தீ 🔥 – 4

அத்தியாயம் 4

 

அந்தக் குழலைப் போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே…

 

“தாரா… ப்ளீஸ், இனி தயவு செஞ்சு என்னை அங்க கூப்பிடாதடி” என்று காரில் சென்று கொண்டிருக்கும் போது பைரவி கூற, இவ்வளவு நேரம் தன் போனை நோண்டிக் கொண்டிருந்த தாரா, சட்டென்று நிமிர்ந்து ‘ஏன்?’ என்பது போல் தன் தோழியைப் பார்த்தாள். ஒரு பெருமூச்சை விட்ட பைரவி,

“அது… அது… என்னால மாமாவுக்கும் அத்தைக்கும் நடுவுல பிரச்சனை வரதை நான் விரும்பல. அதான்… சொன்னேன். அப்புறம் நீ இனிமேலாவது தயவுசெஞ்சு கல்யாணத்துக்கு ஒத்துக்கோ” என்று பைரவி மிகவும் சோர்ந்த குரலில் கூறினாள்.

“அதே தான் பையூ நானும் சொல்றேன், முதல்ல நீ கல்யாணம் பண்ணிக்கோ… அடுத்த முகூர்த்தத்திலேயே நீங்க யாரைக் கல்யாணம் பண்ணிக்க சொன்னாலும் நான் பண்ணிக்க ரெடி!” என்று தாரா தன் தோள்களைக் குலுக்கிக் கூறினாள்.

“அய்யோ… தாரா! உனக்கு ஏண்டி என் நிலைமை புரிய மாட்டேங்குது? எனக்கு இந்தக் கல்யாணத்துல எல்லாம் சுத்தமா விருப்பமே இல்லை. அதோட கண்டிப்பா அது எனக்கு சரிவராது, சொல்றதைப் புரிஞ்சுக்கோ… ப்ளீஸ், தயவுசெஞ்சு நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கோ” என்று பைரவி கெஞ்சினாள்.

“இங்க பாரு பையூ, நீ எப்படி கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு ஒரே பிடிவாதமா இருக்கியோ, அதே மாதிரிதான் நானும்! நீ கல்யாணம் பண்ணிக்காம நானும் பண்ணிக்க மாட்டேன். வேணும்னா நீ கல்யாணத்துக்கு ஓகே சொல்லு, நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அடுத்த முகூர்த்தத்திலேயே நானும் பண்ணிக்கிறேன்” என்று தாரா உறுதியாகக் கூறினாள்.

“ஏய்… தாரா! ப்ளீஸ் டி, நான் சொல்றதை கொஞ்சமாவது புரிஞ்சுக்கோ. என்னை எதிர்பார்த்து உன் வாழ்க்கையை நீ அழிச்சுக்காதடி” என்று பைரவி கூற,

“நான் எதுக்குடி என் வாழ்க்கையை அழிச்சுக்க போறேன்? நீ கல்யாணத்துக்கு ஓகே சொல்ற வரைக்கும் நான் இதோ இப்படியே ஜாலியா இருந்துட்டு போறேன்…” என்று தாரா அலட்சியமாகக் கூறினாள்.

“அது… இல்லை தாரா, நான் என்ன சொல்ல வரேன்னா…” என்று பைரவி ஏதோ கூற வர,

“ஏய்… போதும் டி, இனி அதைப் பத்தி எதுவும் பேசாத. நம்ம தலையில என்ன எழுதி இருக்கோ, அதன்படியே எல்லாம் நடக்கும்… சரியா?” என்ற தாரா, மீண்டும் தன் போனுக்குள் தலையை நுழைத்துக்கொண்டாள். பைரவிக்கோ இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்படியே காரின் ஜன்னலில் தலைசாய்த்துக் கண் மூடியவளின் நினைவடுக்குகளில் ஏதேதோ காட்சிகள் தோன்றி மறைந்தன. அவளின் கண்ணிமையோரத்தில் இருந்து கண்ணீர் வழிய, அப்போது சரியாக அந்தக் காரின் மியூசிக் சிஸ்டத்தில் இருந்து அவள் நினைவுகளுக்குத் தகுந்தாற்போல் பாடல் ஒலிக்கத் தொடங்கியது.

