Rolex 18

18

நள்ளிரவின் கரும்புகை போன்ற இருள், துறைமுக நகரின் ஒட்டுமொத்த சத்தத்தையும் விழுங்கி ஏப்பம் விட்டிருந்தது. கடலோரக் காற்றின் உப்புக் கரிப்பு நுரையீரல்களைத் துளைக்க, தூரத்தில் அலைகள் கரையின் மீது ஆக்ரோஷமாக மோதும் சத்தம், வரப்போகும் விபரீதத்தை அறிவிக்கும் மரண அறிவிப்பைப் போல ஓயாமல் கேட்டுக்கொண்டிருந்தது.

அந்த நிசப்தத்தின் நரம்புகளைக் கிழித்துக்கொண்டு, ஒரு கறுப்பு நிற புல்லட் வண்டி, அதன் கண்களான முகப்பு விளக்குகளை அணைத்தபடி, மலைக்குன்றின் மேல் அரக்கனைப் போல அமர்ந்திருந்த ரோலக்ஸின் பாழடைந்த கோட்டையை நோக்கி ஊர்ந்து சென்றது.

ஒரு காலத்தில் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த ரோலக்ஸின் இந்தக் கோட்டை, இன்று சிதைந்துபோன ஒரு பிரம்மாண்டச் சிலையைப்போலக் காட்சியளித்தது. வண்டியை ஒரு புதருக்குப் பின்னால் மறைத்து நிறுத்திவிட்டு, சந்துருவும் கணேஷும் கீழே இறங்கினார்கள்.

“சந்துரு… இது சுத்தத் தற்கொலைடா! பைரவனோட வேட்டை நாய்கள் இங்க சுத்திட்டு இருக்கும். மாட்டிக்கிட்டா நம்மளைக் கொத்துக்கறியா போட்டுடுவானுங்க,” என்று கணேஷ் கிசுகிசுத்தான். அவனது குரலில் பயத்தின் நடுக்கம் அப்பட்டமாகத் தெரிந்தது.

சந்துருவின் கண்கள் கழுகைப் போல அந்தக் கோட்டையின் ஒவ்வொரு இடுக்கையும் அளவிட்டன. அவனது கை தானாகவே இடுப்பில் இருந்த கைத்துப்பாக்கியைத் தொட்டு உறுதிப் படுத்திக்கொண்டவன். “பயம் இருந்தா இங்கே மரத்துக்கு கீழே உட்கார்ந்துக்கோ கணேஷ். எனக்கு உள்ளே ஒளிஞ்சிருக்கிற உண்மைகள் கிடைச்சே ஆகணும். அதுக்காக நான் எமன்கிட்டயும் மோதத் தயார்,” என்று கூறிவிட்டு, மதில் சுவரை ஒரு சிறுத்தையைப் போல லாவகமாகப் பற்றி ஏறி உள்ளே குதித்தான். கணேஷ் வேறு வழியின்றி, ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுவிட்டுப் பின்தொடர்ந்தான்.

கோட்டையின் பிரதான வாயில் கதவு, பல யுத்தங்களைக் கண்ட கவசத்தைப் போலத் துருப்பிடித்துக் கிடந்தது. யாரோ கடப்பாரை கொண்டு கதவைத் தகர்க்க முயன்ற தழும்புகள் அதன் வலிமையைச் சொல்லின. சந்துரு தனது மங்கலான டார்ச் லைட்டை நிலத்தை நோக்கி அடித்துவிட்டு, பூனை நடையில் உள்ளே நுழைந்தான்.

தரைத்தளம் முழுவதும் காய்ந்த சருகுகளும், பல நாள் தூசியும் படிந்திருந்தன. அவர்கள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் ‘சரக் சரக்’ என்று சத்தமிடுவது, அந்த நிசப்தத்தில் ஒரு வெடிகுண்டு வெடிப்பதைப் போன்ற பிரமையை ஏற்படுத்தியது.

