“லட்டு கொஞ்சமா எடுத்துக்குறேன் விழி. என்ன விசேஷம், இனிப்பு பலமா இருக்கு”
“அதுவா நான் காம்படீஷன்ல கலந்துக்கப்போறேன் அபி, உன் வாய் முகூர்த்தம் பலிச்சிடுச்சு!” என்று சிரித்தாள்.
“தங்கம் நிஜமாவா? வாழ்த்துக்கள்! சாம்பவிக்குத் தெரிஞ்சா சந்தோஷப்படுவா, போட்டியில நீ முதல் இடம் பிடிக்கணும்” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டார்.
“கண்டிப்பா ஜெயிப்பேன், அதுக்கு முன்னாடி உனக்கு ஆடிக்காட்டுறேன்!”
எனச் சேலை முந்தானையை இடுப்பில் சொருகிய திகள்விழி, போனில் பாடலைப் போட்டுவிட்டு மண்டபத்தில் ஆட ஆரம்பித்தாள்.
வில்லென அவள் கண்கள் மட்டும் அல்ல, இடையும் வளைந்து நெளிந்து நாட்டியமாட, அம்பு தவறாமல் பத்ரன் இதயத்தைப் பதம் பார்த்தது.
கோபக்கார விஸ்வாமித்திரர் மேனகையின் அழகில் வீழ்ந்தது போல, இந்த நவீன விஸ்வாமித்திரன் திகள்விழியின் இடையழகில் சறுக்கினான்.
வீட்டில் சண்டை போட்டுத் தன்னை கோவிலுக்கு அழைத்து வந்த பாட்டியின் பின்னே எரிச்சலோடு வந்தவன், திகள்விழி அபிராமியை ‘அபி’ எனச் செல்லமாகக் கூப்பிட ஒன்றும் புரியவில்லை. நீண்ட நாள் நண்பர்கள் போல இருவரும் பேசிச் செல்ல, அபிராமியும் பேரனை மறந்தவராக உள்ளே போய்விட்டார்.
அவன் பாட்டியை மட்டுமல்ல, அம்மாவையும் ‘பவி’ என்று கூப்பிடுகிறாளே! யாரு இந்தப் பொண்ணு? என யோசனையோடு தூணில் சாய்ந்து நின்று இருவரின் பேச்சுகளையும் கேட்டுக்கொண்டிருந்தவன், அவள் நாட்டியமாடும் அழகைக் கண்டு உள்ளம் உறைந்து போனான்.
‘பத்ரா என்ன பண்ற? ஸ்டெடி மேன்!’ என்று தன்னைச் சமன் செய்துகொண்டான்.
அதற்குள் ஆட்டம் முடிந்துவிட,
“ஐயோ தங்கமே! அருமையா ஆடுன! ம்ம்… இந்த அழகு யாருக்குக் கொடுத்து வச்சிருக்கோ! என் இரண்டாவது பேரனைக் கட்டிக்கிட்டு என் வீட்டுக்கு வந்துடு!” என அவள் நாடியைப் பிடித்துக் கொஞ்சியவரின் வார்த்தையில் பத்ரன் திகைத்தான்.
அவள் என்ன சொல்லப்போகிறாள் என ஆர்வமாக பார்க்க,
“உனக்கு ரொம்ப ஆசை அபி! உன் சிடுமூஞ்சிப் பேரனை நான் கட்டிக்க மாட்டேன் பா!” என்று உடனே மறுத்து அவனை புஸ்ஸாக்கினாள்.
“ஏன் தங்கம்?”
“அன்னைக்கு நீ சாமி கும்பிட போய்ட்ட, ரொம்ப நேரமா போன் அடிக்குதுனு தெரியாம உன் போனை எடுத்துட்டேன். இந்தப் பக்கம் யாரு பேசுறதுன்னே தெரியாம கடுகா பொறிஞ்சு தள்ளிட்டாரு.
