Rolex 30

30

 

ஹார்பர் மருத்துவமனையில் ஜன்னல் வழியாக உள்ளே வந்த காலை வெளிச்சம், சந்துருவின் முகத்தில் விழ, அவனது கண்கள் மெல்லத் திறந்தன. உடல் முழுவதும் அந்தத் தையல்களின் வலி, ஒரு மின்னல் கீற்றாய் பாய்ந்தது. மயக்கத்தின் மிச்சம் இன்னும் கண்களில் தங்கியிருக்க, சுற்றும் முற்றும் பார்த்தான்.

அறையின் சூழல் மிக அமைதியாக இருந்தது. அவனது வலது பக்கம், நாற்காலியில் அமர்ந்திருந்தாள் யாழினி. அவளது முகம் வாடிப் போய் இருக்க, கண்களில் வடியும் கண்ணீரைத் துடைக்கக்கூடத் திராணியின்றி, ஒருவிதமான அலைக்கழிப்பில் இருந்தாள். அவளது கரங்கள் சந்துருவின் படுக்கை விரிப்பைப் பிசைந்து கொண்டிருந்தன.

அவளுக்கு எதிர்பக்கம், கைகளைக் கட்டிக்கொண்டு தீவிரமான சிந்தனையுடன் அமர்ந்திருந்தான் கணேஷ். 

சந்துருவின் அசைவைக் கவனித்தவன், சட்டென நிமிர்ந்தவனது கண்களில் ஒரு சின்ன நிம்மதி.

“இப்ப எப்படி இருக்கு சந்துரு? வலி அதிகமா இருக்கா?” என்ற கணேஷின் குரலில் கவலை கலந்திருந்தது.

சந்துருவால் பதில் பேச முயற்சிக்கவில்லை. அவனது தொண்டை வறண்டு இருந்தது. ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்தவன், “ஒன்னும் இல்ல…” என்பது போலத் தலையை லேசாக அசைத்துவிட்டு, மெல்லத் திருப்பியவன், யாழினியைப் பார்த்தான். அவளைப் பார்த்ததும் அவனுள் ஏதோ ஒன்று வலித்தது. 

யாழினி, தன் கணவனின் முகத்தைப் பார்த்ததும் விம்மி அழுதாள். அவளது கண்கள் சிவந்து, முகம் வீங்கிப் போயிருந்தது. அவள் மெல்ல எழுந்து படுக்கைக்கு அருகில் வந்தவளது கைகள் அவனது நெற்றியைத் தழுவின. சந்துரு அவளது கண்களைப் பார்த்தான், அதில் பயம் இருந்தது, அதே சமயம் “ஏன் இப்படி செய்த?” என்ற ஆதங்கமும் இருந்தது.

“யாழி… அழாதே… எனக்கு ஒன்னும் ஆகலையே. ஏன் இப்படி வீணா அழுதுட்டு இருக்க?” சந்துருவின் குரல் கரகரப்பாக இருக்க

அவனைப் பார்த்துவிட்டு, தலைகுனிந்து கொண்ட யாழினி, ” இதெல்லாம் நடக்கும்னு எனக்குத் தெரியும் சந்துரு. ஒரு கட்டத்துல உங்க வாழ்க்கை இப்படித்தான் திசைமாறும்னு என் மனசுக்குள்ள ஏதோ ஒன்னு சொல்லிக்கிட்டே இருந்தது. ஆனாலும், என்னால ஏத்துக்க முடியல… உங்களை இப்படிப் பார்க்குறதே எனக்குத் தெம்பு இல்லை…” என்று சொல்லி மீண்டும் திரும்பி விம்மி அழுதாள்.

சந்துரு மௌனமானான், அவளுக்குப் புரியும், இது சும்மா ஒரு விபத்து அல்ல, அவன் தேர்ந்தெடுத்த ஆபத்தான பாதை.

