ROLEX
“Help! யாராவது காப்பாத்துங்க! Please help us!” அவளது குரல் நடுக்கடலின் இரைச்சலில் கரைந்து போனது.
வங்காள விரிகுடாவின் அந்த அதிகாலைப் பொழுது, வழக்கமான வெளிச்சத்தைத் தராமல் ஒருவித மர்மமான அமைதியுடன் விடிந்து கொண்டிருந்தது. இரவின் இருளைக் கிழித்துக்கொண்டு சூரியன் எட்டிப்பார்க்க முயன்றாலும், வானத்தை ஆக்கிரமித்திருந்த கார்மேகங்களும், கடல்நீரைத் தழுவி நின்ற பனி மூட்டமும் அந்தப் பரந்த நீர்ப்பரப்பை ஒரு வெண்மைப் போர்வையால் மூடியிருந்தது.
அந்த நிசப்தமான கடலின் நடுவே, அலைகளின் தாலாட்டில் அசைந்தபடி நின்றது ஓர் ஆடம்பரமான வெள்ளை நிற Yacht. அலைகள் அதன் பக்கவாட்டில் மோதி எழுப்பிய சத்தம் மட்டுமே அந்தப் பகுதியில் கேட்ட ஒரே உயிர்ச்சத்தம்.
அந்தப் படகில் உயிர்வாழும் மனிதர்கள் எவராவது இருக்கிறார்களா என்று பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சும். கட்டுப்பாட்டு அறையில் மாலுமிகள் இல்லை, டெக் பகுதியில் பணியாளர்கள் இல்லை. எங்கும் மரண ஓலம் அடங்கிய பின் எஞ்சியிருந்த அமைதி மட்டுமே நிலவியது.
படகின் தரைத்தளம் ரத்தத்தால் குளிப்பாட்டப்பட்டு இருந்தது. அங்கங்கே உடல் சிதைந்த நிலையில் கிடந்த மனிதர்களின் பிணங்கள், அந்தப் படகின் ஆடம்பரத்தைக் கேலி செய்தன. நவீன ரகத் துப்பாக்கிகளால் துளைக்கப்பட்ட அவர்களின் உடல்களிலிருந்து வெளியேறிய குருதி, அந்த வெள்ளை நிறப் படகின் தரையைச் செந்நிறக் காடாக மாற்றியிருந்தது. கடல் காற்றின் வேகத்தில் அந்த ரத்த வாடை நாசியைத் துளைத்தது.
படகின் முன்முனையில், கம்பீரமான உடல்வாகு கொண்ட ஒருவன் சாய்ந்து கிடந்தான். அவன் அணிந்திருந்தது ஒரு விலையுயர்ந்த வெள்ளை நிறக் கோட். ஆனால், இப்போது அது வெள்ளை என்று சொன்னால் எவரும் நம்பமாட்டார்கள். அவனது உடலில் பாய்ந்திருந்த தோட்டாக்களில் இருந்து வழிந்த ரத்தம், அந்தக் கோட் முழுவதையும் நனைத்து, அதை ஒரு அடர் சிவப்பு நிற அங்கியாய் மாற்றியிருந்தது. அவன் உயிர் அவனுள் எஞ்சி இருக்கிறதா அல்லது அந்த நீலக் கடலில் கரைந்துவிட்டதா என்று சொல்ல முடியாத அளவிற்கு அசைவற்றுப் பிணமாய் கிடந்தான்.
அவனுக்கு அருகிலேயே, சிதைந்த ஒரு அழகோவியமாக ரத்தக் கறைகள் படிந்த அதே வெள்ளை நிற உடையில் வானுலக தேவதை போன்ற ஒரு பெண் அமர்ந்திருந்தாள். கார்மேகங்களுக்கு நடுவே மின்னும் நிலவைப் போலத் தெரிந்த அவள் முகம், இப்போது பயத்திலும் அழுகையிலும் சிதைந்திருந்தது. அவளது கண்கள் அழுது அழுது சிவந்து போயிருந்தன.
