அசுரன்-11

காதலின் பிடியில் சிக்கித் தவிக்கும் அந்த பனி அரக்கன், மங்கை தேகம் தீண்டிய நொடிதனில் வெந்து தணலாகினான். அவன் தேகங்கொண்ட தீயின் அளவை, மூச்சுக் காற்றே முன்னுணர்த்தியது பூவையவளுக்கு.

 

“ஆ…” என்று கத்திக்கொண்டே விழுந்த வேகத்தில் எழுந்து நின்றாள் அவள்.

 

“என்னடி? என்ன பண்ணுற?.. இங்கிருந்து தப்பிச்சுப் போக சாவிய தேடுறயா?” என்று சடுதியில் பேச்சை மாற்றியிருந்தான் ஜோ..

 

பதறிப்போனவள், “ஐயோ இல்ல.. நான் துப்பாக்கியால உன்ன சுட்டேன்ல? அந்த காயத்துக்கு மருந்து எதும் போடலயே, இப்ப அது எப்படி இருக்குன்னு பார்க்க வந்தேன். உண்மையிலேயே நான் உன்ன சரியா சுட்டேனா இல்லையா? எனக்கே சந்தேகமாக இருக்குது…” என்று அங்கிதா கூற..

 

“வேணும்னா இன்னொருதடவ சுட்டு பாரு..” என்றான் ஜோ.

 

அங்கிதா ஹி.. ஹி.. என கேவலமாய் சிரித்தபடி, “அப்ப நான் உன்ன சுடவே இல்லையா?..” என்றாள்.

 

ஜோ தன்னுடைய கையிலிருந்த காயத்தைத் தூக்கி அவள் முகத்தின் முன் காட்டினான். அங்கிதா அதனைப் பார்த்துப் பதறித்தான் போனாள். 

 

கையில் துளைத்திருந்த குண்டினை வெளியே எடுத்துப் போட்டுவிட்டு, அதை மூட முட்களைக் கொண்டு தன்னுடைய கைக் காயத்தைத் தைத்திருந்தான் ஜோ.

 

“ஐயயோ… டேய் தடிமாடு, உனக்கு என்ன அறிவே இல்லையா?… என்ன செஞ்சு வச்சிருக்க? அதுசரி, இவ்வளவு பெரிய காயத்தோடவா ஆத்துல குதிச்ச?…” என்று அங்கிதா ஆர்ப்பாட்டம் செய்ய, அவனோ அவள் காட்டும் அக்கறையில் நெகிழ்ந்து பார்வையாலேயே அவளோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தான்.

 

அவளோ விடாமல், “இப்ப உன் காயத்துக்குள்ள தண்ணி, மண்ணுனு எல்லாமே போய் செப்டிக் ஆயிருக்கும்..

 

இது போதாதுனு முள்ளை வச்சு தையல் போட்டிருக்க? நான் சுடு தண்ணில போட்டு யூஸ் பண்ற ஊசியே சில நேரத்துல செப்டிக் ஆகும்… 

 

நீ எல்லாத்தையும் உடம்புக்குள்ள போட்டு பாழாக்கி வச்சிருக்க. இந்த காயம் எப்படி ஆறும்? உன் கைய இனி கழட்டித்தான் க்ளீன் பண்ணனும்… ஐயோ! ராமா!” என்று தலையைப் பிடித்தபடி திட்டினாள்.

 

ஆனால் ஜோ சிரித்துக் கொண்டே, “ஏன்டி, எனக்கு ட்ரீட்மெண்ட் பாருனு உன்ன சொன்னேனா? ஏதோ உலகத்திலேயே இல்லாத ஒண்ண பார்த்துட்ட மாதிரி இந்த குதி குதிக்கிற.

 

உண்மைய சொன்னா, இது எனக்கு நூத்துல ஒரு காயம்.. இதுக்கு முன்னால வந்த எல்லா காயத்துக்கும் நான் இப்படித்தான் மருந்து போட்டேன். நீ சொன்ன மாதிரி எந்த காயமும் ஆறாம இருந்ததில்ல..  

