உருத்திரா 8❤️

 

எனக்கு மருந்து நீதான் என வாய் திறந்து சொல்லாமல், முத்தத்தில் காட்டிக்கொண்டிருந்தான் அந்தக் காதல் அரக்கன்.

அவனை ஏற்கவும் முடியாமல் தள்ளிவிடவும் முடியாமல் கை விரல்களை மடக்கித் தன் உணர்வுகளைக் கொன்று பொம்மைபோல அவனுக்கு இதழைக் காட்டினாள்.

முத்தத்தின் முடிவில் ருத்ராவின் கண்களில் தெரிந்த அப்பட்டமான யாசிப்பை அவளால் ஏற்க முடியவில்லை. தன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் நிலாஞ்சி.

“உன்னை ஆபிஸில டிராப் பண்றேன் ஆரலி”

“வாயை மூடு, ஒழுங்கா ஹாஸ்பிடல் போ!” என்று எரிந்துவிழுந்தாள்.

மறுபேச்சில்லாமல் அவன் ஃபேமிலி டாக்டரிடம் அவளையும் அழைத்துக்கொண்டு போனான்.

தன் முன்னே பவ்யமாக உட்கார்ந்திருந்த ருத்ராவைப் பார்த்த டாக்டருக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை.

“டாக்டர் இவருக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடி நோஸ் பிளீடிங் ஆச்சு. தலை வலிக்குதுனு சொல்றாரு செக் பண்ணுங்க!” என்ற நிலாவை, ‘யாரு நீ?’ என்பது போலப் பார்த்தார் டாக்டர்.

“டாக்டர் இது ஆரலி. என்னோட வைஃப்…”

பாவம் டாக்டர் அடுத்தடுத்த அதிர்ச்சிகளை எப்படி தாங்குவார்! 

“ஒன் செகண்ட்…” எனத் தண்ணீர் குடித்துத் தன்னைச் சமாதானம் செய்தவரோ, “செக்கப் ரூமுக்குப் போங்க ருத்ரா!” என்று அவனை அனுப்பிவிட்டு, சரபனுக்குப் போன் செய்து அவனை வரச் சொன்னார்.

“டாக்டர் அவருக்கு என்ன ஆச்சு? பெரிய பிரச்சனையா? அவர் அம்மா, அப்பாவை வரச் சொல்லணுமா?”

‘அட, இரும்மா நீ வேற!’ என நொந்துகொண்டவர் “இப்போ சரபன் வருவாரு. அவர் கிட்ட தெளிவா கேட்டுக்கோங்க நான் ருத்ராவைச் செக்கப் பண்ணிட்டு வர்றேன்” என்று உள்ளே போய்விட்டார்.

‘தேவையில்லாத சிக்கல்ல மாட்டிருக்கேன்! பார்வதிக்குத் தெரிஞ்சா சோத்துல விஷம் வச்சுருமே, பெத்த தாயா இருந்தாலும், ஒழுங்கா இல்லைனா கொலை பண்ணிடும் என் தெய்வத்தாய்’ என வயிற்றில் புளியைக் கரைக்க, பயத்தோடு அமர்ந்திருந்தாள்.

சிறிது நேரம் கழித்து, கதவை உடைக்காத குறையாகத் திறந்துகொண்டு உள்ளே வந்தது ருத்ராவின் குடும்பம். அவர்கள் பின்னே முகம் இறுகப் பத்ரன் வர, சரபன் பாவமான முகத்தோடு வந்தான்.

“நிலா ஆர் யூ ஓகே? அவன் உன்னை எதுவும் பண்ணலையே?”

“நோ சார்! நான் நல்லா இருக்கேன். ஆக்சுவலா அவருக்குத்தான் கார்ல வரும்போது நோஸ் பிளீடிங் ஆச்சு” என்று பத்ரனிடம் சொன்னாள்.

சுற்றியிருந்தவர்களைப் புரியாமல் பார்த்தாள்.

“இவங்க என்னோட தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா”

“அம்மா, பாட்டி, இவங்க நிலாஞ்சி” என்று பத்ரன் அறிமுகம் செய்து வைக்க, “ஓஓஓ நிலாவா?” என இருவரும் கண்களை விரித்தனர்.

அதற்குள் டாக்டர் வந்துவிட, அனைவரின் பார்வையும் அவரிடம் திரும்பியது.

