அத்தியாயம் – 2

சிறு தூரம் கூட சென்று இருந்து இருக்க மாட்டான் அவன். சடன் பிரேக் போட்டு அப்படியே நின்றவன் விழிகள், முன் கண்ணாடி வழியாக அங்கே மழையில் நனைந்தபடி குருதி வழிய பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பவளை அழுத்தமாக பார்த்தான். ஏனோ அவன் மனம் வெறுப்பாக இருந்தது. இவனின் இந்த இரக்க குணத்தை அடியோடு வெறுத்து போக நினைத்தவனுக்கு மீண்டும் யாரென்றே தெரியாத ஒருத்தியின் மீது இரக்கம் பட வைத்தது.

அப்படியே இமைகளை மூடி இருக்கையில் சாய்ந்தவன் மூளை ‘இங்கே இருந்து போய் விடலாம்’ என்று கட்டளையிட

மனமோ ‘ஒரு உயிர் இல்லை இரு உயிர் இன்னும் இந்த உலகத்தை கூட பார்க்காமல் அந்த உயிர் அப்படியே மேலுலகம் சென்று விட வேண்டுமா?’ என்று கேட்க மழை வேகம் எடுப்பதை பார்த்து சலிப்பாக காரை பின்னால் எடுத்தவன் அவள் அருகில் நிறுத்தி விட்டு காரிலிருந்து இறங்கி அவளை தூக்க முயன்றான்.

அதிகம் எடைக் கொண்ட பெண்ணவளை அவன் ஒருவனால் சட்டென்று தூக்கி விட முடியவில்லை. மழை வேறு மேலும் அதிகரிக்க, மூச்சை உள்ளே இழுத்து தம்கட்டி அவளை தூக்கி பின்னிருக்கையில் கிடத்தியவன் “அய்யோ இடுப்பு போச்சே” என்று கதவை சாத்திக் கொண்டே ஒற்றை கையை இடுப்பில் வைத்து நெட்டி முறித்தான்.

“நல்லா மாடுக்கணக்கா தின்னுவா போல. இந்த கனம் கனக்குறா. எப்படியும் ஒரு எண்பது கிலோவாவது இருப்பா போல” என்று புலம்பிக் கொண்டே காரை எடுத்துக் கொண்டு அதிவேகமாக அங்கே இருந்து பறந்தான் அவன்.

அந்த ஊர் அருகில் அவசரத்திற்கு மருத்துவமனை வசதி கூட இல்லாமல் போக, கடுப்பானவன் “ச்சைக் என்ன ஊரு இது. ஒரு எமர்ஜென்சிக்கு ஹாஸ்பிடல் கூட இல்லை” என்று திட்டிக் கொண்டே எல்லையை கடந்து சிட்டிக்கு வந்தவன் கண்ணில் ஒரு மருத்துவமனை விழ, காரை அந்த மருத்துவமனை நுழைவாயிலில் விட்டான்.

பின் காரின் கதவை திறந்தவனுக்கு தானாகவே இடுப்பு வலி வந்து ஒட்டிக் கொள்ள, “அய்யோ இவளை தூக்கினா என் இடுப்பு எலும்பெல்லாம் உடைஞ்சிடும் போலவே” என்று இரண்டடி பின்னால் சென்று “உப்…” என காற்றில் ஊதிவிட்டு, அங்கே வந்த செவிலியரிடம் காரில் அடிப்பட்டு ரத்தம் வழிந்துக் கொண்டு இருப்பவளை காட்டி கர்னியை(ஸ்ட்ரெச்சர்) எடுத்து வர சொன்னான்.

செவிலியரும் அவளின் நிலையை பார்த்து விட்டு பதறி போனவள் “சார் அவங்களுக்கு பனிகுடம் உடைஞ்சிடுச்சு சார். சீக்கிரம் தூக்கி ஸ்ட்ரெச்சர்ல வைங்க” என்று அவன் பக்கத்தில் கர்னியை தள்ளி வைக்க,

அவனோ “யம்மா என்னால தூக்க முடியலனு தானே உங்கள கூப்பிட்டேன். போய் கம்பவுண்டர் யாராவது இருந்தா அழைச்சி வாங்க. ஒன்னா தூக்கி வைப்போம். அரிசி மூட்டையை விட செம வெயிட்டா இருக்கா” என்று அந்த நிலையிலும் மனசாட்சியே இல்லாமல் அவளை திட்டிக் கொண்டு இருந்தான் அவன்.

