காதல் – 1

அத்தியாயம்- 1

அந்த பிரபல நகைமாளிகையில் பிறந்த நாள் பரிசாக சிறிய வெள்ளி மோதிரத்திற்கு ஒரு வித சங்கடத்துடன் பில் போடும் இடத்தில் நின்று இருந்தார்கள் மெல்லிசை மற்றும் அவள் தோழி பவித்ரா.

“நான் அப்போவே சொன்னேன் இந்த சின்ன மோதிரம் வாங்க இவ்வளவு பெரிய கடைக்கு வரணுமானு கேட்டேனா இல்லையாடி” என்று கிசுகிசுப்பாக கடிந்துக் கொண்ட மெல்லிசையை திரும்பி பார்த்த பவித்ரா,  

“அதுவும் இவ்வளவு பெரிய மாளிகைக்குனு சொல்ல மறந்துட்ட” என்று கேட்டவளை முடிந்த மட்டும் முறைத்து பார்த்தாள் மெல்லிசை.

“பின்ன என்னடி கடைக்குள்ள வந்ததுல இருந்து எத்தனை தடவை தான் இதையே சொல்லி காட்டுவ? நான் என்ன வேணும்னா உள்ளே வந்தேன். இவங்க தான் ஆஃபர் போடுறோம்னு ஊர் பூரா டமாரம் அடிச்சி வச்சி இருக்கானுங்க. அதான் ஒரு கிராம் வெள்ளி மோதிரம் இங்கேயே வாங்கிடலாம்னு வந்தேன். வந்து பார்த்தா தான் தெரியுது. இவனுங்க கொடுக்கிற ஆஃபர் எல்லாம் டுபாகூர் ஆஃபருனு” என்று பேசியவளை மீண்டும் மீண்டும் முறைத்து பார்த்தாள் மெல்லிசை.

“இப்படியே முறைச்சிட்டு இருக்காதடி. அப்புறம் உன் அழகான கண்ணு முட்டை கண்ணா ஆகிட போகுது” என்று இருவரும் பேசிக் கொண்டு இருந்த போது,

பில் போடும் நபர் “சார் பணம்” என்று கத்த, அவரின் குரலில் நிமிர்ந்து பார்த்த இரு தோழிகளும் அவர் விழி போகும் திசையை ஒன்றாக திரும்பி பார்த்தனர்.

அங்கே ஒருவன் விலையுயர்ந்த ஆடைகள் அணிந்து கையில் ஒரு நகைப் பெட்டி பையுடன் வேகமாக வெளியேறுவதை கண்டு, “அந்த ஆளு நகை வாங்கிட்டு பணம் கொடுக்காம போறான்டி. போய் பிடி… பிடிச்சி கொஞ்சம் நல்ல பேர் வாங்கிப்போம். அப்போ தான் இவ்வளவு பெரிய கடையில ஒரே ஒரு கிராம் அதுவும் வெள்ளி வாங்க வந்தோம்னு கேவலமா பார்க்க மாட்டாங்க” என்று முறைத்துக் கொண்டு இருந்த தோழியின் காதில் கிசுகிசுப்பாக சொல்லி அவளை முன்னே தள்ளியும் விட்டாள் பவித்ரா.

பின்னே சங்கடம் இருக்காதா என்ன? எவ்வளவு பெரிய நகைமாளிகை அது. ஒரு நாளைக்கு கோடிக்கணக்கில் நகைகள் விற்பனைக்கு ஆகும் இடத்திற்கு வந்து ஒரு சின்ன வெள்ளி மோதிரம் அதுவும் ஒரே ஒரு கிராமுக்கு மட்டும் வாங்கி அதையும் கையில் வைத்துக் கொண்டு பில் போடும் இடத்தில் வந்து நின்றால் எப்படி இருக்கும்.

அதிலும் கடைக்குள் நுழையும் போது இவர்களை பார்த்து பார்த்து கவனித்தனர் கடையில் பணிபுரியும் பணியாளர்கள்.

அந்த கவனிப்பை பார்த்து அசந்து தான் போய் விட்டாள் மெல்லிசை.

