அசுரன்-13

வஞ்சியவள் செய்யப் போகும் வஞ்சகம் தெரியாத ஜோ, கடைசியாய் இருந்த உணவுப் பொருட்களை‌ வைத்து, கோதுமை தோசை சுட்டு அவளுக்கென சட்னியும் செய்து கொண்டிருந்தான்…

 

“ஜோ எனக்கு ரொம்ப கசகசனு இருக்கு.. வேற டிரஸ் இருந்தா குடு, நான் போய் லைட்டா குளிச்சுட்டு வர்றேன்” என்று தன் திட்டத்தின் முதல் அடியை எடுத்து வைத்தாள்‌.

 

“நாம என்ன அப்பார்ட்மெண்ட்லயா இருக்கோம்?.. டேப்ப திறந்த உடனே தண்ணி வர்றதுக்கு?.. பதுங்குக் குழி பேபி. இங்க தண்ணீர் கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?

 

இந்த இடத்தோட மணல்ல இருக்கிற ஈரத்தன்மையில இருந்து குளிக்க தண்ணீர் எடுக்குறேன். இந்த வீட்ட தாங்கிப் பிடிக்கிற மரத்தோட வேர்ல சின்ன சின்ன ஓட்டை போட்டு தனியா தண்ணீர் எடுக்குறேன்.

 

சும்மாவே அதுல இருந்து கொஞ்சமாத்தான் நமக்கு தண்ணி கிடைக்கும். அந்தத் தண்ணி தான் நமக்கு குடிக்க, சமைக்க, எல்லாத்துக்கும். 

 

ஏற்கனவே நம்மகிட்ட இருக்குற தண்ணியோட அளவு குறைவு. மணல் மூலமா கிடைச்ச மழைத் தண்ணியையும் சேர்த்து கணக்குப் பார்த்தாலே நாளைக்கி ராத்திரி வரைக்கும் தான் நமக்கு தண்ணி இருக்கும்.. 

 

அதுக்கு அப்புறம் நாம தண்ணியே இல்லாம இருக்க வேண்டியிருக்கும். உன் தயவால போலீஸ் வேற ரவுண்டப் பண்ணிடுச்சு. நானே அடுத்து என்ன செய்யலாம், ஏது செய்யலாம்னு தெரியாம குழம்பிப் போய் இருக்கேன்.

 

நீ என்னடானா டூர் வந்த குழந்தை மாதிரி குளிக்கணும் துவைக்கணும்னு கொஞ்சிகிட்டு இருக்குற? பேசாம ஒரு இடத்துல உட்காரு. இல்லைனா போய் படுத்து தூங்கு, அதுதான் உனக்கு நல்லது..” 

 

அங்கிதா ஜோ பக்கத்தில் வந்து, “ஜோ எனக்கு இப்போ குளிச்சே ஆகணும்” என்றாள் சிணுங்கிய குரலில்..

 

“ம்ச்சு.. அதான் நான் ஏற்கனவே சொன்னேன்ல. இங்க தண்ணி வசதி கம்மியா இருக்குனு” என தோசை மீதே கண்ணாக பதில் சொன்னான் ஜோ.

 

“இல்ல.. இல்ல.. நீ நினைக்கிற மாதிரி நான் பொழுது போக்குக்காக குளிக்கனும்னு கேக்கல…

எனக்கு பீரியட்ஸ் வந்திடுச்சு, வழக்கமா பீரியட் வந்ததும் தலைக்குக் குளிப்பேன். 

 

குளிக்காம எந்த பொருளையும் தொடக்கூடாது, தொட்டா அதுவும் தீட்டாயிடும்னு எங்கம்மா எனக்கு சின்ன வயசிலிருந்தே பழக்கப் படுத்திட்டாங்க. ப்ளீஸ், அரை பக்கெட் மட்டும் தண்ணீர் கொடு. 

 

குளிக்காம என்னால சாப்பாட்ல கை வைக்க முடியாது. பசியும் வலியும் என்னை ரொம்ப படுத்துது ஜோ” என்று கெஞ்சினாள்..