“டேய்… இங்க பாரு,” என்று கணேஷ் ஒரு மூலையைச் சுட்டிக்காட்டினான். அங்கே சுவரிலும் தரையிலும் ரத்தக் கறைகள் காய்ந்து கருப்பு நிறத் தழும்புகளாக மாறியிருந்தன. அது ஒரு காலத்தில் நடந்த பயங்கரமான துப்பாக்கிச் சண்டையின் மௌன சாட்சியாக இருந்தது. அந்தப் பாதையைக் கடந்து அவர்கள் மாடிப்படிகளில் ஏறினார்கள். தேக்கு மரத்தால் ஆன அந்தப் படிக்கட்டுகள் அவர்கள் பாரம் தாங்காமல் ‘கிரீச்… கிரீச்…’ என்று முனகின.

மேலே செல்லச் செல்ல, காற்றின் வேகம் சீறியது. ஜன்னல் கதவுகள் காற்றில் மோதிக்கொள்ளும் சத்தம், அந்த அறைகளில் தங்கியிருக்கும் ஆத்மாக்கள் வக்கிரமாகச் சிரிப்பதைப் போன்ற அதிர்வை ஏற்படுத்தியது.

இறுதியாக, அவர்கள் ரோலக்ஸின் தனிப்பட்ட அறைக்கு வந்து சேர்ந்தனர். அந்த அறையின் கதவு ஒரு இரும்புக் கோட்டையைப் போலக் கனமாக இருந்தது. சந்துரு தன் தோள்களால் முட்டித் தள்ள, அந்தக் கதவு ஏதோ ஒரு ரகசியத்தைச் சொல்லப்போகும் ஆவலுடன் கரகரவெனத் திறந்தது.

அறையினுள் நுழைந்ததும் ஒரு விசித்திரமான மணம் அவர்களைத் தாக்கியது. அது விலையுயர்ந்த ஃப்ரெஞ்ச் வாசனைத் திரவியமும், காய்ந்த காகிதங்களின் பழமை மணமும் கலந்த ஒரு மர்மமான மணம். அறையின் நடுவே ஒரு பிரம்மாண்டமான கருங்காலி மர மேஜை இருந்தது. அதன் பின்னால் இருந்த சிம்மாசனம் போன்ற நாற்காலி, தன் எஜமானன் ரோலக்ஸ் எந்த நேரமும் கதவைத் திறந்து உள்ளே வந்து அமர்வான் என்று காத்திருப்பது போலக் காலியாகக் கிடந்தது.

சந்துரு தனது டார்ச் லைட்டை மேஜையின் மீது சுழற்றினான். அங்கே சிதறிக் கிடந்த சில பைல்களுக்கு நடுவே, ஒரு கறுப்பு நிற Leather File மின்னியது. அதன் மேல் எந்தப் பெயரும் இல்லை, எந்த முத்திரையும் இல்லை. சந்துரு அந்த ஃபைலை எடுத்துத் திறந்தான். உள்ளே இருந்த தாள்களில் இருந்த வரைபடங்களையும், கையால் எழுதப்பட்ட ரகசியக் குறியீடுகளையும் பார்த்த சந்துருவின் முகம் சட்டென்று வெளுத்தது. அவனது புருவங்கள் சுருங்கின, கண்கள் ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்றன.

“என்னடா இது… இது மட்டும் உண்மையா இருந்தா… சாத்தியமே இல்லையே!” என்று சந்துரு அதிர்ச்சியில் முணுமுணுத்தான்.

“என்னடா இருக்கு அதுல? அந்தச் சர்மாவைப் பத்தின துப்பா?” என்று கணேஷ் ஆவலாகக் கேட்க, சந்துரு அந்த ஃபைலை அவனிடம் திருப்பினான்.

