அத்தியாயம் 29
மீண்டும் இன்று
வங்காள விரிகுடாவின் பிரம்மாண்டமான அலைகள் கரையை முட்டும் சத்தம், ஒரு ராட்சத இருண்ட மிருகம் பசியோடு சீறுவதைப் போல அந்தப் பகுதி முழுவதையும் அதிரச் செய்து கொண்டிருந்தது.
அந்தப் பேரிரைச்சலுக்கு நடுவே, பைரவரின் வெள்ளை நிற கார் சாலையைக் கீறிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. உள்ளே இருந்த பைரவனின் கண்கள், கடலலைகளை பார்ப்பதை விட அவனது கடந்த கால வஞ்சம்கொண்ட நினைவுகளையே வெறித்துக் கொண்டிருந்தன.
“ரோலக்ஸ்…” என்று அந்தப் பெயரை பைரவன் தன் நாக்கில் உச்சரித்தபோதே அவனது தொண்டைக்குள் ஆத்திரம் பிதிர்ந்தது. கண்ணாடியை லேசாக இறக்கிவிட்டு, கடலில் இருந்து வீசிய உப்புக்காற்றைத் தன் முகத்தில் வாங்கிக்கொண்டே,
“ரோலக்ஸ் .. நீ அன்று மட்டும் நான் சொன்ன பேச்சைக் கேட்டு முடிவு எடுத்திருந்தா… இன்னைக்கு என்னுடைய உலகமே வேற மாதிரி இருந்திருக்கும்டா.. ! இந்த மொத்த கடத்தல் சாம்ராஜ்யமும், இந்த அதிகாரமும் அன்னைக்கே என் கால் அடியில வந்திருக்கும். ஆனா, அன்னைக்கு நீ எடுத்த அந்த ஒரு அதிரடி முடிவால… எல்லாத்துக்கும், எல்லாருக்குமே ராஜா ஆகி உச்சத்துல போய் உட்கார்ந்துட்ட!”
“உன்னோட அந்த அசுர வளர்ச்சிக்கு முன்னாடி வேற வழி இல்லாம, நான் உனக்கு அடியாளா, வெறும் நிழலா வாழ வேண்டியதாகிடுச்சு. ஆனா, காலம் எப்பவும் ஒரே மாதிரி இருக்காதே… இப்போ காலம் மாறிடுச்சு! உன் சாம்ராஜ்யம் இப்போ சரிஞ்சு கிடக்கு. இந்த பிரம்மாண்டமான உலகம் இப்போ என் கைக்கு வந்து சேர்ந்திருக்கு.”
“ஆனா… இந்த உலகத்தை நான் முழுசா அனுபவிக்கிறதுக்கு குறுக்கே, அந்த ஜகா ஒரு நரி போல சுத்தி சுத்தி வர்றான். நைஸா காய்களை நகர்த்தி, என் கைக்கு வந்த சாம்ராஜ்யத்தைப் பறிக்கப் பார்க்குறான்” .
“அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை… சீக்கிரம் அவனுக்கும் சேர்த்து ஒரு நிரந்தரமான முடிவைக் கட்டுறேன்! இந்த நரியை எப்படி வேட்டையாடணும்னு எனக்குத் தெரியும். ஜகாவை இந்த வழியில இருந்து தூக்கி எறிஞ்சிட்டு… இந்த ஒட்டுமொத்த கடல் சாம்ராஜ்யத்துக்கும், இந்த பாதாள உலகத்துக்கும் ஒரே ராஜாவா இந்த பைரவன் நானே ஆகி காட்டுறேன்டா! இது என் சபதம்!” என்று ஆக்ரோஷமாக முடிவெடுத்தான்
அந்தப் பக்கத்தில் இருந்த அலைகளின் சீற்றத்தையும் மிஞ்சுவதாக இருந்தது. பைரவனின் அந்தப் பயங்கரமான சபதத்தோடு, அவனது வண்டி அந்த இருண்ட இரவை நோக்கி, தன் அடுத்த வேட்டையைத் தேடி சீறிக்கொண்டு சென்றது.
