17
“ஆமாண்டி, உனக்கு அவ்வளவு கஷ்டமா இருந்தா, நீயே இங்க வந்து உன் மாமாவுக்கு ஆக்கிப் போடு!” என செல்லமான கோபத்தில் யாழினி கத்த, மறுமுனையில் சுவேதாவின் சிரிப்பு சத்தமாக ஒலித்தது.
அந்த கடலோர வீட்டின் மேல்தளத்தில் நின்றபடி, கடல் காற்றின் இரைச்சலையும் மீறி தன் தங்கை சுவேதாவிடம் அலைபேசியில் மல்லுக் கட்டிக்கொண்டிருந்தாள்.
“ஓ… தாராளமா அக்கா! இதுல எனக்கு என்ன கஷ்டம்? உன்னைவிட நான் நல்லா சமைப்பேன் அப்படின்னு அம்மாவே சர்டிபிகேட் கொடுத்திருக்காங்க. வேணும்னா சொல்லு, இப்போவே பிளைட் ஏறி வரேன். எனக்கும் இந்த கப்பல், கடல்னு சுத்திப் பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு,” என்று சுவேதா தெனாவட்டாகச் சொல்ல, யாழினியின் முகம் சுருங்கியது.
“வருவடி வருவ! எனக்கு நீயே சக்காளத்தியா வருவ போல இருக்கு. எனக்கு எதிரி வேற எங்கேயும் இல்லைடி, என் வீட்டுக்குள்ளேயே தான் இருக்கு!”
“இப்போ எதுக்கு அக்கா என்னை திட்டுற? நீதானே உன் புருஷனுக்கு சோறாக்கிப் போடச் சொன்ன? இப்போ நீயே இப்படிப் பேசினா எப்படி? உனக்கு இதே வேலையாப் போச்சு… பேசாம போனை மாமா கிட்ட கொடு, நான் அவர் கிட்டயே டீல் பண்ணிக்கிறேன்,” என்று சுவேதா சீண்ட, யாழினிக்கு உண்மையிலேயே திக் என்றது.
“பேசுவடி பேசுவ… எல்லாம் கொழுப்பு! நான் இங்க ஊரை விட்டு வந்துட்டேன், அங்க வீட்ல என்ன நடக்குதோன்னு பதற்றத்துல போன் பண்ணா, நீ என்னடான்னா இன்னும் கறிக்குழம்பு, சோறுன்னு மாமா கூட அரட்டை அடிக்கப் பாக்குற!” என யாழினி கோபத்தில் பேச
குரலைத் தாழ்த்திய சுவேதா ரகசியமாகப் பேசுவது போல .. “ம்ம்ம் இங்க நிலைமை எப்படி இருக்குன்னு உனக்கே தெரியுமே அக்கா! நீ எஸ்கேப் ஆனதும் அப்பா வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சிட்டு இருந்தாரு. அம்மாவோ தலையில கை வச்சுகிட்டு ‘ஓ……..’ன்னு ஒரே ஒப்பாரி! இதெல்லாம் நடக்கும்னு எனக்கு தான் தெரியுமே! அதான் நான் வேணுமே கன்னத்துல கை வச்சுக்கிட்டு, உலகமே இடிஞ்சு விழுந்த மாதிரி ஒரு சோக ரியாக்ஷன் கொடுத்துட்டு இருந்தேன். எனக்கு எதுவுமே தெரியாம தான் இதெல்லாம் நடக்குதுன்னு அவங்களும் நம்பிட்டாங்க.” என அவள் சொல்ல சொல்ல யாழினிக்குச் சிரிப்பு வந்தாலும் அடக்கிக்கொண்டவள்,
“ஆமா… உண்மையிலேயே உனக்கு எதுவும் தெரியாது தானே? அப்புறம் என்ன?” என்று கிண்டலாகக் கேட்டாள்.
