ரசிகை – 23

அதிகாலை ஐந்து மணிக்கே சூர்யா பிராக்டிஸ் செய்ய கோச் இருக்கும் கிரவுண்டுக்கு சென்றுவிடுவான். அன்றும் அப்படித்தான் புறப்பட்டு போயிருக்க, ஆறு மணிவாக்கில் ஒரு நோட்டீஸை கையில் எடுத்துக்கொண்டு வந்தாள் பூர்ணிமா.

“அத்தை… நம்ம பக்கத்து ஏரியால இருக்கிற கோவில்ல இன்னைக்கு திருவிழா நடக்குதாம். நோட்டீஸ் கொடுத்துட்டு போறாங்க, நாம போவோமா?” என்றாள் உற்சாகமாக. அவள் ஆசை கண்ணில் மின்னுவதை கண்டுகொண்டாள் சங்கீதா ‌

“ஏங்க, சூர்யா வர எப்படி இன்னும் நாலு மணி நேரம் ஆகும். பக்கத்து ஏரியாவுல தான திருவிழா நடக்குது. நாம அஞ்சு பேரும் போய்ட்டு வரலாமே?” என்று கணவனைக் கேட்டாள் சங்கீதா. 

ஞாயிற்றுக்கிழமை தானே என்ற நினைப்பில் உடனே நந்தாவும் சம்மதம் சொல்லிவிட்டார். அவள் அபியை அலங்காரம் செய்து கூட்டி வர, நந்தாவும் ஆர்யாவும் தயாராகி வந்தனர். தன் ஸ்கூட்டரின்‌ முன் பக்கம் பூர்ணியை தூக்கி உட்கார வைத்தார் நந்தா. அவளுக்கு முன் ஆர்யா அமர்ந்து கொண்டான். சங்கீதா அபியை தன் மடியில் வைத்துக் கொண்டு பின்னால் அமர்ந்தாள். 

“அவன நல்லா புடிச்சுக்க பூர்ணி” என்று சொல்லித்தான் பைக்கை ஸ்டார்ட் செய்தார் நந்தா.

அத்தனை வாகன நெரிசலிலும் அழகாய் ஊர்ந்து சென்றது அவர்கள் பைக். இருவழிச் சாலையில் ஓரமாகச் சென்று கொண்டிருந்த அவர்கள் மீது, எதிர் ரோட்டில் இருந்த லாரி தடுமாறி வந்து பாய்ந்து மோதிற்று. நந்தா கைக்கு அருகில் இருந்த பூர்ணியை தன் உடலோடு சேர்த்து கட்டிக் கொள்ள, மற்ற மூவரும் ஆளுக்கொரு திசையாய் தூக்கி எறியப்பட்டனர். 

விழுந்து எழுந்த நந்தா, “உனக்கு ஒண்ணுமில்லையே?” என்று அவளிடம் கேட்க, அடுத்த நொடி லாரி கொஞ்சம் ரிவர்ஸ் சென்று முன்னோக்கி பாய்ந்து வந்தது.

“தள்ளிப் போ பூர்ணி…” என்று அவளை இரண்டடி தூரம் தள்ளிவிட்டார் நந்தா. அடுத்தகணமே அவர் தலை மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. துடித்துப் போனாள் குழந்தை! 

“அத்த… அத்த…” என்று சங்கீதாவைத் தேட, அவளோ அபியை இறுக்கி அணைத்துக் கொண்டே உடல் எல்லாம் ரத்த வெள்ளமாய் அனத்திக் கொண்டு கிடந்தாள். அருகே அபி செய்வதறியாது சங்கீதாவின் கையைப் பிடித்தபடி அழுது கொண்டிருந்தாள்.

தொலைந்து போன‌ ஆர்யாவைத் தேட, அவன் ஒரு மரத்தில் தலை மோதி ரத்த முகமாய் மயங்கி கிடந்தான்.  

கொஞ்சம் சுய நினைவில் இருந்த சங்கீதா, “வா.. வா…” என்று கூப்பிட்டாள். 

பூர்ணிமா அருகே ஓடி செல்ல, தன் செல்ஃபோனைக் கொடுத்து, “தாத்தா… தாத்தா…” என்று சொல்லிவிட்டு மயங்கிப் போனாள். 

