காதல் கணம்-19

காதல் கணம் 19

தற்போது கையறு நிலையிலிருந்த சிவனேஸ்வரனின் நினைவுகள் தான் ஏற்கனவே இதுபோல் கையறு நிலையிலிருந்த நாளை நோக்கி பயணித்தன.

*

“ஐ லவ் யூ” -வீசியிடமிருந்து இவ்வார்த்தைகளை கேட்டதுமே திக்குமுக்காடிப்போனான் சிவனேஸ்வரன்.

யாரைப் பார்த்து கத்திக் கொண்டிருக்கிறான் இந்த வீசி என்ற கேள்விக்கு இப்போது இடமேயில்லை. ஏனெனில், வெளியே நின்ற ஷ்ரதாவின் பிங்க் நிற ஸ்கூட்டியை தான் அவன் முன்பே பார்த்திருந்தானே!

‘துரோகி! பச்சைத்துரோகி. இவனை எவ்வளவு பெரிய ஒழுக்கசீலன்னு நம்பி ஷ்ரதாவை இவன்கிட்ட அனுப்பி வச்சேன். மொத்தமா என் மூக்கறுத்துட்டானே. இவன் அக்கா, அருண்மொழிய வளைச்சுப்போட்டா. இவன் இப்ப ஷ்ரதாவை வளைச்சுப் போட்டுட்டான். தூப்! மானங்கெட்ட குடும்பம்’ என்று உள்ளுக்குள் பொருமினான்.

“அதான் ஐ லவ் யூ சொல்லிட்டேனே. ப்ளீஸ் கையை கட் பண்ணிடாத ஷ்ரதா. அந்த ஸ்கேலை கீழப்போடு” என்று பதறினான் வீசி.

‘அவளை மயக்கி தன்னை காதலிக்கிற மாதிரி செஞ்சிட்டு, இப்போ எப்படி நடிக்கிறான் பாரு? துஷ்டன்! கூடயிருந்தே கழுத்தறுத்த துரோகி. உன் சந்தோசம் ரொம்ப நாளைக்கு நீடிக்காது வீசி” என்று கருவியபடியே வந்தவழி சென்றுவிட்டான் சிவனேஸ்வரன்.

ஷ்ரதா தன் ஆயுதத்தை கீழேப்போட்டுவிட்டு முகத்தை மூடி அழுதாள்.

“ப்ச்” என்று சலித்தபடியே அருகில் வந்த வீசி, “அதான் ஐ லவ் யூன்னு சொல்லிட்டேனே? அப்புறமும் ஏன் அழற?” என்று அதட்டினான்.

அவள், “நீங்க சும்மா தான் சொன்னீங்கன்னு எனக்குத் தெரியும்” என்றாள் சிறுபிள்ளை போல்.

அவனுக்கு அவளை நினைத்தால் சிரிப்பு வந்தது. ஆனால், சிரித்தால் தலையிலேறி உட்கார்ந்து கொள்வாளோ என தனது சுபாவத்தை விட்டுக்கொடுக்காமலே சொன்னான், “சும்மா எல்லாம் சொல்லல” என்று.

உண்மையில் இவ்வாக்கியத்தை தன் மனதில் பதிய வைக்கவே முயன்று கொண்டிருந்தான் வீசி. நிச்சயம் அவனுக்கு அவள் மீது காதல் எல்லாம் இல்லை. அந்தக் கருமம் வராமலிருப்பதுவும் இப்போது அவனுக்கு பிரச்சினையில்லை.

ஆனால், இந்த ‘ஐ லவ் யூ’ ஏதோ ஒரு கட்டாயத்தில் வந்த உளறலாக இருந்தாலும் அவனுக்கு சிறிதுகாலம் ஷ்ரதாவுடன் விளையாடிப் பார்த்தால் என்ன என்ற விபரீத ஆசை உண்டானது.

காதல் செய்த அனைவருமேவா கல்யாணம் செய்து கொள்கிறார்கள்? அந்த நம்பிக்கை தான் அவனுக்கு துணிவைத் தந்தது.

“அப்போ உண்மையாத்தான் சொன்னீங்களா?”

“ம்” என்றுவிட்டு கல்லாப் பக்கம் சென்று உட்கார்ந்தான்.

அவள் லஜ்ஜையோடு தயங்கியபடியே அவனருகில் வந்து நின்றாள். அவன் பதிவேட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான். காதலை சொல்லிவிட்ட பின் அடுத்தக்கட்டம் என்ன என்ற ஆர்வமே மேலோங்கியிருந்தது அவனிடம்.

