Rolex 16

16

 

“உனக்கு எப்படிச் செய்கை மொழி இவ்வளவு நுணுக்கமாத் தெரியுது?” என ரோலக்ஸ் கேட்க .

எட்வர்ட் பதில் ஏதும் சொல்லவில்லை. ஆனால் அவனது உதடுகளில் ஒரு மௌனமான, மர்மமான புன்னகை மட்டும் நிலவ.. மீண்டும் ரோலக்ஸின் தோலை தட்டி கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் எட்வர்ட்.

அந்தக் கடலைப் போலவே எட்வர்ட்டின் பின்னணியும் ஒரு ஆழமான ரகசியத்தைக் கொண்டிருப்பதை ரோலக்ஸ் உணர்ந்தான்.

*****

துறைமுக அலுவலகத்தின் பரபரப்பான சூழலுக்கு நடுவே, கணேஷின் அறைக்குள் நிலவிய நிசப்தம் ஒரு புயலுக்கு முந்தைய அமைதியைப் போல இருந்தது. பைரவன் விட்டுச் சென்ற அந்த ரத்த வாடை இன்னும் அந்த அறையை விட்டு அகலவில்லை.

“டேய் சந்துரு… அவசரமா என்னோட ரூமுக்கு வாடா!”, கணேஷின் குரல் அலைபேசியில் வழக்கத்தை விட ஒருவித நடுக்கத்துடன் ஒலித்தது.

“என்னடா… இங்க ஏகப்பட்ட வேலை கிடக்கு. என்ன விஷயம்?” என சந்துரு நிதானமாகக் கேட்க, கணேஷ் பொறுமையிழந்தான்.

“நீ வேலை பார்க்கிற லட்சணம் எனக்குத் தெரியும். முதல்ல கிளம்பி இங்க வாடா!” என்று கணேஷ் கத்தவும், சந்துருவிற்கு ஏதோ விபரீதம் என்று புரிந்தது. தன் உதவியாளரிடம் பைல்களை ஒப்படைத்துவிட்டு, விறுவிறுவென கணேஷின் அறையை நோக்கி நடந்தான்.

சந்துரு உள்ளே நுழைந்தபோது, கணேஷ் ஒரு கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கத்தைப் போல அறையின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்கு நடந்துகொண்டிருந்தான். கதவு திறக்கும் சத்தம் கேட்டதும், சந்துருவின் சட்டையைப் பிடித்து இழுக்காத குறையாக அவனருகே பாய்ந்தவன். “இங்க பாரு சந்துரு… இது உனக்கு நான் கொடுக்கிற Last Warning. இப்பவே நீ உன் புதுப் பொண்டாட்டியை கூட்டிட்டு வேற எங்கயாவது ஓடிப் போயிடு. வேணும்னா இமயமலைக்குக் கூடப் போயிடு!”

ஒரு கணம் திகைத்த சந்துரு, பின் நக்கலாகச் சிரித்தவன். “டேய் கணேஷா… என்னடா திடீர்னு இவ்வளவு அக்கறை? இப்போதைக்கு ‘ஹனிமூன்’ போற ஐடியா எதுவும் இல்லடா. அதெல்லாம் அப்புறமா பார்த்துக்கலாம்,” என்று அவன் விளையாட்டாகச் சொல்ல, கணேஷ் ஆத்திரமடைந்தான்.

“எது? ஹனிமூனுக்கா? மன்னாங்கட்டி! இன்னும் கொஞ்ச நாள் இங்கேயே இருந்தா நீ ஹனிமூன் இல்ல, நேரா பரலோகத்துக்குத்தான் போகணும். இந்த ரோலக்ஸ் விஷயத்தை இதோட மறந்துட்டு ஊர் போய் சேருடா!” என கெஞ்சாத குறையாக அவன் சொல்ல

கணேஷின் கண்களில் தெரிந்த அந்த பயம் சந்துருவைச் சிந்திக்க வைத்தது. “என்னடா விஷயம்? அந்த பைரவன் இங்க வந்து உன்னை ஏதாவது மிரட்டிட்டு போனானா?” என்று குரலைத் தாழ்த்திக் கேட்டான்.

“மிரட்டலடா… எச்சரிக்கை செஞ்சுட்டுப் போயிருக்கான். அவன் உன்னை அடையாளம் கண்டுபிடிச்சுட்டான் சந்துரு! நீதான் அந்தப் புது அதிகாரிங்கிறது அவன் பார்த்த முதல் பார்வையிலேயே தெரிஞ்சு போச்சு. எதுக்குடா அவன் கண்ணுல படுற மாதிரி அங்கே போய் நின்ன?”

