அந்தக் கட்டடத்தை விட்டு வெளியே வந்ததும் ருத்ராவின் கையிலிருந்து குதித்து இறங்கிய நிலா “சும்மா சும்மா தூக்காத ருத்ரா!” என்று திட்டினாள்.
“நீதான் உள்ள மயக்கம் வருதுனு சொன்ன… பொய் சொன்னியா?”
“ஆமாம் அவனை அந்த அடி அடிக்கிற? பிரச்சனை ஆகிடப்போகுதுனு சொன்னேன். சரி கோவப்படாத வெளியே போகலாம் வா! சாப்பாடு அருமையா இருக்குற பிளேஸ் போகலாம். எனக்கு இங்கே நிறைய ஹிட்டன் ஸ்பாட் தெரியும்”
“வெயிட் ஆரலி! கார் வரட்டும்…”
“கார்ல போனா இந்த டிராஃபிக்ல நைட் டின்னர்தான் சாப்பிட முடியும் சார். சோ என் கூட வாங்க!” என்று ருத்ராவின் கையைப் பிடித்து ஒரு பஸ்ஸில் ஏற்றினாள்.
அன்று முழுவதும் ருத்ராவோடு ஊர் சுற்றிவிட்டு, ரோட்டுக்கடையில் காபியும் போண்டாவும் வாங்கி வந்து தர, ருத்ரா முகத்தைத் திருப்பினான்.
“இது ஹெல்த்தி இல்ல ஆரலி!”
“நேத்து வரை நீ குடிச்ச சரக்கைவிட இது டாக்ஸிக் கம்மியான ஃபுட்தான் அமைதியா சாப்பிடு” என்று அவளே ஊட்டி விட, உர்ரென்ற முகத்தோடு சாப்பிட்டான்.
இரண்டு பேரையும் காணோம் என்று விமல் பதறிட, “வருவாங்க அமைதியா இருப்போம்” என ஹோட்டலில் இருந்தார்கள்.
வாய் மூடாமல் பேசிக்கொண்டே வந்தவளை மிச்சமில்லாமல் கொள்ளையிட்டது ருத்ராவின் விழிகள். இதே போலத்தான் அவன் ஆரலியும் வாயை மூடவே மாட்டாள். இவன் தான், ‘வாயை மூடித்தொலை!’ என்று திட்டுவான்.
அப்போதும் பத்து நிமிடத்துக்கு மேல் அவளால் அமைதியாக இருக்க முடியாது. மீண்டும் பேசி திட்டு வாங்குவாள். அன்று அவன் திட்டியதற்குப் பதிலாக இன்று அவள் பேச்சுகள், சிறு சிறு செய்கைகள் என அனைத்தையும் ரசித்தான்.
“ஆரலி இப்போ உன் அம்மா, அப்பாவா இருக்கிறவங்க யாரு? இவங்ககிட்ட நீ எப்படி போய்ச் சேர்ந்த?” என்று பொறுமையாக கேட்டான் ருத்ரா.
“நான் பதில் சொல்லுவேன், உனக்குக் கோவம் வரும்… இருந்தாலும் சொல்றேன் இவங்க என்னோட சொந்த அம்மா, அப்பா பொறந்ததிலிருந்து இவங்க கூடத்தான் இருக்கேன்”
அவள் பதிலில் அழுத்தமாக அவளைப் பார்த்தான்! அந்த பார்வையில் நிலாவின் முதுகுத்தண்டு சில்லிட்டது.
“ஆரலி எப்படி இருப்பா ருத்ரா? அவள் என்னைவிட அழகா? இதைப் போல மூக்குல வளையம் போட்டிருப்பாளா? இரண்டு பேரும் ஒரே மாதிரி இருப்போமா?” கேட்க விருப்பம் இல்லை என்றாலும், ஆரலியைப் பார்த்துவிட மனம் அரிக்க, கேட்டுவிட்டாள்.
