கெட்டவன் 1

காலை நேரம். கோயம்புத்தூர் காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்த டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள் சிலர் அவனைப் பார்த்து விட்டுத் தானாக எழுந்து நின்றனர்.

டீக்கடை ஓனர் முருகன் அவர்களைப் பார்த்து விட்டு, அவர்களின் பார்வை சென்ற இடத்தையும் பார்த்து விட்டு, கைகள் நடுங்க டீ போடும் வேலையைத் தொடர்ந்தார்.

“டேய் முருகா, ஸ்ட்ராங்கா ஒரு டீ போடு” என்று கட்டளையாகக் கூறி விட்டு அமர்ந்தவனின் விழிகள் ரத்த நிறத்தில் சிவந்திருந்தது.

முருகனும் அவன் கூறியது போல் ஸ்ட்ராங் டீ ஒன்றைப் போட்டு அவனிடம் நீட்டினார்.

டீயை அவன் கைகளில் வாங்கும் போது தெரியாமல் அவனின் முகத்தைப் பார்த்து விட்டார் முருகன்.

அவன்தான் வெற்றி. வயது இருபத்தெட்டு, ஆறடி உயரம், கருப்பு சட்டை, கையில் தடித்த வாட்ச், கண்களில் ஒரு முரட்டுத்தனம். பார்ப்பதற்கு முரடன் போலவே இருந்தான். அவன் சிரித்து யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.

அவனின் பச்சை குத்தியிருந்த கையால் டீயை வாங்கியவன், அவனின் கறுத்துப் போயிருந்த கீழ் இதழைக் கடித்து, “துட்டு வேணுமோ?” என்பது போல் முருகனிடம் கேட்டான்.

அவனின் கேள்வியில் முருகனின் தலை “வேண்டாம்” என்று மட்டும் ஆடியது.

“அது” என்றவன் சட்டைப் பாக்கெட்டில் இருந்து சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்து இழுத்தான். டீயை சிப் சிப்பாக உள்ளே இறக்கினான்.

அவனின் சிவந்திருந்த கண்கள் அங்கும் இங்கும் அலைபாய்ந்தது. யாரை இப்படி விழிகளைச் சுழற்றித் தேடுகிறான் என்பது அவனுக்கு மட்டும்தான் தெரியும்.

வெற்றிக்கு இன்னொரு பெயர் உண்டு. ஆன்ட்டி வெறியன். அது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. ஆனால், ஊரார் அவனை அப்படித்தான் கூறுவார்கள்.

டீயை முழுதாகப் பருகி முடித்தவன் கைபேசியில் அழைப்பு வந்ததும் சென்று விட்டான்.

அவனுக்கு காந்திபுரத்தில் சிறியதாக ஒரு ஆபீஸ் இருக்கிறது. போர்டு கூட இல்லை. ஆனால், ஊருக்கே தெரியும். பணம் வேண்டுமென்றால் வெற்றியிடம்தான் செல்ல வேண்டும். பேங்கில் கூட பத்து பேப்பர் கேட்பார்கள். ஆனால், வெற்றி கேட்க மாட்டான். ஒரே ஒரு கையெழுத்து போதும். ஆனால், ஒரு நாள் தவறினால் அவ்வளவுதான்.

இப்பொழுது கூட வெற்றிக்கு ஆபீஸில் இருந்துதான் அழைப்பு வந்திருந்தது. அவனின் உதவியாளன் ரவி அழைத்திருந்தான்.

வெற்றி விறுவிறுவென்று ஆபீஸ் சென்றவன், ஆட்டோக்காரர் சேகரின் முன் சென்று அமர்ந்தான்.

“என்ன சேகர்? உன் பொண்ணு கல்யாணத்துக்கு ஐம்பதாயிரம் வாங்கியிருந்த. இப்போ மூணு மாசமாகுது. இன்னும் திருப்பித் தரல?” என்று ஆட்டோக்காரனிடம் கோபமாகக் கேட்டான்.

சேகர் அவனின் முன் கை கட்டி நின்றிருந்தார். “இன்னும் ஒரு மாசம் டைம் கொடு வெற்றி. சீக்கிரம் திருப்பித் தந்துருவேன்” என்று கண்களால் கெஞ்சினார் சேகர்.

வெற்றி மேஜை மேல் இருந்த ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துப் புகையை சேகரின் முகத்தில் ஊதித் தள்ளினான். “ஒரு மாசம் இல்லை. இப்போ, இந்த நிமிஷம் வேணும். எடுத்து வச்சிட்டுக் கிளம்பு” என்றான் வெற்றி.

இதுதான் வெற்றி. இரக்கம் என்றால் என்னவென்று அறியாதவன்.

அவன் சத்தமாகப் பேச வேண்டிய அவசியம் இல்லை. அவன் அமைதியாகப் பேசுவதுதான் பயங்கரம்.

வெற்றி பக்கத்தில் நின்றிருந்த ரவியைப் பார்த்தான். ரவி சேகரின் ஆட்டோ சாவியைப் பிடுங்கி வைத்து விட்டான்.

