அமுதன் மயங்கி விழுந்ததால், அருகில் வந்த ஒருவனிடம் அவள் உதவி கேட்டாள். அவனும் உதவ முன்வந்து, அமுதனை தூக்கி வண்டியின் பின்சீட்டில் அமர வைத்தான். அந்த நேரத்தில்தான் அவன் முகத்தை நன்றாகப் பார்த்தவனுக்குள் தீப்பொறி போல கோபம் எழுந்தது. ஆனால் அதை வெளியில் காட்டாமல், வண்டியை மட்டும் மிக வேகமாக ஓட்டத் தொடங்கினான்.
வண்டி இருளை வெட்டிக் கொண்டு பாய்ந்தது. அந்த வேகத்தில் அவள் உடம்பே நடுங்கியது.
சாலையோர விளக்குகள் கூட மங்கலாகத் தோன்றின.
அவன் இவ்வளவு வேகமாக ஓட்டுவதைக் கண்டு அவள் பயந்து,
“அண்ணா ஏன் இவ்வளவு வேகமா வண்டி ஓட்டுறீங்க? அதுவும் ஏன் இந்தக் காட்டு பக்கம் கூட்டிட்டு போறீங்க?” என்று கேட்டாள்.
அவன் மெதுவான குரலில்,
“எங்க கூட்டிட்டு போகணும்னு எனக்கு தெரியும் நீ அமைதியா வா,” என்றான்.
அவள் பதட்டமாக, “அண்ணா அவருக்கு அதிகமாக ரத்தம் வருது எங்கயாவது ஹாஸ்பிட்டல் பார்த்து நிறுத்துங்க,” என்றாள்.
அவன் கடுமையாக, “அது முடியாது நான் கூட்டிட்டு போற இடத்துக்குத்தான் போகணும். அதுக்குள்ள அவன் ஒன்னும் ஆக மாட்டான்,” என்றான்.
“அண்ணா நான் உங்களை உதவி தான் கேட்டேன் நீங்க இப்படிப் பேசுறீங்க?”
“நானும் ஒரு விதத்தில் உதவி தான் செய்றேன்,” என்றான் அவன்!
“நீங்க பண்றது உதவி இல்ல எங்களை பயமுறுத்துற மாதிரி இருக்கு,” என்று அவள் நடுங்கிக் கொண்டேக் கூறினாள்.
அவன் பதில் சொல்லாமல் திடீரென்று திரும்பிப் பார்த்தான். அவன் பார்வை அவளின் உடல் முழுவதும் நடுக்கம் ஏற்படுத்தியது. அதன்பிறகு அவள் அமைதியாகி விட்டாள்.
உள்ளுக்குள் பயம் கொந்தளித்தது. இதற்கு முன் இப்படி பலரைக் கண்டிருந்தாலும் தப்பிக்க அமுதன் அவளுடன் இருந்தான். ஆனால் இப்போது அவனே மயக்க நிலையில் இருக்கிறான் என்ன செய்வது என்று தெரியாமல் கண்களை மூடி யோசித்தாள். அப்போதுதான் அவளுக்கு ஒரு விஷயம் புரிந்தது அவன் உதவிக்கு வந்தபோது அமைதியாக இருந்தான். ஆனால் அமுதனை பார்த்ததும் கோபம் கொண்டான். ‘ ஒருவேளை இவருக்கும் இந்த அண்ணாவுக்கும் முன்னாடியே ஏதாவது முன்பகை இருந்திருக்குமோ இவர் இவங்க வீட்ல யாரையாவது கொலை பண்ணிட்டாரா அதனால தான் இவரை பார்த்த உடனே இவருக்கு இவ்வளவு கோபம் வந்ததா? அதை கேட்டுப் பார்ப்போமா? என்று யோசித்தவள் அதை அவனிடம் கேட்டும் விட்டாள்.
