4
முத்து அந்த இளைஞனின் மணிக்கட்டைத் தன் இரும்புப் பிடியால் இறுக்கிப் பிடித்திருந்தான். தப்பிக்க வழி கிடைத்துவிட்டது என்று நம்பியிருந்த அந்த இளைஞனின் முகம், முத்துவின் பிடியில் இருந்த வன்மத்தைக் கண்டதும் வெளிறிப் போனது.
“யார்டா நீ? எங்க அப்பா அனுப்பின ஆளுங்க எங்க? விடுடா என் கையை!” என்று அவன் மிரட்டலாக அலற முயன்றான்.
முத்துவின் கண்களில் இப்போது ஒரு மிருகத்தனமான ஒளி மின்னியது. “டேய்… உங்க அப்பா யாருன்னு எனக்குத் தெரியும், நீ எவ்வளவு பெரிய இடத்து வாரிசுன்னு எனக்குத் தெரியும். ஆனா இப்போ நீ எனக்கு ஒரு முக்கியமான வேலைக்குத் தேவைப்படுறடா!” என்று கர்ஜித்த முத்து, தன் வலது கையை ஓங்கி அந்த இளைஞனின் கன்னத்தில் ஒரு அறை விட்டான்.
சற்றும் எதிர்பாராத அந்த அடியில் அந்த இளைஞன் நிலைகுலைந்து போனான். ஆனாலும், தன் அதிகாரத் திமிரும் இளரத்தமும் அவனைத் திருப்பித் தாக்கத் தூண்டியது. முத்து மீண்டும் ஒருமுறை அவனை அடிக்கக் கையை ஓங்கியபோது, மின்னல் வேகத்தில் அவனது கையைப் பிடித்துத் தள்ளினான் அந்த இளைஞன்.
“நானே யாருன்னு தெரியுமாடா உனக்கு? என்னை அடிக்கிற அளவுக்குத் தைரியம் வந்துடுச்சா?” என்று ஆவேசத்துடன் கத்தியவன், முத்துவின் மார்பில் ஓங்கி ஒரு உதை விட்டான்.
இருவருக்கும் இடையே சண்டை பலமாக வெடித்தது. அந்தச் சிறைச் சமையலறையின் இருட்டு மூலையில், ஒருவர் மேல் ஒருவர் விழுந்து புரண்டனர். முத்துவின் அனுபவமும், அந்த இளைஞனின் ஆவேசமும் மோதிக்கொண்டன. தன் சட்டைக் காலரைப் பிடித்தவனைத் தள்ளிவிட்ட முத்து, அருகில் இருந்த சமையலறை மேஜையின் மேல் கிடந்த ஒரு கனமான இரும்புக் கரண்டியைத் தன் கையில் எடுத்தான்.
கரண்டியை எடுத்த முத்துவின் வேகம் இப்போது பலமடங்கு கூடியது. ஆத்திரத்தில் அவன் அந்த இளைஞனைத் தாறுமாறாகத் தாக்கத் தொடங்கினான்.
“அடி… அடி…” என்று ஒவ்வொரு அடியும் விழும்போதும், அந்த இளைஞனின் அலறல் சத்தம் சமையலறைப் பாத்திரங்களின் சத்தத்தில் கலந்து கரைந்தது. முத்துவின் தாக்குதலில் அந்த இளைஞனின் உடல் ரத்தத்தால் நனைந்தது.
“உயிரைத் தவிர உடலில் ஒன்றும் இல்லை” என்று சொல்லும் அளவுக்கு, அவன் அசைவற்று தரையில் சாய்ந்தான். அவனது ஆடம்பரமான வாழ்க்கையும், அதிகாரத் திமிரும் அந்தச் சாதாரண இரும்புக் கரண்டியிடம் மண்டியிட்டுக் கிடந்தன.