“சாவி வேணும்னா சாயங்காலத்துக்குள்ள பத்தாயிரம் கொண்டு வா. இல்லைனா ஆட்டோவை நாங்க எடுத்துப்போம்” என்றான். அவனின் கண்களில் வில்லத்தனம் தெரிந்தது.

சேகர் அழ ஆரம்பித்து விட்டார். ஆனால், வெற்றிக்கு அது ஒரு பெரிய விஷயமே இல்லை.

சேகர் சென்றதும் ரவி வெற்றியைப் பார்த்தான். “அண்ணா… இன்னும் கொஞ்சம் டைம் கொடுத்திருக்கலாமே அவருக்கு. அவரைப் பார்க்கப் பாவமா இருக்குது” என்றான்.

அவனை முறைத்து விட்டு எழுந்து நின்றான் வெற்றி.

“ரவி, நான் இப்படித்தான். நம்ம தொழிலும் இப்படித்தான். ஒரு தடவை இரக்கப்பட்டா நாளைக்கு எல்லாரும் நம்ம தலையில உட்கார ஆரம்பிச்சிருவாங்க” என்று காட்டமாகக் கூறினான்.

வெற்றி எப்பொழுதும் இப்படித்தான். அப்பா அம்மா சிறு வயதில் இருந்தே அவனுடன் இல்லை. அவனுக்கு நல்லதை எடுத்துக் கூறவும் ஆள் இல்லை. தனியாக வளர்ந்தவனின் முதல் குறிக்கோள் பணம் மட்டும்தான்.

அவனிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே ஒரு பெரிய கார் அவனின் ஆபீஸ் முன் வந்து நின்றது.

அதிலிருந்து இறங்கினான் தொழிலதிபர் லட்சுமணன்.

“வெற்றி, அர்ஜென்ட்டா ஒரு பைவ் லேக்ஸ் வேணும். ரெண்டு நாள்ல திருப்பித் தந்துருவேன். ஒரு டீல் ஸ்டக் ஆகி இருக்குது” என்றான்.

வெற்றி சிரிக்காமல் சொன்னான். “சார், ரெண்டு நாள்னா ரெண்டு நாள் தான். வட்டி பத்து சதவீதம். ஓகேவா?” என்று கேட்டான்.

லட்சுமணன் சரி என்று கூறி ஒரு கையெழுத்துப் போட்டு விட்டுப் பணத்தை வாங்கிச் சென்றான்.

*_*

இரவு நேரம். பீடி நாற்றத்திலும் போதையின் தள்ளாட்டத்திலும் அவனின் கார் வேகமாகச் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது.

அவன் காரை நிறுத்தியதோ ஒரு சிறிய குடிசை வீட்டு முன்னால்தான்.

காரிலிருந்து இறங்கியவன் குடிசை வீட்டு முன் சென்று கதவைத் தட்டினான்.

இரண்டாவது தட்டில் கதவு திறந்து கொண்டது. வீட்டு வாசலில் நின்றிருந்தாள் ரேவதி. வயது முப்பத்தைந்து. இரண்டு பெண் பிள்ளைகளுக்குத் தாயானவள்.

மெல்லக் கதவைத் திறந்து அவன் உள்ளே வருவதற்கு வழி விட்டாள்.

பெண் பிள்ளைகள் இருவரும் சமத்தாய் தூங்கிக் கொண்டிருக்க, அவளின் கணவன் குடிபோதையில் தரையில் உருண்டு கொண்டிருந்தான்.

அந்தக் குடிசை வீட்டுக்குள்ளும் சிறிய அறை இருக்க, அந்தச் சிறிய அறைக்குள் சென்றான் வெற்றி.

அங்கு அவன் ரேவதியிடம் தவறாக நடந்து கொண்டான். கடந்த மூன்று மாதமும் இரவில் இவளிடம் மறக்காமல் வந்து விடுவான் வெற்றி. அதற்குக் காரணம் ரேவதியின் கணவன்தான்.

வெற்றியிடம் சென்று இருபதாயிரம் வட்டிக்கு வாங்கிக் குடித்து விட்டான். பணத்தைத் திருப்பித் தராமல் அவன் போக்குக் காட்ட, அவனின் மனைவியை மூன்று மாதங்கள் குத்தகைக்கு எடுத்து விட்டான் வெற்றி.

வந்த வேலை முடிந்ததும் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு அதே இரவில் சென்று விட்டான். வேலை விஷயமாக வந்த இடத்தில் அதிக நேரம் அவன் தங்க மாட்டானாம். அதுதான் அவனுடைய பாலிசி என்பான்.

தன் வீட்டுக்குக் காரை விட்டவன் எதிரில் இருந்த காலி வீட்டைப் பார்த்து விட்டு வீட்டுக்குள் சென்றான்.

