4.வல்லினம்
உயர் தேக்குமரத்தாலான, மிக பிரம்மாண்டமாக அமைந்திருந்த, வாயிற்கதவினை வீட்டின் காவலாளிகள் திறந்துவிட, நெற்றியில் பட்டையும், கழுத்தில் ருத்ராட்சக் கொட்டையுமாக உள்ளே நுழைந்திருந்தார் புரோகிதர் பரஞ்சோதி.
பிரம்மாண்டமான பாதையின் இருபுறமும் அழகு தாவரங்களும், அதில் பூத்துக்குலுங்கும் மலர்களும் அழகாய் காட்சியளிக்க, அதனை கண்களால் ரசித்தவரது ரசனையினை தடுக்கும் வண்ணம் அவரை அழைத்துச் செல்வதற்காக ஜீப்பொன்று வந்து நின்றது.
ஆம் வாயிற்கதவுத் தொடங்கி வீட்டினை அடையவே அரைகிலோ மீட்டர் தூரம் இருக்கும். பின் ஜீப்பில் அமர்ந்தவர், சுற்றம் முழுவதையும் கண்களால் நிரப்பிக்கொண்டே வந்தார்.
சில நிமிடங்களில் அந்த வெள்ளை பளிங்கு கற்களாலான மாளிகையின் முன்பு ஜீப் வந்து நிற்க, மாளிகையைக் கண்டு வாயைப் பிளந்தபடி, ஜீப்பிலிருந்து இறங்கினார் பரஞ்சோதி.
அவர் மூன்றாவது முறையாக வருகிறார். இருந்தும் எத்தனை முறை அவ்விடத்தை பார்த்தாலும், அவரது கண்களில் நிறையும் பிரம்மிப்பு மட்டும் நீங்கியதே இல்லை. கோவிலில் நுழைவது போல், பணிந்தபடி அம்மாளிகைக்குள் நுழைந்தவரை, புன்னகையோடு வரவேற்றார் வைஜெயந்தி.
சிவப்பு நிற பட்டுச்சேலையில் ஆங்காங்கே தங்கநிற ஜரிகையில் வேலைப்பாடுகள் அமைந்திருக்க, குங்குமப் பொட்டும், கூர்நாசியில் தவழும் ஐந்து கல் மூக்குத்தியும், கழுத்தில் பொன் தாலியோடு, அலங்கரிக்கப்பட்ட சிவப்பு கல் பதித்த ஆரமும் என புன்னகைத்த முகத்துடன் வந்து நின்ற வைஜெயந்தியோ, உள்ளிருந்தபடியே அவரை வரவேற்க, அவரைக் கண்டதும் அன்னிச்சையாக கைகளை கூப்பியபடி உள்ளே நுழைந்தார் பரஞ்சோதி.
போனமுறை வந்தபோது, ருத்ரஜித்திடம் வாங்கியத் திட்டுக்கள் நினைவுவர, பெருமூச்சொன்றை விட்டபடி நுழைந்தவரோ, நாலாபுறமும் ருத்ரஜித் இருக்கிறானா? என்பதை கண்களாலே ஆராய்ந்தபடி பார்த்தார்.
அவரது பார்வையை சரியாக கணித்த வைஜெயந்தியோ, “ருத்ரா இல்லை. இந்த முறை எல்லாமே நல்லதா நடக்கும். வாங்க, உட்காருங்க.” என்றவர் கூறியதும், பவ்யமாக அமர்ந்துக் கொண்டார். அதன்பின் சிறு நல விசாரிப்புகள் நிகழ, வந்த காரியத்தை பேசத் தொடங்கியிருந்தார் பெரியவர்.
“அம்மா, நம்ம தம்பிக்கு ஏத்த மாதிரி வரன் நிறைய வந்திருக்கு. எல்லாரும் நல்ல பெரிய இடம் தான். அப்புறம் நம்ம தம்பி ஜாதகத்தோடு அமோகமா பொருந்தியிருக்கு.” என்றவர் பெண்களது புகைப்படங்களை வைஜெயந்தியிடம் கொடுத்தார்.
வைஜெயந்தியோ, புன்னகையோடு புகைப்படங்களை பெற்றுக் கொண்டவர், ருத்ரஜித்தை மனதில் நினைத்தபடி, அவனுக்கு ஏற்ற சரியான துணையைத் தேடத் தொடங்கினார்.