 

ஜோ யோசித்துப் பார்த்தான், போன மாதமும் இதே நாட்களில்தான் அவள் வயிற்று வலியோடு படுத்துக் கிடந்தாள். நிஜமாகவே அவளுக்கு அந்த நாட்களில் தலைக்குக் குளிக்கும் பழக்கம் உண்டு என்பதை அவனும் அறிவான்.

 

ஆதலால் அவள் சொல்வதை உண்மை என்று நம்பினான்…

 

‘பாவம்.. உடம்புக்கு முடியாத நிலையில் தவிக்கிறாள்..’ என்று  குடிப்பதற்காக வைத்திருந்த தண்ணீரை, அவள் குளித்திட எடுத்துச் சுட வைத்தான்..

 

வெந்நீர் நன்றாக சூடானதும் ஜோ, துணி கொண்டு அதன் இரு முனைகளையும் பாதுகாப்பாகப் பிடித்து தூக்கியபடி பாத்ரூம் பக்கம் போனான். 

 

அங்கிதாவோ அவன் பின்னாலேயே தோசை டவாவை தூக்கிப் பிடித்துக் கொண்டு தயாராகச் சென்றாள். ஜோ குனிந்து தண்ணீரை ஊற்றும் போது, அவன் தலையில் அடித்து மயங்கச் செய்வதே அவளின் திட்டம்.

 

பாத்ரூம் கதவைத் திறப்பதற்காக பின்னால் திரும்பிய ஜோ, அவள் கையில் டவா இருப்பதைக் கண்டதும், “ஏய், என்னடி பண்ற?” என்று கேட்க, தன்னால் முடிந்தவரை பலமாக ஜோவின் தலையைத் தாக்கினாள் அவள்…

 

‘அடித்த அடிக்கு கண்டிப்பாக மயங்கி விழுந்து விடுவான்.. வெந்நீர் வேறு அவனது கையில் இருக்கிறது அதையும் வேறு தன் உடம்பில் கொட்டிக் கொள்வான். எனக்கு இங்கிருந்து தப்பிக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும்..’ என்று பகல் கனவு கண்டு கொண்டிருந்த அவள் முன், ஜோ கற்சிலை போல நிமிர்வாய் நின்றிருந்தான்.

 

அவனுக்கு தான் அடித்த அடியால் சிறு காயமும் உண்டாகவில்லை என்பதை அங்கிதாவின் அறிவு அறிந்தவுடன், அவளின் கைகால்கள் எல்லாம் பயத்தில் தன்னிச்சையாக நடுக்கம் கொடுத்தன..

 

‘ஐயையோ போச்சு, இன்னைக்கு இந்த வெந்நீரால நமக்குத்தான் அபிஷேகம் செய்யப் போறான்.. யாராவது என்ன காப்பாத்த வாங்களேன்…’ என்று அந்த அபலை அரண்ட முகத்தோடு பின்னோக்கி நடக்க ஆரம்பித்தாள்..

 

பொறுமையாக வெந்நீர் பாத்திரத்தைக் கீழே வைத்த ஜோ இதுவரை இல்லாத அளவிற்குக் கோபத்தோடு அங்கிதாவை நோக்கி நடந்து வந்தான்..

 

‘நான் செத்தேன்… பாவி, என்ன அடிச்சே கொல்லப் போறான்..’ என்று பயத்தில் முகத்தை மூடிக்கொண்டாள் அங்கிதா.

 

ஆனால் வந்தவன் அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “பீரியட்னு பொய் சொன்னியா?..” என்றான்.

 

அவளிடம் பதிலில்லை..

 

ஜோ, “உன்ன..” என்று அவளருகே வர, பயத்தில் பாய்ந்து ஓடியவள் நேராக கட்டிலுக்கு அடியில் சென்று படுத்துக் கொண்டாள்….