பைரவனின் வெள்ளை நிறக் கார் அந்தப் பாழடைந்த தொழிற்சாலையை விட்டுப் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, ஜகா ரெட்டியின் கண்கள் இன்னும் குரூரமாக மாறின. தன் கையில் இருந்த அந்த இரும்புச் சுத்தியலை மேஜை மீது ‘டேங்’ என்ற சத்தத்துடன் வீசி எறிந்தவன், சிகரெட்டின் சாம்பலைத் தட்டிவிட்டுத் தன் அடியாட்களைப் பார்த்தான்.
“டேய் ரங்கா… பைரவன் கிளம்பிட்டான்ல? இப்போ நான் சொல்றத நல்லா காதுல வாங்கிக்கோ,” ஜகாவின் குரல் அந்தப் பாழடைந்த அறையின் சுவர்களில் மோதி எதிரொலித்தது.
“பைரவன் தன்னை இந்த ஹார்பருக்கு ராஜான்னு நினைச்சுட்டு இருக்கான். ரோலக்ஸ் இல்லாத இந்த நேரத்துல அவன்தான் அடுத்த வாரிசுன்னு அவனுக்குள்ள ஒரு கர்வத்தை ஏத்தி வச்சிருக்கேன். ஆனா அவனுக்குத் தெரியாது, இந்த ஜகா ரெட்டி யாருக்கும் அடிமையாகவோ, இல்ல கூட்டாளியாகவோ இருக்கப் பிறந்தவன் இல்லனு! அந்த Norway Black Market Cargo Ship கரைக்கு வந்ததும், அதுல இருக்குற Unregistered Shipment முழுசும் நம்ம Container யார்டுக்குத் தான் வரணும். அதுல ஒரு பைசா கூட பைரவனுக்குப் போகக் கூடாது.”
“அப்போ மந்திரிக்குக் கொடுக்க வேண்டிய அந்த 20 கோடி ரூபாய் அண்ணே?” ரங்கா பயத்துடன் கேட்க
“மந்திரிக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை இப்போதைக்கு பைரவன் கையாலேயே கொடுக்க வைப்போம். போலி ஆவணங்கள் எல்லாமே பைரவனோட பேர்லதான் தயார் ஆகியிருக்கு. ஒருவேளை இந்த Illegal Transit விஷயம் வெளிய தெரிஞ்சா, போலீஸும் கஸ்டம்ஸும் பைரவனைத்தான் தூக்குவாங்க. நாம பின்னால இருந்து மொத்த சாம்ராஜ்யத்தையும் நம்ம Underground Network மூலமா ஆளலாம்,” என்று ஜகா தனது அசுரத்தனமான திட்டத்தைக் கூறிவிட்டு வக்கிரமாகச் சிரித்தான்.
மறுபுறம், துறைமுகத்தின் DC அலுவலகத்தில்
சந்துரு இன்னும் வீட்டிற்குச் செல்லாமல் அமர்ந்திருந்தான். அவனது மேஜை முழுவதும் அந்த அதிகாலையில் கொல்லப்பட்ட தொழிலாளியின் புகைப்படங்களும், துறைமுகத்தின் ரகசிய வரைபடங்களும் சிதறிக்கிடந்தன. ஏசியின் மெல்லிய சத்தத்தைத் தவிர அந்த அறையில் வேறு எந்த ஓசையும் இல்லை.
“சந்துரு… இன்னும் நீ கிளம்பலையா? ” என கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்த கணேஷின் கைகளில் இரண்டு காபி கப்புகள் இருந்தன..
