காதல் கணம் 2

திடுக்கிட்டுத் திரும்பிய ஷ்ரதா அவனை தன்னருகில் பார்த்ததும் மிரண்டாள்.

அவனோ சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசினான்.

“இங்கயிருக்கற திங்க்ஸ் எல்லாம் உனக்காகவே டிசைன் பண்ணினது. உங்கப்பாவை நேர்ல பார்க்கும் போது சொல்லு என் பெட்ரூமே மியூசியம் மாதிரி இருக்கும்னு”

ஷ்ரதாவிற்கு அவன் தன் அப்பாவை பற்றியப் பேச்சை விடவே மாட்டானா என்றிருந்தது.

அதனை புரிந்து கொண்டவன் போல், “அட! இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட் இல்ல? இப்போ நான் என்ன பண்ணனும் ஷ்ரதா?” என்றவன் திடிரென கேட்கவும், பயந்தபடி தன் முந்தானையைத் திருகினாள்.

“சொல்லு? இப்போ நான் என்ன பண்ணனும்?” என்று மீண்டும் கிசுகிசுப்பாய் கேட்டவனைப் பார்த்து, இரண்டடி பின் வாங்கினாள்.

“ஹா! ஞாபகம் வந்திருச்சி” என்றவாறே அவளை நெருங்கியவனது கூர்மூக்கு அவள் பட்டுக் கன்னத்துள் புதைந்தது.

தொடர்ந்து அவளது வாசனையை தன் நாசிக்குள் நிரப்பியவன், “பயமா இருக்கா ஷ்ரதா?” என்று காதோரம் முணுமுணுக்க, நெஞ்சு விம்மி விரிய பெரிய பெரிய மூச்சுகளாய் விட்ட ஷ்ரதாவிற்கு வார்த்தைகளே வரவில்லை.

“ப்ளீஸ் ஷ்ரதா! இந்த பியூட்டி அண்ட் த பீஸ்ட் எஃபெக்ட் எல்லாம் கொடுக்காத. என்னைப் பார்த்தா என்ன வில்லன் மாதிரியா இருக்கு?”

“ப்ளீஸ்! தள்ளி நில்லுங்க”

“ப்ச்! என்ன ஷ்ரதா, நீ இப்போ எல்லாத்துக்கும் ரெடி தானே?”

‘இல்லை’ என்ற ஷ்ரதா தன் முகத்தைப் பின்னால் இழுக்க, வலுக்கட்டாயமாய் அவள் முகவாயை தன்னை நோக்கி இழுத்தவன், “என்கிட்ட விலகிப் போறது இதுவே கடைசி தடவையா இருக்கட்டும் ஷ்ரதா” என்று எதையோ நினைத்து உறுமினான்.

ஷ்ரதா எவ்வளவு அணைக்கட்டியும் ஒருத்துளி கண்ணீர் அவள் கண்ணைவிட்டு இறங்கிவிட்டது.

“இன்னைக்கு இந்த ரூமுக்குள்ள இது தான் நடக்கும்னு உனக்கு முன்னாடியே தெரியும் தானே? அப்புறம் ஏன் இப்படி அழுது சீன் க்ரியேட் பண்ற? கமோன் ஷ்ரதா! ஒரு பதிவிரதையா உன் கடமையை நிறைவேத்து” என்றவன் நகர மறுத்தவளை வம்படியாய் தன் கட்டில் நோக்கி நடத்திச் சென்றான்.

ஷ்ரதா மனதிற்குள், ‘வருணத்தான், இது நீங்க இல்ல. இது நீங்க இல்லவே இல்ல.’ என்று கூறி தேம்ப ஆரம்பித்தாள்.

‘உனக்கு இன்னைக்கான தண்டனையை நிறைவேத்தியாச்சி’ என்று நினைத்த வீசி, அவளை நெருங்காமல் தள்ளிப் படுத்துக்கொண்டான்.