அவள் தன் கைகளால் தன்னவனின் தலையை பற்றிக்கொண்டு, நடுக்கடலில் யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாமல் திணறினாள். அவளது உதடுகள் வறண்டு போயிருந்தன, ஆனாலும் பிடிவாதமாக ஒரு வார்த்தையையே மீண்டும் மீண்டும் உச்சரித்துக் கொண்டே இருந்தன…
“Help please… Help! Somebody help us!”
அவளது மெல்லிய குரல் அந்தப் பேரிரைச்சலிடும் கடல் காற்றுடன் மோதிச் சிதறியது. அவள் அவனது முகத்தை வருடினாள். அவனது உடல் மெல்லச் ஜில்லிட்டுப் போவதை அவளால் உணர முடிந்தது.
சுற்றிலும் பார்த்தாள், கண்ணுக்கெட்டிய தூரம் வரை அந்தப் பனிமூட்டமும், ஆக்ரோஷமான அலைகளும் தவிர வேறேதுமில்லை. ஒரு ரோந்துப் படகோ, மீனவர் படகோ தென்படவில்லை.
அவளது மடியில் இருந்த அந்த இரண்டு வயதுக் குழந்தை, சுற்றிலும் நடக்கும் கோரங்களை அறியாதது. ஆனால், தன் தாயின் கதறலும், தன்னைத் தாங்கியிருக்கும் கரங்களின் நடுக்கமும் ஏதோ விபரீதம் என்பதை அந்தப் பிஞ்சு மனதிற்கு உணர்த்தியது. பசியாலோ அல்லது பயத்தாலோ அதுவும் பீறிட்டு அழத் தொடங்கியது.
பொதுவாக ஒரு தாய்க்குத் தன் குழந்தையின் அழுகைதான் முதன்மையானது. ஆனால் அங்கே, தன் கணவனின் உடல் ஜில்லிட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்த அந்தத் தாயின் இதயத்தில் என்று ஒவ்வொரு நாடியிலும் வேகமாக துடித்தது. ஒரு கையில் தன் குழந்தையை இறுக்க அணைத்துக் கொண்டு, மற்றொரு கையால் தன் கணவனின் தலையை தன் மடியில் கிடத்தியபடி, நம்பிக்கையின் கடைசி நூலிழையைப் பிடித்துக்கொண்டு அவள் காற்றைக் கிழிக்கும்படி கத்தினாள்.
“Help! Help me! Oh god.. ஏன் இப்படி ஒரு சோதனை? யாருமே இல்லையா இந்த உலகத்துல? எங்களை எவனும் பார்க்கலையா? Help! Help me!”
அவள் கத்தத் தொடங்கினாள். அவளது குரல் அந்த அதிகாலைப் பனிமூட்டத்தைத் துளைக்க முயன்றது. ஆனால், கடல் அலைகள் அவளது அழுகையை விடவும் சத்தமாகச் சிரித்தன. அவனது ரத்தம் மெல்ல மெல்ல அவளது உடையிலும் படர, அவள் அந்தப் பிணக்குவியல்களுக்கு நடுவே ஒரு ஜீவனுள்ள தேவதையாய், மரணத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தாள்.
நேரம் நகர நகர, நம்பிக்கையும் அந்தப் பனிமூட்டத்தைப் போலவே மங்கத் தொடங்கியது. ஆனாலும், அவளது கண்கள் அந்தத் திசையற்ற கடற்பரப்பை வெறித்துப் பார்த்தபடி உதவிக்காகக் காத்துக் கிடந்தன.
அவள் நம்பிக்கை இழக்கும் தருவாயில், பனிமூட்டத்திற்குப் பின்னால் ஒரு இயந்திரத்தின் உறுமல் சத்தம் கேட்டது. ஒரு சிகப்பு நிறப் படகு, ராட்சத அலையைச் சீறிக்கொண்டு இவர்களை கடந்து மறுபுறம் நகர்ந்தது கொண்டிருந்தது.