அப்பாடி வாயா அது! எனக்கு அவரு வேண்டாம். எங்க வீட்டுல என்னைக் கொஞ்சுற மாதிரி, தினமும் கொஞ்சுற ஆள் இருந்தா சொல்லு கல்யாணம் பண்ணிக்குறேன்!” என்று அவனை டேமேஜ் செய்தவளை முறைத்தான் பத்ரன்.
“கொஞ்சிக்கிட்டே இருந்தா போர் அடிக்காதா பொண்ணே?”
“போர் அடிக்காது அபி! அவனை மயக்கி என் முந்தானையில முடிஞ்சு வச்சுக்க என்கிட்ட வேற இரண்டு உருப்படி இருக்கு. சிருங்கார ரசம், ஜாவளி.
அவனுக்கு மட்டுமே தனியா நான் ஆடிக் காட்டப்போற லயம். அப்புறம் பாரு, என்னை மட்டுமே கொஞ்சுவான்!” என்று கண்ணடித்தாள் திகள்விழி.
“இதென்னடி புதுசா இருக்கு! உன்னையே சுத்தி வர அளவுக்கு மந்திரம் போடுற நாட்டியமா? அந்த ‘அவன்’ என் பேரனா இருக்கக்கூடாதா? எங்களுக்காக வர மாட்டியா திகள்?” என்று பாவமாகக் கேட்டார் அபிராமி.
வாராவாரம் கேட்கும் கேள்வி சலிக்காமல் மறுத்துவிட்டுப் போவாள்.
பரதநாட்டியம் தெரியும். அதில் அவள் சொன்ன உருப்படிகளின் பெயர்கள் பத்ரனுக்குச் சுத்தமாகப் புரியவில்லை. வேகமாகப் போனை எடுத்து கூகுளில் சர்ச் செய்து பார்த்தவன் கண்களோ ரசனையாக விரிந்தன.
காதலையும் மோகத்தையும் விரிவாகக் காட்டும் லயத்தைத் தன்னவனுக்காகக் காட்டத் தயாராக இருக்கும் அவளது பேச்சில், முதல் முறையாக அவனுக்கு நெஞ்சில் குறுகுறுப்பு ஏற்பட்டது.
“நான் கிளம்புறேன். டைம் ஆச்சு அபி! மறந்துட்டேன் பாரு கால்வலி தைலம் கேட்டியே! எடுத்துட்டு வந்தேன். இதை நைட் தூங்குறதுக்கு முன்னாடி பவி போட்டுவிடச் சொல்லு.
உங்களால முடிஞ்சா போட்டி நடக்கும்போது வாங்க. நான் அட்ரஸ் மெசேஜ் பண்றேன் டாட்டா!” எனக் கைகளை ஆட்டிவிட்டு ஓடினாள் திகள்விழி.
அவள் கண்ணைவிட்டு மறைந்ததும் தான் பேரன் ஞாபகம் வந்தது. “பத்ரா!” என்று அவனைத் தேட, அபிராமியை முறைத்துக்கொண்டு நின்றிருந்தான்.
“யாரு இந்தக் குட்டச்சி? என்ன பேச்சு பேசுறா அபி! பவினு… அவள் வயசு என்ன பெரியவங்களுக்கு மரியாதை தர வேண்டாமா? உங்ககிட்ட அட்வான்டேஜ் எடுத்து பேசுற அளவுக்கு ரொம்ப நெருங்குன உறவா இருந்தாலும் இப்படியா பேர் சொல்லி கூப்டுறது” என்று அரட்டியவனைக் கண்டு, ‘உனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது’ எனத் தலையில் அடித்துக்கொண்டார்.
பின்ன அவனுக்குப் பின்னாடி பேயடித்தது போல திகள் நின்றிருந்தாளே!
