அத்தியாயம்- 11
ஒரு சிறிய கிராமத்தில் தந்தை நடராஜன் மற்றும் தாய் குமுதவள்ளிக்கு ஒரே பெண்ணாக பிறந்தவள் தான் இந்த மெல்லிசை.
ஒரே மகள் என்பதாலோ என்னவோ வழக்கமான பெற்றோர்கள் போல் நடராஜனும் குமுதவள்ளியும் அவளுக்கு அளவுக்கு அதிகமாகவே பாசத்தை காட்டி வளர்த்தனர்.
ஆனால் பாசத்தை மட்டும் கொடுக்காமல், நல்ல பண்பு,ஒழுக்கம்,படிப்பு என்று அனைத்தையும் கற்றுக் கொடுத்தே வளர்த்திருந்தனர்.
தங்களால் படிக்க முடியாத படிப்பை மகளுக்கு கொடுத்ததை நினைத்து அந்த தந்தைக்கு பெருமிதம் ஜாஸ்தி.
அதனாலோ என்னவோ அவளுக்கு பிறவியிலே தைரியம் அளவுக்கு அதிகமாகவே இருந்தது. ஊரில் தனக்கு நெருக்கமானவர்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக போய் அவர்களுக்காக நிற்பாள் மெல்லிசை.
இப்படி தாய் தந்தை தன்னோட கிராமம் என்று வாழ்ந்து வந்தவளுக்கு அடுத்து வேலைக்குச் செல்ல வேண்டும் என்று கொள்ளை ஆசை. தந்தை தங்களுக்காக கூலி வேலை செய்து கஷ்டப்படுவதை கண்டு வேதனையாக இருக்கும் அவரின் ஆசை மகளுக்கு. தன்னால் தன் தந்தைக்கு எந்த உதவியும் செய்ய முடியவில்லையே என்ற கோபம் அவள் மீதே அவளுக்கு எப்பொழுதுமே உண்டு.
இதில் அவளுக்கு அடுத்து திருமண பேச்சு வேறு குமுதவள்ளி எடுக்க, அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாதவள்,
“அப்பா எனக்கு இப்போ கல்யாணம் எல்லாம் வேணாம்ப்பா” என்று சிறுப்பிள்ளை போல் அடம்பிடித்தவளிடம்,
குமுதவள்ளி “எந்த வெட்டி பையனையாவது விரும்புறீயாடி?” என்று விளக்குமாறை கையில் எடுத்தார்.
என்ன தான் ஊருக்கே பருப்பானாலும் வீட்டுக்கு துடைப்பம் தானே. அந்த நிலையில் தான் இப்போ மெல்லிசை இருந்தாள்.
அதை கண்டு அவளுக்குள் ஒரு உதறல் எடுக்க, “அம்மா நான் நடராஜன் பொண்ணாக்கும். அப்படியெல்லாம் ஒரு வெட்டி பையனை கட்டிக் கொடுக்க சொல்லி வந்து நிக்க மாட்டேன். அப்படி ஒருவேளை கேட்டாலும் இந்த ஜில்லாவுக்கே ராஜாவா இருக்கிறவனை தான் கட்டிக் கொடுக்க சொல்லி கேட்பேன்.” என்று பட்டென்று ஒரு லோடு ஐஸ் வண்டியையே அவள் தந்தையின் தலையில் வைக்க, அதில் உருகியவர், மனைவியை அதட்டினார்.
“ஏய் கூறு கெட்டவளே என் மவள பார்த்து என்னடி பேச்சு இது? என் பொண்ணு வைரம்டி. அதை உரசி பார்க்கலாமா?” என்று திட்டியவர், “ஆமா கண்ணு நீங்க ஏன் கல்யாணம் வேணாம் சொல்றீங்க?” என்று பாசமாக மகளின் தலையை வருடிக் கொடுத்து கேட்டார்.
மெல்லிசையோ சற்று தயங்கி, “அப்பா அது ஒன்னும் இல்லைங்கப்பா. எனக்கு ஒரு கம்பெனியில பெரிய வேலைக்கு போகணும்னு ஆசைங்கப்பா. கொஞ்ச நாள் டவுனுக்கு போய் வேலை பார்த்துட்டு அப்புறம் நீங்க எந்த மாப்பிள்ளையை கை காட்டுறீங்களோ அந்த மாப்பிள்ளையை கட்டிக்கிறேன்ப்பா” என்று கெஞ்சும் குரலில் பேசினாள் மெல்லிசை.
அதை கேட்டு அவள் தந்தை பேசும் முன் எகிறிக் கொண்டு வந்தார் குமுதவள்ளி.
“அடி சிறுக்கி மவளே… பொட்ட புள்ளையா அடக்க ஒடுக்கமா இல்லாம வெளியே போகணுமாமே… எதுக்கு இந்நாரு மவ ஊர் சுத்துனவனு உங்க அப்பனை அசிங்கப்படுத்த நினைக்கிறீயோ” என்று மீண்டும் விளக்குமாறை கையில் எடுத்தார்.
