ஆதித்யா மறைந்த செய்தி சாயங்காலம் தான் அறிவிக்கப்பட்டிருந்ததால், செய்தி கிடைத்த மறுநிமிடத்தில் இருந்து ஆதித்யாவின் வீட்டில் வெள்ளை நிற உடையணிந்த மனித வெள்ளம் அலைமோதியது. பத்திரிக்கையாளர்கள் துவங்கி தெரிந்தவர்கள் நண்பர்கள் என மொத்த தொழில் உலகத்தினரும் படையெடுத்து வந்தனர். சாயங்காலம் மறைந்து இரவு வந்திருந்தும் மக்கள் கூட்டத்தினரின் வருகை குறைந்தபாடில்லை.
அவர்கள் அனைவரையும் வாட்டசாட்டமான பாதுகாவலர்கள் சோதனை செய்தபடி உள்ளே அனுப்பினர். ஆதித்யா பயணம் செய்த அவனது பிரைவேட் சாப்பர் நடுவானில் வெடித்து சிதறியதில் அவனது உடல் கிடைக்காமல் போகவே. அவனது புகைப்படத்திற்கு மாலையிட்டு அது தான் நடுவில் வைக்கப்பட்டிருந்தது.
அதன் அருகே துக்கம் நிறைந்த வதனத்தில், கண்ணீர் வடிய அமர்ந்திருந்தாள் அவனது சகோதரி அருந்ததி. தன் கணவன் நாகா தனக்கு அழைத்து ஆதித்யா சென்ற விமானம் வெடித்து விட்டது என்று சொன்னதில் இருந்தே இப்படி தான் துடித்து கொண்டிருக்கிறாள்.
தனது தமையனுடன் அவள் கழித்த அந்த சுகமான நாட்கள் எல்லாம் அவள் கண் முன் வந்து போக, இனி அவன் தன்னுடன் இருக்க போவதில்லை என்கின்ற எண்ணம் அவளை மிகவும் வாட்டியது.
அடிவயிற்றில் இருந்து எழுந்து வந்த துக்கம் அவள் நெஞ்சை அடைக்க, கண்ணீர் விடாமல் வழிந்து கொண்டிருந்தது.
” ஆதி அண்ணா வந்திரு ப்ளீஸ், அம்மாக்கு என்னடா பதில் சொல்றது “- உதடுகள் முணுமுணுக்க, அவளுடைய அழுகை ஓயவே இல்லை. யாருடைய சமாதானத்திலும் அவள் மனம் அடங்கவில்லை, செய்தியை அறிந்ததில் இருந்து இப்படி தான் அழுது கொண்டே இருக்கிறாள்.
அப்பொழுது,
“நிறுத்துங்க ” – என்று கர்ஜித்த படி மாடியில் இருந்து வேகமாக கீழே இறங்கி வந்த பெண்மணியை அனைவரும் இமைத்தட்டாமல் பார்த்தனர். நாசி விடைத்தபடி, கண்கள் கலங்கியிருந்தன.
முகம் இறுகி இருக்க. வதனத்தில் விவரிக்க முடியாத கோபம் அப்பியிருந்தது. ஆனால் சிறிதளவு கூட சோகம் இல்லை.
வேகமாக கீழே வந்து நேரே சென்று ஆதித்யாவின் புகைப்படத்திற்கு போட்டிருந்த மாலையைப் படாரென்று பிடுங்கி கீழே எறிந்தவர். ஆதித்யாவின் புகைப்படத்தை எடுத்து முத்தமிட்டவாறு தன் நெஞ்சோடு அணைத்து கொண்டவர், “என் பையன் செத்து போகல எல்லாரும் என் வீட்ல வந்து ஏன் அழுதுட்டு இருக்கீங்க கிளம்பி போங்க ” – ஆத்திரத்தில் தொண்டை அடைந்துகொள்ள கத்தியவரின் விழிகளில் நீர் கோர்த்தது.
” அம்மா ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க, அண்ணா நம்மளை விட்டு போய்ட்டாரு ” – தன் தாயை அணைத்தபடி அழுதாள் அருந்ததி.
மகனின் செய்தி கேட்டதும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தவர். இப்பொழுது தான் மயக்கம் தெளிந்து கீழே வந்தார். வந்ததும் அவர் கண்ணில் பட்டது, மாலையுடன் இருந்த தன் மகன் ஆதித்யாவின் புகைப்படம், அவ்வளவு தான் தாயின் உள்ளமோ பதறிப்போக தன் மகன் உயிரோடு இல்லை என்பதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
” வாய மூடு அருந்ததி. என் பையன் வருவான் ஆதி வருவான்…வரு…..வான் ” – ஆத்திரத்தில் ஆரம்பித்த குரல் அமைதியுடன் கூடிய உறுதியோடு முடிந்தது. பின்பு அனைவரையும் இறுக்கமாக ஒரு பார்வை பார்த்தவர், செக்யுரிட்டியை அழைத்து ,” என் வீட்ல இந்த அழுகை சத்தமெல்லாம் கேட்க கூடாது வெளிய அனுப்பு ” – என்று கடுமையாக ஆணையிட்டவர் வந்த வேகத்தில் தன் அறைக்கு சென்று தாழிட்டுக்கொண்டார். அவரது உறுதியான நம்பிக்கை அனைவருக்கும் வியப்பைக் கொடுத்தது.
