கல்யாண விருந்து அனைத்தும் முடிந்தவுடன் இப்போது ஓவியன் அலுவலகம செல்ல ஆரம்பித்தான். அவனது வாழ்க்கை நித்திலா வந்த பின் சந்தோஷமாக சென்றது.
காலையில் கிளம்பவே மனதில்லாமல் கிளம்புபவன் மாலை முடிந்த அளவு வேகமாக வீட்டிற்கு வந்தான்.
அதே போல அவனின் தர்மாப்பாவுடன் தான் அவனின் காலை நேரம் ஆரம்பித்தது. இருவரும் செய்யும் அலப்பறையில் அனைவரும் திகைத்து விழித்தார்கள்.
அலுவலகத்தில் நேரம், காலம் பார்க்காமல் உழைத்தவன தனது கடின உழைப்பால் தொழிலிலும் தனக்கான இடத்தை உருவாக்கினான்.
ஓவியனின் திருமணத்திற்கு ரத்னத்தை கூப்பிடாதது அவருக்கு மிகுந்த தலையிறக்கம் ஆனது. ஆளாளுக்கு அவரை விசாரிக்க ஆரம்பித்தனர். அன்னபூரணி எப்போதும் ஏதோ ஒன்றை முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.
பெரும்பாலும் விஷால் அவனோடவே இருந்தான்.
ஓவியனை கொலை செய்ய முயற்சி செய்தவர்கள் தன்னையும் ஏதேனும் செய்யாமல் விட மாட்டார்கள் என பயந்தவன் அவ்வளவாக பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளவில்லை.
இவை அனைத்தையும் பார்த்தவருக்கு உடல்நிலை சிறிது சிறிதாக பின் தங்க ஆரம்பித்தது.
ஒரு நாள் அவர் மருத்துவமனையில் இருக்கிறார் என தகவல் வர அவன் விழுந்தடித்து ஓடினான்.
அவருக்கு ஹார்ட் அட்டாக் என்று சொல்ல அருகில் இருந்து அவரை கவனித்துக் கொண்டான்.
என்ன தான் அவரை ஒதுக்கி வைக்க பழி வாங்க நினைத்தாலும் ஓரளவுக்கு மேல் அவனால் செய்யாமல் இருக்க முடியவில்லை.
அவருக்கு உடம்பு சரியில்லை என்றதும் அன்னபூரணி ஒன்றும் செய்யவில்லை. அவருக்கு பணம் ஒன்றே பிராதானமாக இருந்தது.
அப்போது தான் அவர் மீனாட்சியை பற்றி புரிந்துக் கொண்டார். என்ன புரிந்து என்ன பிரயோஜனம்? அவர்களை ஒதுக்கி வைத்ததற்கான வலியை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.
அவன் ஒவ்வொன்றையும் செய்ய இவருக்கு தான் குற்ற உணர்ச்சி அதிகமாகியது.
தர்மராஜ் தனது நண்பருக்கு உடம்பு சரியில்லை என பார்க்க வர அப்போதும் அவரிடம் அன்னபூரணி ஓவியனை பற்றி தப்பாக பேச மனிதர் வெறுத்து போனார்.
ஏற்கனவே இவரது பேச்சை கேட்டு தான் செய்து வைத்ததெல்லாம் போதும் என்று நினைத்தவர் அதன் பிறகு ரத்னத்தை பார்க்க போவதையே நிறுத்தி விட்டார்.
நாட்கள் அதன் போக்கில் சென்றுக் கொண்டிருக்க அனைவரும் எதிர்பார்த்த செய்தியும் வந்தது. நித்திலா கர்ப்பமாக இருந்தாள்.
“நித்திமா நிஜமா?” என்றவனுக்கு கண் கலங்கியது.
ஆம் என்று தலையாட்டியவள் அவனது கையை எடுத்து தனது வயிற்றில் வைத்தாள்.
அதில் சிலிர்த்தவன் அவளது வயிற்றுக்கு முத்தமிட்டவன் அப்படியே அவளை வயிற்றோடு இறுக அணைத்து கண்ணீர் சிந்தினான்.
