காதல் கணம் 16
தொடர்ந்து மூன்று வருடங்கள் விஜயாதித்தன் வெள்ளையப்பனை வாரியிரைத்ததின் பலனாக அனைத்து அரியர்களையும் க்ளியர் செய்து, தனது இருபத்தைந்து வயதில் ஷ்ரதா பி.இ பாஸ் செய்தாள்.
அவளிடம் திடுமென அவளுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புவதாக விஜயாதித்தன் தெரிவிக்க, வீசியை மனதில் வரித்திருந்தவள், “வேண்டாம்பா, நான் உங்களோடவே இருந்திடுறேன்பா.” என்று முகாரி வாசித்தாள்.
இதனால் ஒரு மாதம் அந்த விஷயத்தை ஆறப்போட்டு வைத்திருந்தவர் மீண்டும் ஒருநாள் அவளை தனியாக அழைத்துப் பேசினார்.
அவளுக்கு வீசியைப் பற்றி மனதில் ஓடினாலும் விஜயாதித்தனிடம் சொல்ல பயமாகயிருந்தது. சொன்னால் அப்பா எங்கே கோபித்துவிடுவாரோ என்றும் தயக்கம்.
ஆனால், தான் மனதில் வரித்த வீசியையே விஜயாதித்தன் மாப்பிள்ளையாக கொண்டு வந்து நிறுத்துவார் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. நிறுத்தியபோது அதிர்ச்சியில் உறைந்து போனாள். அப்போது அவள் அடைந்த நிம்மதியும் மனக்களிப்பும் அலாதியானது.
ஆனால், நிச்சயத்தன்று வீசியின் முகம் உர்ரென்று இருந்தது அவளுக்குள் ஒரு அபசுருதியை உண்டாக்கியது. ஆனால், பின்னால் கேட்டுக்கொள்ளலாமென்று விட்டுவிட்டாள்.
அவள் பி.இ படிக்கும்போதும் சரி; வீட்டிலிருந்தபோதும் சரி; யாரும் அவளிடம் பழைய விஷயங்களைப் பற்றி கேட்டதும் கிடையாது; சொன்னதும் கிடையாது. திருமணமாகி வந்த பின்பு வீசி தான் அவளை தனக்கு முன்பே தெரியும் என்பது போல் பேசிக்கொண்டும், காயப்படுத்திக்கொண்டும் இருந்தான்.
திருமணமான இத்தனை நாட்களில் எப்படி எப்படி என்றே புலம்பிக் கொண்டிருந்தவளுக்கு, இன்று காலையில் எழுந்தவுடன் தலையில் ஏற்பட்ட வலியால் கொஞ்சம் கொஞ்சமாக பழைய விஷயங்கள் எல்லாம் ஞாபகம் வர ஆரம்பித்தன.
அதில் தலையைப் பிடித்து இடவலம் ஆட்டினாள். எவ்வளவு முயற்சித்தும் பதினெட்டு வயது மங்கையான தன்னிடம் புக்ஸ்டாலில் வீசி காதலை தெரிவிப்பதோடு மேற்படி எதுவும் ஞாபகம் வரவில்லை.
‘இதென்ன ஞாபகம் விட்டு விட்டு வருது? முழுசா வந்து என்னை நிம்மதியாவே வாழ விடாதா?’ என்று முழங்காலில் முகம் புதைத்து கரைந்தாள் ஷ்ரதா.
அவள் அனைத்தும் ஞாபகம் வந்தால் நிம்மதியாக வாழலாம் என்று நினைக்கிறாள். ஆனால், இருக்கும் கொஞ்ச நஞ்ச நிம்மதியும் முழு ஞாபகத்தால் பறிபோய்விடும் என்பது பாவம் அவளுக்கு தெரியவில்லை!
அழுது முடித்து தன் கட்டுப்போட்டிருந்த வலக்கையைத் தூக்கிப் பார்த்தவளுக்கு வீசியின் கரிசனம் தெரிந்தது.
