ராட்சசன் 7

அன்று…

கர்நாடகா மாநிலம் , ஹூப்ளி (hubli ) நகரத்தில் கன்னியாஸ்திரி மேரி வசிக்கும் மடத்தில் 1993 ஆம் ஆண்டில், 

வேதாச்சலம் என்னும் தொழிலதிபர் தன் மகனின் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகளுக்கு  உணவு மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதற்காக மதர் மேரியின் தலைமையில் இயங்கும் ஆசிரமத்திற்கு வருகை தந்திருந்தார்.

இது போல் கருணை உள்ளம் கொண்ட செல்வந்தர்கள் யாராவது தங்களின் வீட்டு விசேஷங்களை முன்னிட்டு உணவு வழங்கினால் தான் இங்கு வசிக்கும் குழந்தைகளுக்கு, வயிறும் மனமும் நிறைய நல்ல உணவு கிடைக்கும். 

மற்ற நேரங்களில் பசியை போக்குவதற்கான சொற்ப உணவு தான் வழங்கப்படும். அதுவும் சில நேரங்களில் இரண்டு வேலை உணவு தான் கிடைக்கும் என்பதால். அவர் வந்த காரணத்தை அறிந்து கொண்ட குழந்தைகள்  சிறிது நேரத்தில் இனிப்பில் ஈக்கள் ஒட்டுவது போல் அவரைச் சுற்றி மொய்த்தனர். ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு அவர் தரும் உணவுப் பொட்டலங்களை மகிழ்ச்சியுடன் வாங்கியவர்கள்,உணவுப்பொட்டலத்தை எடுத்துக் கொண்டு ஓடினர்.

அப்பொழுது அங்கு வந்த அச்சிறுவன் மட்டும் குழந்தைகளோடு முண்டியடிக்காமல் காத்திருந்து, எல்லோரும் சென்ற பின்னர் கடைசியாக இருந்த உணவுப் பொட்டலத்தை எடுத்துச் சென்றான். அந்தச் சிறுவனின் பொறுமை அந்தத் தொழிலதிபருக்கு l மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது.

உடனே தொழிலதிபர் அச்சிறுவனிடம் இன்னொரு உணவு பொட்டலத்தைக் கொடுக்க ,

” நான் ஏற்கனவே வாங்கிட்டேன் ” என்றான் தன் கையிலிருந்த உணவு பொட்டலத்தைக் காட்டியபடி.

” தெரியும் பா உனக்குப் பசியும் ஆசையும் இருந்தும் மத்த குழந்தைகளைப் போல அவசரப்படாம பொறுமையா வாங்கின. அதனால இந்த சாப்பாடு பார்சல் உன் பொறுமைக்கு நான் தர்ற பரிசு இதை நீயே வச்சிக்கோ ” என்றார் .

ஆனால் அச்சிறுவனோ அதை உறுதியாக மறுத்துவிட, அவனது அந்த செய்கை அவரை மேலும் ஆச்சரியப்படுத்தியது.

அவரோ அவனிடம், “இது வேண்டாம்ன்னா சரி, வேற எதுவும் உனக்கு வேணுமா. உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. என்ன வேணுமோ கேளுப்பா ” என்றார் உற்சாகமாக.

தொழிலதிபர் கூறியதைக் கேட்ட அந்த சிறுவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், அவன் எதுவும் கேட்காமல் தயங்கி நிற்பதைப் பார்த்த. வேதாச்சலம் ,” கேளு பா” என்றார்.

” சார் இன்னைக்கு நீங்கத் தந்த சாப்பாட்டை வாரம் வாரம் இங்க இருக்கிற எல்லா குழந்தைகளுக்கும் தர முடியுமா. ” என்று தயக்கத்துடன் கேட்டான் .

அவன் தனக்காக மட்டும் கேட்காமல் மற்ற குழந்தைகளுக்காகவும் சேர்த்து கேட்டது, அவருக்கு மிகுந்த வியப்பை கொடுத்தது. அச்சிறுவயதில் அவனுக்குள் இருந்த தன்னலமற்ற குணம் அவரை வெகுவாக கவர்ந்தது.