 

‘ஆண்டவா, ஊருக்கு திரும்பி வந்ததும் உனக்கு நூத்தி எட்டு தேங்காய் உடைக்கிறேன். அவன் மட்டும் என் பக்கத்துல வராம தடுத்திடு..’ என்று மனதிற்குள் தன் நினைவில் வந்த எல்லா தெய்வங்களுக்கும் வேண்டுகோள் விடுத்தாள்.

 

எந்த தெய்வத்திற்கு அவள் கூக்குரல் கேட்டதோ தெரியவில்லை.. ஜோ திரும்பவும் சமையல் மேடை பக்கம் போய் விட்டான்.

 

நன்றாக ஒளிவதற்குக் கூட இடம் இல்லாத அந்த வீட்டில், அவன் நின்ற இடத்திலிருந்தே அவளின் ஒரு பாதி உடலைப் பார்க்க முடிந்தது. அவ்வளவுதான், அந்த மறைவிடத்தின் அருமை. இருந்தும் பயத்தில் பதுங்கிக் கொண்டாள் பேதை..

 

ஜோ, “இன்னிக்கி முழுக்க அங்கேயே கிட, அப்ப தான் உனக்கு புத்தி வரும்.. நானும் போனா போகட்டும்னு ஒவ்வொரு தடவையும் பொறுத்துப் போறேன், திரும்பத் திரும்ப என்ன கொல்லவா வர்ற?

 

எவ்வளோ தைரியம்டி உனக்கு? தப்பு என் மேலதான், உன்ன பத்தி தெரிஞ்சும் உனக்கு ஓவரா இடம் கொடுத்துட்டேன்..” என்றிட இங்கே இவளுக்கு ஈரக்கொலை வரை நடுக்கம் பரவியது.

 

ஜோ சுட்டு வைத்திருந்த தோசைகளில் பாதியை எடுத்துக் கொண்டு, ஏதும் நடக்காததுபோல் அவளுக்கு நேர் எதிரில் இருந்த சேரில் கால் மேல் கால் போட்ட படி  சாப்பிட ஆரம்பித்தான்…

 

அவன் சாப்பிடுவதைப் பார்த்து அவளுக்கும் பசி வர, மெதுவாய் கட்டிலுக்குக் கீழிருந்து வெளியே வர எத்தனித்தாள்.

 

ஜோ, “வெளிய‌ வந்தா கொன்றுவேன் பாத்துக்க” என்றதும் வந்த வேகத்திலேயே திரும்பவும் உள்ளே போய் விட்டாள்.

 

“நீ செஞ்ச காரியத்துக்கு, என்னோட இடத்துல யார் இருந்தாலும் இந்நேரம் உன்ன கொன்னு பொணமாக்கி இருப்பாங்க. நீன்றதால நான் இவ்வளவு தூரம் பொறுமையா இருக்கேன். 

 

கட்டில விட்டு வெளியில வந்துடாத, அதுக்கப்புறம் நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பு கிடையாது” என்று அச்சுறுத்திட அவளோ இருந்த இடத்திலேயே சுருண்டு படுத்துக் கொண்டாள்.

 

‘அவனும் அவள் அங்கேயே இருந்தால் தான் நமக்கு பாதுகாப்பு, இல்லையெனில் எந்த நேரத்தில் எப்படி தாக்குவாள் என்று தெரியாமல் மரணித்துப் போவேன். என்னையே இந்த அளவிற்குப் பாடாகப் படுத்துகிறாளே, பாதகத்தி’ என்று நினைத்துக் கொண்டான்.

 

அங்கிதா, “எனக்கு பசிக்குது..” என்றாள்.

 

“பசிக்கட்டும், பாவம் பார்த்து சமைச்சுக் கொடுத்த எனக்கு நீதான் சூப்பரா கிப்ட் கொடுத்து இருக்குறயே..” என்று தலையைத் தேய்த்து விட, அவள் மூச்சு விடாமல் அமைதியாகிவிட்டாள். 

