39
விசாகப்பட்டினம் அந்த கடலோர பகுதியில் அந்த நள்ளிரவு அமைதியாக இருந்தது. வானம் கருமேகங்களால் மூடப்பட்டு, எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்ற சூழல். ரோலக்ஸின் பைக் அந்த இருண்ட சாலையில் ஒரு இடி முழக்கத்தைப் போலச் சீறிச் சென்றது. அவன் முகத்தில் பதற்றம் நிழலாடியது, ஆனால் அதே சமயம் ஒரு உறுதி இருந்தது. அவனது ஒரே இலக்கு பைரவனை அடைவது.
அலெக்ஸின் மௌனமான அந்தத் தவிப்பு, அந்த மைக்ரோ டிரான்ஸ்மிட்டர் அனுப்பும் சிக்னல், ஒரு தந்தையின் தேடல், இவை அனைத்தும் அவன் மனதை ஒரு புயலைப் போல உலுக்கிக் கொண்டிருந்தன. அவன் பைரவனின் வீட்டை அடைந்தபோது, அங்கே பைரவன் ஏற்கனவே தயாராக நின்றிருந்தான். அவன் கண்களில் ரோலக்ஸைப் பார்த்ததும் ஒரு புரிதல் ஏற்பட்டது.
“தெரியும் ரோலக்ஸ், நீ வருவேன்னு எனக்குத் தெரியும். அந்த ஊமைப் பையன் விஷயத்துல நீ ஏதோ ஒரு பெரிய முடிவு எடுத்திருக்கன்னு என் மனசு சொல்லுது. சரி வா கிளம்பலாம்!” என்று பைரவன் கூற இருவரும் பயணித்தார்கள்…
இருளான ஒரு சந்தில் அந்தப் பழைய வீடு இருந்தது. அது மிகவும் பழமையான, ஓடு வேய்ந்த வீடு. அந்த நள்ளிரவு நேரத்தில், அந்தத் தெருவே இருளில் மூழ்கியிருந்தது. ரோலக்ஸும் பைரவனும் அந்த வீட்டின் வாசலில் நின்றார்கள். கதவு மிகவும் பலவீனமாகத் தெரிந்தது.
பைரவன் மெதுவாகக் கதவைத் தட்டினான். சில நொடிகள் கழித்து, உள்ளே ஏதோ அசைவு கேட்டது. கதவு கீச்சொலியுடன் திறக்கப்பட்டதும் அங்கே ஒரு தாத்தா நின்றிருந்தார். வயதின் சுமை அவர் தோள்களைச் சற்று வளைத்திருந்தது. விளக்கு வெளிச்சத்தில் அவர் கண்கள் மங்கலாகத் தெரிந்தன.
“யாரு… இந்த நேரத்துல?” என்று அவர் மெல்லிய குரலில் கேட்டார்.
பைரவன் அவருக்குப் பழக்கமானவன் என்றாலும், இன்றைய சூழ்நிலை வேறு. அவன் நேரடியாக உண்மையைச் சொல்லவில்லை. “தாத்தா, நாங்க ஒரு அவசர வேலையா வந்திருக்கோம். நீங்க போஸ்ட் ஆபீஸ்ல வேலை செஞ்சப்ப, தந்தி அனுப்புறதுல கைதேர்ந்தவங்கன்னு கேள்விப்பட்டேன். எங்களுக்கு ஒரு முக்கியமான விஷயத்தை அனுப்பணும், அதுக்கு உங்க உதவி வேணும்,” என்றான் பைரவன்.
சலிப்புடன் தலையசைத்தவர், “தம்பி, காலம் மாறிடுச்சு. இப்போ யாரு தந்தி அனுப்புறா? அதெல்லாம் இப்போ பழங்கதையாப் போச்சு. இப்போ அந்த வசதி எதுவுமே இல்லையே!” என்றவாறே அவர் கதவைச் சாத்த முற்படும்போது..
பைரவன் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு தடித்த பணக் கட்டை எடுத்து அவர் கண்களுக்கு நேராக நீட்டினான். அந்தப் பணத்தின் வாசனை அந்த ஏழ்மை வீட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்தத் தாத்தாவின் கண்கள் விரிந்தன. பணத்தின் அந்தப் பளபளப்பு, அவர் மறந்திருந்த காலத்தை மீண்டும் நினைவூட்டியது. வறுமையின் பிடியில் இருந்த அந்த வீட்டில், அந்தப் பணம் ஒரு தேவலோகப் பொருளாகக் காட்சி அளித்தது.
