அத்தியாயம் 24
“பைரவா… பைரவா… காப்பாத்துடா… அந்த ரோலக்ஸ் மிருகம் எங்களை அடித்தே கொள்ள பாக்குறான் … அவன் நம்ம தர்மாவை ஒரே அடியில கொன்னுட்டான்டா…”
ரத்த வெள்ளத்தில் கிடந்த நாகாவின் வாயிலிருந்து வந்த ஒவ்வொரு வார்த்தையும், அந்த இருளின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு வெளியேறியது. அவனது குரலில் தன் நண்பனைக் கண்டுவிட்ட நிம்மதியும், மரண பயமும் கலந்திருந்தது. ஆனால், அவனுக்குத் தெரியாது… அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அவனது சொந்த மரண சாசனத்தை எழுதிக் கொண்டிருக்கிறது என்று.
நாகா பேசிய வார்த்தைகளைக் கேட்டதும் பைரவனின் கண்கள் உக்கிரமாக மாறின. அவனது நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. ‘இவன் கத்திக் குளறுற குரல் வெளியே எங்கும் கேட்டுவிடக் கூடாது. இந்த இருள் சுற்றிலும் பாபியின் ஒற்றர்கள் யாராவது இருந்தால், விஷயம் இந்நேரமே கசிந்துவிடும். நாகா என் கூட்டாளிதான்… என் வலது கரம்தான்… ஆனால், இவனை உயிரோடு விட்டால் பாபிக்கு உண்மை தெரிந்துவிடும். பாபிக்கு உண்மை தெரிந்தால் என் ரோலக்ஸ் இந்த ரத்தக் கறையோடு உயிர்பிழைக்க முடியாது. ரோலக்ஸோட உயிர் முன்னாடி எனக்கு இந்த உலகத்துல வேற எந்த உயிரும் முக்கியம் இல்லை!’
பைரவனின் மனதில் தார்மீகக் குழப்பமோ, இரக்கமோ ஒரு நொடி கூட நீடிக்கவில்லை. அவனது கைகள் இரும்பு போல இறுகின. தான் வீழ்த்தியிருந்த அந்தப் பாரமான மர உருட்டுக் கட்டையை மீண்டும் கைகளில் ஏந்தினான். நாகா தனக்கு முன்னால் கைகளைக் கூப்பிக் கெஞ்சிக் கொண்டிருக்க, அவனது முகத்தை ஏறிட்டுப் பார்க்கக்கூட விரும்பாத பைரவன், அந்த மரக்கட்டையை ஓங்கி நாகாவின் தலையிலும் நெஞ்சிலும் சரமாரியாக அடித்தான்.
‘படார்… படார்… டமார்…!’
அந்த இருண்ட அறையில் எலும்புகள் உடையும் கொடூரமான சத்தம் மீண்டும் கேட்டது. நாகாவின் அலறல் சத்தம் பாதியிலேயே தொண்டைக்குள் ரத்தமாக உறைந்து போனது. அவனது கைகள் பைரவனின் கால்களைப் பற்றியிருந்த பிடி மெல்ல மெல்லத் தளர்ந்தது. சில நொடிகளிலேயே அவனது உடல் எந்த ஒரு அசைவும் இல்லாமல் அப்படியே சிமெண்ட் தரையில் சரிந்தது.
பைரவன் மரக்கட்டையைக் கீழே போட்டுவிட்டு, நாகாவின் மூக்கிற்கு அருகே தன் விரல்களைக் கொண்டு சென்றான். அவனுக்கு உயிர் மூச்சு இல்லை என்பது உறுதியானது. அவன் முற்றிலும் சடலமாகியிருந்தான்.
தன் சொந்தக் கூட்டாளியையே தன் கைகளால் கொன்றுவிட்டோம் என்ற வலி பைரவனின் இதயத்தை ஒரு கணம் ரணமாக்கியது. ஆனால், அவன் தன் உணர்ச்சிகளைத் துடைத்தெறிந்தான். சுற்றிலும் கிடந்த தர்மாவின் ஆட்கள் ஒவ்வொருவரின் உடலையும் சென்று சோதித்தான். தர்மா உட்பட அங்கே கிடந்த அனைவரும் முற்றிலும் உயிர் பிரிந்துவிட்டதை, சாட்சியாக இருந்த எவருமே இனி உயிரோடு இல்லை என்பதை அவன் நன்றாக உறுதிப்படுத்திக் கொண்டான். ரோலக்ஸ் செய்த அந்த வெறியாட்டத்திற்குப் பின்னால் இருந்த ஒரே ஆபத்தான சாட்சியான நாகாவும் அவனே முடித்துவிட்டான்.
