காதல் கணம்-4

காதல் கணம் 4

மறுநாள் காலையில் அவன் உத்தரவிட்டிருந்ததால் இதுவரை தான்  நுழைந்தேயிராத அந்த குட்டி பிராந்தியத்திற்குள் காஃபிகப்புடன் நுழைந்தாள் ஷ்ரதா.

அந்த அறையில் டம்பிள் செட், புல்லப் பார், ஸ்டேஷனரி பைசைக்கிள், ரோவிங் மிஷின், பார்பெல் செட் என சுற்றி எங்கிலும் உலோகங்களின் சாம்ராஜ்ஜியம்.

அவள் உள்ளே நுழைந்த சமயம் பார்த்து  ட்ரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்தான் வீசி.

பயந்து பயந்து உள்ளே வந்தவள், “என்னங்க” என்றாள் சன்னக்குரலில்.

ட்ரெட்மில்லை நிறுத்தித் திரும்பியவன் காஃபியை வாங்கி குடித்துக்கொண்டே, “என்ன சாப்பிட்டு சாப்பிட்டு வீட்லயே தூங்கி எந்திரிக்கலாம்னு நினைப்பா?” என்றான் புருவத் தூக்கலுடன்.

அவளுக்கு அவன் என்ன சொல்ல வருகிறான் என்றே புரியவில்லை. பேந்த பேந்த விழித்தாள்.

“என்ன முழிக்கிற? நமக்குத் தெரிஞ்சவர் ஒருத்தரோட ஆஃபீஸ்ல இன்னைக்கு  உனக்கு இன்டெர்வீவ். ரெடியா இரு.” என்றான் ஒற்றைத் தகவலாக.

தலையும் புரியாமல் வாலும் இல்லாமல் பேசியவனைப் பார்த்து, “இல்ல” என்றவள் ஆரம்பிக்க,

“ம்! சத்தமாப் பேசு” என்றவன் அருகில் வரவும்,

“இல்ல. ஒண்ணுமில்ல” என்று தலையாட்டியவள், அவன் காஃபிகப்பை திருப்பித் தரவும் ஓடியேவிட்டாள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் மதுபாலாவும் கீழே கிளம்பி வர, “என்ன அண்ணி, எங்க கிளம்பி நிற்கிறீங்க?” என்று அனுசரணையாக விசாரித்தாள் ஷ்ரதா.

“ம்? எங்க வீட்டுக்குத் தான். பின்னே இங்கேயேவா இருந்திட முடியும்?” என்று நீட்டி முழக்கினாள் அவள்.

“அருண்மொழியண்ணா தூத்துக்குடிலயிருந்து வீட்டுக்கு வந்துட்டாங்களா அண்ணி? நேத்து போன்ல பேசினப்போ அம்மா சொல்லலையே? சரியா முகூர்த்தத்தப்போ போனாங்க” என்று சோகக்கீதம் வாசித்தவளை, உண்மை தெரிந்த மதுபாலா கழிவிரக்கத்துடன் பார்த்தாள்.

ஏனோ ஷ்ரதாவிற்கு உண்மை தெரியாமலிருப்பதே நல்லதெனப் பட்டது அவளுக்கு.

அருண்மொழி தன் காரிலிருந்து இறங்கி உள்ளே நுழைந்த நேரம், தானும் மாடிப்படிகளிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தான் வீசி.

இருவரின் கண்களும் சந்தித்தபோது கூர் வாள்கள் இரண்டு மோதிக்கொண்டன போல், ‘கிளிங்’ என்ற சப்தம் இல்லாமலேயே ஒரு பளிச்.

மாடிப்படிகளின் முடிவில் இருந்த பூச்செடியை வேண்டுமென்றே காலால் எட்டி உதைத்த வீசி, “ஷ்ரதா!” என்று அதிர்ந்த குரலில் அழைக்கவும், ஓடிவந்தவள் அங்கப் பிரதட்சணம் செய்து கொண்டிருந்த பூச்செடியைக் கண்டதும், தனது வேகத்தைக் குறைத்து விலகி நின்றாள்.

அவளின் தோளில் கைப்போட்ட  வீசி, “மார்னிங் கிஸ் கொடுக்கும்போது சொன்னதை மறந்துட்டியா டார்லிங்? பாரு லேட்டாகிடுச்சு.” என்று தன்னுடனேயே அவளை இழுத்துச் சென்றான்.

