Rolex 25

அத்தியாயம் 25

துறைமுகத்தின் அலைகள் கரையில் வந்து மோதும் சத்தம் அந்த இருண்ட இரவில் இன்னும் பயங்கரமானதாகக் கேட்டுக் கொண்டிருந்தது. காற்றில் உப்புக் காற்றோடு, ரத்தத்தின் உறைந்த வாடையும் கலந்திருந்தது. அந்தப் பிரம்மாண்டமான, பாழடைந்த குடோனின் ஒற்றை விளக்கு காற்றில் ஆடிக்கொண்டிருக்க, அங்கே ஒரு போர் மேகமே சூழ்ந்திருந்தது. தர்மாவின் மரண செய்தி கேட்டு பாபியின் கண்கள் சிவந்து, நரம்புகள் புடைக்க நின்றிருந்தான். அவனது ஆக்ரோஷம் குடோனின் சுவர்களில் எதிரொலித்தது.

“யார்ரா இதைச் செஞ்சது? இந்த விசாகப்பட்டினத்துல நம்ம எல்லையைத் தாண்டி, தர்மா மேல கை வைக்கிற அளவுக்கு எவனுக்குடா தைரியம் வந்தது?” என்று பாபி சிங்கம் போலக் கர்ஜித்தான். .

அங்கிருந்த அடியாட்களுக்குள் ஒருபுறம் பயமும், மறுபுறம் சந்தேகமும் நிலவியது. “தலைவா … நம்ம எல்லைக்குள்ள இருக்குற அந்தப் பழைய தாதாக்கள் யாராவது லோக்கல் போலீஸோட சேர்ந்து சதி பண்ணியிருப்பாங்களோ?” என்று ஒருவன் சந்தேகத்தைக் கிளப்ப, பாபியின் கோபம் இன்னும் அதிகரித்தது.

“இந்த துறைமுகத்துல இருக்குற மத்த தாதாக்களை எல்லாம் தூக்கிட்டு வாங்கடா! எவன் செஞ்சிருந்தாலும் அவனோட ஒட்டுமொத்தப் பரம்பரையையும் இந்த மண்ணோட மண்ணா புதைக்கிறேன்!” என்று பாபி ஆக்ரோஷமாகக் கத்தினான். அவனது குரலில் இருந்த வெறி, அங்கிருந்த அவனது ஆட்களைப் பதற வைத்தது. அடுத்த நொடியே, பாபியின் ஆட்கள் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுடன் அங்கிருந்து பல்வேறு வாகனங்களில் சிதறிப் பாய்ந்தார்கள்.

அடுத்த சில மணி நேரங்களில், ஒட்டுமொத்த நகரமும் பாபியின் ஆட்களின் பிடியில் சிக்கித் தவித்தது. அவர்கள் நகரின் மற்றப் பகுதிகளில் இருந்த சிறு தாதாக்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்கள் அனைவரையும் கொடூரமாகத் தாக்கி, வீடுகளில் இருந்தும், மறைவிடங்களில் இருந்தும் மிருகங்களைப் போல இழுத்து வந்து விசாரித்துக் கொண்டிருந்தனர்.

குடோனின் ஒரு மூலையில் பல தாதாக்கள் ஆடைகள் கிழிந்து, முகம் சிதைந்து, ரத்த வெள்ளத்தில் மண்டியிட்டுக் கிடந்தனர். இரும்புக் கம்பிகளாலும், தடிகளாலும் அடிக்கும் சத்தம் குடோன் எங்கும் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டே இருந்தது.

அடி தாங்க முடியாமல், ரத்தக் கறை படிந்த முகத்தோடு ஒரு சிறு தாதா(ஜகா) அலறினான். “அண்ணே… கடவுள் மேல சத்தியமா இதை நாங்க செய்யலைண்ணே! தர்மா மேல கை வைக்கிற அளவுக்கு எங்களுக்குத் துணிச்சல் கிடையாதுண்ணே!” என்று அவர்கள் அலறி அடித்துச் சத்தியம் செய்தனர்.