சாம்பவிக்கு ஸ்வீட் கொடுக்க மறந்துவிட்டதால் பாக்ஸைத் தூக்கிக்கொண்டு திரும்ப வந்தவள், பத்ரன் கத்துவதைக் கண்டு பயத்தில் நின்றுவிட்டாள்.
பேரனைத் தள்ளிவிட்டு அவளிடம் போன அபிராமி, “தங்கம்!” என அவள் கன்னத்தைத் தொட,
“பவி… இல்ல, ஆன்ட்டிக்கு ஸ்வீட் கொடுக்க மறந்துட்டேன். சாரி பாட்டி! இவ்வளவு நாள் மரியாதை இல்லாம பேசுனதுக்கு” என்று அழுகுரலில் சொன்னவள், அபிராமி பதில் சொல்வதற்கு முன் ஓடிவிட்டாள்.
“உனக்குக் கொஞ்சம் கூட அறிவே இல்ல பத்ரா! சின்னப் பொண்ணை மனசு நோகப் பேசுற. மத்தவங்களைக் கேள்வி கேக்குறியே, நீயும் உன் அண்ணனும் எங்களுக்கு மரியாதை கொடுத்து தள்ளுறீங்களா!”
“திகள்விழி எங்களுக்கு மூணு மாசமா பழக்கம். ரொம்பத் தங்கமான பொண்ணு. நானும் உன் அம்மாவும் இவளைப் பார்க்கவே வாராவாரம் கோவிலுக்கு வருவோம்”
“இவளைப் பார்க்க வர்றீங்களா? அப்போ சாமி கும்பிட வரேன்னு சொல்றது பொய்யா?” என்று முறைத்தான்.
“ஆமாம் திகள் கூட இருக்குற ஒரு மணி நேரம் நாங்க கவலை மறந்து சிரிப்போம். எங்களுக்கு வயசாகுற ஃபீலிங் தராம ஃப்ரெண்ட்லியா, கேரிங்கா பார்த்துக்குற பொண்ணு. எங்களுக்கு அவளைப் பிடிக்கும்.
எப்படியாவது உனக்கு அவளைக் கல்யாணம் பண்ணி வச்சிடலாம்னு இரண்டு மாசமா அவகிட்ட கேக்குறேன். வேண்டாம்னு பிடிவாதமா திகள் மறுத்தாலும் எனக்குள்ள ஒரு நம்பிக்கை இருந்தது.
இப்போ உன்னால அந்த ஆசை நிராசையாப் போச்சு! இனி அடுத்த வாரம் வருவாளான்னு தெரியல!” என்று சோர்வாகச் சொன்ன பாட்டியின் தோள்களை ஆதரவாகப் பிடித்தான் பத்ரன்.
“பாட்டி…”
“பேசாத எனக்கு வருத்தமா இருக்கு, பத்ரா! உன்னையும் ருத்ராவையும் நாங்க சரியா வளர்க்கல. சுத்தியிருக்குறவங்க மனசைக் காயப்படுத்தி உங்களுக்கு என்ன கிடைக்கப்போகுது?
ருத்ரா நம்மளைப் பிரிஞ்சதுக்கு அப்புறம் சாம்பவி கொஞ்சம் நிம்மதியா பேசி சிரிக்குறது திகள் கூட மட்டும் தான். உன் எரிச்சலான பேச்சால அவளை விரட்டிட்ட, சாம்பவி கோவப்படப்போறா! உன்னை இங்க கூட்டிட்டு வந்திருக்கக்கூடாது என் தப்பு!” என்று திட்டியபடி காரில் ஏறினார் அபிராமி.
தன் நெற்றியைத் தேய்த்துக்கொண்டான்
“இப்போ என்ன? அவளை நான் கல்யாணம் பண்ணிக்கணும் அவ்வளவுதானா! ஓகே, கல்யாணம் பண்ணிடலாம்!” என்று சாதாரணமாகச் சொன்னவனைப் புரியாமல் பார்த்தார் அபிராமி.