இயலாமையில் தன் அண்ணனை திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றாள் ஷ்ரதா.

வீசி கிளம்பியவுடன் மதுபாலாவை சமீபித்த அருண்மொழி, “நான் இந்த வீட்டு மாப்பிள்ளை. கொஞ்சமாவது உன் தம்பி எனக்கு மரியாதை கொடுக்கிறானா பாரு?” என்று தன்போக்கில் கத்தினான்.

மதுபாலாவோ அவனுக்கு சிரித்தபடியே பதிலளித்தாள்.

“இப்போ அவன் உங்க வீட்டு மாப்பிள்ளையும் கூட. மறந்துறாதீங்க.” என்று அறிவுறுத்தினாள்.

“சரி, கிளம்பு போகலாம்.” என்று வீராப்பு காட்டியவனிடம்,

“இருங்க அம்மாக்கிட்ட சொல்ல வேணாமா?” என்றபடியே,

“ம்மா” என்று சமையலறையில் இருந்த அபிராமியை அழைத்த மதுபாலா‌,

அவர், “வாங்க! வாங்க மாப்பிள்ளை! என்னடி நிக்க வச்சி பேசிட்டு இருக்க? மாப்பிள்ளையை உட்காரச் சொல்லு. இருங்க மாப்பிள்ளை காஃபி கொண்டு வரேன்.” என்று திடீர் தேனியாய் சுறுசுறுப்பாகவும், முகத்தில் ஒழுங்கு காட்டினாள்.

அருண்மொழியோ, “இல்ல அத்த, வெளிய முக்கியமான வேலை இருக்கு. சீக்கிரம் இவங்களை விட்டுட்டுப் போகணும். இன்னொரு நாள் பொறுமையா சாப்பிடுறேன்” என்றுவிட்டு தன் மனைவியையும், குழந்தைகளையும் காரில் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டான்.

தன்னுடன் வருபவனிடம் மூன்று முறை கேட்டும் பதிலில்லை என்றாலும் ஷ்ரதா தன் முயற்சியை கைவிடுவதாய் இல்லை. மீண்டும் மீண்டும் கேட்டாள்.

“என்னங்க, இப்படியேவா இன்டெர்வீவ்க்கு போவாங்க?” என்றாள்.

எல்லாம் சரியாய் இருந்தாலும் ஷ்ரதா இப்படி அனல் மேல் இட்ட புழுவாய் தான் நெளிந்துக் கொண்டிருப்பாள் என்பது வேறு கதை.

“என்னங்க” -மீண்டும் அதே கெஞ்சல் குரல்.

“எல்லாம் நான் பார்த்துக்கிறேன்.” -அவ்வளவு தான் அவனது பதில்.

ஷ்ரதா கப் ஷிப்.

விரைவாக காரை செலுத்தியவன் குபீரென்று உயர்ந்து நின்ற அந்த பத்துமாடி கட்டடத்திற்கு வெளியே காரை நிறுத்தி அவளை இறக்கிவிட்டபோது, பயத்தில் அவனை திரும்பிப் பார்த்தபடியே சென்றாள் ஷ்ரதா.

நேரம் கொல்லைத் தின்ற குதிரைப் போல் வேகமாய் ஓட, அரைமணி நேரத்தில் வெளியே வந்தவள் காரினுள் குனிந்து, “என் பேரை சொன்னதும் காபி, ஸ்னாக்ஸ் எல்லாம் தந்தாங்க. ஆனா இன்டெர்வீவ் எதுவும் கன்டக்ட் பண்ணலையேங்க” என்க,

“ம், நான் சொன்னதை தான் செஞ்சிருக்காங்க” என்றவன் காரின் மறுபக்கக் கதவை அவளுக்காக திறந்துவிட்டான்.

உள்ளே இருக்கையில் வந்து அமர்ந்தவள் அவனை கேள்வியாய் நெற்றிச் சுருக்கிப் பார்க்க, “உன் பாசமலர் அண்ணன் இன்னைக்கு வந்தாரில்ல? நீ அவர்கிட்ட கொஞ்சி குலாவக்கூடாதுன்னு தான் உன்னை இன்டெர்வீவ்னு பொய் சொல்லி வெளிய கூப்பிட்டு வந்தேன். வீட்டுல அம்மா கேட்டா ரிசல்ட் போன்ல சொல்வாங்கன்னு சொல்லிடு” என்றதும், அவளுக்கு தன்னிரக்கத்தில் அழுகை வந்தது.