பாபியின் ஆட்கள் அவர்களை எவ்வளவு சித்திரவதை செய்தும், எந்த ஒரு பலனும் இல்லை. யாரிடமிருந்தும் தர்மாவின் கொலைக்கான எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. யாருமே தர்மாவைக் கொலை செய்யவில்லை என அடித்துச் சத்தியம் செய்யவே, இதை உண்மையில் யார் செய்திருப்பார்கள் என்ற மிகப்பெரிய குழப்பத்திலும் மர்மத்திலும் பாபி மூழ்கினான். அவனது கையில் இருந்த கத்தி மெதுவாகக் கீழே நழுவியது.

‘என் தம்பியை தொட துணிந்த அந்த மறைமுக எதிரி யார்?’ என்ற கேள்வி அவனைப் பித்துப் பிடிக்க வைத்தது.

அங்கு ஒரு இருண்ட மூலையில், நிழல் போல நின்றிருந்த பைரவன் மெதுவாக ஒரு பெருமூச்சு விட்டான். அவனது நெஞ்சுக்கூடு லேசானது. இதுவரை பாபிக்கு ரோலக்ஸ் மீது சந்தேகம் வரவில்லை என்பது அவனுக்கு உறுதியானது. அந்த நிம்மதி அவனுள் இருந்தாலும், அதே நேரம் பாபியை இப்படியே விட்டுவிட்டால் உண்மை தெரிந்துவிடும் என்பதால், அவனைத் திசை திருப்பும் முயற்சியில் இறங்கினான். மெதுவாகப் பாபியின் அருகில் நடந்து வந்து,

“பாபி, இவனுங்களுக்கு அந்தத் தில்லு இல்லை. இது நம்ம எல்லைக்கு வெளிய இருக்கிற பசங்க வேலையாத்தான் இருக்கும், நாம அவங்களை தேடணும்,” என்று தந்திரமாக அவனது கவனத்தை மாற்றினான்.

காலம் அதன் போக்கில் நகர்ந்தது. நாட்கள் கடந்தாலும் தர்மாவின் மரணம் ஏற்படுத்திய வடு அந்தத் துறைமுகத்தில் அப்படியே இருந்தது. தர்மாவிற்குச் செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளும் தகன வேலைகளும் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன், மிகுந்த சோகத்துடன் நடந்து முடிந்தன. எரியும் சிதையின் முன்னே நின்றிருந்த பாபியின் கண்களில் துக்கத்தை விட, அந்தப் புதிரான எதிரியைக் பழிவாங்கும் வெறியே அதிகமாகத் தகித்துக் கொண்டிருந்தது.

இதற்கிடையில், நாட்கள் மெல்ல மெல்லக் கடந்தன. மருத்துவமனையில் இருந்த ரோலக்ஸ், மயூராவின் அரவணைப்பிலும் மருத்துவர்களின் தீவிர சிகிச்சையிலும் கொஞ்சம் தேறி வந்திருந்தான். அவனது காயங்கள் மெல்ல ஆறத் தொடங்கியிருந்தன.

பாபியின் நிழலாகவே அவனது கோட்டையிலேயே தங்கியிருந்த பைரவன், தினமும் நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் அந்த மருத்துவமனைக்கு வந்து ரோலக்ஸை ரகசியமாகப் பார்த்துவிட்டு, அவனது உடல்நிலையை விசாரித்துவிட்டுத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

பாபியின் கோபத்தையும் சந்தேகத்தையும் தன் மீது விழாமல் பார்த்துக் கொள்வதில் பைரவன் மிகவும் சாமர்த்தியமாகச் செயல்பட்டான்.

ஆனால், அன்று ஒரு நாள்…

பைரவன் நள்ளிரவில் ரோலக்ஸைப் பார்த்துவிட்டு, அதிகாலையில் பாபியின் கோட்டைக்குள் நுழைந்தான். நாட்கள் கடந்தும் தன் தம்பியின் கொலையாளியைக் கண்டுபிடிக்க முடியாத விரக்தியிலும் துக்கத்திலும் இருந்த பாபி, சோபாவில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தான். அவனது கண்கள் தூக்கமில்லாமல் சிவந்து போயிருந்தன.

உள்ளே நுழைந்த பைரவனைப் பார்த்ததும், பாபியின் முகம் சட்டென்று மாறியது. அவனது மனதில் ஏதோ ஒரு திடீர் யோசனை உதித்தது போல இருந்தது.

“பைரவா… இங்க வா!” என்று பாபி அதிகாரக் குரலில் அவனை அருகில் அழைத்தான்.