பணத்தைப் பார்த்ததும், தாத்தாவின் முகத்தில் ஒரு மர்மமான புன்னகை தவழ்ந்தது. “சரி தம்பி, உள்ள வாங்க. யாருக்கும் தெரியாம கதவைச் சாத்திக்கோங்க,” என்று கூறிவிட்டு அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார்.
வீட்டின் உள்புறம் மிகவும் நெரிசலாக இருந்தது. பழைய கோப்புகள், கடிதங்கள், பழைய தந்திப் பெட்டிகள் அங்கங்கே குவிந்து கிடந்தன. தாத்தா மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தார். ஒளியின் நிழல் சுவர்களில் ஆடியது.
“இப்போ சொல்லுங்க, என்ன விஷயம்?” என்று அவர் கேட்டார்.
ரோலக்ஸ் தன் சட்டைப் பையிலிருந்து அந்த மைக்ரோ டிரான்ஸ்மிட்டரை எடுத்து மேஜையில் வைத்தான். அந்தப் சிறிய கருவியைப் பார்த்த தாத்தா திகைத்துப்போனார். “இது… இது ரொம்பப் புது மாடலா இருக்கே? இது எப்படி உங்க கைக்கு வந்தது?”
பைரவன் இடைமறித்தான், “அதெல்லாம் விடுங்க தாத்தா. இதுல இருந்து எங்களுக்கு ஒரு தந்தி செய்தி போகணும். ஆனா, அதுக்குத் தேவையான Morse Code வடிவம் எங்களுக்குத் தெரியாது. அது மட்டும் இல்லாம, இந்தச் சிக்னல் யாருக்கும் தெரியாம, ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ல போகணும். இதை நீங்கதான் செய்யணும்.”
தாத்தா அந்தக் கருவியை ஆவலுடன் கையில் எடுத்தார். அவர் கண்கள் அந்தக் கருவியின் நுணுக்கங்களைப் பார்த்ததும் மின்னின. அவர் மனதில் பழைய ஞாபகங்கள் நிழலாடின. “தம்பி, இது ஒரு புரோட்டோடைப் கருவி. இதை இயக்குறது சாதாரணமான விஷயம் இல்ல. இதுக்குள்ள ஒரு குறிப்பிட்ட சர்க்யூட் இருக்கு. இதை ஒரு மோஸ் கோட் சிக்னலா மாத்துறதுக்கு, நீங்க என்ன தகவல் அனுப்பணும்னு எனக்குச் சொல்லணும்.” என்றார்
அந்த நேரத்தில், பைரவன் இன்னொரு கட்டுப் பணத்தை அவர் கண்ணெதிரே காட்டினான். தாத்தா எந்தக் கேள்வியும் கேட்காமல் மௌனமாக ஆனார். அவரிடம் இருந்த அந்தப் பேராசை, அந்தப் பணத்தைக் கண்டதும் அடங்கி, பணிவாக மாறியது.
பைரவன், மெல்லிய குரலில் சில வார்த்தைகளாலும் தான் சொல்ல விரும்பிய விஷயத்தை விளக்கத் தொடங்கினான். அலெக்ஸ் இருக்கும் இடம், பாபியின் கொடுமை, அவனது தந்தையின் வருகைக்கான அவசியம், இவை அனைத்தையும் அவர் புரிந்துகொண்டார்.
தாத்தா ஒரு பழைய டைரி புத்தகத்தை எடுத்தார். அதில் மோஸ் கோட் குறியீடுகள் இருந்தன. “பாருங்க தம்பி, Dot, Dash இப்படித்தான் இருக்கும். நீங்க அனுப்பப்போற ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு தாளம் இருக்கு. அந்தத் தாளத்துல இந்த பட்டனை அழுத்தணும். இது சரியா அமைஞ்சா, இது ஒரு ரேடியோ அலைகளா மாறி ஆயிரம் மைல்கள் கடந்து போகும்.”
ரோலக்ஸ் அந்தப் பட்டன்களைக் கவனிக்கத் தொடங்கினான். ஒவ்வொரு முறை அவர் அந்த பட்டனை அழுத்தும்போதும், அவனுக்குள் ஒரு மின்சாரம் பாய்ந்தது. அது ஒரு ஊமை இளைஞனின் கடைசிச் சொற்களை அவனது தந்தைக்குக் கடத்தும் ஒரு பாலமாக அவனுக்குத் தோன்றியது.
“தாத்தா, இந்தத் தந்தி சரியா போய் சேருமா, ஏதும் தப்பு நடக்காதே?” என்று பைரவன் கேட்டான்.