அதற்கு அவனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை மாறாக முறைப்பை மட்டுமே பரிசாக பெற்றுக் கொண்டவள் மீண்டும் அமைதியானாலும் அமுதனை எப்படி காப்பாற்றுவது என்ற எண்ணம் மட்டுமே அவளிடம் தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்க மெல்ல வெளியில் பார்க்க.. அங்கு
இருட்டு அதிகரித்தது
சாலை மெதுவாக காட்டுப் பாதையாக மாறியது அந்த இடம் அவளுக்கு முற்றிலும் அறிமுகமில்லாதது
சிறிது நேரம் கழித்து, எல்லாவற்றையும் தன் கண்களால் பார்த்தவள் தொண்டைக் குழியில் எச்சிலை கூட்டி முழிங்கி விட்டு
“அண்ணா, இது எந்த ஊர் பக்கம் போகுது?” என்று மெதுவாகக் கேட்டாள்.
அவன் கிண்டலாக, “இப்ப தெரிஞ்சு நீ என்ன பண்ண போற?” என்றான்.
அந்த பதில் அவள் கேள்வியை மட்டும் இல்ல அவள் நம்பிக்கையையே முடித்தது.
அந்த இருட்டில் அவளுக்கு எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அந்த இடம் பாதுகாப்பானதாகவும் தோன்றவில்லை ஆனாலும் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை ஒவ்வொரு நொடியும் அமுதனின் தலையைத் தொட்டு பார்த்துக் கொண்டிருந்தாள்.
அந்த தொடுதலில் மெதுவாக அமுதன் கண் திறந்தான்.
அதை கவனித்தவள் “ஏங்க, ரொம்ப வலிக்குதா?” என்று கேட்டாள்.
அவன் அமைதியாகவே இருக்க
அவள் உடனே முன் குனிந்து,
“ஏங்க கேட்கிறீங்களா ?” என்றாள்.
அவன் அவள் கையை பிடித்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டான்.
அவன் குரல் பலவீனமாக இருந்தது
ஆனால் அந்த வார்த்தைகள் அவளின் இதயத்தை உடைத்தது.
அவன் அவள் கையைப் பிடித்து தன் கன்னத்தில் வைத்து, “என்னால உன்னை காப்பாத்த முடியாம போயிடுமோனு பயமா இருக்கு,” என்றான்.
“அப்படியெல்லாம் இல்லங்க நான் நல்லாதான் இருக்கேன் நீங்கள்தான் வலியில் தவிக்கிறீங்க என்னை எதுக்கு நீங்க காப்பாற்ற வந்தீங்க இப்போ பாருங்க நான் நல்லா இருக்கேன் நீங்க இப்படி தவிச்சுட்டு இருக்கீங்க” என்றாள்.
“ஏய் ஏண்டி இப்படி எல்லாம் பேசுற உன்னைய நான் காப்பாத்த வரலைன்னாலும் எனக்கு இந்த நிலைமை வந்திருக்கும் தான், அதனால் நீ உன்னால் தான்னு எப்போ பாரு சொல்லாத, இன்னொரு முறை நீ அப்படி சொன்னாய் என்றால் நான் எங்கயும் வர மாட்டேன். எனக்கு ஏன்னு தெரியல இப்போ உனக்காக உயிர் வாழனும்னு தோணுது, ” என்றான்.
அவளுக்கு இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை தனக்காக ஒருவன் உயிர் வாழ வேண்டும் என்று தோன்றுவதெல்லாம் அவளுக்கு முதல் முறை, அந்த வார்த்தையை கேட்டவளுக்கு ஏதோ வானத்தில் சிறகில்லாமல் பறக்கும் பறவையைப் போல் ஆனாள். என்ன அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் “என்னை நீங்க காப்பாற்ற வந்ததற்கே உங்களுக்கு இந்த நிலைமை எனக்காக உயிர் வாழும்னு ஆசை எல்லாம் படாதீங்க அது என்னைக்குமே நிலைக்காது அதனால் சும்மா கிண்டல் பண்றதை விடுங்க” என்றாள்.