‘அவர்கிட்ட நான் டியூசன் போயிருக்கேன். தாரிணிக்கு தினமும் பால், எனக்கு பூஸ்ட். ம், இதுலயே எனக்கு பால் பிடிக்காதுன்னு தெரிஞ்சிருக்கும். அப்புறம், இந்த மல்லிகைப் பூ, உரைப்பு ஒத்துக்காது, பூனைக்குட்டி, மீன்தொட்டி, பிடிச்ச ஸ்வீட்ஸ், டெடி, எப்படி? ப்ச்! முருகா என்ன நடந்தது நீயாவது எனக்கு சொல்லேன்?” என்று மீண்டும் தலையைப் பிடித்துக்கொண்டாள்.
அப்போது தான் வீசி அந்த அறைக்குள் நுழைந்தான்.
“என்ன எழுந்துட்டியா? சீக்கிரம் கிளம்பு! இன்னைக்கு உன் முருகனைப் பார்த்துட்டு, ஒரு கும்பிடு போட்டுட்டு வந்திடலாம்.” என்றதும்,
‘எப்படி எதுவுமே நடக்காத மாதிரி இவரால மட்டும் பேச முடியுது?’ என்று வியப்படைந்தாள் ஷ்ரதா.
அவன் மேலுள்ள கோபத்தில் தனக்கு ஞாபகம் வந்த சம்பவங்களை கூறாமல் தலைவலியுடனே எழுந்து கோவிலுக்கு கிளம்பினாள்.
அபிராமிக்கு கோவிலுக்கு செல்கிறோம் என்று கிளம்பி நின்ற இருவரையும் பார்க்க பார்க்க ஆச்சரியமாக இருந்தது. நேற்றிரவு நடந்தவையெல்லாம் என் பிரம்மை தானோ? என்று எண்ணுமளவிற்கு வந்துவிட்டார் அவர்.
காரில் செல்லும்போது சிவனேஸ்வரனைப் பற்றி யோசித்தாள் ஷ்ரதா. ‘எப்படி இவங்க ரெண்டுபேரும் எதிரியானாங்க? கண்டிப்பா ஷிவா அத்தானை பார்க்கும் போது இது பத்தி கேட்கணும். ஷிவா அத்தானை பார்க்கும் போதாவது? இன்னொரு வெட்டுக்காயம் வேணுமா ஷ்ரதா?’ என்று அவள் மனசாட்சி வீசியின் டூப்பு போல் அவளிடமே கேள்வி கேட்டது.
தன் காயமடைந்த கையைப் பார்த்து ஷிவா அத்தானை சந்திக்கும் யோசனையையே கைவிட்டாள்.
“ம் இறங்கு! கோவில் வந்திடுச்சு” என்றான் வீசி.
அவளும் இறங்கினாள்.
இன்று கோவிலில் ஏதோ திருவிழா போல் எங்கும் பூவினால் தோரணங்கள் தொங்கவிடப்பட்டிருந்தது. ஆனால், கூட்டம் இல்லை.
அர்ச்சனைத் தட்டு வாங்கியவள் கடைக்காரரிடம், “இன்னைக்கு கோவில்ல என்ன விசேஷம்?” என்று கேட்க,
அவர் ரகசியக்குரலில், “ஏதோ பெரிய வீட்டு கல்யாணம் போலம்மா. கோவிலுக்கு டொனேஷனே ஒரு லட்சம் கொடுத்திருக்காங்க. அந்த ஏற்பாடு தான் உள்ள நடந்துக்கிட்டு இருக்குது” என்றார்.
கேட்டதுமே ஷ்ரதாவுக்கு பகீரென்றது. ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப்போவதாக அவள் உள்ளுணர்வு எச்சரித்தது. ‘இல்ல! அப்படி மட்டும் இருக்கவேக் கூடாது’ என்று கோவிலின் கொடிக்கம்பத்தைப் பார்த்து கைக்கூப்பினாள்.
விக்கித்து நின்றிருந்த ஷ்ரதாவின் கையைத் தொட்ட வீசி, “வா உள்ளப்போகலாம்” என்றான்.
அவளுக்கு அப்படியே வெளியே ஓடிவிடலாம் போல இருந்தது. நகர முடியாமல், இல்லை நகர விரும்பாமல் நின்றவளை, “என்னாச்சி? வா!” என்று வம்படியாக இழுத்துச்சென்றான் வீசி.