“அவளை அறிமுகப்படுத்தி வைக்கலாம்னு உன்னை போராடிக் கூட்டிட்டு வந்ததுக்கு சிறப்பான வேலை செஞ்சுட்ட! இனி ‘என் பேரனைக் கல்யாணம் பண்ணிக்கோ’ன்னு கேட்டா சத்தியமா ஒத்துக்க மாட்டா அதனால விட்டுடு. நாங்க தோழிகளா வைஃப் பண்ணிக்கிறோம்”
பாட்டி ஓரே வைப் மோட் தான்!
“பாட்டி கொஞ்சம் அமைதியா இருங்க! அவள் பேரு என்ன சொன்னீங்க?”
“திகள்விழி…”
“ஆங் திகள்விழி! அவளோட சிருங்கார ரச நாட்டியத்தைப் பார்க்கப்போறவன் இந்த ருத பத்ரன் தான் பாட்டி!”
“ஆங்! என்னடா சொல்ற? அவ அழுதுகிட்டே போனா கண்டிப்பா உன்னை…” என்று பேசியவரின் பேச்சை நிறுத்திய பத்ரன்,
“கண்டிப்பா என்னைத்தான் விழி கல்யாணம் பண்ணுவா! பண்ணியே ஆகணும். அந்த முந்தானைக்குள்ள எப்படி என்னை முடிக்குறான்னு பார்க்கிறேன்” என்று கிண்டலாகச் சொன்னவனை ஒரு மாதிரியாகப் பார்த்தார் பாட்டி.
“அப்போ உனக்கு அவளைப் பிடிச்சிருக்கு அப்படித்தானே?”
“ஆமாம், பிடிச்சிருக்கு. வாய் மட்டும் கூட வழவழன்னு பேசுனா எனக்குக் கோவம் வரும். மத்தபடி she is fine by me. விழி போன நம்பர் குடுங்க!”
நிஜமாகவே அவளை பிடித்து தொலைத்தது அந்த கோவக்கார ஆசாமிக்கு, கெத்தை விடாமல் சமாளிக்கிறான்.
“பத்ரா உன் அண்ணன் போல நீயும் பிடிவாதமா இருக்காத, விழிக்குப் பிடிக்கலைன்னா நீ ஒதுங்கிக்கணும். எனக்குச் சத்தியம் பண்ணு, நான் நம்பர் தரேன்!” என்ற பாட்டியை முறைத்தான் பத்ரன்.
மாலை ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வந்தவனைச் சுற்றி நின்ற குடும்பத்தினர், அண்ணனின் அட்டகாசங்களை அடுக்கினர். ருத்ரா வீட்டுக்கு வந்ததையே நம்ப முடியாமல் பார்த்தவன், நிலாவோடு கல்யாணம் பண்ணிவைக்கச் சொன்னதைக் கேட்டு நொந்துபோனான்.
“தாத்தா நிலா என் ஆபீஸ்ல ஒர்க் பண்ற பொண்ணு. டேலண்ட் கேர்ள் மார்னிங் இவன் பண்ண கலவரத்தால அந்தப் பொண்ணு வேலையை விட்டு போயிடுவாளோனு நான் கவலையில இருக்கேன். ருத்ரா அவளை ஊரைவிட்டு ஓடவைக்கிற பிளான் பண்றான்”
‘உன் பேரனுக்கு மரியாதை இல்ல, பார்த்துக்கோ!’என்று சிம்பாளிக்காக மிரட்டினான்.
“நான் என்னடா பண்றது? காலைல வந்தான் ஆரலி கிடைச்சுட்டான்னு சொன்னான். கல்யாணம் பண்ணி வையுங்கன்னு கேட்டான்.
சரிடா, அந்தப் பொண்ணைக் கூட்டிட்டு வா அவளுக்கு விருப்பம் இருந்தா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றேன்னு சொன்னேன்! அது மட்டும் முடியாது, மேரேஜ் ரெடி பண்ணுன்னு மிரட்டிட்டு போறான்.