“டேய் நான் உன்கிட்ட ஏற்கனவே சொன்னதுதான், இது ஜகா ரெட்டியோட ஏரியா. இங்க ரவுடித்தனம் தான் சட்டம். நீ எவ்வளவு பெரிய ஆபிசரா இருந்தாலும், இந்த சிஸ்டத்தை உன்னால மாத்த முடியாது. அந்த மந்திரி முதல் லோக்கல் போலீஸ் வரை எல்லாரும் அவங்க பாக்கெட்ல இருக்காங்க,” என்று காபி கப்பை நீட்டியபடி சொல்ல
காபியை வாங்கிக் குடித்துவிட்டு, கண்களை மூடி யோசித்த சந்துரு. “கணேஷ்… நீ பயப்படுறது எனக்குப் புரியுது. ஆனா ஒரு கொடூரமான கொலையை விபத்துன்னு சொல்லி என்னால ஃபைலை மூட முடியாது. அந்தத் தொழிலாளியோட மொபைல் போன் ரெக்கார்ட்ஸை நான் ரகசியமா செக் பண்ணேன். அவன் சாகுறதுக்கு முன்னாடி பழைய ACP சர்மாவுக்கு ஒரு மெசேஜ் அனுப்பியிருக்கான்.
அதுல ‘நார்வே கப்பல், கன்டெய்னர் யார்டு 4, Offshore Transfer அப்படின்ற வார்த்தைகள் இருக்கு. இது ஏதோ சாதாரண கடத்தல் இல்ல கணேஷ். ஏதோ ஒரு மிகப்பெரிய Warehouse நோக்கிப் போற சட்டவிரோதப் போக்குவரத்து!”
கணேஷின் முகம் சட்டென்று வெளுத்தது. “சந்துரு… நீ ரொம்பத் தூரம் போயிட்டு இருக்க. ஏசிபி சர்மாவோட பேரை இனிமே இங்க பயன்படுத்தாதே. ரோலக்ஸ் இருந்தப்போ சர்மாவோட ஆட்டம் பலமா இருந்தது. ஆனா இப்போ ரோலக்ஸ் செத்துட்டான், சர்மாவும் தலைமறைவு. இப்போ ஜகாவும் பைரவனும் சேர்ந்திருக்காங்க. இவங்களை எதிர்க்க அரசாங்கத்தாலயே முடியாது,” என்று எச்சரித்தான்.
“பார்ப்போம் கணேஷ்… இந்த சந்துரு யாருன்னு அந்த ஜகா ரெட்டிக்கும் புரிய வைக்கிறேன், அந்தப் பைரவனுக்கும் புரிய வைக்கிறேன்,” என்று சந்துருவின் கண்கள் துப்பறியும் உக்கிரத்துடன் மின்னின.
அதே நள்ளிரவில், கடலின் நடுவே மிதந்து கொண்டிருந்த அந்தப் பிரம்மாண்டமான சொகுசுக் கப்பலின் அறையில், விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன. ஜன்னல் திரைச்சீலைகளின் வழியே ஊடுருவிய நிலவொளி, மயூராவின் முகம் மற்றும் ரோலக்ஸின் கண்களுக்கு மென்மையாகப் பட்டது.
மயூராவின் தலைமுடி இன்னும் அவிழ்ந்த நிலையில், ரோலக்ஸின் அகன்ற மார்பில் அருவி போலப் படர்ந்திருந்தது. அவனது கட்டுப்போடப்பட்ட கைகள் அவளைத் தன் உடலோடு இறுக அணைத்திருக்க, மயூராவின் இதழ்கள் அவனது கழுத்து வளைவுகளில் மென்மையாகப் பதிந்து அவனது இதயத் துடிப்பை ரசித்துக் கொண்டிருந்தன.
“ரோலக்ஸ்…” மயூராவின் உதடுகள் மெல்லிய குரலில் முணுமுணுத்தது . “உன் மனசு இன்னும் அங்கேதான் இருக்கா? விசாகப்பட்டினத்துல என்ன நடக்குதுன்னு உன் மூளை யோசிச்சுட்டே இருக்கு, அப்படித்தானே?”