 

போ.. போ… அங்கிட்டு ஓரமா போய் உட்கார்ந்து புலம்பு, வந்துட்டா பெருசா, காணாதத கண்டது போல…” என அவளைப் பிடித்து அந்த பக்கம் தள்ளியவன் மறுபடியும் குப்புறப் படுத்துத் தூங்க ஆரம்பித்தான்..

 

“நீயெல்லாம் மனுஷனே கிடையாதுடா.. ராட்சஷன்…” என்றாள் அவள்.

 

“இதுவே இப்பதான் தெரிஞ்சதா? உனக்கு எவன்டி டாக்டர் சர்டிபிகேட் குடுத்தான்? ஒருவேள போலி டாக்டரா நீ? ” என்றான் ஜோ.

 

‘என்ன பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டானே.. இனி அவனையும் பார்க்கக் கூடாது, அவன் காயத்தையும் பார்க்கக் கூடாது..’ எனும் முடிவோடு தன் இடத்திற்குப் போய் சாய்ந்து அமர்ந்தவள், அளவிற்கும் அதிகமாக தன் கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள்.

 

வெளியில் விடாது பொழியும் மழையின் அருளால், மண்ணிற்குள் இருக்கும் அந்த வீடு ஏசி போட்டதைப் போல குளிர் ஏறி இருந்தது. இது போதாதென்று வயிறு நிறைய இருவரும் உணவை உண்டு விட்டனர். 

 

மொத்தமும் சேர்த்து நான்கு கண்களையும் கனவெனும் தூளியால் கட்டித் தழுவியது..

 

வெளி உலகத்தைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் இரு ஆத்மாக்களும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தனர். கண்களை மூடி திறப்பதற்குள் நேரம் மாலையை நெருங்கி விட்டிருந்தது, ஆனாலும் இன்னும் மழை விட்டபாடில்லை.. 

 

வெளியில் போய் நிலைமையைச் சோதித்துப் பார்த்துவிட்டு வந்த ஜோ, ‘இன்று இரவும் இங்கேதான் தங்க வேண்டுமா?’ என்ற சலிப்புடன் சமைக்கத் தொடங்கினான்..

 

அவன் என்ன செய்கிறான் என்று பார்த்துக் கொண்டிருந்த அங்கிதா, ஜோ தோசைக் கல்லை எடுத்து அடுப்பின் மீது வைத்த உடன் வேகமாக ஓடி வந்ததாள்.

 

“ஐயா… ஜாலி… தோசை சுட போறயா ஜோ? இதுக்கு சைட் டிஷ் என்ன? சட்னியா, இட்லி பொடியா? எனக்கு பொடி புடிக்காது, தக்காளி சட்னி செய்வோமா?” என்று தன் போக்கில் பேசிக் கொண்டே சென்றாள்…

 

ஏற்கனவே சலிப்பின் உச்சத்திலிருந்த ஜோ, அவளது இடைவிடாத கேள்விக் கணைகளை கண்டு கடுப்படைந்திட, “இங்க பாரு, என்ன இருக்குதோ அதை வச்சு என்னால முடிஞ்சதை சமைச்சு தர்றேன். வாய மூடிக்கிட்டு இருக்கிறத சாப்பிடு. அது வேணும் இது வேணும்னு கேள்வி கேட்டு என்ன வெறுப்பேத்தாத” என்றான்.

 

அவன் முகம் பார்த்து அங்கிதா கொஞ்சம் அடங்கி நின்றாள். ஜோ கோதுமை மாவைக் கொண்டு தோசை சுட முற்பட்டான்… 

 

ஆரம்பத்தில் பொடி வைத்தே சாப்பிடலாம் என்னும் எண்ணத்தோடு இருந்தவன், அவள் கேட்டாள் என்பதற்காகவே மெனக்கெட்டு சட்னி செய்து கொடுத்தான். ஆனால் வேர்க்கடலை மட்டுமே இருப்பிருந்ததால், அதைக் கொண்டு சட்டினி செய்துவிட்டான்.

 

அங்கிதாவின் கைக்கு முதல் தோசை வந்ததும் சத்தம் போடாமல் சமத்தாக கட்டிலில் உட்கார்ந்து சாப்பிடத் துவங்கினாள். அடுத்தடுத்து நான்கைந்து தோசைகள் அவள் வயிற்றுக்குள் போனதும், கல்யாண சாப்பாடு சாப்பிட்ட திருப்தி அவளுக்கு..

