருந்தாள்.

தனுஜா எப்படி பேசி, சமாதானம் செய்ய முயன்றாலும் பூர்ணியின் முகத்தில் மாற்றம் ஏதும்‌ வரவில்லை. எனவே அவளும் தனக்கென ஒரு மூலையை பார்த்து உட்காருந்து விட்டாள். பாலாஜி மெதுவாய் அவளை நெருங்க முயற்சி தான். 

“தனு… சாரி… நான் அன்னிக்கி…” என்று கூறியபடி ஒரு அடி முன்னால் வர, இவளோ நான்கு அடி தூரம் பின்னால் சென்றாள்.

அது அவன் நெஞ்சை கோடாரி கொண்டு வெட்ட, “ப்ளீஸ் தனு. தெரியாம பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடு” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, தனுஜா தன்னுடைய ஹேண்ட் பேக்கை எடுத்துக்கொண்டு, வேகவேகமாக வாசல் நோக்கி சென்று விட்டாள். 

எல்லோர் பார்வையும் சூர்யா மீது இருந்ததால், இப்படி ஒரு சம்பவம் நடந்ததை யாருமே கவனித்திருக்கவில்லை. தனுஜாவின் பெற்றோர் உட்பட!

ஆடி ஓடி ஓய்ந்த அபி, நொறுக்கு தீனிகளால் கழுத்து வரை நிரப்பிக் கொண்டதன் பலனாய், சூர்யாவின் தோளில் சாய்ந்து உறங்கிப் போனாள். பார்ட்டி முடிந்து, ஒவ்வொருவராக கிளம்ப ஆரம்பித்தனர்.

பாலாஜியின் அண்ணன் வைரமணி, “சூர்யா, பாப்பாவ நான் தூக்கிக்கவா?” என்று அன்போடு கேட்டான்.  ‌ 

“இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவேன், அதுவரை இருக்கட்டும். நான் உங்க அம்மா அப்பாகிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். அவங்க எங்க?” என்று கேட்டான்.

அது, சற்று முன்பு  அபிநயாவோடு சந்தோஷமாக சிரித்து விளையாடிய சூர்யா இல்லை! பழையபடி இரும்பு போல முகத்தை இறுக்கமாக மாற்றிக் கொண்ட, இன்டர்நேஷனல் கிரிக்கெட் பிளேயர் சூர்யா!…

பாலாஜிக்கு அவன் எண்ணம் விளங்கிவிட்டது போலும். தடுமாற்றத்தோடு, “சூர்யா வேணாம்” என்று தடுக்க முயன்றான். 

“நீ பூர்ணிய ஷாப்பிங் மால்ல தனியா விட்டதுக்காக, என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கிறதா சொன்னியே…” என்று கேட்டதும், அவன் வாய் அடுத்தொரு வார்த்தை பேச துணியவில்லை.

தன் தம்பி ஏதோ பெரிய சம்பவம் செய்து விட்டான் எனப் புரிந்து கொண்ட வைரமணி, “இதோ, ரெண்டு நிமிஷத்துல அம்மா அப்பாவை கூட்டிட்டு வரேன்” என்று பயந்த வாக்கில்  கூறிவிட்டு சென்றான்.

‘என்ன பிரச்சனை வந்தது?!’ என்று அடித்துப் பிடித்துக் கொண்டு அவர்கள் ஓடி வருவதற்கும், தனுஜாவின் பெற்றோர் அங்கு வந்து சேர்வதற்கும் சரியாக இருந்தது. 

ஆனால் யாருக்குமே அவன் அழைத்த காரணம் விளங்கவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் குழப்பமாக பார்த்தபடி அவன் முன்னால் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தனர். அடுத்த ஐந்து நிமிடத்திற்கு அவன் மட்டும் தான் பேசினான். 

பேசி முடிக்கும் போது, “எங்களுக்கு பரிபூரண சம்மதம்” என இரு வீட்டினரும் கூறியிருந்தனர். 

“மேரேஜ் டேட் பிக்ஸ் பண்ணிட்டு சொல்லுங்க…” என்றவன், தன் தோளில் அசதியாய் உறங்கிக் கொண்டிருந்த அபியை மென்மையாக சோஃபாவில் படுக்க வைத்தான்.

அடுத்தகணம் அவன் பார்வை தூரத்தில் தனியாக உட்கார்ந்து இருந்த பூர்ணிமா மீது பதிந்தது. அவள் இப்போதுதான் பாதி கேக்கை சாப்பிட்டு முடித்து இருந்தாள். அவன் பார்வைக்கான பொருள் புரிந்தது போல, உடனே ஓடி வந்தாள்.

“நாங்க கிளம்புறோம்” என்று கூறியவன் பூர்ணிமாவுக்கு மற்றவர்களோடு பேச கூட சந்தர்ப்பம் தராமல் அப்படியே இழுத்துக் கொண்டு சென்றான்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page