Rolex 3

3

நள்ளிரவின் நிசப்தத்தில் சென்னை மாநகரம் உறங்கிக் கொண்டிருக்க, புழல் மத்திய சிறைச்சாலையின் உயர்ந்த மதில் சுவர்களுக்குள் காற்று கூடப் பயந்து பயந்து வீசிக்கொண்டிருந்தது. வரிசையாக அமைந்திருந்த கைதி அறைகள் அனைத்தும் பூட்டப்பட்டிருக்க, 11-ஆம் எண் அறையின் ஜன்னல் கம்பிகள் வழியாக மட்டும் ஒரு மெல்லிய ஒளிக் கீற்று கசிந்தது.

அந்தச் சிறு வெளிச்சத்தைச் சுற்றி நான்கு உருவங்கள் தலைகளை ஒட்டி வைத்துக்கொண்டு, ரகசியக் குரலில் ஏதோ ஒரு பயங்கரத் திட்டத்தைத் தீட்டிக் கொண்டிருந்தனர்.

குழுவின் தலைவனைப் போலத் தெரிந்த அந்தத் தடியன், தரையில் ஒரு குச்சியால் வரைபடம் வரைவது போலச் சைகை காட்டினான்.

“டேய்… நல்லா கவனிங்கடா! இந்தச் செவுத்து பக்கம் திரும்பி ஒரு பத்து அடி நடந்தா இடது பக்கம் ஒரு குழி வரும். அது பாதாளச் சாக்கடை குழி. எனக்குக் கிடைச்ச தகவல்படி இப்போ அதுல ஒன்னும் இல்ல, காலிதான். ஆனா உள்ளே செம இருட்டா இருக்கும். மெழுகுவர்த்தி வெளிச்சத்தை வச்சுக்கிட்டு நாம அந்தத் தூரத்தைக் கடந்து ஆகணும்,” என்றான் அவன் குரலில் ஒருவித அதிகாரம் தொனிக்க.

அவன் பேச்சை மற்ற மூவரும் இமைக்காமல் கேட்டுக் கொண்டிருந்தனர். மேலும் தொடர்ந்த தடியன், “சாக்கடைக்குள்ள ஒரு பத்து நிமிஷம் நேரா போயிட்டு, இடது பக்கம் திரும்புனா மேல ஒரு மூடி இருக்கும். அதைத் திறந்து வெளிய வந்தா பக்கத்துல ஒரு பெரிய ஆலமரம் இருக்கும். அந்த ஆலமரத்தை மட்டும் நாம அடைஞ்சுட்டோம்னு வை… அப்புறம் நம்மள யாராலயும் பிடிக்க முடியாது!”

அருகிலிருந்த தாடிக்காரன் தன் வறண்ட தொண்டையை நனைத்துக்கொண்டு பதற்றமான குரலில், “அண்ணா… போலீஸ் நம்ம பின்னால வராம இருக்கணும்னா என்ன பண்றது? யாராவது ஒருத்தன் கண்ணுல பட்டாலும் கதை முடிஞ்சுடுமே?”

ஏளனமாகச் சிரித்த தடியன், “டேய் அதுக்குத்தாண்டா தீபாவளி அன்னைக்கு இந்தத் திட்டத்தை வச்சிருக்கேன்! ராத்திரி 12:00 மணிக்கு ஊரே வெடி வெடிச்சு அதிரும். வான்வேடிக்கை வெளிச்சத்துல போலீஸ்காரங்க கண்ணு வானத்தைப் பார்த்துட்டு இருக்கும். அந்தச் சத்தத்துல நாம வெளியே வர்றது யாருக்கும் தெரியாது. நாளைக்குக் காலைல சந்தை கூட்டத்தோட கூட்டமா நாம அப்படியே கலந்து போயிடலாம்.”

அவர்கள் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த அறையின் இருண்ட மூலையிலிருந்து ஒரு கரகரப்பான குரல் ஒலித்தது…

“அந்தப் பள்ளத்துல இருந்து வெளியே வந்து நீங்க ஆலமரத்தைத் தேடுறதுக்குள்ள உங்களுக்குப் பத்து வருஷம் ஆயிடும்… அப்புறம் எங்க போய் ஒளியப் போறீங்க? பேசாம வந்த வழியே திரும்பி இங்கேயே வந்துடுங்க!”