 

அவளைத் தொடர்ந்து அவனும் தன் வயிற்றை நிரப்பிக் கொண்டான். பகல் முழுவதும் தூங்கி வழிந்த காரணத்தினால் இரவு இருவருக்குமே தூக்கமில்லாமல் பொழுதாய் போனது.

 

பொழுதைப் போக்குவதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அங்கிதா வீடு முழுவதும் அங்கும் இங்குமாக நடந்து கொடுத்தாள்…

 

‘அவள் என்னோடு உட்கார்ந்து பேச மாட்டாளோ? எவ்வளவு நேரம்தான் நடப்பாள் பார்க்கலாம்..’ எனும் குறும்போடு ஜோ அவளை வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தான்…

 

அவளோ, ‘என்னடா இது?.. புலி நம்மள இப்படி குறு குறுனு பார்க்குது?.. பாய்ஞ்சிடுமோ? மாட்டான்.. அதான் கையில அடிபட்டு இருக்கே.. அப்படி எதுவும் செய்ய மாட்டான்..’ என்று தனக்கு தானே தைரியம் சொல்லி கொண்டாள்.

 

அவளின் மன மொழியை மொழிபெயர்க்கத் தெரிந்த வித்தைக்காரனோ வேண்டுமென்றே விஷமமாய் சிரித்தான்.

 

“ஏம்ப்பா?… ஏன் இப்படி பாக்குற? தயவு செஞ்சு அந்தப்பக்கம் திரும்பி படுத்துக்க கூடாதா?… நீ இப்படி பாக்குறது எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு! என்னால ப்ரீயா நடக்க முடியல..” என்றாள்.

 

அவனும் அவள் மேல் இரக்கம் கொண்டு, ‘சரி போனால் போகட்டும்,  பாவம் தானே அவளும்…’ என்று நினைத்த படியே அவள் இருக்கும் திசைக்கு எதிர்த் திசையில் திரும்பிப் படுத்தான்.

 

அடுத்த நொடியே அங்கிதா விருட்டென, தன் நாற்காலியை எடுத்து வந்து ஜோவின் தலையைத் தாக்க முயன்றாள்…

 

இது நடக்கும் என்று முன்பே அறிந்தவன் போல, அவள் தனக்கு அருகில் வந்த உடன் மிகச் சரியாய் நாற்காலியைப் பிடித்துவிட்டான் ஜோ.. 

 

அரண்டு போன அங்கிதா அவன் பிடியிலிருந்து தன் நாற்காலியைத் திரும்பப் பெற முயன்றாள். அவன்தான் உடும்புக்கு உடன் பிறப்பாயிற்றே.. அத்தனை சுலபத்தில் தன் கைக்கு வந்ததை விட்டு விடுவானா?..

 

அசுர பலங்கொண்ட அவன் முன் தோல்வியைத் தழுவிய அங்கிதா, நாற்காலியிலிருந்து தன் விரல்களை விடுவித்தாள். ஜோ அதைத் தூரமாகத் தூக்கி எறிந்தான்…

 

“சாரி.. தெரியாம” எனும் முன், ஜோ வேகமாய் அங்கிதாவின் இரு கைகளையும் ஒன்றாக இணைத்துப் பிடித்தான்.

 

என்ன செய்கிறான் என்று அவள் யோசிக்கும் முன்பே, ஜோ வேகமாய் செயல்பட்டு அவளை அந்த அறையின் சுவற்றில் சாய்த்துப் பிடித்தான். 