“அடிக்கடி பிளீடிங், தலைவலி வர்றது நல்லதில்லை சார். ருத்ரா கொஞ்சம் கொஞ்சமா தன் கட்டுப்பாட்டின் எல்லையைத் தாண்டிட்டு இருக்காரு. இதேபோல அவருக்கு டிப்ரெஷன் தொடர்ந்தால் அவரை மீட்குறது கஷ்டம்”

“டாக்டர்!” என எல்லோரும் கலங்கியபடி அழைத்தனர்.

“இதுக்கு வேற வழி இல்லையா டாக்டர்?”

“சரபன், ஆரலி இறந்துட்டதா சொன்னிங்க. அப்போ இந்தப் பொண்ணு?”

“நான் தெளிவா சொல்றேன்” என நிலாஞ்சியை ஆரலியாக ருத்ரா நினைத்துக்கொண்டிருப்பதைச் சொன்னான்.

“எங்களால் அவனைத் தடுக்க முடியல டாக்டர்! நிலாவை ஆரலினு முடிவு பண்ணி ஏதேதோ பண்றான்” எனக் கவலையுடன் சரபன் சொன்னான்.

“குட்! எந்த வழியும் இல்லாம இருக்கும் போது கிடைக்கிற சின்ன ஜன்னல் மாதிரி, இவங்களால ருத்ராவை அவரோட உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியுது. 

நிலா நீங்க ருத்ரா குணமாகுற வரை ஆரலியா அவர் கூட இருங்க!”

“என்ன டாக்டர் விளையாடுறீங்களா? பத்து நிமிஷம் அவர் கூட பயம் இல்லாம இருக்க முடியல. இதுல குணமாகுற வரை கூட இருனு சொல்றிங்க.

ஒரு விஷயம் தெளிவா சொல்றேன் நான் நிலாஞ்சி. என்னை ஆரலினு அவர் தப்பா நினைச்சிருக்காரு அது தப்புனு அவருக்குப் புரிய வைங்க. அதை விட்டுட்டு என்னை ஆரலியா மாறச் சொல்றீங்க” அவளும் எவ்வளவு பொறுத்துப் போவாள்? டென்ஷன் ஆகிவிட்டாள்.

“உங்க கோபம் புரியுது நிலா! அவர் எங்க பேச்சைக் கேக்குற அளவுக்காவது அமைதியா இருக்கணும்னா, நீங்க கொஞ்ச நாள் அவருக்காக ஆரலியா இருங்க. இத்தனை வருஷத்துல ருத்ரா அதிகபட்சமான மயக்க மருந்து எடுத்துத்தான் ஒவ்வொரு செக்கப்பையும் கடந்து வந்திருக்காரு. இன்னைக்கு அவரை நார்மல் பேஷண்ட்டா பார்க்கும்போது என்னால நம்ப முடியல. அட்லீஸ்ட் ருத்ராவின் பிஹேவியர் சேஞ்ச் ஆகுற வரைக்கும் நீங்க அவர் கூட இருக்கணும்”

“ஆனால்…”

“அம்மாடி உன்னைக் கெஞ்சிக் கேக்குறேன்மா! இத்தனை வருஷமா அவனைப் பழையபடி மாற்ற நிறைய முயற்சி பண்ணோம். ஏதாவது வழி கிடைக்காதானு தவிச்சுட்டு இருந்தோம். 

உன்னால அவனோட நிலையை மாத்த முடியும்னு டாக்டர் சொல்றாரு. என் பையனை எனக்குத் திரும்பி குடேன்!” எனக் கையெடுத்துக் கும்பிட்ட சாம்பவியைக் கண்டு பின்னால் நகர்ந்தாள் நிலாஞ்சி.

அபிராமி அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு, “எங்களுக்குப் புரியுதும்மா ஆரலியா உன்னை நினைச்சு உன்கிட்ட பேசும்போது நிலா உனக்கு கோபம் வரும். எங்களுக்கு வேற வழியில்லை நிலா. இந்த ஒரு உதவி மட்டும் பண்ணும்மா!” என்று கெஞ்சிக் கேட்டார்.

என்ன முடிவெடுப்பது எனப் புரியவில்லை.

சில நிமிங்கள் அமைதியாக நின்ற நிலா பெருமூச்சோடு “ஓகே டாக்டர் நான் அவர் கூட நார்மலா பேசுறேன்னு வச்சுக்கோங்க. ருத்ரா என்னை ஆரலினு கூப்பிடும்போது, மறுத்து நான் நிலாஞ்சினு சொல்றதுனால அவருக்கு பிரச்சனை வருமா?”