அவளை ஆசுவாசப்படுத்த நினைத்த சந்துரு, “சரி, நீ வீட்டுக்கு போ யாழி. நான் சரியானதும் வர்றேன். அங்க போய் கொஞ்சம் ஓய்வு எடு” என்று சொல்ல

சட்டெனத் திரும்பிய யாழினி, கோபமும் கண்ணீரும் கலந்த குரலில், “நான் தனியா வீட்டுக்கு போய் என்ன பண்ணப் போறேன்? உங்களை இங்க விட்டுட்டு, உங்களைப் பார்த்துக் கொள்ளாமல் எனக்கு அங்க என்ன வேலை இருக்கப் போகுது? உங்களுக்கு ஏதாவது ஒன்னுன்னா அங்க பதறிக்கிட்டே இருப்பேன். அதைவிட இங்க இருக்கிறதே எனக்குப் போதும்!” என்று உறுதியாகக் கூறிவிட்டாள்.

அவளது இந்த பிடிவாதத்தைப் பார்த்த கணேஷ் ஒரு புன்னகையுடன், “டேய் சந்துரு, அந்தப் பொண்ணு இங்க இருந்தா உனக்கு என்னடா பிரச்சனை? ஏன் இப்படித் துரத்துற?” என்று கேட்டான்.

அவனை முறைத்த சந்துரு, ‘கணேஷ், நாம் பேச வேண்டியது நிறைய இருக்கு. இவளை வச்சுக்கிட்டு எப்படி பேசுறது?’ என்று அவன் கண்களாலேயே உணர்த்தினான்.

அந்த மொழியைப் புரிந்து கொண்ட கணேஷ்… “இப்ப எதுக்கு அவசரப்படுற சந்துரு? காலம் பதில் சொல்லும். நீ அமைதியா ஓய்வெடு. நான் கிளம்புறேன்,” என்று சொல்லிவிட்டு நகர முயன்றான்.

“டேய்!” என்று சந்துரு அழைக்க, கணேஷ் நின்று அவனையே பார்த்தான்.

“நேற்று இரவு முடிவு என்ன ஆச்சு?” சந்துருவின் குரலில் ஆர்வம் இருந்தது.

ஒரு நீண்ட பெருமூச்சை விட்ட கணேஷ், “ஜகா இறந்துட்டான்!” என்றான்.

அதிர்ந்து போன சந்துரு, “எப்படி? யார் செய்தது?” என்று கேள்வியை எழுப்பவும் .

“டேய், நீ குண்டு அடிபட்டு இப்பதான் பிழைச்சுப் படுத்துட்டு இருக்க! சும்மா இருக்க மாட்டியா? ஜகாவோட கதை முடிஞ்சு போச்சு, தேவையில்லாம எதுவும் குழப்பிக்காத, கம்முனு இரு!” என்று கடிந்துகொண்டு நகரப் பார்த்தான். ஆனால் சந்துரு, தன் பலவீனமான கைகளால் கணேஷின் கைகளை இறுக்கமாகப் பற்றினான்.

“அப்ப பைரவன்?” சந்துருவின் கேள்வியில் ஒருவிதமான குழப்பமும் மர்மமும் இருந்தது.

மீண்டும் பெருமூச்சு விட்ட கணேஷ். “தெரியாது…” என்று சொல்லிவிட்டு அமைதியானான்.

“தெரியாதா? என்னடா உளற? நேத்து ஹார்பர்ல சண்டையிட்டது அவன்தானே?” சந்துரு முடிப்பதற்குள் அவனைத் தடுத்த கணேஷ் .…

“அவன் தான் நேத்து உன்னைக் காப்பாத்தினான் சந்துரு. அவன் மட்டும் அங்கே இல்லன்னா, அந்த ஜகாவின் ஆளு ரங்கா கையால நமக்கு அன்னைக்கே சங்குதான்! பைரவனோட கடந்த காலமும், கிரிமினல் வாழ்க்கையும் எனக்குத் தெரியும். ஆனா, அந்த நிமிஷத்துல அவன் உனக்கு ஒரு தெய்வமாத்தான் வந்தான்.”