 

அவளின் பயம் ஏறிய கண்களைப் பக்கத்திலிருந்து ரசித்த படியே, எந்த நிலையில் நின்றிருந்தாளோ அதே நிலையில் அவளைக் கட்டி வைத்து விட்டான் ஜோ…

 

அங்கிதா, “ஜோ… சாரி ஜோ… நான் இனிமே இப்படி செய்ய மாட்டேன்… ப்ளீஸ் நம்பு… என் கைய அவுத்து விடு… ராத்திரி முழுக்க இப்படியே என்னால நிக்க முடியாது, கையும் காலும் வலிக்கும்…

 

நான் நல்ல பிள்ளையா என்னோட இடத்திலேயே உட்கார்ந்து இருப்பேன். என்ன நம்பு, வேணும்னா நான் படுத்ததும் கைய கட்டிக்கோ ..” என்று கெஞ்சிக் கதறினாள்…

 

ஆனால் ஜோ அவள் கதறல் மொழி, தன் காதில் கேட்கவில்லை என்பது போலத் தன் படுக்கைக்குப் போய் படுத்துக் கொண்டான்…

 

அங்கிதா மீண்டும் மீண்டும், “ஜோ… ஜோ… சாரி ஜோ… என்னை மன்னிச்சிடு ஜோ…” என்று உளறிக் கொண்டிருந்த நேரம் அவளது இடுப்பிலிருந்த லுங்கி மெல்ல மெல்ல அவிழ்ந்து கொண்டிருந்தது…

 

அவள் அணிந்திருந்த சட்டை அவளுக்கு முழங்கால் வரை இருந்தது என்றாலும், வெறும் சட்டையோடு கைகள் பிணைக்கப்பட்ட நிலையில் ஒரு ஆண் முன்னால் நிற்கப் பிடிக்கவில்லை. 

 

அவள் அங்கத்தின் ஒவ்வொரு அணுவும் கூசிப் போக, பாவமாய் அவன் திசையைப் பார்த்தாள்.

 

‘என்னடா என்னோட எஃப் எம் திடீர்னு வேலை செய்யாம நிக்குது?’ எனும் யோசனையோடு அவள் புறம் திரும்பிப் பார்த்தவனுக்கு, சிரித்து மாளவில்லை…

 

இதுவரை அவன் தன் வாழ் நாளில் இந்த அளவிற்குச் சிரித்ததே கிடையாது. அவ்வளவு ஏன்? சிறு புன்னகையே அத்திப் பூ போல எப்போதாவது பூக்கும். 

 

ஆனால் இன்று, தன் முத்துப் பல்வரிசையின் கடைசிப் பல் தெரியுமளவுக்கு விழுந்து விழுந்து சிரித்தான் ஜோ…

 

வெட்கத்திலும் அவமானத்திலும் அங்கிதாவின் முகம் செக்கச் சிவந்து செரி பழம் போல் ஆகிவிட்டது. ஆனாலும் ஜோ சிரிப்பதை நிறுத்துவதாய் இல்லை.

 

‘ஈஸ்வரா, என் மானம் கப்பல் ஏறி கனடா போக முன்னால என்ன காப்பாத்து. போயும் போயும் இவன் முன்னால பப்பிஷேமா நிக்க வச்சுடாத…’ என்று உள்ளுக்குள் ஒரு கோடி வேண்டுதல்களை வைத்துக் கொண்டிருந்தாள்.

 

ஜோ தானே தன் சிரிப்பை நிறுத்த முயன்றாலும், அவனால் நிறுத்த முடியவில்லை. சிரித்தபடியே உருண்டு புரண்டு கொண்டிருந்தான்.

 

‘இவன் வேற என்ன ரொம்ப கேவலப்படுத்துறானே.. பரவாயில்ல தாங்கிப்போம், இப்போதைக்கு நம்ம கை கட்ட அவிழ்க்கிறதுதான் முக்கியம்…’ 

 

தட்டு தடுமாறியபடி எழுந்து உட்கார்ந்த ஜோவிடம் அங்கிதா, “ஜோ.. ப்ளீஸ், ஒரு ரெண்டு நிமிஷம் மட்டும் கைய கழட்டு, லுங்கிய கட்டிட்டு திரும்ப கைய கட்டிக்கலாம்” என்றாள்.

 

அவனோ இன்னமும் சிரிப்பதிலேயே மும்மரமாய் இருக்க, “சிரிச்சது போதும், ஹெல்ப் பண்ணு ப்ளீஸ்..” என்றவளின் குரலில் முன்பிருந்த அதிகாரம் தொலைந்து போயிருந்தது.