சண்டையின் சத்தம் ஓய்ந்த அந்த விநாடி, சிறைச்சாலையின் உட்புறத்திலிருந்து கைதிகளின் கூச்சல் சத்தம் மிக நெருக்கமாகக் கேட்டது. நூற்றுக்கணக்கான கைதிகள் சமையலறைப் பகுதியை நோக்கி ஓடிவரும் அந்த அதிரடிச் சத்தம் முத்துவின் காதுகளை எட்டியது.
அசைவற்றுப் படுத்திருந்த அந்த இளைஞனை ஒருமுறை ஏளனமாகப் பார்த்த முத்து, தன் கையில் இருந்த ரத்தக்கறை படிந்த கரண்டியை அங்கேயே எறிந்தான். போலீஸார் அந்தப் பக்கமாக வருவதற்குள், சமையலறையின் அந்தப் பிளவுபட்ட சுவர் ஓட்டையின் வழியாக மின்னல் வேகத்தில் வெளியே குதித்தவன் இருளில் கரைந்து தப்பினான்.
சிறைச்சாலையின் ரத்தக் கறைகளும், சமையலறைச் சண்டையும் முடிவுக்கு வந்திருக்க, இருளின் போர்வையில் முத்துவின் அடுத்த ஆட்டம் சாலையோரத் திருப்பத்தில் தொடங்கியது.
அந்த நால்வரும் ஒரு திசையில் ஓட, முத்து மட்டும் சாமர்த்தியமாக அவர்களுக்கு எதிர் திசையில் பாய்ந்தான். மூச்சிரைக்க ஓடி வந்து பிரதான சாலையை அடைந்தவன், இருட்டில் மின்னிய ஒரு காரின் முகப்பு விளக்கைக் கண்டதும் சட்டென்று அதன் குறுக்கே குதித்தான்.
“க்ரீச்…” என்ற அதிரடிச் சத்தத்துடன் கார் நின்றது. கார் கதவைத் திறந்துகொண்டு மின்னல் வேகத்தில் உள்ளே புகுந்த முத்து, ஓட்டுநர் இருக்கையில் இருந்தவனின் கழுத்தில் தன் கூர்மையான கத்தியை அழுத்தமாகப் பதித்தான்.
“வண்டியை எடுடா… சத்தம் போட்டேன்னா உனக்கு மறு உலகம் தான்!” முத்துவின் குரலில் இருந்த அந்தப் பயங்கரம், காரின் குளிர்சாதனப் பெட்டியையும் தாண்டி ஓட்டுநரை நடுங்க வைத்தது.
“எ… எங்க போகணும்? என்னை விட்டுடுங்க… என்கிட்ட பணம் எதுவும் இல்லை,” என்று தழுதழுத்த குரலில் அந்த இளைஞன் கேட்க, முத்து அவனை மேலிருந்து கீழாகப் பார்த்தான்.
அவன் விலை உயர்ந்த பட்டாடை உடுத்தியிருந்தான். காரின் பின் இருக்கையில் travel bag, suitcase என இருந்தன.
“பணம் வேணாம்டா… நீ இப்போ எங்க போயிட்டு இருக்க? உண்மையைச் சொல்லு,” என்று முத்து கத்தியை இன்னும் கொஞ்சம் அழுத்தினான்.
“எனக்கு… எனக்கு விடிஞ்சா கல்யாணம். சோழபுரம் நோக்கி கல்யாண மண்டபத்துக்குப் போயிட்டு இருக்கேன்.” என்று அந்த இளைஞன் நடுங்கியபடி உண்மையைச் சொல்லவும்..
முத்துவின் முகத்தில் ஒரு நமுட்டுச் சிரிப்பு அரும்ப, “ஓஹ்… புது மாப்பிள்ளை சார் ஆஹ் நீங்க? சரி… சரி… ரொம்பப் பயப்படாதீங்க மாப்பிள்ளை சார். உங்க கூடவே ஒரு பாதுகாப்பா நான் வர்றேன்,” என்றவன், கேலியாக அந்த இளைஞனின் சட்டை காலரைச் சரி செய்துவிட்டு, அவனின் கன்னத்தை அழுத்தமாக பிடித்து தன்பக்கம் திரும்பியவன்..