அந்த நன்றி உணர்வு அவனுள் மோதியது, ஆனால் சந்துருவின் போலீஸ் புத்தி அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது. 

“டேய்… நீ உடம்பு முடியாம இருக்க. சரியானதுக்கு அப்புறம் ஊருக்குப் போற வழியைப் பாரு. இல்லன்னா, ட்ரீட்மென்ட் முடிச்சிட்டு போர்ட் வேலையில ஜாயின் பண்ணு. இதை விட்டுட்டு தேவையில்லாம குழப்பிக்கிட்டு இருக்காதே. உன்னால இந்த யாழினியின் நிலையும் ரொம்ப பாவம்,” என்று கணேஷ் அட்வைஸ் செய்துவிட்டு, சந்துருவின் பார்வையைத் தவிர்த்துவிட்டுச் சென்றான்.

அந்த அறையில் சந்துருவும் யாழினியும் மட்டும் இருக்க, யாழினி மௌனமாக அவன் அருகில் அமர்ந்திருந்தாள். அவளைப் பார்த்த சந்துரு, “யாழி… நான் அப்பவே சொன்னேன் இல்லையா, இந்த மாதிரி…” என்று தொடங்க…

சட்டெனத் தன் பிஞ்சு விரலை அவனது உதட்டின் மீது வைத்து அவனைத் தடுத்த யாழினியின் கண்களில் இப்போது ஒரு தீர்க்கமான பார்வை இருந்தது.

“நீ சொல்ல வர்றது புரியுது. இதெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சுதான் இதை வேண்டாம்னு நான் அன்னைக்கு வேண்டாம் னு சொன்னேன் .. நீ தான் பிடிவாதமா என்னை காதலிச்ச !…  அதானே சொல்ல போற… ! இதோ பாரு சந்துரு… இதுக்கு அப்புறமும் அதையே பேசாத, நமக்கு கல்யாணம் ஆகிடிச்சி, என் கழுத்தில நீ கட்டின தாலி இருக்கு … . நீ தான் எனக்கு எல்லாமே, உன்னை விட்டுத் தள்ளி இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. நான் உன் கூடவே இருக்கப் போறேன். என்னை ஏன் இப்படிப் பிரிச்சு அனுப்பப் பாக்குற?”

“உன்னைத் துரத்தல யாழி… உன் உடம்பை நீ கெடுத்துக்குறது எனக்குப் பிடிக்கல. ரூம்ல போய் தூங்கிட்டு வான்னுதான் சொல்றேன்,” என்று சந்துரு சமாதானம் செய்ய முயன்றான்.

அவள் செல்லமாகத் தன் கையை உயர்த்தி, “ஓ… உன்னை இங்க விட்டுட்டு நான் மட்டும் அங்க போய் ஏசி ரூம்ல ஜாலியா தூங்கப் போறேனா? இப்பவே மண்டையை உடைச்சுடுவேன் பாத்துக்கோ! உனக்கு வலிக்குதுன்னு எனக்குத் தெரியும், ஆனா அந்த வலியை விட, உன்னை விட்டுப் பிரிஞ்சு இருக்குற வலி எனக்கு அதிகமா இருக்கும். நீ எனக்கு உயிர், சந்துரு! உயிர் பிரிஞ்சு இருக்கணும்னு நீ எப்படி ஆசைப்படலாம்?” என்று கரகரத்த குரலில் பேச.. 

அவளது இந்த ஆழமான காதலையும், பிடிவாதத்தையும் கண்டு சந்துரு நெகிழ்ந்து போனான். அவளது வார்த்தைகளில் இருந்த அந்த உண்மையான கரிசனம், அவன் உடலில் இருந்த காயங்களை விட இதயத்தை வருடியது. அவன் மெல்லத் தன் கைகளை விரித்தான்.