“அது அவரோட மைண்டைப் பொறுத்தது! ஆரலி இறந்துட்டானு நீங்க அவருக்கு புரியவைக்க ட்ரை பண்ணிப் பாருங்க. ரொம்ப டென்ஷன் ஆக விடாதீங்க ஃபர்ஸ்ட், அவர் ஆல்கஹால் எடுத்துக்குறாரே அதை ஸ்டாப் பண்ணுங்க. நியூராலஜி பிரச்சனைக்கு மருந்து எடுக்குற பர்சன் ஆல்கஹால், ஸ்மோக்கிங் தொடவே கூடாது. ருத்ராவை மாத்த வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கு”

‘இந்தக் கருமம் வேறயா!’ என நொந்துகொண்டாள்…

“சரி டாக்டர் ஆனால் நான் நிலாஞ்சினு அவருக்குச் சொல்லிக்கிட்டே இருப்பேன் என்னை யாரும் தடுக்க முடியாது” என்று சொல்ல, மற்றவர்கள் மறுக்கமுடியாமல் தலையை ஆட்டினார்கள்.

ருத்ரா தன் சட்டையின் கைப்பகுதியை மடக்கியபடி வெளியே வந்தான். அங்கு நின்ற தன் குடும்பத்தைக் கண்டுகொள்ளாமல் நிலா அருகில் வந்தவன் “போகலாமா?” என்று கேட்க, தலையை ஆட்டினாள்.

அடுத்து தன் நண்பனைத் தேடினான். பத்ரனுக்கு பின்னால் ஒளிந்திருந்த சரபனின் சட்டையைப் பிடித்து முன்னால் இழுத்தவன் “சாரி மச்சான், அடி பலமா?” என்று கேட்க,

“போடா! உன் கூட பேசமாட்டேன் சட்டையை விடு…”

“சரி, சரி! பொறுமையா கோவப்படு இன்னைக்கு என் ட்ரீட், ஈவ்னிங் வீட்டுக்கு வந்திடு” என்ற ருத்ராவை நிலா முறைத்தாள்.

“இல்ல மச்சான், நான் வரல முக்கியமான வேலை இருக்கு. எனக்குப் பதிலா நிலா வருவா அப்படித்தானம்மா?” என்று நைஸாக நழுவப் பார்த்தான் சரபன்.

“ட்ரீட்னா தண்ணி அடிக்கப்போறீங்களா?” எனக் கோபமாகக் கேட்டாள் நிலா.

அமைதியாக அவன் குடும்பத்தினர் மூவரையும் வேடிக்கை பார்த்தனர். தங்களை ஒதுக்கிவிட்டு அவர்களோடு சகஜமாக ருத்ரா பேசுவது வலித்தது. இருந்தும் அமைதியாக இதையும் கடந்தனர்.

“அவரை விடு ருத்ரா! இனிமேல் நீ குடிக்கக்கூடாது புரியுதா?”

“ஏன்?”

“உனக்கு உடம்பு சரியில்லை. ஆல்கஹால் எடுக்கக்கூடாதுனு டாக்டர் சொல்லியிருக்காரு! இத்தனை வருஷம் அதிகமா எடுத்துட்ட இனி வேண்டாம்” என்றவளை அழுத்தமாகப் பார்த்தானே தவிர பதில் சொல்லவில்லை.

“ஓகே உன் இஷ்டம். நீ குடிச்சுச் சாவு நான் கிளம்புறேன். பத்ரன் சார் என்னை ஆபீஸில் விட்டுடுங்க” என்றவள் நடக்க ஆரம்பிக்க, தன்னைத் தவிர்த்து அவனுடன் எப்படி போகலாம்? என உடனே சாருக்கு கோபம் வந்துவிட்டது. 

வேகமாக அவளைத் தூக்கிக்கொண்டான்.

“எனக்கு நடக்கத் தெரியும் ஒழுங்கா என்னை இறக்கிவிடு குடிகாரா! ஈவ்னிங் போய் நீ பார்ட்டி பண்ணு இல்லை, கிளஃப்ல டான்ஸ் ஆடு மறுபடியும் ‘மஃபின்’ சொல்லிட்டு என் கிட்ட வராத!” என்று முகத்தைத் திருப்பினாள்.