தாத்தா மெதுவாகச் சொன்னார், “தந்தி எப்போதுமே பொய் சொல்லாது. இது ஒரு வகை சிக்னல் நேரடியா அங்க போய் சேர்ந்திடும். தந்திக்கு இருக்கும் வலிமை வேறு எந்தத் தகவல் தொடர்புக்கும் கிடையாது.” என்றார்
அந்தச் சிறிய அறையில் இருந்த அமைதி, ஒரு பெரும் புயலின் வருகையைத் தெரிவித்தது. ரோலக்ஸ் தனது விரல்களை அந்த பட்டனில் பதித்தான். அவன் மனதிற்குள் அலெக்ஸ் இருந்தான். அந்த ஊமைப் பையனின் கண்கள், அவனது தவிப்பு, பாபியின் பிடியில் அவன் பட்ட சித்திரவதைகள், இவை அனைத்தும் அவன் மனக்கண் முன் ஓடின.
தன் மூக்குக் கண்ணாடியைச் சரிசெய்து கொண்டு அந்தக் கருவியை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். அந்த மைக்ரோ டிரான்ஸ்மிட்டர் சாதாரணமான கருவி அல்ல என்பதை உணர்ந்தவர், தன் வாழ்நாளில் பார்த்த அந்தப் பழைய தந்தி இயந்திரத்தின் நுணுக்கங்களை நினைவுக் கூர்ந்தார்.
மெதுவாகத் தலையசைத்தவர் அந்தக் கருவியின் பின்னால் இருந்த Connections ஒவ்வொன்றாக ஆராய்ந்தார். இது நவீன கால மைக்ரோ-சிப் என்றாலும், அதன் அடிப்படை தந்தி Morse code மாறவில்லை என்பதை அவர் கண்டுகொண்டார். கையில் ஒரு சிறிய ஒயரை எடுத்து, அந்தச் சர்க்யூட்டில் இணைத்தார்.
அந்தக் கருவியின் பட்டன்களை அவர் அழுத்தத் தொடங்கியதும், மெல்லியதொரு சிவப்பு ஒளி சிமிட்டியது. அது ஒரு தாள கதியில் ஒளியை உமிழ்ந்தது.
‘டாஷ்… டாஷ்… டாட்…’
அந்த அறைக்குள் அந்தக் கருவி செய்த அந்த மாயாஜால ஒலியை ரோலக்ஸ் வியப்புடன் பார்த்தான். அது ஏதோ ஒரு ஊமை மனிதனின் ஆன்மாவைக் கடலுக்கு அப்பால் கொண்டு செல்லும் ஒரு வாகனத்தைப் போலிருந்தது. சில நிமிடங்கள் கழித்து, சுப்பையா தாத்தா ஒரு பெருமூச்சுடன் அந்தக் கருவியை வைத்தார்.
“முடிந்தது. சிக்னல் சென்றுவிட்டது!”
பைரவன் அந்த இடத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தான். தாத்தாவின் கையில் இன்னொரு கட்டுப் பணத்தை நீட்டினான். அந்தப் பணத்தை அவர் வாங்கும் போது, கைகள் நடுங்கின.
“தாத்தா, இது உங்களுக்கே தெரியும், ரொம்பவும் ஆபத்தான விஷயம். இந்தத் தந்தி விஷயமோ, நாங்க இங்கே வந்ததோ, இந்த கருவி பற்றி எதுவுமே யாருக்கும் தெரியக்கூடாது. ஒருவேளை யாராவது இதைப் பத்தி வெளியே தெரிஞ்சதுன்னா…” என்று பைரவன் தன் குரலைத் தாழ்த்தி, ஒருவித மிரட்டலான தொனியில் பேசி முடித்தான்.
அந்தப் பணத்தின் ஈர்ப்பும், பைரவனின் மிரட்டலும் அந்த தாத்தாவை ஒரு கணம் உறைய வைத்தது. “தெரியும் தம்பி, என் வாயைத் திறக்க மாட்டேன். இது என் கல்லறையோடு சேர்ந்து போகட்டும்!” என்று உறுதி அளித்தார்.
பைரவன் ரோலக்ஸை அழைத்துக்கொண்டு வெளியேறினான். கதவைச் சாத்தும்போது, தாத்தாவின் அந்த மங்கலான கண்கள் இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தன.
வாசலை தாண்டி வெளியே வந்தபோது, ரோலக்ஸ் சட்டென்று நின்றுவிட்டான். அவன் அந்தப் பழைய மனிதனைத் திரும்பிப் பார்த்தான். ஏதோ ஒரு ஆழ்ந்த சிந்தனை அவன் முகத்தில். அவன் சட்டென்று தாத்தாவை நெருங்கி, சைகையில் ஏதோ கேட்கத் தொடங்கினான்.