வந்தவள் அங்கிருந்த ஒரு தாளில் தனது போன் நம்பரை எழுதி நகர்த்தி வைத்தாள்.

அவன் பார்த்து தனது நோக்கியா போனில் பதிவு செய்து கொண்டான். மனம் ‘நெக்ஸ்ட்? நெக்ஸ்ட்?’ என்றது.

அவள், “உங்க நம்பர்?” என்றாள் கீழே குனிந்துகொண்டே.

அவன் வாடிக்கையாளர் ஒருவர் உள்ளே நுழையவும் கத்தரித்தாற்போல, “போன் பண்ணி சொல்றேன்” என்றான்.

அவள் ஏமாற்றமாக, “ம்” என்று தொங்கிய முகத்துடன் வெளியே கிளம்பினாள்.

உள்ளே நுழைந்த வாலிபன் ‘வேள்பாரி’யை வாங்கிக்கொண்டு வெளியேறவும், வீசி ஷ்ரதா கிளம்பிவிட்டாளா? என்று தன் இருக்கையிலிருந்து எட்டிப் பார்க்க, மீண்டும் உள்ளே வந்து, “உண்மையாத்தான் சொன்னீங்களா?” என்று கேட்டு அவனை திடுக்கிடச் செய்தாள் ஷ்ரதா.

அவன் பொத்தென்று நாற்காலியில் விழுந்தவன், ஆமாமென்று கத்தவும் அரண்டு ஓடிவிட்டாள் அவள்.

சிறிதுநேரம் கடுமையாகவே முகத்தை வைத்திருந்தவன், பிறகு தன்னாலேயே சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.

ஷ்ரதாவின் குழந்தைத்தனமான செயல்கள், அவளது காதல் நிச்சயம் தன்னை பாதிக்காது என்ற எண்ணத்தை அவனுக்குள் வலுவாய் விதைத்து விட்டன.

காலத்தின் கால்களில் சக்கரத்தை கட்டிவிட்டுச் சென்றவர், காதிலும் ‘கடமை கண் போன்றது’ என்று அறிவுறுத்திவிட்டு சென்றிருக்க வேண்டும். அதற்குள் கடமை உணர்ச்சியில் ஏழு நாட்களை டிஸ்மிஸ் செய்திருந்தது.

அவனிடம் போன் நம்பர் கொடுத்துவிட்டு வந்த ஷ்ரதா இந்த ஒரு வாரமும் அவனிடமிருந்து போன் வராதா? என்று ஏங்கி துடித்துவிட்டாள்.

ஆனால், வீசியோ ‘நாம போன் பண்ணி பேச ஆரம்பிச்சா, நாமே தேடிப்போய் வழியிற மாதிரி ஆகிடும்’ என்று ஆர்வம் இருந்தாலும் அடக்கிக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பது போலவே நடித்தான்.

ஷ்ரதாவுக்கு பொறுமையில்லை. நேரே அவனைத் தேடி புத்தகக்கடைக்கே வந்துவிட்டாள். வந்தவள் உள்ளே சென்று புத்தகம் எதையோ தீவிரமாக தேடுவதுபோல பாவனை செய்தாள்.

அவளருகில் வந்தவன், “என்ன புக் வேணும்?” என்று அவளை சீண்ட,

“நீங்க ஏன் எனக்கு போன் பண்ணல?” என்று முகத்தைத் தூக்கினாள்.

அவன் இப்போது ஏதாவது கூறவேண்டுமே என்ற நிர்பந்தத்தில், “நம்பரை தெரியாம மிஸ் பண்ணிட்டேன்” என்றான்.

ஆனால், அதற்குள் அவளுக்குத்தான் கண்கள் கரித்துக்கொண்டு வந்துவிட்டன.

அவளை கவனித்துக் கொண்டிருந்த வீசி ஆவேசமாக, “எப்போப் பார்த்தாலும் கண்ணுல நீரை ஸ்டாக் வச்சிட்டே இருப்பியா? எரிச்சலா இருக்கு நீ அழறதைப் பார்க்க. நான் வேலையில இருக்கும்போது எப்படி உனக்கு போன் பேச முடியும்?” என்றான் அவளுக்கு புரியும்படி.

அவள் பிரவுன் பூப்போட்ட கைக்குட்டையால் தன் கண்களை துடைத்தபடியே, “சாரி” என்றாள்.