“சரி கோவப்படாத ஆரலி. நான் குடிக்கல போதுமா?”

“போதாது! என் மேல சத்தியம் பண்ணு!”

“ஆரலி மேல சத்தியமா இனி குடிக்கல” என்றவனின் வாயில் சுளீரென அடித்தாள் நிலாஞ்சி.

“நிலாஞ்சி மேல சத்தியமா இனி குடிக்க மாட்டேன்னு சொல்லு” என்றாள் பிடிவாதமாக,

அவன் கல்போல நிற்க, அவளும் சலிக்காமல் அவன் கைகளில் ஜம்மெனத் தவழ்ந்தாள்.

குடும்பமே இருவரையும் ஆஆஆஆவென வாயைப் பிளந்து பார்த்தது.

“என்னடா நடக்குது இங்க? உன் அண்ணன்தான் லூசுனு நினைச்சா, அந்தப் பொண்ணு அவனைவிட லூசா இருக்கும் போல!”

என்ற சரபனை முறைத்தான் பத்ரன்.

“நீ ஏன் முறைக்குற? அவன் பேஷண்ட் அவனை அவன் வழியில போய்க் குணப்படுத்தாம, நிலா சொல்லுனு வம்பு பண்ணுது இந்தப் பொண்ணு”

“அதுக்காக ஆரலியா நடிக்க முடியுமா சரபா? நிலாவுக்குத் தனியா ஃபீலிங்ஸ் இருக்காதா, ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்” என்றான் பத்ரன்.

“அதுசரி, வாங்க நாம கீழே உட்காருவோம். இவனுங்க இப்போதைக்கு நகர மாட்டானுங்க”

சரபன் சலிப்பாக சொல்ல,

கடைசியில் ருத்ராதான் இறங்கி வந்தான். பெருமூச்சோடு “என் சாக்லேட் மஃபின் மேல ப்ராமிஸ்! இனி குடிக்கல ஓகேவா?” என்று மென்மையாகக் கேட்டான்.

“சாக்லேட் மஃபின் யாரு?”

“நீதான்…”

“குட்! நல்லா ஞாபகம் வச்சுக்கோ! நான் மஃபின் எனக்காகக் குடிக்கக்கூடாது. போகலாம் ஆபீஸ்ல நிறைய வேலை இருக்கு” என்று அவனுக்கு உத்தரவிட்டவளைக் கண்டு அபிராமியும் சாம்பவியும் சிரிக்க, நான்கு ஆண்களும் அதிசயமாகப் பார்த்தனர்.

“என்னங்க எனக்கு நம்பிக்கை இருக்கு. நிலா நம்ம பேரனை மீட்டுத் தந்திடுவா!” என்ற அபிராமியை அதிருப்தியாகப் பார்த்தார் நடராஜன்.

“உன் பேரன் வாழ்க்கைக்காக அந்த பொண்ணைப் பணயமா வச்சுருக்க அபிராமி!”

“உனக்கு நான் என்ன சொன்னாலும் புரியாது!” என்றவர், 

“சரபா நீ ருத்ராகிட்ட பேசிப் பாரு. எங்களுக்கு நிலாவை அவனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்குறதுல பிரச்சனை இல்லை. அதுக்கு அவன் நிலாவை நிலாவா ஏத்துக்கணும்” எனக் கறாராகச் சொல்லிவிட்டுப் போனார்.

“அப்பா சொன்னது கேட்டுச்சா? பத்ரா, நீயும் சரபன் கூடச் சேர்ந்து ருத்ராகிட்ட பேசு” என்றார் மகாதேவன்.

‘நீங்க மிச்சர் சாப்பிட்டு முடிச்சிட்டீங்களா?’ என்ற பார்வையைப் பார்த்த சரபனோ, ‘ஒரு நாலு நாள் லீவ் தாங்களேன். ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்’ என்ற நிலைமையில் இருந்தான்.

“இப்போ என்ன பண்றது?” 

“ஒண்ணும் பண்ண வேண்டாம் பத்ரா. அமைதியா இருப்போம் இரண்டு பேரும் ஒரு எதுவரை போறாங்கனு பார்ப்போம்” என்று சீரியஸாகச் சொல்லிவிட்டுப் போனான் சரபன்.

தன் ஆட்களிடம் நிலாஞ்சியின் குடும்பத்தைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க சொன்ன பத்ரன், அமைதியாக நடப்பதைப் பார்க்க முடிவு செய்தான்.