அவனிடம் எந்த அனக்கமும் இல்லாமல் போகவும் தன் முகத்திலிருந்த கைகளை விலக்கிய ஷ்ரதா, தன் பக்கத்தில் கண்மூடி படுத்துக் கிடந்தவனை அதிசயமாய் பார்த்தாள்.

அதற்கும், “ஒழுங்காப் படு. இல்ல ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடிருவேன்.” என்று மிரட்டினான் அவன்.

வேகமாய் படுக்கையில் சாய்ந்தவள் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

புது இடம் என்பதால் திசைமாறிப்போன தூக்கப்பறவை, சிறிது நேரத்திற்குப் பின்பே அடையாளம் கண்டவள் விழிக்கூட்டை வந்தடைந்தது.

மறுநாள் காலையில் சீக்கிரமே விழித்துவிட்ட ஷ்ரதா, குளித்துக் கிளம்பி கீழே வந்தாள்.

வந்தவளை தன்னுடனே நிறுத்திக்கொண்ட அபிராமி, பணிப்பெண் சிட்டுவை அழைத்து வீசிக்கு காஃபி கொடுக்கும்படி பணித்தார்.

வீசியோ தனக்கு காஃபி கொண்டு வந்த சிட்டுவை, “ஷ்ரதா எங்க? அவளை வரச் சொல்லு” என்று கோபமாக திருப்பி அனுப்பினான்.

இதைக் கேள்விப்பட்ட அபிராமிக்கு ஒரு பக்கம் அவர்கள் வாழ்வு துலங்கிவிட்டது என்று உவகையாக இருந்தாலும், இன்னொரு பக்கம் அவனது பிடிவாதத்தை நினைத்து வருத்தமாக இருந்தது.

ஷ்ரதாவிடம், “நீ போக வேண்டாம்மா.” என்றவர், வரவேற்பறையிலேயே அவளை உட்கார வைத்து செய்தித்தாள் பார்க்க வைத்தார்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒவ்வொருவராய் வந்து அட்டன்டென்ஸ் போட, அனைவருக்கும் புன்னகை கலந்த தலையசைப்பையே பதில் மரியாதையாய் வழங்கி தயக்கத்துடன் உட்கார்ந்திருந்தாள் ஷ்ரதா.

வீசியின் தந்தை பிரகாஷோ, “என்னம்மா காஃபி சாப்ட்டியா? உன் மாமியார் காஃபி சகிக்கிற மாதிரி இருந்ததா? இல்ல கசக்கிற மாதிரி இருந்ததா?” என்று நக்கலடிக்க,

“நல்லாயிருந்தது மாமா” என்று முறுவலித்தாள் மருமகள்.

பிரகாஷ் சக்கரவர்த்தியைப் பொறுத்தவரை அவருக்கும் சரி; அவரின் வாரிசுக்கும் சரி; அவரின் முன்னோர்கள் சொத்து என்று விட்டுவைத்துச் சென்றதென்னவோ ‘சக்கரவர்த்தி’ எனும் இந்த பின்னொட்டுப் பெயரைத் தான்.

பத்து வருடங்களுக்கு முன்பு சிறிய வெள்ளிக்கடையொன்றில் கணக்கெழுதிக் கொண்டிருந்தவர், தற்போது ஆவணிமூலவீதியில் ஒரு வெள்ளி நகைக்கடையையே நிர்வகிக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் என்றால் அனைத்திற்கும் காரணம் வீசி தான்.

அவர் அவளிடம் சுவாரசியமாய் பேசிக்கொண்டிருந்துவிட்டு கடைக்கு கிளம்பிய நேரத்தில் தான், ஒரு கையை தன் ராயல் ப்ளூ பேண்டிற்குள் விட்டபடியே படிகளில் தாவியிறங்கி வந்தான் வீசி.

வந்தவன் தன்னை அலங்க மலங்க பார்த்துக் கொண்டிருந்தவளின் அருகில் வந்து,‌ “மேடம் கூப்பிட்டா வர மாட்டீங்களோ?” என்க,

“அது அத்தை தான்…” என்றவள் தயங்கும் வேளையில்,

“ஆமாடா, நான் தான் போக வேணாம்னு சொன்னேன். ஏன்டா காஃபியை திருப்பி அனுப்பின? உனக்கு என்ன அவ்ளோ வீம்பு?” என்று கடிந்தார் அபிராமி.