வித்யாவின் வீட்டில் பார்த்த அதே அடியாட்கள் இன்று ‘ஒட்டிக்கோ கட்டிக்கோ’ விளம்பர உடையில், நெற்றியில் திருநீற்றோடு நின்றிருந்தார்கள். வீசியைப் பார்த்ததும் தங்கள் சட்டைகாலரைப் பிடித்து தலையசைத்து வணக்கம் வைத்தார்கள்.
‘இல்ல, இல்ல, வேண்டாம். அப்படி எதுவுமே நடக்க வேண்டாம் முருகா’ என்று வேண்டிக்கொண்டே அன்னநடைபோட்டாள் ஷ்ரதா.
பாலைவனத்தில் நான் மணலை பார்க்கக்கூடாது என்பது போல் தான் இருந்தது அவளது வேண்டுதல்.
காளியம்மன் சன்னதியில் இவர்களைப் பார்த்ததும், பேசிக் கொண்டிருந்த தர்மகர்த்தாவை வெயிட்டிங் லிஸ்டில் போட்டுவிட்டு, வீசியின் அருகில் வந்தார் ராஜமாணிக்கம்.
அன்றைக்குப் பார்த்ததற்கு இன்று மனிதர் ரொம்பவே மெலிந்து காணப்பட்டார். கழுத்தில் கொழுத்தப்பூனையும் மிஸ்ஸிங். ஆனால், நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் சௌக்கியமாக இருந்தன.
ஷ்ரதாவை தலையசைப்பிலேயே வரவேற்ற ராஜமாணிக்கம் “கமலா, வீசி வந்தாச்சு பாரு” என்றார்.
கணவரின் உரத்த குரலைக் கேட்டதும் கமலா குத்துவிளக்கிற்கு பூ சுற்றிக் கொண்டிருந்தவர் வள்ளுவனின் வாசுகி போல் செய்த வேலையை அப்படியே போட்டுவிட்டு ஓடிவந்தார்.
“வித்யா பியூட்டி பார்லர்ல இருந்து புறப்பட்டுட்டாளாம்ங்க. இப்போ தான் போன் பண்ணினா.” என்று அவர் கேட்காத கேள்விக்கும் பதிலளித்துக் கொண்டிருந்தார்.
அவரும் இதற்காகத்தான் உன்னை அழைத்தேன் என்பது போலவே செவிமடுத்துக் கொண்டிருந்தார்.
வீசி இயல்பாக, “பிரச்சனை எதுவும் இல்லையே?” என்க,
“இல்ல வீசி, கோவிலை சுத்தி ஃபுல்லா நம்ம ஆளுங்க தான். நமக்கு தெரியாம யாரும் உள்ளேயும் வரமுடியாது. வெளியேயும் போகமுடியாது. கிட்டத்தட்ட ஜெயில் மாதிரி தான்” என்று சிரித்தார், சிறந்த நகைச்சுவை ஒன்றை தான் சொல்லிவிட்டதை போல.
ஷ்ரதா அவர்கள் பேசுவதை கவனியாமல் கமலா வந்த திசையையே வெறித்துக் கொண்டிருந்தாள். ஏனெனில், அங்கு தான் ஹோம குண்டம் அமைத்து அக்னி வளர்த்துக் கொண்டிருந்தார் ஐயர்.
துக்கம் நெஞ்சை அடைத்து மூச்சிவிட சிரமப்பட்டவள், மனதிற்குள்ளேயே கதறினாள்.
”எப்பவும் என் கஷ்டத்தை முறையிட தான் இங்க வருவேன். ஆனா, இங்கேயே எனக்கொரு கஷ்டம்னா? முருகா, உன் பனிரெண்டு கண்ணும் இந்தக் கொடுமைகளை வேடிக்கைப் பார்த்துக்கிட்டு தான் இருக்கா?’ என்று பெருமூச்சு விட்டாள்.
ராஜமாணிக்கம் திருமண ஏற்பாடுகளைப் பற்றி பேசியவர், “நீ வேணும்னா போய் சாமி கும்பிட்டுட்டு வா வீசி” என்று ஷ்ரதாவோடு அவனை வழியனுப்பி வைத்தார்.
