அத்தியாயம் 04 (ANK)
எதையோ யோசித்தபடி இருந்த தனாவோ சட்டென, “அப்போ ஐடன் டெத்தோட இந்த கேஸ் முடியலன்னு சொல்லுறீயா?”
என்று நகுலனிடம் கேட்க நகுலனோ,”முடிஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும்னு சொல்லுறேன்”
என்று கூற இங்கு தனாவுக்கோ ஒரே குழப்பம், அப்படியிருக்க இங்கு ஆரோனின் மாளிகையில் அவந்திகா நீருக்கடியில் நிற்க அவளது கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
உடல் வலி ஒருபுறம் வாட்டி எடுத்தது. என்றால் மனவலியோ அதற்கும் மேலாக அவளை வதைத்தது. தற்போதெல்லாம் அவளுடைய இரட்டையான அபர்ணதியை பார்க்காமல் பேசாமல் அவளது உடலும் உயிரும் பலவீனமடைவதாய் உணர்கிறாள். அவந்திகா,
இப்போதெல்லாம் அடிக்கடி அவளது உண்மையான பெயர் அடையாளம் என்பவற்றை மறக்குமளவுக்கு அவளது மனநிலை மோசமான நிலைக்கு சென்றுக் கொண்டிருக்கிறது. எப்படியாவது இந்த வீட்டிலிருந்து வெளியே செல்ல வேண்டுமென்ற எண்ணம் அவளை ஆட்டிப்படைக்க
அதே சிந்தனையுடன் குளித்து விட்டு பூந்துவாலையுடன் வெளியே வந்தவளுக்கு கதறி அழுக கூட வீட்டிற்குள்ளும் சரி அந்த அறைக்குள்ளும் சரி அனுமதி கிடையாது. காரணம் வீட்டின் மூலை முடுக்கெல்லாம் பொருத்த்த்தப்பட்டிருக்கும் ஒற்றைக்கண்ணன் யார் வேண்டுமானாலும் ஆரோனுக்கு துரோகம் செய்யலாம் ஆனால் தொழிநுட்பம் இன்றைக்கும் சரி என்றைக்கும் சரி அவனுக்கு எதிராக செயற்படாதல்லவா அந்த நம்பிக்கை தான்
இப்போது வரை அந்த வீட்டின் குளியலறை மாத்திரமே அதற்கு விதிவிலக்கு ஆனால் அவன் அவள் அழுவதை கண்டுபிடிக்காமல் இருக்கும் வரை தான், இல்லையென்றால் அங்கும் அவனது ஒற்றனான கமெராவை பொருத்தி விடுவான்.
என்று நினைத்தபடி உடையை அணிய போக வீட்டின் வேலையாள் என்பதை விட அவளை கண்காணிக்க ஆரோனால் நியமிக்கப்பட்டிருந்த நிர்மலா எனும் நடுத்தர வயதுடைய பெண்மணி, “மே ஐ கமின் மேடம்?”
என்று அனுமதி கேட்க, “உள்ள வாங்க அக்கா” என்று குரல் கொடுத்தாள் அவந்திகா,
தன் மகள் வயதிருக்கும் பெண்ணை இப்படி ஒரு கூண்டில் அடைத்து வைத்திருப்பதை பார்க்கும் போதெல்லாம் அவருக்கு உள்ளுக்குள் ஏதோ உடையும் உணர்வு தான் ஆனால் நாட்டையும் வீட்டையும் தங்களுக்கேற்ப ஆட்டி வைக்கும் ஆரோனையும் அவனது சகோதரர்களையும் நினைத்து அவருக்கு பயம் அவர்களது தயவால் தானே அவர் வீட்டில் அடுப்பெரிகிறது.