“எனக்கும் தெரியாது, ஓடிப்போன உனக்கும் தான் தெரியாது! ஆனா நீங்க ரெண்டு பேரும் காதலிச்ச விஷயம் எனக்கு மட்டும் தானே தெரியும்? அது போதும்,” என்று சுவேதா சொல்ல,
“அதுதான் உன் ஓட்டை வாயை வச்சு அப்பாகிட்ட உளறிடுவியோன்னு பயந்துதான் உன்கிட்ட எதையுமே சொல்லாம கிளம்புனேன்,” என சொன்ன யாழினியின் குரலில் ஒருவித நடுக்கம் பரவியது. “சரிடி… அப்பா, அம்மா இப்போ எப்படி இருக்காங்க? இன்னும் அழுதுட்டு தான் இருக்காங்களா? வேற எதுவும் பெரிய பிரச்சனை இல்லையே?” என்று அக்கறையாக வினவினாள்.
ஒரு பெருமூச்சு விட்ட சுவேதா. “அதெல்லாம் ஒன்னும் இல்லை அக்கா! நல்லாத்தான் இருக்காங்க. சும்மா உன் கண்ணுல காட்டிட்டு இருந்த BP மாத்திரை எல்லாம் இப்போ ஓரமா இருக்கு, நல்லா கறியும் சோறும் தின்னுட்டுத் தான் இருக்காங்க. நான்தான் இங்க நடக்குற நாடகத்தை எல்லாம் கூடவே இருந்து பார்த்துட்டு இருக்கேன். அன்னைக்கு உன்னை மிரட்டுனது ஒரு நாடகம்னா, இப்போ அவங்க போட்டுட்டு இருக்கிறது இன்னொரு நாடகம்.
ஆனா எதுக்கு இந்த நாடகம் ஆடுறாங்கன்னு தான் எனக்குத் தெரியலை,” என்று சுவேதா குழப்பத்துடனே முடிக்க,
யாழினியின் மனதில் இனம் புரியாத குழப்பம் வர… “ஒருவேளை அப்படி இருக்குமோ?” என்று யாழினி ஒரு மர்மமான புன்னகையுடன் கொக்கி போட்டாள் ..
“எப்படி அக்கா?” என சுவேதாவின் ஆர்வம் எகிறியது.
“இல்ல… நான் தான் கல்யாண மேடையில இருந்து எஸ்கேப் ஆயிட்டேன்ல? இப்போ அந்த கோபத்துல அடுத்தது உனக்கு கல்யாணம் பண்ற வேலையை உன் தலையில கட்டிடுவாங்களோனு தான் எனக்குத் தோணுது!”
மறுமுனையில் ஒரு பெரிய சிரிப்பை உதிர்த்த சுவேதா, “அடியாத்தி! உன்னை மாதிரி எல்லாம் நான் கல்யாண மேடை வரைக்கும் எல்லாம் காத்துட்டு இருக்க மாட்டேன் அக்கா. அதுக்கு முன்னாடியே எஸ்கேப் ஆகிடுவேன். உன் ஆளு மாதிரி, தாலி கட்டுற நேரத்துல வந்து என் ஆளு கெத்தா நிப்பான் அப்படின்னு எல்லாம் எனக்குத் துளி கூட நம்பிக்கை கிடையாது. அதுக்கும் மேல, உன் புருஷன் மாதிரி ஒரு போலீஸ்காரனை லவ் பண்ற அளவுக்கு எனக்குத் தைரியமும் இல்லை!”
அவள் சொல்வதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த யாழினி, “அடிப்பாவி! அப்போ ஏற்கனவே நீ ஒரு ஆள செட்டப் பண்ணிட்டியா? ஒரு பிளானோட தான் சுத்துற போல!”
“ஏய் அக்காக்காரி! இப்போ எதுக்கு இப்படி உளறுற? நான் என்ன சொன்னேன்… உன் ஆளு மாதிரி என் ஆளு போலீஸ்காரனா இருக்க மாட்டான்னு தான் சொன்னேன். இந்தத் தாலி, குடும்பம்னு மாட்டிக்கிட்டு இவங்க பார்க்கிற மாப்பிள்ளையை எல்லாம் கல்யாணம் பண்ணி வாழ முடியாது சாமி. உன்னை மாதிரியே நானும் ஒரு ஆளைப் பார்த்துட்டு எஸ்கேப் ஆனா தான் சரி வரும்!”