“இங்க பாரு கணேஷ்… நாம இதுவரைக்கும் பார்த்தது வெறும் பனிப்பாறையோட நுனி மட்டும்தான். இந்த முக்கோணக் கூட்டணியோட ஆட்டம் நாம நினைச்சதை விடவும் ரொம்பக் கொடூரமானது. இதோ இந்த மேப்… இங்கதான் அந்தப் பெரிய ரகசியம் புதைக்கப்பட்டிருக்கு. இந்த எண்களைப் பார்த்தியா? இது வெறும் பணப் பரிமாற்றம் இல்ல, இது இந்தியத் துறைமுகங்களையே முடக்குறதுக்கான ஒரு மிகப்பெரிய நாசவேலைத் திட்டம்!”

கணேஷ் அந்தப் பக்கங்களை உற்றுப் பார்த்துவிட்டுத் திகைத்து நின்றான். “ஆமாம் சந்துரு… இது உண்மையாவே நடந்தா, ஒட்டுமொத்தத் துறைமுகமே ஒரு எரிமலை மேல உட்கார்ந்திருக்குன்னு அர்த்தம். ரோலக்ஸ் இவ்வளவு தூரம் ஒரு பிளான் பண்ணியிருப்பான்னு நான் கனவுல கூட நினைக்கல.”

சந்துரு அந்த ஃபைலைத் தன் சட்டையினுள் மறைத்துக்கொண்டான். “இந்த ஒரு ஆதாரம் போதும் கணேஷ்… பைரவனையும், சர்மாவையும் மட்டுமல்ல, டெல்லியில் உட்கார்ந்திருக்கிற அந்தப் பெரிய தலைகளையும் தூக்க இது ஒன்னே போதும்!”

அவர்கள் அந்த வெற்றியின் உற்சாகத்தில் இருக்கும்போதே, கோட்டையின் தரைத்தளத்தில் இருந்து ஒரு பயங்கரமான சத்தம் கேட்டது.

“டங்… டங்… கிரீச்…!”

யாரோ வெளி பக்கம் இருக்கும் கனமான இரும்புத் கேட்டினை இழுத்து தள்ளுவது போன்ற சத்தம் அது. அதைத் தொடர்ந்து காலடிச் சத்தங்களும், ரகசிய முணுமுணுப்புகளும் கேட்டன. கணேஷ் அப்படியே சிலையாக நின்றான். “சந்துரு… மாட்டிட்டோம்டா! பைரவனோட ஆட்கள் வந்துட்டானுங்க!” என அலறவும் 

சந்துரு மின்வேகத்தில் டார்ச் லைட்டை அணைத்தான். அறை இருளில் மூழ்கியது. “சத்தம் போடாதே… ஜன்னல் வழியாப் பார்ப்போம்,” என்று கணேஷை இழுத்துக்கொண்டு ஜன்னல் இடுக்கில் ஒளிந்தான்.

கீழே பார்த்தபோது ஒரு கறுப்பு நிற கார் தனிமையில் உள்ளே வந்து நின்றது. எதிர்பார்த்தது போல அடியாட்கள் கூட்டம் இல்லை. காரிலிருந்து இறங்கிய அந்த உருவத்தைப் பார்த்ததும் கணேஷின் நெஞ்சுக்கூடு அதிர்ந்தது. அது பைரவன்! ஆனால் அவன் முகத்தில் எப்போதும் இருக்கும் அந்த ஆக்ரோஷம் மறைந்து, ஒருவிதமான சுடுகாட்டு அமைதி குடிகொண்டிருந்தது. நிலவொளியில் அவன் கையில் இருந்த அந்த இரும்புக் கொக்கியின் முனை ரத்த வெறியுடன் மின்னியது.

“சந்துரு… அவன் தனியா வந்திருக்கான். இதுதான் நமக்குச் சரியான நேரம், நழுவிடலாம்,” என்று கணேஷ் கெஞ்சினான்.