தாயின் செய்கையில் பயந்தவள் தந்தையின் முதுகு பின் தன்னை மறைத்துக் கொண்டு, “அப்பா” என்றாள் இறைஞ்சும் குரலில்.
நடராஜனோ இதுவரை ஆசை மகள் எது கேட்டும் இல்லை என்று மறுக்காதவருக்கு இப்பொழுது ஏனோ ஒரு வித தடுமாற்றம்.
அவள் கேட்பது ஒன்றும் பொம்மையோ இனிப்பு மிட்டாயோ இல்லையே. வேலைக்கு போக வேண்டும் என்றல்லவா கேட்கிறாள்.
மகளை ஊர் பெயர் தெரியாத இடத்திற்கு அனுப்பி வைத்து விட்டு எப்படி தன்னால் இங்கே நிம்மதியாக இருக்க முடியும் என்று தயக்கம் உருவாக, அதை எண்ணி யோசித்தார் நடராஜன்.
இன்றும் பல பெண்கள் தங்களின் கல்வி, திறமை, கனவு இவை எல்லாம் உயிரோடு இருக்கும் போதே மௌனமாக புதைக்கப்படுகிறது.
பெண்ணுக்கு வீடு தான் உலகம் என்ற பழைய சொல்லை சங்கிலியாகவே கட்டி, அவர்களுக்கு வானில் பறக்கத் தெரியும் முன்னே இறக்கைகளை முறித்து விடுகிறார்கள். சமையலறை புகையிலும், கதவுகளின் பின் உள்ள நிழலிலும், தன்னுடைய பெயரை உருவாக்க ஆசைப்படும் எத்தனை பெண்கள் மாட்டிக்கிடக்கிறார்கள் என்பதை யாரும் அறிய முற்படவில்லை.
அவர்களின் குரலுக்கு மதிப்பில்லையென்று அல்ல. கேட்க விரும்பாத சமுதாயம் இந்த தான் குறை. தங்கள் வாழ்க்கையை தாங்களே தேர்வு செய்ய வேண்டிய பெண்.
மற்றொருவரின் வாழ்க்கைக்குள் விருப்பமே இன்றி தள்ளப்பட்டு இதுதான் உன் பாதை. இது தான் உன் வாழ்க்கை என்று சொல்லில் அந்த வாழ்க்கைக்குள் திணிக்கப்படுகிறாள்.
அவளின் இதயம் சொல்லாத பல கதைகள் அங்கேயே தங்கிவிடுகின்றன.
ஆனால் ஒரு உண்மை மட்டும் மாறாது ஒரு பெண்ணை வீட்டுக்குள் அடைத்து விட்டால் அவள் மங்கி விட மாட்டாள்.
மாறாக, அவளுள் உருவாகும் மௌன மொழி, ஒருநாள் வீட்டின் கதவுகளை உடைத்து வெளிச்சத்துக்கு வருவதற்காகவே காத்திருக்கும்.
ஒரு பெண்ணின் மறைக்கப்பட்ட திறமை வெளிவந்தால், மாற்றம் சமூகத்தில் தான் முதலில் நடக்கும். ஆனால் அந்த மாற்றத்தைக் கூட காண விருப்பம் இல்லாமல் அவர்களை இன்று கூட வீட்டின் சுவர்களுக்குளே அடைத்து வைக்கிறார்களே என்ன சொல்ல?
மனைவி மகளை அடிக்க ஆவேசமாக வருவதை கண்டு, “அடியே நிறுத்துடி. என்ற மவ மேல ஒரு அடிப்பட்டாலும் உன்னை உன் அப்பன் வீட்டுக்கு விரட்டி விட்டுடுவேன் பார்த்துக்கோ” என்று நடராஜன் மிரட்ட, அடிக்க வந்த குமுதவள்ளி கணவனின் பேச்சில் அப்படியே நின்று விட்டார்.
அவருக்கு தெரியாதா கணவன் சொன்னதை செய்பவர் என்று. அதனாலே மகளை முறைத்துக் கொண்டு அப்படியே நின்று விட்டார்.
அதை கண்ட மெல்லிசைக்கு தாயை கண்டு பாவமாக இருந்தாலும், அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் பழிப்பு காட்டி விட்டு தந்தையின் பதிலை எதிர் நோக்கி காத்திருந்தாள்.
அவரோ பலத்த சிந்தனைக்கு பின் ஏதோ பேச வர சட்டென்று அவரை தடுத்த மெல்லிசை “அப்பா ஒரு நிமிசமுங்கப்பா” என்றவள் அவருக்கு முன் வந்து தந்தையின் கரத்தை பிடித்துக் கொண்டு “அப்பா உங்க பொண்ணு மேல முழுசா நம்பிக்கை இருந்தா மட்டும் என்னை அனுப்புங்கப்பா. உங்களுக்கு என் மீது நம்பிக்கை இல்லனா வேணாமுங்கப்பா. நீங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்கப்பா. கல்யாணம் பண்ணி அம்மா போல அடுப்புகட்டே கதினு இருக்கேன்” என்று மூக்கு உறிஞ்சி பேசிய மகளின் வார்த்தையில் குமுதவள்ளியே வாயடைத்து போனார் என்றால் நடராஜனை பற்றி சொல்லவா வேண்டும்.