தன் பர்ஸுக்குள் இருந்த ஆரலி போட்டோவை எடுத்து காட்டினான் ருத்ரா. ஆரலியைக் கண்டு அதிர்ந்துதான் போனாள் நிலா!
சிறு பெண், வயதுக்கு மீறிய உடல் எடையோடு, மாநிறத்துக்கும் குறைவான நிறத்தில் இருந்தாள். காது, மூக்கில் நகை எதுவும் இல்லை. கழுத்தில் கருப்புக் கயிறு, சட்டை பாவாடையில் புன்னகை முகமாக நின்றிருந்தாள் ஆரலி.
“ஆரலி…” என அந்தப் போட்டோவைத் தடவினான்.
நிலாவைக் கண்டு “ இந்த ஏழு வருஷம் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன். நீ திரும்ப வந்துட மாட்டியானு மனசு ரொம்ப ஏங்குச்சு, ஃபைனலி நீ வந்துட்ட!”
“எனக்கும் இந்த பொண்ணுக்கும் எந்த பொருத்தமும் இல்ல ருத்ரா அப்புறம் ஏன் என்னை ஆரலியா நினைக்கிறீங்க?”
என்று அவனிடம் கேள்வியாக கேட்ட நிலாவின் கண்கள் கலங்கியிருந்தன.
அவன் மூளையில் தீர்க்க முடியாத பிரச்சனை இருக்குமோ எனப் பயந்தாள்.
“என் ஆரலியை என்னால உணர முடியும் மஃபின், நீ என் ஆரலி!” என்று அழுத்தமாகச் சொன்னான்.
நினைப்பு பொய்யாய் போகலாம், உணர்வுகள் பொய் சொல்லாதே!
அதன்பின் நீண்ட நேரம் அமைதியான பயணம். இரவு உணவு சாப்பிட்டு இருவரும் வெளியே வர, “இஞ்சி மிட்டாய்!” என்ற அழைப்பில் வேகமாகத் திரும்பினாள் நிலா.
அங்கு நின்றிருந்தவனைக் கண்டு சந்தோஷமாக, “பேபி!” என்று ஓடிப்போய் அணைத்துக்கொள்ள,
ருத்ராவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால், அவளை அணைத்திருந்தவன் மீது கூர்மையாகப் பார்வை படிந்தது.
“நீ இன்னும் உயிரோடதான் இருக்கியா? ஊரைவிட்டு போன நான் கூட செத்துப் போயிட்டியோனு நினைச்சேன்!” என்றவனை முறைத்தாள் நிலா.
“ஓவரா பேசாதடா! கொஞ்சம் பிஸியாகிட்டேன் உடனே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிருவியே!
ஆமாம், நீ மட்டும் வந்திருக்க பேபியோட பேபி எங்க?”
“மூட் ஸ்விங் பக்கி வீட்டுல உட்கார்ந்திருக்கு, நான் சாப்பாடு வாங்க வந்தேன். மேடம் எப்போ பெங்களூரு வந்தீங்க? வீட்டுக்கு வராம அப்படியே ஓடப் பார்த்த செத்தடி நீ!” என்று அவள் காதைப் பிடித்து திருகினான் புதியவன்.
“ஸ்ஆஆஆ… வலிக்குதுடா எருமை!” என்று அவனை அடித்திட, இருவரையும் ஒரு ஜீவன் கோவத்தில் பார்ப்பதை அவர்கள் உணரவில்லை.
இருவருக்கும் இடையே வந்து புதியவனைத் தள்ளிவிட்ட ருத்ரா, நிலாவைத் தன் தோள்வளைவில் வைத்துக்கொண்டு அவனை முறைத்தான்.
“ஐயோ பேபி! ருத்ரா என்ன பண்ற?”