பைரவன் தன் முகத்தில் எந்த ஒரு பதற்றத்தையும் காட்டாமல், எப்போதும் போல விசுவாசத்தோடு அவனது அருகில் சென்று நின்றான். “சொல்லுங்க தலைவா …” என்றான்.

பாபி தன் கையில் இருந்த மதுக் கோப்பையை மேஜை மீது பலமாக வைத்தான். “தர்மா இறந்து இத்தனை நாளாச்சு பைரவா… ஆனா இன்னும் அந்த நாய் எவன்னு ஒரு துப்பும் கிடைக்கல. இந்த ஊர்ல இருக்குற எல்லா பயல்களையும் அடிச்சுப் பார்த்துட்டேன், எவனும் வாயைத் திறக்கல. எனக்கு இப்போ ஒரே ஒருத்தனோட உதவிதான் தேவை,” என்றான் பாபி.

பைரவன் புருவத்தை உயர்த்தினான். “யாரைச் சொல்றீங்க தலைவா ?”

“ரோலக்ஸ்…!” பாபியின் வாய் அந்தப் பெயரை உச்சரித்தபோது அவனது கண்களில் ஒரு புதிய நம்பிக்கை தெரிந்தது.

“ரோலக்ஸ் இப்போ எங்க இருக்கான் பைரவா? அவனை இப்பவே இந்த இடத்துக்கு வரச் சொல்லு!”

பாபியின் இந்தத் திடீர் கேள்வியைக் கேட்டதும், பைரவனின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது போல இருந்தது. அவனது தொண்டைக்குள் எச்சில் வறண்டது. எனினும், அவன் தன் முகபாவனையை மாற்றாமல் அமைதியாக இருந்தான்.

பாபி எழுந்து வந்து பைரவனின் தோள்களைப் பற்றினான். “பைரவா… தர்மாவை விடக் கொடூரமா எவனாலயும் கொலை செய்ய முடியாது. ஆனா, அவனையே ஒருத்தன் மிருகத்தனமா அடிச்சுக் கொன்னிருக்கான்னா, அவன் சாதாரண ஆளா இருக்க முடியாது. இந்த விசாகப்பட்டினத்துல இருக்குற கறுப்புச் சந்தை, இந்தத் துறைமுகம் எல்லாத்தையும் பத்தி ரோலக்ஸுக்கு அக்குவேறு ஆணிவேறா தெரியும். அவனோட உளவு நெட்வொர்க் ரொம்பப் பெருசு. தர்மாவை யாரு கொலை செஞ்சாங்கன்னு கண்டுபிடிக்கிறது ரோலக்ஸால மட்டும்தான் முடியும்!”

ஆக்ரோஷமாக மேலும் தொடர்ந்த பாபி. “அவனை உடனே வரச் சொல்லு. தர்மாவைக் கொன்ன அந்தப் பரம்பரையைக் கண்டுபிடிக்கட்டும். கண்டுபிடிச்சு… அவனைக் கொலை செய்ய வேண்டியது நம்ம ரோலக்ஸோட கடமை! ஏன்னா தர்மா ரோலக்ஸுக்கும் அண்ணன் மாதிரிதானே? என் தம்பியோட கொலைக்குப் பழி வாங்க வேண்டியது அவனோட பொறுப்பு. அவனை உடனே இங்க வரச் சொல்லு!” என்று பாபி தன் உணர்ச்சிகளைக் கொட்டினான்.

பாபியின் அந்த ஆக்ரோஷமான வார்த்தைகளைக் கேட்ட கணத்தில், பைரவனின் உள்ளங்காலில் இருந்து உச்சி மண்டை வரை ஒரு மின்னல் வெட்டிச் சென்றது போலிருந்தது. என்ன சொல்வது, எப்படி இந்தச் சூழ்நிலையைக் கடப்பது என்று தெரியாமல் அவன் மாபெரும் மனத் தடுமாற்றத்தில் ஆழ்ந்தான். அவனது தொண்டை வறண்டுபோக, கைகள் லேசாக நடுங்கின.