மகள் பேசியதை கேட்டு துடித்து போன அந்த பாசமிகு தந்தை “என்னங்க அம்மணி இப்படிலாம் பேசுறீங்க. உங்களை அடுப்படில வேலை செய்ய தான் பெத்து வளர்த்து படிக்க வச்சேனா” என்றவருக்கு நினைவு இல்லை போல் அவர் மனைவியும் இதே நிலையில் தான் இருக்கிறார் என்று.
“என்ற மவ எதுக்கு அடுத்தவன் வீட்ல போய் கஷ்டப்படணும். அவ ராணியாக்கும். உங்களுக்கு புடிச்சதை நீங்க பண்ணுங்க தங்கம். ஆனா ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் மெல்லிசை” என்றார்.
மெல்லிசை தந்தை சம்மதம் சொல்லியதும் உற்சாகம் அடைந்தவள் “சொல்லுங்கப்பா. நீங்க சொல்றதை தட்டாம செய்யுறேன்” என்ற வாக்கு கொடுக்க,
அவரோ “நீங்க என்ன வேலைக்கு தானே போகணும் அம்மணி?” என்று கேட்க, அவளும் ஆமாம் என்று தலையை ஆட்ட, “சரிங்கம்மா, நீங்க ஆசைப்பட்டது போல வேலைக்கு போங்க. ஆனா அது உங்க அத்தை வீட்ல இருந்து போங்க” என்று சொன்னதை கேட்டு புரியாமல் அவள் பார்க்க.
அவரோ “அதான்ங்கம்மா டவுன்ல இருக்கிற என்ற தங்கச்சி வீட்ல இருந்து போங்க. உங்க அத்தைக்கு நீங்கன்னா இஷ்டம் அம்மணி. அது மட்டுமில்லை அவ பையனுக்கு உங்களை தான் கட்டி வைக்கணும்னு வேற ஆசை தங்கம். அதனால இது ஒரு நல்ல சந்தர்ப்பமா எடுத்துட்டு நீங்களும் மாப்பிள்ளை பத்தியும் நல்லா தெரிஞ்சிக்கலாம் பாருங்க. அவங்களுக்கும் உங்களை பத்தி தப்பா பேச ஏதும் இருக்காது பாருங்க. இந்த சினிமாவுல எல்லாம் இப்போ இது போல தானேங்க பண்றாங்க. கட்டிக்க போறவங்க ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சிட்டு அப்புறம் கல்யாணம் பண்றது” என்று பேசிய தந்தையை பார்த்து பேச்சற்று தான் போனாள் மெல்லிசை.
இதை கேட்ட குமுதவள்ளி “என்னங்க இது” என்று பேச வர,
“எப்படியோ தங்கச்சி வீட்டுக்கு தானே மருமகளா போக போறா. அதனால முன்னாடியே போய் தங்கி அவங்களை தெரிஞ்சிக்கிறது தப்புயில்லையே குமுதா” என்று மனைவியை அடக்கியவர் மகளை பார்த்தார்.
மெல்லிசையோ தந்தை சம்மதம் சொல்லியதே பெரிய விஷயம் என்று நினைத்தவள் அரைமனதாக சரி என்று ஒப்புக் கொண்டாள்.
அதன் பின் என்ன நடராஜன் தன் தங்கைக்கு தகவல் சொல்ல, அவரோ “வேலைக்கு போகணுமா? இது என்னண்ணா புதுசா இருக்கு. நம்ம வூட்டுல எந்த காலத்துல அண்ணா பொம்பளைங்க வேலைக்கு எல்லாம் போய் இருக்கோம்” என்று காட்டமாகவே கேட்டார்.
பின்னே இருக்காதா, அண்ணனின் மகளை தன் மகனுக்கு கட்டி வைத்து அழகு பார்க்க நினைத்தவர் ஆயிற்றே. அப்படி இருக்க, அவர் வீட்டுக்கு வர போகும் மருமகள் வேலைக்குச் செல்வது என்றால் அவரால் ஏற்றுக் கொள்ள முடியுமா என்ன?
தங்கையின் கேள்வியில் சற்று தடுமாறி நடராஜன் “இல்லங்க அம்மணி பாப்பா ஆசைப்படுது. இதுவரை மவ ஆசைபட்டு கேட்டு நான் இல்லனு சொன்னதில்லைங்க தங்கம். அதான் வேலைக்கு போறேன்னு சொன்னதும் உன் வீட்டு மருமவ உன் மேல் பார்வையிலிருந்து வேலைக்கு போகட்டும்னு தான் இந்த முடிவு” என்று அப்படி இப்படி என தங்கையை சமாதானம் செய்து அரைமனதாக சம்மதிக்கவும் வைத்திருந்தார்.