இது என்ன மாதிரியான சித்ரவதை என்றும் தோன்றியது. இல்லை என்னால் இதற்கு மேலும் இந்தக் கொடுமைகளை எல்லாம் தாங்கிக்கொள்ள முடியாதென முதல் முறையாய் தைரியம் வந்து அவனிடம் அந்தக் கேள்வியைக் கேட்டாள்.

“ஏன்? ஏன் இப்படி பண்றீங்க? உங்களுக்கு என்கிட்டயிருந்து என்ன தான் வேணும்?” என்றாள் பரிதாபமாக.

அவன் புருவம் ஏளனமாய் ஏறியிறங்கியது. ‘அட! நீ என்னை கேள்வி கேட்கும் அளவிற்கு உயர்ந்துவிட்டாயா?’ என்று கேலி பேசியது.

“சொல்லுங்க உங்களுக்கு எப்படி எனக்கு மல்லிப்பூ பிடிக்காதுன்னு தெரியும்? உங்களுக்கு எப்படி எனக்கு பால் பிடிக்காதுன்னு தெரியும்? உங்களுக்குத் தெரியுமா? எல்லாப் பொண்ணுங்களுக்கும் தன் புருஷன் தன்னை புரிஞ்சி வச்சிக்காதது தான் பிரச்சினையா இருக்கும். எனக்கு நீங்க என்னை இன்ச் இன்ச்சா புரிஞ்சி வச்சிருக்கிறது தான் பிரச்சினையா இருக்கு. சிரிக்காதீங்க. சொல்லுங்க? எப்படி எனக்கு காரம் ஒத்துக்காதுன்னு உங்களுக்குத் தெரியும்? அந்த… அந்த பர்ப்பிள் கலர் பிடிக்கும்னு எப்படித் தெரியும்?” என்றவள் முடிவில் மூச்சு வாங்க, அவளின் மூச்சு வாங்கல் பார்க்கக்கூடாது என நினைத்தாலும் அவனது விழிகளை வேறொரு பக்கமே இழுத்துச் சென்றன.

சற்றே பார்த்தும் பார்க்காததும் போல் பாவனை செய்தவன், “சபாஷ்” என்று தன் கைகளைத் தட்டி சிரிப்பில் மீசைத் துடிக்க, “கேள்விப் படலம் முடிஞ்சதா மேடம்? காது ரொம்ப வலிக்குது. இப்ப நம்ம கிளம்பலாமா?” என்று தன் காதைக் குடைந்து காண்பித்தபடியே காரை இயக்கினான்.

அவளால் இந்த பரிகாசத்தை  தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. குப்பென்று முகம் சிவந்து தேம்பித் தேம்பி அழுதாள்.

அவளிடம் தன் கைக்குட்டையை நீட்டியவன், அவள் வாங்கவில்லை எனவும் கோபத்தில் ஸ்டியரிங்கைப் பிடித்து சுழற்றினான்.

ஆற்றாமையில் இருக்கையில்  சாய்ந்துக்கொண்ட ஷ்ரதா ஒரு நொடி  காரின் கதவைத் திறந்து குதித்து விடலாமா என்றுகூட யோசித்தாள். ஆனால், பாழாய் போன அந்த மனதில் தைரியமில்லை.

அன்றிரவு ஒரு பன்னிரண்டு மணி இருக்கும். மெதுவாய் மெத்தையில் புரண்டுப்படுத்த ஷ்ரதா, எதுவோ தன் கன்னத்தில் உரசியது போல் இருக்கவும், கண்மூடியபடியே அதனை கண்டுபிடிக்க முயன்றாள்.

“மயிலிறகா? இல்லையே கொஞ்சம் குத்துற மாதிரி  இருக்கே. ரொம்ப மென்மையாவும் இல்லாம முள் மாதிரியும் இல்லாம ஒருவேளை.. ஒருவேளை.. அவர் மீசையா இருக்குமோ?’ என பதறி கண் விழித்துப் பார்த்தாள்.