அந்தக் குரலைக் கேட்டு அதிர்ந்த தடியன், “யாருடா அவன்?” என்று கர்ஜித்தான்.

“நான் யாரா இருந்தா என்ன? நீங்க போற வழியில போனா ஆள் மாறாட்டம் செஞ்சு மாட்டிக்கத் தான் செய்வீங்க. தப்பிக்கணும்னு ஆசை இருந்தா நான் சொல்றதக் கேளுங்க,” என்றான் அந்த மர்ம மனிதன்.

அருகிலிருந்த மற்றொரு கைதி மெல்லத் தடியனின் காதுக்குள் கிசுகிசுத்தான், “அண்ணா… இவன் பேரு முத்து. சின்னச் சின்ன பிக்பாக்கெட் கேஸ்ல உள்ள வந்துட்டுப் போறவன். இவனுக்கு இந்தச் ஜெயில் ஒரு மாமியார் வீடு மாதிரி. எல்லா வார்டும், எல்லா வழியும் அத்துப்படி. அவன் ஏதோ சொல்ல வர்றான்… கேட்டுப்போம்ணா!”

தடியன் தன் மீசையை முறுக்கிக்கொண்டு, “டேய் முத்து! என்னடா சொல்ல வர்ற? ஒழுங்கா புரியுற மாதிரி வந்து சொல்லு,” என்று அதட்டினான்.

அதுவரை போர்வையைத் தலைவரை இழுத்துப் போர்த்திக் கிடந்த அந்த முத்து என்ற ஆசாமி, மெல்லப் போர்வையை விலக்கிவிட்டு எழுந்து வந்தான். மற்றவர்களைத் தள்ளிவிட்டு, அவர்களுக்கு நடுவே ஒரு ராஜதந்திரியைப் போல அமர்ந்தவனது கண்களில் ஒருவித கில்லாடித்தனம் மின்னியது.

“இதோ பாருங்க… நீங்க போட்ட பிளான்லயே முதல் தப்பு, நாளைக்குத் தீபாவளினு போலீஸ்காரங்க வான்வேடிக்கை பார்த்துட்டு இருப்பாங்கன்னு நினைச்சதுதான். அதுதான் உலகமகா முட்டாள்தனம்!” என்று முத்து வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேச…

அதிர்ந்துபோன தடியன், “என்னடா சொல்ற? பண்டிகைன்னா மனுஷன் சந்தோஷமாத்தானே இருப்பான்?” என்று உறுமினான்.

“அட இருங்க அண்ணா… நான் சொல்றதை முழுசா கேளு,” என்ற முத்து, தன் குரலை இன்னும் தாழ்த்தி இரகசியமாக பேசினான்…

 “தீபாவளி நம்ம பண்டிகைதான், ஆனா போலீஸ்காரங்களுக்கு அது டூட்டி நேரம்! ஏற்கனவே இங்க இருந்தவங்க ஊருக்குப் போயிட்டாங்கன்னு நினைக்காதீங்க. இப்போ ஸ்பெஷல் டூட்டிக்காக இன்னும் அதிகமான போலீஸ் உள்ள வந்திருக்காங்க. அதுவும் பத்தாதுன்னு CRPF வேற இறங்கியிருக்கு. அவங்க கண்ணுல மண்ணைத் தூவிட்டு வான்வேடிக்கை பார்க்க முடியும்னு நினைக்கிறீங்களா? தப்பிக்கணும்னு காலை எடுத்து வச்சீங்கன்னா… அப்புறம் என்கவுண்டர்ல தான் நிப்பீங்க!”

முத்து சொன்ன அந்த ஒற்றை வார்த்தை என்கவுண்டர் அந்த நால்வரின் முதுகெலும்பிலும் ஒரு நடுக்கத்தை ஓடவிட்டது. காவல்துறை இவ்வளவு உஷாராக இருக்கும் என்று அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை.

தடியன் வரைந்த அந்தப் பொய் வரைபடத்தைச் சுட்டிக்காட்டி ஒரு நமுட்டுச் சிரிப்பை உதிர்த்த முத்து, “அது சரி… அந்த ஆலமரம் அங்க இருக்குன்னு உங்களுக்கு யாரு சொன்னா?” என்று அடுத்த குண்டைத் தூக்கிப் போட்டான்.