அவள் கண்களில் ஒரு கணம் மின்னல் போன்ற நம்பிக்கை பிறந்தது, ஆனால், அந்தப் படகு கண்களுக்கு நெருங்க நெருங்க அவளது ரத்தம் உறையத் தொடங்கியது. அந்தப் படகின் உச்சியில் ஒரு அடர் நீல நிறக் கொடி காற்றில் படபடத்தது.
அவளது புத்தி அப்போது மின்னலென வேலை செய்ய, “இது இந்தியக் கப்பல் கிடையாது!” என்பது அவளுக்குப் புரிந்தது. இந்திய எல்லைக்குள்ளேயே இவ்வளவு பெரிய தாக்குதல் நடந்திருக்கும்போது, ரோந்துப் படகோ அல்லது உள்ளூர் கப்பலோ வந்தால் அவர்கள் மீண்டும் ஆபத்தில் சிக்க நேரிடலாம். ஆனால், இது ஒரு அந்நியநாட்டு சொகுசு கப்பல் என்பது அவளுக்குப் புரிந்தது.
தன் தோளில் கிடந்த, ரத்தம் உறைந்திருந்த அந்தச் சால்வையை Shawl எடுத்தாள். தன் காயம்பட்ட கைகளை எவ்வளவு உயர்த்த முடியுமோ அவ்வளவு உயர்த்தி, அந்தக் காற்றை நோக்கி வீசினாள்.
“Help! Please help us!”
அவளது குரல் கடல் அலைகளின் இரைச்சலில் கரைந்து போனாலும், அவளது அந்தச் சிவப்பு படிந்த வெள்ளைச் சால்வையின் அசைவு, அந்தக் கப்பலின் மேல்தளத்தில் இருந்த ஒருவனின் கண்களைச் சென்றடைந்தது.
அந்தப் பிரம்மாண்டக் கப்பலின் மேல்தளத்தில், ஒரு கையில் விலையுயர்ந்த Wine Glass உடன் நின்றிருந்தான் ஒரு அந்நியன். கடலின் அமைதியை ரசித்துக் கொண்டிருந்த அவனது பார்வையில், தூரத்தில் அலைகளில் ஆடிக்கொண்டிருந்த அந்தச் சின்னஞ்சிறு Yachtன் மீது ஏதோ ஒரு அசைவு தெரிந்தது.
மதுக் கிளாஸை அங்கேயே வைத்துவிட்டு, டெக்கின் விளிம்பிற்கு ஓடினான். பைனாகுலர் வழியே பார்த்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ரத்தக் கறையில் தோய்ந்த ஒரு சொகுசுப் படகு, அதன் நடுவே ஒரு பெண் குழந்தையுடன் கதறிக் கொண்டிருக்கிறாள். அருகே ஒருவன் பிணமாகக் கிடக்கிறான்.
“Captain! Turn the wheel! Starboard thirty degrees! Now!” அவனது அதிகாரம் கலந்த குரல் அந்தப் பிரம்மாண்ட கப்பலின் அமைதியைக் குலைத்தது.
அவன்தான் அந்தக் கப்பலின் உரிமையாளர் என்பது கேப்டனின் வேகமான எதிர்வினையிலிருந்தே தெரிந்தது. அந்த ராட்சதக் கப்பல் மெல்லத் திரும்பி, காயம்பட்ட அந்தச் சிறிய Yacht-ஐ நோக்கி நகரத் தொடங்கியது.
படகில் இருந்த அந்தப் தேவதை, அந்த ராட்சச உருவம் தன்னை நோக்கி வருவதைப் பார்த்ததும், ஒரு நிமிடம் அவளது இதயம் துடிப்பதை நிறுத்தியது. தன் குழந்தையின் தலையை வருடியபடி கண்ணீர் சிந்தினாள்!