அந்ந செவிலியரோ பதற்றத்திலும் அவனை முறைத்து விட்டு உள்ளேச் சென்று இரண்டு ஆட்களை அழைத்து வந்தவள், மெதுவாக காரினுள் மயங்கி இருந்தவளை தூக்கி கர்னியில் படுக்க வைத்து அவசரபிரிவுக்கு அழைத்துச் சென்றார்கள்.

அதை பார்த்தவனோ “ஸ்ப்பா… நம்ம கடமை முடிஞ்சுது” என்று சொல்லிக் கொண்டே காரின் கதவை திறக்க போக, அப்பொழுது அருகில் வந்த மற்றொரு செவிலியர் “சார் சீக்கிரம் வாங்க உங்க வைஃப்க்கு பிலீடிங் ரொம்ப அதிகமா போய் இருக்கு” என்று அவனை உள்ளே வர வற்புறுத்தினாள்.

அவனோ “ஏதே அந்த பூரி சாம்பார் என்னோட” என்று ஏதோ சொல்ல வர, அதற்குள் உள்ளே இருந்து அவசரமாக வெளியே ஓடி வந்த கம்பவுண்டர், “அக்கா இவரோட காரிலிருந்து தூக்கிட்டு போனோமே அந்த பொண்ணுக்கு பெரிய ஆக்சிடென்ட் நடந்து இருக்காம்.  உடல் முழுக்க அடிப்பட்டு இருக்கு. பிழைக்கிறதே கஷ்டமாம். குழந்தையையாவது காப்பாத்திடணும்னு சொல்றாங்க. அதுக்கு அந்த அம்மாவோட புருஷன் கையெழுத்து வேணுமாம். பெரிய டாக்டர் இந்த ஃபார்ம்ல சைன் வாங்கிட்டு வர சொன்னாரு. சீக்கிரமா வர சொல்லி இருக்காரு.  இல்லனா வயித்துல இருக்கிற குழந்தைக்கு தான் ஆபத்தாம். அப்படியே போலீஸ்க்கு இன்பார்ம் பண்ண சொன்னாங்க” என்று மூச்சே விடாமல் பேசியதை கேட்டவனுக்கு பேச்சே இல்லை.

‘ஒரு கர்ப்பிணி பெண்ணை குடி போதையில் ஆக்சிடென்ட் நம்ம தான் பண்ணோம்னு தெரிஞ்சா நம்மளை புடிச்சி கம்பி எண்ண வச்சிடுவானுங்களே. இப்போ என்ன செய்யுறது’ என்று தீவிரமாக யோசித்தவன் மனமோ ‘ஒரு குழந்தையை காப்பாத்துறதுக்கு நீ அப்பாவா மாறி சைன் பண்றதுல தப்பு இல்லை. நீ தானே அந்த பொண்ணு சாக போறது காரணம். அட்லீஸ்ட் அந்த குழந்தையாவது காப்பாத்து’ என்று கட்டளையாக சொல்ல,

வழக்கம் போல் மூளையோ ‘சைன் போட்டு காலம் முழுக்க அந்த குழந்தைக்கு ஆயா ச்சைக் ஆயா கூட சொல்ல முடியாது தாத்தா வேலை பார்க்க போறீயா? எவனோ ஒருத்தனோட பிள்ளைக்கு நீ உன்னோட இன்ஷியல் கொடுக்க போறீயா?’ என்று மல்லுக்கு நிற்க,

செவிலியரை பார்த்து “நான் வேற யாரையாவது சைன் போட சொல்றேன்” என்று சொன்னவனிடம்,

“இது போல ஆப்ரேஷனுக்கு எல்லாம் ஹஸ்பண்ட் சைன் தான் சார் எங்க ஹாஸ்ப்பிட்டல வாங்குவோம்” என்று கூறினார்.

அதை கேட்டு மீண்டும் மனமோ ‘அது ஒரு பிஞ்சி குழந்தை. அந்த குழந்தைக்காக தானே இப்போ நீ அந்த பொண்ணை ஹாஸ்ப்பிட்டல் வரை அழைச்சி வந்த’ என்று மூளையும் மனமும் சண்டை போட்டுக் கொண்டு இருக்க,

அதற்குள் அருகில் இருந்த செவிலியரோ அவன் கரத்தில் ஆப்ரேஷனுக்கு உண்டான ஃபார்மை திணித்து “சீக்கிரம் சார் டீடைல்ஸ் ஃபில் பண்ணி சைன் போடுங்க” என்று துரிதப்படுத்தினாள்.