அப்போது அவன் கண்கள் செம்மைக்கு மாறாக குறும்பைத் தத்தெடுத்தது.

“தினம் அப்பாவுக்கு நீங்க தானேம்மா காஃபி தர்றீங்க? ஆனா, எனக்கு மட்டும் என் பொண்டாட்டி கொடுக்கக்கூடாதா?” என்று மல்லுக்கு நின்றான்.

அபிராமியோ பதில் பேச முடியாமல் திணறினார்.

தன் அன்னையை வெற்றிக் களிப்புடன் பார்த்தவன், “ரொம்ப அவ மேல பாச மழையை பொழியாதீங்கம்மா. அப்புறம் ஜுரம் வந்திரப்போகுது. மொத அவக்கிட்டப் பேசி அவளுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு தெரிஞ்சிக்கங்க. பாருங்க அவளுக்கு மல்லிப்பூவே பிடிக்காது. நீங்க வச்சிவிட்டீங்களேன்னு ஒரு கடையையே சுமந்துட்டு‌ இருக்கா.” என்று இயல்பாக சொல்லிவிட்டுச்‌‌ சென்றவனை அதிர்ச்சியாகப் பார்த்தாள்‌ ஷ்ரதா.

அன்று மதியம் தன் பெட்டியைத் திறந்து, அலமாரியில் உடைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த ஷ்ரதாவிற்கு காலையில் வீசி பேசிவிட்டுச் சென்ற வார்த்தைகளே மண்டையைக் குடைந்தன.

மதுபாலாவும் அபிராமியும் அருகில் வந்து அவளுக்கு உதவிக் கொண்டிருக்க, திடிரென அவளின் கைப்பேசி அலறியது.

எடுத்துப் பேசியவளின் கைகளோ நடுங்கின. குரலும் தயங்கியபடியே வெளிவந்தது.

இணைப்பிலிருந்த வீசி, “பக்கத்துல அக்கா, அம்மா இருக்காங்களா?” என்று கேட்டதும்‌ தான் தாமதம்,

“அண்ணி, அவங்க பேசுறாங்க” என்று தன் கையில் கனத்தவனை மதுபாலாவிடம் கொடுத்துவிட்டாள்.

அவளின் இந்த செயலில் பல்லைக் கடித்தவன், “என்ன வருண்?” என்ற மதுபாலாவிடம்,

“அது.. காலைல பாத்ரூம் டேப்பை சரியா மூடினேனான்னு சந்தேகம். அதான் போன் பண்ணினேன். அவ என்னடான்னா உன்கிட்ட கொடுத்திட்டா.” என்று வாய்க்கு வந்ததை உளறினான்.

அவள் பொறுப்பாய், “பார்த்துட்டேன்டா. எல்லாம் சரியா தான் இருக்கு.” என்றதும்,

“சரி, உன் குழந்தைங்ககிட்ட போனைக் கொடு” என்றான், மனதில் உதித்த புதிய திட்டத்துடன்.

ஏமாற்றத்துடன் தன் பிள்ளைகளிடம் போனைக் கொடுத்த மதுபாலா சோகமாக கீழேச் சென்றதும், ஐஸ், கேக், சாக்லேட், பிஸ்கட் போன்ற உலகப்புகழ் பதங்களுக்கிடையே ஆயிரம் மாமா போட்டனர் அவளின் அருந்தவால் குழந்தைகள்.

அவன் அவர்களிடம், “ம்ம்.. ம்ம்.. வாங்கிட்டு வரேன். ஆனா, ஒரு கன்டிஷன். நீங்க இப்போ உங்க அத்தையை தனியா கூட்டிட்டுப்போய் அவங்கக்கிட்ட போனைக் கொடுக்கணும்.” எனவும்,

அந்த பொல்லாத விஷமிகளும் ஷ்ரதாவை தனியே இழுத்துச் சென்று, “மாமா பேசுறாங்க” என்று போனை அவளிடம் திணித்துவிட்டனர்.