இனி இந்த ரகசியம் இந்த சுவர்களைத் தாண்டிப் போகாது என்ற தைரியம் வந்ததும், நேராக ரோலக்ஸின் அருகில் பாய்ந்து வந்தான் பைரவன்.
“மயூரா… இனி பயப்பட எதுவும் இல்லை. வா கிளம்பலாம்!” என்று பைரவன் கத்தினான்.
மயூராவும் பைரவனும் சேர்ந்து, ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த ரோலக்ஸின் அந்தப் பிரம்மாண்டமான உடலைத் தூக்கிக் கொண்டனர். அவனது முதுகில் இருந்த கத்திக்குத்தில் இருந்து ரத்தம் இன்னும் கசிந்து கொண்டிருக்க, இருவரும் அவசர அவசரமாக அந்த இடத்தை விட்டு வெளியே ஓடினார்கள். .
துறைமுகத்திற்கு மிக அருகில் இருந்த, தனக்கு பழக்கப்பட்ட ஒரு பழைய மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவுக்குள் ரோலக்ஸ் கொண்டு செல்லப்பட்டான்.
அங்கே இருந்த மருத்துவர்கள் உடனடியாக ரோலக்ஸைச் சூழ்ந்து கொண்டனர். அவனது முதுகில் இருந்த கத்தி பாய்ந்த ஆழத்தையும், ரத்த இழப்பையும் பார்த்த மருத்துவர்களின் முகத்தில் பதற்றம் தொற்றியது. அடுத்த சில நிமிடங்களில், ஆபரேஷன் தியேட்டரின் சிவப்பு விளக்கு எரிந்தது. உள்ளே, ரோலக்ஸின் உயிரைக் காக்க மருத்துவர்கள் தங்களின் மாபெரும் போராட்டத்தைத் தொடங்கினர்.
வெளியே, அந்தப் பெரிய காரிடாரில் பைரவனும் மயூராவும் நின்றிருந்தனர். மயூராவின் உடை முழுவதும் ரோலக்ஸின் ரத்தக் கறைகள் படிந்திருந்தன. அவளது கழுத்தில் இருந்த அந்தப் புதுத் தாலி அவளது நெஞ்சில் இடித்துக் கொண்டிருந்தது. உள்ளே தன் கணவனின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்க, வெளியே அவளது மனம் மரண பயத்தில் தவித்துக் கொண்டிருந்தது.
பைரவன் ஜன்னல் வழியே வெளியே தெரிந்த இருளை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது மூளை அடுத்த கட்ட ஆபத்துகளை எப்படிக் கையாள்வது என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தது. திடீரென்று அவன் மயூராவிடம் நெருங்கி வந்தான். அவனது முகம் தீவிரமாக இருந்தது.
“மயூரா…” பைரவனின் குரல் மிகவும் தாழ்ந்த, எச்சரிக்கையான குரலில் ஒலித்தது.
“நான் சொல்றத நல்லா காதுல வாங்கிக்கோ. உள்ளே டாக்டர்ஸ் ரோலக்ஸ் உயிரைக் காப்பாத்தப் போராடிட்டு இருக்காங்க. ரோல்ஸ் கண்டிப்பா மீண்டு வருவான்… ஏன்னா அது ரோலக்ஸ்! ஆனா, வெளியே நிலைமை ரொம்ப மோசமாகிட்டு இருக்கு. தர்மா இறந்த விஷயம் இந்நேரம் எப்படியும் பாபிக்குத் தெரிஞ்சிருக்கும். ஏன்னா தர்மாவோட போன் சிக்னல் கட் ஆனதும் பாபியோட ஆளுங்க அலர்ட் ஆகியிருப்பாங்க. ஆனா, அங்க யாரு கொலை பண்ணியிருக்கா, என்ன நடந்ததுன்ற உண்மை அவனுக்கு இன்னும் தெரியாது.”
மயூரா தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பைரவனைப் பார்த்தாள்.
“மயூரா, ரோலக்ஸ் தான் தர்மாவைக் கொலை பண்ணான்னு பாபிக்கு எக்காரணம் கொண்டும் தெரியக் கூடாது. அப்படித் தெரிஞ்சா இங்க அடுத்த பூகம்பமே வெடிக்கும்,” என்று பைரவன் தன் கைகளை இறுக்கிக் கொண்டான்.