தன் தோள்களைக் குலுக்கிய சந்துரு . “என்னடா அவன் என்ன பஸ் ஸ்டாண்ட்ல நிக்குற காலேஜ் போற பொண்ணா? அவனுக்கு முன்னாடி போய் ‘சைட்’ அடிக்கிறதுக்கு எனக்கு என்ன ஆசை பாரு! … என் வேலையை நான் பார்த்துக்கிட்டு இருந்தேன். அவன் அங்கிருந்து என்னைப் பார்த்திருக்கான். அதுக்கு நான் என்னடா பண்ண முடியும்?”

தன் தலையில் அடித்துக்கொண்ட கணேஷ். “பேசுவடா பேசுவ… ஏன் பேச மாட்ட? உன்னைத் தேடி வந்து இங்க வேலைக்குச் சேர்த்து விட்டேன் பாரு, என்னைச் சொல்லணும்!” என கணேஷ் ஆத்திரத்தில் பொங்க.…

தீர்க்கமான பார்வையுடன் கணேஷைப் பார்த்த சந்துரு, “டேய்… இப்ப என்னதான்டா சொல்ல வர்ற? என்ன சொன்னான் அந்தப் பைரவன்? அதை முதல்ல உருப்படியா சொல்லு.”

தன் குரலைத் தாழ்த்திய கணேஷ், ஒருவிதமான எச்சரிக்கை தொனியில்.. “டேய் நீ ஊருக்குப் போறதுதான் நல்லது சந்துரு. அவ்வளவுதான் நான் சொல்ல முடியும். பைரவன் பழைய மாதிரி கிடையாது… இப்போ அவன் வேற மாதிரி இருக்கான். அவன்கிட்ட ஈரமே இல்ல.”

“அதுதான் பார்த்தேனே!” என்று இடைமறித்த சந்துருவின் குரலில் ஆவேசம் தெறித்தது.

“இந்தப் பட்டப்பகல்ல, யூனிஃபார்ம் போட்டுருக்கிற நாலு போலீஸ்காரங்களை கடல் மட்டத்துல வச்சு கொடூரமா கொலை செஞ்சு கடல்ல தள்ளியிருக்கான். இதைத் தட்டிக் கேட்க இங்க ஒருத்தன் கூட கிடையாதா?”

ஒரு நீண்ட பெருமூச்சு விட்ட கணேஷ்… “தெரியுதுல? நேரடியாவே பார்த்தல? இன்னும் என்னடா உனக்கு வேணும்? டேய்… என்ன விளையாடுறியா? நாலு போலீஸ் ஆபீஸர்ஸைக் கொலை செய்து இருக்கான் , ஆனா நீ இங்க மௌனமா இருக்கணும். இதுதான் இங்க நிலவரம்.”

ஆனா சந்துரு விடவில்லை. “இதுவே அவன் மேல ஆக்‌ஷன் எடுக்க நல்ல வாய்ப்புடா கணேஷ். ஒரு க்ரிமினல் கையை மீறிப் போயிட்டு இருக்கான். நாம இப்போ விட்டா அப்புறம் பிடிக்க முடியாது.”

“டேய் ராஜா! இதுக்குத்தான் நான் சொல்றேன்… தேவையில்லாம வம்பு பண்ணாம போயிடு. இது வாய்ப்பு எல்லாம் இல்ல, இது ஒரு எச்சரிக்கை மணி. நமக்குத் தேவையில்லாத விஷயத்துல தலையிட்டா நமக்குத்தான் ஆபத்து. இருக்கிற வேலையைச் செஞ்சுட்டு நாம போறதுதான் புத்திசாலித்தனம்.”

தன் பார்வையை இன்னும் கூர்மையாக்கிய சந்துரு, “சரி… அந்தப் பைரவன் கொலை பண்ண நாலு போலீஸ்காரங்க யாரு? எதுக்காக அவங்களைக் கொன்னான்? என்ன விஷயம்?”

“அது என்கிட்ட கேட்டா எனக்கு எப்படித் தெரியும்?” என கணேஷ் எரிச்சலுடன் சொல்ல

“அப்ப பைரவன் கிட்டயே நேரா போய் கேட்கவா?” என்று சந்துரு கேட்ட அந்த நொடி, கணேஷ் ஆடிப் போய்விட்டான்.

“கேப்படா… உனக்கு அதுக்குத் தைரியமும் இருக்கு, அதுக்கு மேல கொழுப்பும் இருக்கு! டேய்… என்னடா நினைச்சுக்கிட்டு இருக்க? இப்பதான் கல்யாணம் ஆகி வந்திருக்க. உன்னால ஒரு இடத்துல சும்மா இருக்க முடியாதா?”