அவனோ இருக்கரத்தாலும் முகத்தை ஆழ்ந்து துடைத்தவன் வானத்தை பார்த்து “ஊப்…” என்று ஊதினான்.

பின் என்ன நினைத்தானோ அவனுக்கே தெரியவில்லை. அந்த படிவத்தை வாங்கிக் கொண்டே உள்ளேச் சென்றான்.

மருத்துவமனை வரவேற்புக்கு வந்தவன் ஒரு பேனாவை வாங்கி அந்த படிவத்தில் நிரப்ப தொடங்கினான்.

ஆரம்பமே நோயாளியின் பெயர் இருக்க, அவளின் பெயர் தெரியாததால் என்ன பெயர் எழுதுவது என்று தெரியாமல் சற்று தயங்கியவனின் பார்வை மேலே உயர அங்கே அனைவரையும் நேசியுங்கள், என்ற வசனம் இருக்க, அருகில் ஒரு பெரியவர் படத்தில் மல்லி பூ மாலை மாட்டப்பட்டு இருப்பதை பார்த்தவன்,

நோயாளியின் பெயர் என்ற இடத்தில் ‘நேசமல்லி’ என்று எழுதினான். அவனுக்கு பிடித்த பெயரும் அது. பின் வயது, முகவரி என்ற இடத்தில் அவன் இஷ்டத்துக்கு கிறுக்கி வைத்தவன் மனம் கைப்பேசி என்னும் இடத்தில் அவனின் அலைப்பேசியின் எண்களையே எழுத வைத்தது. அதன் பின் கடைசியாக கணவர் என்று கையெழுத்துயிடும் இடத்தை கண்டு ஒரு கணம் தயங்க,

அருகில் இருந்த செவிலியரோ, “சார் சீக்கிரம்” என்று அவசரப்படுத்த பெருமூச்சு ஒன்றை விட்டு விட்டு கணவர் என்ற இடத்தில் அவனின் பெயர் “உத்தமன்” என்று எழுதி கையெழுத்து போட்டான் உத்தமன்.

படிவத்தை நிரப்பி முடித்ததும் செவிலியரிடம் நீட்ட, அவளோ “ஆப்ரேஷனுக்கு தேவையான பணத்தை கட்டிடுங்கள் சார்” என்று கூறிவிட்டு விறுவிறுவென அங்கே இருந்து நகர்ந்தாள்.

அதை கேட்ட உத்தமனோ “என்னது பணம் கட்டணுமா? யார் பணத்தை யாருக்கு கட்டுறது. என்னால எல்லாம் ஒரு நயா பைசா கூட கட்ட முடியாது” என்று அவன் சொல்லி முடித்த பத்து நிமிடத்தில் வேறு வழியே இல்லாமல் கடுகடுவென நேசமல்லிக்கு தேவையான சிகிச்சைக்கான பணத்தை மொத்தமாக கட்டி இருந்தான்.

அதில் கடுப்பானவன் கார் பார்க்கிங் சென்று அவன் ஓட்டி வந்த காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி “எவனோ ஒருத்தன் கிரிக்கெட் விளையாடிட்டு போவான். அதை சுத்தம் பண்ண நான் பலியாடு ஆகணுமா? சம்பாதிச்ச காசு எல்லாம் எவன் பொண்டாட்டி புள்ளைக்கோ செலவு பண்ண நான் ஒன்னும் அவவ்ளவு நல்லவன் இல்லடா உத்தமன். இந்த உத்தமன் எதையும் இலவசமா செய்ய மாட்டான். வட்டியும் முதலுமா வாங்கிட்டு தான் விடுவான்” என்று யாருமற்ற அந்த கார் பார்க்கிங்ல் கத்தியவன் ஒரு சிகரெட்டை ஊதி தள்ளிவிட்டு முகத்தை நீரால் கழுவிக் கொண்டு மருத்துவமனைக்குள் சென்றான்.

அது சற்று பெரிய மருத்துவமனை என்பதால் உடனே அவளுக்கு தேவையான மருத்துவம் பார்க்க, அடுத்த ஒரு மணி நேரத்தில் குழந்தையை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தவர்கள் நேசமல்லிக்கு தேவையான சிகிச்சைகளையும் செய்ய ஆரம்பித்தனர்.

கிட்டத்தட்ட பல மணி நேரம் சிகிச்சைக்கு பிறகு அந்த ஆப்ரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே வந்த பெரிய மருத்துவர் “அந்த பேஷண்டோட ஹஸ்பண்ட் எங்கே?” என்று கேட்டுக் கொண்டே நடந்தார்.