“இல்ல கணேஷ்… அவன் ஏன் இவ்வளவு நள்ளிரவுல தனியா இங்க வரணும்? ஏதோ ஒரு விஷயம் இருக்கு. பதுங்கு,” என்று சந்துரு எச்சரித்தான்.

பைரவன் கோட்டைக்குள் நுழைந்தான். அவனது ஒவ்வொரு அடியும் மரணத்தின் தாளம் போலக் கோட்டைக்குள் எதிரொலித்தது. அவன் எங்கும் தேடவில்லை, அவனது நடை ஒரு தெளிவான இலக்கை நோக்கி இருந்தது. அவன் நேராகச் சென்றது, தரைத்தளத்தில் இருந்த ஒரு நூலக அறைக்கு. அங்கே இருந்த ஒரு பிரம்மாண்டமான அலமாரியை அவன் தள்ளியபோது, அதன் பின்னால் ஒரு நவீன இரும்புக்கதவு தெரிந்தது. அது ஒரு ரகசிய அறை!

பைரவன் உள்ளே சென்று சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்தான். அந்தக் கதவை மீண்டும் கவனமாகப் பூட்டிவிட்டு, அலமாரியைப் பழைய இடத்திற்கே நகர்த்தி வைத்தான். வெளியே வரத் தொடங்கியவன், சட்டென்று ஒரு இடத்தில் நின்றான். அவனது கண்கள் இருளைத் துளைப்பது போலச் சுற்றிலும் நோட்டமிட்டன. கணேஷ் தன் மூச்சைக் கூட அடக்கிக்கொண்டு நின்றான்.

பைரவன் எதையோ உணர்ந்தவன் போல, வக்கிரமாகச் சிரித்துக்கொண்டே, “யாராவது இங்க ஒளிஞ்சிருந்தா… அவங்க மரணம் இந்தக் கொக்கியால தான் நடக்கும்,” என்று காற்றில் எச்சரிக்கையை வீசிவிட்டு வெளியேறிச் சென்றான். அவனது கார் ஸ்டார்ட் ஆகி, தூரத்தில் மறையும் வரை அவர்கள் இருவரும் மூச்சைக் கூட விடவில்லை.

“அவன் போயிட்டான்… வா, கிளம்பலாம்!” என்று கணேஷ் சொல்ல, சந்துரு அவனைத் தடுத்தான்.

“இல்ல கணேஷ், அவன் உள்ள போய் எதையோ உறுதிப்படுத்திட்டு வந்திருக்கான். அது என்னன்னு தெரியாம நான் போக மாட்டேன்.”

சந்துரு அந்த நூலக அறைக்குச் சென்று அலமாரியை நகர்த்தினான். அங்கே இருந்த இரும்புக்கதவு ஒரு அதிநவீன Number Lock பூட்டைக் கொண்டிருந்தது. சந்துரு தன் பாக்கெட்டில் இருந்த ஒரு சிறிய UV blue Light எடுத்து அந்த எண்களின் மீது அடித்தான்.

“பைரவன் இப்பதான் இதைத் தொட்டுருக்கான். அவனோட விரல் ரேகைகள் இந்த எண்கள்ல மட்டும் பதிஞ்சிருக்கு,” என்று கூறிவிட்டு, சில நொடிகளில் அந்தப் பூட்டைத் திறந்தான்.

‘டிக்!’

அந்தக் கனமான இரும்புக்கதவு மெல்லத் திறந்தது. உள்ளே நுழைந்த சந்துருவும் கணேஷும் தங்கள் டார்ச் லைட்டை ஒளிரச் செய்தார்கள். அந்த வெளிச்சம் பட்ட அந்த நொடி, அவர்கள் இருவரும் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனார்கள்.

அங்கே தெரிந்தது வெறும் பணமோ, கடத்தல் தங்கம் போன்ற பொருட்களோ அல்ல! அந்தச் சிறிய அறை முழுவதும் பிரம்மாண்டமான LED திரைகளும், அதிநவீனத் செயற்கைக்கோள் தொடர்பு சாதனங்களும் இருந்தன. ஒரு சுவரில் உலக வரைபடம் மின்னணு முறையில் ஓடிக்கொண்டிருந்தது.