வீசி முதலில் விநாயகரைப்போய் தரிசிக்க, இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று எண்ணிய ஷ்ரதா தயக்கமேயின்றி அந்தப் பொதுவெளியில் அவன் காலில் விழுந்தாள்.
வீசி அக்கம் பக்கம் பார்த்து, “ஹே! என்ன பண்ற? எழுந்திரு!” என்றான்.
அவள் கண்ணீர் கப்பிய கண்களுடன், “நான் என்ன தப்பு செஞ்சேன் எனக்கே தெரியலைங்க? நானும் எவ்வளவோ முயற்சி செஞ்சுப் பார்க்கறேன். ஆனா, எதுவுமே ஞாபகம் வர மாட்டேங்குது. நீங்க எனக்கு ப்ரொபோஸ் பண்ணின வரைக்கும் தான் ஞாபகம் வருது. அத்தையும், மாமாவும் உங்க மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்காங்க. என்னையும், என் குடும்பத்தையும் பழி வாங்கறதா நினைச்சி நீங்க அவங்க நம்பிக்கையை இழந்திர வேணாம். ப்ளீஸ்.” என்றாள்.
“இடியட்! எழுந்திரிச்சித் தொல. எல்லாம் ஒரு மாதிரி பார்க்குறாங்க.” என்று வார்த்தைகளை கடித்துத் துப்பியவன், பின், “நீயென்ன அந்த ஆண்டவனே வந்து சொன்னாலும் இப்போ இந்தக் கல்யாணத்தை நிறுத்த முடியாது.” என்று ஆணவமாய் சொல்லிவிட்டு அவ்விடம்விட்டு நகர்ந்தான்.
அப்போது அந்தக் கணத்தில் தான் கடவுளின் ஈகோ தூண்டப்பட்டிருக்க வேண்டும். வீசிக்கு எதிராய் ஒரு சம்பவத்தை நிகழ்த்தி முடித்திருந்தார் அவர்.
ஷ்ரதா அவன் உறுதியில் முற்றிலுமாய் இடிந்துபோனாள். இனியும் அவனிடம் கெஞ்சுவது வீண் என்று புரிந்து கொண்டவள் கோவிலைவிட்டு கிளம்ப எத்தனிக்க, அவளை தடுத்து நிறுத்தினார் கமலா.
மானசீகமாய் கமலாவிற்கு ஒரு கும்பிடுபோட்டுவிட்டு ராஜமாணிக்கத்தை நோக்கிச் சென்றான் வீசி.
அங்கு அவர் தன் அடியாட்கள் அனைவரையும் சுற்றி நிற்க வைத்து எதையோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார். வார்த்தைகள் அனைத்தும் கொப்பறை இட்லிகளாய் சூடாய் வந்து விழுந்தன. வீசிக்கு தூரத்தில் எதுவும் கேட்கவில்லை. அருகில் நெருங்கியபோது தான் ராஜமாணிக்கத்தின் வலது கை மகா பேசுவது ஓங்கி ஒலித்தது.
“இல்ல மாணிக்கண்ணே. பாப்பாவை அந்த விஜயாதித்தன் தான் கடத்தியிருப்பான். அந்த சிவனேஸ்வரன் விஜயாதித்தனோட தங்கச்சி மகன் தான். மாமனார் தூண்டுதல்ல மருமகன் கடத்தியிருக்கான்.” என்று உறுதியாய் வாதாடினான்.
ராஜமாணிக்கம் மகாவின் பேச்சை மறுத்தார். “இல்ல மகா, பிளான் விஜயாதித்தனோடதா இருந்திருந்தா இந்நேரம் நமக்கு தகவல் வந்திருக்கும். இந்தப் பய சிவனேஸ்வரன் வேற ஏதோ காரணத்தோட தான் கடத்தியிருக்கான்” என்று தாடியை தடவினார்.
இவ்விடத்தில், “ஆமா, நீங்க சொல்றது தான் சரி” என்று குறுக்கிட்டான் வீசி.