மேஜையின் மீது தன் கரங்களை ஊன்றி, கணேஷின் கண்களை நேருக்கு நேர் பார்த்த சந்துரு, “சரி… நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு. அந்த நாலு போலீஸ் ஆபீஸர்ஸையும் அவன் எதற்காகக் கொலை பண்ணான்? காரணம் என்ன?” என்றவனின் குரல் இப்போது மிகவும் அழுத்தமாக இருக்க  

கணேஷ் மௌனமாக ஜன்னலுக்கு வெளியே தெரிந்த அந்தத் துறைமுகத்தைப் பார்த்தான். துறைமுகத்தின் ஜன்னல் திரைச்சீலைகள் உப்புக்காற்றில் படபடவென அடித்துக்கொள்ள, ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவன்.. “சந்துரு, இது வெறும் ரவுடிங்க சண்டை இல்லடா. இதுக்கு முன்னாடி இந்த ஏரியாவோட ACPயா இருந்தானே சர்மா…

அவனுக்கும் ரோலக்ஸுக்கும் இடையில இருந்த தொடர்பு ரொம்ப ஆழமானது. சில மந்திரிங்களுக்குத் தேவையான கடத்தல் வேலைகளை ரோலக்ஸ் செஞ்சு முடிப்பான். அதுக்குத் துணையா இருந்து, சட்டத்தின் பிடியில இருந்து அவனைக் காப்பாத்துறதுதான் சர்மாவோட வேலை. சுருக்கமா சொல்லப்போனா, மந்திரிங்க – சர்மா – ரோலக்ஸ்… இது ஒரு முக்கோணக் கூட்டணி!”

சந்துருவின் கண்கள் சுருங்க, “அப்போ அந்த சர்மா இப்போ எங்க?”

“அதுதான் தெரியலடா. ரோலக்ஸ் இங்கிருந்து காணாம போனதுமே, அவனுக்கு வர வேண்டிய பல கோடி மதிப்புள்ள கடத்தல் சரக்குகள் நின்னு போச்சு. அந்தச் சரக்குகள் எல்லாம் இப்போ எங்க இருக்கு, யாருடைய கட்டுப்பாட்டுல இருக்குன்னு சர்மாவைப் பிடிச்சாதான் தெரியும். அதனாலதான் பைரவன் சர்மாவைத் தேடி வெறிபிடிச்சு அலைறான்.

ஆனா ரோலக்ஸ் இறந்த செய்தி வந்ததும், சர்மா தன் தடயமே இல்லாம இடத்தை காலி பண்ணிட்டான். அவன் பைரவன் கண்ணுல படக்கூடாதுன்னு தலைமறைவா இருக்கானா இல்ல வேற ஏதோ திட்டமானு தெரியல,” என கணேஷ் முடித்தான்.

“சரி, ரோலக்ஸுக்கும் சர்மாவுக்கும் என்னதான் லாபம்? இவங்க ரெண்டு பேரும் எப்படி ஒன்னா வேலை பார்த்தாங்க?” என சந்துரு தன் அடுத்த கேள்விக்குத் தாவ

“லாபம் இல்லாமலா சந்துரு? பல சரக்குக் கப்பல்கள்ல வர்ற சட்டத்துக்குப் புறம்பான விஷயங்களை, எந்தச் சோதனையும் இல்லாம ரோலக்ஸ் கைக்குக் கொண்டு வந்து சேர்க்கிறது சர்மா தான். மந்திரிங்களுக்குத் தேவையான வேலைகளை ரோலக்ஸ் முடிச்சுத் தருவான், பதிலுக்கு அரசாங்கத் தரப்புல இருந்து எந்தப் பிரச்சினையும் வராம அந்த மந்திரிங்க பார்த்துப்பாங்க. இதுல ரோலக்ஸுக்குக் கிடைச்ச ஆதாயம் கொஞ்ச நஞ்சமல்ல… அவன் ஒரு தனி சாம்ராஜ்யத்தையே கட்டினான்.”

“ஏன்டா, இதெல்லாம் உங்க Recordல பார்த்தா தெரியாதா?” என சந்துரு இடைமறிக்க,

கசப்பாகச் சிரித்த கணேஷ், “அப்படி ரெக்கார்டுல தெரிஞ்சா அப்புறம் இது எப்படிடா ரகசியக் கடத்தல் ஆகும்? அவங்க போடுற ஒவ்வொரு கணக்கும் காத்துலதான் இருக்கும். ஒரு தடையமும் கிடைக்காத அளவுக்குப் பக்காவா பிளான் பண்ணுவாங்க. இப்போ அந்தச் சர்மாவைப் பிடிச்சா மட்டும்தான் பைரவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். அவனைக் கண்டுபிடிச்சா, நின்னு போன அந்தப் பல கோடி மதிப்புள்ள சரக்குகள் பைரவன் கைக்குக் கிடைக்கும். அதுக்காகத்தான் அந்த அரக்கன் இப்போ இவ்வளவு கொடூரமா இறங்கியிருக்கான்!”