 

அசந்து மறந்து வெளியே வரவும் துணிவில்லை அவளுக்கு…

 

அதைப் புரிந்து கொண்டவனோ அவளைப் பற்றி கொஞ்சமும் நினையாமல், எப்பவும் போல கட்டில் மேல் படுத்து உறங்கத் துவங்கினான்.‌ தூக்கம் என்றால் அப்படி ஒரு தூக்கம் அன்று அவனுக்கு..

 

பொழுது சாய்ந்த பிறகுதான் கண் திறந்தான். முதல் வேலையாக அவளுக்கென வர டீ போட்டு, கொண்டு போய் கட்டிலுக்கு அடியில் கொடுத்தான்.

 

“படுத்துகிட்டே எப்படி டீ குடிக்க? வெளிய வந்துக்குறேனே, ப்ளீஸ்..” என்றதற்கு, அவனிடத்திலிருந்து எந்த பதிலும் வரவில்லை.

 

சில வினாடிகளிலேயே அங்கிதா அழும் சத்தம் அவனுக்குக் கேட்டது.. 

 

“சரி அழாத, வந்து உன் சேர்ல உக்காந்துக்க..” என்றான்.

 

விருட்டென வெளியேறினாள்.. வர டீயையும், இரண்டு பிஸ்கெட் பாக்கெட்களையும் அவள் கையில் கொடுத்தான் அவன். வயிறு புடைக்க தின்றதும் உடல் பழைய தெம்பை மீட்டுக் கொண்டது.

 

ஜோ வழக்கம் போல கொஞ்ச நேரம் எக்ஸர்சைஸ் செய்துவிட்டு, அதன் பின் கீழ் அறைக்குப் போனான். ரேடியோ டிரான்ஸ்மிட்டர் கருவி மூலம் மோகனுக்கு கான்டாக்ட் செய்யப் போகிறான் என்று தெரிந்ததும், அங்கிதா பயம் மறந்து அவன் பேசுவதை ஒட்டுக் கேட்க வந்தாள்.

 

“நாங்க எல்லாரும் புது இடத்துக்கு வந்துட்டோம், இங்கு நமக்குத் தேவையான வீடு ரெடியாகிடுச்சு…” என்று தகவல் கூறினான் மோகன்..

 

ஜோ, “குட், இங்க எனக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல், கொஞ்ச நாள் நம்ம ஆளுங்கள நீயே பாத்துக்க..” என்பதோடு பேச்சை முடித்துக் கொண்டான்.

 

மலையடிவாரத்தில் மீண்டும் மழைச்சாரல் வேகமெடுக்க, போலீஸால் அங்கே தேடுதல் வேட்டையைத் தொடர முடியாமல் போனது.

 

போன முறை மழையில் நனைந்தபடியே அங்கிதாவைத் தேடியதன் பலனாய், பாதிக்கும் மேற்பட்ட காவலர்களுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. 

 

இருப்பவர்களும் உடம்புக்கு முடியாமல் படுத்து விட்டால் காரியம் கெட்டுப் போய்விடும் என்பதால் பரத்வாஜ் தற்போதைக்கு தேடலை நிறுத்திவிட்டான்.

 

அதைப் பற்றிய தகவல்கள் அதிகாரப்பூர்வமான இடத்திலிருந்து மோகனுக்குக் கிடைத்தது. அவன் அந்தத் தகவலை உடனே ஜோவுக்கு தெரிவித்து விட்டான்.

 

ஜோ, “இதுதான் சரியான சந்தர்ப்பம். நான் இன்னிக்கு ராத்திரியே அவள கூட்டுட்டு அங்க வந்துடுறேன். இந்த மழையில நான் அங்க வந்து சேர எப்படியும் ஒரு நாள் ஆகும். நாங்க அங்க வந்ததுக்கு அப்புறம், நாம வேற இடத்துக்கு மாறிடலாம்..” என்றான்.

 

ஆனால் மோகனோ, “எனக்கு ஏனோ நீ தேவையில்லாத ரிஸ்க் எடுக்குற மாதிரி தோணுது ஜோ. பேசாம அந்தப் பொண்ண அங்கேயே விட்டுவிட்டு நீ மட்டும் வந்துடு..

