Rolex 27

அத்தியாயம் 27

 

அன்று இரவின் கதிர்வீச்சு முற்றிலும் மறைந்து, விசாகப்பட்டினத்தின் புறநகர்ப் பகுதி ஒரு அடர்ந்த இருள் போர்வையைப் போர்த்தியிருந்தது. கடலோரக் காற்றின் ஈரப்பதமும், சுடுகாட்டின் அமைதியும் கலந்திருந்த ஒரு ஒதுக்குப்புறமான கிராமத்து எல்லை அது. அங்கே, மரங்கள் அடர்ந்த புதர்களுக்கு நடுவே ஒரு பழைய, பாழடைந்த குடில் இருந்தது. சுற்றிலும் மனித நடமாட்டமே இல்லாத அந்த இடத்தைத் தான், ரோலக்ஸின் தற்காலிக மறைவிடமாகப் பைரவன் தேர்ந்தெடுத்திருந்தான். மருத்துவமனையின் ஆபத்து தெரிந்ததால், அவசர அவசரமாக இங்கே மாற்றியிருந்தான்.

இருண்ட காட்டுப் பாதை வழியே தன் வண்டியை வெகு தூரத்திலேயே நிறுத்திவிட்டு, காலடிச் சத்தம் கூடக் கேட்காதவாறு பைரவன் நடந்து வந்தான். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும், தன் பின்னால் யாராவது பாபியின் ஆட்கள் நோட்டம் விடுகிறார்களா என்று நாலாபுறமும் தன் கூர்மையான கண்களால் உற்றுப் பார்த்துக் கொண்டே வந்தான். பாபியின் ஆட்களோ அல்லது சந்துருவின் போலீஸ் படையோ தன் நிழலைத் தொடரவில்லை என்பதை முற்றிலும் உறுதிப்படுத்திக் கொண்ட பின்புதான், அவன் அந்தப் பாழடைந்த குடிலின் வாசலை நெருங்கினான்.

சுற்றிலும் ஒருமுறை திருட்டுத்தனமாகப் பார்த்துவிட்டு, குடிலின் மரக்கதவை ஒரு குறிப்பிட்ட ரகசியக் குறியீட்டுச் சத்தத்தோடு மென்மையாகத் தட்டினான்.

‘டக்… டக்… டக்…’

அந்த நிசப்தமான இரவில் அந்தச் சத்தம் லேசாக எதிரொலித்தது. சிறிது நேரம் குடிலுக்குள் எந்த அசைவும் இல்லை. உள்ளே மூச்சடக்கி யாரோ காத்திருப்பது பைரவனுக்குப் புரிந்தது. சில நொடிக் தாமதத்திற்குப் பின், கதவின் இடுக்கில் இருந்த சிறிய துளை வழியே ஒரு ஜோடி கண்கள் வெளியே எட்டிப் பார்த்தன. வெளியே நிலவொளியில் கைகளில் பைகளோடு நிற்பது பைரவன் தான் என்பதை அந்த விழிகள் உறுதிப்படுத்திக் கொண்டன.

மெதுவாக, எந்த ஒரு சத்தமும் வராதவாறு கதவு திறந்தது. உள்ளே கையில் ஒரு சிறிய விளக்குடன் நின்று கொண்டிருந்தது மயூரா. அவளது முகத்தில் இருந்த பயமும் பதற்றமும் பைரவனைக் கண்டதும் சற்றே தணிந்தன.

“வாங்க அண்ணே…” என்று மயூரா தன் குரலைத் தாழ்த்தி, அவசரமாக அவனை உள்ளே அழைத்தாள்.

பைரவன் விறுவிறுவென உள்ளே நுழைந்ததும், அவள் கதவை மீண்டும் தாழ்ப்பாள் போட்டு இறுக்கினாள். தன் கையில் இருந்த சில அத்தியாவசிய மளிகைப் பொருட்கள், மருந்துவ மருந்துகள், பழங்கள் அடங்கிய பைகளை அவளிடம் கொடுத்தான் பைரவன்.