பூர்ணி ஏற்கனவே சூர்யாவின் தாத்தாவிடம் பல முறை பேசியிருக்கிறாள். சங்கீதா சொல்ல வந்த அர்த்தம் புரிய உடனே அந்த தாத்தாவின் எண்ணுக்கு அழைப்பு விடுத்தாள். ஒரு சில நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் இதற்கு ஆம்புலன்ஸ்க்கு அழைப்பு விடுத்திருந்தனர். எண்ணி ஒரு மணி நேரத்தில் எல்லோரையும் மருத்துவமனை தூக்கிக் கொண்டு சென்றனர்.

தாத்தா, “எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை. எப்படியாவது என் மகள் குடும்பத்தை காப்பாத்துங்க” என்று கதறி அழுதார் தாத்தா.  ‌ 

“சாரி சார். குழந்தை உயிர மட்டும் தான் காப்பாத்த முடிஞ்சது. நந்தா சம்பவ இடத்திலேயே இறந்துட்டாரு. உங்க பொண்ணும் கொஞ்சம் முன்னால…” என்று இழுக்க, தாத்தா நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதார்.

அந்த நேரம் தான் சூர்யா அங்கு வந்து சேர்ந்தான். காலையில் ஐந்து மணிக்கு கிளம்பும்போது சந்தோஷமாக சிரித்து வழி அனுப்பி வைத்த  பெற்றோர் இருவரும், இப்போது பிணங்களாய் மார்ச்சுவரியில்! இன்னதென்று சொல்ல முடியாத வலி அவனுக்குள்…

மொத்தமாய் உடைந்து உட்கார்ந்து இருந்தவனிடம், “இங்க யாருப்பா நந்தா?” என்று கேட்டுக் கொண்டே வந்து நின்றார் போலீஸ்.

“எங்க அப்பா தான் சார்….” என்றான்‌ தழுதழுத்த குரலில்.

“பைக்ல அஞ்சு பேர உட்கார வச்சு ஓட்டினதோட இல்லாம, லாரில மோதி பெரிய ஆக்சிடென்ட் பண்ணி இருக்காரு. அவரு மேல கேஸ் ஃபைல் இருக்காரு லாரி ஓனர்” என்று சொல்ல, 

பூர்ணியா சத்தமாக, “இல்ல, எங்க மாமா ஒன்னும் அப்படி பண்ணல. நாங்க ஓரமாத்தான் போனோம். அந்த லாரி தான் பக்கத்து ரோட்டிலருந்து எங்க மேல வந்து மோதிச்சு. நானும் மாமாவும் ஒரு அடி கூட படாம நல்லா இருந்தோம். லாரி பின்னாடி போயிட்டு திருப்பி வந்து மாமா மேல ஏறுச்சு. அவரு என்னை அவசரமா தள்ளிவிட்டாரு. இல்லனா நானும் செத்து இருப்பேன்” என்று வெறி வந்தவள் போல கத்தினாள். ‌ 

அதையெல்லாம் பொறுமையாக கேட்ட இன்ஸ்பெக்டர், “அப்படியா பாப்பா? அந்த ஓனர் தான் பொய் சொல்லிட்டான் போல. நீ சொன்னதை நான் அவன்கிட்ட சொல்றேன்” என்று மெதுவாக நழுவினான். 

சூர்யாவுக்கு ஏதோ தவறாக இருப்பது தெளிவாக புரிந்தது.

“தாத்தா, அம்மா அப்பாவுக்கு உடனே செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் செய்யணும்” என்றான்  அழுத்தமான குரலில்.

அந்த முதியவரோ இன்னும் மகளுக்காக மனதார அழுது முடிக்கவில்லை. 

“தம்பி ஐ சி யூ ல கிடக்கிறான். இப்போ…” எனும் முன், 

“உடனே பண்ணிடுவோம் தாத்தா. இல்லன்னா, பத்து வருஷம் ஆனாலும் பண்ண முடியாதுன்னு எனக்கு தோணுது.‌ நானும் பூர்ணிமாவும் தம்பி கூட இருக்கிறோம். நீங்க ஆக வேண்டிய வேலையை பாருங்க” என்று அவரை இவன் அதிகாரம் செய்தான்.

பூர்ணிமாவுக்கும் ஏதோ புரிவது போல் இருக்க, அவன் கூடவே இருந்தாள். அடுத்த ஒரு மணி நேரத்தில் சிதையை எரியூட்டிவிட்டனர். கோச்சை அழைத்து அரை மணி நேரம் பேசினான் சூர்யா. பேசி முடிக்கும் போது அவன் முகம் முன்னை விட தெளிவாய் இருந்தது.