தடியன் தன் குரலைச் சரிசெய்து கொண்டே, “நான் இங்க வர்றதுக்கு முன்னாடியே எல்லாத்தையும் நோட்டம் விட்டுட்டு தான் வந்தேன். அந்தப் பாதாளச் சாக்கடை மூடியைத் திறந்தா பக்கத்துல ஒரு சந்தையும், அதுக்கு நடுவுல ஒரு பெரிய ஆலமரமும் இருக்கும். அதுதான் நமக்குச் சேஃபான இடம்,” என்றான் பிடிவாதமாக.

முத்து இப்போது சத்தமாகவே சிரித்துவிட்டான். “யோவ் அண்ணா… அந்த ஆலமரத்தை வெட்டிச் சாய்ச்சு மூணு மாசம் ஆகுதுங்க!”

அவன் சொன்ன இந்த அடுத்த அதிர்ச்சி, தடியனின் முகத்தில் இருந்த கொஞ்சநஞ்ச தைரியத்தையும் பிடுங்கிக் கொண்டது. தாம் நம்பியிருந்த அந்த அடையாளமே மறைந்துவிட்டது என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை.

இப்போது முத்துவின் கைகளைப் பற்றிக்கொண்ட அந்த தாடிக்காரன். “டேய் முத்து… உனக்கு இந்த ஜெயில் முழுக்க அத்துபடின்னு தெரியும். நீயே ஒரு வழியைச் சொல்லு. இந்தத் தீபாவளியைப் பயன்படுத்தித்தான் நாங்க தப்பிக்கணும்னு உறுதியா இருக்கோம்,” என்று கெஞ்சும் குரலில் கேட்கவும்.

முத்து மெல்ல நகர்ந்து அவர்களுக்கு இன்னும் நெருக்கமாக அமர்ந்தான். அவன் கண்களில் இப்போது ஒரு வேட்டைக்காரனின் கூர்மை தெரிந்தது.

“அப்படி வா மாமே வழிக்கு! நான் சொல்றபடி மட்டும் செய்யு… கண்டிப்பா நீங்க நாலு பேரும் தப்பிப்பீங்க. இது அந்த ஜக்கம்மா மேல ஆணை!” என்று முத்து உறுதியாகச் சொல்ல

அந்தப் பெயரைக் கேட்டதும் தாடிக்காரனின் கண்கள் மின்னின. அவனது வலது கையில் ஜக்கம்மா  என்று பச்சைக் குத்தப்பட்டிருந்தது. முத்து அந்தப் பெயரைக் குறிப்பிட்டது ஏதோ ஒரு தெய்வீக வாக்கு போல அவனுக்குத் தோன்றியது. தடியனும் நம்பிக்கையோடு தன் தலையை அசைக்க,

முத்து தன் குரலை இன்னும் ஒரு படி தாழ்த்தி, ஒரு நச்சுப் பாம்பின் சீறலைப் போல மாஸ்டர் பிளானை விவரிக்கத் தொடங்கினான். “முதல்ல ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கோங்க… நீங்க நாலு பேர் மட்டும் இங்கிருந்து தப்பிக்கணும்னு நினைச்சீங்கன்னா, ஒருத்தன் கூட உயிரோட வெளிய போக முடியாது!”

அவன் போட்ட அந்த வார்த்தைக் குண்டு, தடியனையும் மற்றவர்களையும் நிலைகுலைய வைத்தது. “என்னடா சொல்ற? குழப்பாம விஷயத்துக்கு வா,” என்றான் தடியன் ஆத்திரமும் பதற்றமுமாக.

“அப்படி கேளு அண்ணாத்த… சொல்றேன்,” என்ற முத்து, தன் கைகளை விரித்து ஒரு புதிரைப் போட்டான்.

“இதே ஜெயில்ல, 15வது வார்டுல யாரு இருக்காங்கன்னு தெரியுமா?”

நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களுக்கு அந்தச் சிறையின் விஐபி பகுதிகளைப் பற்றிப் பெரிதாகத் தெரியாது. முத்துவே தொடர்ந்தான்..