“மயூரா… ரோல்க்ஸ் இப்போ எப்படிமா இருக்கான்? காயம் ஏதும் வலிக்கிதா? டாக்டர் கொடுத்த மாத்திரையை எல்லாம் கரெக்டா சாப்பிட்டானா?” என்று கவலையோடு மெல்லிய குரலில் கேட்டுக் கொண்டே குடிலின் உள்நோக்கி நடந்தான்.

ஒரு பெருமூச்சை விட்ட மயூரா, அந்தப் பைகளை ஒரு ஓரமாக வைத்தபடி அவனோடு நடந்தவள். “ம்ம்ம்… உடம்பு இப்போ கொஞ்சம் கொஞ்சமா தேறிட்டு தான் வருது அண்ணே. கத்தியிறங்குன காயம் ஓரளவுக்கு ஆறிடுச்சு. ஆனா… மனுஷன் ஒரு இடத்துல நிம்மதியா படுக்க மாட்டேங்குறாரு. ‘நான் இப்போவே வெளியே போகணும், இந்த நாலு செவுத்துக்குள்ள என்னால அடைஞ்சு கிடக்க முடியாது, அங்க பாபி என்ன பண்றான்னு பார்க்கணும்’னு ரொம்ப அடம் பிடிக்கிறாரு அண்ணே. என்னால அவரோட கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியல,” என மயூரா தன் கவலையைக் கொட்டினாள்.

அவள் சொல்வதைக் கேட்டுத் தலையாட்டிக்கொண்டே நடந்த பைரவனின் முகத்தில் ஒரு விசித்திரமான முதிர்ச்சியும் தீவிரமும் தெரிந்தன. அவன் மெதுவாக, “மயூரா, ரோலக்ஸ் அடம் பிடிக்கிறதுலயும் ஒரு நியாயம் இருக்கு. எனக்கென்னமோ அவன் வெளியே வர்றதுக்கான நேரமும் வந்துட்டா போல தான் தோணுது. பாபியோட கோட்டையில இப்போ காய்கள் எல்லாம் வேற மாதிரி நகர ஆரம்பிச்சிருக்கு,” என்று சொல்லிக் கொண்டே, ரோலக்ஸ் படுத்திருந்த அந்த உள் அறைக்குள் நுழைந்தான்.

பைரவன் சொன்ன அந்த வார்த்தைகள் மயூராவின் நெஞ்சில் ஒரு புதிய பயத்தைக் கிளப்ப. “என்ன… என்ன சொல்றீங்க அண்ணே? பாபிக்கு ஏதாவது தெரிஞ்சிடுச்சா?” எனக் கேட்டுக் கொண்டே பதற்றத்துடன் பின்னாலேயே வந்த மயூராவும் பைரவனைத் தொடர்ந்து அந்த இருண்ட அறைக்குள் நுழைந்தாள்.

அந்தச் சிறிய அறையின் நடுவே இருந்த ஒரு மரக் கட்டிலில், நெற்றியில் லேசான வியர்வையோடு அமர்ந்திருந்தான் ரோலக்ஸ். அவனது பிரம்மாண்டமான உடம்பில் இன்னும் சில கட்டுகள் இருந்தன. ஆனால், அவனது கண்களில் இருந்த அந்த அசுரத்தனமான உக்கிரம் இன்னும் குறையவில்லை. வாசலில் பைரவனின் குரல் கேட்டதுமே அவன் அலர்ட் ஆகியிருந்தான்.

பைரவனைப் பார்த்ததும் ரோலக்ஸின் முகத்தில் ஒரு நிம்மதியான புன்னகை அரும்பியது. தன் நண்பனை கண்ட சந்தோஷத்தில், உடலின் வலியைப் பொறுத்துக் கொண்டு கட்டிலில் சற்றே நிமிர்ந்து அமர்ந்தான்.