யாழினி சிரித்தபடி, “அதுவும் நல்ல விஷயம் தான். பாரு… நல்லாத் தேடிப் பாரு!” என்றாள்.
“சரி… நீ தான் ஒரு மாப்பிள்ளையைத் தேடிப் பார்த்த. அட்லீஸ்ட் பார்க்கிற மாப்பிள்ளைக்கு ஒரு தம்பி இருக்கிற மாதிரி பார்த்து இருக்கக்கூடாதா? நானும் அவனை சைட் அடிச்சே மயக்கி இருப்பேன்ல!” என சுவேதா சும்மா இருக்காமல் அவளை சீண்ட…
“ஏய் சுவேதா! நீ இன்னும் காலேஜே முடிக்கல, அதுக்குள்ள வாய் எல்லாம் பாரு, ரொம்ப ஓவரா போறடி! லவ் பண்றேன்னு நீயே எங்கும் ஓடிப் போயிடாதே. சரி, அங்க ஏதாவது பிரச்சனைன்னா எனக்கு உடனே சொல்லு. நான் போன் பண்ண விஷயத்தை அப்பா அம்மா கிட்ட சொல்லாத. இந்த நம்பரையும் உனக்குத் தெரிஞ்ச வரைக்கும் ரகசியமா வச்சுக்கோ.”
“சரி சரி, நீ எதுவும் பதறாத, நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன். நீங்களும் சேஃபாவே இருங்க. மாமா போலீஸ் தான்… ஆனாலும் உனக்கு இதெல்லாம் புதுசு,” என்று சுவேதா எச்சரிக்கையாகச் சொல்லி இணைப்பைத் துண்டித்தாள்.
யாழினி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். மேல்தளத்தில் நின்றபடி, ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளின் மீது மறையும் சூரியனின் தங்கஒளி விழுந்து சிதறுவதை ரசித்துக் கொண்டிருந்தாள். தனிமை இனிமையாக இருந்தது. அலைகளின் ஓசை அவளது மனதின் படபடப்பை மெல்ல மெல்லக் குறைத்துக் கொண்டிருந்தது.
அப்பொழுது, திடீரென ஒரு கனமான கை அவளின் தோளில் அழுத்தி விழுந்தது!
யாழினிக்கு ரத்தம் உறைந்து போக, எதிர்பாராத அந்தத் தீண்டலில் அவளது இதயம் தொண்டைக்கு வந்தது. “ஆஆஅ…!” என்று அலறியபடி சட்டென்று திரும்பிப் பார்த்தவளின் விழிகள் அதிர்ச்சியில் விரிய, அங்கே நின்றிருந்தது அவளது ஆருயிர் காதலன், இன்று அவளுக்குப் பதியவனான சந்துரு தான்.
நிலவொளியின் வெளிச்சத்தில் அவனது கண்கள் காதலில் கனிந்திருக்க, தன் மனைவியின் மிரட்சியை ரசனையோடு ரசித்தான்.
அவளது நடுக்கத்தை நிறுத்தும் விதமாய், அவளின் கழுத்தைச் சுற்றித் தொங்கிய அந்த மஞ்சள் சரடை மெல்லத் தன் விரல்களால் பற்றினான். மஞ்சள் பூசிய அந்தத் தாலியின் வாசமும், சந்தனத்தின் மணமும் அவன் நாசியைத் துளைக்க, ஈரம் காயாத அந்தத் தெய்வீகச் சரட்டைத் தன் இதழ்களால் மென்மையாக நுகர்ந்தான். யாழினிக்கு உடல் சிலிர்த்தது. அடுத்த நொடி, சந்துருவின் இதழ்கள் அவளது கழுத்தின் மென்மையான சருமத்தில் தன் முத்திரையைப் பதித்தன. அவனது மூச்சுக் காற்று அவள் காதோரம் படர, யாழினி தன்னையும் அறியாமல் அவனது மார்பில் சாய்ந்து, அவனது கரங்களுக்குள் சிறைப்பட்டாள்.