“இந்த பொண்ணு அழகா இருக்கா. நம்ம ருத்ராக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா.”, என்ற வைஜெயந்தியின் முகத்தில் சொல்லிலடங்கா பூரிப்பு நர்த்தனம் ஆடியது.
“என்ன ஜெயந்தி. பொண்ணு பார்க்கும் படலம் திரும்ப ஆரம்பிச்சிடுச்சா?” என்று கிண்டல் செய்தபடி மாடியிலிருந்து இறங்கி வந்தார், இந்திரன்.
தனது கணவரது பேச்சில் திரும்பி பார்த்தவரோ, “இந்த முறை கண்டிப்பா, நம்ம ருத்ரா கல்யாணம் நடக்கும். நான் நடத்திக் காட்டுவேன்.” என்றார் உறுதியாக.
தன் மனைவியின் உறுதியை எண்ணி இந்திரனின் மனம் மகிழாமல் இல்லை. இருந்தும் தன் மனையாளை சீண்டாமல் இருந்தால், அந்த நாளே கழியாது அவருக்கு.
புன்னகையும், கம்பீரமும் ஒரு சேர வந்தவரோ, “அதுதான் நானும் ஆசைப்படுறேன் ஜெயந்தி.” என்றார்.
அவரைக் கண்டதும் மரியாதை நிமித்தமாக புரோகிதர் வணக்கம் கூற, அவரும் புன்னகையோடு பதில் வணக்கம் புரிந்தார்.
“நாங்க சொன்னபடி வசதி குறைவா இருந்தாலும் சரி. தங்கமான மகாலட்சுமி வேணும்.” என்று இந்திரன் கூற,
“இந்த பொண்ண பாருங்க. நம்ம ருத்ராக்கு சரியா இருப்பாங்க.” என்று தான் தேர்ந்தெடுத்த பெண்ணின் புகைப்படத்தை தன் கணவனிடம் காட்டினார் வைஜெயந்தி.
“ம்ம்ம். நம்ம அண்ணிகிட்ட கேட்போம்.” என்றவரோ தன் மனைவியை அழைத்துக் கொண்டு அண்ணியின் அறைக்கு சென்றார்.
வீட்டின் கடைக்கோடியில் அமைந்த அறை அது. அறையில் ருத்ரஜித்தை தவிர எவரும் செல்ல முடியாது. ஏதேனும் மிக முக்கியமான தகவல்களை பரிமாற வேண்டும் என்றால் தயங்கியபடியே வைஜெயந்தியும், இந்திரனும் செல்வர்.
அப்போது கதவு திறக்கபட, திரைக்கு பின்னே இருந்துதான் இந்திரனின் அண்ணியும், இந்திரனின் அண்ணன் கரிகாலனின் மனைவியுமான ஆதிமந்திரை பேசுவார். அதுவும் ஓரிரு வரிகள் மட்டுமே. அவர் கணவன் இறந்ததிலிருந்து அவர் அந்த அறையைவிட்டு வெளி வருவதை முற்றிலும் தவிர்த்திருந்தார். இருந்தும் ருத்ரஜித் நியமித்திருந்த வத்சலா என்னும் முப்பது வயதுமிக்க பெண்மணி மட்டும் ஆதிமந்திரைக்கு தேவையான உணவுகளை எடுத்துச் செல்வது முதல், அவருக்கு தேவையானவற்றை பார்த்துக் கொள்வது வரை உறுதுணையாக இருந்திருக்கிறாள்.
தற்போதும் வைஜெயந்தியும் இந்திரனும் தயங்கியபடி அறை கதவினைத் தட்டினர். வத்சலா தான் கதவினைத் திறந்தாள்.
“அண்ணிகிட்ட பேசணும்.” என்றவர் கூறியதும், ஆதிமந்திரையிடம் கூறிய வத்சலாவோ, பின்னர் இவர்களுக்காக வழி விட்டபடி தள்ளி நின்றுக் கொண்டாள்.
வந்த விசயத்தை இந்திரன் சொல்ல, திரைக்கு பின்னிருந்த ஆதிமந்திரையின் முகத்தில் இனம்புரியாத மகிழ்ச்சி துளிர்த்தது. புகைப்படங்களை வைத்துவிட்டு வெளியே இருக்கும்படி கூறியவர், அவர்கள் சென்றதும் புகைப்படத்தினை எடுத்துப் பார்த்தார்.