 

போலீஸ்காரங்க வந்து அவளை கூட்டிட்டு போகட்டும். அவளுக்கும் இங்க இருக்க விருப்பமில்ல. கட்டாயப்படுத்தி காதல வர வைக்க முடியாது ஜோ..” என்றான்.

 

ஜோ, “இல்லடா நான் எனக்காக இவள கடத்தல, மத்திய மந்திரி பிரணவ் தோட்டேவால இவளுக்கு எதுவும் ஆகக்கூடாதுனுதான் கடத்திட்டு வந்தேன்..” என்றான்‌ ஜோ.

 

மோகன், “என்னடா சொல்ற?..” என்றான் அதிர்ச்சியாய்.

 

“ஆமாடா, அவரோட கார்லதான் அன்னைக்கு ராத்திரி நாம ரெண்டு பேரும் தப்பிச்சு போக ட்ரை பண்ணினோம். நம்மளோட சேர்த்து அவர் காரும் மாட்டிக்கிச்சு, போதாக்குறைக்கு இவ குடுத்த இன்பர்மேஷன்ல கார் பத்தின டீடெயில்ஸ் தெளிவா ரெகார்ட் ஆகியிருக்கு.

 

வழக்கம் போல கார் மிஸ்ஸிங்னு அவரால பொய் சொல்லி தப்பிக்க முடியல. ஏன்னா நம்மள கார் பிக்-அப் பண்ண வர்றதுக்கு அரை மணி நேரம் முன்னாலதான் அவரு அந்த கார்ல ஒரு கல்யாணத்துக்குப் போய் இருக்காரு‌.

 

ஆதாரம் எல்லாமே அவருக்கு எதிரா இருந்ததால, ஆதாரத்தை அழிச்சுட்டு அங்கிதாவையும் கொல்ல திட்டம் போட்டுட்டாரு…” என்றிட, வெளியிலிருந்து அவன் பேசியதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த அங்கிதாவுக்கு இதயம் பன்மடங்கு வேகமாய் துடித்தது. 

 

“நான்தான் கடத்தினேன்னு அவருக்கு இப்ப வரை தெரியாது. ஊருக்குள்ள எங்கேயாவது ஒளிஞ்சிருப்பானு நினைச்சு தேடுறாரு. அவ வீடு க்ளினிக்னு எல்லா பக்கமும் ராத்திரி பகலா ஆளுங்க சுத்துறாங்கடா. சான்ஸ் கிடைச்சா, யோசிக்காம போட்ருவாங்க..

 

இங்க இருக்குற சூழ்நிலையில இவள தனியா விட்டுட்டு வர்றதும் கஷ்டம். போலீஸ் வந்து இவளை கூட்டிட்டு போற வரைக்கும், தன்னோட உயிர காப்பாத்திட்டு இருக்குற திறமை இவளுக்கு இல்ல. 

 

டாக்டர் மேடத்தை ஒரு நாள் ராத்திரியில மூணு தடவை காப்பாத்தினேன்னா பாத்துக்க..” என்றதும் மோகனே சிரித்துவிட்டான்.

 

ஜோ, “அப்படியே சரியா போலீஸ்ட்ட போய் சேர்ந்தாலும் அவங்க இவள என்ன பண்ணுவாங்கனு எனக்கு தெரியல. பத்திரமா வீடு போய் சேருவாளா, இல்ல மந்திரிட்ட மாட்டிக்குவாளா? 

 

மத்தவங்களுக்காகவே தன் வாழ்க்கைய வாழ நினைச்ச அப்பாவி ஜீவன் இவ. இவளோட உடம்புல ஒரு சின்ன கீறல் விழுந்தாலும் என்னால தாங்க முடியாது. இவ்வளவு பெரிய ஆபத்து இருக்குனு தெரிஞ்சும் எப்படிடா விட்டுட்டு போக முடியும்? 