உன் பாட்டி அந்தப் பொண்ணைப் பத்திக் கவலைப்படாம, ‘ருத்ரா குணமாகச் சான்ஸ் இருக்கு, கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க’ன்னு சொல்றா!” என அபிராமியைப் போட்டுக்கொடுக்க,
“பாட்டி!” என்று பல்லைக் கடித்த பத்ரனைக் கண்டு பம்மினார் அபிராமி.
“நிலா என்ன டாக்டரா? உன் பேரனைக் கல்யாணம் பண்ணி ட்ரீட்மெண்ட் குடுக்க? அவன் நிலாவைக் காதலிக்கல, கல்யாணம் பண்ண ஆசைப்படல. ஆரலியை நிலாவா உருவகப்படுத்தி, இறந்த பொண்ணோட நினைவுகளை உயிரோட இருக்குற நிலாவுக்குள்ள திணிக்கிறான்.
என்னைக்கு இருந்தாலும் இது நிலாவுக்கு ஆபத்து. ருத்ரா குணமாகணும்னு எனக்கு அக்கறை இருக்கு. அதுக்காக ஒரு அப்பாவிப் பொண்ணைப் பலிகொடுக்க நாங்க தயார் இல்ல”
“தாத்தா மண்டே டெண்டர் முடிஞ்சதும் நம்ம லண்டன் பிராஞ்சுக்கு நிலாவை அனுப்ப நான் ஏற்பாடு பண்றேன். ருத்ராவுக்குத் தெரிய வேண்டாம்!” என்று எச்சரித்தான்.
“சரிடா நாங்க எதுவும் சொல்ல மாட்டோம். கோவிலுக்குப் போகணும் நீயும் கூட வா”
“பாட்டி, நான் எதுக்கு? அம்மாவைக் கூட்டிட்டுப் போங்க” என்று பத்ரன் மறுக்க,
“நீ கூட என் பேச்சைக் கேக்க மாட்டியா?” எனக் கண்களைக் கசக்கினார் அபிராமி.
சாம்பவி அத்தையின் நடிப்பைக் கண்டு சிரிப்பை அடக்கியபடி உள்ளே போய்விட்டார். ஏற்கெனவே மருமகளிடம் தன் பிளானை, அதாவது திகளைப் பத்ரனிடம் காட்டும் பிளானைச் சொல்லியிருந்தார்.
“சரி, சரி, அழாதீங்க! நான் ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன் போகலாம்!” என்று ஒத்துக்கொண்டதும், மருமகளைப் பார்த்து தம்ஸ் அப் காட்டிச் சிரித்த அபிராமி, கையோடு பேரனையும் கோவிலுக்குக் கூட்டி வந்தார்.
இப்போது தன்னை முறைக்கும் பத்ரனிடம்,
“உன் அண்ணன் பண்ணா தப்பு, நீ பண்ணா நியாயமா? பிடிக்கலைன்னா பிடிக்கலைதான். ஒழுங்கா கோவத்தைக் குறைச்சுட்டு, விழி கேட்ட மாதிரி அவளைக் கொஞ்சுற பையனா மாறி கல்யாணத்துக்குச் சம்மதம் வாங்கு!” என்றார்.
“கொஞ்சிக்கிட்டே இருக்க, அவ என்ன பப்பி நாயா பாட்டி? அவ வேணும்னா என்னைக் கொஞ்சட்டும். போன் நம்பர் மட்டும் குடுங்க மீதியை நான் பார்த்துக்குறேன்!” என்று போன் நம்பரை வாங்கிக்கொண்டான்.
பத்ரன் பேச்சு திகளை வருத்தியிருந்தாலும், வீட்டுக்குப் போனதும் அதைப் பற்றிய நினைப்பே இல்லாமல் ஜாலியாக அம்மாவோடு வம்பிழுத்துக்கொண்டிருந்தாள்.
