அத்தியாயம்- 6
“வாக்கு கொடுத்தது என் அப்பா இல்லையே” என்று சாதம் ஒட்டிக் கொண்டு இருந்த விரல்களை ஒவ்வொன்றாக சப்பியபடி சொன்ன ஜீவா பரமசிவத்தை நோக்கி “என்னோட பாட்டி. வேணும்னா அவங்க கிட்ட போய் கேளுங்க. என் அப்பாவை நிக்க வச்சி இந்த கேள்விக் கேட்குற வேலையெல்லாம் வேணாம்” என்று சொல்லிவிட்டு உணவில் மீண்டும் கவனத்தை திருப்பினான்.
மெல்லிசையோ யாருக்கோ வந்த விருந்து போல், ஜீவா எடுத்து வைத்த உணவுகளை கண்ணும் கருத்துமாக உண்டுக் கொண்டு இருக்க,
“இன்னும் கொஞ்சம் சாதம் போடுவா ம்மா?” என்று அக்கறையாக கேட்டார் பூங்கோதை.
மெல்லிசையோ அவசரமாக “இல்ல வேணாம். இதுவே அதிகம்” என்று சொன்னவள் அவள் தட்டில் பரவி இருந்த உணவுகளை மலைப்பாக பார்த்தாள்.
இதெல்லாம் எப்பொழுது சாப்பிட்டு முடிப்பது என்பது போல் இருந்தது அவளுக்கு.
அளவுக்கு அதிகமாகவே அனைத்தும் இருந்தது.
அதை பார்த்த பரமசிவம், “என்ன கோவிந்தராஜ் இதெல்லாம்?” என்று மீண்டும் ஆரம்பிக்க,
தந்தை பதில் சொல்லும் முன்னே, “அட என்ன அங்கிள் நீங்களுமா?” என்று படும் சலிப்புடன் கேட்டான் ஜீவா.
அப்பொழுது “ஜீவா” என்று ஒரு அதிகாரமான ஒரு குரல் ஒலிக்க, சத்தம் வந்த திசையை நோக்கி அனைவரும் திரும்பி பார்த்தனர்.
“அட உடன்பிறப்பு” என்று சொன்ன ஜீவா “நான் தான்…” என்று அவன் பெயரை சொல்லி அழைத்தற்கு ஜீவா பதில் தர, கோபத்துடன் உள்ளே வந்த நித்யானந்தம்,
“என்ன பேச்சு இதெல்லாம். அதுவும் என் மாமனார் கிட்ட” என்று தம்பியிடம் கேட்டவன் “என்னங்கப்பா நீங்களும் அமைதியா இதையெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கீங்க. யாரு இவனுக்கு இப்படி எல்லாம் பேச சொல்லிக் கொடுத்தது” என்று கழுத்தில் கட்டி இருந்த கழுத்து பட்டையை தளர்த்தியபடி சிவா கேட்க,
பூங்கோதை மனமோ ‘போச்சு இப்போ பொண்டாட்டி புராணம் பாட ஆரம்பிச்சிடுவானே’ என்று அவர் நினைத்து முடிக்கவில்லை,
“ஹான் என் பொண்டாட்டி தான்” என்று சொன்னதை கேட்டு அப்பொழுது தான் தண்ணீர் குடித்துக் கொண்டு இருந்த மெல்லிசைக்கு புரையேறி விட்டது.
அவசரமாக ஜீவா மனைவியின் தலையை தட்டிக் கொடுக்க, பூங்கோதையோ மருமகளின் முதுகை தடவிக் கொடுத்தார்.
“ஏய் மெலோடி பார்த்து தண்ணீயை குடிக்க மாட்டியா?” என்று கேட்டவனை “ஆ…” என்று கண்களை விரித்து பார்த்தாள் மெல்லிசை.
‘மெலோடியா? மெல்லிசை எப்போ மெலோடியா மாறினேன். எல்லாம் உன்னால் தானேடா’ என்று நினைத்தவள் புருவம் சுருங்க கணவனை நோக்கியபடி மீண்டும் ‘மெலோடி’ என்று தனக்குள்ளே முணுமுணுப்பாக சொல்லிக் கொண்டாள்.
காரணங்கள் இன்றி ஏனோ அந்த செல்லப் பெயர் அவளுக்கு பிடித்து போனது அவளே அறியாமல்.
ஜீவானந்தமின் அட்டகாசத்தை பார்த்த நித்யானந்தம் “என்னப்பா இதெல்லாம்” என்று அவனும் ஆரம்பிக்க, அங்கே இருந்த அனைவருக்கும் ஏன் பணியாட்களுக்கு கூட, ‘அய்யோடா’ என்று ஆகி விட்டது.