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்…

தவம்போல் இருந்து யோசிக்கிறேன்

அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்…

கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்

கேட்பதை அவனோ அறியவில்லை…

காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே

அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை…

புல்லாங்குழலே! பூங்குழலே!

நீயும் நானும் ஒரு ஜாதி…

என் உள்ளே உறங்கும் ஏக்கத்திலே

உனக்கும் எனக்கும் சரிபாதி…

கண்களை வருடும் தேனிசையில்

என் காலம் கவலை மறந்திருப்பேன்!

இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான்

என்றோ என்றோ இறந்திருப்பேன்!

உறக்கம் இல்லா முன்னிரவில்

என் உள்மனதில் ஒரு மாறுதலா…

இரக்கம் இல்லா இரவுகளில்

இது எவனோ அனுப்பும் ஆறுதலா…

எந்தன் சோகம் தீர்வதற்கு

இதுபோல் மருந்து பிறிதில்லையே!

அந்தக் குழலைப் போல் அழுவதற்கு

அத்தனை கண்கள் எனக்கில்லையே…

 

கண்களை மூடி அந்தப் பாடலின் வரிகளில் தன்னைத் தொலைத்த பைரவியின் கண்களிலிருந்து அவளையும் அறியாமல் கண்ணீர் வழிய, அப்போது சரியாகக் கார் நின்றது. கார் நின்றதும் என்னவென்று பார்ப்பதற்காகக் கண்களைத் திறந்த பைரவிக்கு, தங்கள் அலுவலகம் வந்துவிட்டது என்று புரிந்தது. தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் தாராவுக்குத் தெரியாமல் துடைத்துக்கொண்டு பைரவி காரிலிருந்து இறங்கினாள். தாராவும் காரை விட்டு இறங்கி, அதற்குண்டான பணத்தைக் கொடுத்துவிட்டு அலுவலகத்தினுள் செல்ல, அந்த இடமே ஒரே பரபரப்பாக இருந்தது.

“ஏய், என்ன எல்லாரும் இப்படி பரபரப்பா சுத்திக்கிட்டு இருக்கீங்க? என்ன மேட்டர்?” என்று தாரா கேட்க,

“சார் தான் ஏதோ முக்கியமான மீட்டிங்னு சொன்னாரு, அதான் எல்லாரும் கொஞ்சம் பரபரப்பா இருக்கோம்” என்று ஒரு பெண் கூறினாள்.

“ஓ… அப்படியா?” என்று கூறிய தாரா வேகமாகத் தன் இடத்தை நோக்கிச் செல்ல, பைரவியும் தன் இடத்திற்குச் சென்றுவிட்டாள்.

காலை 11 மணி அளவில் அந்த அலுவலக மீட்டிங் ஹாலில் அனைவரும் அமர்ந்திருக்க, அவர்களின் முன்பு 50 – 55 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார்.

“பரவாயில்லையே, நான் சொன்ன கொஞ்ச நேரத்துல எல்லாரும் மீட்டிங்குக்கு வந்துட்டீங்க… குட்! சரி, இப்போ உங்க எல்லார்கிட்டயும் ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்திச் சொல்லப்போறேன். அது என்னன்னா… நான் கூடிய சீக்கிரத்துல நம்ம கம்பெனியை வேறொருத்தர்கிட்ட விற்கப்போறேன்” என்று அந்தப் பெரியவர் கூற, அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சி!

“சார்… என்ன சார் சொல்றீங்க? எதுக்காக இப்போ திடீர்னு கம்பெனியை விற்கப் போறீங்க?” என்று தாரா சற்று அதிர்ச்சியோடு கேட்க, அதற்கு லேசாகப் புன்னகைத்த அந்தப் பெரியவர்,

“என்னடா பண்றது… இந்தக் கிழவனுக்கு வயசாயிடுச்சு, அதான்! அதோட என்னாலயும் இந்தக் கம்பெனியை இதுக்குமேல என் முதுகுல தூக்கிச் சுமக்க முடியலை. என் பையனும் ஃபாரின்ல செட்டில் ஆயிட்டான். என்னையும் என் வைஃபையும் கூட அங்க வரச் சொல்லிட்டான். அதான் போறதுக்கு முன்னாடி இந்தக் கம்பெனியை ஒரு நல்ல கம்பெனியா பார்த்து அவங்ககிட்ட வித்துடலாம்னு இருக்கேன்” என்று அவர் கூற, அங்கிருந்த அனைவருக்கும் அது பெரிய அதிர்ச்சியாகவே இருந்தது. ஏனென்றால் இதுவரையில் அனைவரும் அவரவர் விருப்படி சந்தோஷத்தோடு சுகந்திரமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். இனி வரப்போகிறவர் எப்படி இருப்பாரோ என்ற பயம் அவர்களுக்குள் தொற்றிக்கொண்டது.