ஆனால், அடுத்த கணமே அவனுக்குள் இருந்த அந்தப் போர் வீரன் விழித்துக் கொள்ள,  பைரவன் அருகில் வந்ததும், ரோலக்ஸ் அவனது கைகளைப் பற்றிக் கொண்டு, “பைரவா… என்ன நடந்துகிட்டு இருக்கு அங்க? துறைமுகத்துல என்ன நடக்குது? தர்மா செத்த விஷயம் வெளியே தெரிஞ்சிடுச்சா? பாபி ஏதாவது சொன்னானா… நான் தான் தர்மாவைத் அடிச்சுக் கொலை பண்ணுனேன்னு பாபிக்கு ஏதாவது விஷயம் அரசல் புரசலா தெரிஞ்சிருக்கா? அவன் நம்ம மேல சந்தேகப்படுற மாதிரி ஏதாவது நடந்ததாடா?” என ரோலக்ஸ் தன் மனதில் இருந்த அத்தனை பயத்தையும், பதற்றத்தையும், வேகத்தையும் தன் சைகையாலும் வாயசைவிலும் கொட்டி, அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினான்.

எப்போதும் எதற்கும் அஞ்சாத ரோலக்ஸ், தன் நண்பனின் முன்னால் தன் பலவீனத்தையும், பாபியின் சாம்ராஜ்யம் உடைந்துவிடுமோ என்ற பதற்றத்தையும் மறைக்காமல் காட்டினான்.

ஆனால் பைரவன் மிகவும் நிதானமாக இருந்தான். அவன் ரோலக்ஸின் தோள்களைத் தன் கைகளால் மென்மையாகத் தட்டி, அவனது பதற்றத்தைக் குறைத்தான். “ரோலக்ஸ் … முதல்ல அமைதியா இரு. உன் உடம்புக்கு இப்போ இவ்வளவு வேகம் ஆகாது,” என்று சமாதானப்படுத்தியவன், அருகில் கிடந்த ஒரு பழைய மர நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு ரோலக்ஸின் கட்டிலுக்கு மிக அருகில் அமர்ந்தான்.

மயூரா இருவருக்கும் நடுவே கைகளைக் கட்டிக் கொண்டு, அடுத்து பைரவன் சொல்லப்போகும் அந்தப் பயங்கரமான உண்மைகளைக் கேட்கத் தயாராக நின்றாள்.

பைரவன் ரோலக்ஸின் கண்களை நேருக்கு நேர் பார்த்தான். “ரோலக்ஸ் … நீ பயப்படுற மாதிரி அங்க எதுவுமே நடக்கல. தர்மாவைக் கொலை பண்ணுனது நீ தான் அப்படின்ற உண்மை இந்த உலகத்துல இப்போதைக்கு எனக்கும், மயூராவுக்கும், மட்டும்தான் தெரியும். பாபிக்கு இதைப்பத்தி ஒரு சதவீத சந்தேகம் கூட இல்லை,” என்றான்.

ரோலக்ஸ் ஆச்சரியத்துடன் தன் புருவங்களை உயர்த்தினான். “அப்போ பாபி தர்மா பிணத்தை வச்சுட்டு சும்மாவா இருக்கான்? அவன் கொலையாளியைத் தேடலையா?” என்று கேட்டான்.

“தேடுறான் .. அதும் வெறித்தனமா தேடுறான்,” என்று பைரவன் கசப்புடன் சிரித்தவன்,

“விசாகப்பட்டினத்துல இருக்குற மத்த சின்னச் சின்ன தாதாக்களை எல்லாம் அவனோட ஆளுங்க தூக்கிட்டு வந்து ரத்தம் வர்ற அளவுக்கு அடிச்சுப் பார்த்தாங்க. ஆனா செஞ்சவன் நீங்கன்றதால, மத்த எவனுக்கும் இதோட துப்பு கிடைக்கல. எல்லாரும் தாங்க செய்யலைன்னு அடிச்சுச் சத்தியம் பண்ணவும், பாபி இப்போ ஒண்ணுமே புரியாம மாபெரும் குழப்பத்துல இருக்கான். தர்மாவோட இறுதிச் சடங்கு எல்லாம் முடிஞ்சிடுச்சு .” என்று பைரவன் சொல்லவும், ரோலக்ஸும் மயூராவும் ஒருவரையொருவர் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டனர்.

“ஆனா ரோலக்ஸ்… நீ நினைக்கிற மாதிரி அங்க நிலைமை அவ்வளவு சாதாரணமா இல்ல. அங்க காரியங்கள் எல்லாமே முற்றிலும் வேற மாதிரி போய்கிட்டு இருக்கு…” என்று அவன் குரலைத் தாழ்த்தி, எச்சரிக்கும் தொனியில் சொன்னான்.