யாழினி மெல்ல அவன் அருகில் குனிந்து, தன் முகத்தை அவனது மார்பின் மீது மென்மையாகப் பதித்துக்கொண்டாள். அவன் இதயம் துடிக்கும் அந்தச் சத்தம், அவளுக்கு ஒரு இசை போலிருந்தது. அவன் தன் கைகளை மெல்ல அவளது தலைமுடியின் மீது வைத்துத் தடவிக் கொடுக்க, யாழினி தன் கண்களை மூடிக்கொண்டாள். அந்த மார்பின் அரவணைப்பில், கவலைகள் யாவும் கரைந்து போக, அமைதியும் காதலும் மட்டும் அந்த அறையைச் சூழ்ந்திருந்தது. அவன் அவளை மேலும் இறுக்க அணைத்துக் கொள்ள, காலம் அங்கே உறைந்து போனது.

 

 

காலைக்கதிரவன் தன் தங்கக்கதிர்களைக் கடற்பரப்பின் மீது வீச, அலைகள் அனைத்தும் தங்கம் உருக்கி ஊற்றியது போல ஜொலித்துக் கொண்டிருந்தன. அந்நிய தேசத்தின் அந்த விஸ்தாரமான கடல், ரோலக்ஸின் கண்களுக்குப் புதியதொரு உலகத்தின் வாசலாகத் தெரிந்தது. கப்பலின் முனையில் நின்றபடி, காற்றின் ஈரப்பதத்தையும், உப்பின் மணத்தையும் சுவாசித்தபடி ரோலக்ஸ் நின்றிருந்தான்.

அவனது கண்கள் கடலின் தங்கப் பிழம்பைத் தாண்டி, தூரத்தில் கம்பீரமாக உயர்ந்து நின்ற அந்த மலைச்சிகரத்தின் மீது நிலைத்தன. அந்த மலையின் உச்சியில், காலம் காலமாய் அங்கே வீற்றிருக்கும் பழமையான தேவாலயம் ஒன்று இருந்தது. அங்கே இருந்த பிரம்மாண்டமான மணியின் ஓசை, கடலையும் தாண்டி, காற்றின் வழியாகக் கப்பல் வரை மெல்லியதாய் எட்டிப் பார்த்தது. அந்த மணியின் நாதம் ஏதோ ஒரு புனிதமான அழைப்பு போல அவனுக்குள் எதிரொலித்தது.

கப்பலிலிருந்தே அந்தத் தேவாலயத்தின் உச்சியில் மின்னிய சிலுவையைப் பார்த்த ரோலக்ஸ், தன்னிச்சையாகத் தன் கைகளை உயர்த்தி நெற்றியில் கிராஸ் செய்துகொண்டான். அவனது ஆழ்மனதின் ஏதோ ஒரு மூலையில் நீண்ட நாட்களாகத் தேங்கிக் கிடந்த பாரம், அந்த மணி ஓசையில் மெல்லக் கரைவது போல உணர்ந்தான்.

அவனது பார்வை மலையின் அடிவாரத்தில் இருந்த கடற்கரைக்கு மாறியது. அது ஒரு அமைதியான துறைமுகம் போலத் தெரிந்தது. சலசலப்பில்லாத அலைகள் கரையோடு வந்து மோதுவதும், மக்கள் நிதானமாகத் தங்கள் அன்றாட வேலைகளில் ஈடுபடுவதும் ஏதோ ஒரு அமைதிக்கான அடையாளமாக இருந்தது. ஆனால், அந்தத் துறைமுகத்தில் நின்றிருந்த பிரம்மாண்டமான கப்பல்கள், அந்த இடம் சிறிய வசதி குறைந்த துறைமுகம் போலத் தெரிந்தாலும், அங்கே ஏதோ ஒரு பெரும் வர்த்தக ரகசியம் புதைந்திருப்பதை அவனுக்கு உணர்த்தியது.