சிதைந்து கிடக்கும் அந்தப் படகில், ஒரு தாய் தன் குழந்தையை அணைத்துக்கொண்டு கதறுவதும், அருகில் ரத்த வெள்ளத்தில் ஒருவன் கிடப்பதும் அவனது இதயத்தை ஏதோ செய்ய, அவன் ஒரு நொடி கூடத் தாமதிக்கவில்லை. அவனது கை அசைந்த அடுத்த கணம், கப்பலின் சிப்பாய்கள் சுறுசுறுப்பானார்கள்.
நான்கைந்து வீரர்கள் கயிறுகளுடன் மீட்பு உபகரணங்களுடனும் அந்தச் சிறிய Yacht-ல் குதித்தனர். இருவர் அந்தப் பெண்ணையும் குழந்தையையும் மீட்க முயல, மற்ற மூவர் படகின் மற்ற பகுதிகளுக்குச் சென்றனர். ஆனால், அங்கே எஞ்சியிருந்தது வெறும் சடலங்கள் மட்டுமே.
“யாரும் உயிருடன் இல்லை, இவர்களைத் தவிர!” கீழே இருந்து தகவல் வந்ததும், அந்தப் பெண்ணும் குழந்தையும் முதலில் கயிறு ஏணி வழியாக மேலே தூக்கப்பட்டனர்.
கப்பலின் தரைத்தளத்தில் கால் வைத்ததும், அந்தப் தேவதை தன் குழந்தையை ஒரு கையால் அணைத்தபடி, அந்த அந்நியனின் காலடியில் விழுந்தாள். அவளது கைகளில் இருந்த ரத்தம், அந்த அந்நியனின் விலை உயர்ந்த உடையில் ஒட்டிக் கொண்டது. ஆனால் அவன் அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
அவள் தழுதழுத்த குரலில் “Please… save him… He is my husband, My love, My life My world… please save him…” என கதறினாள், அவளது கண்களில் தெரிந்த பயமும் எதிர்பார்ப்பும் எந்த மொழியையும் விட வலிமையாக இருந்தது.
அவளது மன்றாட்டைக் கண்டு அந்த அந்நியன் மெல்லத் தலை அசைத்தான். அவனது உத்தரவின் பேரில், கீழே இருந்த வீரர்கள் அந்த ஆணின் கனத்த உடலை மேலே தூக்கும் முயற்சியில் இறங்கினர்.
ஆனால் அந்த ஆணைத் தூக்குவது அவ்வளவு எளிதாக இல்லை. அவன் உடல் ஒரு பாறையைப் போல வலுவாகவும், கட்டுமஸ்தானதாகவும் இருந்தது. நான்கு வீரர்கள் சேர்ந்து கயிறுகளைக் கட்டி, மிகுந்த சிரமத்திற்கு இடையே அவனை மேலே இழுத்தனர். அவன் ஒரு சாதாரண மனிதன் அல்ல, ஏதோ ஒரு பெரும் சக்திகொண்ட ஜாம்பவான் என்பதை அவனது உடல்வாகு சொல்லாமல் சொன்னது.
மேலே கொண்டு வரப்பட்ட அவனது உடலைத் தாங்கிப் பிடிக்க, கப்பலின் கேப்டனும் ஓடி வந்து உதவினார். ரத்தம் தோய்ந்த அவனது கையைத் தற்செயலாகத் திருப்பிய கேப்டன், அவனது மணிக்கட்டுக்கு மேலே பொறிக்க பட்டு இருந்த Tattoo ஒன்று அவனின் கண்களில் பட்டது.
அந்தச் சின்னத்தைப் பார்த்த அடுத்த நொடி… கேப்டனின் கைகள் நடுங்கின. பிடித்துக்கொண்டிருந்த கையை சட்டென்று உதறிவிட்டு, இரண்டு அடி பின்வாங்கினார். சுற்றியிருந்த குளிர்ந்த பனிமூட்டத்திலும், கேப்டனின் நெற்றியில் வியர்வை முத்துக்கள் அரும்பின. அவரது முகம் வெளுத்துப் போனது.