“என்ன… என்ன ஆச்சு பைரவா?” என்று ரோலக்ஸ் தன் புருவங்களைச் சுருக்கிக் கேட்டான். அவனது முகத்தில் இருந்த அந்த மிதப்பு சட்டென்று மறைந்து, மீண்டும் ஒரு தற்காப்பு உணர்வு மேலோங்கியது.

அருகில் நின்றுகொண்டிருந்த மயூராவும், என்ன நடக்கிறது என்று புரியாமல் தன் கைகளை இறுக்கிக் கொண்டு பைரவனின் கண்களையே உற்றுப் பார்த்தாள். இருவரின் பார்வையும் தன் மீது குவிகையில், பைரவன் நாற்காலியில் சற்றே முன்னோக்கி நகர்ந்து அமர்ந்தான்.

“ரோலக்ஸ், நான் முதல்லயே சொன்ன மாதிரி பாபிக்கு உன் மேல இப்போதைக்குக் கொஞ்சம் கூட, ஒரு சதவீத சந்தேகமே இல்ல. அதுல எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனா, அங்க உள்ளுக்குள்ள என்ன நடக்குது தெரியுமா? பாபி, தர்மாவை கொடூரமா கொலை பண்ணுனது யாரோ… அவங்களைக் கண்டுபிடிச்சு, அவங்களைத் தீர்த்துக் கட்டுற ஒட்டுமொத்தப் பொறுப்பையும் உன்கிட்டதான் கொடுக்கணும்னு ஒத்தக்கால்ல நிற்குறான்!” என்றான் பைரவன்.

ரோலக்ஸ் ஒரு நொடி அப்படியே உறைந்து போனான். அவனுக்கு இதனை நம்ப முடியவில்லை. தன் கைகளை காற்றில் தூக்கியபடி, “புரியல பைரவா… என்ன சொல்ற நீ? தர்மாவைக் கொன்ன கொலையாளியைப் பழிவாங்குற பொறுப்பை என்கிட்ட கொடுக்கிறானா? என்ன விளையாடுறியா?” என்று புரியாமல் கையைத் தூக்கி செய்கை செய்தான்.

பைரவன் தன் முகத்தில் எந்த ஒரு கேலியும் இல்லாமல், மிகவும் அழுத்தமாகச் குரலில், “ம்ம்ம் நான் விளையாடல ரோலக்ஸ். இதுதான் அங்கே நடந்த நிஜம். நீ இங்க தர்மாவை உன் கையால அடிச்சுக் கொலை பண்ணி முடிச்சிட்டதா நெனச்சுக்கிட்டு, நிம்மதியா இங்க படுத்துக் கிடக்குற. ஆனா அங்க பாபியோ, தன் தம்பி தர்மாவைக் கொலை பண்ணுன அந்தப் பாதகன் யாருன்னு உலகத்தோட எந்த மூலையில இருந்தாலும் சரி, அதைத் தன் உளவு நெட்வொர்க்கை வச்சுக் கண்டுபிடிக்கிற தகுதி நம்ம ரோலக்ஸுக்கு மட்டும்தான் இருக்குன்னு நம்புறான். அதை அவன்கிட்டயே ஒப்படைக்கணும்னு என்கிட்ட ரொம்ப ஆவேசமாச் சொல்லிட்டு இருக்கான். தர்மாவைக் கொன்னவனை ரோலக்ஸ் தன் கையாலேயே சிதைக்கணும், அது ரோலக்ஸோட கடமைனு பாபி கர்ஜிக்கிறான்,” என்றான்.

இதைக் கேட்டதும் ரோலக்ஸும் மயூராவும் ஒருவரையொருவர் மாபெரும் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டனர்.

“என்னது…!” என்று மயூராவின் வாயிலிருந்தும் ஒரே நேரத்தில் அந்த வார்த்தை உதிர்ந்தது.