“யாருடி பேபி? நான் தான் உனக்குப் பேபி! என் முன்னாடியே கண்டவனைக் கொஞ்சுறியா?” என அவள் தாடையை வலிக்கப் பிடித்தான்.
“சார் நிலாவை விடுங்க!” என்று அவர்களிடம் வந்தவனை ருத்ரா அடிக்க வர, “ருத்ரா அவன் என்னோட அண்ணன் போல! அடிச்சிடாத அவன் தாங்கமாட்டான்” என தடுத்தாள்.
“அண்ணனா?”
“ஆமாம் சார்! நிலா என் பக்கத்து வீடு சின்ன வயசிலிருந்து நாங்க ஒன்னா வளர்ந்தவங்க, எங்களை தப்பா எடுத்துக்காதிங்க…
யாருடி இவரு? அதுக்குள்ள கமிட் ஆகிட்டியா… பாருவுக்கு தெரியுமா?”
“கொஞ்சம் அமைதியா இருடா குழந்தை சாமி! உன்னால நான் கைலாசம் போயிடுவேன் போல, முதல்ல நீ கிளம்பு நான் உனக்கு போன்ல தெளிவா சொல்றேன்” என்று அவனை அனுப்பிவைத்தாள் நிலா.
“ருத்ரா இங்க பாரு, கோவப்படாத!” என அவன் கைகளைப் பிடித்து அமைதிப்படுத்த பார்த்தாள்.
அவள் கையை உதறிய ருத்ரா, விமலுக்குப் போன் செய்து கார் அனுப்ப சொல்லிவிட்டு கோவமாக நடந்துகொண்டிருந்தான்.
அவளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. அரைமணி நேரத்தில் கார் வந்துவிட, நிலாவைக் காருக்குள் தள்ளியவன் வேகமாகக் காரை ஓட்டிக்கொண்டு போனான். நிலாவுக்கு வாயைத் திறக்கவே பயமாக இருந்தது.
“எங்கே போறோம் ருத்ரா? மெதுவா போ பயமா இருக்கு…”
அவளைத் திரும்பிப் பார்த்து முறைத்தவன் வேகத்தைச் சிறிதும் குறைக்காமல் போனான். நிலா அமைதியாகிவிட, நீண்ட நேரம் கழித்து வாயைத் திறந்தான் ருத்ரா.
“நாளைக்கு நாம கல்யாணம் பண்ணிக்கலாம் ஆரலி!”
அவன கேள்வியில் அதிர்ந்த நிலா “நோ! வண்டியைத் திருப்பு சென்னை போகணும். அம்மா, அப்பாவுக்குத் தெரிஞ்சா பிரச்சனையாகிடும்”
அவன் முகத்தில் இருந்த தீவிரத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல், வேகமாகப் போனை எடுத்து பத்ரனுக்கு அழைத்தாள்.
“சார் ருத்ரா…” என்று முடிக்கவில்லை. போனைப் பிடுங்கி வெளியே எறிந்துவிட்டான்.
“ஏய் என்ன பண்ற? வண்டியை நிறுத்துடா”
ருத்ரா கைகளைப் பிடித்து காரைத் திருப்பினாள். அவ்வளவுதான்! தன் மொத்த பலத்தையும் திரட்டி அவள் கன்னத்தில் ஒன்று கொடுக்க, நிலா மயங்கிவிட்டாள்.
தன் போனிலிருந்து யாருக்கோ அழைத்த ருத்ரா, முக்கியமான விஷயங்களைச் சொல்லிவிட்டு போனை அணைத்துவிட்டான்.
இளவுகாத்த கிளியாக ஹோட்டலில் ஈ ஓட்டிக்கொண்டிருந்த இருவருக்கும் நிலா போன் செய்யவும், ‘அப்பா வந்துட்டாங்க போல!’ என்று நிம்மதியாகப் போனை எடுத்துப் பேசிட, அவளுடைய பதற்றமான குரலும், பாதியில் போன் கால் கட் ஆகிவிட்டதும், ருத்ரா வேண்டாத வேலை செய்துவிட்டான் என்பதை உணர்த்தின.