பத்ரனை மறந்தும் போனாள். அவனுக்கு மறக்க வேண்டுமே! தூங்கக் கண்களை மூடினாலே விழிப்பெண்ணின் இடை வளைவல்லவா, விழி இடையே வந்து நிற்கிறாள்.
தலையைத் தாங்கி அமர்ந்துவிட்டான்.
‘பத்ரா அவ ஒரு சாதாரண பொண்ணு எதுக்காக மூளைக்குள்ள ஏத்துற?’ என்று தன்னையே திட்டிக்கொள்ள,
‘போடா இடியட்! மைண்ட்ல இல்ல, உன் மனசுல விழி விழுந்துட்டா. அதான் தூக்கம் வரல இதுக்குப் பேருதான் காதல்!’ என மனசாட்சி பங்கமாகத் திட்டிவிட்டுப் போனது.
காதல் பண்ணா தூக்கம் வராதுன்னு சொல்லும்போது சிரிப்பா இருந்தது. இப்போ அனுபவிக்கும்போது கஷ்டமா இருக்கு. காலை விடிஞ்சதும் ஆபீஸ் போறதுக்கு முன்னாடி அவளைப் போய்ப் பார்க்கணும் தூங்கு பத்ரா!
உருண்டு புரண்டு ஒரு வழியாகத் தூங்கிப்போனான்.
ருத்ரா குதூகலமாகக் குடித்துக்கொண்டிருக்க, “காதல் பண்ணி நிலாவை அழுக வைக்கிறதுல ஒரு நியாயம் இருக்கு. என்னை ஏன்டா தூங்கவிடாம அழுக வைக்கிற, பாவம்டா நானு!” எனப் பரிதாபமாக உட்கார்ந்திருந்தான் சரபன்.
“மச்சான் இந்தக் காதல் இருக்கே, காதல்…”
“அது நல்லபடியா அதோட இடத்துல இருக்கட்டும். நாம போய்த் தூங்கலாம் ருத்ரா” என்றான் சரபன்.
அவனும் என்ன செய்வான் பாவம்!
முக்கியமான விஷயம் பேசணும் வீட்டுக்கு வா என்று அழைத்த நண்பனை நம்பி வந்ததற்கு, சாயங்காலம் ஆரம்பித்த காதல் உபதேசத்தை நடு இரவு வரை நிறுத்தாமல் பாட, ‘வேண்டாம்… அழுதுடுவேன்…’ என்ற நிலையில் இருந்தான் சரபன்.
“நான் பேசுறதைக் கேளுடா வெண்ணை! ஆரலி இந்த ஏழு வருஷத்துல ரொம்ப மாறிட்டா. முதல்ல அவளுக்குப் பிடிச்சது இப்போ பிடிக்கல சோ, அவளுக்குப் பிடிச்ச மாதிரி காதலிக்க முடிவு பண்ணிருக்கேன்”
‘அவளே வேற ஆளுன்னு சொன்னா அடிப்பான். ஏழு வருஷத்துல எப்படிடா பழக்கவழக்கம் மாறும்?’ என்று மனதுக்குள்ளே புலம்பிய சரபன், இது சரிப்பட்டு வராது என ருத்ராவிடம்,
“மச்சான் நாளைக்கு நிலாகிட்டப் பேசி, அவளுக்கு இப்போ என்ன பிடிக்கும்னு கேட்டு காதல் பண்ணு. அவளும் உன்னைப் புரிஞ்சுப்பா!” எனப் பல்லைக் காட்டிச் சொல்லிவிட,
“கரெக்ட் சரபா! நாளைக்குக் காலைல போறேன். ஈவினிங் தாத்தாகிட்டக் கூட்டிட்டுப் போய் மேரேஜ் டேட் ஃபிக்ஸ் பண்றேன். நீ கிளம்பு நான் தூங்கிப் ஃப்ரெஷா கிளம்புனாதான் அழகா இருப்பேன்!” என்று ருத்ரா அறைக்குள் போனான்.