அவன் கேட்டதை போலவே அங்குள்ள அனைத்து குழந்தைகளுக்கும் வாரம் ஒருமுறை அல்ல. தினமும் அதுவும் மூன்று வேளை உணவு கொடுப்பதாக வாக்களிக்க. இதை கேள்வியுற்ற மேரி அவனை எண்ணி மகிழ்ச்சியடைந்தார்.

மும்பையில் இன்று…

காரின் கதவில் தலை சாய்த்தபடி நின்றிருந்த ஆதித்யாவின் முகமெங்கும் சிந்தனையின் ரேகைகள் படர்ந்திருந்தன. முகம் அக்னிக் குண்டமாய் மாறியிருந்தது.

இந்நேரம் வெடித்துச் சிதறிய விமானத்தோடு தன் தேகமும் சிதறி செத்திருக்க வேண்டியவன். எப்படியோ சமாளித்து காயங்களுடன் பிழைத்துவிட்டான்.

‘ இப்படி ஒரு தாக்குதலை என் மீது நடந்திருக்கிறார்கள் என்றால் இதற்கு என்ன அர்த்தம் ??

என் மீது இருந்த பயம் போய்விட்டதா என்ன?? 

நான் தோற்று விட்டேனா?? 

இல்லை நெவர் நான் நினைக்காம மரணம் கூட என்னை நெருங்க முடியாதபோது தோல்வி மட்டும் எப்படி ??’ ஏற்க மறுத்தான் ஆதித்யா.

‘ அந்த சிவகுருக்கு  தான் யாரென்று காட்டவேண்டும். 

இங்கே தயவு தாட்சணியத்துக்கு இடமே கிடையாது. 

பெற்றதை விட பலமடங்கு அதிகமாய் கொடுக்க வேண்டும். அவர்கள் எழ எழ அடிக்க வேண்டும் ‘

‘ விடக் கூடாது. அடுத்த அடி என்னுடையதாக தான் இருக்க வேண்டும். ஷிவா ரெடியா இரு ‘ காரின் கண்ணாடியில் கையை ஓங்கி அறைந்தான் ஆதித்யா.

அவன் உடல் விறைத்து இறுகியது. காயப்பட்ட சிங்கத்தின் மூச்சு அதன் கர்ஜனையை விடப் பயங்கரமா இருக்கும் என்பதைப் போல் தான் அடிபட்ட சிங்கமாய் கர்ஜிக்கும் ஆதித்யாவின் மூச்சுக் காற்றில் கூட அனல் தெறித்தது.

அப்போழுது ஆதித்யாவின் அருகே வந்த நாகா,

” ஆதித்யா  நாம உடனே ஏதாவது செய்யணும். இல்லைன்னா அந்த ஷிவா முந்திக்குவான்” – என்றான்.

” சொல்றேன் ” – நாகாவின் முகத்தை வெறித்துப் பார்த்தபடி கூறினான் ஆதித்யா.

” ஆதி இப்படி வெளிய நிற்கிறது சேஃப் இல்லை. வீட்டுக்குப் போகலாம். ” – நாகா கூறினான் .

” ம்ம்ம் போகலாம். அந்த பொண்ணு கண்ணு முழிச்சிட்டாளா ??” என்ற ஆதித்யாவிடம்,

” இன்னும் இல்லை ஆதி ” – என்று நாகா கூறிய மறுநிமிடம் ஆதித்யா காரின் பின் சீட்டின் கதவைத் திறந்தான்.

சீட்டில் உடலைக் குறுக்கிக்கொண்டு படுத்திருந்தாள் மதுமதி. குளிரால் உடலில் சிறு சிறு அதிர்வு ஏற்பட்டபோதும் தெளியாமல் அவள்  படுத்திருக்க,.காரில் இருந்த தனது கருப்பு நிற கோட்டை எடுத்து அவள் மீது போர்த்தி விட்டான் ஆதித்யா.