“அவனுக்குக் கால் பண்ணு சரபா, டிரைவர் நம்பர் குடு விமல்!” எனப் பத்ரன் உத்தரவிட்டான்.
அண்ணன் காரையும் பொண்ணையும் அபேஸ் பண்ணிவிட்டான் என்று தெரிந்ததும் தம்பி டென்ஷன் ஆகிவிட்டான்.
நிலா வீட்டுக்குத் தெரிந்தால் வீண் பிரச்சனை வரும். அவன் குட்டச்சி எகிறி எகிறிச் சண்டை போடுவாள். காதல் ஓகே ஆகி ஒரே நாள்ல அந்து போயிரும் போலயே!
“பத்ரா சென்னை கிளம்பலாம் இங்க வெயிட் பண்றது வேஸ்ட்! ஆல்ரெடி அவன் எங்கே போறான்னு தெரியாது. இப்போ நிலாவைக் கூட்டிட்டுப் போயிருக்கான். தாத்தாகிட்ட பேசலாம்!” என்று சரபன் சொன்னான்.
அதுவே சரியாகப்பட, மூவரும் சென்னை கிளம்பினார்கள்.
ருத்ராவின் கார் பல மணி நேரப் பயணத்துக்கு பின்பு, மலையும் காடும் சூழ்ந்த பகுதியில் நின்றது. அது மலைத்தொடர் பகுதி என்பதால் ஆபத்தான சாலைகள் நிறைந்த இடம். காட்டுக்குள் இருக்கும் வீடு போல இல்லாமல், சகல வசதிகளோடும் இருவர் தங்கக்கூடிய அளவுக்குப் பாதுகாப்பான வீடாக இருந்தது.
மிருகங்கள் வந்துவிடக்கூடாது என மின்வேலி அமைத்திருந்தான். அவன் அனுமதி இல்லாமல் யாரும் உள்ளே வரவோ வெளியே போகவோ முடியாது.
மயக்கத்தில் இருக்கும் நிலாவைப் பூப்போல தூக்கிக்கொண்டு உள்ளே போனான். அவன் ஆட்கள் தேவையான பொருட்களை வைத்துவிட்டுப் போயிருந்தார்கள். கன்னம் வீங்கி, பரிதாபமாக இருந்தவளைப் படுக்க வைத்தவன், தன் லேப்டாப்பை எடுத்து வேலை செய்ய ஆரம்பித்தான்.
இதுதான் அவனுக்குப் பிரியமான இடம். சென்னையில் காணாமல் போவதாக தேடப்படும் போதெல்லாம் இங்குதான் நாட்களைக் கழிப்பான். இது அவனுக்கும் ஆரலிக்குமான பழைய நினைவுகளை சுமந்த இடம்.
அமைதியாக நிலா எழுவதற்காகக் காத்திருந்தான் ருத்ரா.
அவனுக்கு என்னதான் வேண்டும்? அவளைத் திருமணம் செய்தால் இத்தனை நாள் கொண்ட தேடல் முடிந்துவிடுமா?
இல்லை இனிதானே அனைத்தும் இருக்கிறது…
துரோகத்திற்கான பரிசுகளை மிச்சமில்லாமல் அவன் கொடுக்க வேண்டும். அதற்கு அவன் ஆரலி வேண்டும்! அவன் அவனாக இருக்க அவள் வேண்டும்!
நடராஜன் வீடு பேரனைக் காணாமல் அல்லோலப்பட்டது.
“சரபா நீ அவன் கூடவே தான இருப்ப, அவன் எங்க போறான்னு உனக்குத் தெரியாதா?”
“தெரியாது அங்கிள்!” என்று பாவமாகச் சொன்னான் சரபன்.