கேப்டனின் நடுக்கமும், அவனது முகத்தில் படர்ந்திருந்த அந்த மரண பயமும் அந்த அந்நியனை யோசிக்க வைத்தது.
“என்ன ஆச்சு.. ?” என கண்ணாசைவில் வினவினான்
நடுக்கத்துடனே கேப்டன் அந்த டாட்டூவைச் சுட்டிக்காட்டினார்..
அவன் மெல்ல குனிந்து, ரத்தம் உறைந்து போயிருந்த அந்த ஆணின் மணிக்கட்டைத் திருப்பிப் பார்த்தான்.
அங்கே, வெண்நிறத் தோலில் ஒரு கம்பீரமான ‘White Dragon’ டாட்டூ சீறிப் பாய்வது போல வரையப்பட்டிருந்தது.
அந்தச் சின்னத்தைப் பார்த்ததும் வெளிநாட்டுக்காரனின் கண்கள் ஒரு கணம் சுருங்கி விரிந்தன. அவனுக்குத் தெரியும், இந்தச் சின்னம் சாதாரணமானதல்ல, இது நிழல் உலகையே நடுங்க வைக்கும் ஒரு பேரதிகாரத்தின் அடையாளம். அவனது முகத்தில் ஒரு விசித்திரமான மர்மப் புன்னகை அரும்பியது. குழப்பத்தை விட, ஒரு பெரும் வேட்டையனைச் சந்தித்த திருப்தி அவன் முகத்தில் தெரிந்தது.
அவன் கொடுத்த ஒற்றைக் கட்டளையில், அந்த வீரன் கப்பலின் உட்பகுதிக்குத் தூக்கிச் செல்லப்பட்டான். ஒரு சொகுசு மெத்தையில் அவன் உடல் சரித்து வைக்கப்பட, அவனது காலடியில் அந்தப் தேவதை தன் குழந்தையோடு மண்டியிட்டு அமர்ந்தாள். அவனது ஜில்லிட்டுக் கிடந்த கைகளைத் தன் கன்னத்தோடு ஒற்றி மௌனமாகச் சிதறிய கண்ணீரோடு வேண்டினாள்.
கப்பலின் தலைமை மருத்துவர் பதற்றத்துடன் ஓடி வந்தார். ஸ்டெதாஸ்கோப்பை அவனது மார்பில் வைத்தார், நாடித் துடிப்பைச் சோதித்தார். ஆனால், அங்கே எந்தச் சலனமும் இல்லை.
எப்படி இருக்கும் ..! பத்துக்கு மேற்பட்ட துப்பாக்கிக் குண்டுகள் அவனது இரும்பு போன்ற உடலைத் துளைத்திருந்தன. அந்த ரத்த இழப்பிற்குப் பிறகு ஒரு மனிதன் உயிர் பிழைப்பது என்பது இயற்கைக்கு அப்பாற்பட்டது. மருத்துவர் பலமுறை முயற்சி செய்து பார்த்தும், அந்த உடலில் இருந்து எந்த எதிர்வினையும் வரவில்லை.
அந்தப் பெண் மருத்துவரின் முகத்தையே நம்பிக்கையோடு பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால், மருத்துவர் மெதுவான தலை அசைப்பில், உடலில் உயிர் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. என பரிதாபத்துடன் தன் தலையை இடவலமாக ஆட்டிய அந்த நொடி… அவளது உலகம் இருண்டது.
“Rolex…!!!” அவளது அலறல் அந்தப் பிரம்மாண்டக் கப்பலின் சுவர்களில் மோதி எதிரொலித்தது. அது ஒரு பெண்ணின் கதறல் மட்டுமல்ல, தன் உயிரையே இழந்த ஒரு ஆன்மாவின் ஓலம்.