அதற்கு மேல் அவளை கலங்கச் செய்ய விரும்பாத வீசி, ஒரு புத்தகத்தை எடுத்து தனது செல்போன் எண்ணை பென்சிலால் கிறுக்கி வைத்து அவளிடம் நீட்டினான்.

பார்த்த உடனே பனிக்கட்டியைத் தூக்கி தன் கன்னங்கள் இரண்டிலும் வைத்தது போல் ஜில்லென்று உணர்ந்த ஷ்ரதா, ‘காதல் அவனுக்குள்ளும் கனிந்துவிட்டது’ என்று மனதுக்குள் குத்தாட்டம் போட்டாள்.

பொறுக்க முடியாமல் அடுத்தநாள் மாலையே அவனுக்கு முதல் தகவலை அனுப்பினாள். ‘gud evg’ என்று ஸ்மைலினாள்.

செய்தி அதிர்வில் போனை தன் கையிலெடுத்துப் பார்த்த வீசி, அவளின் குட் ஈவினிங்கில் பெரிதாக ஆர்வமில்லையானாலும் பதிலுக்கு ஒரு ‘gud evg’ அனுப்பி வைத்தான்.

அந்த செய்தியை பச்சைக்கொடி அசைவாக எடுத்துக்கொண்டு உரையாடலைத் தொடர்ந்தாள் ஷ்ரதா.

*

[9/15, 5:10 PM] Shraddha: Tq 4 ur reply

[9/15, 5:10 PM] Shraddha: r u busy???

[9/15, 5:11 PM] Vc: Mm

[9/15, 5:11 PM] Shraddha: Sorry 
(。>﹏<。)

[9/15, 5:11 PM] Shraddha: Important work???

[9/15, 5:15 PM] Vc: No

[9/15, 5:15 PM] Shraddha: 🙂
                 
[9/15, 5:16 PM] Vc: Apram?

[9/15, 5:17 PM] Shraddha: I Luv u
                
[9/15, 5:17 PM] Vc: mm

*

இந்த ஆண்-பெண் உரையாடலில் ‘mm’-ஐ மட்டும் பார்ப்பவர்கள், நிச்சயம் வீசியை ஒரு பெண்ணின் ஃபேக் ஐடி என்றே கருதக்கூடும்.

ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாத ஷ்ரதா அடுத்தக் கட்டத்திற்கு செல்ல விரும்பி அவனுக்கு அழைப்பு விடுத்தாள்.

ஷ்ரதாவுக்கு இது முதல்முறை என்பதால் நெஞ்சு ரொம்பவே திக்கிற்று. “ஹலோ” என்று மென்மையாக சொன்னாள்.

பதிலுக்கு அவனும் குரலின் கடுமையை குறைத்து, “ம், சொல்லு” என்றான்.

அவன் குரல் கனிந்திருந்த தைரியத்திலும், போன் என்பதாலும் இயல்பாக பேச முயற்சித்தவள், “உங்களுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு சொன்னீங்கன்னா..” என்று இழுத்தாள்.

“தெரிஞ்சிட்டு என்ன செய்யப்போற?” -கேள்வி கறாராய் வந்தது அவனிடம்.

ஷ்ரதா துணிச்சலாக சொன்னாள். “தெரிஞ்சிட்டு, உங்களுக்குப் பிடிச்ச மாதிரி நடந்துக்குவேன்.” என்று.

வீசிக்கு அந்த பதில் ரசிக்கவில்லை. நான் உன்னைக் காதலிக்கிறேன் என்பதில் உன்னை என்பது மொத்தமாகத் தானே? இல்லை, பகுதியாகவா? இந்தக் காதல் ஏன் நீ எனக்குப் பிடித்த மாதிரி மாறு; நான் உனக்குப் பிடித்த மாதிரி மாறுகிறேன் என்று இருவரையும் கோமாளியாய் மாற்றுகிறது? என்பது அவன் எண்ணம்.

“நான் என்ன சொல்றது? முதல்ல நீயே ஏதாவது சொல்லு.” என்று பேச்சை திசை திருப்பினான்.

முதலில் அவன் பேச்சு சுணக்கத்தைக் கொடுத்தாலும், பிறகு உற்சாகமாக சொல்லத் துவங்கினாள் ஷ்ரதா.