நிலாவை ஆபீஸில் இறக்கிவிட்ட ருத்ரா அப்படியே கிளம்பாமல் அவளோடு உள்ளே வர, இருவரையும் மொத்த ஆபீஸ் ஆட்களும் ‘அடுத்து என்ன?’ என்று ஆர்வமாகப் பார்த்தனர்.

நிலா சங்கடமாக நெளிய, அவளைத் தோளோடு அணைத்துப் பிடித்த ருத்ரா, “ஷி இஸ் மை லவ்வர், ஃபியூச்சர் வைஃப் சோ, ரெஸ்பெக்ட் கொடுத்து நடக்கணும் அர்டர்ஸ்டான்… நான் இன்ஃபார்ம் பண்ணல, ஆர்டர் குடுக்குறேன்” என்று கம்பீரமாகச் சொல்லிவிட்டுப் போனான்.

ருத்ரா கிளம்பியதும் நிலாவைச் சுற்றிக்கொண்டது அவள் நண்பர்கள் கூட்டம்.

“ருத்ரா சார் உன் ஆளுனு சொல்லவே இல்ல பாவி! காலையில அவரு ஃபைட் பண்ணி உன்னைத் தூக்கிட்டுப் போற சீனைப் பார்த்து நாங்க பயந்தே போய்ட்டோம் தெரியுமா”

“ஏன் பயந்திங்க? அவரு என்னை எதுவும் பண்ணல”

“இல்லடி அவரு ஆளு ஒரு மாதிரினு கேள்விப்பட்டோம்” என்று தயக்கமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள,

“ஒரு மாதிரினா? முழுசா சொல்லு” என்று முறைத்தாள் நிலாஞ்சி.

“அதுவந்து… அவருக்கு ஆக்ஸிடெண்ட் ஆனதுல மூளை…” என இழுத்தவர்கள், “நாங்க சொல்லல… ரூமர்ஸ் எங்க காதுக்கு வந்தது” என்றனர்.

“அதான் ரூமர்ஸ்னு சொல்லிட்டியே! அவரைப் பத்தி இனி பேசாதீங்க, ஹி இஸ் கம்ப்ளீட்லி ஆல்ரைட். போங்க வேலையைப் பாருங்க” என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டுப் போனாள்.

நிலாஞ்சியின் குடும்பத்தைப் பற்றிய தகவல்கள் அடங்கிய ஃபைலைப் பார்த்துக்கொண்டிருந்தான் பத்ரன். நிலாஞ்சியின் தங்கை திகள்விழி என்று தெரிந்து அவன் எப்படி உணர்ந்தான் எனப் புரியவில்லை.

இரு பெண்களுமே அண்ணன், தம்பி இருவரையும் வெவ்வேறு வழிகளில் ஈர்த்துவிட்டார்கள். நிலாவுக்கு ஒரு பிரச்சனை என்றால் தன் வாழ்க்கையும் பாதிக்கும் என்று தெரியும். எளிதில் தீர்க்க முடியாத சிக்கலில் ருத்ராவின் உடல்நிலை மட்டுமல்ல, குடும்பமே மாட்டியிருக்கிறது.

பாட்டி, அம்மாவிடம் ஃபைலைக் காட்டினான். அவர்களுக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை.

“ரொம்ப சந்தோஷம் பத்ரா! இரண்டு கல்யாணத்தையும் ஒன்னா வச்சிடலாம்”

ஏழு வருடங்களுக்குப் பிறகு அம்மாவின் முகத்தில் இருந்த உண்மையான சிரிப்பைக் கண்டு பத்ரனின் மனம் லேசாக இருந்தது.

அன்றைய நாள் கலவரத்தோடு தொடங்கி அமைதியாக முடிந்தது.

அடுத்த நாள் ஞாயிறு என்பதால், தூங்கும் மகள்களைத் தொல்லை செய்யாமல் பார்வதி காலை உணவு சமைத்துக்கொண்டிருந்தார்.

அவருக்கு இருக்கும் அக்கறையில் பாதிகூட அவர்கள் காதலர்களுக்கு இல்லைபோல,

‘அவ எப்படி தூங்கலாம்? போடுறா போனை!’ என்று பத்ரன் திகள்விழியின் போனுக்கு விடாமல் போன் செய்துகொண்டிருந்தான்.