“உனக்கே நல்லா தெரியும்… தர்மா வெறும் பாபியோட வலது கை மட்டும் கிடையாது. அவனுக்கு தர்மா ஒரு சொந்தத் தம்பி மாதிரி! தர்மாவுக்கு ஏதாவது ஒன்னுன்னா பாபி பைத்தியமாகிடுவான். அதைச் செஞ்சது ரோலக்ஸாகவே இருந்தாலும், அவனைக் கொல்றதுக்கு பாபி ஒரு நொடி கூட யோசிக்க மாட்டான். தன் தம்பியோட மரணத்துக்காக அவன் ஒட்டுமொத்த விசாகப்பட்டினத்தையே சுடுகாடாக்குவான். இப்போ இருக்குற சூழ்நிலையில ரோல்க்ஸால ஒரு துப்பாக்கியைக் கூடத் தூக்க முடியாது.”
பைரவன் மயூராவின் தோள்களைப் பற்றி, அவளது கண்களை நேருக்கு நேர் பார்த்தான். “அதனால, ரோலக்ஸ் இப்போதைக்கு முழுசாத் தலைமறைவா இருக்கிறதுதான் நல்லது.
நான் பாபி கூடவே இருந்து, அவனுக்கு எந்தச் சந்தேகமும் வராமப் பார்த்துக்கிறேன். தர்மாவைக் கொன்னது வேற யாரோ ஒரு எதிரி குரூப்னு பாபிகிட்ட சொல்லி நான் அவனை திசை திருப்பி நம்ப வைக்கிறேன். அவனோட கோபத்தை வேற பக்கம் திருப்பி விடுறேன். அதுவரைக்கும் ரோலக்ஸை நீதான் கண்ணும் கருத்துமாப் பார்த்துக்கணும்.”
பைரவனின் இந்த ராஜதந்திரமும், ரோலக்ஸ் மீது அவன் வச்சிருக்கும் அந்த எல்லையற்ற விசுவாசமும் மயூராவிற்குப் புரிந்தது. இந்தச் சூழ்நிலையில் ரோலக்ஸின் உயிரைக் காப்பாற்ற இதைவிடச் சிறந்த வழி எதுவுமில்லை என்பதை அவள் உணர்ந்தாள்.
மயூரா பலமாகத் தன் தலையை ஆட்டினாள். “சரி அண்ணா … நீ சொல்றதுதான் சரி. ரோலக்ஸ் இப்போதைக்கு ரகசியமா இருக்கட்டும். நீ பாபியைப் பார்த்துக்கோ. உள்ளே இருக்கிற என் ரோல்க்ஸை நான் என் உயிரைக் கொடுத்தாவது காப்பாத்துறேன். அவர் குணமாய் வர்ற வரைக்கும் ரோலக்ஸ் என்ற பெயர் இந்த உலகத்துக்குப் புதிராகவே இருக்கட்டும்,” என்று உறுதியான குரலில் கூறினாள்.
ஆபரேஷன் தியேட்டரின் சிவப்பு விளக்கு சட்டென்று அணைந்தது. அடுத்த சில நொடிகளில், முகமூடியைக் கழற்றியபடி தலைமை மருத்துவர் வெளியே வந்தார். அவரது நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பியிருந்தன.
மயூரா தன் நெஞ்சில் கைகளை இறுக்கிக் கொண்டு, மூச்சடக்கிக் காத்து நின்றாள். பைரவனின் கண்களும் அந்த மருத்துவரைத் துளைத்தன.
“டாக்டர்… ரோலக்ஸ் …?” என்ற பைரவனின் குரலில் எப்போதும் இல்லாத ஒரு பதற்றம் கலந்திருந்தது.
மருத்துவர் தன் கைகளைத் துடைத்துக் கொண்டே ஒரு நிம்மதியான புன்னகையை உதிர்த்தார். “பயப்பட எதுவும் இல்லை. ரோலக்ஸ் உயிருக்கு இப்போதைக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை. ஆனா, முதுகில் விழுந்த கத்திக்குத்து ரொம்ப ஆழமா இறங்கியிருக்கு. கொஞ்சம் தப்பியிருந்தாலும் முதுகெலும்பு பாதிச்சிருக்கும். அதிர்ஷ்டவசமா தப்பிச்சுட்டார். ஆனா, உடம்புல இருந்து நிறைய ரத்தம் வெளியேறியிருக்கிறதால, அவர் பழையபடி எழுந்து நடமாட இன்னும் சில வாரங்கள் ஆகும். அதுவரைக்கும் அவருக்கு முழுமையான ஓய்வு தேவை. எந்த ஒரு மன அழுத்தமும், உடல் ரீதியான உழைப்பும் இருக்கக்கூடாது,” என்றார்.
“ரொம்ப நன்றி டாக்டர்,” என்று மயூரா தன் இரு கரங்களையும் கூப்பி விம்மினாள். அவளது கழுத்தில் இருந்த அந்தப் புதுத் தாலி, அவளது கண்ணீர்த் துளிகளோடு சேர்ந்து மின்னியது.