“இங்க பாரு… நான் யார், என்னன்னு யார்கிட்டயும் சொல்லக் கூடாது. எவனாவது கேட்டா, ‘இவன் என் நெருங்கிய நண்பன்’னு மட்டும் சொல்லணும். நாளைக்குக் காலைல விடிஞ்சதும் நானே போயிடுவேன். அதுவரைக்கும் வாய் திறந்தேன்னா… உன் கல்யாணம் சுடுகாட்டுல தான் நடக்கும்!” என்று முத்து கத்தியைக் காட்டி மிரட்ட…
“சரி… சரி… நீங்க சொல்றபடியே செய்றேன். கத்தியை எடுங்க,” என்று அந்தப் புது மாப்பிள்ளை உயிர் பயத்தில் தலையசைத்தான்.
சாலை ஓரத்தில் ஒரு அடர்ந்த மர நிழலில் காரை நிறுத்தச் சொன்னான் முத்து. நள்ளிரவு நேரம் என்பதால் அந்தப் பகுதி ஆள் நடமாட்டமின்றி நிசப்தமாகக் கிடந்தது. கார் நின்றதும் மின்னல் வேகத்தில் இறங்கிய முத்து, தான் அணிந்திருந்த அந்த அழுக்கு படிந்த கைதி உடையைக் களைந்து எறிந்தவன், பின் இருக்கையில் இருந்த சூட்கேஸைத் திறந்து, அதிலிருந்த ஒரு புத்தம் புதிய விலை உயர்ந்த சட்டையையும் பேண்ட்டையும் எடுத்து அணிந்து கொண்டான்.
இப்போது முத்து ஒரு லோக்கல் ரௌடியைப் போலத் தெரியவில்லை, ஒரு பளபளப்பான ஐடி நிறுவன ஊழியனைப் போலவே மிடுக்காக மாறினான்.
கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துத் திருப்தி அடைந்தவன், நடுங்கிக் கொண்டிருந்த அவனை பார்த்து, “டேய் மாப்பிள்ளை… எப்படி இருக்கு இந்த டிரஸ்? எனக்கு செட் ஆகுதா?” என்று ஒரு நமுட்டுச் சிரிப்புடன் கேட்டான்.
அவனோ தன் உயிர் பயத்திலும், நடுக்கத்திலும் ஒருவாறாகத் தலையசைத்து, “நல்லா… நல்லா இருக்குங்க…” என்று தழுதழுத்தான்.
முத்து தன் ஈறுகள் தெரியுமளவுக்கு ஒரு விகாரமான சிரிப்பை உதிர்த்துவிட்டு மீண்டும் காரில் ஏறி அமர்ந்தான். “சரி, சரி… நேரமாச்சு, வண்டியை எடு!” என்று கத்தியின் முனையால் அவனின் தோளில் தட்டி உத்தரவிட, கார் மீண்டும் திருமண மண்டபத்தை நோக்கி நகரத் தொடங்கியது.
முத்துவால் அமைதியாக இருக்க முடியவில்லை. “ஆமா மாப்பிள்ளை சார்… இது என்ன லவ் மேரேஜா? இல்ல உங்க வீட்ல பார்த்து வச்ச கல்யாணமா?” என்று கிண்டலாகக் கேட்டான்.
“வீட்டுல… வீட்டுல பார்த்து வச்சதுதான்,” என்றான் ராஜேஷ் சுருக்கமாக.
“அப்படியா! இவ்வளவு பேசுறோம், உன் பேரைச் சொல்லவே இல்லையே? உன் பேர் என்ன மாப்பிள்ளை சார்?”
“ராஜேஷ்…” என்று நடுங்கும் குரலில் தன் பெயரைச் சொன்னான்.