வீசியின் குரலைக் கேட்டதுமே மகாவின் கோபம் உச்சத்தைத் தொட்டது. “என்ன சரி? ஓஹோ இவரும் அந்த விஜயாதித்தனோட மருமகன் தான் இல்ல? அதான் மாமனாரை விட்டுக் கொடுக்காம பேசுறாரு. யாருக்குத் தெரியும்? பாப்பாவைக் கடத்த இவரேக்கூட ரூட் போட்டுக் கொடுத்திருந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல” என்று எகிறினான் மகா.
வீசி கண்கள் சிவப்பாகி பதிலுரைக்கும் முன்பே, ராஜமாணிக்கம் மகாவின் செவிள் பிய்யும் அளவிற்கு ஒரு அறைவிட்டிருந்தார்.
“யாருக்கிட்ட என்ன பேசுற மகா? வீசி நம்ம ஆளு. மொத மன்னிப்புக்கேளு” என்றார்.
வீசி கோபத்துடன், “வேண்டாம் மாணிக்ஜி” என்று தடுத்தான்.
மகா கன்னத்தைத் தடவிக்கொண்டு இன்னும் வீசியை முறைத்தபடியே நின்றிருந்தான். அவனுக்கு வீசியை முன்பிருந்தே பிடிக்கவில்லை. அதுவும் ராஜமாணிக்கம் வீசியை மாப்பிள்ளை என்று தலையில் தூக்கிவைத்து ஆட ஆரம்பித்ததிலிருந்து சுத்தமாகப் பிடிக்கவில்லை.
“இவ்வளவு நாள் வேலை பார்த்த நம்மளை விட மாணிக்கண்ணே அவனை பெரிய ஆளா உசத்திப் பேசுறது பிடிக்கலைடா. ஒரே சமயத்துல பத்து பேரை அடிச்சிட்டா அவன் பெரிய ஆளாடா?” என்று பலமுறை மதுபோதையில் புலம்பி இருக்கிறான்.
ஆனால், போதையில் மட்டுமே அவ்வார்த்தைகள் வீரியத்தோடு வெளிவரும். போதை தெளிந்தபின், “டேய்! மாணிக்கண்ணே சொல்றதுக்கு எவனாவது எதிர்ப்பு சொன்னீங்க குடலை உருவி மாலைப் போட்டுருவேன்” என்று படம் காட்டுவான்.
ராஜமாணிக்கம் சுற்றி நின்றிருந்த தன் ஆட்களைப் பார்த்து அனல் பறக்கக் கட்டளையிட்டார். “நான் சொன்னது எல்லாம் புரிஞ்சது இல்ல? இன்னும் இருபத்துநாலு மணி நேரத்துல என் பொண்ணு என் வீட்டுல இருக்கணும். இல்ல…” என்று உறுமி எச்சரித்தார்.
அவர்கள் வேகமாக கலைந்து சென்றார்கள். வீசி, ராஜமாணிக்கம் சொல்லச் சொல்ல கேட்காமல் ஷ்ரதாவை மறந்துவிட்டு அடியாட்களுடனே வித்யாவைத் தேடி புறப்பட்டான்.
சிறிதுநேரத்திற்கு முன்பு ஷ்ரதா வீசியின் காலில் விழுவதைப் பார்த்து பதறிய கமலா, அவன் நகர்ந்ததும் மெதுவாக அவளிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார்.
ஷ்ரதா தன் விஷயம் புரியாதவரிடம், “உங்க வீட்டுக்காரரை இன்னொரு பொண்ணுக்கு உங்களால விட்டுக் கொடுக்க முடியுமாம்மா?” என்றாள் தடாலடியாக.
அவரோ பதில் பேச முடியாமல் தலை குனிந்தார்.
“இன்னைக்கு இந்தக் கல்யாணம் மட்டும் நடந்தது என்னை நீங்க உயிரோடவே பார்க்க முடியாது.” என்றுவிட்டு துப்பட்டாவால் வாய் மூடியபடியே நகரப்போனவளை,
“நானும் என் வீட்டுக்காரரும் அறுபதாம் கல்யாணம் பண்ணிக்கிறதுல உனக்கு என்ன பிரச்சினை ஷ்ரதா?” என்று அவளை தடுத்து நிறுத்தினார் கமலா.
காதல் கணம் கூடும்…