அப்படி எந்தப் பொந்துக்கு ரகசியமாகப் போய்வருகிறான் என்று வருடக்கணக்காகத் தேடுகிறான் இன்னும் கிடைத்த பாடில்லை.
பத்ரன் ஒரு பக்கம் போனில் கத்திக்கொண்டிருக்க, பாட்டி, சாம்பவி இன்னொரு பக்கம் அழுது புலம்ப யாரும் அங்கு தூங்கவில்லை. பொழுதும் விடிந்துவிட்டது கண்கள் எரிய, தலையைச் சோபாவில் சாய்த்து அமர்ந்திருந்தான் பத்ரன்.
அடுத்த ரவுண்ட் ஆரம்பமாக, அவன் செல்லக்கிளி போனில் அழைத்தது.
“ஹலோ…”
பத்ரன் குரல் கரகரப்பாக வர, பயத்தோடு “மாமா…” என்று மெதுவாக அழைத்தாள் திகள்விழி.
“குட்டச்சி என்ன இந்த நேரத்துல கால் பண்ணிருக்க? நீ ஓகே தான?”
“மாமா விடிஞ்சிடுச்சு மணி ஏழு. அக்கா பெங்களூரு போனா நேத்துலருந்து அவ போன் பண்ணல. வீட்டுல ரொம்ப டென்ஷனா இருக்காங்க. அப்பா அவ ஆபீஸ் போய் விசாரிக்கணும்னு சொல்றாரு. எனக்குப் பயமா இருக்கு அக்காவுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காதில்ல?”
திகள்விழி குரல் கலங்கி வந்தது.
“அழாத விழி, இந்தப் பிரச்சனையை என்கிட்ட விடு! நான் பார்த்துக்குறேன் என்னை நம்பு” என்றான்.
“ம்ம்…” என்றவளின் அழுகை மட்டும் நிற்கவில்லை.
“இப்போ அழுகையை நிறுத்தப்போறியா இல்லையா? உன் அக்காவுக்கு எதுவும் ஆகாது நான் கேரண்டி!”
“ஆனா…”
“கேள்வி கேட்காம கிளம்பு உங்க அப்பாகிட்ட நான் பேசிக்குறேன்!” எனப் போனை வைத்தான்.
சோமசுந்தரத்துக்குப் போன் செய்த பத்ரன், நிலாவின் MD எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவன், தன் வீட்டுக்கு நேரில் வருமாறு அழைத்தான்.
அவர் நிலாவை பற்றிக் கேட்பதை கண்டு நெற்றியைத் தேய்த்தவன், “அங்கிள் நீங்க ஃபர்ஸ்ட் வீட்டுக்கு வாங்க பேசுவோம்!” எனக் கால் கட் செய்திட, பெண்ணைப் பெற்றவருக்கு படபடவென வந்தது.
“பார்வதி நிலா MD அவர் வீட்டுக்கு வரச் சொல்றாரு!”
“நிலா எங்கேங்க? அங்கே ஏன் நாம போகணும்? முதல்ல அவளை வரச் சொல்லுங்க…”
“நேர்ல பேசலாம் வாங்கனு சொல்றாரு! நீ கிளம்பு கார் அனுப்புறாங்களாம், நாம போகணும்!” என்று அவசரமாக மூவரும் கிளம்பி காரில் ஏறிப் பத்ரன் வீட்டுக்கு வந்தார்கள்.
“தாத்தா நீங்களே பொறுமையா அவங்ககிட்ட பேசுங்க!
ம்மா விழியும் வரா, நீங்க அவளை சமாளிங்க!” எனத் தன் அறைக்குப் போய்விட்டான் பத்ரன்.
நடராஜன் வீடு பெரிய அரண்மனை போன்ற முகப்பைக் கொண்டு நிலா குடும்பத்தை வரவேற்றது. திகள்விழி சுற்றிலும் மிரட்சியாகப் பார்த்தபடி வந்தாள்.