அந்த அழுகுரல் எதையும் பாதிக்காதது போல, அமைதியாக நின்றிருந்த அந்த வெளிநாட்டுக்காரன் தன் அருகில் நின்றிருந்த அடியாளைப் பார்த்துச் சிறு கண்ணசைவு செய்தான். அடுத்த சில நொடிகளில், அவனது விசுவாசமான அடியாள் ஒருவன் கறுப்பு நிறத்தில் மினுங்கும் ஒரு நவீன ரகப் பெட்டியை சுமந்து கொண்டு வந்தான்.
அந்தப் பெட்டியின் பூட்டுகள் ‘க்ளிக்’ என்ற சத்தத்துடன் திறக்க, அந்த வெளிநாட்டுக்காரன் அதன் மூடியை மெல்ல உயர்த்தினான். உள்ளே, வெல்வெட் துணிக்கு நடுவே ஒரு கருப்பு நிற Short Gun படுத்திருந்தது. அது சாதாரணத் துப்பாக்கி அல்ல, அதன் பிடியில் சுத்தத் தங்கத்தாலும் வெள்ளியாலும் செதுக்கப்பட்ட அதே ‘White Dragon’ சின்னம் மிரட்டலாகப் பொறிக்கப்பட்டிருந்தது.
அந்தத் துப்பாக்கியை ஒரு காதலியைக் கையாள்வது போல ரசித்துக் கையாண்டான். அவனுக்குக் கொலை என்பது ஒரு குற்றம் அல்ல, அது ஒரு கலை. அந்தத் துப்பாக்கி மரணத்தின் ரகசியத்தை தன்னுள் ஒளித்து வைத்திருந்தது. அவனது விரல்கள் அந்த வெண்ணிற நாகத்தின் மீது ஊர்ந்து சென்றன.
அவன் சட்டென்று அந்தத் துப்பாக்கியைக் கையில் ஏந்தினான். அதன் கனம் அவனது கைகளுக்குப் பழகிப்போன ஒன்று என்பது அவன் கையாண்ட விதத்திலேயே தெரிந்தது. ஒரு தேர்ந்த வீரனைப் போல, கண்களை இமைக்கும் நேரத்தில் அந்த Short Gun-ஐ Load செய்தான்.
‘க்ராக்-க்ராக்’ அந்த உலோகம் உரசிக்கொண்ட சத்தம் அந்த அறையின் நிசப்தத்தைக் கலைத்தது. எதிரே பிணமாகக் கிடக்கும் நிழல் உலக ஜாம்பவான் ரோலக்ஸ்… மறுபக்கம் தன் கணவன் இறந்துவிட்டான் என்ற அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கும் அந்தத் தேவதை, அவளது மடியில் அழுது கொண்டிருக்கும் குழந்தையையும் மாறி மாறிப் பார்த்தான்.
அந்த வெளிநாட்டுக்காரனின் உதடுகளில் ஒரு குறும்புத்தனமான, அதே சமயம் கொடூரமான புன்னகை நிலவியது. அவன் எதைச் செய்யப் போகிறான் என்று எவருக்கும் புரியவில்லை.
யாரும் எதிர்பார்க்காத அந்த நொடியில், துப்பாக்கியின் தூக்கியின் Trigger-ஐ அந்த விரல்கள் அழுத்தியது.
“டமல்… டமல்… டமால்!” என்று தோட்டாக்கள் சீறிப் பாய்ந்தன.
அந்தத் துப்பாக்கிச் சத்தம் அதிகாலைப் பனிமூட்டத்தைக் கிழித்துக் கொண்டு திசையெங்கும் பரவியது.
தோட்டாக்கள் கிளப்பிய அந்தப் புகை மண்டலத்திற்கு நடுவே, அந்த வெளிநாட்டுக்காரனின் கண்கள் இன்னும் பிணமாகக் கிடக்கும் அந்த ரோலக்ஸ் என்ற மனிதன் மீதுதான் பதிந்திருந்தன.
அவன் சுட்டது யாரை? அந்தப் பிணத்தையா? அல்லது அந்தப் பெண்ணையா? அல்லது கடலையா?
வேட்டை தொடரும் ..⚓