ஆனால் பவித்ராவோ டன் கணக்கில் நகை வாங்க வந்தவள் போல் பாவனைகள் அல்லவா செய்துக் கொண்டு இருந்தாள்.

கழுத்தில் சின்ன செயின் தொடங்கி அட்டிகை, நெக்லஸ், ஆரம், அடுக்கு ஆரம் என்று ஒவ்வொன்றாக எடுத்துக் காட்ட சொல்லி அதை அணிவித்துக் கொண்டு மெல்லிசையிடம் நல்லா இருக்காடி நல்லா இருக்காடி என்று சந்திரமுகி படத்தில் ஜோதிகா விழிகள் பிரகாசமாக கேட்பது போல் இவளும் ஒவ்வொரு முறையும் கேட்க,

“அடியே என்னடி பண்ணிட்டு இருக்க. ஒரு மோதிரம் வாங்க இவ்வளவு பெரிய கடைக்கு வரணுமா?” என்று அடிக்குரலில் மெதுவாக சீறினாள் மெல்லிசை.

அப்பொழுதும் அடங்காத பவித்ராவோ “அந்த ஒட்டியாணத்தை காட்டுங்க” என்று ஆரம்பித்தவள் கடைசியாக தங்க கால் கொலுசில் வந்து முடித்து இருந்தாள்.

பவித்ராவின் அலப்பறைகளை பார்த்து தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டாள் மெல்லிசை.

நடு நடுவில் மெல்லிசையின் கெஞ்சல் வேறு “இது பெரிய கடை டி போயிடலாம்” என்று அவளை அழைத்தது எல்லாம் அவள் கருத்தில் கூட பதியவில்லை.

கடை ஊழியர்களோ பவித்ரா பார்க்கும் நகை எல்லாம் வைத்து மிக பெரிய பலே கஸ்டமர் தான் என்று தவறாக நினைத்துக் கொண்டவர்கள் தோழிகள் இருவரும் களைத்து போய் விட கூடாதென்று நகைகளை எடுத்துக் காட்டும் போது நடு நடுவில் ஜூஸ் காபி என்று எடுத்து வந்து கொடுத்துக் கொண்டு இருந்தனர்.

மெல்லிசையோ தாங்கள் வாங்க வந்த பொருளை கருத்தில் கொண்டு, தனக்கு வேண்டாம் என்று மறுத்து விட, அவளுடையதையும் சேர்த்து இவளே எடுத்துக் கொண்டாள்.

முகம் எல்லாம் புன்னகையுடன் கடை ஊழியர் “என்னங்க மேடம் எல்லாத்தையும் பேக் பண்ணிடலாமா?” என்று பல்லை காட்டிக் கொண்டு கேட்க,

“எதை பேக் பண்ணனும்?” என்று கேட்டாளே பார்க்கலாம் அந்த ஊழியனுக்கு நெஞ்சு வலியே வந்து விட்டது.

நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு “நீங்க பார்த்த நகையெல்லாம் தான் மேடம்” என்று அவள் முன்பு கடைபரப்பி இருந்த நகைகளை எல்லாம் காட்ட,

இப்பொழுது தான் பவித்ரா அந்த நகைகள் அனைத்தையும் பார்த்து விழிகளை விரித்தள்.

‘ஒரு ஆர்வ கோளாறுல இவ்வளவு நகைகளையாடி பார்த்து வைப்ப’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டவள் திரும்பி மெல்லிசையை பார்த்தாள்.

மெல்லிசையோ அமர்ந்த வாக்கில் கைகளை மார்புக்கு நடுவே கட்டிக் கொண்டு இவளையே முறைத்துக் கொண்டு இருப்பதை கண்டு,

“ஆத்தி இவள் கூட வந்து இருக்கிறதையே மறந்துட்டோமே” என்று நெஞ்சில் கையை வைத்து தடவிக் கொடுத்தவள் “ஈஈஈ” என்று பல்லை காட்டி,

“மெல்லிசை” என்று பேச வந்தவளை கடுப்புடன் பார்க்க முயன்று தோழியின் செய்கையில் சிரித்து விட்டாள் மெல்லிசை.