என்று பெருமூச்செறிந்தபடி உள்ளே நுழைய அங்கு இலகுவான முழங்கால் வரை நீளமான அழகிய சட்டையை அணிந்தபடி தலையை உலர்த்திக் கொண்டிருந்தாள் பெண்ணவள் அவளிடமிருந்த பூந்துவாலையை கையில் வாங்கிக் கொண்டே,
“மேடம், என்ன குக் பண்ணட்டும்? உங்களுக்கு பிடிச்சத சொல்லுங்க”
என்றதும் என்ன நினைத்தாளோ, “நிர்மலாக்கா சார் இன்னைக்கு லன்ச்சுக்கு வருவாரா? அவருக்கு என்ன பிடிக்கும்னு சொல்லுங்க நான் சமைக்கிறேன் நீங்க ஹெல்ப் பண்ணுங்க”
என்று சிரித்த முகமாக கேட்க அவரே ஒருநொடி ஸ்தம்பித்து தான் போனார். அவளுக்கு உலகத்தில் பிடிக்காத ஒருவனென்றால் அது ஆரோன் தான் அப்படியிருக்கும் போது இது என்ன சடுதியான மாற்றம் என்று அவருக்கு தோன்ற அப்படி தான் அவனுக்கும் இருந்தது.
ஆம் அவனுக்கு தான், ஆரோனை பொறுத்தவரையில் அவளை தன் கைவளைவுக்குள் தன் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். என்ற எண்ணம் அவனுக்கு வேலையாட்கள் மீது நம்பிக்கையில்லாமல் பொருத்திய கமெரா வழியாக அவந்திகாவை தான் பார்த்திருந்தான்.
அவளை கடத்தி வந்த நாள் தொட்டு இன்று வரை அவ்வளவு கவனிப்பு அவனிடம் அவளை உடல் ரீதியாக அடித்து துன்புறுத்தியதில்லை. மனதளவில் கொடுஞ் சொற்களை வீசி காயப்படுத்தியதில்லை. அதற்காக கண்களை பார்த்து காதலித்து ஒதுங்கி நிற்கும் காதலனுமில்லை.
அவளை கண்ட நாள் முதல் எந்த பெண்ணையும் நாடாது ஒழுக்கசீலனாக வாழ்ந்து வந்தவனுக்கு அவனது உற்ற தோழனின் காதலியாக அவள் அறிமுகமாக அது தான் அவனுக்கு கிடைத்த மிகப்பெரிய அடி,
அதுவும் அவனது நண்பன் கார்த்திக் சாதாரண நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவன் தான் ஆசைப்பட்ட பொக்கிஷம் எப்படி அவனுக்கு கிடைக்கலாம்? என்ற எண்ணம் தான் அவனுக்கு, இப்படி சிந்தித்துக் கொண்டிருந்தவனின் எண்ணத்தை கலைக்கும் விதமாக அவனது அழைப்பேசிக்கு அழைப்பு வர
அதையேற்றவன், “ஹலோ! சொல்லு அம்மு இந்த முறை யாருக்கு கால் போட்ட? நீ எத்தனை தடவ கால் பண்ணாலும் எனக்கு தான் வரும்”
என்று கூறிக் கொண்டே பேப்பர் வெயிட்டை சுழற்றி விட இங்கு அவந்திக்கோ அவனது குரலே வெட்கத்தை தூண்டி விட போதுமாக இருந்தது போலும் உதட்டை கடித்தபடி,
“அது வந்து… அது” என்று கண்ணை சுழற்ற அவனோ பொறுமையிழந்து,
“சொல்லுடி” என்றதும் அவளோ தயங்கி தயங்கி, “உங்களுக்கு தான் ஆரு, லன்ச்சுக்கு வர்றீங்களா?”
என்று கேட்க அவனோ ஆச்சரியமும் நக்கலும் கலந்த குரலில் , “என்ன புதுசா ஏதாவது ட்ரை பண்ணுறீங்களா மேடம்?”