“ஓ… ராஜேஷா! நல்ல பேருதான். அப்படியே அந்த அதிர்ஷ்டசாலிப் பொண்ணு பேர் என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்?” என்று முத்து குத்தலாகக் கேட்கவும்
இந்த முறை ராஜேஷின் குரலில் இருந்த பயம் குறைந்து, ஒரு மெல்லிய வெட்கம் வந்து ஒட்டிக்கொண்டது. “யா… யா… யாழினி…” என்று அவன் பெயரைச் சொல்லும்போதே அவனது இதழ்கள் லேசாகப் பிரிந்தன.
அதைக் கேட்ட முத்துவுக்கு ஒரு பக்கம் வியப்பும், மறுபக்கம் ஒரு கிரிமினல் குறும்புத்தனமும் உண்டாக, “பார்றா! பொண்ணு பேரைச் சொல்லும்போதே மாப்பிள்ளை சாருக்கு இவ்வளவு வெட்கம் வருதா? லவ் மேரேஜ் இல்லன்னாலும் ஆளு பயங்கர ரொமான்டிக் தான் போல!” என்று சொல்லி, ராஜேஷின் கன்னத்தில் மென்மையாக ஒரு குத்து விட்டான்.
வெட்கத்தில் சிவந்த ராஜேஷின் முகம், காரின் முகப்பு விளக்கின் வெளிச்சத்தில் இன்னும் பளிச்சென்று தெரிந்தது. ஆனால், அதே காரின் பின் இருக்கையில் அமர்ந்திருக்கும் இந்த முத்துவின் உண்மையான நோக்கம் என்னவென்று அந்தப் பாவம் ராஜேஷுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கார் மெல்ல அந்தப் பிரம்மாண்டமான திருமண மண்டபத்தின் நுழைவாயிலை அடைந்தது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த மண்டபம், அதிகாலையிலேயே களைகட்டத் தொடங்கியிருந்தது. கார் நின்றதும், ராஜேஷின் பெற்றோர்களும் யாழினியின் பெற்றோர்களும் மிகுந்த உற்சாகத்துடன் ஓடி வந்தனர்.
“வாப்பா ராஜேஷ்… என்ன இவ்வளவு நேரம்? எல்லாரும் உனக்காகத்தான் காத்துட்டு இருக்கோம்,” என்று ராஜேஷின் தந்தை வாஞ்சையுடன் கேட்க, தாய் ஆர்த்தி தட்டை ஏந்தி மகனுக்குத் திருஷ்டி கழித்தார்.
ராஜேஷின் அருகில் நின்றிருந்த முத்துவை அனைவரும் ஒரு நிமிடம் ஏறிட்டுப் பார்த்தனர்.
முத்து சட்டென்று மண்டபத்தைச் சுற்றித் தன் பார்வையைச் சுழற்றினான். அங்கே பூங்கொத்துகளுடனும், பட்டு வேட்டிகளுடனும் நின்றிருந்த உறவினர்களுக்கு இடையே, சஃபாரி உடை அணிந்த சில ஆட்கள் அங்கும் இங்கும் நடமாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் சாதாரண விருந்தினர்கள் அல்ல என்பது முத்துவுக்கு அடுத்த நொடியே புரிந்தது.
(யாழினி ஏற்கனவே ஒருவனைக் காதலிப்பதால், இந்தத் திருமணத்தில் இருந்து அவள் எங்கே தப்பி ஓடிவிடுவாளோ என்ற அச்சத்தில் அவளது தந்தை மண்டபம் முழுவதையும் அடியாட்களின் கண்காணிப்பில் வைத்திருந்தார். )
சூழலின் தீவிரத்தைப் புரிந்துகொண்ட முத்து, தன் கையில் இருந்த கத்தியை, ராஜேஷின் இடுப்புப் பகுதியில் சட்டையின் மறைவில் மெல்ல அழுத்தியது. அந்த எச்சரிக்கை ராஜேஷின் நரம்புகளில் மின்னலாய் பாய்ந்தது.