ஏதோ தீர்த்தம் போல் பவ்யமாய் அதனை வாங்கியவள் மெதுவாக காதில் வைத்தாள்.

“ஹேய் லூசு! அக்கா, அம்மா இருக்காங்களான்னு கேட்டா உடனே போனை தூக்கிட்டுப் போய் அவங்கக்கிட்ட கொடுத்திடுவியா? கொஞ்சம் அவங்க முன்னாடி அன்பா இருக்கற மாதிரி காட்டிக்கலாம்னா வேண்டாவெறுப்பா நடந்துக்கிற?” என்று காச்சு மூச்சென்று கத்திவிட்டான்.

ஷ்ரதா அவனிடம், “இல்லங்க. அப்படியெல்லாம் இல்லங்க.” என்று சொன்னதையே திருப்பி திருப்பி உருப்போட்டுக் கொண்டிருந்தாள்.

“என்ன இல்லங்க?” என்றவன் பட்டென அழைப்பைத் துண்டித்துவிட்டான்.

ஷ்ரதாவோ, “இவருக்கு எப்படி என் போன் நம்பர் தெரியும்?” என்றபடியே குழம்பிக் கொண்டிருந்தாள்.


மாலையில் வீசிக்கு அழைப்பு விடுத்த அபிராமி, “வருண் எங்கயிருக்க?” என்று கேட்க, அவன் சொன்ன பதில் அவருக்குள் கலவரத்தை உண்டாக்கியது.

“அப்போ இன்னும் நீ கிளம்பவே இல்லையா? நாங்கல்லாம் எப்பவோ புறப்பட்டாச்சு. எங்கேயா? நல்லா கேட்டப்போ. இன்னைக்கு நம்ம மீனாட்சியம்மன் கோவிலுக்குப்போய் ஒரு அர்ச்சனைப் பண்ணிட்டு வரலாம்னு நேத்தே சொன்னேனேடா? சரி, சரி சீக்கிரம் கிளம்பி வா.” என்றவர்,

“வேலை டென்ஷன்ல மறந்துட்டானாம்” என்றார் தன்னை பார்த்திருந்த ஷ்ரதாவிடம்.

‘ம்க்கும், இவ்ளோ டென்ஷன்லயும் என்னை போன் போட்டு திட்ட மட்டும் மறக்க மாட்டாராம்’ என்று மனதிற்குள் நொடித்துக்கொண்ட ஷ்ரதா, அவன் வீட்டிற்கு வந்ததும், பம்மியபடியே தங்கள் அறைக்குள் நுழைந்தாள்.

அங்கு வீசி மேல் சட்டை இல்லாமல் தன் அலமாரியைப்போட்டு குடைந்துக் கொண்டிருந்தான்.

பச்சைப் பட்டில் சித்திரமாக நின்றிருந்தவள் வெற்றுடம்பாக நின்றிருப்பவனை நிமிர்ந்துப் பார்க்க நாணப்பட்டு தலை குனிந்திருந்தாள்.

நல்ல ரசனையும் காதலும் உள்ள கணவனாக இருப்பின் அவள் முகத்தை ஓலையாகவும், தன் உதட்டை எழுத்தாணியாகவும் மாற்றியிருப்பான். எங்கே! இவன் தான் கடுவன்பூனையின் கேரக்டரை கடன் வாங்கி உலாவுபவனாயிற்றே!

அரை நிமிடம் தான் அவன் அவளைப் பார்த்தான். நேரே அவளது அலமாரிக்குச் சென்று‌ ஊதா நிறத்தில் சுடிதார் ஒன்றை தேர்ந்தெடுத்துப் போட்டான்.

“ம்ம் க்விக்! அந்தப் புடவையை உருவி வீசிட்டு இந்த சுடிதாரைப் போட்டுக்கோ!” என்று கட்டளையிட்டான்.