தாத்தாவுக்கு அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது புரியவில்லை. “என்ன சொல்றான்னு எனக்குப் புரியலையே தம்பி?” என்று தாத்தா கேட்க, ரோலக்ஸ் பைரவனைப் பார்த்தான்.
பைரவன் ரோலக்ஸின் சைகைகளை வாசித்தான். ரோலக்ஸின் கண்கள் அந்த மர்மமான மொழியின் மீது ஒரு ஈர்ப்பைக் கொண்டிருந்தன.
“தாத்தா, என் நண்பன் என்ன கேட்குறான்னா… இந்த Morse code எப்படி வேலை செய்யுது? இதை எப்படி முழுசா கத்துக்கிறது? அவனுக்கு வாய் பேச வராது அதனால இந்த மொழியைக் கத்துக்கணும்னு ஆசை!” என்றான் பைரவன்.
தாத்தா ஒரு நிமிடம் ரோலக்ஸையே உற்றுப் பார்த்தார். இந்த நவீன காலத்தில், மாஃபியாக்கள் வன்முறைகளுக்கு நடுவே, ஒரு மனிதன் பழைய காலத்துத் தந்தி மொழியைக் கற்கத் துடிப்பது அவருக்கு விசித்திரமாக இருந்தது.
“ஏன் தம்பி? இந்த மொழி இப்போ யாருக்கும் தேவையில்லை. எதற்கு இதைக் கத்துக்கப் போறே?” என்று கேட்டார்.
ரோலக்ஸ் சைகையிலேயே பதில் சொன்னான். “எந்தச் சத்தமும் இல்லாத இடத்தில், இந்த மொழிதான் என்னைப் பேச வைக்கும். எப்போது ஆபத்து வருமோ, அப்போது யாரிடமும் கேட்கத் தேவையில்லை, நானே என் மொழியைச் சொல்லலாம். எனக்கு இது தேவை!” என்றவனின் கண்களில் இருந்த அந்தத் தீர்க்கமான முடிவைச் தாத்தா உணர்ந்தார்.
ரோலக்ஸ் வெறும் மனிதன் அல்ல, அவன் ஒரு மௌன வீரன். அந்த மொழியைக் கற்பது அவனுக்குத் தற்காப்பு மட்டுமல்ல, அது அவனது ஆயுதமும் கூட.
“சரி தம்பி. இது கஷ்டமான விஷயம் இல்லை. ஆனா இதற்குப் பயிற்சிதான் முக்கியம். நீங்க நாளைல இருந்து வாங்க, நான் உங்களுக்கு இதைச் சொல்லிக் கொடுக்கிறேன்,” என்றார்.
பைரவன் ரோலக்ஸைப் பார்த்தான். ரோலக்ஸின் கண்களில் ஒரு வெற்றிப் புன்னகை. அவன் பைரவனைப் பார்த்து, “நாளையிலிருந்து நீயும் வரணும் பைரவா. நம்ம ரெண்டு பேருக்கும் இது தெரிஞ்சிருக்கணும். எப்பயாவது ஆபத்து வரும்போது, நம்மள நாமளே காப்பாத்திக்க இது உதவும்,” என்று சைகையில் கூறினான்.
பைரவன் சிரித்தான். “சரி ரோலக்ஸ், உனக்காக வர்றேன். நமக்கான மொழியை நம்மளே கத்துக்கலாம்!” என்றான்
ரோலக்ஸும் பைரவனும் அங்கிருந்து கிளம்பினார்கள். மழை இன்னும் வலுவாகப் பெய்து கொண்டிருந்தது. துறைமுகத்தின் அந்தப் பழைய சந்துகளில் அவர்களின் பைக் ஊர்ந்து சென்றது. தாத்தாவின் அந்தப் பழமையான அறை, ஒரு புதிய அறிவின் பிறப்பிடமாக மாறியிருந்தது.
ரோலக்ஸ் ஓட்டிக்கொண்டிருக்க, பைரவன் பின்னால் அமர்ந்திருந்தான். அவனுக்கு ரோலக்ஸைப் பார்த்துப் பெருமையாக இருந்தது. சாதாரணமான கூலிப்படையின் ஆள் என்று தான் நினைத்த ரோலக்ஸ், இப்போது மௌனத்தின் மொழியைப் பேசப் பழகுகிறான்.