ஒவ்வொரு புகைப்படமும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவரது மடி மீது ஒரு புகைப்படம் வந்து விழ, புகைப்படம் பின்பு எழுதியிருந்த பெயரும், மருத்துவர் என்ற செய்தி, அவரது கண்களை விரிய செய்தது.
அதன்பின்னரே புகைப்படத்தை திருப்பியவர், அதிலிருந்த பெண்ணை கண்கள் குளிர பார்த்தபடி, அந்த மேசையின் மீது அந்த பெண்ணின் புகைப்படத்தை தனியாக எடுத்து வைத்திருந்தார்.
“சாலா” என்று ஆதிமந்திரை அழைக்க, அவரது அழைப்பில் பரபரப்பாக வந்த வத்சலாவோ, “சொல்லுங்கம்மா.” என்றாள் முகத்தில் தவிழும் புன்னகையுடன்.
“இந்திரனை வர சொல்லு.” என்றவர் கூறியநொடி, அவர்களை உள்ளே அழைத்திருந்தாள் சாலா.
“இரண்டு பேரும் இந்த பொண்ணைப் பார்த்து பேசி முடிச்சிடுங்க.” என்றவர் கூற, புகைப்படத்தை கண்ட இருவருக்குமே திருப்தியாக இருந்தது.
“சந்தோசம் அக்கா.” என்று வைஜெயந்தி புன்னகையோடு அங்கிருந்து செல்ல, இந்திரனும் உடன் சென்றார்.
நேராக பரஞ்சோதியிடம் வந்தவர்கள், பெண்ணின் புகைப்படத்தை கொடுக்க, “இந்த பொண்ணா?” என்று அதிர்ந்தார் பெரியவர்.
“என்னாச்சு? எதுக்கு இப்படி அதிர்ச்சியாகுறீங்க?” என்று இந்திரன் கேட்க,
“இந்த பொண்ணுக்கும் நம்ம தம்பி ருத்ராக்கும் பொருத்தம் ஆறு தான் இருக்கு. தனியா எடுத்து வெச்சேன். ஆனால் எப்படி இந்த போட்டோகூட கலந்துச்சுனு தெரியலைங்க.” என்று வருத்தத்துடன் கூறினார்.
அவர் அவ்வாறு கூறியதும் வைஜெயந்தியின் முகம் வாடிவிட, இந்திரனோ, “ஜாதகம் பொருத்தம் இதுல எல்லாம் நம்பிக்கை எனக்கும் இல்லை. ருத்ரஜித்துக்கும் இல்லை. நீங்க ஆக வேண்டியத பாருங்க. எங்க அண்ணி சொன்ன பொண்ணுதான் எங்க வீட்டு மருமகள்.” என்று புன்னகையோடு கூற, பதில் புன்னகை புரிந்து சரியென தலையசைத்தார் பரஞ்சோதி.
அவர் கைகளிலிருந்த புகைப்படத்தினை இந்திரனிடம் கொடுக்க, அதை பெற்றவர் தன் மனையாளிடம் நீட்டினார். புகைப்படத்திலிருந்த பெண்ணவளை உற்று பார்த்த வைஜெயந்திக்கும் பிடித்துப் போக, புகைப்படத்திற்கு பின்னேயிருந்த பெண்ணவளின் பெயரோடு ருத்ரஜித்தின் பெயரையும் இணைத்து வாசித்துப் பார்த்தார்.
“பிரகல்யா ருத்ரஜித்” என்றவர் கூறும்போதே, வீட்டின் வாயிலிலிருந்த பச்சை மரமொன்று சாய்ந்தது. அதை அறியாதவரோ, தனது அறை நோக்கி செல்ல, வெளியே இருக்கும் தோட்டத்து வேலையாட்களோ, அதிர்ந்து போய் பார்த்தனர்.
******
“மூச்சு ஆழமா இழுத்து விடுங்க.” என்ற பிரகல்யாவின் சொல் கேட்டு, எழுபத்தி ஆறு வயதுமிக்க பெரியவர் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டிருந்தார்.
பிரகல்யாவின் காதுகளில் மாட்டப்பட்டிருந்த இதயத் துடிப்புமானியோ, (ஸ்டெத்தெஸ்கோப்) பெரியவரின் இதயத்துடிப்பளவை சரிபார்க்க, உதவிக் கொண்டிருந்தது.