“வாங்க தம்பி! வாங்கம்மா!” என்று நடராஜன் வாசலில் நின்று அவர்களை வரவேற்றார்.
“சார் நீங்களா! உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன். தி கிரேட் பிஸ்னஸ் மேன் நடராஜன்!” என்று கை குலுக்கினார் சோமசுந்தரம்.
“உட்காருங்க தம்பி! பெரிய பிஸ்னஸ்மேனா இருந்த காலம் முடிஞ்சதுப்பா. இப்போ முழுக்க ஓய்வு” என்றவர், “அபிராமி!” என மனைவியை அழைத்தார்.
“தங்கம்!” என்ற பாட்டியின் குரலில், “அபி!” என்று அவரிடம் ஓடிய திகள், பாதியிலேயே நின்றுவிட்டாள்.
“என்னடி பாதியிலே நின்னுட்ட? இது நம்ம வீடுதான் வா”
“அப்போ நிலா அக்கா MD…”
“பத்ரன் தான் செல்லம்!” என்றவரின் வார்த்தையில் அமைதியாக அம்மா அருகில் போய் நின்றுகொண்டாள் திகள்விழி.
அவளது அமைதி அபிராமியைக் கலவரப்படுத்தியது. சாம்பவி அவளை பார்த்ததும் ஆசையாக நெருங்க, மருமகளைத் தடுத்துவிட்டார் அபிராமி.
“சார் என் பொண்ணு நிலா எங்கே இருக்கா? நாங்க கால் பண்ணோம் போன் போகல, எங்களுக்கு பயமா இருக்கு”
“அதுவந்து தம்பி, உங்க பொண்ணு என் பேரன் கூட இருக்கா!”
மிகவும் தயங்கிப் பேசினார் நடராஜன். அப்பாவைச் சிரமப்படுத்தாமல் மகாதேவன் இப்போது பேச ஆரம்பித்தார்.
“சோமசுந்தரம் நாங்க சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க!”
ருத்ராவைப் பற்றியும் ஏழு வருடங்கள் முன்பு நடந்த விபத்தை தெளிவாக சொன்னார்.
மனைவி, மகளை ஒரு பார்வை பார்த்த சோமசுந்தரம், மகாதேவனிடம் “சரிங்க சார்! உங்க பேரன் நிலைமை புரியுது. அதுக்கும் நிலா பேசாம இருக்குறதுக்கும் என்ன சம்பந்தம்? முதல்ல எங்க பொண்ணு எங்க இருக்கா சொல்லுங்க” என்று கேட்டார்.
“சம்பந்தம் இருக்கு அங்கிள்!” என்று சொன்னபடி படிகளில் இறங்கி வந்தான் பத்ரன்.
அவனை விழி நிமிர்ந்தும் பார்க்கவில்லை. அதில் ஆணவனின் உள்ளம் அடிவாங்கியது. கூடவே ஆண் என்ற ஈகோ முளைக்க, வம்பாக அவளைப் பார்ப்பதைத் தவிர்த்தான்.
நிலாவை ஆரலியாக ருத்ரா நினைப்பதைச் சொன்னவன், பெங்களூரு ட்ரிப்பில் இருவரும் மிஸ்ஸிங் என்று சொல்ல, பார்வதிக்குக் கோவம் வந்துவிட்டது.
“என்ன தம்பி சொல்றிங்க? வயசுப் பொண்ணு தினமும் அவ எந்தப் பிரச்சனையும் இல்லாம வீட்டுக்கு வரணும்னு கடவுளை வேண்டிட்டு இருக்கேன். நீங்க என்னன்னா உங்க அண்ணன் சரியாகணும்னு அவளை யூஸ் பண்ணிருக்கிங்க”
“உங்களுக்கே இது சரியா படுதா… எங்க பொண்ணு இப்பவே வந்தாகணும்!” என்று உறுதியாகச் சொன்னார்.