உடலைத் துளைக்கும் குளிர் காற்று! காற்றோடு இணைந்து பட்டும் படாமல் வரும் மழைச் சாரல், இவை அனைத்தையும் தாண்டி அவனை ஈர்த்தது, நிலவொளியில் எந்த வித ஒப்பனையும் இன்றி அழகாய் மின்னும் அவளது முகம். ஆம் கொஞ்சம் நேரத்திற்கு முன்பு மின்னல் ஒளியில் அவன் கண்ட அதே முகம் தான் ! இப்பொழுது நிலாவொளியிலும் அவன் பார்வையை தன் பக்கம் இழுத்தது ! 

பக்கவாட்டில் கிடந்த விரித்துவிடப்பட்ட அடர்ந்த கருங்கூந்தல்!

மஞ்சள் நிறத்தில் பளபளக்கும் வட்ட முகம் ! 

வளர்பிறையை வெட்டி ஒட்டியது போன்ற முன் நுதல் !

அடர்த்தியாகத் தொடங்கி கூர்மையுடன் முடியும் வாள் போன்ற புருவங்கள் ! 

மூடியிருந்த கருவண்டு விழிகள்! அதில்  இருந்த அடர்ந்த இமைகள் ! 

இலேசாய் உப்பிய வளவளப்பான வெட்டிவைத்த ஆப்பிள் கன்னங்கள் ! கட்டைவிரல் நீளமுள்ள கூர்மையான நாசி ! 

விரிந்த கூந்தல் காற்றில் அசைந்து வந்து உரிமையுடன் உறவாடும் செவிகள் ! 

ஆரஞ்சு சுளைகளை அளவாய் இடைவெளிவிட்டு அடுக்கியது போன்ற செக்க சிவந்த அதரங்கள் ! அழகி ! என்று அவன் உள்ளம் அடித்து சொல்ல,  அவன் பார்வை அவள் முகத்திலிருந்து அகலவில்லை.

அவனது பாறை மனதில் புதிதாய் ஏதேதோ எண்ணங்கள் துளிர்விட சற்றென்று தன்னிலைக்கு மீண்டவன். திசைமாறிய தன் மனதைக் கட்டுக்குள் கொண்டுவந்தான் .

பொதுவாழ்க்கையில் இருப்போருக்கு இதெல்லாம் சாதாரண விஷயம் தான். ஆனால் ஆதித்யாவுக்கும் அவன் வாழும் வாழ்க்கைக்கும் இது சிறிதும் சம்பந்தம் இல்லாத ஒன்று என்றது அவன் மனம்.

” இதெல்லாம் வேண்டாம். உன் பாதையை யாருக்காகவும் மாத்திக்காத ஆதி ” என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டாலும். அவன் விழிகள் அவனுக்குத் துரோகம் செய்தன. அவனையும் மீறி அவன் விழிகள் பார்வையாலே அவளது முகத்தை வருட. அவனுக்கே அவன் புரியாத புதிரானான் !

பலவித எண்ணங்கள் அவன் மனதை வாட்டப் புதிதாய் முளைத்த உணர்வுகளால் லேசாய் திணறியவன் ,

” ஊ ஃப் ” நீண்ட பெருமூச்சை விட்டபடி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு. ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருக்க

” ரிங் ..ரிங்.ரிங் ” கார் சீட்டுக்குக் கீழே, கிடந்த மதுமதியின் அலைபேசியின் ஒலி அவன் சிந்தனையைச் சிதறடிக்க. சிறு தயக்கத்துடன் அலைபேசியை எடுத்துப் பார்த்தான் .

நேர்த்தியாக வெட்டிவிடப்பட்ட கேசம் ! அளவான மீசையை ! ரோமங்கள் இல்லாமல் பளபளக்கும் முகம் ! முகம் முழுவதும் கன்னக்குழி சிந்தும் புன்னகையுடன் ஆண் அழகனாய் கம்பீர தோற்றம் அளிக்கும் வாலிபனின் முகம் ‘ அர்ஜுன் அத்தான் ‘ என்ற பெயருடன் அலைபேசியின் திரையில் மிளிர, அதைப் பார்த்துக்கொண்டிருந்தவனின் முகமோ நீரற்ற பூவை போலச் சுருங்கியது.

‘அத்தான்’ எத்தனை உரிமையான வார்த்தை எங்கோ ஒரு மூலையில் அடிபட்ட அவன் மனம் எதற்கோ ஏங்கியது ! 