ரோலக்ஸ் அவளது கார்கூந்தலைத் தன் விரல்களால் கோதிவிட்டு, அவளது நெற்றியில் ஆழமாக முத்தமிட்டவன். “மயூரா… என் நிழலா இருந்த பைரவன் இப்போ என்னைத் தேட மாட்டான்னு எனக்குத் தெரியும். ஏன்னா, நான் செத்துட்டேன்னு அவன் நம்பணும்னுதான் நான் ஆசைப்பட்டேன். ஆனா, ஜகா ரெட்டி… அவன் ஒரு ஆபத்தான மிருகம். பைரவனைக் பகடைக்காயா வச்சு அவன் என் சாம்ராஜ்யத்தையே அழிக்கப் பார்ப்பான்.”
“அழிக்கட்டும் ரோலக்ஸ்,” மயூரா அவன் கண்களை நேராகப் பார்த்தாள். “நாமதான் இந்த ரத்த உலகத்தை விட்டு வெளிய வந்துட்டோமே. இனிமே நமக்காக, நம்ம சாருவுக்காக ஒரு புது வாழ்க்கை வாழலாம்னு எட்வர்ட் சொன்ன வழியில போறோம். அப்புறம் ஏன் அந்தப் பழைய நினைவுகள்?”
கட்டிலை விட்டு எழுந்து வந்த ரோலக்ஸ், ஜன்னலுக்கு வெளியே தெரிந்த எல்லையற்ற கருகரு கடலையே வெறித்துப் பார்த்தான். அவனது கண்களில் அந்தப் பழைய வேந்தனின் உக்கிரம் மீண்டும் தலைதூக்கியது.
“மயூரா… நான் அமைதியா இருக்கணும்னுதான் நினைக்கிறேன். ஆனா நான் உருவாக்கிய அந்த சாம்ராஜ்யம், என் தொழிலாளர்கள்… அவங்களை ஜகா ரெட்டி சிதைக்கிறதை என்னால சும்மா பார்க்க முடியாது. எட்வர்ட் நமக்கு உதவி செய்றதுக்கு பின்னாலயும் ஒரு பெரிய பிளான் இருக்கு. இன்னும் இரண்டு நாட்களில் அந்த Norway Black Market Cargo Ship விசாகப்பட்டின ஹார்பருக்குத் தான் போகுது. அதுல இருக்குற கன்டெய்னர்கள் இறங்கும்போது, அங்க ஒரு பெரிய போர் வெடிக்கும். அதுதான் எனக்கும் பைரவனுக்கும் இருக்குற கடைசி கணக்கா இருக்கும்!” என செய்கை செய்தான்
பின்னாலே எழுந்து வந்த மயூரா அவனது முதுகில் தன் முகம் புதைத்துக் கொண்டவள், அவனை இறுக அனைத்துக் கொண்டாள், “நீ எந்தப் போருக்குப் போனாலும், உன் பின்னாடி இந்த மயூரா ஒரு கேடயமா இருப்பா ரோலக்ஸ். ஆனா இப்போ… இந்த இரவு நமக்கானது,” என்று அவனது இதழ்களைத் தன் இதழ்களால் சிறைபிடித்தாள். கப்பலின் தாலாட்டும், கடலின் ஆழமும் அவர்களின் பிரிக்க முடியாத காதலுக்குச் சாட்சியாக நீடித்தன.
விசாகப்பட்டினம் துறைமுகத்தின் கப்பல் கட்டும் யார்டில் அடுத்த இரண்டு நாட்களும் பரபரப்பாகக் கழிந்தன. ஜகா ரெட்டியின் ஆட்கள் போலி ஆவணங்களை கஸ்டம்ஸ் அலுவலகத்தில் சமர்ப்பித்து, அந்தப் பதிவு செய்யப்படாத சரக்குகளை உள்ளே கொண்டு வருவதற்கான அனைத்து வேலைகளையும் முடித்திருந்தனர்.
