Rolex 14

14

 

மதியம் பன்னிரண்டு மணிக்கு கடல் காற்று ரம்யமாக வீசிக்கொண்டிருக்க வேண்டிய அந்த அமைதியான நேரத்தில், துறைமுகத்தின் எல்லைப் பகுதியில் மரணத்தின் நிழல் படிந்திருந்தது. அலைகளின் ஓசையை விடவும் பயங்கரமாக, நான்கு மனிதர்களின் மரண ஓலம் அந்த இடத்தையே அதிர வைத்தது.

முகத்திலும் உடையிலும் இரத்தம் கசிந்து உறைந்திருக்க, நான்கு போலீஸ்காரர்கள் அங்கே சித்ரவதைக்கு உள்ளாகிக் கொண்டிருந்தார்கள். காயப்பட்ட இடங்களில் உப்புக் காற்று படும்போது ஏற்படும் எரிச்சலும், வலியும் அவர்களை நரகத்தின் விளிம்பிற்கே கொண்டு சென்றது. ஆனால், அவர்களின் கதறல்களைக் கண்டு அங்கே நின்றிருந்த ஐந்து அடியாட்களுக்கு இரக்கம் வரவில்லை, மாறாக, அவர்கள் இன்னும் ஆவேசமாகத் தாக்கிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது, அந்த இரத்த சரித்திரத்தை அமைதிப்படுத்தும் விதமாக ஒரு வெள்ளை நிற Fortuner கார் புழுதியைக் கிளப்பிக்கொண்டு உள்ளே நுழைந்தது.

கார் வந்து நின்றதும் அடியார்கள் அடிப்பதை நிறுத்திவிட்டு, ஒருவித அச்சத்துடன் கைகளைக் கட்டி நின்றனர். காரின் பின்பக்கக் கதவு மெல்லத் திறக்க, அந்தத் துறைமுகத்தின் தற்போதைய அரக்கன் பைரவன் வெளியே இறங்கினான்.

ஒரு கட்டுமரம் போன்ற கரிய தேகம், தடிமனான தோள்கள் என ஒரு காட்டு எருமையின் பலத்தை அவன் உடம்பு கொண்டிருந்தது. முகம் முழுவதும் ஆக்கிரமித்திருந்த அந்த அடர்த்தியான மீசையும், சிவந்த கண்கள் காட்டிய கோபமும் அவன் ஒரு சாதாரண மனிதன் அல்ல என்பதை உணர்த்த, அவனது தோற்றம் பார்ப்பவரையே உறைய வைக்கும் வகையில் இருந்தது.

வாயில் இருந்த சிகரெட்டை ஆழமாக இழுத்து புகையை ஊதியபடி, அவன் அந்த போலீஸ்காரர்களை நோக்கித் தன் கனமான அடிகளை எடுத்து வைத்தான்.

அவன் நெருங்கி வர வர, அந்தக் காவலர்களின் உள்ளம் பயத்தில் துடித்தது. “ஐயா… எங்களை விட்டுடுங்க… தப்பு செஞ்சிட்டோம்!” என்று அவர்கள் அழுது கதறினார்கள். ஆனால் பைரவனின் காதுகளில் அது விழவே இல்லை.

மெல்ல அருகில் வந்த பைரவன், தன் அடியானின் இடுப்பில் இருந்த கத்தியை ‘சடக்’ எனப் பிடுங்கியவன், அடுத்த நொடி ஒரு வேட்டை மிருகமாக மாறினான்.

எந்த ஒரு யோசனையும் இன்றி, கொஞ்சமும் கருணை காட்டாமல், அந்த நால்வரில் மூவரின் மீது பாய்ந்தான்.

கத்தியின் கூர்முனை சூரிய ஒளியில் மின்னியது. சர… சர… என அவர்களின் முகமும் உடலும் கிழிந்து ரத்தம் பீறிட்டது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த மூவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். வலியால் அவர்கள் துடித்தபோது, பைரவன் அவர்களை ஆக்ரோஷமாக எட்டி உதைத்தான்.