என்று கேட்க அவந்தியோ, “ஆமா, கிடைச்ச வாழ்க்கைய ஏத்துக்கலாம்ங்குற முடிவுல இருக்கேன் ஆரூ”
என்றாள் பொறுமையாக ஆரோனோ தனது மேசையிலிருந்த கோப்புகளை பார்வையிட்டபடியே, “எப்ப வந்த ஞானோதயம்?”
என்றான் அதே நக்கலுடன் அதற்கு அவள் நமட்டு சிரிப்பு சிரித்தபடி, “எப்போ வந்தா என்ன? எப்படியோ வந்திருச்சுல்ல அதான் முக்கியம்”
என்றபடி முகத்திற்கு க்ரீம்களை பூச அவனோ, “பரவால்லயே, அது சரி இப்போ உன் மனசுல யாரு இருக்கா? நானா? இல்ல அந்த வீணாப்போன கார்த்திக்கா?”
என்று கேட்க அவளோ தைரியமாக, “இதுக்கு உண்மைய சொன்னா உங்களுக்கு கோபம் வரும் ஆனா பரவால்ல சொல்லுறேன், என் மனசுல கார்த்திக் கிடையாது என்னைக்கு நீங்க தாலி கட்டுனீங்களோ அன்னைக்கே அவன தூக்கி போட்டுட்டேன் காதலிய காப்பாத்த முடியாத கையாலாகாதவன மனசுல சுமக்க நான் என்ன தமயந்தியா? இல்ல சந்திரமதியா?”
என்று கேட்க ஆரோனோ, “அவங்க எல்லாம் எவ்வளவு பெரிய பதிவிரதைகள் தெரியுமா?”
என்றதும் அவந்தியோ, “நான் பதிவிரதை இல்ல ஆரோன் ஒரு பொண்ணு அவ்ளோ தான் எனக்கு அடுத்தவங்க போட்ற வட்டத்துக்குள்ள வாழ பிடிக்காது”
என்று இறுகிய குரலில் கூற ஆரோனோ, “அப்போ என்னையும் பிடிக்காது அப்டி தானே”
என்றதும் தன் கையிலிருந்த ஒரு வித குறியீடு பல முக்கோணங்களும் வட்டமுமாய் ஒருவித சிக்கலான குறியீடு அவள் மணிக்கட்டு நரம்பில் அதை பார்த்து புன்னகை பூத்தபடி,
“ஆமா எனக்கு சுதந்திரம் கொடுக்காத உங்கள சுத்தமா பிடிக்காது, ஆனா எனக்கு உடம்பு சரியில்லாத போது என்ன குழந்தையா கவனிச்சுக்கிட்ட உங்கள எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும், என்ன வார்த்தையால காயப்படுத்தாத உங்கள அதவிட பிடிக்கும்”
என்று பிடித்தங்களை அடுக்கிக் கொண்டே செல்ல அவனுக்கும் அது தானே வேண்டும் அவனை பிடிக்க வேண்டும்., அவனது பைத்தியக்காரத்தனமான மீ காதல் அவளை பீடிக்க வேண்டும். அவள் மீது சும்மாவே காதல் மயக்கம் இதில் அவள் பிடித்தங்களை அடுக்க ஒரு வித போதைக்குள் மூழ்கி போனான் ஆரோன்,
அது தான், அந்த மயக்கம் தான் அவளுக்கும் வேண்டும்.
இங்கு அபர்ணதியோ கையில் ரத்தம் பீறிட்டு பாய குடும்பத்தினரால்
உடனடியாக அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டிருந்தாள் அவளது கையிலிருந்து இரத்தம் தாறுமாறாக வழிந்தோட அங்கு வந்த பெண் மருத்துவரோ,
“எப்படி அடிப்பட்டுச்சு?” என்று கேட்டபடி மருந்திட ஆரம்பிக்க அவளோ மருத்துவரை முறைத்தபடி அமர்ந்திருந்தாள்.
அதே சமயம் எவ்வளவு மருந்திட்டும் அபர்ணதியின் ரத்தமும் உறையாமல் பீறிட்டு பாய அப்பெண் மருத்துவருக்கோ ஒன்றுமே புரியவில்லை.