“ஆமா ரோலக்ஸ்…” என பைரவன் ஒரு பெருமூச்சை விட்டான். “அதுவரைக்கும் பாபிக்கு உன் மேல கொஞ்சம் கூடச் சந்தேகம் வரலன்றது எனக்கு நல்லாவே தெரியுது. அவன் உன்னை அவ்வளவு தூரம் தன் சொந்தத் தம்பியை விட அதிகமா நம்புறான். அதனாலதான், இப்படி ஒரு விசித்திரமான பொறுப்பை உன்கிட்ட கொடுக்கணும்னு நினைக்கிறான். ஆனா, அந்த உண்மைதான் நமக்குப் பெரிய ஆபத்தா வந்து நிற்குது.”

ரோலக்ஸ் தன் நெற்றியைத் தடவிக் கொண்டே, “விளக்கமாச் சொல்லு பைரவா… காலையில என்ன நடந்தது?” என்றான் பதற்றத்துடன்.

“இன்னைக்குக் காலையில கோட்டையில வச்சு திடீர்னு பாபி உன்னைப்பத்தி விசாரிக்க ஆரம்பிச்சான் அண்ணே. தர்மா செத்த துக்கத்துல இருந்தவன், திடீர்னு உன்னோட போன் ஏன் சுவிட்ச் ஆப்-ல இருக்கு, உன்னோட ஆளுங்க ஏன் இங்க இல்லை, நீ இப்போ எங்க இருக்கன்னு அடுக்கடுக்கா கேள்வி கேட்க ஆரம்பிச்சான். எனக்கு ஒரு நொடியில ஒண்ணுமே புரியல. நெஞ்சுல ரத்தம் உறைஞ்சு போச்சு. அவன்கிட்ட உண்மையைச் சொல்லவும் முடியாது, மழுப்பவும் முடியாது. அந்த இக்கட்டான சூழ்நிலையில என்ன சொல்றதுன்னு தெரியாம, பதற்றத்துலதான்… உடனே உனக்கும் மயூராவுக்கும் கல்யாணம் ஆகிடுச்சுன்னு வாய்க்கு வந்தபடி ஒரு கதையை அடிச்சிவிட்டேன் ,” என்றான் பைரவன்.

பைரவன் அந்த வார்த்தையைச் சொல்லி முடித்த அடுத்த கணமே… அதுவரை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த மயூரா, திடீரென்று பாய்ந்து வருவது போலப் பைரவனின் அருகில் வந்தவளது முகம் பயத்தால் அப்படியே வெளுத்துப் போயிருந்தது.

“அண்ணா! என்ன அண்ணா சொல்றீங்க? பாபிகிட்ட போய் எங்க கல்யாணத்தைப் பத்தி சொல்லிட்டீங்களா? ஐயோ… எங்களுக்கு உண்மையிலேயே கல்யாணமானது அந்தப் பாபிக்குத் தெரிஞ்சா… ஒருவேளை அவங்க எங்களை என்ன பண்ணுவாங்கன்னு உங்களுக்குத் தெரியாதா? ..

எங்க அப்பா ஒரு போலீஸ் அதிகாரி. அவரோட கண்ணுல மண்ணைத் தூவிட்டு நாங்க இங்க பதுங்கியிருக்கோம். இப்போ பாபிக்கும் இந்த விஷயம் தெரிஞ்சா, எங்களை வாழவிடுவானா அண்ணா? எதுக்காக அப்பிடி ஒரு பொய்யைச் சொன்னீங்க?” என்று அவள் பதற்றத்தில் தன் கைகளை நடுங்கவிட்டபடி, வார்த்தைகளை வேகமாகத் கொட்டினாள், அவளது நெஞ்சு பயத்தால் வேகமாக ஏறி இறங்கியது.

மயூராவின் இந்தத் திடீர் ஆவேசத்தையும் பதற்றத்தையும் பார்த்த பைரவன், மென்மையாகச் சிரித்தான். அவளது பயத்தில் இருக்கும் நியாயம் அவனுக்குப் புரிந்தது.

பைரவன் தன் முகத்தில் இருந்த சிரிப்போடே, மெதுவாகத் தன் பாக்கெட்டுக்குள் கையை நுழைத்தவன். அதனை எடுத்து வெளியே வைத்தான் …

வேட்டை தொடரும் ..⚓

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!