“இந்த நிலைமையில் நான் கிண்டல் பண்ணுவேனா டி ” என்றான்.
“ஏங்க அதை விடுங்க இவரிடம் நீங்களாவது சொல்லுங்க ஹாஸ்பிட்டலுக்கு போகணும்,” என்றாள்.
“சரிடி இந்த பேச்சை நான் இப்ப விடுறேன் உனக்கு ஒரு நாள் புரியும் அப்போ பார்த்துக்கலாம்” என்றான்.
“அது புரியும் போது புரியட்டும் இப்ப நான் சொன்னதை செய்ங்க” என்றாள்.
அவன் கூறியது அவளுக்கு மகிழ்ச்சி தந்தாலும் தன்னாலே அவனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று உள்ளூரோ இருந்த பயமே அவளை எதுவும் செய்ய விடாமல் செய்தது.
அவனுக்கு அதெல்லாம் புரிந்து கொள்ளும் நிலைமையில் இல்லை தான் நினைத்ததை அப்போதே சொல்லிவிட வேண்டும் என்று தோன்றியதால் மட்டுமே அவன் சொன்னான் .
அவள் மறுத்ததும் எதுவும் பேசாமல் வண்டியை ஓட்டி வந்தவனிடம் மிகவும் பலவீனமாக,
“பிரதர் அவ ரொம்ப பயப்படுறா. கொஞ்சம் ஹாஸ்பிட்டல் பக்கம் வண்டி விடுங்க,” என்றான்.
அவன் திரும்பாமலே கடுமையாக,
“எனக்கு எல்லாம் தெரியும் நீ வாய மூடிட்டு உட்காரு,” என்றான்.
அதைக் கேட்ட அமுதன் மெல்ல எழுந்து அவன் கையைப் பிடித்து, “நான் தான் அவ பயப்படுறான்னு சொல்றேன் இல்லை உனக்கு புரியல
ஒரு பெண்ணை பயமுறுத்தி இப்படி பண்ணக்கூடாது அங்க ஒரு ஹாஸ்பிட்டல் தெரிகிறது பாரு அங்க வண்டியை நிறுத்து நான் டிரீட்மென்ட் எடுத்துக்கிறேன் ” என்றான்.
ஆனால் அவன் அமுதனின் கையை தட்டி விட்டு “அது முடியாது,” என்றான் ஆனால் மறந்தும் திரும்பி பார்க்கவில்லை…
“ஏய் நான் சொல்லிட்டே இருக்கேன் நீ என்னடா பண்ணுற” என்று தன் முழு பலம் மொத்தம் திரட்டி அவன் கழுத்தைப் பிடிக்க வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தவன் தன் பலம் கொண்டு அமுதனை தள்ளிவிட அவன் பின்னால் விழுந்து மீண்டும் மயங்கி விட்டான்.
அதைப் பார்த்த குழலி “ஐயோ!” என்று அலறி அவனைத் தழுவிக் கொண்டாள்.
அவளுக்கு இப்போதுதான் எனக்காக வாழ வேண்டும் என்று தோன்றியது பெரிய விஷயம் நினைத்தாலோ என்னவோ “ஏங்க உங்ககிட்ட உதவிக் கேட்டது ஒரு குத்தமா இப்படி பண்ணுறீங்க” என்றுக் கத்தினாள்.
கத்தியதும் அவன் திரும்பி அவள் கன்னத்தில் ஒரு அரையை விட அவள் மீண்டும் அமுதனிடமே சென்று அமர்ந்துக் கொண்டாள்.
அதன் பிறகு வண்டி இன்னும் வேகமாக இருளை நோக்கி பாய்ந்தது அந்த இருள் சாலையிலேயே இல்லை
அவர்கள் வாழ்க்கையிலும் பரவத் தொடங்கியது.