அவளால் தோழியிடம் கோபமாக கூட இருக்க முடியவில்லை.

அதை கண்டு “அப்பாடா சிரிச்சிட்ட” என பெருமூச்சு விட்டவள் வேகமாக தோழியின் அருகில் அமர்ந்து “எப்படியாவது சமாளிச்சுடுடி ப்ளீஸ்டி” என்று கெஞ்சும் குரலில் கேட்டாள்.

மெல்லிசையோ “முடியாது. நீ தானே இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ண நீயே சமாளி” என்று சொல்லி விட,

சட்டென்று அவள் கரத்தை எடுத்து தன் இருக்கரத்தினுள்ளும் வைத்துக் கொண்டவள் “ப்ளீஸ் டி. இந்த ஒன் டைம் மட்டும். இவ்வளவு நகைகளை பார்த்ததும் என் கண்ணை என் கண்ட்ரோல வச்சிக்க முடியலடி. ப்ளீஸ் டி” என்று இறைஞ்சிய தோழியை கண்டு சலிப்பாக தலையை ஆட்டியவள் இருக்கையிலிருந்து எழுந்து குரலை செறுமிக் கொண்டு,

“அண்ணா இப்போ பார்த்த நகை எல்லாம் செய்கூலி சேதாரம் போக எவ்வளவோ பில் வரும்னு போட்டு வரீங்களா?” என்று கேட்டாள்.

அவரோ அப்பொழுது தான் மீண்டும் உயிர் பெற்றவராக “இதோ ஒரே நிமிசம் மா” என்று பில் கவுண்டரை நோக்கி விரைந்தார்.

போன வேகத்தில் திரும்பி வந்தவர் கரத்தில் ஒரு சின்ன காகிதம் இருக்க, அதை மெல்லிசை கரத்தில் கொடுத்தார்.

அதில் இருந்த தொகையை பார்த்த இருவருக்குமே தொண்டைக்குழி ஏறி இறங்கியது.

பவித்ராவோ மெல்ல தோழியின் காதில் “எனக்கு தெரியாம நீ எப்போடி இவ்வளவு பெரிய பணக்காரியா மாறின?” என்று கேட்டாள்.

பவித்ராவை திரும்பி முறைத்து பார்த்த மெல்லிசை “மூடிக்கிட்டு சும்மா இருடி. எல்லாம் உன்னால தான்” என்றவள் தங்களையே ஒரு ஆர்வத்துடன் பார்த்தபடி நின்று இருந்த கடைக்காரரிடம் சமாளிக்கும் பொருட்டு,

“ஓகே அண்ணா. இதையெல்லாம் எடுத்து அப்படியே வைங்க. அடுத்த மாசம் இவளுக்கு கல்யாணம் வச்சி இருக்காங்க. அப்போ வந்து இந்த நகையெல்லாம் வாங்கிக்கிறோம். இப்போ ஜென்ஸ் போடுற மாதிரி ஒரு வெள்ளி மோதிரம் காட்டுங்க” என்று சொன்னதை கேட்டு அந்த ஊழியருக்கு பேச்சே வரவில்லை.

பவித்ராவோ “எனக்கே தெரியாம எப்போடி எனக்கு கல்யாணம்?” என்று கேட்ட தோழியை பற்களை கடித்துக் கொண்டு முறைத்தாள் மெல்லிசை.

தோழியின் அவதாரத்தை பார்த்து “சரி சரி முறைக்காத புரியுது புரியுது” என்று மெல்ல குரலில் சொன்னவள்,

“ஆமாங்க அண்ணா. அடுத்த வாரம்” என்று சொல்ல வந்தவள் குரலை செறுமிக் கொண்டு தலையில் தட்டிக் கொண்டும் “அடுத்த மாசம் எனக்கு மேரேஜ். அப்போ வந்து இப்போ பார்த்த நகையெல்லாம் ஒன்று விடாம வாங்கிக்கிறேன்” என்று சொன்னவள் அவர் அதிர்ந்து நிற்பதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் “ஆமா அண்ணா இந்த வெள்ளி பொருள் எல்லாம் எங்கே இருக்கு?” என்று கேட்டவளிடம் அதிர்ச்சியுடனே தன் ஆள் காட்டி விரலை உயர்த்தி வெள்ளி நகைகள் இருக்கும் இடத்தை காட்டினார்.