“மன்னிச்சிடு நிலா!” என மானசீகமாக மன்னிப்புக் வேண்டிய சரபன், “ஆளை விடுடா சாமி!” என்று வெளியே ஓடிவிட்டான்.
அண்ணனும் தம்பியும் அவரவர் ஆளை கதறவிட விடியலை நோக்கிக் காத்திருந்தனர்.
அடுத்த நாள் காலை, நிலா வீட்டில் திகள் கத்திக்கொண்டிருந்தாள்.
“டைம் ஆச்சும்மா! சீக்கிரம் லஞ்ச் பாக்ஸ் குடு!” என்றவளின் கைகளில் நறுக்கெனக் கிள்ளினார் பார்வதி.
“ம்மா! வலிக்குது…”
“உனக்குச் சனிக்கிழமை லீவ்தானே! நிலா எப்பவும் சனிக்கிழமை மதியம் வந்துருவா. அதனால இன்னைக்கு லஞ்ச் சமைக்கல, ப்ராக்டீஸ் பண்ணப்போறேன்னு நேத்தே சொல்லியிருந்தா லஞ்ச் பண்ணியிருப்பேன். இப்போ அவசரமா சாப்பாடு கேட்டா எங்க போறது? இட்லி, தக்காளிச் சட்னி இருக்கு எடுத்துட்டுப் போ!” என்றார்.
“சரிம்மா, நான் ஈவினிங் வர டைம் ஆகும். நைட் சீக்கிரம் சமைச்சு வை!” என்று கத்தியபடி ஸ்கூட்டியில் கிளம்பினாள்.
“அம்மா நானும் ஈவினிங் வர டைம் ஆகும். லஞ்ச் ஆபீஸ்ல சாப்பிடுறேன்!” என நிலாவும் ஆபீஸுக்குக் கிளம்பிவிட்டாள்.
‘என்ன பொண்ணுங்களோ!’ எனச் சலிப்பாக நினைத்தபடி போனார் பார்வதி.
நடராஜன் வீட்டில் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த பத்ரனை “சீக்கிரம் கிளம்பு!” என விரட்டிக்கொண்டிருந்தார் அபிராமி.
“பாட்டி சாப்பிட்டு போறேன்!”
“விழி ஸ்கூல் உள்ள போய்ட்டா, ஈவினிங்தான் வெளிய வருவா! காதலுக்காகக் காலைச் சாப்பாட்டை தியாகம் பண்ணா தப்பில்லை!” என்ற பாட்டியை முறைத்தான் பத்ரன்.
“முறைக்காம கிளம்புடா!”
“கிளம்புறேன் கத்தாதீங்க!” என்று கைகழுவிவிட்டு வெளியே போனான்.
“அத்தை விழி ஒத்துக்குவாளா? எனக்கு நம்பிக்கை இல்லை” எனக் கலவரமாகச் சொன்னார் சாம்பவி.
சிடுசிடுப்புக்கார மகனுக்கு, விழி போல துருதுருவென இருக்கும் பெண் மனைவியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்பது அவரது விருப்பம். மகனுக்குக் காதலிக்கக் கற்றுக்கொடுப்பது கஷ்டமாக இருக்கிறதே என்ற கவலை.
“நீ கவலைப்படாத சாம்பவி! விழி மேல உன் பையனுக்குக் காதல் இருக்கு. வெளியே காட்ட யோசிக்குறான் அட்லீஸ்ட் விழிக்கிட்ட காதலை காட்டுனா நல்லா இருக்கும்!” என்று பெருமூச்சுவிட்டார்.
தம்பி அளவுக்கு அண்ணன் மோசம் இல்லை. காலையிலேயே டிப்டாப்பாகக் கிளம்பிவிட்டான்.