அப்போதும் அவள் கண்மூடி இருப்பது போல் தான் இருந்தது. அவளுக்கு இருள் என்றாலே பயம். கண்மூடியபடியே பக்கத்தில் மெத்தையில் தடவிப் பார்த்தாள்.

அவனைக் காணவில்லை எனவும் ரோமாஞ்சனத்தில் நா உலர, “என்னங்க” என்றாள்.

எந்தப் பதிலும் இல்லை. ஆனால், அந்த அந்தகாரத்தின் அமைதி மட்டும் ஆயிரம் பீரங்கிகளுக்கு ஒப்பாக அவளை அச்சுறுத்திப் பார்த்தன.

“முருகா, என்னை காப்பாத்து” என்று வேண்டியபடியே எட்டி சுவற்றில் சுவிட்ச்போர்டைத் தேடினாள்.

அவளின் வேண்டுதலை முருகன் கேட்டது போல் திடீரென அவ்வறையில் வெளிச்சம் பரவியது.

கவன ஈர்ப்பான விட்டத்து விளக்கை பார்த்துக் கொண்டிருந்தவளின் கன்னத்தில் மீண்டும் ஒரு உரசல். காதில் ஒரு கிசுகிசுப்புக்குரல். “ஹேப்பி பெர்த்டே ஷ்ரதா”

காதருகில் ஒலித்ததென்னவோ அவன் குரல் தான். ஆனால், அந்த கன்னத்து உரசல்?

“மியாவ்”

“பாரு, இந்த கிட்டியும் உனக்கு பெர்த்டே விஷ் சொல்லுது”

‘பூனை, சே! என் கன்னத்துல உரசினது இது தானா? இதோட மீசை தானா? நான் என்னென்னவோ கற்பனை பண்ணினேனே. ஆமா இந்தப் பூனைகளுக்கெல்லாம் எதுக்கு மீசை?’ என்று மனதிற்குள் சபித்தாள் பிரம்மனை.

“என்ன பார்க்கிற? பூனை உனக்கு பிடிச்ச பெட் தானே? வாங்கிக்கோ” என்றவனின் அடுத்த சர்ப்ரைஸில் மின்சாரத்தால் தாக்குண்டாள் ஷ்ரதா.

“அனதர் கிஃப்ட்” என்று ஒரு சாட்டின் துணியை அவன்‌ விலக்க, உள்ளேயிருந்த தன் ஜென்ம எதிரியான மீனைப் பார்த்து மிரண்டாள் ஷ்ரதா.

உலக வழக்கப்படி புழுக்களுக்கு தான் மீன் ஜென்ம எதிரி. ஆனால், இங்கு வீசியின் முன் புழுவாய் நெளியும் ஷ்ரதாவிற்கு அது ஜென்ம எதிரியாய் தெரிந்ததென்னவோ வியப்பு தான்.

“எனக்கு மீன்னா பயம். ப்ளீஸ், ப்ளீஸ், இந்த ஃபிஷ் டேங்கை வெளியக் கொண்டுப்போய் போட்டிருங்க.”

“ம்ஹூம் முடியாது. இனி நீதான் இந்த கோல்டு ஃபிஷ்க்கு ஃபுட் போடுற.”

சன்னமான குரலில் முணுமுணுத்தாள் ஷ்ரதா.

“நானா? முடியவே முடியாது. எனக்கு சின்ன வயசிலிருந்தே இதைப் பார்த்தா பயம்.” என்று தன் விழிகளை மூடிக்கொண்டாள்.

“தெரியும்” என்றவனை, விழி விரித்துப் பார்த்தவள்,

“தெரியுமா? எப்படி?” என்று கேட்க, தன் ஆயுதஎழுத்துமார்க் புன்னகையை பதிலாக்கி விலகினான் வீசி.

கோல்டு ஃபிஷ்ஷை பார்த்தவளுக்கு அது பெரிதாகி தன்னை கடிக்க வருவது போலவே எண்ணங்கள் பரிணமிக்க, பயத்தில் போர்வையை தலை வரை மூடி சத்தம் வராமல் அழுதாள்.

அவ்வப்போது வந்த விசிப்புச் சத்தத்திலேயே அவளின் அழுகையை தெரிந்துகொண்ட வீசி, ‘நேத்து கார்ல என்னை கேள்வி கேட்டதுக்கு இது தான் தண்டனை’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.

காதல் கணம் கூடும்…

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!