“தெரியுமா ரோலக்ஸ், இப்போ நீ கத்துக்கப்போற இந்த விஷயம், நாளைக்கு உன்னைப் பெரிய ஆபத்துல இருந்து காப்பாத்தும். பாபிக்குத் தெரியாத ஒரு ரகசிய மொழி, நம்ம கைல இருந்தா அவனை நாம ஈஸியா ஜெயிக்கலாம்,” என்று பைரவன் உரத்த குரலில் கத்தினான்.
ரோலக்ஸ் தலையசைத்தான். அவனது கவனம் சாலைகளில் மட்டுமல்ல, அந்த மோஸ் கோட் ஒலிகளின் தாளத்தில் இருந்தது.
அவன் வீட்டிற்குத் திரும்பியபோது, மயூரா வாசலில் காத்துக்கொண்டிருந்தாள். ரோலக்ஸின் முகம் மாறியிருந்ததைக் கண்ட அவள், அவன் ஏதாவது சாதித்துவிட்டு வந்திருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டாள்.
ரோலக்ஸ் வண்டியை நிறுத்திவிட்டு, மயூராவின் கையைப் பிடித்தான். அவன் முகம் இப்போது ஒரு புதிய நம்பிக்கையைக் கொண்டிருந்தது.
வீட்டிற்குள் சென்றதும், ரோலக்ஸ் ஒரு காகிதத்தையும் பேனாவையும் எடுத்து, அவர் கொடுத்த சில குறியீடுகளைத் தான் நினைவு கூர்ந்ததை வைத்து வரைந்தான். மயூரா இதைப் பார்த்து வியந்தாள்.
“இதை நீ எதுக்குக் கத்துக்கப் போற ரோலக்ஸ்?”
ரோலக்ஸ் மயூராவிடம் சைகையில் விளக்கினான். “மயூரா, இந்த உலகம் சத்தங்களை நம்பியிருக்கிறது. ஆனா, சத்தம் இல்லாத இடத்துல தான் உண்மைகள் ஒளிஞ்சிருக்கு. அலெக்ஸ் ஊமையாக இருக்கலாம், ஆனா அவனது தந்தை அந்தச் சிக்னலைப் புரிந்துகொள்வார். நாம் இந்த மொழியைத் தெரிந்து கொண்டால், பாபியின் எந்த சதித்திட்டத்தையும் முறியடிக்கலாம். இது வெறும் மொழி மட்டுமல்ல, இது ஒரு பாதுகாப்பு!”
மயூரா அவனைப் பார்த்தாள். அவள் கண்களில் கண்ணீர் துளிகள். அவளது காதல் இப்போது பயத்தோடு கலந்த மரியாதையாக மாறியிருந்தது.
அவளைப் பார்த்துப் புன்னகைத்த ரோலக்ஸ், அவன் கைகளை உயர்த்தி, “மயூரா, நான் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன். அந்தச் செய்தி அலெக்ஸின் தந்தையைச் சென்றடைந்துவிட்டது. இனி நடப்பவை எல்லாம் காலத்தின் கையில்,” என்று சைகையில் கூறினான்.
அந்த சைகையில் இருந்த தெளிவு மயூராவை வியக்க வைத்தது. ரோலக்ஸின் நிம்மதி அலைமோதியது. அவன் சுமந்து வந்த ஒரு பெரும் பாறை, இப்போது அவன் தோள்களிலிருந்து இறங்கிவிட்டது போல் இருந்தது. மயூரா இதைப் பார்த்ததும் தானும் புன்னகைத்தாள்.
அவளது புன்னகையில், “நீ எடுக்கும் எந்த முடிவிற்கும் நான் துணை” என்ற உறுதி இருந்தது.
ரோலக்ஸ் மெதுவாகத் தன் கட்டிலில் சென்று சாய்ந்தான். அந்த அறை முழுவதும் ஒரு விதமான அமைதி. ஜன்னல் திரைகளைத் தாண்டி வந்த நிலவொளி, அவன் முகத்தில் பட்டது. அவன் கண்களை மூடினான். தூக்கம் அவனைக் மெல்லத் தழுவியது.
ஆனால் அந்த இரவு, அவர்களுக்கு உறக்கத்தைத் தரவில்லை. மாறாக, ஒரு புதிய கலையைக் கற்பதற்கான ஆர்வத்தை மட்டுமே தந்தது. அந்தச் சிறிய அறையில், மைக்ரோ டிரான்ஸ்மிட்டர் அனுப்பிய அந்த சிக்னல், இப்போது அவர்களுக்கு ஒரு புதிய வாழ்வியலைக் கற்றுத் தரத் தயாராக இருந்தது.
ஆனால் விடியல் விடியலின் பயங்கரம் அவனுக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
வேட்டை தொடரும் ..⚓