“தேங்க்ஸ் அண்ணா” என்று சொன்ன பவித்ரா மெல்லிசையின் கரத்தை பிடித்துக் கொண்டு வெள்ளி மோதிரம் வாங்கச் சென்றவர்கள் மீண்டும் அங்கே அவள் கண்களை கவர்ந்து இருக்கும் வெள்ளி பொருட்களை எல்லாம் கண்டு அதையெல்லாம் எடுத்து போட சொல்லி கேட்க போனவளின் வாயை பொற்றி ஆண்கள் அணியும் ஒரே ஒரு சின்ன வெள்ளி மோதிரத்தை வாங்கிக் கொண்டு பில் போடும் இடத்தை நோக்கிச் சென்றவர்களை நகைகளை மீண்டும் எடுத்து வைத்து அடுக்கிக் கொண்டு இருந்த அந்த ஊழியன் பவித்ராவை முறைத்துக் கொண்டு தன் பணியை செய்ய அவன் அருகில் இருந்த சக ஊழியர்களோ கிண்டல் செய்துக் கொண்டு இருந்தனர்.

இத்தனை அட்டகாசங்கள் செய்து விட்டு இதெல்லாம் பற்றாது என்பது போல் தன் தோழியை வீண் வம்புக்கு மாட்டி விட அந்த விதியோடு சேர்ந்து தன்னையும் அறியாமல் கைக் கோர்த்துக் கொண்டாள் பவித்ரா.

பவித்ரா தள்ளியதில் முன்னே ஒரு அடி சென்றவள் மனமோ ‘இவள் சொல்றதும் சரி தான். இந்த மாதிரி ஆளுங்களை பிடிச்சிக் கொடுத்தா நம்மளை கிண்டல் பார்வை பார்க்க மாட்டாங்க’ என்று எண்ணியவள் நான்கு எட்டாக ஓடிச் சென்று முன்னே நடந்துச் சென்றுக் கொண்டு இருந்தவனின் கரத்தில் இருந்த நகைப் பெட்டியை பிடித்து இழுத்து அவனை நிற்க வைத்தாள் மெல்லிசை.

சட்டென்று யாரோ நகைப் பெட்டியை பிடித்து இழுக்கவும் சற்று பதற்றதுடனும் கோபத்துடனும் திரும்பி பார்த்தவனை வாயை பிளந்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்த மெல்லிசை,

“எந்த கடையில சார் நீங்க அரிசி வாங்கி சாப்புடுறீங்க. இம்புட்டு உயரமா வளர்ந்து இருக்கீங்க. கழுத்து வலிக்க தான் உங்களை நிமிர்ந்து பார்க்கணும் போலவே” என்று பேசியவளை சற்று எரிச்சலுடன் நோக்கி,

“யார் நீ? இதை கேட்க தான் நகைப் பெட்டியை பிடிச்சி இழுத்தியா? இல்ல இப்படி பேசிக்கிட்டே நகையை ஆட்டைய போட இழுத்தியா?” என்று சற்றும் பொறுமை இல்லாமல் பேசியவனை கண்டு சிடுசிடுவென கோபம் எழுந்தவளாக,

“யோவ் என்னையா வாங்கிட்டு காசு கொடுக்காம போறீயேனு உன்னை தடுத்து பிடிச்சி கொடுக்க வந்தா, என்னையே திருடி ரேஞ்சிக்கு பேசுற? உங்களை மாதிரி ஆளுங்களால தான் எங்கள மாதிரி நல்ல உள்ளம் படைத்த மனுசங்க கூட தப்பானவங்களா ஆகிடுறோம்” என்று கோபத்துடன் திட்டியவள் “வாயா” என்று நகைப் பெட்டியை பிடித்து இழுத்துக் கொண்டு முன்னே நடக்க அவள் பின்னால் இழுப்பவன் போல் அவள் உயரத்துக்கு குனிந்து அவளுடன் நடந்தான் ஜீவா என்கின்ற ஜீவானந்தம்.