ஒவ்வொரு உடலும் அந்த ஆழமான கடலில் “தபதபவென” விழ, அந்த இடமே ஒரு மாபெரும் இரத்தக் காடாக மாறியது.

கடைசியாக உயிரோடு இருந்த அந்த ஒரே ஒரு போலீஸ்காரன், தன் கண் முன்னால் நடந்த கோரத்தைப் பார்த்துப் பேச்சற்று நின்றான்.

ரத்த வாடை உப்புக் காற்றோடு கலந்து குடலைப் பிடுங்க, அனின் உடலில் வேர்வை ரத்தத்தோடு கலந்து வழிந்தோடியது. தன் கண் முன்னால் தன் சகாக்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டுக் கடலில் வீசப்பட்டதைக் கண்ட அவனது கண்கள், மரண பயத்தில் நிலை குத்தி நின்றன.

பைரவன் அந்த இரத்தக் கறை படிந்த கத்தியை கீழே போட்டுவிட்டு அவனுக்கு மிக அருகில் வந்தான். சிகரெட்டைத் தூக்கி எறிந்துவிட்டு, வாயில் இருந்த புகையை அந்தப் போலீஸ்காரனின் முகத்திலேயே ஊதியவன், மெதுவாகத் தன் இடுப்பில் செருகியிருந்த அந்த மூட்டை தூக்கும் இரும்புக் கொக்கியை எடுத்தான். துருப்பிடிகாத்த அந்த வளைந்த இரும்பு, ஒரு எமனின் பல்லைப் போல மின்னியது.

பைரவன் அந்தக் கொக்கியின் கூர்மையான முனையை அந்தப் போலீஸ்காரனின் தாடைக்குக் கீழே, தொண்டைக் குழியில் மெல்ல அழுத்தினான்.

“ஐயோ… எனக்கு ஏதும் தெரியாதுங்க… என்னை விட்டுடுங்க… சாமி புண்ணியமாப் போகும்!” அவன் கதறினான். அவனது குரல் நடுக்கத்தில் உடைந்து சிதறியது.

“உனக்குத் தெரியாம இருக்காதுடா… நீயும் அந்த ACயும் ஒன்னாதானே சுத்துனீங்க? ஒழுங்காச் சொல்லிடு… இல்லன்னா அந்த மூணு பேரோட சேர்த்து உன்னையும் நாலாவது ஆளா கடல் மீனுக்கு இரையா போட்டுடுவேன்,” என்ற பைரவனின் குரல் ஒரு கனத்த இரும்புக் குண்டைப் போல அவனது காதுகளில் விழுந்தது. கொக்கியின் அழுத்தம் கூடக் கூட, தொண்டையில் இருந்து ரத்தம் கசிந்து அவனது சீருடையில் வழிந்தது.

மரணத்தின் விளிம்பில் நின்ற அந்தப் போலீஸ்காரன், தன் ரகசியங்களை வாந்தி எடுத்தான். “அந்த… அந்த AC.. AC .. இங்க இல்ல… அவரு அசாம் போயிட்டாரு. அசாம்ல அவரு எங்கே இருக்காருன்னு எனக்குத் தெரியாதுங்க… சத்தியமாத் தெரியாது!”

பதிலைக் கேட்ட பைரவன் மெல்ல அந்தக் கொக்கியைத் தொண்டையிலிருந்து எடுத்தான். போலீஸ்காரன் ஒரு நிமிடம் உயிர் பிழைத்துவிட்டோம் என்ற நம்பிக்கையில் ஒரு பெருமூச்சு விட்டான். ஆனால், அந்த நம்பிக்கை ஒரு நொடி கூட நீடிக்கவில்லை.

அடுத்த வினாடி, பைரவனின் கைகள் மின்னல் வேகத்தில் சுழன்றன. அந்தக் கனமான இரும்புக் கொக்கியை ஒரே போடாக அந்தப் போலீஸ்காரனின் தொண்டைக் குழியில் ஓங்கி இறக்கினான்.

“தசக்…!”