இதே நேரத்தில் மருத்துவமனை வாசலில் இருந்து கொண்டே குழப்பம் தெரிந்தது ஸ்ட்ரெச்சரில் கொண்டு வரப்பட்ட உடல்கள் அலறும் குரல்கள்
அவசரமாக ஓடும் நர்ஸ்கள்
இந்த எல்லாம் நடுவில் சேகர் மட்டும் நின்றிருந்தான். மருத்துவமனை வாசம் அவனுக்கு புதியது அல்ல ஆனால், இந்த சம்பவம் புதியது தெரியாமல் வந்து மாட்டிக் கொண்டோமோ என்று யோசித்தவனின் முகத்தில் வியர்வை மட்டும் இல்லை பயம் ஒரு பக்கம் அந்த அடையாளம் தெரியாத பெண்மணியின் உயிரற்ற உடல் மற்றொரு பக்கம் உயிருடன் போராடிக் கொண்டிருந்த கர்ணா என எந்த பக்கம் திரும்பினாலும் அடி என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தபோது, சேகரின் நண்பன் வந்து, “அந்த அம்மாவின் வீட்டுக்காரருக்கு தகவல் சொல்லணுமே?” என்றான்.
அப்போது தான் சேகருக்கு உண்மை புரிந்தது “அவங்களே யாருன்னே தெரியலடா!” என்றான்.
அவன் நண்பன், “அந்த லேடியின் போன் என்கிட்ட இருக்கு அதை திறந்து பார்க்கலாம்,” என்றான்.
“அதை ஓபன் பண்ண முடியுமா டா” என்றுக் கேட்டான் சேகர்!!
” முயற்சி பண்ணி பாப்போம் டா ” என்றுக் கூறி அவன் முயற்சி செய்து போனை திறந்து அவள் கணவருக்கு அழைத்தான். விஷயத்தை கேட்ட அவளின் கணவர் வெளியூரில் இருப்பதாகவும், வரும்வரை உடலை பாதுகாப்பாக வைத்திருக்கச் சொல்லியும் கூறினார்.
அதனால் வேறு வழியின்றி அவர்கள் அங்கேயே காத்திருந்தனர்.
காத்திருந்த சில நேரத்தில் மருத்துவர் வந்து, “கர்ணாவின் காலைக் காப்பாற்ற முடியாது அவரின் காலில் தொங்கும் சதையை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அந்த அறுவை சிகிச்சைக்கு கையெழுத்து வேணும்,” என்றார்.
இருவருக்கும் யார் கையெழுத்து போடுவது என்று குழப்பம் ஏற்பட
சேகர் நண்பனிடம்,”நீயே கையெழுத்து போடு பிறகு அவர் குடும்பத்தாரிடம் சொல்லலாம்,” என்றான்.
அவன் சம்மதித்து கையெழுத்து போட்டான் அப்போது போலீஸ் வந்து விசாரிக்கத் தொடங்கினர்.
சேகரின் நண்பன் அவர்களை தனியாக அழைத்து சென்று, நடந்ததை விளக்கி,”சார் நாம எல்லாரும் ஒரே டிபார்ட்மெண்ட் இதிலிருந்து எங்களை எப்படியாவது காப்பாத்துங்க,” என்றான்.
அதற்கு அதிகாரி, “ஆக்சிடென்ட் கேஸன்னு சொல்லி கேஸை கிளோஸ் பண்ணிடுறேன் ஆனா பின்னாடி ஏதாவது பிரச்சனை வந்தா நீங்கள்தான் பொறுப்பு,” என்றார்.
அவன் நன்றி என்றுக் கூற, அந்த அதிகாரியோ, ” நன்றி எல்லாம் எனக்கு வேண்டாம் எனக்கு தேவையானது வந்து சேரணும்” என்றுக் கூறி விட்டு சென்று விட்டார்.
இங்கு இருவரின் பயணமும் வெள்ளைக் கேட்டிலிருந்து வெள்ளிமலையின் இருளுக்குள் தொடரந்தது ஆனால், அமுதன் இன்னும் கண் திறக்கவில்லை…