ஜீவனாந்தத்தின் கரத்தை பிடித்து இழுத்துக் கொண்டு வருவதை பார்த்த பில் போடும் ஊழியர் அதிர்ச்சியுடன் பில் போடும் இடத்திலிருந்து வெளியே வந்தவர் மெல்லிசையின் முன் சென்று நின்று,

“என்னம்மா பண்ணிட்டு இருக்கீங்க?” என பணிவுடனும் அதே சமயம் கோபக் குரலிலும் கேட்டார்.

அவர் முன் ஜீவானந்தத்தை நிறுத்தியவள் “சார் நீங்க தானே சார் நகை வாங்கிட்டு பணம் கட்டலனு இந்த ஆளை கூப்பிட்டீங்க. அதான் இவன் நகையை திருடிட்டு தப்பிச்சி போறதுக்கு முன்னாடி பிடிச்சி இழுத்து வந்தேன்” என்று தன்னை திருடி ரேஞ்சிக்கு பேசிய ஜீவானந்தத்திற்கு சிறிதும் மரியாதை கொடுக்கும் எண்ணம் இல்லாமல் பேசினாள்.

தோழி பேசியதை கேட்ட பவித்ராவின் முகத்திலும் சிறு அதிர்வு தான்.

யாராக இருந்தாலும் மதித்து மரியாதையுடன் நடத்தும் தன் தோழியா இது என்ற அதிர்வு தான்.

மெல்லிசை பேசியதை கேட்ட ஜீவானந்தம் “வாட்… நான் நகையை திருடிட்டு ஓடுறேனா?” என்று கேட்டவனின் உயரத்தை நிமிர்ந்து பார்த்த மெல்லிசை

“பின்ன இல்லையா? இந்த பில் போடுற அண்ணா எவ்வளவு நேரமா சார் பணம் சார் பணம்னு கத்தினாரு. அதை கூட காதில் வாங்காம நகையை திருடிட்டு ஓட பார்த்த தானே வளர்ந்த ஒட்டகசிவிங்கி” என்று இன்னும் அவள் ஆத்திரம் அடங்காமல் பேசினாள்.

“மேடம் அவரு” என்று பேச வந்த ஊழியனை தடுத்த ஜீவானந்தம்,

“என் கடையில இருக்கிற நகையை நான் எடுத்துட்டு போனா உனக்கு என்ன?” என்று நிறுத்தி நிதானமாக அவளையே கூர்ந்தபடி அவன் கேட்க,

ஜீவானந்தம் பேசியதை சரியாக காதில் வாங்காதவள் “யார் கடையா இருந்தா என்னயா திருட்டுனா அது திருட்டு தான்” என்று சொல்லி முடிக்கும் முன் தான் ஜீவானந்தம் சொன்ன விசயம் கருத்தில் பதிய அதிர்ச்சியுடன் வாயை இருக்கரத்தாலும் பொற்றிக் கொண்டவள் ஜீவானந்தத்தை நிமிர்ந்து பார்த்து,

“ம்” என்று தலை மேலிருந்து கீழ் ஆட்ட,

“ம்…வே தான்” என அதே தோரணையில் அவனும் தலையை ஆட்டினான்.