மந்திரிக்குக் கொடுக்க வேண்டிய பணப் பெட்டியைப் பைரவனின் ஆட்கள் ரகசியமாகச் சென்னைக்குக் கொண்டு சென்று சேர்த்திருந்தனர். மேலிடத்து மந்திரி பச்சைக்கொடி காட்டியதால், உள்ளூர் போலீஸாரும் கஸ்டம்ஸ் அதிகாரிகளும் கன்டெய்னர் யார்டு 4 பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை. ஒட்டுமொத்த ஹார்பரும் ஜகா மற்றும் பைரவனின் கட்டுப்பாட்டுக்குள் முடங்கியிருந்தது.
அன்று இரவு, அந்த நார்வே கறுப்புச் சந்தை சரக்குக் கப்பல் விசாகப்பட்டினத்தின் கடலோர எல்லையை அடைந்தது. கடலுக்கு நடுவே, Offshore Transfer மூலமாக ராட்சதப் பெட்டிகள் கடத்தற்படகுகளில் மாற்றப்பட்டன. நள்ளிரவு இரண்டு மணிக்கு, அந்தப் பெரிய Containers யார்டில் வந்து இறங்கின.
ஜகா ரெட்டியும் பைரவனும் தங்களின் அடியாட்களுடன் அங்கே நின்றுகொண்டிருந்தனர். “பார்த்தாயா பைரவா… நம்முடைய திட்டம் நூறு சதவீதம் வெற்றி! இந்தச் சரக்குகள் அனைத்தும் இன்னும் ஒரு மணி நேரத்தில் நம்முடைய ரகசிய வேர்ஹவுஸுக்கு மாற்றப்படும்,” என்று ஜகா கர்வத்துடன் சொன்னான்.
சரக்குகள் அனைத்தும் வேர்ஹவுஸ் 4க்கு மாற்றப்பட்டு, லாரிகளில் ஏற்றப்படும் தருணத்தில், திடீரென்று அந்தப் பகுதி முழுவதும் பிரகாசமான விளக்குகள் எறிந்தன. போலீஸ் சைரன் சத்தங்கள் அந்த ஹார்பரையே அதிர வைத்தன!
“எல்லாரும் கையை மேல தூக்குங்க! உங்களைச் சுத்தியும் போலீஸ் படை நிற்குது!” என்று துப்பாக்கியுடன் முன்னால் வந்து நின்றான் சந்துரு. அவனுக்குப் பின்னால் பெரும் போலீஸ் பட்டாளமே நின்றிருந்தது. கணேஷ் தூரத்தில் நின்றபடி தலையில் கை வத்துக்கொண்டான்.
ஜகா ரெட்டியின் முகம் ஆக்ரோஷத்தில் சிவந்தது. “டேய் சந்துரு! உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் இடத்துக்கே வந்து துப்பாக்கிய நீட்டுவ? இந்த மந்திரி நினைச்சா ஒரே நிமிஷத்துல உன் யூனிஃபார்ம கழட்டிடுவார்டா!” என்று கத்தினான்.
“மந்திரி இப்போ அவரோட பதவியைக் காப்பாத்திக்கவே டெல்லிக்கு ஓடிட்டு இருக்கார் ஜகா ரெட்டி! நீங்க கொடுத்த லஞ்சப் பணத்தோட வீடியோ ஆதாரங்கள் இப்போ சிபிஐ கைக்குப் போயிடுச்சு. உங்க Underground Network இன்னையோட முடிஞ்சுது!” சந்துருவின் குரலில் ஒரு சிங்கத்தின் கம்பீரம் இருந்தது.
ஜகா நிலைமையைப் புரிந்து கொண்டு மெல்லத் தன் துப்பாக்கியை எடுத்தான். ” பைரவா… இவன்களை உயிரோட விட்டா நமக்குத்தான் ஆபத்து. முடிச்சுடு!” என்று கத்தினான்.