பின்பு சில முக்கியமான விஷயங்களைப் பேசிவிட்டு, “சரி எல்லாரும் போங்க… போய் உங்க வேலையைப் பாருங்க” என்று கூறியவர், “பைரவி, நீ மட்டும் ஒரு நிமிஷம் இங்க வாம்மா” என்று கூப்பிட்டார். அவளோ சற்று தயக்கத்தோடு அவர் அருகில் வந்து,

“சொல்லுங்க சார்…” என்று கேட்க, அவளை அன்போடு பார்த்துப் புன்னகைத்தவர்.

“பைரவி, இந்தக் கம்பெனியை நான் இன்னொருத்தர் கையில கொடுக்குற வரைக்கும் நீதான் இதைப் பத்திரமா பார்த்துக்கணும்” என்று கூறினார்.

“ஐயோ சார்! என்னால எப்படி சார்? சாரி… என்னால இதெல்லாம் மேனேஜ் பண்ண முடியாது சார்” என்று அவள் தயங்க, அவளைப் பார்த்து மீண்டும் புன்னகைத்தவர்.

“இல்லை பைரவி, உன்னைத் தவிர வேற யாராலயும் இந்தக் கம்பெனியைப் பொறுப்பா பார்த்துக்க முடியாது. அதனால தான் சொல்றேன், நீதான் இந்தக் கம்பெனியை கொஞ்ச நாளைக்கு ஹேண்டில் பண்ண போற. ஒரு கம்பெனி கிட்ட ஆல்ரெடி டீல் பேசி இருக்கேன். கம்பெனி கைமாறினாலும் இங்க இருக்குற எந்த ஸ்டாஃப்புக்கும் எந்த பிராப்ளமும் வரக்கூடாது. எல்லாரும் அப்படியே தொடரணும். ஏன்னா இங்க இருக்குற எல்லாருமே நாம கொடுக்குற சம்பளத்தை நம்பி தானே இருக்காங்க… அதனால தான், ப்ளீஸ் எனக்காகடா…” என்று தன் மெலிந்த குரலில் அன்போடு கேட்டார்.

“ஆனா எப்படி சார்… என்னால முடியுமா?” என்று பைரவி தயங்க,

“இப்போ என்னோட ஹெல்த் வேற சரியில்லை. அதனால தான் என் பையன் கம்பெனியை வித்துட்டு அவன் கூட வந்து செட்டில் ஆகச் சொன்னான். எனக்கு அது சரின்னு பட்டுச்சு. இப்போ என் மருமகள் வேற பிரக்னண்டா இருக்கா, அவளைப் பார்த்துக்கவும் ஆள் வேணும் இல்லையா? அதான் நாங்களும் அங்க போறோம். ஒருவேளை நாங்க முன்னாடியே கிளம்புற மாதிரி சூழ்நிலை வந்தாக்கூட நீ தான் இந்தக் கம்பெனியைப் பொறுப்பா பார்த்துக்கணும்” என்று அவர் கூற, முதலில் தயங்கிய பைரவி பின்பு சரி என்று ஒப்புக் கொண்டாள்.

அப்படி என்னதான் நடந்தது பைரவியின் கடந்த காலத்தில்? ஏன் பைரவி திருமணம் என்றாலே அலறுகிறாள்? அவள் மனதை ஆட்கொண்டிருக்கும் அந்த ரகசியம் என்ன? பைரவியால் இந்த நிறுவனத்தைச் சீராக வழிநடத்த முடியுமா? நமது கதையின் நாயகனும் நாயகியும் எப்போது, எப்படிச் சந்திக்கப் போகிறார்கள்? மோதலில் தொடங்குமா, இல்லை பார்த்தவுடனேயே காதலில் மலருமா?  இந்த கேள்விகளுக்கான விடைகளைத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்…

 

தீராத காதல் தீயாக மோத…

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!