5… ராட்சசனின் காதல் பாவை
போன பகுதியில்:
கர்ஜிக்க வெளியில் நின்று கேட்டுக் கொண்டிருந்த அனைவருக்கும் உடல் நடுங்கித்தான் போனது.
இனி…
மறுநாள்…
ஆபீஸ்.
சுனில் நின்றபடியே தூங்கிக் கொண்டிருக்க, விதுரனும் அவனுக்கு அடுத்தடுத்த வேலைகளைச் சொல்லிக் கொண்டே இருந்தான்.
“இன்னைக்கு கொடுக்க வேண்டிய ப்ராஜெக்ட் எல்லாம் டைம்க்கு போய்டணும். இன்னைக்கு இருக்கிற மீட்டிங் எதுவுமே மிஸ் ஆகக்கூடாது,” என்று சொன்னான் விதுரன்.
என்னதான் சுனில் தூங்கி வழிந்து கொண்டு இருந்தாலும், அவன் சொல்வதை அனைத்தையும் சரி பார்த்தவன்,
“ஆல்ரெடி எல்லா மீட்டிங்கும் பிக்ஸ் பண்ணியாச்சு பாஸ். ப்ராடக்ட் இன்னைக்கு ஈவினிங்குள்ள எல்லாருக்கும் போய்ச் சேர்ந்திடும். அப்புறம் இன்னைக்கு இன்டர்வியூ இருக்கு,” என்று சொன்னான் சுனில்.
அதே நேரம் விதுரனின் போன் அடித்துக் கொண்டே இருக்க, யார் அழைக்கிறார் என்று பார்த்தவன், அதில் வந்த பெயரைப் பார்த்தவுடன்,
“இவன் எதுக்கு எனக்கு இப்போ போன் பண்றான்?” என்று நினைத்த விதுரன், அந்த போனை எடுக்காமல் மீண்டும் வேலைகளைப் பார்க்கத் தொடங்கினான்.
அப்பொழுது ஆபீஸுக்கு வெளியே ஏதோ சத்தம் கேட்பது போல் இருக்க, அதைக் கேட்ட சுனில் மேலிருந்தபடியே என்னவென்று பார்த்தான்.
கீழே பத்திரிகையாளர்கள் குவிந்து இருந்தனர்.
அதைப் பார்த்த சுனிலுக்கோ ஒன்றும் புரியாமல், சிறிது நேரம் என்னவாக இருக்கும் என்று யோசித்தான்.
ஆனால் சுனில் எட்டிப் பார்க்கும் முன்பே, விதுரன் தனது லேப்டாப் மூலம் கீழே நிற்கும் கூட்டத்தை சி.சி.டி.வி. மூலம் பார்த்திருந்தான்.
சுனில் திரும்பி அவனைப் பார்க்கவும், “இது என்ன?” என்பது போல் விதுரன் கண்களால் சுனிலிடம் கேட்டான்.
“பாஸ், நான் கீழ போய் என்னன்னு பாக்குறேன்,” என்று சொன்னவன் வேகமாகக் கீழே வந்தான்.
கீழே வந்து அவர்களிடம் பேசத் தொடங்கினான்.
“இப்ப எதுக்கு எல்லாரும் இங்க வந்து இருக்கீங்க? நீங்க வர மாதிரி இங்க எந்த பிராப்ளமும் இல்லையே. இப்படி பிரஸ், மீடியா வர அளவுக்கு என்னாச்சு?” என்று கேட்டான் சுனில்.
பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவராக இவனைக் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க, அவர்கள் கேட்ட கேள்வியைக் கேட்டு இவன் அதிர்ந்து நின்றான்.
அதே நேரம் விதுரனின் போன் அடித்துக் கொண்டே இருக்க, அதில் கடுப்பானவன் அந்த போனை அட்டென்ட் பண்ணி காதில் வைத்தான்.
அவன் அட்டென்ட் செய்து காதில் வைத்ததுதான் தாமதம். ஒரு ஆணின் குரல் பலமாகச் சிரிக்கத் தொடங்கியது.
அதில் கடுப்பானவன்,
“இப்போ எதுக்கு எனக்கு கால் பண்ணிட்டு தேவையில்லாம சிரிச்சிட்டு இருக்க?” என்று சீறினான் அவனிடம் கோபத்தில் விதுரன்.