பயத்தில் நாக்கு உலர, தன் தந்தையைப் பார்த்தவன், “அப்பா… இவன் என் நெருங்கிய நண்பன். பெங்களூர்ல இருந்து கல்யாணத்துக்கு வந்திருக்கான். இவனை உங்களுக்குத் தெரியாது,” என்று தழுதழுத்த குரலில் அறிமுகப்படுத்த…
“ஓ… அப்படியா! ரொம்ப சந்தோஷம்பா. தம்பி… வாங்க, உள்ளே வாங்க,” என்று பெரியவர்கள் முத்துவை இன்முகத்துடன் வரவேற்றனர். மாப்பிள்ளைக்காக ஒதுக்கப்பட்டிருந்த பிரத்யேக அறைக்கு இருவரையும் அழைத்துச் சென்றனர்.
உள்ளே நுழைய முயன்ற ராஜேஷின் தந்தையைத் தடுத்து நிறுத்திய முத்து, ஒரு கிரிமினல் புன்னகையுடன் கண்ணடித்தவன். “சார்… இன்னைக்கு ஒரு நாள் தானே சார் இவன் பேச்சுலர்? நாங்க ரெண்டு பேரும் மட்டும் கொஞ்ச நேரம் தனியா இருக்கோம்” என்று குறும்பாகச் சொல்ல,
ராஜேஷின் தந்தை சிரித்துக்கொண்டே, “சரி சரி… என்ஜாய் பண்ணுங்கப்பா!” என்று கதவைச் சாத்திவிட்டு வெளியேறினார்.
கதவு தாளிடப்பட்ட அடுத்த நொடி, முத்துவின் முகம் மாறியது. “இங்க பாரு மாப்பிள்ளை சார்… நீ அமைதியா இருக்குற வரைக்கும் தான் உன் உயிருக்கு கேரண்டி. ஏதாவது லூசுத்தனமா பண்ணி என்னை மாட்டிவிடப் பார்த்தே… நான் மாட்டினாலும் பரவாயில்லை, ஆனா உன்னை உயிரோட விடமாட்டேன்!” என்று மிரட்டினான்.
ராஜேஷ் ஒன்றும் பேச முடியாமல் கட்டிலின் ஒரு ஓரத்தில் சுருங்கிப் போய் அமர்ந்தான். முத்து நிதானமாக அங்கிருந்த சொகுசு நாற்காலியில் அமர்ந்து, தன் இரு கால்களையும் எதிரில் இருந்த மேசை மேல் தூக்கிப் போட்டான். ரிமோட்டை எடுத்துத் தொலைக்காட்சியை ஆன் செய்து செய்திகளைத் தேடினான்.
அந்த தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்தார்…
“தலைப்புச் செய்திகள்: புழல் மத்திய சிறையில் நள்ளிரவு ஏற்பட்ட பயங்கரக் கலவரத்தில் கைதிகள் தப்பியோட முயற்சி! பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி ஐந்து கைதிகள் வெளியேறியுள்ளனர். அவர்களில் நான்கு பேர் உடனடியாகப் பிடிபட்ட நிலையில், ஒரு கைதி மட்டும் மாயமாகியுள்ளார். தப்பியோடிய அந்த ஒருவரைத் தேடும் பணியில் தனிப்படை போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.”
“சிறையில் ஏற்பட்ட மோதலில், பிரபல தொழிலதிபர் ரத்தினவேலோட மகன் சஞ்சயை, மர்ம நபரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்…”
அந்தச் செய்தியைக் கேட்டதும், முத்துவின் உதடுகளில் ஒரு மர்மம் கலந்த, விசித்திரமான புன்னகை அரும்பியது. அந்த சஞ்சயின் நிலை அவனுக்கு ஒருவிதமான ஆத்ம திருப்தியைத் தந்தது போலத் தெரிந்தது.
யாழினியின் திருமண மண்டபத்தில் ஒளிந்திருக்கும் முத்துவின் அடுத்த இலக்கு யார்?
வேட்டை தொடரும் ..⚓