“அங்கதான் ஒரு பெரிய VIP யோட பையன் இருக்கான். அவனுக்குப் பாதுகாப்புக்கு எக்ஸ்ட்ரா போலீஸ் இருந்தாலும், அவனுக்கு இது ஜெயில் மாதிரி இல்ல… ஒரு சொகுசு பங்களா மாதிரி எல்லா வசதிகளும் பண்ணிக் கொடுத்திருக்காங்க. இப்போ நீங்க தப்பிக்கணும்னா, அவனை பிணைக்கைதியா  வச்சுக்கிட்டுத் தான் வெளிய போகணும். அதுதான் உங்களுக்கு ஒரே வழி!”

தடியனின் கண்களில் இப்போது ஆர்வம் மின்ன, “எப்படிச் சொல்ற? நாங்க என்ன பண்ணணும்னு தெளிவாச் சொல்லு,” என்று அவனுக்கு மிக அருகில் நகர்ந்து அமர்ந்தான்.

“அப்படி கேளு அண்ணத்தா! நீ ஜெயில் வார்டன் ரவீந்திரன் கிட்டத் தானே நம்ம அறை சாவிக்காகப் பேசி வச்சிருக்க? அவன்கிட்ட கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, நம்ம அறை சாவி மட்டும் இல்லாம, இந்த பிளாக்ல இருக்குற எல்லா அறை சாவியையும் வாங்கிடு,” என்றான் முத்து.

அவன் சொன்னது புரியாமல், “எல்லா சாவியுமா? எதுக்குடா?” என்று தாடிக்காரன் குறுக்கிட,

முத்துவின் முகத்தில் ஒரு கிரிமினல் புன்னகை அரும்பியது. “அதான் ட்விஸ்டு மாமே! எல்லா பூட்டையும் திறந்து விடுங்க. ஜெயில்ல இருக்குற எல்லா கைதிகளும் ஒட்டுமொத்தமா வெளில ஓடட்டும். போலீஸ்காரங்க யாரைப் பிடிக்கிறதுன்னு தெரியாம நிலை குலைஞ்சு போவாங்க. அந்த களேபரத்துல, நீங்க நேரா அந்த விஐபி பையன் இருக்குற அறைக்குள்ள புகுந்து, அவனை அப்படியே குண்டுக்கட்டா தூக்கிட்டு வெளிய வந்துடுங்க!”

“அவனைத் தூக்கிட்டு நாங்க எங்கடா போறது? ஒரு பெரிய விஐபி பையனை வச்சுக்கிட்டு நாம எப்படித் தப்பிக்க முடியும்?” என்று தடியன் தன் சந்தேகத்தைக் கேட்டான். 

“அந்த விஐபி பையனை ஒரு துருப்புச் சீட்டா வச்சுக்கோ அண்ணே… ஏதாவது ஆபத்து வந்தா அவனைப் பயன்படுத்தியே தப்பிச்சிரலாம். அவன் அவ்வளவு சீக்கிரம் உங்க கூட வரமாட்டான், அதனால அவன் அப்பன் அனுப்பின ஆளுன்னு நான் ஒரு பொய்யைச் சொன்னா, அவன் நம்மளோட ஒட்டிப்பான். ஜெயில் சுவரைத் தாண்டுற வரைக்கும் அவனைப் பாதுகாப்பா கூட்டிட்டுப் போயிடு, அதுக்கப்புறம் அங்கே விட்டுட்டுப் போயிடலாம்!”  முத்துவின் குரலில் ஒரு அசாத்தியமான உறுதி இருந்தது.

“ஜெயில் முழுக்கக் கைதிகள் கூட்டம் வெளிய வந்தா, போலீஸ் அவங்களைக் கட்டுப்படுத்துறதுலதான் மும்முரமா இருப்பாங்க. அந்த கேப்ல நாம சமையலறைப் பக்கம் இருக்கிற அந்த ஓட்டை வழியாத் தப்பிச்சிரலாம். ஆனா…”

குறுக்கே நிறுத்திய தடியன். “இதெல்லாம் சொல்ற நீ… இதுல உனக்கு என்ன லாபம்? நீயும் எங்க கூடத் தப்பிக்கப் போறியா?”