“நம்ம சைடு கேஸ் ஒண்ணு ஃபைல் பண்ணிடுங்க. எவிடென்ஸ், பூர்ணிமா வாக்கு மூலம்னு எதெல்லாம் தேவையோ எல்லாத்தையும் நான் ரெடி பண்றேன்” என்று அடுத்த கட்ட வேலைகளை கையில் எடுத்தான் அவன். 

வெறும் பதின்ம வயது பாலகன் மனதை இறுக்கிக் கொண்டு, இத்தனைதூரம் மாறி நிற்பதை பார்த்து அவன் தாத்தாவே பயப்பட ஆரம்பித்தார். தாத்தாவின் பெயரால் கேஸை எடுத்து நடத்தும் அளவு போய்விட்டான் சூர்யா. இந்த விஷயம் ஆகாஷ் காதுக்கு வந்து சேர்ந்தது.

‘என்ன இவன்? பெத்தவங்க செத்துட்டாங்க தம்பி கோமால கிடக்கிறான். இதோட மொத்தமா சுருண்டு மூலையில கிடப்பான்னு‌ பார்த்தா, என்னை நெருங்கி வர்றான்?! விடக்கூடாதே…’ என்று யோசித்தவர் உடனே அந்த இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு கொண்டார்.

“சூர்யா கேஸ ஒன்னும் இல்லாம பண்றதுக்கு என்ன வழி?” என்று கேட்க, 

“கண்ணால பார்த்த சாட்சி அந்த பூர்ணிமா மட்டும்தான். அவ வாயை அடைச்சுட்டா, மத்த எவிடன்ஸ் எல்லாம் சும்மா தூசி மாதிரி தட்டி தூக்கிடலாம்” என்றான்‌ அந்த நயவஞ்சகன்.

“குட் ஐடியா, இதை மட்டும் எப்படியாவது செஞ்சு காட்டு. நான் உனக்கு அம்பது லட்சம் தரேன்” என்று கூற, உடம்பெல்லாம் புது ரத்தம் பாய்ந்தது போல் இருந்தது இன்ஸ்பெக்டருக்கு. 

உடனே வண்டியை எடுத்துக்கொண்டு பூர்ணிமாவின் வீட்டை நோக்கி பறந்து சென்றான். அப்போதுதான் கள்ளக்காதலனை வழியனுப்பிவிட்டு வாசலில் நின்று கொண்டிருந்தாள் வசந்தா. போலீசை பார்த்ததும் அவள் முகம் பயத்தில் வெளிறிப் போனது.

“என்ன சார்? எதுக்கு எங்க வீட்டுக்கு வந்து இருக்கீங்க?” என்று நடுங்கியபடி கேட்டாள்.

“புருஷன் இருக்கும்போதே இன்னொருத்தனுக்கு பொண்டாட்டியா வாழ்ந்துட்டு இருக்க போல? இதுக்கு சட்டப்படி என்ன தண்டனை தெரியுமா?” என்று பற்களை விகாரமாக காட்டி சிரித்தான்.

“ஐயோ சார், இதெல்லாம் அந்த மனுஷனுக்கு தெரியாது. வாரத்துக்கு ஒரு நாள் தான் வீட்டுக்கு வர்றாரு. அப்பவும் தண்ணி, தம்முனு…” என்று எதையோ உளறிக் கொண்டிருக்க, 

“உன் வாழ்க்கையை மாத்த எங்கிட்ட வழி இருக்கு. அஞ்சு லட்சம் பணம், ரொக்கமா சிங்கிள் பேமெண்ட்ல கைக்கு கிடைக்கும். வேணுமா?” என்று கேட்டதும், ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடும் வசந்தாவின் கண்கள் பெரிதாக விரிந்தது.

“என்ன செய்யணும் சார்?” என்று கேட்டவளுக்கு திட்டத்தை விளக்கி சொன்னான். 

“நான் பாத்துக்குறேன், நீங்க பணத்தை எந்த பையில போட்டு கொடுக்கிறது என்று மட்டும் யோசிச்சா போதும்…” என்றாள் வாயெல்லாம் பல்லாய். 