அந்தக் கூர்மையான முனை அவனது கழுத்தைத் துளைத்து, தாடையைத் தாண்டி வாயின் வழியாக வெளியே வந்தது. அவனது அலறல் சத்தம் வெளியே வர முடியாமல் தொண்டையிலேயே ரத்தத்தோடு சிக்கிக் கொண்டது. பைரவன் ஆக்ரோஷமாக அந்தக் கொக்கியைப் பிடித்துப் பலமாக இழுக்க, அவனது தாடை எலும்பு இரண்டாகப் பிளந்து தொங்கியது.

அங்கிருந்த பைரவனின் அடியார்கள் கூட அந்தப் பயங்கரத்தைக் கண்டு ஒரு நிமிடம் உறைந்து போனார்கள். ஆனால் பைரவன் நிற்கவில்லை. ஒரு வெறி பிடித்த மிருகத்தைப் போல, அந்தக் கொக்கியால் அவனது உடல் முழுவதும் “சதக்… சதக்…” எனத் துளைக்கத் தொடங்கினான். சதை கிழிந்து எலும்புகள் உடையும் சத்தம் அந்த நிசப்தமான அந்த இடத்தில் பயங்கரமாகக் கேட்டது.

இறுதியில், பாதி சிதைந்த அந்த உடலைக் கொக்கியால் குத்தித் தரைமட்டமாக இழுத்துச் சென்றவன், ஆவேசமாக அந்தக் கடலில் வீசி எறிந்தான். ரத்தம் தோய்ந்த அந்தக் கொக்கியை எடுத்துத் தன் சட்டையிலேயே துடைத்தபடி, அலைகளைப் பார்த்தவன் .. 

“அசாம் போனாலும் சரி… ஆகாயத்துக்குப் போனாலும் சரி… என்னைத் தாண்டி நீ வாழ முடியாது!” என கர்ஜித்தான்.

பின்னர் தன் அடியாட்களை நோக்கித் திரும்பியவன். “அந்த AC எங்க இருக்கான்னு எனக்குத் தெரிஞ்சாகணும்! அவன் அசாம்ல இருந்தாலும் சரி, பாதாளத்துல ஒளிஞ்சிருந்தாலும் சரி… அவனைத் தூக்கிட்டு வாங்க. அவன் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க இன்னும் எத்தனை போலீஸ்காரனுங்க உயிர் போனாலும் எனக்குக் கவலையில்லை. அவன் என் கையில கிடைக்கணும்… இரகசியம் தெரிஞ்சதும் அவனை துண்டு துண்டா வெட்டி இந்தக் கடல்லயே வீசணும்!” என்று கர்ஜித்தான் பைரவன்.

அவனது ஆவேசம் காற்றையே உறைய வைத்தது. பேசி முடித்துவிட்டு விறுவிறுவெனத் தன் Fortuner காரை நோக்கி நடந்தான். கார் கதவைத் திறந்து உள்ளே அமரச் சென்ற அந்த நொடி… தற்செயலாக அவனது பார்வை தூரத்தில் இருந்த உயரமான கன்டெய்னர்களின் மீது விழுந்தது.

அங்கே, ஒரு உருவம் அசையாமல் நின்று கொண்டிருந்தது. அந்த உருவத்தைப் பார்த்ததும் பைரவனின் உடல் ஒரு நிமிடம் சிலிர்த்தது. அவனது முகத்தில் முதலில் ஒரு பயங்கரமான கோபம் மின்னியது, அடுத்த நொடி ஒரு அதிர்ச்சி, பின் ஒரு விசித்திரமான, வக்கிரமான புன்னகை அரும்ப.. எதுவும் பேசாமல் காரினுள் ஏறி அமர்ந்தவன்,

“வண்டியை எடு!” என்று கத்தினான்.

கார் துறைமுகத்தைத் தாண்டிச் சீறிப் பாய்ந்தது. டிரைவரின் தோளைப் பலமாகத் தட்டிய பைரவன்,

“Port DC ஆபீஸ்க்குப் போ…!” என்று ஆணையிட்டான்.