———————————————————————-
ஆள் நடமாட்டம் இல்லாத அந்த கட்டிடத்தில். அந்த இளைஞனின் கையில் இருந்த துப்பாக்கி மதுமதியைக் குறிவைத்திருக்க ‘ டுமீல் ‘ என்ற சத்தம் கேட்ட மறுநொடி. உடம்பில் தோட்டா பாய்ந்தது. ஆம் தோட்டா பாய்ந்தது மதுமதியின் பின்னந்தலைக்கு குறிவைத்திருந்த சூரஜின் அடியாளின் உடம்பில் மர்ம இளைஞனின் தோட்டா பாய்ந்திருக்க.
தனக்கு என்ன நேர்ந்தது என்பதை உணர்ந்து திரும்பிப் பார்த்தவள், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்தவனைப் பார்த்ததும் அதிர்ச்சியில் தலைசுற்றி கீழே விழப் போக, அவளது தலையை அவனது இடது உள்ளங்கை தாங்கியது.
——————————-
நேரம் நள்ளிரவை தொட்டிருக்க. அந்த இடத்தை சுற்றி பெரிய பெரிய கப்பல்களில் இருந்து பெரிய பெரிய கண்டெயினர் பெட்டிகள் க்ரேன் மூலமாக தரையிறக்க பட்டுக்கொண்டிருக்க. சுமார் ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவான தோற்றத்தில் ஆடவர்கள் ஒரு இருபதில் இருந்து முப்பது பேர் மும்முரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.
அவர்கள் வேலை செய்வதை கருப்பு நிற கோட் சூட்டில், நீளமான சுருட்டை தன் வாயில் வைத்து புகைத்தபடி ஒருவன் நாற்காலியில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருக்க. அவன் அருகே இரெண்டு பேர். கால் மேல் கால் போட்டபடி தோரணையாக அமர்ந்திருந்தனர். அதில் ஒருவன் வெளிநாட்டவன் என்பது அவனது தோற்றத்திலே தெளிவாய் தெரிந்தது.
பிறகு அவர்களின் கட்டளையின் பேரில் கண்டெயினரில் இருந்து எடுத்துவந்த மரப்பெட்டிகளுள் ஒன்று அவர்கள் முன்பு இறக்கிவைக்கப்பட்டது.
அப்பொழுது அவர்களின் கண்ணசைப்பில் பெட்டி திறக்கப்பட. நாற்காலியில் அமர்ந்திருந்ததில் ஒருவன் அதில் சீராய் அடுக்கிவைக்கப்பட்ட பாக்கெட்டினை எடுத்து முகர்ந்து. அந்த வாசனையை தனக்குள் இழுத்து ரசித்தபடி,
” ஷப்பா எவ்வளவு நாள் ஆச்சு குப்தா ஜி. இந்த வாசனையை முகர்ந்து !!. ரொம்ப சுத்தவிட்டுட்டான். நல்லவேளை அவன் கதைய அந்த சூரஜை விட்டு முடிச்சிட்டீங்க. இப்போ தான் நிம்மதியா மூச்சே விட முடியுது. அப்புறம் பாய் சரக்கு பக்காவா இருக்கு” – என்று அவன் குப்தாவிடம் கூறினான்.
உடனே குப்தா அங்கிருந்த தனது ஆட்களில் ஒருவனை வரச்சொல்லி அனைத்து பொருட்களையும் சேரவேண்டிய இடத்துக்கு பிரித்து கொடுக்குமாறு கட்டளையிட்டான்.
அந்த கண்டெயினர் பெட்டியில் இருந்த அனைத்தும் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து கப்பல் வழியாக இந்தியாவில் மும்பைக்கு கொண்டு வரப்பட்ட கேட்டமைன் ((KETAMINE) என்னும் போதைப்பொருட்கள்.
(கேட்டமைன் ஹெராயின், அபின், கஞ்சா உள்ளிட்ட அணைத்து போதைப் பொருட்களுக்கும் டான். அதான் டானுக்கெல்லாம் டான் .
கேட்டமைனை ஊசி மூலம் நரம்பு வழியாக செலுத்தப்படலாம், அல்லது பொடியாக நுகரப்படலாம் அல்லது புகைக்கப்படலாம். எனினும் ஊசிமூலம் செலுத்துவதுதான் இதை உபயோகிக்கும் மனிதர்களை மிக உச்ச பரவசநிலையை அடையச் செய்யும்.
