காதல்- 7

அத்தியாயம்- 7

‘அந்த ஆளு’ என்ற பரமசிவத்தின் வார்த்தை அந்த வீட்டின் தலைவர் சக்கரவர்த்தியான தயாளன் சக்கரவர்த்திக்கு மரியாதை கொடுக்காமல் பேச வந்தவரை தான் அவ்வீட்டில் இருந்த மூவரும் அடக்கினார்கள்.

பரமசிவமோ தன் மாப்பிள்ளையின் முன் நல்லவனாக காட்டிக் கொள்ள எண்ணி “மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை. ஏதோ ஒரு ஆதங்கத்துல வந்துடுச்சி. என் நிலைமையில ஒரு நிமிசம் நீங்க இருந்து யோசிச்சி பாருங்க. என் வலி புரியும். பொண்ணை பெத்தவன் மாப்பிள்ளை. உங்களுக்கும் நாளைக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா என்னோட வலி தெரியும்” என்று மகா நடிகனையே மிஞ்சும் அளவுக்கு பரமசிவம் பேச, அவரை பாவமாக பார்த்தான் நித்தியானந்தம்.

ஜீவாவோ கைகளை கட்டியவன் ஒற்றை கரத்தால் வாயில் கையை வைத்து “ப்பா மகா நடிகனையே மிஞ்சுடுவாரு போலயே” என அருகில் பலியாடாக நின்று இருந்த மெல்லிசையிடம் முணுமுணுக்க,

அவளோ ‘அதை ஏன்டா என் கிட்ட சொல்ற’ என்ற பார்வையோடு அவனை திரும்பி பார்த்தாள்.

‘அய்யோ இவன் உசரத்துக்கு நிமிர்ந்து பார்த்து நிமிர்ந்து பார்த்து கழுத்து வலியே வந்திடும் போலயே’ என பின்னங்கழுத்தை வருடிக் கொடுத்தாள்.

மோனிகாவோ அங்கே ஜீவானந்தத்தை ரசித்து பார்த்தபடி நின்று இருந்த மெல்லிசையை கடுமையாக முறைத்துக் கொண்டு இருந்தாள்.

ஆனால் பாவம் உண்மை என்னவென்று அந்த ஜீவனுக்கு தெரியாதே, அவன் உசரத்தை தான் கழுத்து வலிக்க அண்ணார்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் என்று.

நித்யானந்தம் குரலை செறுமி “மாமா எங்களை மன்னிச்சிடுங்க. ஜீவா திடீர்னு இப்படி ஊர் பெயர் தெரியாத பொண்ணை இழுத்துட்டு வருவானு” என்று ஆரம்பிக்க,

“இல்ல நித்தி மெலோடியோட ஊர் பெயர் எல்லாம் தெரியுமே” என்றவனை பொறுமை இழந்து பார்த்த நித்தியானந்தம், தம்பியை முறைத்தான்.

ஜீவாவின் வார்த்தையை கேட்ட சங்கீதாவிற்கும் மெல்லிசைக்கும் பட்டென்று சிரிப்பு வந்து விட, சிரித்தும் விட்டனர்.

நித்தியானந்தம் மனைவியை முறைக்க, கணவனின் முறைப்பில் வாயை முடிக் கொண்டாள் அவள்.

ஜீவாவோ பக்கவாட்டாக திரும்பி மெல்லிசையை பார்த்து கண்சிமிட்டிக் கொள்ள, ஏனோ இத்தனை நேரம் இருந்த அழுத்தம் இதமாக மாறுவது போல் உணர்ந்தாள் மெல்லிசை.

நித்தியானந்தம் தம்பியை நோக்கி “ஜீவா என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு” என்று பற்களை கடித்து அவன் சொல்ல,

“எது நம்ம” என்று ஆரம்பிக்க போன ஜீவாயை தடுத்தார் அவன் தந்தை கோவிந்தராஜ்.

மகனை அடக்கியவர், பெரிய மகனிடம் கண்ணை காட்ட, அவனோ கடுப்பாக தலையை ஆட்டி விட்டு, “மாமா” என்று தான் ஆரம்பித்து இருப்பான்.