பின் தனது காதிலிருந்த ஸ்டெத்தெஸ் கோப்பை எடுத்தவள், அவரைப் பார்த்து, “ஆ காட்டுங்க, நாக்கை வெளியே நீட்டுங்க.” என்று கூறியபடி பரிசோதித்தாள்.
“டாக்டரம்மா. இந்த சளி பிடிச்சு உயிரை வாங்குது. இருமி இருமியே தொண்டை எல்லாம் புண்ணா போகுதுமா.” என்று தாத்தா குறைபட்டுக் கொண்டு கூறினார்.
“பயப்பட ஒண்ணுமே இல்லை தாத்தா. ஆமா சளி பிடிக்குற அளவுக்கு தாத்தா என்ன சாப்டீங்க?” என்றாள் ஆர்வமும், கண்டிப்பும் கலந்த குரலில்.
“பக்கத்து வீட்டு பையன் ஐஸ் வாங்கித் தந்தான். ஒண்ணு சுவைக்கும் போதே நல்லா இருந்துச்சு. அதான் இன்னும் இரண்டு சேர்த்து சாப்டேன். எல்லாம் அந்த எடுபட்ட பய செஞ்ச வேலையாக்கும்.” என்று சலித்தபடி கூறியவரைக் கண்டு மென்னகை புரிந்தாள் பிரகல்யா.
“நான் கொடுக்குற டானிக்கை ஒரு நாலு நாளைக்கு குடிங்க, சுடு தண்ணீ தான் குடிக்கணும். அப்புறம் தாத்தா, வாழைப்பழம், ஐஸ்கிரீம் இது பக்கமே போக கூடாது. ஆசைக்காக சாப்டீங்க இன்னும் சளி அதிகமாகிடும், உங்களால சரியா தூங்ககூட முடியாது பார்த்துக்கோங்க. ” என்று எச்சரிக்கை விடுப்பதை போன்று அவள் எடுத்துரைக்க, தாத்தாவின் தலை அன்னிச்சையாக சரியென தலையசைத்தது.
தாத்தாவுக்கான மருந்துகளை எழுதிக்கொடுத்தவள், அவர் சென்றதும் வாசலின் அருகே வந்து நின்றாள். கதவில் சாய்ந்தபடி நின்றவளின் சந்தன நிற சுடிதார் அவளது நிறத்திற்கு ஏற்ப, அழகாய் தேகத்தோடு பொருந்தியிருக்க, சிவப்பு நிறத்தாலான துப்பட்டாவோ காற்றில் அசைந்துக் கொண்டிருந்தது. தனது கைக்கடிகாரத்தை, ஒரு கைகளால் வருடிபடி நின்றிருந்தவளோ, எதிரே இருந்த மரங்களின் அசைவுகளை கண்களாலே ரசித்துக் கொண்டிருந்தாள்.
இயற்கையின் அழகினை ரசிப்பது அவளுக்கு மிகவும் பிடித்த செயல். இயற்கை விரும்பியவளின் கவனம் கலைப்பதற்காகவே,
அந்நொடி பெண்ணவளின் அலைபேசி அவளது செவிகளை தீண்டியது. உடனே சென்றவள், கைபேசியை எடுக்க, அதில் கூறப்பட்ட செய்தியில் அதிர்ந்துதான் போனாள்.
“ரமேஷ் அண்ணா.” என்றவள் அழைக்க, விரைந்து வந்தார் ரமேஷ்.
“என்னாச்சு பாப்பா?” என்றவருக்கோ, அதிர்ந்த நிலையிலிருந்த பிரகல்யாவின் முகம் மனதை தைத்தது.
“அண்ணா, ஒரு முக்கியமான வேலையிருக்கு. நான் உடனே கிளம்புறேன். நீங்க கிளினிக் சாத்திட்டு, சாவி கொண்டு போயிடுங்க.” என்றவள் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அடுத்த இரண்டே நிமிடத்தில் அங்கிருந்து கிளம்பியிருந்தாள்.
அடுத்த அரைமணி நேரத்தில் அவள் வந்து சேர்ந்தது திருப்பத்தூர் காவல் நிலையத்திற்கு. காரை நிறுத்தியவள், விரைந்து காவல் நிலையத்திற்குள் நுழைந்திருந்தாள்.