ஏதோ நினைத்தவர், “எல்லாரும் கொஞ்சம் வெளிய வெயிட் பண்ணுங்க நான் பேஷண்ட்ட செக் பண்ணனும்”
என்று வெளியே அனுப்ப அவர்கள் வெளியில் சென்றிருக்க அபர்ணதியோ அப் பெண் மருத்துவரை பார்த்து மெதுவாக மர்மமாக கையில் ரத்தம் வழிந்தோட ஒரு புன்னகை பூத்திருந்தாள். அப் புன்னகை பெண் மருத்துவரின் முதுகு தண்டை சில்லிட செய்தது. என்றால் மிகையாகாது.
அதே சமயம் இங்கு நுவரெலியாவில் இருள் சூழும் வேளை கொஞ்சம் கொஞ்சமாக மூடுபனியும் இருட்டும் அப் பிரதேசத்தை ஆக்கிரமிக்க தடய அறிவியல் பிரிவிற்குட்பட்ட ஆராய்ச்சி கூடத்தில் தான் ஹன்ஸா நின்றிருந்தாள்.
‘பெலிங்டன் மர்டர்ஸ்’ என்று எழுதி முத்திரை இடப்பட்டிருந்த ஒவ்வொரு பொருளாக ஆராய்ந்துக் கொண்டிருந்தவள் கைகளுக்கு கொலையாளிகளால் சமைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் உணவு பதார்த்தங்கள் கிடைக்க,
‘இது வரைக்கும் கிடைச்ச எதுவும் பெருசா யூஸ் ஆகல இதாவது யூஸ் ஆகுதான்னு பார்க்கலாம்’
என்று நினைத்தபடி ஆராய்ந்தவளுக்கு அடுத்தடுத்து கிடைத்த முடிவுகள் அனைத்தும் தலை சுற்ற வைத்தது. கிட்டத்தட்ட அவளுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் வாந்தி வர
கழிவறைக்குள் சென்றவள் ஓங்கரித்துக் கொண்டு வாந்தி எடுக்க ஆரம்பித்திருந்தாள்.
அவளுடைய உள்ளத்தில் பயமும் பதற்றமும் விரவி பரவ இதயமோ தனது துடிப்பை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. அதே சமயம் மின்னலும் இடியும் ஓங்கி முழங்க கழிவறையிலிருந்த மின் விளக்குகள் விட்டுவிட்டு ஒளிர அவளுக்கு பயம் இன்னுமின்னும் அதிகரித்ததே தவிர குறைந்தபாடில்லை.
தண்ணீரடித்து முகத்தை வேக வேகமாக கழுவியவளுக்கு ஏனோ காதுக்குள், மரண ஓலங்கள் கேட்பது போல் மாயை தோன்றியது.
‘ஐயோ! அம்மா காப்பாத்துங்க’, ‘ப்ளீஸ்.. ஐயோ அவங்க வந்துட்டாங்க’ என்று யாரோ கதவின் பிடியை பிடித்து இழுத்து ஆட்டுவது போல் மாயை தோன்ற காதை இறுக மூடிக் கொண்ட ஹன்ஸாவோ,
“ஆஆ…. ஐயோ ப்ளீஸ் கத்தாதீங்க” என்னால தாங்க முடியல என்று கத்த அதே சமயம் ‘பளிச்’ என்று மின்னல் வெட்ட தடயவியல் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
ஹன்சாவுக்கு இப்போது உள்ளூர குளிரெடுத்தது. உடலோ குளிர் ஜுரம் கண்டது போல் வெடவெடவென நடுங்க தட்டுத்தடுமாறி அழைப்பேசியிலிருந்த டார்ச்சை ஒளிரவிட்டபடி
மெதுவாக கழிவறையை விட்டு வெளியே வர, அடுத்தடுத்து அடிகளை எடுத்து வைக்கவே பயமாக இருந்தது. ‘பெலிங்டன்’ பங்களாவில் நடந்த கொலைகளால் பெரும்பாலான நிபுணர்கள் அங்கு சென்றிருக்க,
ஒருசில சக ஊழியர்கள் மாத்திரமே வேலைத்தளத்தில் எஞ்சியிருந்தனர். அவர்களில் ஹன்ஸாவும் ஒருத்தி மாதாந்திர சுகயீனம் காரணமாக வைகார்த்தனன் தான்,
“நீ யுனிட்ல வர்க் பண்ணு ஹன்சு பீல்ட்ல தான் இவ்ளோ பேர் இருக்கோமே அடுத்து பர்ஸ்ட் டே வேற உனக்கு கஷ்டமாயிருக்கும்” என்று அவளை அனுப்பி வைத்திருந்தான்.
