அங்கே அவன் ஜெனிஃபர் அலைபேசி எடுக்காததால் கோபமாக இருக்க இங்கோ அவள் உறவினர்களின் வருகையால் பரபரப்பாக இருந்தாள்.
அவள் மட்டுமல்ல. அவள் குடும்பமே பரபரப்பாக இருந்தது. நீண்ட நாட்கள் கழித்து வரும் மேரி, அவரது மகன்கள்… இங்கு ஏற்கனவே குழுமியிருக்கும் 3 குடும்பங்கள். அனைவருக்கும் சமையல் என்பதால் ஆளாளுக்கு ஒரு வேலை செய்து கொண்டிருக்க வீடே அமர்க்களப்பட்டது.
சாமின் பெற்றோர் சார்லஸூம், இசபெல்லாவும் அங்கே இருந்தனர். பெண்கள் மூவரும் வந்த அன்றே எல்லார் வீட்டிற்கும் சென்றிருந்தனர்.
அவர்களது குடும்பத்தில் யாரேனும் உறவினர்கள் வந்தால் அனைவரும் யாராவது ஒரு வீட்டில் ஒன்று கூடி விடுவர்.
பெண்கள் அறுவரும் சமையலில் இருக்க ஆண்கள் தங்களுக்குள் அளவளாவி கொண்டு அவ்வப்போது பெண்களுக்கு உதவியும் செய்து வந்தனர்.
ஆடு,கோழி,மீன் என அனைத்தும் தயாராகி கொண்டிருந்தது. அது தவிர பலகாரமும் தயாராகி கொண்டிருந்தது.
அவர்கள் செய்து கொண்டிருக்கையில் ஜென்னியின் சித்தி தனது மகனுடன் வந்து விட்டார்.
அவரது சொந்த ஊர் தூத்துக்குடி. டயானாவின் சித்தி பெண். பக்கத்து பக்கத்து வீடும் கூட. ஆகையால் இருவரும் தோழியை போல பழகினர்.
அவரை சேலத்தில் கட்டி கொடுத்திருந்தார்கள். கல்யாணம் ஆனது முதலே அடிக்கடி பாக்க வர முடியவில்லை. தூரமும் கூட. வருடத்திற்கு ஓரிரு முறை வருவார்கள்.
ஜென்னிக்கு தனது வீட்டில் இருந்தாலே சந்தோஷம். இதில் அவளது உறவினரின் வருகையை கேட்கவும் வேண்டுமா?
அவர்கள் வந்ததும் ஒரே ஆர்ப்பாட்டமாக இருந்தது.
மேரி அவரது கணவர் செபாஸ்டியன் உடன் அவரது ஒரு மகனும், மருமகளும் வந்திருந்தனர்.
ஆரம்ப வரவேற்பு அனைத்தும் முடிந்தவுடன் மேரி தனது வழக்கமான கலகலப்பை ஆரம்பித்து விட்டார்.
“டேய் என்னடா இவ்வளோ பெரிசா வளந்திட்டீங்க? உங்கள பாத்து எவ்ளோ நாளாச்சு?” என ஆச்சரியப்பட்டார்.
“ஏன் சித்தி புதுசா பாக்கற மாதிரி பேசறீங்க? நம்ம அடிக்கடி பாத்திட்டு தானே இருக்கோம்” என்றாள் ஜென்னி.
“ஆமா. ஆளாளுக்கு ஒவ்வொரு வேல. ஒருத்தி லைன்ல வந்தா ஒருத்தி வரதில்ல. இன்னைக்கு பாரு… இந்த சாம் பையன் ஆளையே காணோம்” என்று சலித்தார்.
“விடும்மா. நெக்ஸ்ட் டைம் அவன் வரேன்னு சொன்னானே” என்று ஜான் சமாதானப்படுத்தினார்.
“ஏன் அத்த உனக்கு நாங்க கண்ணுக்கு தெரியல. உன் பையன் சாம் தான் கண்ணுக்கு தெரியறானோ?” என்று செலீனா கோபப்பட்டாள்.
“கோச்சுக்காத செல்லம். நாமெல்லாம் இங்க இருக்கறப்ப அவன் மட்டும் தனியா இருக்கானேனு நினைச்சேன்” என்றார்.
இவர்கள் பேசி கொண்டிருக்கும் போது கௌசல்யா கையில் இருந்த பிரின்ஸின் ஆறு மாத மகன் சிணுங்க ஆரம்பித்தான்.
“ஏன்டா செல்லம் உன்ன கண்டுக்கலனு கோபமா?” என கொஞ்சியவாறே கிளாரா அவனை வாங்க இப்போது இன்னும் சிணுங்க ஆரம்பித்தான்.
“அச்சோ… செல்லத்துக்கு என்ன வேணும்? ஏன் அழறீங்க? அம்மா திட்றாளா? அவள அடிச்சிடளாமா?” என்று மழலை மொழியில் கொஞ்ச ஆரம்பித்தார்.