“இல்லை சம்மந்தி…” என்ற சாம்பவியின் வார்த்தையில் குறுக்கிட்ட சோமசுந்தரம், “அம்மா அப்படி கூப்பிடாதிங்க. எங்க பொண்ணை மட்டும் குடுத்துருங்க, ஊரைவிட்டே நாங்க போயிடுறோம்!” என்று கையெடுத்துக் கும்பிட்டார்.
“அப்பா!” என அவர் கைகளைப் பிடித்து இறக்கிய திகள்விழி, பத்ரன் குடும்பத்தை முறைத்தாள்.
“நாம போலீஸ் கம்ப்ளைண்ட் குடுக்கலாம்ங்க. இவங்ககிட்ட பேசுறது வேஸ்ட்!” என்று பார்வதி சொல்லிட,
“நாங்களும் ஆட்கள் அனுப்பி தேடச் சொல்லிருக்கோம். தகவல் வந்ததும் உடனே உங்களுக்கு சொல்றோம். இப்போ கூட தப்பு எங்க மேலன்றதுனாதான் பொறுமையா உங்களுக்கு எக்ஸ்பிளைன் பண்றோம் அங்கிள். நிலா கிடைச்சாலும் என் அண்ணன் அவளை ஊரைவிட்டு போக விடமாட்டான். நானும் உங்க இரண்டாவது பொண்ணை விடமாட்டேன்!”
“எங்களுக்கு இவங்க இரண்டு பேரும் முக்கியம்” என்று உண்மையைப் போட்டு உடைத்துவிட்டான் பத்ரன்.
இருவரும் அதிர்ந்து மகளைப் பார்க்க, அவளோ மறுப்பாகத் தலையை ஆட்டினாள். இப்போது அபிராமி, கோவிலில் திகள்விழியைப் பார்த்துப் பழகியதைச் சொன்னார்.
“உங்க இரண்டு பொண்ணுங்களுமே இந்த வீட்டோட குலவிளக்கு! எங்களை நம்பி அவங்களை அனுப்பலாம் நாங்க பார்த்துக்குறோம்”
சாம்பவியின் பேச்சில் அமைதியான பார்வதி, “முதல்ல நிலா வரட்டும் மேடம், அவ வந்ததும் அடுத்து நடக்குறதை பேசிக்கலாம்” என்றார்.
அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, விழியின் கைகளைப் பிடித்து தோட்டத்துக்கு இழுத்துப் போனான் பத்ரன்.
“குட்டச்சி! நான் சொல்றதைக் கேளு…”
“உங்க அண்ணனுக்கு நிலா வேணும். அதுக்கு என் குடும்பம் தடையா வரக்கூடாதுனு என்னைக் கல்யாணம் பண்ணிக்க நினைச்சீங்களா சார்? இரண்டு பொண்ணுங்க வாழ்க்கை ஒரே குடும்பத்துல இருக்குன்ற காரணத்துக்காக என் அம்மா, அப்பா அமைதியாகிடுவாங்கன்ற நினைப்பா?”
“உங்க அண்ணன் சரியானதும் என் அக்கா நிலைமை என்ன? அவங்களுக்காக என்னைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறீங்களே, அப்போ என் வாழ்க்கை?”
திகள்விழி அழது சண்டை போடவில்லை, கண்களில் வெறுப்போடு கேள்விகளை கேட்டாள்.
“அவங்களுக்காக உன்னை நெருங்குனேனா? எங்க என்னைப் பார்த்து சொல்லுடி! தேவைக்காகப் பேசுற மாதிரியா உன்கிட்ட பேசுனேன்?”
“திடீர்னு வந்திங்க கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி மிரட்டுனிங்க! உங்களை வேற எப்படி நினைக்கிறது? என் தப்பு! நானும் இதைக் காதல்னு நம்பிட்டேன்.