“சில், மிஸ்டர் விதுரன், சில். இப்போ நீங்கதான் தமிழ்நாடு முழுக்க பேசும் தொழிலதிபரா இருக்கீங்களே. அதுவும் இல்லாம இன்னைக்கு நீங்கதானே ட்ரெண்டிங் நியூஸ்,” என்று சொன்னான் குகன்.
“என்ன பைத்தியம் மாதிரி பேசிக்கிட்டு இருக்க?” என்று கோபமாகக் கத்தினான் அவனிடம் விதுரன்.
“சோசியல் மீடியா பாரு. அப்போ தெரியும் யாரு பைத்தியம்னு,” என்று சொன்ன குகன் போனை வைத்து விட்டான்.
குகன் சொல்லியதைக் கேட்டவன், உடனே தன் மொபைலில் சோசியல் மீடியாவில் தன்னைப் பற்றி என்ன பேசப்படுகிறது என்று ஆராய்ந்தான் விதுரன்.
ஒவ்வொரு தளத்திலும் அவன் உள்ளே சென்று கொண்டிருக்க, அனைத்திலும் ஒரு பெண் அவனை அறைவதுதான் வந்து கொண்டிருந்தது.
அதைப் பார்த்தவனுக்குக் கோபம் தலைக்கேற, அந்த பில்டிங்கே இடிந்து விடும் அளவிற்குக் கத்தினான் விதுரன்.
அப்பவும் அவன் கோபம் அடங்காமல்,
“சுனில்!” என்று கோபத்திலும் கர்ஜனையாகவும் அழைத்திருந்தான் அவனை விதுரன்.
பத்திரிகையாளர்கள் சொன்னதைக் கேட்ட சுனில் உறைந்து நிற்க, இப்பொழுது விதுரனின் சத்தத்தில் நினைவு வந்தவன், நொடியும் அங்கு நிற்காமல் அடுத்த நொடியே விதுரனின் முன்பு நின்றிருந்தான்.
என்னதான் அடுத்த நொடியே இவன் வந்திருந்தாலும், உடல் எல்லாம் வேர்த்து விறுவிறுத்து, அவன் முன்பு பயத்தோடே நின்றிருந்தான்.
ஏதோ சிங்கத்திடம் தனியாகக் குகைக்குள் மாட்டியது போல் இருந்தது இப்பொழுது அவனின் நிலைமை.
அவன் இப்படி வந்து அமைதியாக நிற்பதைப் பார்த்த விதுரனுக்கு இன்னும் கோபம் அதிகமாக வர, பல்லைக் கடித்துக் கொண்டு அவனிடம் பேசத் தொடங்கினான்.
“இது எப்படி வெளிய வந்துச்சு?” என்று மிகவும் ஆக்ரோஷமாகக் கேட்டான் விதுரன்.
அவன் கோபத்தைப் பார்த்த சுனிலுக்கு நின்ற இடத்திலேயே உயிர் போய்விடும் அளவுக்குப் பயமாக இருந்தது.
இருந்தும் அவன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லவில்லை என்றால், அடுத்த நொடியே பரலோகம் போவது நிச்சயம் என்று நன்றாகப் புரிந்து கொண்டவன்,
“பாஸ், நான் நைட்டு எல்லாமே கிளியர் பண்ணிட்டேன். இது எப்படின்னு தெரியல. அங்க இருந்த யார் கிட்டயும் எந்த ஃபுட்டேஜும் இல்ல. எல்லாமே நான் தான் வாங்கி டெலிட் பண்ணி, அவங்க கேமரா, வீடியோஸ், செல்போன் எல்லாமே செக் பண்ணிதான் நான் அனுப்பினேன். இந்த போட்டோ, வீடியோ அங்க இருந்த யார் கிட்டயும் இல்ல பாஸ்,” என்று உடல் வேர்க்கச் சொன்னான் சுனில்.
அதைக் கேட்ட விதுரனுக்குக் கோபம் அதிகமாகத்தான் வந்தது.
இன்னும் அவன் கோபத்தை ஏற்றுவது போல், கையில் இருந்த போனில் ஒரு செய்தியாளர் பேசத் தொடங்கி இருந்தான்.