சந்துரு அவளை அசால்ட்டாகத் தன் இரு கரங்களால் அள்ளித் தூக்கினான். அவளது இடை வளைவில் அவனது கை அழுத்தம் படர, யாழினியின் கைகள் அவனது கழுத்தைச் சுற்றிக் கொண்டன. படியில் இறங்கி வந்தவன், அவளைத் தங்களின் முதலிரவுக்காக அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தப் பட்டு மெத்தையில் மென்மையாகத் தூக்கிப் போட்டான்.
யாழினி வெட்கத்திலும், இனம் புரியாத பயத்திலும் கட்டிலின் ஓரத்திற்கு நகர்ந்தாள். “சந்துரு… இப்போ வேணாம்… ப்ளீஸ்… நைட் பாத்துக்கலாம்,” என்று அவளது உதடுகள் மெல்லிய மறுப்பைச் சொன்னாலும், அவளது கண்கள் அவனது அருகாமையை வேண்டி நின்றன. அவளது விழிகளில் தெரிந்த அந்தத் தவிப்பைச் சந்துரு சரியாகப் புரிந்துகொண்டான்.
“ராத்திரி வரைக்கும் எல்லாம் எனக்குப் பொறுமை இல்லை யாழி… என் போலீஸ் மூளைக்கு இப்போ நீ மட்டும்தான் கைதி,” என்று குறும்பாகச் சொன்னவன், வேங்கையென அவள் மீது ஆசையாய் வீழ்ந்தான்.
அறையெங்கும் பரவியிருந்த மல்லிகைப் பூக்களின் வாசம் அவர்களின் உணர்ச்சிகளை இன்னும் தூண்டியது. சந்துருவின் கரங்கள் அவளது கூந்தலை மெல்லக் கோத, அவளது முகமெங்கும் அவனது முத்தங்கள் மழையெனப் பொழிந்தன. யாழினியின் தேகம் அவனது தீண்டலில் ஒரு மெல்லிய நடுக்கத்துடன் நெளிந்தது. அவனது இதழ்கள் அவளது இதழ்களைச் சந்தித்த அந்தத் தருணம், காலம் அப்படியே உறைந்து போனது போன்ற உணர்வு அவர்களுக்குள் எழுந்தது.
அவளது ஆடைகளின் சரசரப்பும், வளையல்களின் ஓசையும் அந்த அறையின் அமைதியைக் கலைத்து ஒரு புதிய இசையை மீட்டின. ஒருவரை ஒருவர் ஆழமாக உணர்ந்த அந்த வேளையில், அவர்களின் சுவாசங்கள் ஒன்றோடொன்று கலந்து அனலாக மாறின. சந்துருவின் ஒவ்வொரு தீண்டலும் யாழினிக்கு ஒரு புதிய உலகத்தைக் காட்டியது. அவனது அணைப்பில் இருந்த வெம்மையும், பாதுகாப்பும் அவளை அவனிடம் முழுமையாக ஒப்படைக்க வைத்தது.
வெளியே கடல் அலைகள் கரையை முட்டி மோதுவது போல, அவர்களின் காதலும் ஒரு பெரும் அலையாய் எழுந்து அடங்கியது. அந்தப் படுக்கையறையின் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த நிலவு, தன் ஒளியைச் சற்றே குறைத்துக்கொண்டு மேகங்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டது.
யுகம் யுகமாய் தொடரும் இந்தக் காதலின் பிணைப்பில், சந்துருவும் யாழினியும் ஒருவரையொருவர் உயிராய் அணைத்துக் கொண்டனர். அவர்களின் உடல் ஒன்றானாலும், ஆத்மாக்கள் அந்த நிசப்தமான இரவில் காதலின் உச்சத்தைத் தொட்டன.
கலவி தந்த களைப்பில், சந்துருவின் அகன்ற மார்பில் யாழினி தஞ்சம் புகுந்திருந்தாள். கலைந்திருந்த அவளது கூந்தல் அவனது தோள்களில் படர, ஜன்னல் வழியே நுழைந்த நிலவொளி அவர்களின் மேனியில் பட்டுத் தெறித்தது.