“நேத்து ஒரு காமெடி நடந்தது எங்க வீட்டுல. நான் கிராப் வரையறதுக்காக பென்சில் கேட்டேனா? காளியண்ணா தப்பான பிராண்ட் வாங்கிட்டு வந்துட்டாங்களா? அப்பா இனி என் பொண்ணு என்ஜினீயராக மூனு வருஷம் ஆகும். ஒவ்வொரு தடவையும் இது மாதிரி தப்பா வாங்கிட்டு வருவியான்னு பென்சில் பிராண்டை அவர் கையிலயே பச்சைக் குத்தி விட்டுட்டாரு” என்று ஹாஸ்யம் போல சொல்லி உரக்கச் சிரித்தாள்.

வீசிக்கு விறுவிறுவென்று வந்தது. ‘என்னவொரு சர்வாதிகாரத்தனம் இது? இதைப்போய் காமெடி மாதிரி சிரிக்கிறா? என்ன நெஞ்சழுத்தம் இவளுக்கு? ம்! இவளைச் சொல்லி என்ன? வளர்ப்பு அப்படி.’ என்று அவன் முகம் இன்னும் இறுகியது.

எதிர்புறம் இருப்பவளுக்கு இது தெரிய வாய்ப்பில்லாததால், “ஹலோ! ஹலோ! வருணத்தான்” என்றாள்.

அவன் வருணத்தானில் சுதாரித்து, “என்ன சொல்லிக் கூப்பிட்ட?” என்றான்.

அவள் தன் நாக்கை கடித்துக்கொண்டு, “அது தனியா இருக்கும்போது உங்களை அப்படித்தான் கூப்பிட்டுப் பார்ப்பேன். அதுவே இப்ப பேசும்போதும் வாய் தவறி வந்திடுச்சி.” என்றாள்.

“தனியாயிருக்கும் போது என்னை நினைச்சி பார்ப்பியா?” -இக்கேள்வியை கேட்டுவிட்டு அவசரப்பட்டுவிட்டோமோ என்று நினைத்தான் வீசி.

“ம்” என்ற வெட்கமாக பதில் வந்தது அவளிடம்.

அவள் சொன்னது உண்மையா? பொய்யா? என்று வீசி ஆராய விரும்பவில்லை. ஏனெனில், அவனுக்கு அப்பதில் ஒருவித பரவசத்தைக் கொடுத்தது. சிறிதுநேரம் கண்ணை மூடி அனுபவித்தான்.

அது தெரியாமல் ஷ்ரதா உளறிக்கொண்டேப் போனாள்.

“எங்க வீட்டுல ஒரு டெடி இருக்கு. அதுக்கு பேரு நிலா. தினம் அது இல்லாம எனக்கு நைட் தூக்கமே வராது. சொல்லப்போனா அதுவும் எனக்கு ஒரு ஃப்ரெண்ட் மாதிரி. அப்புறம் எனக்கு பூனைக்குட்டின்னா ரொம்பப் பிடிக்கும். என் ஃப்ரெண்ட் தாரிணி வீட்டுல ஒரு கிட்டி இருக்கு. ஒரு தடவை அது என் பாவாடைல மூத்திரம் பேஞ்சி வச்சிருச்சி.” என்றொரு களுக் செய்தாள்.

“அப்புறம்? ஆங்! பர்ப்பிள் கலர்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அய்யயோ! முருகனை விட்டுட்டேன் பாருங்க. முருகபெருமான் வந்து என்னோட பாய் பெஸ்டி. அவர்கிட்ட வேண்டுவேன், கொஞ்சுவேன், கெஞ்சுவேன், சண்டைபோடுவேன் எல்லாம் பண்ணுவேன்” என்று மீண்டும் ஒரு கெக்கப்பிக்கே.

‘சிரிப்பும் அழுகையும் இவளுக்கு அலுக்காத விஷயங்கள் போலும்’ என்று வீசி தன் தலையாட்டிக்கொண்டான்.

பேசிக்கொண்டிருக்கும்போதே யாரோ திடீரென, “ஷ்ரதா” என்று அழைத்துக்கொண்டே அவள் அறைக்குள் நுழைய, ஷ்ரதா பேசுவதை நிறுத்திவிட்டாள்.

ஆனால், வீசிக்கு தொடர்ந்து பேச்சு சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது.

“என்ன ஷிவாத்தான் திடீருன்னு வந்திருக்கீங்க?”