“ஹாய் மக்களே! நம்ம இப்போ வி.டி. குரூப்ஸ் முன்னாடி இருக்கோம். இப்போ சோசியல் மீடியா ஃபுல்லா விதுரன் தேவ் பற்றிதான் பேசிட்டு இருக்காங்க. யாருமே நெருங்க முடியாத அவரை ஒரு பொண்ணு அடிச்சிருக்காங்க,” என்று சொன்னான் அந்த ரிப்போர்ட்டர்.
அதைக் கேட்டவனின் கோபம் எல்லையைக் கடக்க, கையில் இருந்த போன் சுவற்றில் பட்டு சில்லு சில்லாக நொறுங்கியது.
அதில் பயம் கொண்டு சுனில் இரண்டு அடி பின்னாடியே சென்று விட்டான்.
ஆனால் விதுரனுக்குக் கோபம் தலைக்கு ஏற,
“ஏய்! யாரடி நீ? இப்போ எங்க இருக்க? அந்தக் கடவுள் கிட்ட வேண்டிக்கோ, என் கண்ணுல மாட்டிக்கக் கூடாதுன்னு. அப்படி மறுபடியும் என் கண்ணுல பட்டா, உன்னோட விதியை அந்தக் கடவுளால கூட மாத்த முடியாது,” என்று ஒரு ராட்சசனைப் போல் சூளுரைத்துக் கொண்டிருந்தான் விதுரன்.
இவன் இப்படி கோபமாகக் கத்திக் கொண்டிருக்க, அதைப் பார்த்த சுனிலுக்குப் பயம் இருந்தாலும், இது இப்படியே விட்டால் சரிப்பட்டு வராது என்று நினைத்தவன் உடனே தனது போனை எடுத்து பி.ஆர். டிபார்ட்மெண்ட்டுக்கு மெசேஜ் செய்தான்.
உடனே அவர்களும் அந்த வீடியோவை யார் அப்டேட் பண்ணியது என்று ஆராயத் தொடங்கினார்கள்.
அதற்குள் பாடிகார்ட்ஸிடம் கீழே இருந்த அனைவரையும் அப்புறப்படுத்தச் சொல்லி இருந்தான்.
அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தக் கொஞ்சம் சிரமமாக இருக்க, அதை பெரும்பாடுபட்டு அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தான் சுனில்.
பத்திரிகையாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியவன், நேராக பி.ஆர். டிபார்ட்மெண்ட்டுக்குத்தான் வந்தான்.
யார் அனுப்பியது என்று சுமார் பதினைந்து நிமிடங்கள் தேடிக் கொண்டிருந்தார்கள்.
ஒவ்வொரு நிமிடமும் பல யுகங்கள் போல் சுனிலுக்குத் தெரிந்தது.
இந்த விஷயம் உலகம் முழுவதும் காட்டுத் தீயாகப் பரவ, அனைத்து பிசினஸ்மேன்களும் விதுரனுக்குக் கால் செய்து கொண்டே இருந்தார்கள்.
விதுரனின் அழைப்பு செல்லவில்லை என்றதும், சுனிலுக்கு அடுத்தடுத்து வந்த எந்தப் போனையும் அவனால் எடுக்கக்கூட முடியவில்லை.
அவனுக்குத் தெரியாதா, பின்னர் எதைப் பற்றிக் கேட்கப் போகிறார்கள் என்று? அதனால் இந்தப் பிரச்சனையை சரி செய்துவிட்டு, பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவன், மும்முரமாக அந்த வேலையில் இறங்கினான்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து அந்த ஐ.டியைக் கண்டுபிடித்தவர்கள், உடனே அந்த ஐ.டிக்குரிய நபர் யார் என்று தேடினார்கள்.
அதுவும் ஃபேக் ஐ.டியாக இருக்க, அது இன்னும் டென்ஷனை அதிகமாக்கியது.
ஆனாலும் அதில் என்னென்ன நியூஸ்கள் வந்திருக்கிறது என்று தொடர்ந்து அதை செக் பண்ணிக் கொண்டே இருக்க, மீண்டும் அதிலிருந்து ஒரு போட்டோ ரிலீஸ் ஆனது.