அடுத்த நொடி, அந்தத் துறைமுக யார்டே ஒரு போர்க்களமாக மாறியது. துப்பாக்கிச் சூடுகளும், அடியாட்களின் அலறல்களும் காதைக் கிழித்தன.
அந்தத் துறைமுக யார்டே ஒரு மரண பூமியாக உருமாறியது. விளக்குகளின் மஞ்சள் ஒளியில், துப்பாக்கிகளில் இருந்து வெளியேறிய தோட்டாக்களின் நெருப்புப் பொறிகள் இருளைக் கிழித்தன. சந்துரு தன் உயிரைப் பணையம் வைத்து, கன்டெய்னர்களின் மறைவிலிருந்து ஜகாவின் ஆட்களை நோக்கிச் சுட்டுக் கொண்டே முன்னேறினான். காதைக் கிழிக்கும் துப்பாக்கிச் சத்தங்களும், குண்டடி பட்ட அடியாட்களின் மரண ஓலங்களும் அந்தத் துறைமுகத்தின் அலை ஓசையை முற்றிலுமாக விழுங்கின.
“டேய், அவனை விடாதீங்கடா! சுட்டுக் தள்ளுங்க!” என்று ஜகா ரெட்டி காண்டாமிருகம் போலக் கர்ஜித்தபடி, தன் கையில் இருந்த நவீன ரகத் துப்பாக்கியால் போலீஸ் படையை நோக்கி சரமாரியாகத் தீர்த்தான்.
யார்டின் ஒரு பக்கத்தில், நிலைமை தங்களுக்குச் சாதகமாக இல்லை என்பதைப் பைரவன் சாமர்த்தியமாகக் கணித்தான். சந்துருவின் அதிரடிப் படையும், கஸ்டம்ஸ் அதிகாரிகளும் தங்களை நாலாப்பக்கமும் சூழ்ந்து கொண்டதை உணர்ந்தவன், மெல்லப் பின்வாங்கத் தொடங்கினான். ஜகா ரெட்டி சண்டையில் வெறிபிடித்து நின்றுகொண்டிருக்க, பைரவன் தனக்கு நெருக்கமான இரண்டு அடியாட்களுடன் கன்டெய்னர்களின் இடுக்கில் புகுந்து, துறைமுகத்தின் ரகசியப் பாதை வழியாகத் தப்பித்து ஓடத் தொடங்கினான்.
பைரவன் தப்பிப்பதை ஒரு கன்டெய்னரின் மேல் ஏறிச் சுட்டுக் கொண்டிருந்த சந்துரு கவனித்துவிட்டான்.
“கணேஷ்! யார்டைப் பார்த்துக்கோ! பைரவன் தப்பிக்கிறான், நான் அவனை விடமாட்டேன்!” என்று கத்தியபடி, சந்துரு கன்டெய்னர் தளத்தில் இருந்து கீழே குதித்து, பைரவன் ஓடிய திசையை நோக்கி மின்னல் வேகத்தில் துரத்தினான்.
இருண்ட இரும்புப் பெட்டிகளின் வழியே பைரவன் மூச்சிரைக்க ஓட, அவனது நிழலை விடாமல் சந்துரு துரத்திக் கொண்டே சென்றான். “பைரவா! ஓடாதே! உன்னோட ஆட்டம் இன்னைக்குக் கலைஞ்சுடுச்சு, சரணடைஞ்சிரு!” என்று சந்துருவின் குரல் அந்தப் பகுதியில் எதிரொலித்தது.
ஆனால், சந்துருவின் கவனம் முழுவதும் பைரவன் மீதே இருந்ததால், தனக்குப் பின்னால் இருந்த பேராபத்தை அவன் கவனிக்கத் தவறினான்.
இருளுக்குள் மறைந்திருந்த ஜகாவின் வலது கரமான ரங்கா, சந்துரு பைரவனைத் துரத்துவதைக் கண்டு வக்கிரமாகப் புன்னகைத்தான். கையில் இருந்த துப்பாக்கியை ஏந்தி, ஓடிக் கொண்டிருந்த சந்துருவின் மீது குறி வைத்தான்.