அவனோ புதிதாக ஒருவர் கையில் சென்றவுடன் இன்னுமே அதிகமாக கத்தினான்.
“ஏம்மா… என்னாச்சு? ஏன் இப்படி அழறான்?” என கிளாரா கேட்டார்.
“பசிக்குது போல பெரியம்மா. குடுங்க” என்றவள்
“தங்கத்துக்கு பசிக்குதா? வாங்க…” என்று வாங்கியவள் ஆரோனுக்கு பால் ஊட்ட சென்றாள்.
பெண்கள் அவ்வப்போது சிறு சிறு வேலைகள் செய்தாலும் சிறியவர்கள் அவ்வபோது விளையாட்டிலும் பொழுதை கழித்தனர்.
எல்லாவற்றையும் செய்து முடித்து சாப்பிட்டவுடன் அனைவருடனும் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்தார்கள்.
அடுத்த நாள் எங்கெங்கு செல்லலாம் என யோசனைகள் அங்கே சென்று கொண்டிருந்தது.
மதியம் வரை செய்த வேலையில் அப்போது தான் சிறிது நேரம் படுத்தாள் ஜென்னி.
படுத்தவுடன் தூங்கியவளுக்கு எங்கோ ஏதோ அடிக்கும் ஓசை கேட்டது.
அதை எடுத்து பேசும் அளவுக்கு அவளுக்கு பொறுமை இல்லை.
அடித்தால் அடிக்கட்டும் என கண் மூட முயல அதுவோ அவளை விட்ட பாடில்லை.
“ச்சே…” சலிப்பாய் எடுத்தவள் “ஹலோ” என்றாள்.
அந்தப்புறம் அழைப்பு நிறுத்தப்பட என்னவென்று தூக்க கலக்கத்தில் ஒன்றும் புரியாமல் திணறினாள்.
யார் அழைத்தது என்று பெயரை பார்க்க அதுவோ கௌதம் என்று காட்டியது. கௌதமின் பெயரை பார்த்ததும் அவளுக்கு தூக்கி வாரி போட்டது.
ஏனெனில் வந்ததில் இருந்து ஜென்னி அவனுக்கு கால் செய்யவில்லை.
“ஏய்… எங்கடி இருக்க?” என்று ஒரு குரல் அதட்டலாய் கேட்டது.
“யார் பேசறீங்க?” என தூக்க கலக்கத்தில் குரல் வந்தது.
“ஏன்டி… ஊருக்கு போனா என் குரல் கூட உனக்கு மறந்துடுமா?” என கேட்டான்.
“இ… இல்ல கௌதம்” என்று திக்கி திணறினாள்.
“நீ ஊருக்கு போறேனு ஏன்டி சொல்லல?”
“சொன்னேனே கௌதம். நீ ஓகேனு சொன்னியே” என ஜென்னி சொன்னாள்.
“நான் எப்போ நீ போனு சொன்னேன்?” என அவன் அதிர்ச்சி ஆனான்.
“நேத்து மார்னிங் கால் பண்ணேனே…”
“நேத்தா?” என்றவனுக்கு தூக்க கலக்கத்தில் ஏதோ இவளிடம் பேசிய ஞாபகம் வந்தது.
‘ஓ… மை காட்… ஊருக்கு போறத தான் சொன்னாளா’ என்று ஒரு வினாடி யோசித்தவனுக்கு சாமின் பேச்சு ஞாபகம் வர கோபம் உச்சந்தலையில் ஏறியது.
“நீ ஊருக்கு போன வரையும் போதும். கிளம்பி வா” என்றான்.
“கௌதம் என்ன பேசுற? ரிலேஷன்ஸ் வந்திருக்காங்க” என்று பதறியபடி கூறினாள்.
“இருக்கட்டும். எனக்கு உன்ன பாக்கணும்” என அலட்சியமாய் சொன்னான்.
“நான் ஒன் வீக் இந்த இருப்பேன்னு சொல்லி வெச்சிருக்கேன்”
“ஏன்டி மார்னிங்ல இருந்து எத்தன போன் பண்ணேன்? ஒன்னுத்துக்கும் ரிப்ளை இல்ல. இப்போ ஊருக்கு வான்னு சொல்றேன். ரிலேஷன்ஸ் இருக்காங்கனு சொல்ற. அவங்க எல்லாம் ரிலேஷன்ஸ்னா நா யாரு?” என்று ஆத்திரத்துடன் கேட்டான் கௌதம்.
“கௌதம்… ப்ளீஸ்டா… எனக்கு இந்த சித்திய, அண்ணாவ ரொம்ப பிடிக்கும். நான் அவங்கள இவ்வளோ நாளா மிஸ் பண்ணிட்டேன். அவங்க கூட டூ டேஸ் இருந்திட்டு வந்திடறனே” என நெகிழ்வாய் கேட்டாள்.