ருத்ரா தன் வீட்டு தோட்டத்தில் இருந்த தொட்டியில் பாரின் சரக்கு பாட்டில்களைப் போட்டு உடைத்து அலப்பறை பண்ணிக்கொண்டிருக்க, “மனசு வலிக்குது, அதுல ஒரு பாட்டில என்கிட்ட குடுடா. உன் பேரைச் சொல்லி எடுத்துட்டுப் போறேன்” என்ற நண்பனை அமரவைத்து, அவன் முன்னாடியே பாட்டில்களைப் போட்டு உடைத்தான்.

“திருந்துறது சரி! ஒரேதா திருந்தி எங்களை நோகடிக்காதீங்கடா…” என சரபனால் புலம்ப மட்டுமே முடிந்தது.

தன் ஆட்களிடம் நிறுத்தச் சொல்லிச் சைகை காட்டிய ருத்ரா, நிலாவுக்கு வீடியோ கால் செய்தான்.

“அக்கா என் போன் அடிக்குது, எடுத்து பேசு…”

“என் போனும் அடிக்குது! எடுத்து நான் தூங்குறேன்னு பதில் சொல்லிடு” என பெண்கள் இருவரும் மாறி மாறி போனைத் தள்ளி வைத்துவிட்டுத் தூங்க, “எவ்வளவு நேரமா போன் அடிக்குது, எடுத்து பேசாம என்னடி பண்றீங்க?” என்ற பார்வதியின் சத்தத்தில் இருவரும் அடித்துப் பிடித்து எழுந்தனர்.

“தூங்க விடுங்களேன், பிராக்டீஸ் பண்ணிக் கால் வலிக்குது!”

அழாத குறையாகப் போனை எடுத்து, “ஹலோ” என்றாள் திகள்விழி.

“குட்டச்சி!” என்ற பத்ரனின் குரலில் கண்களை அகல விரித்தவள், பாத்ரூமுக்குள் ஓடிப்போய் கதவை அடைத்துக்கொண்டாள்.

ஹஸ்கி குரலில் “ஹலோ… உனக்கு எப்படி என் நம்பர் கிடைச்சது?” என்று அவசரமாகக் கேட்டாள்.

“பல்லைத் தட்டிருவேன்டி, மரியாதையா பேசணும்”

“முடியாது போடா! அப்படித்தான் பேசுவேன். எதுக்கு என் கால்ல சலங்கை மாட்டிவிட்ட? நாளைக்கு வந்து அதை வாங்கிட்டுப் போ”

“நான் நேர்ல இல்லைன்ற தைரியத்துல வாய் பேசாத குட்டச்சி! அடுத்து உன்னைப் பார்க்கும்போது இதுக்கும் சேர்த்துத் தண்டனை தருவேன்” என்று மிரட்டினான்.

அதில் கொஞ்சம் பயந்தவள் “சரிங்க, சார் மரியாதை கொடுத்துப் பேசுறேன். என் நம்பர் எப்படி கிடைச்சுதுங்க சார்?”

“உன் நம்பர் பாட்டி கொடுத்தாங்க! அதைவிடு குட்டச்சி, உனக்கு ஒரு செயின் வாங்கலாம்னு இருக்கேன் நாளைக்கு ஈவ்னிங் வந்து ஸ்கூல்ல பிக்கப் பண்ணிக்குறேன். வீட்டுக்குப் போய்டாத!”

“ஹலோ என்ன ஓவரா போறீங்க? நான் உங்களை கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்றேன். நீங்க கிஃப்ட், முத்தம், செயின்னு போயிட்டே இருக்கீங்க உங்க பெயர்கூட எனக்குத் தெரியாது” எனக் கீச்சுக் குரலில் சண்டையிடும் அவளைக் கொஞ்சத் தோன்றியது. 

நேரில் இருந்தால் தன் உயரத்துக்குக் குதித்தல்லவா சண்டையிடுவாள்!

“குட்டச்சி உன் ஹஸ்பண்ட் பேரு ருத பத்ரன். யாரு கேட்டாலும் மிஸஸ் பத்ரன்னு சொல்லணும் சரியா?”

“ஏன் சார் படுத்துறிங்க?” என்று அழுகைக் குரலில் கேட்டாள் திகள்.

“நீ என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன். எதிர்த்துப் பேசாம என்னோட பொண்டாட்டி ஆகத் தயாரா இருடி! உன்னைக் கொஞ்சிக்கிட்டே சுத்த என்னை நானே ப்ரிப்பேர் பண்றேன் நீதான் கோவப்படுத்துற!” என்று நமட்டுச் சிரிப்போடு சொன்னான்.