ஏதோ ஞாபகம் வந்தவனாக ஜீவா அண்ணனின் கையை சுரண்ட, அதில் இமை அழுத்தமாக மூடி திறந்த நித்தியானந்தம் திரும்பி “என்ன?” என்று கோபமாக கேட்டான்.

“அது நித்தி என் மெலோடியை இழுத்துக்கிட்டு எல்லாம் வரல. பாவம் அவளை பிடிச்சி இழுத்தா அவ கை வலிக்கும்ல. சோ சொகுசா என்னோட கார்ல தான் அழைச்சி வந்தேன்” என்று சொன்னதை கேட்டு சினத்தின் எல்லைக்கே சென்று விட்டான் நித்தியானந்தம்.

இதை கேட்டு பூங்கோதைக்கே புன்னகை தோன்றி விட நாகரீகம் கருதி சிரிப்பை அடக்கியவர் கணவனை பார்த்தார்.

கோவிந்தராஜோ ‘இது தங்கள் மகன் ஜீவானந்தம் தானா?’ என்ற குழப்பத்துடன் நின்று இருக்க, மோனிகாவுக்கு கட்டுக்கடங்காத கோபம் எழுந்தது.

“போதும் ஜீவா… இத்தோட நிறுத்திக்கோங்க” என்று கத்தியவளை நோக்கி,

“எதை நிறுத்தணும்?” என்று கேட்டானே பார்க்கலாம், பூங்கோதை பக்கென்று சிரித்து விட்டார்.

சங்கீதாவோ வந்த சிரிப்பை சிரமப்பட்டு அடக்கியவள் மனம் ‘அய்யோ கொழுந்தனாரே போதும் முடியல’ என்று உள்ளுக்குள் புன்னகையுடன் சொல்லிக் கொண்டாள்.

மெல்லிசையோ ‘ஆளு பார்க்க செம மாஸா இருந்துட்டு இந்த அளவுக்கு கவுண்டர் கொடுக்கிறாரே’ என்று ஜீவாவை ஏனோ ரசனையாக தான் பார்த்தாள்.

அதற்கு மேல் அங்கே நிற்க பிடிக்காமல் பரமசிவம் “இதுக்கு மேல எங்களை அசிங்கப் படுத்த முடியாது சம்பந்தி ரொம்ப நன்றி” என்று சொன்னவர் “நீ வாம்மா” என்று மோனிகாவின் கரத்தை பிடித்துக் கொண்டவர் ஜீவாவை அதிர்ச்சியுடன் பார்த்தபடி நின்று இருந்த மனைவியை நோக்கி “ஏய் வாடி” என்று ஒரு அதட்டல் கொடுத்தவர் அங்கே புன்னகையை அடக்கிக் கொண்டு நின்று இருந்த மூத்த மகளை பார்த்தவர் “நீயும் தான்” என்றார்.

அதை கேட்டு சங்கீதா அதிர, தேவியும் பதற்றத்துடன் “அவ எதுக்குங்க?” என்று கேட்டார்.

அவர் பயந்தது இதற்கு தானே. கணவனுக்கு எப்பொழுதுமே மோனிகா தான் முக்கியம். அவளுக்கு ஒன்று என்றால் அதன் விளைவு சங்கீதாவை தான் அதிகம் தாக்கும். அதை நினைத்து தானே அவர் பயந்தது.

சங்கீதாவோ பதற்றம் நிறைந்த குரலில் “அப்பா நான்” என்று ஆரம்பித்தவளை நோக்கி,

“இங்க உன் தங்கச்சி வாழ்க்கையை கேள்விக் குறியாகிட்டு நிக்கிற குடும்பத்துல நீ வாழலாமா?” என்று கேட்டவரை புரியாமல் பார்த்தாள் சங்கீதா.

அபத்தமாக அல்லவா இருக்கிறது அவரின் வார்த்தைகள்.