அப்போது, அவனது தோளில் உறுதியான ஒரு கை அழுந்தியது. திரும்பிப் பார்த்தான், எட்வர்ட் தான், அவனது கண்களில் ஒருவிதமான பிணைப்பும், உரிமையும் இருந்தது.

“என் தேசத்திற்கு வந்துவிட்டாய் ரோலக்ஸ்! இனி உனக்கு எந்தக் கவலையும் இல்லை,” என்று கையசைத்து உற்சாகமாக சொன்ன எட்வர்ட்டின் ஒவ்வொரு வார்த்தையிலும் அவனின் கண்களில் ஒரு உறுதி இருந்தது.

“இனிமேல் இந்த தேசம் உனக்கும் சொந்தமானது. நீ இங்கதான் வாழப் போற.. ஒரு புதிய தொடக்கம், அது உனக்குத் தேவை.”

எட்வர்ட்டின் வார்த்தைகளை உள்வாங்கிக்கொண்ட ரோலக்ஸ், மீண்டும் அந்தத் கடற்கரையைத் தன் கண்களால் அளந்தான். ஒரு அமைதியான வாழ்க்கை, இரத்தமும், வன்முறையும் அற்ற ஒரு உலகம் அவனை வரவேற்பது போலிருந்தது. அவனது உதடுகளில் புன்னகை மலரவில்லை, ஆனால் அவனது ஆழ்மனதில் ஒரு மெல்லிய நிம்மதி பூத்தது. அந்த நிம்மதி தனக்காக அல்ல… அவன் உயிராகக் கருதும் மயுராவிற்காகவும், தன் உயிரின் மேலான அவன் சாருவிற்காகவும் தான்.

“இனிமேல் அமைதியான வாழ்க்கை… மயுராவுக்கும், சாருவுக்கும் ஒரு பாதுகாப்பான உலகத்தை நான் அமைத்துக் கொடுக்க வேண்டும்,” என்று தனக்குத்தானே உறுதியெடுத்துக் கொண்டான்.

அருகில் நின்றிருந்த எட்வர்ட், அவனது மௌனத்தைப் புரிந்துகொண்டு, “கவலைப்படாதே ரோலக்ஸ், இங்குள்ள அமைதி உன்னைக் காப்பாற்றும். அந்தத் தேவாலயத்து மணியோசை, உன் கடந்த காலத்தை மறக்கடிக்கும். இந்த தேசம் உன்னை அரவணைத்துக் கொள்ளும்,” என்றான் செய்கை மொழியிலே .

மெலிதாகத் தலையசைத்தான் ரோலக்ஸ்… பாவம் அவனுக்குத் தெரியவில்லை, அந்த அமைதியான அலைகளின் அடியிலும், அந்தத் தேவாலயத்தின் நிழலிலும், எதிர்பாராத சில சுழல்கள் அவனுக்காகக் காத்திருக்கின்றன என்று.

கப்பல் துறைமுகத்தை நெருங்க நெருங்க, அவனது நிம்மதி ஒரு புதிய அத்தியாயத்திற்குள் நுழையத் தயாரானது.

ஆனால், விதி தன் கையிலிருக்கும் சதுரங்க ஆட்டத்தைத் தொடங்கத் துடித்துக் கொண்டிருந்தது.

அந்தப் பிரம்மாண்டமான சிலுவை, சிலுவை அல்ல… அது அவனது வாழ்வின் அடுத்தடுத்த சோதனைகளின் சாட்சியாக அங்கே நின்றிருந்தது. துறைமுகத்தின் அமைதி ஒரு மாயை என்பதை அவன் அறியவில்லை. அவன் தேடி வந்த நிம்மதி, ஏதோ ஒரு பெரும் வில்லங்கத்தின் வாசலில் அவனைக் கொண்டு போய் நிறுத்தப் போகிறது என்ற உண்மை தெரியாமல், ரோலக்ஸ் ஒரு நீண்ட மூச்சை உள்ளிழுத்துக் கொண்டான்.

 

 

 

வேட்டை தொடரும் ..⚓

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!