பைரவனும் மயூராவும் தீவிரச் சிகிச்சைப் பிரிவுக்குள் சென்று, அங்கே மயக்க மருந்து வீரியத்தில் அமைதியாகக் கண்மூடிப் படுத்திருந்த ரோலக்ஸைப் பார்த்தனர். எப்போதும் சிங்கம் போலக் கர்ஜிக்கும் அந்த வெள்ளை வேந்தன், இப்போது படுக்கையில் சலனமற்றுப் படுத்திருப்பதைப் பார்க்கப் பைரவனுக்கு நெஞ்சு பொறுக்கவில்லை.
எனினும், ரோல்க்ஸ் உயிர் பிழைத்துவிட்டது என்ற நிம்மதியோடு “மயூரா, நான் கிளம்புறேன். அண்ணனைப் பத்திரமாப் பார்த்துக்கோ. நான் பாபியோட கோட்டைக்குள்ள நுழையுறேன். அங்க என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு உனக்குத் தகவல் சொல்றேன்,” என்று ரகசியக் குரலில் கூறிவிட்டு
பைரவன் மெல்ல ஆபரேஷன் தியேட்டரின் கதவை ஒருமுறை பார்த்தான். ரோலக்ஸ்க்கு ஒன்றும் இல்லை என்ற நம்பிக்கையோடு, பாபியின் சாம்ராஜ்யத்திற்குள் ஒரு புதிய நாடகத்தை ஆடுவதற்காக அவன் அந்த ரகசிய மருத்துவமனையை விட்டு விறுவிறுவென வெளியேறினான்.
மயூரா எதற்கும் அஞ்சாத ஒரு காவல் தேவதையைப் போல, ரோலக்ஸின் கட்டிலுக்கு அருகிலேயே அமர்ந்து அவனது கைகளைப் பற்றிக் கொண்டாள்.
மறுபுறம், விசாகப்பட்டினத்தின் கடல் பகுதியில் இருந்த பாபியின் குடோனில் ஒரு சுடுகாட்டைப் போலக் காட்சியளித்தது. குடோனில் நடுமுற்றத்தில், தர்மாவின் சிதைந்த சடலம் வைக்கப்பட்டிருந்தது.
“தர்மா… என் தம்பி… உன்னை இப்படிப் பார்க்க வச்சுட்டாங்களேடா!” என்று பாபி தன் தம்பியின் உடலின் மீது விழுந்து கதறி அழுதுகொண்டிருந்தான். அவனது அடியாட்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைகளில் ஆயுதங்களுடன், கண்களில் ரத்த வெறியோடு அந்தச் சடலத்தைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர்.
பாபியின் ராஜ்ஜியத்தில் தர்மா என்பவன் வெறும் அடியாள் அல்ல, அவன் பாபியின் வலது கை, அவனது சொந்தத் தம்பி போன்றவன். அவனது மரணம் பாபியின் ஒரு பக்கப் பலத்தையே உடைத்துவிட்டது போல இருந்தது. துக்கம் ஒருபுறம் இருந்தாலும், பாபியின் நெஞ்சுக்குள் ஆக்ரோஷமான ஒரு எரிமலை வெடித்துக் கொண்டிருந்தது.
“யார்ரா இதைச் செஞ்சது? இந்த விசாகப்பட்டினத்துல நம்ம எல்லையைத் தாண்டி, தர்மா மேல கை வைக்கிற அளவுக்கு எவனுக்குடா தைரியம் வந்தது?” என்று பாபி சிங்கம் போலக் கர்ஜித்தான். அவனது கதிர்வீச்சுப் போன்ற கண்கள் அங்கிருந்த ஒவ்வொரு அடியாள் மீதும் பாய்ந்தன.
அங்கிருந்த அடியாட்களுக்குள் ஒருபுறம் பயமும், மறுபுறம் சந்தேகமும் நிலவியது. “தலைவா … நம்ம எல்லைக்குள்ள இருக்குற அந்தப் பழைய தாதாக்கள் யாராவது லோக்கல் போலீஸோட சேர்ந்து சதி பண்ணியிருப்பாங்களோ?” என்று ஒருவன் சந்தேகத்தைக் கிளப்ப, பாபியின் கோபம் இன்னும் அதிகரித்தது.
“இந்த துறைமுகத்துல இருக்குற மத்த தாதாக்களை எல்லாம் தூக்கிட்டு வாங்கடா! எவன் செஞ்சிருந்தாலும் அவனோட ஒட்டுமொத்தப் பரம்பரையையும் இந்த மண்ணோட மண்ணா புதைக்கிறேன்!” என்று பாபி ஆக்ரோஷமாகக் கத்தினான்.
அதே நேரம் பைரவன் அங்கு வந்தான் …
வேட்டை தொடரும் ..⚓