‘தங்கையின் வாழ்க்கை கேள்வியாக நிற்கிறது என்றால்? அப்போ தன் வாழ்க்கை?’ என்று கேட்க துடித்த வார்த்தையை கேட்க முடியாமல் தவிப்போடு தன் கணவனை நோக்கினாள்.

நித்தியானந்தம் குழப்பத்துடன் தன் மாமனாரை பார்த்தவன், அதே குழப்பத்துடன் மனைவியை கண்டான்.

அவளோ ‘என்னை காப்பாற்றுங்களேன்’ என்று இறைஞ்சும் பார்வையை கணவனை நோக்கி அனுப்பினாள்.

ஆனால் மனைவியின் பார்வையின் அர்த்தத்தை புரிந்துக் கொள்ள தான் அந்த கணவனால் முடியவில்லை.

பூங்கோதை தவிப்பாக “என்னங்க” என்று கணவனை காண, அவரோ தன் மூத்த மகன் போல் இல்லாமல் மனைவியின் ஒரு சிறு கண்ணசைவை புரிந்துக் கொண்டு ‘நான் பார்த்துக் கொள்கிறேன்’ என மனைவி பார்வையாலே சமாதானப்படுத்தியவர் பரமசிவத்தை நோக்கி “என்ன சம்பந்தி இது. சங்கீதாவை ஏன் கூப்பிடுறீங்க?” என்று கேட்டார் கோவிந்தராஜ்.

“என் பொண்ணை நான் அழைச்சிட்டு போறேன். இதை கேட்க யாருக்கு உரிமை இருக்கு?” என்று திமிராக பதில் அளித்தவரை நோக்கி,

“இப்போ இவங்க உங்க வீட்டுப் பெண் இல்லையே அங்கிள்? இந்த வீட்டு மூத்த மருமகள்” என்றான் ஜீவானந்தம்.

கணவன் தனக்காக பேசவில்லையே என்ற பரிதவிப்போடு நின்று இருந்த சங்கீதாவிற்கு ஜீவானந்தம் அவளுக்காக பேச, அவனை நன்றியோடு பார்த்தாள் சங்கீதா.

பரமசிவமோ “அதான் எங்க வீட்டு உறவு வேணாம்னு எவளோ ஒருத்தியை அழைச்சி வந்து நடு வீட்ல நிக்க வச்சி இருக்கீங்களே. அப்படி இருக்க, என் மூத்த பொண்ணு மட்டும் உங்களுக்கு உறவா வேணுமா?” என்று தான் என்ன செய்கிறோம் என்று தெரிந்தே செய்தார் அவர்.

அவருக்கு தன் இளைய மகளின் வாழ்க்கை தான் முதன்மையாக இருந்தது. அதற்காக மூத்த மகளின் வாழ்க்கையை பணயமாக வைக்க நினைத்தார்.

ஜீவாவோ “அங்கிள் என் மெலோடியை இதுல இழுக்காதீங்க. என்னை நம்பி வந்த என் பொண்டாட்டியை நடு வீட்ல நிக்க வைக்காம நடு ரோட்லயா நிக்க வைக்க முடியும். இல்ல மனைவிக்காக பேசாத என் அண்ணனை போலவா சும்மா இருக்க முடியும்” என்று நித்தியானந்தத்தை இழுத்து உள்ளே விட்டான்.

இதுவரை மனைவிக்காக பேசாதவன் தன்னை இழுத்ததும் “என்னை எதுக்கு இதுல இழுக்குற? அவரோட பொண்ணை அவர் கூப்பிடுறாரு. அதனால உனக்கு என்ன வந்தது. போறதும் போகாம இருக்கிறதும் அவ இஷ்டம். இதுல வேற யாருக்கும் தலையிட உரிமை இல்லை” என்று சொன்ன நித்தியானந்தம் அதற்கு மேல் அங்கே நிற்க பிடிக்காமல் தனதறையை நோக்கிச் சென்றான்.

கணவனின் வார்த்தையில் அப்படியே உறைந்து போய் நின்று விட்டாள் சங்கீதா.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page