‘பொக்கே வாங்கினாதான் அலர்ஜி ஆகும். அன்னைக்கு மல்லிகைப்பூ வச்சிருந்தாளே, அதையே வாங்குவோம்!’ என இரண்டுக்கு நாலு முழமாக வாங்கிக்கொண்டு நேராகத் தம்பியின் ஆபீஸுக்குக் கிளம்பினான்.
‘இந்தக் குட்டச்சிக்கு என்ன வாங்கிட்டுப் போகலாம்?’ எனக் கண்களை மூடி யோசித்தவனுக்கு அவளின் நாட்டிய அசைவுகளே வந்து நிற்க, சதங்கை வாங்கலாம் எனக் கடைக்குப் போனான்.
அதிக முத்துவரிசைகள் கோர்த்த பித்தளைச் சலங்கையை ஆசையாக அவளுக்காக வாங்கினான். முகம் என்னவோ இறுக்கமாக இருந்தாலும், உள்ளத்தின் இளகல் கண்களில் தெரிய, அதே இளக்கத்தோடு திகள்விழிக்காக டான்ஸ் ஸ்கூல் வாசலில் காத்திருந்தான்.
திகள் ‘லேட்டாக வருகிறோம்’ என்ற டென்ஷனில் சுற்றத்தை கவனிக்காமல் பள்ளி கேட் அருகே போக, ‘இவளுக்குத் திமிரைப் பாரு!’ என்ற கோபத்தில் அவள் வண்டியை மறித்தது போல நின்றான்.
“ஐயோ!” என்ற அலறலோடு வண்டியோடு விழப்போனவளை நொடியில் கைபிடித்துத் தூக்கி நிறுத்தினான் பத்ரன்.
பயத்தில் கைகால்கள் நடுங்க நின்றிருந்தவளைப் பொம்மை போல இடையில் கைகொடுத்துத் தூக்கி ஓரமாக நிறுத்திவிட்டு, விழுந்து கிடந்த ஸ்கூட்டியைத் தூக்கி நிறுத்தினான்.
அதற்குள் தெளிந்திருந்தாள் திகள்விழி.
“சார் உங்களுக்கு என்ன பைத்தியமா? திடீர்னு குறுக்க வந்து விழுறீங்களே செத்திருந்தா என்ன செய்வீங்க?” என்று மூக்கு விடைக்கக் கேட்டவளை மேலிருந்து கீழ்வரை பார்த்த பத்ரன்,
“எது இந்த வண்டி மோதி நான் செத்துருவேனா?”
அவன் பேச்சில் நக்கல் கொட்டிக்கிடந்தது.
“இந்த வண்டி இல்ல, இதே போல நாலு வண்டி ஏறினாலும் நீங்க இருக்குற வெயிட்டுக்கு சுண்டுவிரல்ல அடிபடுறதே அதிசயம்!
நான் சொன்னது என்னை, நான் செத்துட்டா நீங்கதான் கொலை கேஸ்ல உள்ள போகணும்! இப்போ சொல்லுங்க, எதுக்கு இந்தக் கொலைவெறி?”
“நேத்து பயந்து அழுதுட்டு ஓடுன. இன்னைக்கு வாய் காது வரை நீளுது பயம் போயிடுச்சா?” என்ற பத்ரனின் அழுத்தமான கேள்வியில் முகம் வாடித் தலையைக் குனிந்துகொண்டாள் திகள்விழி.
“முகத்தை இப்படி வைக்காத. உன்னைப் பார்க்க நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். நீ கண்டுக்காம போகவும் கோவத்துல வண்டி முன்னாடி வந்துட்டேன் சாரி!” என்றான்.
“ம்ம்ம்…” எனத் தலையை ஆட்டிய திகள், நிமிர்ந்து அவனைப் பார்க்க, அவள் கண்மை பூசிய விழிகளில் இரண்டாவது முறையாக அவன் இதயம் தடுமாறியது.