பரபரப்பாக இருந்த காவல்நிலையமும், தேநீரை அருந்திய வண்ணம் பேசிக்கொண்டிருந்த ஏட்டுக்கள் தொடங்கி, ஜெயிலுக்குள் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டிருந்த கைதிகள் வரைக்கும் என அவ்விடத்தை காணும்போதே சிறு அச்சம் துளிர்த்தது பெண்ணுக்கு. இருந்தும் அவளது கண்கள் நாலாபுறமும் தேடியது என்னவோ தனது தங்கையை தான்.
தன் தங்கை காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டாள் என்ற செய்தியினைக் கேட்டதும் பதறிக்கொண்டு வந்தவளுக்கு, அவ்விடம் ஓரமாக போடப்பட்டிருந்த மரயிருக்கையில் அமர்ந்திருந்த அபூர்வாவைக் கண்டதும் தான் உயிரே வந்தது.
“அபூமா…” என்றவள் அழைத்துக்கொண்டே தன் தங்கையின் தோளைத் தொட, அசையாது சிலைபோல் அமர்ந்திருந்தாள் பெண்ணவள். அவளது நிலைக் கண்டு அச்சம் கொண்டவள், “அபூர்வா” என்று பெண்ணவளை உலுக்க, அதில் தன்னிலை உணர்ந்தவள், அங்கு நின்ற தன் தமைக்கையை கண்களுக்குள் நிரப்பியிருந்தாள்.
“அக்கா வந்துட்டியா?” என்ற அபூர்வாவின் கைகள் பிரகல்யாவின் இடுப்பை வளைத்துக் கட்டிக் கொண்டது. அவளது உடல் வேறு, ஒருபுறம் நடுக்கத்தோடு இருக்க, அபூர்வாவின் முதுகை ஆதரவாக வருடிவிட்டாள் பிரகல்யா.
“ஒண்ணும் இல்லைடா அபூமா. என்னாச்சு? ஏன் இப்படி இருக்க?” என்று மென்மையாக தலையை வருடியபடி கேட்டாள்.
“அக்கா…. நான்…” என்று இழுத்தவள், தட்டுத்தடுமாறி தான் பார்த்தைக் கூறத் தொடங்கினாள்.
புதரின் பின்னே யாரோ இருப்பது போல் தோன்றியதில் எட்டிப் பார்த்த அபூர்வாவோ அவ்விடம் கண்ட காட்சியில் உறைந்து தான் போனாள்.
இறந்த நிலையில் ஒரு ஆணின் சடலம் யாரும் பார்க்க முடியாத நிலையில் கிடக்க, முகத்திலும், உடலிலும் ரத்தம் உறைந்து போயிருந்தது. அதனைக் கண்டதும் ஆவென அபூர்வா கத்தியிருக்க, அவள் சத்தம் கேட்டு அனைவரும் திரண்டனர் அவ்விடம்.
அடுத்தநொடி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த காவல் துறையினரோ, சடலத்தை முதலில் பார்த்த, அபூர்வாவிடம் விசாரணை நடத்த, பெண்ணவளோ அசையாமல் சிலைபோல் நின்றாள்.
சிலைப்போல் நிற்பவளை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துவிட, அவளின் அலைபேசியின் மூலமே பிரகல்யாவை அழைத்திருந்தார் இன்ஸ்பெக்டர் பார்த்திபன்.
நடந்தவற்றை கூறியவள் தன் தமக்கையின் தோளில் சாய்ந்துக் கொண்டாள். “அக்கா. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. நம்ம வீட்டுக்கு போலாம்.” என்று நெஞ்சு படபடக்க கூறினாள்.
“சரி அபூமா. நீ இங்க உட்காரு. நான் பேசிட்டு வரேன்.” என்றவள் இன்ஸ்பெக்டரை நோக்கி செல்ல, அவரோ சப் இன்ஸ்பெக்டரிடம் கேசை பற்றி தீவிரமாக விசாரித்த வண்ணம் இருந்தார்.
“முகிலன். அங்க பாடி பக்கத்துல கிடைச்ச கேமிரா பத்தி எதாவது தெரிஞ்சுதா?”
“சார் அதுலயிருந்த மைக்ரோ எஸ்டி கார்டு மிஸ்ஸிங். அவன் ஒரு ரிப்போர்ட்டரா இருக்குறதுனால ஒருவேளை அவனை கொன்னுட்டு, அந்த கார்டை எடுத்துட்டு, அப்புறம் மலையில இருந்து தள்ளி விட்ருக்க வாய்ப்பு இருக்கு சார்.”