“நீ ஒண்ணும் என்னைக் கொஞ்ச வேண்டாம்! பத்ரன் பேரு வச்சவனை நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் போ!” எனப் போனை அணைத்துவிட்டாள்.

அழுகை ஒருபுறம், அக்காவிடம் மறைக்கிறோமே என்ற குற்ற உணர்வு ஒருபுறம் எனத் திகளின் மனம் அமைதியில்லாமல் தவித்தது.

திகள் போனைத் தூக்கிக்கொண்டு ஓடிய நொடி, நிலா தூக்கக் கலக்கத்தில் வீடியோ காலை ஆன் செய்தாள்.

காலையிலேயே “ஆரலி!” எனப் பல்லைக் காட்டிய வில்லனை, கண்களைக் கசக்கிப் பார்த்தாள் நிலா.

“ஆரலி இங்க பாரு” எனப் போனைத் திருப்பிக் காட்டினான். மது பாட்டில்கள் எல்லாம் பெரிய தொட்டியில் அடக்கமாகி இருந்தன.

“ம்ம்ம்ம்…”

“தூங்குறியா மஃபின்?” என்றானே பார்க்கலாம்!

“இல்ல கபடி ஆடுறேன்! எருமை கண்ணு தெரியல உனக்கு? காதலிக்க நேரம் காலமே கிடைக்கலையா?”

“அப்படி நாக்கைப் புடுங்குற மாதிரி கேளும்மா! இப்போதான் மனசுக்கு சந்தோஷமாக இருக்கு” என்று வாயை மூடிக்கொண்டு சிரித்தான் சரபன்.

விமல் “ருத்ரா சார் உங்களை முறைக்குறாரு” என்று முணுமுணுக்க, “சாரி மச்சான்! நீ காதல் பண்ணு நான் வெளிய நிக்குறேன்” என ஓடிவிட்டான்.

“ஆரலி…”

“ஆரலி இல்ல நிலாஞ்சி! சும்மா காலையில போன் பண்ணி ஆரலினு சொல்லிக் கடுப்பைக் கிளப்புற!” என்று சிடுசிடுத்தாள்.

“ஆரலி!” என்றவன் கர்ஜனையில் திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள் நிலா.

கண்கள் சிவந்து, கோபத்தில் தாடை இறுக, அவளை முறைத்துக்கொண்டிருந்தான்.

“நீ எப்பவும் என்னோட ஆரலி மட்டுமே மறந்துடாத! கொஞ்சம் இறங்கிப் போனா என் குணத்தை மறந்திடுவியா? நான் இன்னும் அதே ருத்ராதான்”

அவன் குரல் அத்தனை ஆக்ரோஷமாக இருந்தது. நிலாவின் முகம் கசங்க, அமைதியாகிவிட்டாள். அந்த நொடி ஆரலி என்ற பெயரைத் தன் உயிர்வரை வெறுத்தாள். ருத்ராவை ஏற்க நினைத்த மனம்கூட அவனுடைய இன்றைய பேச்சில் பின்வாங்கிக்கொண்டது.

தன் கலங்கிய கண்களை அழுந்தத் துடைத்தவள் “சாரி சார். நான் அட்வான்டேஜ் எடுத்துப் பேசிட்டேன் மன்னிச்சிடுங்க!” என்றாள்.

அவள் கண்ணீரைக் கண்டு கோபம் குறைந்த ருத்ரா அடுத்த நொடி எதுவும் நடக்காதது போல, “மஃபின் வெளியே போகலாமா? ஜாலியா ஒரு ரைடு, ரொம்ப நாள் ஆச்சு” என்று கேட்டான்.

“இன்னைக்கு வீக்கெண்ட் சார்! அப்பா, அம்மா கூட டைம் ஸ்பெண்ட் பண்ணணும். ஈவ்னிங் கொஞ்சம் ஃபைல் ஒர்க் இருக்கு நாளைக்கு டெண்டர் இருக்கு. பத்ரன் சார் கூட பெங்களூரு போறேன், வந்ததும் போகலாம்” 

அவள் முகத்தில் எந்த மென்மையும் இல்லை ‘நீ கேள்வி கேக்குற நான் பதில் சொல்றேன்’ என்ற பாவனை மட்டுமே இருந்தது.

 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!