பூர்ணிமா இப்போதெல்லாம் வீட்டு வேலை செய்வதற்கு மட்டுமே இந்த வீட்டிற்கு வந்து போகிறாள். மற்ற நேரம் மொத்தமும் சூர்யா வீட்டில் தான் இருப்பாள். இப்போதும் பள்ளியில் இருந்து திரும்பி வந்தவள், பள்ளி பொருட்களையும் தங்கையையும் தாத்தாவின் பொறுப்பில் விட்டுவிட்டு தன் வீட்டிற்கு வேலை செய்ய வந்தாள்.

“அடியே பூர்ணி, ” என்றாள் வசுந்தரா…

“என்ன சித்தி?”

“அடுத்த வாரம் கோர்ட்டுக்கு போறியாமே?”

“ஆமா சித்தி, சாட்சி சொல்ல போறேன்.”

“”இங்க பாருடி… நீ கோர்ட்ல நான் சொல்ற மாதிரிதான் சொல்லணும். அந்த லாரி மேல எந்தத் தப்பும் இல்லை, உங்க மாமாதான் தப்பா வண்டி ஓட்டிட்டுப் போய் மோதிட்டாருன்னு நீ மாத்தி சொல்லணும். புரியுதா?”

பூர்ணிமா அதிர்ச்சியில் உறைந்தபடி, “சித்தி… என்ன பேசுறீங்க? என் கண்ணு முன்னாடிதானே அந்த லாரி மாமா மேல ஏறுச்சு? தள்ளிப் போ பூர்ணின்னு சொல்லி அவர்தான என்னைக் காப்பாத்தினாரு… இப்போ எப்படி அவரைத் தப்புன்னு சொல்லச் சொல்றீங்க? நான் மாட்டேன்… சத்தியமா சொல்ல மாட்டேன்!” என்று ஆவேசமாகக் கத்தினாள்.

வசந்தியின் கண்கள் சிவந்தன. அடிவயிற்றிலிருந்து ஒரு விகாரமான சிரிப்பை உதிர்த்தவள், சட்டெனப் பூர்ணிமாவின் தலைமுடியைப் பற்றி இழுத்துத் தன் முகத்திற்கு அருகே கொண்டு வந்தாள்.

“திமிரா பேசுறியா? இங்க பாரு…” என்று கொல்லைப் பக்கமிருந்தத் தண்ணீர் தொட்டியைக் காட்டினாள். 

“இன்னொரு தடவை மாட்டேன்னு சொன்ன… நாளைக்கு நீ ஸ்கூலுக்கு கிளம்பினதும், உன் ஆசைத் தங்கச்சி அபியை அந்தத் தொட்டிக்குள்ள தள்ளி மூடிடுவேன். விவரம் தெரியாம போய் விழுந்துட்டானு நீ வர்றதுக்குள்ள பொணத்தையே பொதச்சிடுவேன். அவளும் நீயும் செத்துப் போனா எனக்கு வருத்தம் இல்ல, அது உனக்கே தெரியும்ல?”

தன் சொந்தப் பிள்ளையை இப்படியா ஒரு தாய் கொல்லத் துணிவாள்? பூர்ணிமா அவளது காலில் விழுந்து கதறினாள். 

“சித்தி… வேண்டாஞ் சித்தி… அபியை விட்டுடுங்க. அவ பாவம்… அவளுக்கு ஒன்னும் தெரியாது சித்தி. என்னைப் போட்டு எவ்வளவு வேணும்னாலும் அடிங்க… ஆனா அபியை எதுவும் பண்ணிடாதீங்க!”

“அடிச்சா மட்டும் நீ கேக்குற ஆளா?” என்ற வசந்தி அவளைக் காலால் எட்டி உதைத்தாள். அப்போதும் பூர்ணி நீ அழுதாளே தவிர, சரி என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

“வாயைத் திறக்க மாட்டேல? ஒன்னு ஞாபகம் வச்சுக்கோ… சூர்யாவோட அப்பா அம்மாவைக் கொலை செஞ்சவங்க பெரிய ஆளுங்க. நீ கோர்ட்ல உண்மையைச் சொன்னா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் சூர்யா மேல இன்னொரு லாரி ஏறும். அவனையும் பிணமாப் பார்க்கணுமா… இல்ல, அவன் உயிரோட இருக்கணுமான்னு நீயே முடிவு பண்ணிக்கோ!”

பூர்ணிமாவுக்குப் பூமி பிளப்பது போல இருந்தது. 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page