“எஸ். இல்லைனா தற்கொலையா கூட இருக்கலாம். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வரட்டும் முகிலன்.” என்று தீவிரமாக பேசிக் கொண்டிருந்தான் பார்த்திபன்.
அந்நேரம் “சார்.” என்ற பிரகல்யாவோ, மென்மையாக அவனை அழைக்க, அவனோ அவளைக் காணாது தீவிரமாக பேசிக்கொண்டபடி இருந்தான்.
“க்கூம்… சார்” என்று தொண்டையை பிரகல்யா செரும, அதுவும் அவனது காதுகளை எட்டவில்லை. மீண்டும் அவள் “சார்…” என்று சத்தமாக வாய் திறந்து அழைக்கும் முன், “இன்ஸ்பெக்டர் சார்.” என்று ஒருவன் தனது சிம்மக்குரலில் அழைக்க, அந்த நிமிடம் அவனை அவள் மட்டும் திரும்பிப் பார்க்கவில்லை. இன்ஸ்பெக்டர் பார்த்திபனும் பார்த்தார்.
“விஷ்வா ஐ அம் ரைட். உங்களை வெயிட் பண்ண சொன்னனே.” என்றான் பார்த்திபன் புருவம் தூக்கியபடி. பின் அவனைப் பார்த்துக்கொண்டே பிரகல்யாவின் மீது பார்வை படிய, “ஆமா… நீங்க?” என்றான் கேள்வியாக.
“இவங்க கூப்பிட்டே இருந்தாங்க. நீங்க பார்க்கலை. அதான் நான் சத்தமா கூப்பிட்டேன்.” என்று விஷ்வா எடுத்துரைக்க, அவனை முறைத்தபடி, தனது பார்வையை பிரகல்யாவின் மீது பதித்தான் பார்த்திபன்.
பிரகல்யாவோ பார்வையாலே விஷ்வாவிற்கு நன்றியினை உரைத்திருந்தாள்.
“பார்ட் டைம் பத்திரிகை நிருபருக்கு ரொம்பவே அக்கறைதான்.” என்று கிண்டலடித்தவன், பிரகல்யாவைப் பார்த்து, “சொல்லுங்க டாக்டர் என்ன விசயம்?” என்றான் அழுத்தமாக.
“சார் என்ன எப்படி உங்களுக்கு தெரியும்?” என்றவளுக்கோ சற்று முன்பு ‘நீங்க?’ என்று தெரியாததைப் போல் கேட்டவனே நினைவுக்கு வந்தான்.
“உங்க தங்கச்சி வந்ததுல இருந்து சொன்ன ஒரே வார்த்தை நீங்க தான். அப்புறம் உங்களுக்கு போன்ல இன்பார்ம் பண்ணதும் நான் தான். உங்க வாய்ஸ் நல்லா நியாபகம் இருக்கு.”
“ஓகே சார். ஆனால் எதுக்கு என் தங்கச்சியை போலிஷ் ஸ்டேஷன் வரை கூப்பிட்டு வந்திருக்கீங்க. அவ மட்டுமா அந்த டெட்பாடியை பார்த்திருக்கா? அங்க எவ்வளவு பேரு பார்த்தாங்க?” என்று சற்று காட்டமாகவே கேட்டாள்.
“எல்லாரும் பார்த்தாலும், முதல்ல பார்த்தது உங்க தங்கச்சி. சோ அவங்களை முதல்ல விசாரிக்காமல், நான் யாரை விசாரிப்பேன்.” என்றவன் புருவத்தை உயர்த்த,
“அதை நீங்க அங்க வெச்சே விசாரிச்சிருக்கலாமே சார்.”
“ஆனால் உங்க தங்கச்சி பதில் சொல்ற நிலைமையிலேயே இல்லையே? நான் என்ன பண்ணட்டும் சொல்லுங்க?” என்று அவளுக்கே மீண்டும் வினாவினைத் தொடுத்தான் பார்த்திபன்.
“சின்ன பொண்ணு இறந்த சடலத்தை வெட்டவெளியில பார்த்தால் பயப்படாமல் என்ன பண்ணுவா? ப்ளீஸ் சார் அவளை விசாரிக்குறனு டார்ச்சர் பண்ணிடாதீங்க. அவ ஒன்னும் கொலை பண்ணதை பார்க்கலை. ஜஸ்ட் தண்ணீல கிடந்த பிணத்தை தான் பார்த்திருக்கா.”