அர்ஜுனின் தோற்றம் ஆதித்யாவின்  மனதில் தேவையற்ற எண்ணங்களை விதைத்தூவிட, இப்போதிருக்கும் தன் தோற்றத்தை அவனுடன் ஒப்பிட்டுப் பார்த்தான் ஆதித்யா. 

தன்  தோற்றம் எதுவும் தெளிவாய் தெரியா அளவிற்கு முகம் முழுவதும்  ரோமங்கள்!

நெற்றியை மறைத்த முன்புற கேசத்தை காணும் பொழுது அவனுக்கே கடுப்பாக இருக்க,

தன் அதரத்தை மறைத்த தனது முறுக்கு மீசையைக்  கண்டவனுக்கு ஆத்திரமாய் வந்தது.!

இறுதியில் தாடியை தடவிய ஆதித்யாவுக்கு, ‘ ஐயோ ‘ என்றானது. கடைசியாக எப்பொழுது சிரித்தோம் என்று தனக்கு தானே கேட்டுக்கொண்டவனுக்கு. அக்கேள்வி பெரிய சவாலாக தான் இருந்தது.

சட்டென்று பழைய ஆதித்யா அவன் கண்முன் தோன்றி மறைந்தான். 

பழைய நினைவுகள் அவன் உள்ளத்தில் ஒட்டிக்கொள்ள, தனது சிறு வயதில் இருந்து ஓடியவன் இன்று வரை நிற்காமல் ஓடுகிறான். தான் நினைத்த அனைத்தையும் அடைந்த பின்பும் அவன் மனதில் நிம்மதியில்லை. 

மனமுழுவதும் கோபம் மட்டுமே நிறைந்திருக்க, காரணம் தேடியவனுக்கு தீராத தேடல்கள் நீண்டுகொண்டே போனது. ஆனால் காரணம் மட்டும் கிடைக்க வில்லை. 

சில நிமிடங்கள் தன் பழைய சிந்தனையில் மூழ்கியவன். கண்களை இறுக்க மூடி திறந்தபடி தன் நிலைக்கு வந்தான். அப்பொழுது கண்களில் அவளது அலைப்பேசியின் வால்பேப்பரில் குழந்தைகளுக்கு நடுவே குழந்தையாக இருக்கும் அவளைக் கண்டதும் நீண்ட காலம் புன்னகைக்க மறந்தவன் இப்போது லேசாய் புன்னகைத்தான். ஆனால் அது அவனுக்கு பயந்து அவனது அடர்ந்த மீசைக்குள் ஒளிந்து கொண்டது .

அப்பொழுது திடீரென்று மதுமதியிடம் இருந்து அசைவு வர, சுதாரித்துக்கொண்டவன் அவளது அலைபேசியை அவள் அருகிலே வைத்துவிட, கெட்ட கனவிலிருந்து மீண்டவள் போல மயக்கம் தெளிந்து பதற்றத்துடன் விழித்தாள்.

அப்பொழுது தன் எதிரே ஆதித்யாவைக் கண்டதும் அவனை  கலக்கத்துடன் பார்த்தவள், சிறிதும் யோசிக்காமல் ஆதித்யாவின் கரங்களைப் பற்றிக்கொண்டு அவன் நெஞ்சில் சாய்ந்து அழ ஆரம்பிக்க, அவனும் அவளை விலக்க வில்லை. 

” சார் என்னை காப்பாத்துங்க, எனக்கு பயமா இருக்கு. என்னை விட்டு போய்டாதீங்க ப்ளீஸ் ” பயத்தில் வாய் குழறத் திணறலுடன் கூறினாள் . 

தன் புஜங்களை இறுக்க பற்றிக்கொண்டு உடல் நடுங்க நெஞ்சில் சாய்ந்து அழுதவளைக் கண்டதும் அணைத்துக் கொள்ள உயர்ந்த தன் கரங்களை மிகவும் சிரமப்பட்டு தடுத்து நிறுத்தியவன் பட்டும் படாமல் அவளது கேசத்தை வருடினான்.

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!