அவளும் அது தான் சரி என எண்ணி கிளம்பி வந்திருந்தாள். ஆனால் இப்படி நடக்குமென்று கனவா?! கண்டாள்.
உடலிலும் மனத்திலும் தைரியத்தை வரவழைத்தபடி, “அஷேன்!, மீனா!, குமார!” என்று சக ஊழியர்கள் பெயரை சத்தமாக கூப்பிட்டவளுக்கு அப்போது தான் மண்டையில் உரைத்தது.
காலையில் இருந்து காணப்பட்ட அதிகமான வேலைப்பளுவின் காரணமாக அனைவரும் சிற்றுண்டிச்சாலைக்கு சென்று விட்டனர். அல்லவா அப்போதே அவளையும் அழைத்தனர். அவள் தான்,
“ராமு அண்ணன் இருக்கார் தானே அடுத்து நான் கொஞ்சம் வர்க்க முடிக்கும் போது தனாவும் வந்திருவார் அவர் கூட போயே டீ குடிக்குறேன்”
என்று அனுப்பி வைத்தது எவ்வளவு பெரிய மடத்தனம் என்று அவளுக்கு இப்போது புரிந்தது.
கழிப்பறையிலிருந்து கிட்டத்தட்ட அவர்களது வேலைத்தளத்துக்குள் செல்ல குறைந்தபட்சம் பத்து பதினைந்து நிமிடங்களாவது ஆகும். அதற்கு இடைப்பட்ட இடத்தில் அதிகமாக ஆள் நடமாட்டம் கிடையாது.,
அதற்கு முக்கிய காரணம் அவர்களது வேலைத்தளமும் பிணவறையும் ஒரே தளத்தில் தான் உண்டு அதிகமான சோர்வும் கழிவறையை பாவிக்க வேண்டிய அவசியமும் அதிகமாக இருக்க அதை பற்றி யோசிக்காமல் வந்து விட்டாள்.
ஆனால் இப்போது அவள் கண்டுபிடித்த விடயமும் மின் துண்டிப்பும் தைரியமான பெண்ணவளின் உள்ளத்தில் ஒருவித சில்லிடும் உணர்வை தோற்றுவித்திருந்தது.
இருந்தும் முயன்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டவள் அழைப்பேசி வெளிச்சத்தில் மெதுவாக எட்டு வைத்து நடக்க தொடங்கியவளுடைய காதுகளோ வீசும் காற்றின் ‘ஊஸ்… ஊஸ்’ என்ற சத்தம் வேறு ஒருவித திகிலை கிளப்ப
அத்தனை குளிரான சூழலிலும் பெண்ணவளுக்கு வியர்வை முத்து முத்தாக அரும்பியது.