 

எனக்கு என் பைத்தியக்கார டாக்டரால எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் பரவாயில்ல, நான் அவளையும் என் கூடவே கூட்டிட்டு வந்திடுவேன். பிரச்சனை அடங்கினதுக்குப் பிறகு நானே அவள ஃபாரின்க்கு அனுப்பி வச்சிடுவேன்” என்று கூறினான்..

 

அவன் கூறிய அனைத்தையுமே கட்டிலுக்கு அடியில் இருந்த படியே கேட்டுக் கொண்டிருந்தாள் அங்கிதா. அதுவரை அரக்கனாக மட்டுமே அவள் கண்களுக்குத் தெரிந்த ஜோவின் உண்மையான காதல், அன்றுதான் அவளுக்குப் புரிந்தது..

 

‘எனக்கு எதுவும் ஆகக்கூடாதுனு நினைச்சவன நான் எப்படியெல்லாம் டார்ச்சர் செஞ்சிருக்குறேன்?…’ என்று உண்மையாகவே மனதிற்குள் வருத்தப் பட்டாள்..

 

ஜோ மோகனுடன் பேசி முடித்து வெளியே வந்தவுடன் அங்கிதா கட்டிலுக்கு அடியில் இருந்தபடியே, “ஐ ஏம் சாரி.. நீ பேசுனது எல்லாத்தையும் நான் கேட்டுட்டேன். இனி நான் எந்த தப்பும் பண்ண மாட்டேன். நீ சொல்றதக் கேட்டு ஒழுங்காக இருக்குறேன்” என்றாள்.

 

ஆனால் ஜோ அங்கிதாவை இந்த ஜென்மத்தில் இன்னொரு முறை நம்புவதாய் இல்லை..

 

“இது என்ன? உன்னோட அடுத்த ப்ளானா? இந்த தடவ எந்த பொருள உன் கையில ஒளிச்சு வச்சிருக்க? கத்தியா கம்பா?..” என்றான்.

 

குற்றவுணர்ச்சியோடு தலை தாழ்த்தியவள், “எங்கிட்ட எதுவுமில்ல” என்று கையை விரித்துக் காட்டினாள்.

 

“எனக்கு உன்ன பார்த்ததும் புடிச்சது, உனக்கு என் மேல காதல் வராதுனு எனக்கு தெரியும். உன்னவிட்டு விலகிடத்தான் நினைச்சேன், சந்தர்ப்ப சூழ்நிலையால நானே உன்ன கடத்தி காப்பாத்த வேண்டியதாயிடுச்சு.

 

என்னோட உண்மையான அன்பும் காதலும் உனக்கு ஆரம்பத்துல இருந்து புரியவே இல்லை. உன்னால எனக்கு காயம் வரும் போதாவது புரியுமானு பார்த்தேன், ம்ஹூம்..

 

இனி‌யும் நீ என்னால கஷ்டப்பட தேவையில்ல. நான் சொன்னபடியே சூழ்நிலை கொஞ்சம் சரியானதும் உன்ன பத்திரமான நாட்டுக்கு அனுப்பிடுவேன். 

 

உன் சர்டிபிகேட், பேரண்ட்ஸ் எல்லாத்தையும் உன் கையில ஒப்படைக்கிறது என் பொறுப்பு. நீ திரும்பவும் உனக்கு புடிச்ச டாக்டர் வேலைய சந்தோஷமா செய்யலாம்..

 

அங்க பாரு, உன்னோட டிரஸ் ஓரளவுக்கு நல்லா காய்ஞ்சி போயிடுச்சு.. போய் மாத்திட்டு வா, நாம கிளம்பலாம்..” என்றான்.

 

எப்போதும் கம்பீரமாய் நிமிர்ந்திருக்கும் அவன் வதனம் முதன் முறையாக வாடிக் கிடப்பதைப் பார்த்த அங்கிதாவிற்கு, யாரோ அடிமனதினை கசக்கிப் பிழிவது போல வலித்தது. 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!