மெல்லிசையின் இரும்பல் சற்று குறைந்ததும் கையை அலம்பிக் கொண்டு தமையன் முன் வந்து நின்ற ஜீவா “என்ன இதெல்லாம்… ஹான் என்ன இதெல்லாம். ஆளு ஆளுக்கு இதே கேட்டுக்கிட்டு இருந்தா கடுப்பாகுதா? இப்போ என்ன தெரியணும் நான் ஏன் திடீர்னு கல்யாணம் பண்ணிட்டு வந்தேன்னு தெரியணுமா?” என்று கேட்ட தம்பியை நேருக்கு நேர் பார்த்து அழுத்தமாக,
“ஆமா” என்றான் நித்யானந்தம்.
ஜீவாவோ திரும்பி அங்கே கரங்களை சுத்தம் செய்து விட்டு பதற்றத்துடன் நின்று கைகளை பிசைந்துக் கொண்டு நின்று இருந்த மனைவியை நோக்கி கையை நீட்டி,
“மெலோடி இங்கே வா” என்று அழைத்தான்.
நித்யானந்தமோ “மெலோடியா?” என்றான்.
“ம் ஆமா. நான் அவளை அப்படி தான் செல்லமா கூப்பிடுவேன். அவளோட நேம் மெல்லிசை. அதுக்கு ஆங்கிலத்துல அர்த்தம் என்ன மெலோடி தானே” என்று மனைவியின் செல்லப் பெயருக்கு விளக்கம் அளித்துக் கொண்டு இருக்க,
“இப்போ இது ரொம்ப முக்கியமா?” என்று பற்களை கடித்துக் கொண்டு கேட்டாள் மோனிகா.
“பின்ன இல்லையா? உன் அக்கா புருஷன் தானே அர்த்தம் கேட்டான்” என்று அதற்கும் ஜீவா விளக்கம் அளிக்க,
“நீங்க இப்படியெல்லாம் பேசி இன்னைக்கு தான் ஜீவா தம்பி பார்க்கிறேன். நல்லா அழகா பேசுறீங்க” என்று சங்கீதா வேறு நேரம் காலம் தெரியாமல் கொழுந்தனுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்க, கடுப்பாகி போனார்கள் மோனிகாவும் பரமசிவமும்.
கோபமாக சங்கீதாவை முறைக்க, “சும்மா இரேன்டி” என்று தேவி மகளை கண்டிக்க,
“தேங்க்ஸ் அண்ணி. நீங்களும் முதல் தடவையா உங்க அப்பா முன்னாடி வாயை திறந்து பேசி இருக்கீங்க. அதுக்கு என்னோட பாராட்டு” என்று கொழுந்தனும் அண்ணியும் மாற்றி மாற்றி பாராட்டு பத்திரம் கொடுத்துக் கொள்ள, கோபமாகி போனான் நித்யானந்தம்.
மெல்லிசையோ ‘என்னயா நடக்குது இங்க?’ என்று திருதிருவென முழித்தபடி ஜீவா அருகில் நின்று இருந்தாள்.
கோவிந்தராஜோ மனைவியை நோக்கி ‘என்னடி இது’ என்று கண்களால் சின்ன மகனை காட்டி கேட்க,
‘தெரியலையேங்க’ என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அதே சாடையாலே சொன்னார்.
நித்யானந்தமோ “ஜீவா” என்று அழைக்க,
“நான் தான் சொல்லு” என்று ஜீவா மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க,
‘அட போங்கடா’ என்று ஆகி விட்டது மெல்லிசைக்கு. அவளுக்கு மட்டுமா அங்கே இருந்த அனைருக்குமே இவளின் மனநிலை தான்.
தனக்குள் உண்டான கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு “எதுக்கு இந்த அவசர திருமணம்?” என்று கேட்டான்.
“அவசரம் தேவைப்பட்டதுனால தானே இந்த அவசரம் திருமணம்” என்று சொன்னவனை முறைத்து பார்த்த நித்யானந்தம்,
“அது தான் என்ன காரணம்னு கேட்டேன்.” என்று பற்களை கடித்துக் கொண்டு கேட்டவனை நோக்கி ஒரு அடி நெருங்கிச் சென்றவன் தமையனை நேருக்கு நேர் பார்த்தான்.