அருகில் இருந்த பவித்ராவோ “என்னடி வம்பை விலை கொடுக்காமலே வாங்கிட்டு வந்துட்ட. ஆனா ஆளு பார்க்க செமயா இருக்கான் டி” என்று காதில் கடித்தவளை திரும்பி முறைத்து பார்த்த மெல்லிசை,

“அடியே எல்லாம் உன்னால தான்டி. வாயை மூடிக்கிட்டு இரு” என்று எச்சரிக்கும் குரலில் மிரட்டியவள் தங்களையே எரித்து விடுவது போல் பார்த்துக் கொண்டு இருந்த ஜீவானந்தத்தை பார்த்து எப்படி சமாளிப்பது என்று யோசித்தவள்,

அருகில் பதற்றத்துடன் நின்று இருந்த ஊழியரை பார்த்ததும் மூளையில் பல்பு எரிவது போல்,

“உங்க கடையா இருந்தா என்ன? நகை வாங்கிட்டு பணம் கட்டாம போறீங்கனு இந்த அண்ணா சார் தான் கூப்பிட்டாரு. அதான் நீங்க” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்,

“அய்யோ சார் நான் உங்களை கூப்பிடல. ஒருத்தர் நகைக்கு பில் கட்டிட்டு மீதி பேலன்ஸ் வாங்காம போயிட்டாரு. அதை கொடுக்க தான் அவரை கூப்பிட்டேன். அவர் உங்களை தாண்டி வேகமாக வெளியே போயிட்டாரு” என்று சொன்னதை கேட்டு இரு தோழிகளும் சட்டென்று அவரை திரும்பி ஒன்றாக பார்க்க, அதில் அவர் தானாக ஒரு அடி பின் சென்று நின்றார்.

அதை பார்த்த ஜீவானந்தத்திற்கு இருக்கும் கோபம் சிறிது குறைந்து மெல்லிய புன்னகை தோன்றினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மெல்லிசையை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தான்.

அப்பொழுது அவன் அருகிலிருந்து சற்று தள்ளி கைப்பேசியில் பேசிக் கொண்டு இருந்த ஒரு அழகான பெண் அவர்கள் அருகில் வந்து “வாட் ஹாப்பன் டார்லிங்?” என்று கேட்டவள் உரிமையாக ஜீவானந்தத்தின் கரத்தினுள் தன் கரத்தை வளைத்து போட்டுக் கொண்டு எதிரே திருதிருவென முழித்துக் கொண்டு இருந்த இரு பெண்களையும் பார்த்தவளின் பார்வை அவர்களின் உடையை கண்டு அலட்சியமாக மாறியது.

புதியவளின் பார்வையிலே ஒரு வித அலட்சியத்தை கண்டுக் கொண்ட மெல்லிசைக்கு ஏனோ அவளை சுத்தமாக பிடிக்கவில்லை. அவளை பிடிக்கவில்லையா இல்லை அவள் அணிந்து இருந்த மார்டன் என்ற பெயரில் அவள் உடல்களின் இருக்கும் அங்க வளைப்புகள் தெரியும்படி உடைகள் அணிந்து இருப்பது பிடிக்கவில்லையா என்று அவளுக்கே வெளிச்சம்.

ஜீவானந்தம் “நத்திங். போகலாமா?” என்று தன் அருகில் நின்று இருந்தவளை திரும்பி பார்த்து கேட்டவன் ஊழியரிடம் கண்களை காட்டி விட்டு அங்கே இருந்து சென்று விட்டான்.

போகும் அவன் மீது ஒரு வித வெறுப்பு தோன்றியதை மெல்லிசையால் தடுக்க முடியவில்லை.

“என்ன வாங்கினீங்க?” என்று அவர்கள் வாங்கிய மோதிரத்திற்கு பில் போட்ட ஊழியர் “இன்னிக்கு ஏதோ சார் நல்ல மூட்ல இருந்ததினால தப்பிச்சிட்டீங்க மேடம். இல்லனா” என்று பேசிய ஊழியரை நோக்கி,

“இல்லனா என்ன கடிச்சு குதறிட போறாரா உங்க சாரு” என்று கடுப்புடனே சொன்னவள் அவர் நீட்டிய பையை வாங்கிக் கொண்டு தோழியின் கரத்தை பிடித்து இழுக்காத குறையாக அங்கே இருந்து அழைத்துச் சென்றாள்.

பவித்ராவோ “இழுக்காதடி வரேன்” என்று கடையிலிருந்து வெளியே வந்தவள் தன் கரத்தை மெல்லிசையிடமிருந்து பாதுகாத்து வைத்துக் கொண்டவள் மெல்லிசையின் கரத்திலிருந்த மோதிரத்தை வாங்கி ஆசை தீர பார்த்தாள்.