அந்தத் தெருவில் மொத்தம் பத்து வீடுகள் இருந்தது. அந்தப் பத்து வீடுகளும் அவனுடைய வீடுகள்தான். அந்த வீடுகளை வாடகைக்கு விட்டிருக்கிறான்.

இப்பொழுது அவன் பார்த்த வீடு மட்டும் காலியாக இருக்கிறது. அந்த வீட்டுக்கு இன்னும் ஆள் குடியேற வரவில்லை. அதான் யோசனையாகப் பார்த்து விட்டுச் செல்கிறான்.

*_*

காலை எழுந்ததும் ரவியை அழைத்தான்.

“சொல்லுங்கண்ணா” வந்து நின்றான் ரவி.

இந்த ரவி உதவியாளன் மட்டும் இல்லை. தொழிலில் நேர்மையானவனும் கூட.

“என் எதிர் வீட்டுக்குக் குடியேற இன்னும் ஆள் வரல?” என்றான்.

“இன்னும் ரெண்டு நாள்ல ஆள் வந்துருவாங்கண்ணா” என்றான் ரவி.

“ஸ்ட்ரிக்ட்டா சொல்லிடு ரவி. மாசம் தொடங்குனதும் வீட்டு வாடகை கரெக்ட்டா வந்துரனும். அட்வான்ஸ் பற்றி எல்லாம் பேசிட்ட தான?” என்று கேட்டான்.

“ஆமா அண்ணா, பேசிட்டேன்” என்றான் ரவி.

“மற்ற வீட்டுல வாடகை தந்துட்டாங்களா?” என்று மறக்காமல் கேட்டுக் கொண்டான்.

“நீ ஆபீஸ் போ. நான் இப்போ வர்றேன்” என்றவன் குளித்து முடித்து மீண்டும் கருப்பு நிறச் சட்டையை அணிந்து கொண்டு வந்தான்.

அந்தக் கருமை நிறச் சட்டையைப் போல் அவனின் வாழ்வும் இருள் சூழ்ந்த கருமை நிறமாகவே இருக்கிறது.

***

மாலை நேரம் ஆபீஸில் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தவனின் காதில் கேட்டது கீச் கீச் சத்தம்.

ஆபீஸின் முன்னால் மூன்று பெண்கள் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

இவன் புருவம் சுருக்கி அவர்களைப் பார்த்தான். அவர்களைப் பார்ப்பதற்குக் கல்லூரிப் பிள்ளைகள் போல் தெரிந்தது.

“ரவி” என்றான் வெற்றி.

ரவி புரிந்தது போல் சென்றான்.

“என்ன வேணும் பாப்பா? ஏன் ஆபீஸ் முன்னாடி நிற்கிறீங்க?” என்று கனிவாய் கேட்டான்.

கைகள் நடுங்க, தோழியின் பின்னால் மறைந்து கொண்டாள் குட்டி தேவதை.

அவளைப் பார்ப்பதற்கே குழந்தை போல் தெரிந்தாள்.

அவளின் முன்னால் நின்றிருந்த பெண் ரவியைப் பார்த்து “ஒரு பத்தாயிரம் வேணும் சார். ஒரு வாரத்துல திருப்பித் தந்துருவேன்” என்றாள்.

ரவி புருவம் முடிச்சிட மூவரையும் திகைத்துப் பார்த்தான். “என்ன அவசியம் உங்களுக்கு? பார்க்குறதுக்கு படிக்கிற பிள்ளைங்க மாதிரி இருக்கிறீங்க. இங்கே வந்து பணம் கேட்குறீங்க? இங்கே வட்டி ரொம்ப அதிகம். நீங்க வேற இடத்துல கேட்டுப் பாருங்க” என்றான் ரவி.

“ரவி” சத்தமாக அழைத்தான் வெற்றி. “அவங்க பணம் கேட்டு வந்திருக்காங்களா?” என்று கேட்டான்.

“ஆமாண்ணா” என்று தவிப்போடு தலை அசைத்தான் ரவி.

“அவங்கள உள்ளே அனுப்பு” என்றான் வெற்றி.

அந்த இரண்டு பெண்களும் உள்ளே சென்றனர். குட்டி தேவதை அவனின் குரலில் மிரண்டு போய் வாசலோடு நின்று விட்டாள்.

“நாளைக்கு எங்க ஃப்ரெண்டுக்கு பர்த்டே செலிபிரேட் பண்ணனும் சார். அவசரமா ஒரு பத்தாயிரம் கொடுத்தீங்கனா ஒரு வாரத்துல திருப்பித் தந்துருவோம்” என்று கேட்டனர் அந்த இரு பெண்களும்.

வெற்றி மர்மமாகப் புன்னகைத்து விட்டு வெளியே நின்றிருந்த குட்டி தேவதையின் முகத்தைப் பார்த்து விட்டுக் கையெழுத்தும் வாங்காமல் பணத்தைக் கொடுத்து அனுப்பி வைத்தான்.

குட்டி தேவதை அவனின் தேவதையா? இல்லை அழிவா?

பார்த்து விடுவோம் அடுத்த பதிவில்.

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!