சந்துரு எவ்விதச் சலனமும் இன்றி ஆழ்ந்த யோசனையில் இருக்க, அவனது மௌனம் கணேஷிற்கு ஒருவிதமான பயத்தைக் கொடுத்தது.

சந்துருவின் தோளைத் தட்டி, “என்னடா… எப்போ ஊருக்குக் கிளம்பலாம்னு யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்துட்டியா?” என்று நம்பிக்கையுடன் கேட்டான்.

“இல்லடா… இன்னைக்கு ராத்திரி ரோலக்ஸோட கோட்டைக்குள்ள போனா, அந்த சர்மா பத்தியும் ரோலக்ஸோட தொடர்புடைய மந்திரிங்க பத்தியும் ஏதாவது ஒரு துப்பு கிடைக்குமான்னுதான் யோசிச்சுட்டு இருக்கேன்!” என்று சந்துரு நிதானமாகச் சொல்ல, கணேஷ் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனான்.

“டேய்! இன்னுமா நீ இந்த விஷயத்துல பிடிவாதமா இருக்க? உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?” என்று கணேஷ் குரல் உயர்த்தித் கத்த…

சந்துரு தன் இருக்கையை விட்டு எழுந்து, மேஜையின் மீது இரு கைகளையும் ஊன்றி கணேஷை உற்றுப் பார்த்தான். “டேய் கணேசா… நான் ஏற்கனவே சொல்லிட்டேன், முன்னால வச்ச காலை பின்னால வைக்க மாட்டேன். எவ்வளவு ரிஸ்க் இருந்தாலும் சரி, இன்னைக்கு ராத்திரி நாம ரோலக்ஸோட கோட்டைக்குள்ள நுழையுறோம். அவ்வளவுதான்! என் வேலையை நான் போய் தொடர்றேன். நீ எல்லா வேலையும் முடிச்சுட்டு, இது எதுவுமே நடக்காதது போல அமைதியா இரு.”

கணேஷ் ஏதோ பேச முயல, கையை உயர்த்தி அவனை தடுத்த சந்துரு, “பைரவன் ஒருவேளை கேட்டா, எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைன்ற மாதிரியே காட்டுக்கோ. ராத்திரி நான் சொன்ன இடத்துக்குத் தயாரா இரு… வரேன்!” என்று கூறிவிட்டு, கணேஷின் பதிலை எதிர்பார்க்காமல் விறுவிறுவென கதவைத் திறந்து கொண்டு வெளியேறினான் சந்துரு.

அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்த கணேஷ், வேறு வழியின்றித் தன் இருக்கையில் அப்படியே சரிந்தான். அவனது கைகள் தானாகவே அவன் தலையைப் பற்றிக்கொண்டன.

“ஏன்டா இப்படிப் பண்ற? இந்த ரத்தக்கறை படிச்ச விஷயம் எல்லாம் பிடிக்காமத் தானேடா உன் கூட காக்கிச் சட்டை போடாம, இந்த வெள்ளைச் சட்டையைப் போட்டுக்கிட்டு ஹார்பருக்கு வந்து உட்கார்ந்திருக்கேன்… இங்கயும் வந்து இப்படி என் நிம்மதியைக் குலைக்கிறியேடா!” என்று கணேஷ் தனக்குத்தானே புலம்பிக்கொண்டான்.

துறைமுகத்தின் ஆழமான மௌனத்திற்குப் பின்னால் ஒரு பெரும் புயல் ஒளிந்திருப்பதை அவன் உணர்ந்தான். “இன்னைக்கு ராத்திரி என்ன நடக்கப்போகுதோ… அந்த அசுரன் ரோலக்ஸ் வாழ்ந்த கோட்டைக்குள்ள காலடி வைக்கிறது சிங்கத்தோட குகைக்குள்ள தலையைக் கொடுக்கிற மாதிரி ஆச்சே!” என்று நினைத்த கணேஷின் நெற்றியில் வேர்வைத் துளிகள் அரும்பின.

ஆனாலும், தன் நண்பன் சந்துருவைத் தனியாக அந்தப் போர்க்களத்திற்குள் அனுப்ப அவன் மனது ஒப்பவில்லை. ஆபத்து என்று தெரிந்தும், அந்த நள்ளிரவுப் பயணத்திற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளத் தொடங்கினான் கணேஷ்.

ரோலக்ஸின் பாழடைந்த கோட்டைக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன?

வேட்டை தொடரும் ..⚓

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!