‘பாபி… நீ எந்த ரோலக்ஸை வந்து தர்மாவோட கொலையாளியைக் கண்டுபிடிக்கச் சொல்றியோ, அதே ரோலக்ஸ் தான் உன் தம்பி தர்மாவைத் தன் ஒற்றைக் கையால அடிச்சுக் கொன்னான்! அந்த அடியாளுங்க எல்லாரும் உன்கிட்ட அடி வாங்கியும் வாய் திறக்காம இருந்ததுக்குக் காரணமே அந்த ரோலக்ஸ் பேருக்கு இருக்கிற பயம்தான்! அந்த உண்மை மட்டும் உனக்குத் தெரிஞ்சா, நீ இப்போ அவனைத் தேடுற விதமே மாறிடுமே! இந்த நிமிஷமே உன் கத்தி இங்க இருக்கிற எல்லாரையும் விட்டுட்டு அவன் தலையை நோக்கித்தானே பாயும்!’ என்று பைரவனின் உள்மனம் கூக்குரலிட்டது. ஆனால், அந்தத் தவிப்பை அவன் தன் முகத்தில் காட்டிவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்தான்.

இருப்பினும், பைரவனின் இந்தத் திடீர் மௌனத்தையும், அவனது கண்களில் ஒரு நொடி தோன்றி மறைந்த அந்த மாபெரும் தடுமாற்றத்தையும் பாபி தவறவிடவில்லை. அவனது கூர்மையான கண்கள் பைரவனின் அசைவுகளை உற்றுப் பார்த்தன. எப்போதும் சுதாரிப்பாக இருக்கும் பைரவனின் முகத்தில் தெரிந்த அந்த லேசான பயம், பாபியின் மனதில் ஒரு மெல்லிய சந்தேகத்தை அரும்பச் செய்தது.

பாபியின் முகபாவனை மாறுவதைக் கண்டதும் அந்தப் பிரம்மாண்டமான அறைக்குள் நிலவிய அமைதி இன்னும் கனத்தது.

“பைரவா… என்ன ஆச்சு? நான் பேசிட்டு இருக்கேன், நீ என்னடான்னா பதிலே சொல்லாம அமைதியா நிற்குற? உன் முகமே சரியில்லையே…” என்று இழுத்த பாபி, சட்டென்று தன் குரலை உச்சத்துக்கே உயர்த்தி, “ரோலக்ஸ் எங்க இப்போ? அவன் எந்த இடத்துல தலைமறைவா இருக்கான்? அவனை அந்த இடத்துல இருந்து உடனே இங்க வரச் சொல்லுன்னு சொல்றேன்!” என்று கத்தியபடி பாய்ந்து வந்து பைரவனின் சட்டையைப் பற்றி உலுக்கினான்.

பாபியின் கைகள் அவனது சட்டைக் காலரை இறுக்க, அவனது மூச்சுக்காற்று பைரவனின் முகத்தில் சுளீரென்று அடித்தது. அந்த மாளிகையின் பிரம்மாண்டமான அறையின் சுவர்களில் பாபியின் ஆக்ரோஷக் குரல் எதிரொலித்துக் கொண்டே இருக்க, பைரவன் தன் வாழ்நாளின் மிகக் கடினமான, ஆபத்தான சூழ்நிலையில் அசைவற்று நின்றான்.

அவனது மூளை மிக வேகமாக வேலை செய்தது. பாபியின் சந்தேகம் தன் மீது திரும்பாமல் இருக்கவும், அதே சமயம் தர்மாவைக் கொன்ற களைப்பிலும் காயங்களிலும் படுக்கையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தன் ரோலக்ஸைக் காப்பாற்றவும் அவன் இப்போது ஒரு மாபெரும் பொய்யைக் கட்டமைக்க வேண்டியிருந்தது. ஒரு சிறிய பிழை நேர்ந்தாலும், இந்த குடோனை விட்டு அவனது பிணம்தான் வெளியேறும் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். அந்த மரணப் பயத்திற்கு நடுவிலும், தன் முகத்தில் ஒரு போலி சோகத்தையும் விசுவாசத்தையும் வரவழைத்துக் கொண்டு பாபியின் கண்களை நேராகப் பார்க்கத் தயாரானான் பைரவன்.

படுக்கையில் இருக்கும் தன் ரோலக்ஸைக் காப்பாற்றவும் அவன் இப்போது என்ன பொய் சொல்லப் போகிறான்?  அவனது அடுத்த வார்த்தைதான் அந்தச் சாம்ராஜ்யத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகிறது!

வேட்டை தொடரும் ..⚓

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!