“ம்ம்ம். வெல் நாங்களே இன்னும் கொலையா தற்கொலையானு கண்டுபிடிக்கலை. நீங்க எப்படி டாக்டர் கொலைனு சொல்றீங்க?” என்றவனின் கேள்வியில் அதிர்ந்துப் போய் பார்த்தாள் பிரகல்யா.
“வாட்… சார் நீங்க விசாரிக்குறத பார்க்கும் போது எனக்கு அப்படிதான் தெரிஞ்சுது. அதான் அப்படி சொன்னேன். இதுக்கும் ஒரு சந்தேகமா?” என்றாள் குழம்பிய முகத்துடன்.
“ம்ம்ம்ம். நீங்க கிளம்பலாம் டாக்டர். எதாவதுனா உங்களையும் விசாரிப்பேன். என்ன பண்றது? போலிஸ்காரன் பொழப்பே அப்படி தான். எல்லாரையும் சந்தேகத்தோடுதான் பார்ப்போம்.” என்று கூறும்போது அவனின் பார்வை சந்தேகமாக அபூர்வாவின் மீது படிந்து மீண்டது.
“தாங்ஸ்.” என்று ஒற்றை வார்த்தையில் முடித்த பிரகல்யாவோ தனது தங்கையை அழைத்துக்கொண்டு அவ்விடமிருந்து சென்றாள்.
செல்லும் வழியில், தன் தங்கையை பழைய நிலைக்கு திருப்ப பல்வேறு முறையில் முயற்சி செய்தாள் பெண்ணவள்.
ஒருகட்டத்தில் அக்கா தனக்காக செய்வதைக் கண்டு புன்னகைத்தாள் அபூர்வா.
“அக்கா பயப்படாத. தூங்கி எழுந்திரிச்சா நார்மல் ஆகிடுவேன்.” என்று புன்சிரிப்பொன்றை உதிர்க்க, அவளது தலையை செல்லமாக வருடினாள் பிரகல்யா.
அன்றைய பொழுது அவ்வாறே கழிய, அடுத்த நாள் காலை அழகாய் விடிந்தது. விடியற்காலை பொழுதில் உறங்கிக் கொண்டிருந்த தனது தங்கையின் தலையை வருடியவள், நடைப்பயிற்சி புரிவதற்காக எப்போதும் செல்லும் பூங்காவிற்கு சென்றிருந்தாள்.
எப்போதும் தன்னோடு அபூர்வாவையும் அழைத்துக் கொண்டே வருபவள், இன்று அவள் நிம்மதியாக தூங்கட்டும் என்று நினைத்துக் கொண்டு, தான் மட்டும் அவ்விடம் நோக்கி சென்றாள்.
அதிகாலை வேளையில் சிறு ஓட்டப்பயிற்சி அவள் மேற்கொள்ளும் போதே, யாரோ அவளின் பின்னே வருவது போல தோன்றியது பெண்ணவளுக்கு.
உடனே அவள் திரும்பிப் பார்க்க, அங்கு யாருமில்லாமல் இருப்பதைக் கண்டு மீண்டும் ஓடத் தொடங்கினாள். மீண்டும் அதே உள்ளுணர்வு எழ, திரும்பியவளுக்கு அங்கு யாருமில்லாமல் இருப்பதைக் கண்டு, குழப்பம்தான் ஏற்பட்டது..
“என்னாச்சு நமக்கு?” என்று யோசித்துக் கொண்டே பெண்ணவள் திரும்ப, அவள் முன் வந்து நின்றான் ஒருவன். அவனை அவ்வளவு அருகில் கண்டதும் ஒரு நிமிடம் பெண்ணவள் அச்சம் கொண்டபடி, பின்னோக்கி விழ சென்றவளின் இடையினை பற்றி, விழாமல் பிடித்து நிறுத்தினான் அவன், ருத்ரஜித்……
மருண்டு விழிக்கும்
மங்கையவளின் இடையைப்
பற்றிய கைகள் தான் – நேற்று
அவளின் தங்கையை பற்றியதோ…
யாரிவன் என்று அறியாமல்
அவன் விரிக்கும் வலையில்
அகப்படுவார்களோ !
இவ்விரண்டு மங்கைகளும்….