 

திமிரோடு ஜோ ஒரு சேரை எடுத்து வந்து அவள் முன்னால் போட்டு அதில் அமர்ந்து கொண்டு, “அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாலதான் என்னை கொல்ல பார்த்த. உன்ன எப்படி நான் ரிலீஸ் பண்றது? ராத்திரி முழுக்க இப்படியே நில்லு, அப்பதான் உனக்கு புத்தி வரும்” என்றான் கேலியோடு…

 

“நான் செஞ்சதுல என்ன தப்பிருக்கு ஜோ? கடத்திட்டு வந்த உங்கூட காலம் முழுக்க என்னால வாழ முடியாது. என்னோட வாழ்க்கைய நான் வாழ எனக்கு சுதந்திரம் வேணும்.. 

 

வாய்ப்பு கிடைச்சா தப்பிச்சுப் போக முயற்சி பண்ணத்தான் செய்வேன். முடிஞ்சா ரிலீஸ் பண்ணு, முடியலனா இப்பவே என்ன கொன்னுடு..” என்று கோபத்தோடு வார்த்தைகளை விட்டாள் அவள்.

 

அந்த வார்த்தையைக் கேட்ட அடுத்த கணமே ஜோ, அவள் கழுத்தைப் பிடித்து சுவற்றோடு சேர்த்து அழுத்தினான். 

 

‘நிஜமாகவே கொல்லும் முடிவுக்கு வந்துவிட்டானா?..’ என்று அஞ்சிய அங்கிதாவின் உடல் தானாகவே நடுக்கம் கொடுக்க ஆரம்பித்தது…

 

அவள் உடல் நடுக்கத்தைப் பார்த்த பிறகே ஜோவிற்கு அவளது மனநிலமை புரிந்தது… 

 

இதற்கு மேலும் அவளைக் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று நினைத்து கையை அவிழ்த்து விட்டான். அவசர அவசரமாய் லுங்கியைக் கட்டிக் கொண்டாள் அவள்.

 

அவளின் நாற்காலியை அவளிடமே திருப்பித் தந்த ஜோ, கூடவே அவள் கைக்கட்டினை வேறு திசைக்கு மாற்றினான். இப்போது அவளால் உட்கார்ந்த நிலையிலேயே தூங்க முடியும். 

 

ஜோ, “இன்னைக்கு ஒருநாள் மட்டும் இப்படியே தூங்கு, இனி எப்பவும் இப்படி செய்யமாட்டேன்” என்றான்.

 

‘அதான் இப்ப செஞ்சாச்சே.. இது போதும் இந்த ஜென்மத்துக்கு..’ என்று எண்ணியவள், அவனிடம் எந்த பேச்சு வார்த்தையும் வைத்துக்கொள்ள விரும்பாமல், உறங்க ஆரம்பித்தாள்.

 

அவள் நிஜமாகவே தூங்கி விட்டாள் என்று உறுதியான பிறகே ஜோ தன் படுக்கைக்குப் போனான்.

 

கட்டி வைத்ததால், அவளுக்குத் தன் முகத்தைப் பார்க்கக்கூட விருப்பமில்லை என்று ஜோவுக்கு தெரியும். ஆனாலும் அவன் அவளை விடுவிக்கவில்லை..

 

‘ஏற்கனவே தப்பிக்கும் ஆர்வத்தில் ஊறி இருப்பவளின் கரங்களை இப்போது விடுவித்தால், இன்றைய இரவும் தூங்கா இரவாகிப் போகும்‌. 

 

நாளைய பொழுதில் நெடுந்தூர பயணத்திற்கு உடலில் தெம்பு இல்லையெனில் எல்லாமே பாழாகிவிடுமே..’ என்று ஜோ முன்கூட்டியே முடிவு செய்திருந்ததால் அவள் கைகளுக்கு இன்று விடுதலை தரவில்லை.

 

‘பொழுது விடியட்டும்.. அவளுக்கு குருவி முட்டை, முயல் கறி, மயில் தோகை விசிறி எல்லாம் கொடுத்து சமாதான படுத்தலாம்..’ எனும் முடிவோடு உறங்கத் துவங்கினான் ஜோ.

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!