அதை துடைத்துக் கொண்டவள், ‘ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல தனா இப்போ வந்திருவார், காத்துக்கு கரண்ட் கட் ஆகி இருக்கும்’
என்று தனக்கு தானே ஆறுதல் கூறிக் கொண்டு நடந்த சமயம் அரைவட்டமாய் வடிவமைக்கப்பட்டிருந்த நடைப்பாதை கூட ஒரு வித திகிலை கிளப்பியது அவளுக்கு
அதே சமயம் மின்னல் ஒளியில் அவளுக்கு பின்னால் ஏதோ கருப்பு நிற உருவம் வேகமான எட்டுக்களுடன் அவள் கடந்து வந்த அறையினுள் ஓடி மறைய,
ஹன்ஸாவுக்கு திக்கென்று இருந்தது.
இங்கு நுவரெலியாவில் ஆரியநாதனுக்கு சொந்தமான மற்றுமொரு பங்களாவில், ஆரியநாதன் ஆழ்ந்த உறக்கத்திலிருக்க அவரது மேனியில் ஏதோ திரவம் சொட்டு சொட்டாக வடிய அவரை யாரோ உறுத்து விழிப்பது போல் உணர்வு தோன்ற
சிரமப்பட்டு கண்ணை திறந்தவருக்கு எல்லாம் மங்கலாக தெரிய கண்ணை சுருக்கி விரித்து பார்த்தவருக்கு ஏதோ ஒரு பெண்ணின் தோற்றம் கொண்ட உருவம் அவர் தொடைகளின் மீது குந்துகாலிட்டு அமர்ந்திருப்பது போல் தெரிய அவருக்கோ ஒரு கணம் தூக்கி வாரிப் போட மெதுவாக கண்ணாடியை அணிந்தபடி,
அவ்வுருவத்தை பார்த்தவர், “நீ நீயா? நீ என்ன பண்ற?”
என்று ஏதோ கேட்க வர அப் பெண்ணோ, “தப்பு பண்ணிட்ட பெருசு ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட அந்த தப்புக்கு தண்டனை நான் கொடுக்கமாட்டேன்”
என்றபடி அங்கிருந்த சோபாவில் தாவி போய் அமர,
பெரியவரோ அவள் கூற்றுக்கு இணங்க கொஞ்ச நேரத்தில் அறையின் வாசலை மிரண்டு பார்த்தபடியே அவரது உடல் அப்படியே ஒட்டி உலர்ந்து கிட்டத்தட்ட எலும்பு தோல் போர்த்திய விசித்திர ஜந்தை போல் மாறி உயிரிழந்திருந்தார்.
இங்கு கொழும்பில் தனது அறைக்குள் நுழைந்த அபர்ணதியோ தனது ஓலை பெட்டியை திறந்தவள் அதற்குள்ளிருந்த உருவ சிலையை எடுக்க அச் சிலையோ மிகவும் வித்தியாசமாக காட்சி தந்தது. நீல நிற பளிங்கால் ஆன தேவி கழுத்தில் மண்டையோட்டு மாலை ஆனால் காளி தேவியுடன் ஒத்து போக கூடிய உருவ அமைப்பாக இருந்தாலும் தலையில் கூராய் கிரீடம் சுற்றியே கூர் கூராயான அமைப்பு கிட்டத்தட்ட திபெத்திய சிலைகளின் அமைப்பு நெற்றியில் ஒற்றை கண், வாயில் ஒற்றை பல் மார்பில் ஒற்றை மார்பகமென உருவ அமைப்பில் அத்தனை வித்தியாசம் நீல நிற ஆம்பல் மலரால் மாலை அணிவித்து விட்டபடி
இரத்த நிற மதுவை ஊற்றியவள் ஏதேதோ உச்சாடனம் செய்ய, இங்கு ஆரோனின் நெஞ்சில் தலை சாய்த்தபடி இருந்த அவந்திகாவோ,
“என்ன நாளைக்கு வெளிய கூட்டிட்டு போறீங்களா?”
என்று மூக்கை சுருக்க அவனோ, “ஓகே, போகலாம்” என்று கூறியபடி கட்டி அணைத்துக் கொள்ள அவந்திகாவோ மெல்லிய புன்னகையுடன் உறங்கியும் போனாள்.
தொடரும்…