அப்பொழுது அருகில் வந்த செவிலியரோ “அதோ அங்கே சேர்ல தூங்கிட்டு இருக்காரு டாக்டர்” என்று விரல் நீட்டி காட்ட,

அதை கேட்டு “வாட் தூங்கிட்டு இருக்காரா? அவரோட வைஃப்க்கு எவ்வளவு பெரிய ஆப்ரேஷன் நடந்து இருக்கு. பிழைப்பாங்களானு தெரியாதவங்களை நம்ம கஷ்டப்பட்டு காப்பாத்தி இருக்கோம். ஆனால் அதை பத்தி கொஞ்சம் கூட கவலை இல்லாமல் தூங்கிட்டு இருக்காரு” என்று சொல்லிக் கொண்டே அங்கே நான்கு பேர் அமர கூடிய நாற்காலியில் கால்களை நீட்டி கையை இரண்டும் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு வாயை நன்றாக திறந்து குறட்டை விட்டு உறங்கிக் கொண்டு இருப்பவனை கண்டு கடுப்பாகி தான் போனார் அவர்.

இதுவரை அறுவை சிகிச்சை பிரிவிலிருந்து வெளியே வரும் மருத்துவரிடம் அந்த நோயாளிகளின் உறவினர்கள் என்ன குழந்தை, குழந்தை எப்படி இருக்கு என்று கேட்டு கையெடுத்து கும்பிட்டு கதறியபடி நன்றிகளை கூறியோ, இல்லை அவர்களை எப்படியாவது காப்பாற்றும்படி என்று கேட்டு தான் பார்த்திருக்கிறார். முதல் முறை தன் மனைவியையும் குழந்தையையும் அவ்வளவு ஏன் என்ன குழந்தை பிறந்து இருக்கிறது என்று கூட கேட்காமல் அதை பற்றி சிறிதும் கவலைக் கொள்ளாமல் நன்றாக உறங்குபவனை இப்பொழுது தான் காண்கிறார்.

அதற்குள் கம்பவுண்டர் உத்தமன் அருகில் சென்று அவனை எழுப்ப, அவனோ “உச்” கொட்டி அவன் கையை தட்டி விட, மீண்டும் அவனை எழுப்ப, உத்தமனோ “அடிங், நானே இரண்டு நாளா சரியா தூங்கல. இங்க ஏசி வருதுனு கொஞ்சம் கண்ணை மூடினால் அதுக்குள்ள வந்து எழுப்பி விடுற” என்று திட்டிக் கொண்டே எழுந்து அமர்ந்தவன் கால்கள் வேறு பரப்பிக் கொண்டு இருந்தது.

அவனை பார்த்தாலே பக்கா லோக்கல் போல் தெரிய, முகத்தை சுழித்த டாக்டரோ தன் கடமையையாற்ற எண்ணி “உங்களுக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கு. உங்க வைஃப்பை எப்படியோ காப்பாத்திட்டோம். ஆனால் இன்னும் கண்ணு முழிக்கல. தலையில் பெரிய அடிப்பட்டு இருக்கிறதால கோமாக்கோ இல்ல பழசை மறக்கவோ சான்ஸ் இருக்கு.  எதுவா இருந்தாலும் அடுத்து இருபத்தி நான்கு மணி நேரம் கழித்து தான் எதுவா இருந்தாலும் சொல்ல முடியும்” என்று அவர் சீரியஸ் ஆக பேசிக் கொண்டு இருக்க, அவனோ தூக்க கலக்கத்தில் கொட்டாவி விட்டானே பார்க்கலாம்.

அவ்வளவுதான் மருத்துவரே கடுப்பாகி விட்டார். அதற்கு மேல் அவனோ “சரி குட் நைட். இந்த ஹாஸ்ப்பிட்டல நல்லா தூக்கம் வருதுப்பா” என்று கூறிவிட்டு அதே போல் மீண்டும் படுத்து விட, மருத்துவருக்கு கோபம் தலைக்கேறியது.

ஆனாலும் அது மருத்துவமனை என்பதால் அமைதியாக அங்கே இருந்து சென்று விட்டார்.

அவர்கள் போனதை உணர்ந்தவன் “எந்த குழந்தை பிறந்தா எனக்கென்ன வந்துச்சி. அதோட அப்பன் கிட்ட போய் சொல்லுங்கடா” என்று இமைகளை மூடியபடியே சாதாரணமாக கூறினான் உத்தமன்.

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!