“ஓஹோ… நான் கூட தான் உன்ன மிஸ் பண்றேனு சொல்றேன். ஆனா நீ என்ன நினைக்கலையே? நான் யாரோ தானா?” என உணர்ச்சியற்ற குரலில் கேட்டான்.
“கௌதம் என்ன பேசுற? ஆரோன் எவ்ளோ அழகா சிரிக்கிறான் தெரியுமா? பேபி எவ்ளோ க்யூட்டா இருக்கான் தெரியுமா?” என ஆசையாய் சொன்னாள்.
அவளது பேச்சில் எரிச்சல் அடைந்தவன் “லிசன் ஜென்னி. நான் என்ன கேக்கறேன்? நீ என்ன பேசுற? உனக்கு கொஞ்சம் கூட என்ன பத்தி கவல இல்ல? நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம சித்தி, குழந்தனு கத பேசிட்டு இருக்க?” என ஆத்திரத்துடன் கேட்டான்.
“அப்டி இல்லடா. நீ தனியா இருக்கறதனால நான் சொல்றது உனக்கு புரியல. நீயும்
“இங்க பார்… நீ வீட்ல என்ன வேணா சொல்லிக்கோ… எனக்கு இன்னைக்கு நீ நைட் சென்னை வந்தாகணும்” என்று கட்டளை குரலில் சொன்னான்.
“கௌதம்”
……….
“கௌதம்”
………..
அதற்கு மேல் கால் கட்டாகியது.
‘ஓ… காட்.. கட் பண்ணிட்டானா?’ என்று சோதித்தவள் அவனுக்கு திரும்பவும் போன் செய்தாள்.
“ஏன் கௌதம் கட் பண்ண?”
“நான் இத்தன நாளா எனக்குனு ஒரு சொந்தம் இருக்குனு இருந்தேன். இப்போ தான் அதும் இல்லனு தெரிஞ்சது. குட் பை” என்று காலை கட் செய்ய போனான்.
“கௌதம் என்ன பேசுற?”
“ஆமா. என்ன பத்தி நீ யோசிச்சிருந்தா மத்தவங்கள நினக்க மாட்ட. உனக்கு என்ன விட உன் ரிலேஷன்ஸ் தானே முக்கியம். நீ அவங்களோடவே என்ஜாய் பண்ணு. நான் அனாதை தானே. நீயும் கூட இருனு நான் எப்படி உன்கிட்ட உரிமையோடு கேட்க முடியும்?” என்று ஆத்திரத்தில் சொல்வது போல தோன்றினாலும் அவன் குரலில் அவனை மீறிய வலி தோன்றியது.
“என்னடா அனாதைனுலா சொல்ற? நான் இருக்கறப்ப நீ இப்படி பேசலாமா? வலிக்குது கௌதம்” என்று கண் கலங்கினாள்.
“சும்மா டயலாக் விடாதடி. அப்படினா நான் கூப்டப்பவே நீ வந்திருப்ப. அவங்கள விட்டுட்டு வர முடியாம தானே பேசற? நான் உனக்கு முக்கியம் இல்ல தானே?” என்று கேட்டான்.
“இப்ப என்ன கௌதம் உனக்கு நான் கிளம்பி வரணும். அவ்வளவு தானே? வரேன்” என்றான்.
“வேணாம் சாமி. நீ அவ்வளவு கஷ்டப்பட்டு கிளம்பி வர வேணாம். எனக்கென்ன இது புதுசா என்ன? சித்தப்பா கூட இருக்காரு தான். பட்… விடு. உனக்கென்ன என்ன பத்தி கவல? நீ நல்லா ஊருல என்ஜாய் பண்ணிட்டு இரு” என்றவன் விரக்தியாய் அழைப்பை துண்டித்தான்.
அவனுடைய பேச்சை கேட்ட ஜென்னிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
எப்போதும் கோபப்படுவான் தான். ஆனால் இன்று அந்த குரலில் இருந்தது என்ன?
எப்போதும் அதிகப்டசம் அவனை நண்பர்களுடன் மட்டுமே பார்த்திருக்கிறாள்.
சித்தப்பா இருந்தாலும் அவர் மிலிட்டரியில் இருந்ததால் அவர் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் என்று தான் சொல்லியிருக்கிறான்.
எப்பொழுதும் அவளிடம் எதையாவது ஒன்றை பேசியபடி இருப்பான். ஆனால் இந்த அளவு உடைந்து பேசியதில்லை.
‘கடவுளே… என்ன நடந்ததோ தெரில. இப்படி டிஸ்டர்ப்டா பேச மாட்டானே’ என்றவளுக்கு அதற்கு மேல் அங்கே இருக்க முடியவில்லை.
ஏதேதோ காரணம் சொல்லி ரயிலில் சென்னை ஏறி கிளம்பி விட்டாள்.
தொடரும்