“ஓவியன் என்ன இப்ப போய் அழறீங்க?”
“இல்லைடா. சந்தோஷத்துல எனக்கு அழுகையா வருது” என்றவன் சந்தோஷத்தில் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.
அனைவரும் அவள் குழந்தை உண்டானதை கேட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
செய்தியை கேள்விப்பட்டவுடன் நித்திலாவின் குடும்பத்தினர் அவன் வீட்டுக்கு வந்தனர்.
அண்ணாமலை அவர்களை வாழ்த்த அவன் அவரது கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.
“ரொம்ப நன்றி தாத்தா. நீங்க இல்லாம நான் என்ன ஆகிருப்பேனு தெரியல. என்ன தான் உங்க பையன் என்னோட நல்லா பழகினாலும் நான் உடைஞ்ச சமயத்துல எல்லாம் நீங்க எனக்கு பக்க பலமா இருந்திருக்கீங்க” என்று கண்ணீர் வடித்தான்.
ஆறுதலாக அவனது கையை அழுத்தமாக பற்றியவர் “ஏன்பா தாத்தாக்கு நன்றி சொல்ற அளவுக்கு பெரிய ஆளாயிட்டியா?” என்றார்.
“போடா… போடா… போய் வேலைய பாரு” என்றவர் அவனை இறுக அணைத்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.
தர்மராஜ் அவனை சந்தோஷ மிகுதியில் கொண்டாடி விட்டார். இருவருக்கும் தனித்தனியே பரிசு வாங்கி வந்தவர் அவர்களை ஆனந்தத்துடன் ஆசிர்வதித்தார்.
கண்ணன் அவனை பார்த்ததும் சந்தோஷத்தில் அவனை கட்டியணைத்து முத்தமிட்டான்.
“டேய் இன்னும் நீ இந்த பழக்கத்தை விடலையாடா?” என்று அலறினான்.
“மச்சி” என்றவன் சிணுங்கினான்.
“இருடா. இதுக்காகவே உனக்கு சீக்கிரம் பொண்ணு பார்க்க வைக்கிறேன்” என்றவன் கூற “சூப்பர் மச்சி” என்றவன் அவனது இன்னொரு கன்னத்திலும் முத்தமிட்டான்.
“டேய்… இம்சைடா உன்னோட” என்றவனிடம் “டேய் அந்த பொண்ணுடா” என்றொரு பொண்ணை காட்டினான்.
“டேய் இன்னும் நீ மறக்கலையா?” என்று அதிர்ச்சியானான்.
“மறக்க முடியலடா”
“அடேய்… இந்த விஷயம் உங்க வீட்ல தெரியுமா?”
“நீ தானே டா சொன்ன ஸ்கூல் படிக்கிற பொண்ணுன்னு. இதை போய் எப்படி வீட்ல சொல்ல முடியும்?” என்றவன் கேட்க “நியாயமான கேள்வி” என்று கண்ணை சிமிட்டினான்.
“எனக்கு கல்யாணம் முடிக்க வேண்டியது உன்னோட பொறுப்பு” என்று கண்ணடித்தான்.
“யாமிருக்க பயமேன் மச்சி” என்றவன் அருள் கொடுப்பது போல் கை காண்பிக்க அவர்களை பார்த்த நித்திலா சிரிக்க ஆரம்பித்தாள்.
அவளது சிரிப்பை கண்களில் காதல் பொங்க பார்த்தவன் அப்படியே மயங்கி விழுவது போல பாவனை செய்ய அவனை முறைத்தபடியே வந்தாள் அவனின் உயிரின் ஒளி ஆனவள்.
அவள் முறைப்பதை பார்த்தவன் பாவமாக முகத்தை வைத்துக் கொள்ள அவன் எதிர்பாராத கணத்தில் முத்தமிட்டுச் சென்றாள்.
அவனுக்கு எப்போதும் ஜீவன் கொடுப்பவள் அவனது நித்திலமே!
ஓவியனுக்கு அனைத்து சந்தோஷங்களையும் கொடுக்கும் தேவதை அவளே!
அவர்கள் வாழ்வில் இனி என்றும் வசந்தமே!
முற்றும்