அலட்சியமாகச் சிரித்த முத்து, “ச்ச… ச்ச… எனக்கு அந்த ஆசை எல்லாம் இல்லை அண்ணே. நான்தான் மூணு மாசத்துக்கு ஒருக்கா இங்க வந்துட்டுப் போறேனே, அப்புறம் எதுக்குத் தப்பிக்கணும்? நான் இங்கேயே ராஜா மாதிரி இருந்துட்டுப் போறேன்,” என்றான் ஒரு கிரிமினல் புன்னகையுடன்.

திட்டமிட்டபடி நள்ளிரவு 12 மணி நெருங்கியது. சென்னையின் வானவேடிக்கை சத்தங்கள் சிறைச்சாலையின் மதில் சுவர்களுக்குள்ளும் எதிரொலித்தன. வார்டன் ரவீந்திரனிடம் ஏற்கெனவே பேசி முடித்திருந்தபடி, அனைத்து அறைகளின் பூட்டுகளும் திறக்கப்பட்டன. திடீரெனக் கிடைத்த சுதந்திரத்தில் நூற்றுக்கணக்கான கைதிகள் கூச்சலிட்டபடி வார்டுகளுக்குள் ஓடத் தொடங்கினர்.

சிறைச்சாலை ஒரு போர்க்களம் போல மாறியது. அந்தப் பெரும் குழப்பத்திற்கு நடுவே, தடியனும் அவன் ஆட்களும் 15-ஆம் எண் வார்டுக்குள் புகுந்தனர். அங்கே ஒரு சொகுசான அறையில் இருந்த அந்த விஐபி இளைஞன் திகைத்துப் போய் நின்றிருந்தான்.

முத்து அவனருகே சென்று மெதுவான குரலில், “தம்பி… பயப்படாதே, உங்க அப்பா அனுப்பின ஆளுங்கதான் நாங்க. இங்க கலவரம் நடக்குது, உன்னை இங்கேயே விட்டா ஆபத்து. எங்களோட வா, வெளிய உங்க அப்பா ஆளுங்க கார் வச்சிட்டு தயாரா இருக்காங்க!” என்று காதில் தேன் தடவினான். அந்த இளைஞனும் அதை நம்பி அவர்களுடன் ஓடச் சம்மதித்தான்.

போலீஸாரின் கவனம் முழுவதும் சிதறி ஓடும் கைதிகள் மீது இருக்க, தடியனின் கும்பல் அந்த விஐபி இளைஞனைத் தங்களுக்கு முன்னால் ஒரு கேடயமாக வைத்துக் கொண்டு சமையலறைப் பகுதியை அடைந்தது. அங்கே இருந்த ஒரு குறுகிய துவாரத்தின் வழியாக ஒவ்வொருவராக வெளியே குதித்தனர். 

அடுத்த நொடி… தடியனும் அவன் கூட்டாளிகளும் இருட்டில் மறைந்து ஓடத் தொடங்கினர்.

அங்கேதான் ஒரு திருப்பம் நிகழ்ந்தது.

கடைசியாக அந்த விஐபி இளைஞன், முத்து சொன்னது போல வெளியே குதிக்க முயன்றான் ஆனால் முத்து அந்த இளைஞனின் கையைத் தன் இரும்புப் பிடியால் இறுக்கப் பற்றி நிறுத்தி விட்டான்.

திகைத்துப் போன அந்த இளைஞன், “யார்டா நீ? எங்க அப்பா ஆளுங்க எங்க?” என்று அலற முயன்றான்.

ஆனால் முத்துவின் கண்கள் இப்போது வேறொரு ஒளியைப் பிரதிபலித்தன. “டேய்… உங்க அப்பா யாருன்னு எனக்கும் தெரியும், நீ யாருன்னும் எனக்குத் தெரியும். ஆனா இப்போ நீ எனக்கு ஒரு முக்கியமான வேலைக்குத் தேவைப்படுற!”

இருட்டில், சிறைச் சாலையின் சைரன் சத்தங்களுக்கு நடுவே, முத்து அந்த இளைஞனை விடாமல் பிடித்துக் கொண்டு ஒரு திசையை நோக்கி நகரத் தொடங்கினான்.

முத்துவின் உண்மையான நோக்கம் என்ன? 

 

வேட்டை தொடரும் ..⚓

❤️ Loading reactions...
2 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!