 

DC Office உள்ளே, கணேஷ் ஆழ்ந்த அமைதியில் கோப்புகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்தான். அப்போது வெளியே திடீரெனப் பெரும் கூச்சல் சத்தம் கேட்டது. யாரோ ஒருவன் அதிகாரத் தொனியில் வாதிடும் சத்தம் கேட்டு, கணேஷ் எரிச்சலுடன் மேஜையில் இருந்த அழைப்பு மணியை பலமாக அழுத்தினான்.

அடுத்த வினாடி, கதவு “படார்!” என உதைத்துத் திறக்கப்பட்டது. உள்ளே நுழைந்தது ஒரு மனிதனல்ல… ஒரு காட்டெருமையைப் போன்ற பலம் கொண்ட பைரவன்! அவனது காலடிச் சத்தமே அந்த அறையை அதிர வைத்தது.

அவனைத் தடுத்து நிறுத்த முயன்ற வாயில் காவலன், “சார்… சார்… உள்ள போகாதீங்க… பெர்மிஷன் இல்லாம…” என்று கத்தியபடி பின்னாடியே ஓடி வந்தான்.

கணேஷ் தன் முன் நிற்பவனைப் பார்த்ததும் நிலைமையைப் புரிந்துகொண்டான். காவலனை நோக்கி, “நீ போ… நான் பார்த்துக்கிறேன்,” என்று சைகை காட்ட, அவன் ஒரு சல்யூட் அடித்துவிட்டுப் பதற்றத்துடன் வெளியேறினான்.

அறையில் இப்போது கணேஷும், இரத்த வெறி பிடித்த பைரவனும் நேருக்கு நேர் நின்றனர்.

தன் நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்த கணேஷ், “என்ன பைரவா? எதுக்கு இப்போ இங்க வந்து அராஜகம் பண்ணிட்டு இருக்க? ஒரு அதிகாரி அலுவலகத்துக்குள்ள எப்படி வரணும்னு உனக்குத் தெரியாதா? உனக்கு என்ன வேணும்?” என அதட்டும் குரலில் கேட்டான். 

பைரவன் மெல்ல நகர்ந்து வந்து, கணேஷின் அந்தப் பிரம்மாண்டமான மேஜையின் மீது தன் இரு கரங்களையும் ஊன்றி, அவனை நோக்கித் தன் முகத்தை நெருக்கினான். அவனது கண்கள் வேட்டையாடத் துடிக்கும் ஒரு ஓநாயின் கண்களைப் போலச் சிவந்து கிடந்தன. அவனது சட்டையில் தெறித்துக் காய்ந்திருந்த இரத்தத் துளிகள் கணேஷின் கண்களில் பட்டன, ஆனால் அவன் ஏதும் கேட்காமல் அமைதியாக அவனின் கண்களை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தான்.

“மரியாதை எல்லாம் அப்புறம் வச்சுக்கலாம் மிஸ்டர் கணேஷ்… உங்க ஆபீஸ்க்குப் புதுசா ஒரு அதிகாரி வந்திருக்காராமே?” என்றவன் 

“கணேஷ்… உண்மையைச் சொல்லு. இன்னைக்குத் துறைமுகத்துல நான் பார்த்த அந்த வெள்ளை உடை… அந்தப் புது அதிகாரி பழைய சந்துரு தானே?” என பைரவனின் குரல் ஒரு இரும்புக் கம்பி தரையில் உரசும் ஓசையைப் போலக் கடூரமாய் ஒலித்தது.

சந்துருவை அவன் சரியாக அடையாளம் கண்டுவிட்டான் என்பதை உணர்ந்த கணேஷ், உள்ளுக்குள் ஒரு நொடி வியந்தாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. நிதானமாகத் தலையசைத்து, “ஆமாம்… அதனால உனக்கு என்ன இப்போ பிரச்சினை?” என்று எதிர்கேள்வி கேட்டான்.