‘டமார்… டமார்!’
இரண்டு தோட்டாக்கள் சந்துருவின் முதுகிலும், விலா எலும்பிலும் பாய்ந்தன.
“ஆஹ்…!” என்ற வலியின் அலறலுடன் சந்துருவின் கையில் இருந்த துப்பாக்கி கீழே விழுந்தது. வேகம் கட்டுப்படாமல், அப்படியே ரத்த வெள்ளத்தில் அந்தச் சிமெண்ட் தரையில் சரிந்தான் சந்துரு. அவனது உடலிலிருந்து ரத்தம் வேகமாக வெளியேறித் தரையை நனைத்தது.
“சந்துரு…!” என்று அலறியபடி, தூரத்திலிருந்து ஓடி வந்த கணேஷ், குண்டடி பட்டுச் சரிந்த சந்துருவைத் தன் கைகளில் ஏந்தி, கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டான்.
“சந்துரு… கண்ணத் தொறடா சந்துரு… ” என்று கணேஷின் கண்கள் கலங்கின.
ஆனால், மரணம் அவர்களை நோக்கி மெல்ல நடந்து வந்தது. கையில் புகையும் துப்பாக்கியுடன், முகத்தில் அந்த அசுரத்தனமான சிரிப்போடு ரங்கா அவர்களை நோக்கி நெருங்கி வந்தான். அவனது காலடிகளின் சத்தம் சந்துருவின் மரணப் பறை போல ஒலித்தது.
கணேஷின் முகத்திற்கு நேரே துப்பாக்கியை நீட்டிய ரங்கா, “என்ன DC officer… நான் தான் சொன்னேன்ல, இவன் ரொம்பத் துள்ளுறான்னு. இப்போ பாரு, என் அண்ணனோட கோட்டையிலயே இவன் சவம் விழப்போகுது. உன்னைக் கொல்லணும்னு எனக்கு எண்ணம் இல்லை, ஆனா இவனை உயிரோட விட்டா எங்களுக்கு தான் பிரச்சனை,” என்று குரூரமாகச் சொன்னவன், தரையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சந்துருவின் நெற்றிக்கு நேராகத் தன் துப்பாக்கியைக் குறி வைத்தான்.
ரங்காவின் விரல் அந்தத் துப்பாக்கியின் Triggerய் அழுத்தத் தயாரானது. சந்துருவின் கண்கள் மெல்ல மூடிக்கொண்டிருக்க, கணேஷ் செய்வதறியாது அலறினான்.
‘டுமீல் …!’
திடீரென்று, அந்த நள்ளிரவின் இருளைக் கிழித்துக் கொண்டு, எங்கிருந்தோ ஒரு மர்மமான தோட்டா அதிவேகத்தில் பாய்ந்து வந்தது. ரங்கா தன் துப்பாக்கியை இயக்குவதற்குள், அந்தத் தோட்டா அவனது மண்டையின் நடுப்பகுதியைப் பதம் பார்த்தது.
ரங்காவின் கண்கள் அப்படியே நிலைத்து நின்றன. அவனது கையில் இருந்த துப்பாக்கி கீழே நழுவ, அடுத்த நிமிடம் அவனது உடல் சலனமற்றுத் தரையில் பொத்தென்று சரிந்தது. அவனது நெற்றியிலிருந்து ரத்தம் பீறிட்டது.
கணேஷ் அதிர்ச்சியில் உறைந்து போய் சுற்றிலும் பார்த்தான். அந்தப் பாழடைந்த யார்டின் உயரமான கன்டெய்னர் ஒன்றின் உச்சியில், ஒரு நிழல் உருவம் துப்பாக்கியை ஏந்தியபடி வெளியேவந்தது..!!
வேட்டை தொடரும் ..⚓