ஹெராயின், அபின், கஞ்சா, மது ஆகிய போதைப் பொருட்களுக்கு மூலப் பொருள் எல்லாமே இயற்கையான பொருட்கள். ஆனால் இதே நேரம் கேட்டமைன் முழுக்க, முழுக்க ரசாயனப் பொருள். பார்க்க சர்க்கரை போலவே பளபளப்பாக வெண்மை நிறத்தில் இருக்கும்.
இந்தியாவில் ஹெராயின், அபின், கஞ்சா போன்ற அண்டர்கிரவுண்ட் பிசினஸ்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விட்டுக்கொண்டு இருக்கிறது கேட்டமைன் பிசினஸ். வட அமெரிக்காவுக்கு அடுத்து போதை உலகில் கேட்டமைன் அதிகம் நுகரப்படுவது இந்தியாவில்தான். இந்தியாவில் மும்பைக்கு அடுத்ததாக கேட்டமைன் கடத்தல் மையமாக சக்கைப்போடு போடுவது.. சென்னையில்!
இந்தியாவில் மும்பையில் பண்ணாட்டு நிறுவனங்கள் மூலமாக ஒட்டுமொத்த கேட்டமைனும் உற்பத்தி செய்யப்படுகிறது.
குப்தா தான் புகைத்துக்கொண்டிருந்த சுருட்டை அணைத்தபடி,
” ஷர்மா இவ்வளவு நாள் அவனை ஆட விட்டதே அவன் ஆட்டமும் எப்படி இருக்குன்னு பார்க்க தான். நானும் பார்த்துட்டேன் அவனும் ரொம்ப ஆடிட்டான் அதான். ஒரேடியா கதைய முடிச்சிட்டேன் ” என்று கூறினான்.
” அவன் செத்ததை என்னால இன்னும் நம்ப முடியலை. அவன் பேரை இப்போ கேட்டாலும் கொஞ்சம் நடுக்கமாத்தான் இருக்கு பாய். ” என்றான் ஷர்மா.
” பயந்தா தோழில் பண்ண முடியாது ஷர்மா ஜி ” எக்காளமாய் சிரித்தபடி கூறினான் குப்தா.
” மிஸ்டர் குப்தா ஹூம் ஆர் யு டாக்கிங் அபவுட் ? ” நீங்க யாரை பத்தி பேசுறீங்க ??.. எல்லாரும் பயப்படுற அளவுக்கு அவன் அவ்வளவு பயங்கரமான ஆளா?? ” – என்று கேட்ட அந்த வெளிநாட்டவனை. நிமிர்ந்து பார்த்த குப்தா. தன் விழியை அவனிடம் இருந்து அகற்றாது,
” ஆதி. ஆதித்யா” என்ற குப்தா சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு மேலும் தொடர்ந்தார்,
” அவன் தீ மாதிரி. ஒன்னு நினைச்சான்னா அடையாம விடமாட்டான். எதுக்கும் பயந்ததே இல்லை. கொடூரமான அரக்கன். பெரிய பெரிய ஆளுங்கெல்லாம் அவன் முன்னாடி ஸலாம் போட்டு கூனிக்குறுகி தான் உக்கார்ந்திருப்பாங்க. அவன் கெட்டவன் இல்லை!! எமன் !! நிழல் உலகத்தோடு மரண தேவன். சொல்ல போனா ஒரு சைக்கோ. அவனை புரிஞ்சிக்கவே முடியாது. அவனை எதிர்க்கிறவங்க எல்லாருக்கும் அவன் சிம்ம சொப்பனம்! பயப்படாதீங்க அவன் இப்போ இல்லை, அவனை அழிச்ச சந்தோஷத்துல தான் நாங்க எல்லாரும் இருக்கோம் சொல்ல போனா இன்னைக்கு தான் எங்களுக்கு தீபாவளியே இனிமே நாம நிம்மதியா தொழில் பண்ணலாம் ” – என்று குப்தா அந்த வெளிநாட்டவனிடம் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே அசுர வேகத்தில் ஐந்து பி.எம்.டபிள்யூ கார்கள் விர்ரென்று வழுக்கிக் கொண்டு வரிசையாக அவர்கள் முன்னால் வந்து நின்றது.
வெள்ளை நிற கார்களுக்கு நடுவே கருப்பு நிற காரில் இருந்து கம்பீரமாக இறங்கினான் ஆதித்யா.
அவன்தான் நிழல் உலகினரின் மரண தேவன்.
அவனுடனே அவனது வலது கையான நாகேந்திரன் (நாகா) வர, அவர்களுக்கு பின்னால் அவர்களது பாது காவலர்கள் கையில் துப்பாக்கியுடன் வந்தனர்.
குப்தாவின் விழிகள் பயத்தில் விரிய, ஷர்மாவின் கைகள் தாறுமாறாய் உதறியது. எதோ ஒன்று தனது தொண்டைக்குழியை அடைத்தது போல உணர்த்த ஷர்மாவுக்கு மூச்சு வேகமாக வாங்கியது.
– ராட்சசன் வருவான்.