“கணேஷ்… வேண்டாம்! அவன் ஒரு IPS ஆபிசர்னு எனக்குத் தெரியும். அவன் இங்க எதுக்கு வந்திருக்கான்னு எனக்குப் புரியுது. ஆனா, தேவையில்லாம என் விஷயத்துல அவன் தலையிட வேண்டாம்னு சொல்லிடு, இல்ல இப்பவே அவனை இங்கிருந்து கிளம்பிப் போகச் சொல்லு… அதுதான் உனக்கும் அவனுக்கும் இருக்குற நட்புக்கு அழகு!” என பைரவன் எச்சரிக்கும்போது அவனது மீசை துடித்தது.

தன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து, தீர்க்கமாக அவனைப் பார்த்த கணேஷ், “இங்க பாரு பைரவா… நீ ஏத்திட்டு வர்றதுக்கும், இறக்கி அனுப்புறதுக்கும் இது ஒன்னும் கண்டெய்னர்ல இருக்குற சரக்கு கிடையாது. இது கவர்மெண்ட் சர்வீஸ்! அரசாங்க உத்தரவுப்படிதான் அவன் இங்க வேலைக்கு வந்திருக்கான். நானே நினைச்சாலும் அவனைப் போகச் சொல்ல முடியாது,” என்று திடமாக மறுத்தான்.

 ஒரு வக்கிரமான புன்னகையைச் சிந்திய பைரவன். தன் அகன்ற மார்பை நிமிர்த்தி நேராக நின்றவன், தன் ஆள்காட்டி விரலை உயர்த்தி ஜன்னலுக்கு வெளியே காட்டினான்.

“அந்தச் சந்துரு உனக்கு நண்பனா இருக்கலாம்… ஆனா என்னைப் பொறுத்தவரைக்கும் அவன் இங்க வெறும் கஸ்டம்ஸ் அதிகாரிதான். என் வழியில குறுக்கே வந்தா இந்த பைரவன் என்ன பண்ணுவான்னு உனக்கு நல்லாவே தெரியும். உனக்கு உன் நண்பன் உயிரோட இருக்கணும்னா அவனை எச்சரிச்சு வை! ஏற்கனவே அந்தப் பழைய ACயை நான் தேடிக்கிட்டு இருக்கேன். அவன் மட்டும் என் கையில கிடைச்சான், அவனை அப்படியே கொத்துக்கறி போடக் காத்துக்கிட்டு இருக்கேன்!”

அவனது மிரட்டல் குரலில் இருந்த வீரியம், கணேஷின் நெற்றி ஓரத்தில் ஒரு வேர்வைத் துளியை வரவழைத்தது. ஆனால் கணேஷ் அதைத் துடைக்கவில்லை. “பைரவா… உன்னுடைய லிமிட் என்னன்னு உனக்குத் தெரியும். என்கிட்ட நெருங்காதே… உன் வேலையில நான் தலையிட மாட்டேன். ஆனா தேவையில்லாம சந்துரு கிட்ட வம்பு வச்சுக்காதே. நீ கிளம்பு!” என்று அதட்டினான்.

“அதேதான் நானும் சொல்றேன்… அந்தச் சந்துரு இங்க புதுசு. தேவையில்லாம என்கிட்ட வந்தான், அப்புறம் என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது. என்கிட்ட சொன்ன அதே வார்த்தையை அவன்கிட்டயும் சொல்லி வை!” என்று கர்ஜித்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் விறுவிறுவெனத் கதவைத் திறந்து கொண்டு வெளியேறினான் பைரவன்.

அவன் சென்ற திசையையே சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்த கணேஷ், பதற்றத்துடன் தன் அலைபேசியை எடுத்தவன். சந்துருவின் எண்ணிற்கு அழைப்பு விடுத்தான்.

சந்துருவின் உயிருக்கு ஆபத்து நெருங்கிவிட்டதை அவனது உள்ளுணர்வு எச்சரித்தது.

பைரவனின் எச்சரிக்கையை மீறிச் சந்துரு ரோலக்ஸ் பங்களாவிற்க்கு செல்வானா?

வேட்டை தொடரும் ..⚓

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!