அக்கா வந்ததும் நாங்க கிளம்பிடுவோம் உங்க குடும்பத்தோட சங்காத்தமே வேண்டாம்!” என்று முகத்தைத் திருப்பியவளைக் கண்ட பத்ரன் கண்களில் ஆத்திரம்.
அவள் தாடையை வலிக்கப் பற்றி, தன்னைப் பார்க்க வைத்தான்.
“என்னை மீறி போய்ப் பாருடி! எங்களைப் பார்த்தா கேவலமானவங்களா தெரியுதா? குடும்பமே கெட்டது பண்ற மாதிரி பேசுற, எங்களுக்கும் நிலா மேல அக்கறை இருக்கு.
அதிகமா பேசாத! உன்னைப் பார்த்த முதல் பார்வையிலேயே எனக்குப் பிடிச்சது. யாரோ ஒருத்தருக்காக உன்னைக் கல்யாணம் பண்ற அளவுக்கு நான் முட்டாள் இல்ல!”
உன்னைப் போய் மனசார காதலிச்சேன் பாரு… ச்சே, போடி!” என அவளை உதறி தள்ளிவிட்டுப் போனான் பத்ரன்.
திகள்விழிக்கு அழுகையாக வந்தது. ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என ஏதேதோ பேசிவிட்டாள். அவன் தள்ளியது கீழே விழுந்தவளுக்கு இடையில் அடிபட்டுவிட்டது, அந்த இடம் மிகவும் வலிக்க, அழுதுகொண்டே உள்ளே போய்விட்டாள்.
எவ்வளவு நேரம் காத்திருந்தாலும் ருத்ரா இருக்கும் இடம் தெரிய வாய்ப்பே இல்லை.
மயக்கத்திலிருந்து மெதுவாகக் கண்களைத் திறந்தாள் நிலா. கன்னம் விண் விண்ணென வலிக்க, “ஸ்ஆஆஆ…” என்று கன்னத்தைப் பிடித்தவளுக்கு ருத்ரா அறைந்தது ஞாபகம் வர, தான் இருக்கும் இடத்தைச் சுற்றிப் பார்த்தாள்.
வேகமாக அறையைவிட்டு வெளியே வர, யாரையும் காணவில்லை. பயத்தோடு கதவைத் திறந்து வெளியே வந்தவளுக்கோ அதிர்ச்சி!
என்னடா இது நடு மலைக்காட்டுக்குள் வீடு இருக்கு! என்று வாயைப் பிளந்து அந்த இடத்தை பார்த்தாள்.
மேகங்கள் அவளை உரசிச் செல்வது போன்ற பிரமை. குளிரில் தேகம் சிலிர்க்க, கைகளை இதமாகத் தேய்த்துக்கொண்டாள்.
‘இந்த சைக்கோ எங்கே போனான்? என்ன இடம் இது? டைம் என்னனு தெரியலையே! வீட்டுல பேசல. இந்நேரம் அம்மா கலவரம் பண்ணிருப்பாங்க!’ என மூளையில் அடுத்தடுத்து யோசனைகள் வந்து போனது.
தன் பின்னே கேட் திறக்கும் சத்தம் கேட்டு திரும்பியவள், தன் காதல் சைக்கோவைக் கண்டு தலையில் அடித்துக்கொண்டாள்.
‘இவனுக்கு நார்மலா சட்டை போட்டு பழக்கமே இல்லையா? இந்தக் குளிர்லையும் ஆம்பளை சிலுக்கு போல ஜிம் பாடியை காட்டிட்டு வரான்!’ என சிடுசிடுத்தாள்.
அப்போதுதான் அவனை முழுதாகக் கவனிக்க கையில் இரண்டு முயல்கள் இறந்த நிலையில் இருந்தன. நிச்சயம் வேட்டையாடியிருப்பான் என்று புரிய, கோவத்தோடு அவனை நெருங்கினாள்.