அனைவரும் அதி தீவிரமாக ஜீவா கூற போகும் காரணத்தை நோக்கி ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்க, நித்யானந்தமும் தம்பியை ஆர்வத்தோடு பார்க்க,
“அது வந்து நித்யானந்தா…” என்று இழுத்த ஜீவா “அது நித்தியா” என்று ஜீவா இழுத்து சொல்ல, “நித்யானந்தம்” என்று கடுப்புடன் திருத்தினான் தான் பெயரை.
“சரி நித்யானந்தா சாமி… ச்சே ச்சே நித்யானந்தம்” என்று மீண்டும் இழுத்து சொன்ன ஜீவா பெருமூச்சு ஒன்றை விட்டு “சொல்ல முடியாது போடா” என கூறியனை நோக்கி பல கத்திகளை தூக்கி வீசி எறிவது போல் கொலை வெறியுடன் பார்த்தான் நித்யானந்தம்.
மற்றவர்களுக்கோ “அட” என்று ஆகி விட, மெல்லிசையின் மனதோ ‘ஒரு வேலை லூசா இருப்பானோ’ என்று ஜீவாவை பார்த்து நினைத்தது.
அந்நேரம் அவளை திரும்பி பார்த்த ஜீவா கண்சிமிட்டி அவள் அருகில் குனிந்து அவளுக்கு மட்டும் கேட்கும்படி “லூசு எல்லாம் இல்ல… பைத்தியம்” என்று அவள் நினைத்ததை சரியாக சொன்னவன் “சரி கடைக்கு ஒரு முக்கியமான கிளைன்ட் வராங்க. சோ நான் கிளம்புறேன். எதுவா இருந்தாலும் நைட் வந்து பேசிக்கலாம்” என்று பொதுவாக சொல்லிவிட்டு மனைவியை நோக்கி திரும்பியவன் அவள் தலையில் பாசமாக கையை வைத்து,
“பத்திரமா இரு. நைட் வந்து பார்க்கிறேன். அதுவரை ரெஸ்ட் எடு. அம்மா கூடவே இரு” என்று சொல்லி விட்டு தாயை பார்த்து கண் காட்டி “பார்த்துக்கோங்கம்மா” என்று அழுத்தமாக சொன்னவன் தந்தையிடம் “போறேன் ப்பா” என்று தலை அசைத்தான்.
அவரும் கிளைன்ட் என்றதும் “ம்” என்று தலையை ஆட்டியவர் பார்வை அங்கே தீயாக நின்று இருந்த பரமசிவம் மோனிகா மற்றும் நித்யானந்தம் மீது படிய,
தூசி போல் அவர்களை பார்த்தவன் “அப்புறம் என்ன அங்கிள் பொண்ணை கூட்டிக்கிட்டு கிளம்புறது” என்றான் நேரடியாக.
ஜீவாவின் பேச்சில் திகைத்து போன பூங்கோதை “ஜீ” என்று பேச வர மனைவியை தடுத்தார் கோவிந்தராஜ்.
தேவிக்கோ ஜீவாவின் பேச்சு என்னவோ போல் ஆகி விட, “கிளம்பலாம்ங்க” என்று கணவரை சீண்டினார்.
மனைவியை திரும்பி முறைத்து பார்த்த பரமசிவம் “என் பொண்ணுக்கு ஒரு நியாயம் கிடைக்காம எப்படி இங்கே இருந்து கிளம்புறது” என்று அவர் கேட்க,
“என்ன நியாயத்தை வாங்கி தர போறீங்க. அதான் அந்த தம்பி தெளிவா சொல்லுடுச்சில. அவங்க பாட்டிக்கிட்ட கேட்டுக்க சொல்லி. அப்போ அவர் கிட்ட தானே கேட்கணும். பதிலே சொல்ல மாட்டேன்னு பிடிவாதமா இருக்கிறவரு கிட்ட பதில் எதிர்பார்த்தா எப்படி” என்று சரியாக பேசிய தேவியை பாராட்டும் விதமாக பார்த்தான் ஜீவானந்தம்.
தேவிக்கோ இளைய மகளை விட மூத்த மகளின் வாழ்க்கை முக்கியமாக இருந்தது.
ஆனால் பரமசிவத்திற்கு அப்படி இல்லையே மூத்த மகளின் வாழ்க்கையை விட இளையவளின் ஆசை தான் கண் முன்னே தெரிந்தது அவருக்கு.
“அதுக்குனு அந்த ஆளு” என்று ஆரம்பிக்க, “பரசிவம்” என்று கோபமாக கோவிந்தராஜ் சொல்ல, “மாமா” என்று நித்யாவும் அழைக்க, “அங்கிள்” என்று ஜீவாவும் அழுத்தமாக மூவரும் ஒரே சமயம் அவரை அடக்கினர்.