அந்தப் பதற்றமான சூழலிலும், அவர்களின் கண்கள் அந்தப் பெரிய கண்ணாடிப் பேழைக்குள் இருந்த ஒரு பொருளின் மீது நிலைத்து நின்றன. அது ஒரு பழைய, ஓரங்கள் மங்கிய புகைப்படம்.

சந்துரு நடுங்கும் கரங்களால் அந்தப் புகைப்படத்தை எடுத்தான். அதன் மீது படிந்திருந்த மெல்லிய தூசியைத் துடைத்தபோது, அவனது விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.

அந்தப் புகைப்படத்தில் தெரிந்த வாலிப வயது ரோலக்ஸைப் பார்த்த சந்துருவுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. இன்று ரத்த ஆற்றைக் கடந்து வரும் ஒரு கொடூரமான கேங்ஸ்டராகத் தெரியும் அதே ரோலக்ஸின் முகத்தில், அன்று அப்படி ஒரு கலப்பற்ற மகிழ்ச்சி! அந்தச் சிரிப்பில் எந்தக் கள்ளக்கபடமும் இல்லை, உலகையே ஆள வேண்டும் என்ற அதிகாரப் பசியும் இல்லை. அது ஒரு சாதாரண மனிதனின், ஒரு கல்லூரி மாணவனின் உற்சாகமான சிரிப்பு.

அவன் தோளில் கைகளைப் போட்டுக் கொண்டு, இரு நண்பர்கள் அவனருகில் நின்றிருந்தார்கள். அந்த மூவரும் ஒருவரையொருவர் தழுவியபடி கேமராவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த அந்தத் தருணம், காலத்தின் ஏதோ ஒரு புள்ளியில் உறைந்து போயிருந்தது.

“சந்துரு… அப்படி இருந்த ரோலக்ஸ் ஆஹ் இப்போ இப்படி மாறிட்டான் ? என்னால நம்பவே முடியலடா,” என்று கணேஷ் வியப்பின் உச்சத்தில் முணுமுணுத்தான்.

சந்துரு அந்தப் புகைப்படத்தை உற்று நோக்கினான். “ஆமாம் கணேஷ்… காலம் எவ்வளவு பெரிய மாற்றத்தை உண்டாக்கிடுச்சு பாரு. மனசுல எந்த வஞ்சகமும் இல்லாத ஒரு சாதாரண மனுஷன் தான் அன்னைக்கு ரோலக்ஸ். அவனோட இந்தத் தோழமையும், இந்தப் புன்னகையும் எவ்வளவு உண்மையானதா இருந்திருக்கு? ஒருவேளை அன்று அவன் கூட இருந்த இந்த நண்பர்கள் தான் அவனோட பலமா இருந்திருப்பாங்க போலிருக்கு.”

அந்தப் புகைப்படத்தில் இருந்த ரோலக்ஸின் கண்களில் ஒரு கனவு இருந்தது. அந்த இரு நண்பர்களும் அவனுக்கு அரணாக நின்றிருந்தார்கள். அவர்கள் மூவரும் சேர்ந்து கொண்டாடிய அந்த வசந்த காலம், இன்று ரத்தக் கறைகளாகவும், துரோகங்களாகவும் மாறிப்போயிருக்கும் என்று அந்த நிழற்படம் எடுத்த நொடியில் அவர்கள் நிச்சயம் நினைத்திருக்க மாட்டார்கள்.

சந்துருவின் விரல்கள் அந்தப் புகைப்படத்தில் இருந்த மற்ற இரு முகங்களையும் வருடின.

“இந்த ரெண்டு பேரு யார் ?

வேட்டை தொடரும் ..⚓

❤️ Loading reactions...
2 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!