“இல்லங்க. அத்தை தான் இந்த புடவையை செலக்ட் பண்ணினாங்க.” என்றவள் நெளிய,

“ஆனா, உனக்கு பர்ப்பிள் கலர் தானே பிடிக்கும்?” என்றவன் அவள் அதிர்ச்சியையெல்லாம் பொருட்படுத்தவில்லை. தான் கிளம்புவதிலேயே குறியாய் இருந்தான்.

வீசி கிளம்பி தன் உடம்பில் சார்லியை பீய்ச்சிக் கொண்டிருந்தபோது இன்னொரு கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்த ஷ்ரதா, அவன் கடைக்கண் பார்வைக்காய் காத்திருந்தாள்.

ஆனால், அவனுக்கு அவளைப் பார்க்கவெல்லாம் நேரமில்லை. கிளம்பியதும் அவள் கையைப் பிடித்து கீழே இழுத்து வந்துவிட்டான்.

அவர்களையும் அவர்களது உடைகளையும் மாறிமாறிப் பார்த்த மதுபாலா, ‘பாருங்கம்மா’ என்று கண்களால் சமிக்ஞை செய்ய, அபிராமியும் மனநிறைவான புன்னகையை வெளிப்படுத்தினார்.

மதுபாலாவின் குழந்தைகள் இருவரும், “அத்தையும் மாமாவும் ஒரே கலர் ட்ரெஸ்” என்று ஆர்ப்பரித்தனர்.

கோவிலுக்கு என்றதும் தானாக மகிழ்ச்சி வந்து ஒட்டிக்கொண்டது ஷ்ரதாவின் முகத்தில். காரில் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தவள், கண்ணாடி வழியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டே வந்தாள்.

செல்லும் வழியில் குறுக்கே புகுந்த ஒரு வாகன ஓட்டியை வீசி கெட்டவார்த்தையில் திட்ட, தனக்குள் ஒடுங்கினாள் ஷ்ரதா. அவன் தான் பார்த்து வியந்தவன் அல்ல எனும் எண்ணமே அவளை சோர்வடைய வைத்தது.

அனைவரும் ஜனசந்தடி மிக்க பல தெருக்களை கடந்து கோவிலுக்குள் நுழையும்போது வாசலில் பக்தி மணம் கமழ்ந்தது.

நுழைவிலேயே அர்ச்சனைக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கிய அபிராமி, மதுபாலாவிற்கு வளையல் வாங்கி கொடுத்துவிட்டு, “உனக்கு என்ன பிடிக்கும் ஷ்ரதா?” என்று கேட்க,

“தாழம்பூ குங்குமம்” என்றான் வீசி.

அப்போது வாயைப் பிளந்து வீசியைப் பார்த்த ஷ்ரதாவை வளையல் கடையிலிருந்தவர் அடையாளம் கண்டு கொண்டவராய், “பாப்பா, நீங்க மட்டும் தான் வந்திருக்கீங்களா? அப்பா கூட வரலையா?” என்று குசலம் விசாரிக்க,

“இல்ல வரல” என்று திரும்பியவள், அங்கு ருத்ரமூர்த்தியாய் நின்றிருந்தவனைப் பார்த்ததும்,

“சாமி கும்பிட்டுட்டு வரேன்” என்று நழுவிவிட்டாள்.

அவள் உள்ளே செல்ல செல்ல விஜயாதித்தனை தெரிந்த ஒவ்வொருவராய் அவளிடம் வந்து நலம் விசாரிக்க, தப்பி வந்தால் போதும் எனும்படியாக அனைவரிடமும் ஒரு வரி பதிலிலேயே நழுவிவிட்டாள்.

இவற்றையெல்லாம் சகித்துக்கொண்ட வீசிக்கு அவள் அடுத்ததாக செய்த ஒரு காரியத்தை தான் சகிக்கவே முடியவில்லை.

காதல் கணம் கூடும்…

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!