சந்துரு அவளது நெற்றியில் மென்மையாகக் கோதியபடி, “என்ன யாழி… இப்போவாவது உன் போலீஸ்காரன் மேல இருந்த பயம் குறைஞ்சுதா?” என்று கிண்டலாகக் கேட்க
யாழினி அவனது மார்பில் லேசாகக் கிள்ளிவிட்டு, “பயம் போயிடுச்சு புருஷா … ஆனா ஒரு திருப்தி. நான் தேடி வந்த அன்பு, இப்போ என் கைக்குள்ளேயே இருக்குற ஒரு நிம்மதி,” என்று முணுமுணுத்தாள்.
சந்துரு, தன் இருக்கரங்களால் அவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான். “இந்த நிமிஷம் அப்படியே உறைஞ்சுடக் கூடாதான்னு இருக்கு. உன் கூந்தலோட வாசம், உன் மூச்சுக் காற்று… இதுவே எனக்குப் போதும டி யாழி.” என்றான்
யாழினி மெல்ல நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தாள். “சந்துரு, நாம இப்போ இருக்குறது நிஜம் தானா? இல்ல சுவேதா சொன்ன மாதிரி ஏதாச்சும் நாடகம் நடக்குதா?”
சந்துரு அவளது இதழோரம் விரல் வைத்து, “எது எப்படியோ, இப்போ நீ என் மனைவி. அது மட்டும்தான் எனக்குத் தெரிஞ்ச உண்மை,” என்றான்.
சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, சந்துரு ஒரு நீண்ட பெருமூச்சுடன் விலகினான். “யாழி… நான் இப்போ கிளம்பியாகணும். ஒரு முக்கியமான இன்வெஸ்டிகேஷன் இருக்கு. ” என சொன்னதும் யாழினியின் முகம் சட்டென வாடியது.
காதல் பொங்கும் கண்களால் அவனைப் பார்த்தவள்,
“இன்னும் கொஞ்சம் நேரம்
இருந்தா தான் என்ன
ஏன் அவசரம்
என்ன அவசரம்
என் செல்ல புருஷா…” என ஏக்கத்துடன் பாட்டாகவே பாடி கேட்டவளை, பார்த்து சிரித்த சந்துரு .. ..
அவளது கைகளைப் பற்றிக் கொண்டவன். “புரியுது யாழி… ஆனா என் வேலை அப்படிப்பட்டது. ராத்திரிக்குக் கூட வர முடியாது போல இருக்கு. என்னை மன்னிச்சுடு. உன்னைத் தனியா விட்டுட்டுப் போறது எனக்குக் கஷ்டம்தான், ஆனா வேற வழி இல்லை. உன் புருஷன் கடமையைச் செய்ய எனக்கு அனுமதி கொடுப்பியா?” என்று தழுதழுத்த குரலில் யாசித்துக் கேட்டான்.
அவனைப் பிடிவாதமாகப் பார்த்தவள். “கண்களால் மன்னிப்பு கேட்டா மட்டும் போதாது. முத்தத்தால் மன்னிப்பு கேட்டா மட்டும்தான் இங்கிருந்து போக அனுமதி!” என்று செல்லமாக மிரட்டினாள்.
இதைத்தான் எதிர்பார்த்தவன் போல சிரித்த சந்துரு. “இதுக்கு நான் நூறு தடவை மன்னிப்பு கேட்பேனே!” என்று சொல்லி, மீண்டும் அவளது இதழ்களை ஆழமாகக் களவாடினான். அந்த முத்தத்தில் பிரிவின் வலியும், மீண்டும் சந்திக்கும் ஆவலும் கலந்திருந்தது.
சரியாக அந்தத் தருணத்தில், வெளியே கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.
“டொக்… டொக்… டொக்…”
நிசப்தமான அந்த நள்ளிரவில் அந்தச் சத்தம் மிகவும் கனமாக ஒலித்தது. சந்துருவும் யாழினியும் திடுக்கிட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இந்த நேரத்தில் இங்கே வரப்போவது யார்?
வேட்டை தொடரும் ..⚓