“இது நிச்சயமா அவனுக்கு பிடிக்கும் தானே?” என்று ஆவலாக கேட்க தோழியின் மனதை புண்படுத்த விரும்பாத மெல்லிசை மெல்லிய புன்னகையுடன் “கண்டிப்பா” என்றவள் “சரி நீ ரோடு தாண்டி நில்லுடி நான் போய் வண்டியை எடுத்துட்டு வரேன்” என்று சொல்லி தன் இருச்சக்கர வாகனத்தை எடுக்கச் சென்றாள்.

பவித்ராவோ தன் கரத்தில் இருந்த மோதிரத்தை ஆசையாக பார்த்தபடி அந்த சாலையை கடந்து எதிரே இருந்த ரோட்டுக்குச் சென்றாள்.

அதே சமயம் காரில் ஜீவானந்தம் அருகில் அமர்ந்து இருந்த மோனிகா “யாரு ஜீவா அந்த பொண்ணு?” என்று தன் நெஞ்சில் அரித்துக் கொண்டு இருந்த கேள்வியை கேட்டாள்.

ஜீவானந்தமோ காரை ஓட்டிக் கொண்டே “எந்த பொண்ணு?” என்று தெரிந்தும் தெரியாதது போல் அவன் கேட்க,

“நடிக்காத ஜீவா. உன்னை பத்தி எனக்கு தெரியாதா? நீயெல்லாம் இப்படி ஒரு ஆளு கிட்ட பொறுமையா பேசி நான் பார்த்து இருக்கேனா அது உன்னோட பேமிலி அண்ட் கஸ்டமர்ஸ் கிட்ட மட்டும் தான். ஆனா இப்போ ஒரு பொண்ணு உன்னை திருடி அளவுக்கு பேசுறா அதை சர்வ சாதாரணமா எடுத்துட்டு வர” என்று கேட்ட மோனிகாவை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் இதழ் மெலிதாக புன்னகை மட்டுமே செய்தது. அவளுக்கான பதில் அவன் கொடுக்கவே இல்லை.

“ஏய் என்ன ஜீவா சிரிக்க எல்லாம் செய்யுற?” என்று நிஜமான ஆச்சரியத்துடன் மோனிகா வினவ,

“ஏன் நானெல்லாம் சிரிக்க கூடாதா என்ன?” என்றவனின் இதழ் மேலும் விரிந்தது.

அதன் பிறகு ஒரு வாரம் கடந்து இருக்கும். அதே நகை கடை வாசலில் சங்கடமாக நின்று இருந்தவள் விழிகளால் அவனை போலவே வளர்ந்து இருந்த அந்த பெரிய கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

பின் தன் கையிலிருந்த கடிதத்தை பார்த்தாள்.

அந்த கடிதத்தில் என்ன இருக்கிறது என்று கூட அவள் இதுவரை பிரித்து படிக்கவில்லை.

ஒரு வாரத்திற்கு முன் இருந்த அவளின் கண்களின் ஒளி கூட இப்பொழுது வலு இழந்து போய் இருந்தது.

எப்பொழுதும் அவள் கண்களில் இருக்கும் உற்சாகம் இன்று இல்லாமல் அதற்கு பதிலாக சோகமே தன் சொத்து என்பது போல் தோய்ந்து இருந்தாள்.

கண்கள் எல்லாம் கரித்துக் கொண்டு வந்தது. எந்த கடைக்கு இனி ஒரு தரம் கூட திரும்பி வர கூடாது என்று முடிவு செய்தாளோ அதே கடைக்கு அடுத்த ஒரே வாரத்தில் வேலை செய்வதற்காக வந்து நிற்போம் என்று அவள் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை.

அதிகப்படியான பண தேவை, அதனால் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் அவள் இப்பொழுது இருக்க, வேறு வழி இன்றி அந்த கடைக்குள் நுழைந்து இருந்தாள் மெல்லிசை.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page