விதுரனும் அந்தப் பெண்ணும் அணைத்துக் கொண்டு இருப்பது போல் இருந்தது அந்தப் போட்டோ.
அதைப் பார்த்தவனுக்கு இன்னும் டென்ஷன் அதிகமாக, இன்னும் வேகமாக அந்த ஐ.டியை யார் யூஸ் பண்ணுகிறார்கள் என்று பார்த்தான்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்து அது யார் என்று தெரிந்தவுடன், நொடியும் தாமதிக்காமல், அந்த ஐ.டியில் இருந்து இனி எந்த போட்டோக்களும் வராத அளவுக்குச் செய்யச் சொல்லியவன், ஏற்கனவே அப்டேட் செய்திருந்த அனைத்து நியூஸ்களையும் டெலிட் செய்யும்படி உத்தரவிட்டு இருந்தான்.
அது அடுத்த பத்து நிமிடத்தில் முடிந்திருக்க, அடுத்த நொடியே தாமதிக்காமல் தனது ஆட்களை அழைத்தவன், அவனின் அடையாளத்தைச் சொல்லி அவனைத் தூக்கும்படி உத்தரவு விட்டிருந்தான்.
நேராக விதுரனின் அறைக்கு வந்தவன்,
“பாஸ், அது யாருன்னு கண்டுபிடிச்சாச்சு. ஆள தூக்கச் சொல்லிட்டேன். இந்த வீடியோ ஒரிஜினல் கிடையாது, ஃபேக் வீடியோன்னு சொல்லி நம்ம தரப்பில இருந்து ஒரு போஸ்ட் போடச் சொல்லியாச்சு பாஸ். இந்தப் பிரச்சனையைப் பத்தி பேசாத அளவுக்கு அடுத்து ஒரு ட்ரெண்டிங் நியூஸ் கொடுத்தாச்சு பாஸ்,” என்று சொன்னான் சுனில்.
“இதுக்கெல்லாம் காரணம் அவதான். அவ எங்க இருக்கான்னு எனக்குத் தெரிஞ்சே ஆகணும்,” என்று சொன்னான் விதுரன்.
அதைக் கேட்ட சுனில் ஒரு நிமிடம் ஆடித்தான் போனான்.
“பாஸ், அதான் எல்லா ப்ராப்ளத்தையும் முடிச்சுட்டோமே,” என்று சுனில் திக்கித் திணறிச் சொல்ல,
அவன் சொல்லி முழுதாக முடிக்கும் முன்பே, அவன் உரசிச் செல்வது போல் நூலில் இடைவெளி விட்டு ஒரு புல்லட் அவனைக் கடந்து சென்றது.
அதில் அவன் கப்சிப் என்று மொத்தமாக அடங்கி விட்டான்.
“இங்க பாரு. உனக்கு உன் உயிர் வேணும்னா, அவளோட உயிர் எனக்கு வேணும்,” என்று கர்ஜனையாகச் சொன்னான் விதுரன்.
அதைக் கேட்ட சுனிலுக்கு, தான் எங்கே சென்று அவளைத் தேடுவது என்றுதான் மனதில் தோன்றியது.
இருந்தும் தனக்கு உயிர்தான் முக்கியம் என்று நினைத்தவன்,
“ஓகே பாஸ்,” என்று சொல்லியவன், உடனே நேற்று அனுப்பிய பாடிகார்ட்டை அழைத்து, அவளை எங்கு ஆட்டோ ஏற்றி விட்டான் என்று விசாரித்தான்.
அவன் சில டீட்டெயில்ஸ் சொல்ல, அதன் மூலம் இன்னும் சில ஆட்களை அனுப்பி அவளைத் தேட உத்தரவிட்டு இருந்தான்.
இப்படி ஒரு புறம் அவளைத் தேடிக் கொண்டிருக்க, இங்கு விதுரனும் கட்டுக்கடங்காத கோபத்துடன் அந்த அறையில் வெறிபிடித்த சிங்கம் போல் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தான்.
அவனைப் பார்க்கப் பார்க்க சுனிலுக்குப் பயம்தான் வந்தது.
இனி என்ன நடக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
காதல் பாவை தொடரும்…
இப்படிக்கு,
உங்கள் அன்புத் தோழி…