“ஷ்ரதா, நான் உனக்கு என்ன கொண்டு வந்திருக்கேன் பாரு”

“ஹை! கருப்பட்டி பனியாரம்”

“ம், அம்மா செஞ்சது ஷ்ரதா. நான் உனக்குப் பிடிக்குமேன்னு எடுத்திட்டு வந்தேன்.”

சாப்பிட்டுப் பார்த்தாள் போல ஷ்ரதா. “செம டேஸ்ட் அத்தான்” என்றாள்.

சற்று முன்பு வருணத்தானை நேசித்த வீசி, தற்போது ‘அத்தான்’ என்ற சொல்லையே முற்றிலுமாய் வெறுத்தான்.

“அய்யோ! அதையெல்லாம் தொடாதீங்க அத்தான்” என்று சிணுங்கல் சத்தம் கேட்டபோது உண்மையில் பதறிவிட்டான் வீசி.

அடுத்த வார்த்தை தான் அவனை ஆசுவாசமடையச் செய்தது. “அது என் டெடி”

“வாங்கிக் கொடுத்தது நான் தானே ஷ்ரதா?”

“அதுக்குன்னு”

“சரி தொடலை. ஷ்ரதா நீ ராஜாராணின்னு ஒரு படம் வந்திருக்கேப் பார்த்தியா?”

“இல்லையே அத்தான் பார்க்கலையே. கதை என்ன?”

விலாவரியாகச் சொன்னான் சிவனேஸ்வரன். வீசியும் அவன் சொன்ன கதையை கேட்டுக்கொண்டு தான் இருந்தான்.

கதையின் முடிவில் ஷ்ரதா, “பாலுமகேந்திராவோட நெஞ்சத்தை கிள்ளாதேவையும், மணிரத்தினத்தோட மௌனராகத்தையும் மிக்ஸ் பண்ணின மாதிரி இருக்கு அத்தான்” எனவும்,

சிவனேஸ்வரன், “உன்கிட்டபோய் கதை சொன்னேன் பாரு” என்று அவள் மேல் பில்லோவை எறிந்தான்.

அதற்கு அவள் சிரித்து அவனைக் கடுப்பேற்றுவது ஒலிநாடகமாகக் கேட்டுக்கொண்டிருந்தது வீசிக்கு.

முதலில் சிவனேஸ்வரன் இந்தக் கதையை அவளுக்கு சொன்னதற்கு காரணமே அவள் காதல் தோல்வியை ஏற்க பழகவேண்டும் என்பதற்காகத்தான்.

இவ்வாறு கூடுதல் பத்துநிமிடங்கள் செலவிட்டுவிட்டு சிவனேஸ்வரன் கிளம்பியபோது தான் வீசியின் ஞாபகமே வந்து, போனை எடுத்துப் பார்த்தாள் ஷ்ரதா.

அது இன்னும் அணைக்கப்படாமல் இருக்கவும், காதில் வைத்து “ஹலோ!” என்றாள்.

வீசி வேகமாய், “என்ன? சிவா போய்ட்டானா?” என்றான்.

“ம், போயாச்சி. ஆமா நீங்க இவ்ளோ நேரமும் நாங்க பேசினதை கேட்டுக்கிட்டா இருந்தீங்க?”

“ஆமா, உனக்கு கருப்பட்டி பனியாரம்னா ரொம்ப பிடிக்குமோ?” -ஏளனமாகத் தான் கேள்வி வந்து விழுந்தது அவனிடம்.

அவளோ வெள்ளந்தியாகப் பதிலளித்தாள், “ஆமாங்க, கருப்பட்டி பனியாரம், பருப்புப்போலி, பருத்திப்பால், பால் கொழுக்கட்டைன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும்” என்றாள்.

இவ்வாறு அவள் போனில் அடுக்கிக் கொண்டிருக்கும்போதே எதிரில் நாகூர் அண்ணா டீ கொண்டு வருவதைப் பார்த்து, மணி ஏழாகிவிட்டதை உணர்ந்து டக்கென்று, “அப்பறம் பேசறேன்” என்று அழைப்பை துண்டித்துவிட்டான் வீசி.

முதல்முறை ஷ்ரதாவுக்கு வீசியின் மேல் கோபம் வந்தது. அது அவன் தங்கள் பேச்சை ஒட்டுக்கேட்டதற்காய் அல்ல. அவன் டக்கென்று அழைப்பை துண்டித்துவிட்டானே என்று தான்.

காதல் கணங்கள் கூடும்…
 

❤️ Loading reactions...
2 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!