“பாலா… நீங்க இன்னைக்கு மட்டுமில்ல, எப்பவும் எனக்கு ஒரு நல்ல ஃப்ரெண்ட், அதைத் தாண்டி நான் உங்களை யோசிச்சு பார்க்கல” என்று மலர் தன் முடிவைத் தெளிவாய் உரைத்திட்டாள்.
“மலர்… நீ என் காதலை எப்படி புரிஞ்சுக்கிட்டனு தெரியல, ஆனா நீ என்னை லவ் பண்றன்னு மட்டும் எனக்கு நல்லாத் தெரியும். ஒருவேளை நான் நினைக்கிறது தப்புன்னா… ஒருநாள் கண்டிப்பா லவ் பண்ணுவ. உன் மனசு மாறும், நான் அதுவரைக்கும் வெயிட் பண்றேன். நான் உன்னைத்தான் லவ் பண்றேன், இனியும் லவ் பண்ணுவேன்! என் லைஃப்ல நீ மட்டும் தான்! சரி வா… உன்னை ஹாஸ்டல்ல விட்டுட்டு கிளம்புறேன்” என்று கூறிய பாலா எழுந்து நடந்தான்.
அவனது வார்த்தைகளில் திகைத்துப் போனவள் எழுந்து அவன் பின்னே நடந்தாள். இருவரும் காரில் எதைப் பற்றியும் பேசிக் கொள்ளவில்லை. வழியில் ஒரு கையேந்தி பவனில் வண்டியை நிறுத்தினான்.
“இவன் இங்கலாம் சாப்பிடுவானா?” என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கையில் பாலா தட்டில் அவளுக்குத் தோசைகளோடு வந்தான்.
“வேண்டாம் பாலா…” என்று மலர் மறுக்க, “பிடி… சாப்பிடு!” என்று தட்டை அவளது கையில் திணித்துவிட்டு, அவனும் தோசைகளை வாங்கி உண்டுமுடித்த பிறகு காரை இயக்கினான்.
விடுதி வந்ததும், வாகனத்தை நிறுத்தியவன், அவள் புறம் திரும்பினான். “மனசைப் போட்டு குழப்பிக்காத மலர்! நிம்மதியா தூங்கு. குட் நைட்!” என்று அவன் கூறியதும் பதிலேதும் பேசாமல் இறங்கிக் கொண்டாள். பாலா அங்கிருந்து சென்றுவிட அவளோ செல்லும் அவனது காரையே வெறிக்கப் பார்த்திருந்தாள்.
அறைக்குள் நுழைந்தவளின் வாடிய முகத்தைக் கண்ட அனன்யா, “அடடா… நல்லவர் ப்ரொபோஸ் பண்ணிட்டார் போலயே!” என்று கிண்டலாகக் கேட்க, அவளோ சோகமாக ‘ஆமாம்!’ என்பதுபோல தலையசைத்தாள்.
“நினைச்சேன்… அதுக்கு நீ என்ன பதில் சொன்ன?” என்று கேட்டுவிட்டு தோழியின் பதிலுக்காக அனன்யா காத்திருக்க, “வேணாம்… நமக்குள்ள ஒத்துவராதுனு சொல்லிட்டேன்” என்றாள்.
“அடிப்பாவி… ஏன்டி?” அனன்யா அதிர்ச்சியோடு மலரைப் பார்க்க, “என்னைப் பத்தி நல்லாத் தெரிஞ்ச நீயே இப்படி கேட்டா எப்படி?” என்றாள் வருத்தத்தோடு.
“தெரியுது… இருந்தாலும் உன்னைப் பத்தியும், உன் நிலைமையைப் பத்தியும் நீ அவனுக்கு புரிய வைக்க வேண்டியது தானே. அவனும் புரிஞ்சுப்பான்னு தான் நினைக்கிறேன்”
“இல்லடி… இது சரிவராது. என்னால யாருக்கும் கஷ்டம் வேணாம். அது மட்டுமில்ல, நான் பாலாவை அந்த மாதிரிலாம் நினைக்கல”
“உண்மையை சொல்லு… உன் மனசுல பாலா இல்லையா?” என்று அனன்யா வினவிட, மலர் எதுவும் பேசாமல், தோழியின் மடிசாய்ந்தாள். மலரின் விழிகள் கண்ணீரில் நனைய ஆரம்பித்தன.
மறுநாள் அலுவலகத்தில் பாலா ஒன்றுமே நடக்காததுபோல தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தான். ‘சும்மா இருந்தவளை லவ் பண்றேன்னு மனசை கலைச்சு விட்டுட்டு, ஒண்ணும் தெரியாத மாதிரி இருக்கான் பாரு பொறுக்கி!’ என்று தனது கேபினில் அமர்ந்திருந்த மலர் மனதிற்குள் நினைத்தபடி, வெளியே நின்றிருந்தவனை முறைத்துப் பார்த்தாள்.
பாலா ரகுவிடம் சிரித்தவாறு பேசிக்கொண்டிருக்க, அவனது ஆள் மயக்கும் புன்னகையில்… கன்னக்குழி அழகில் சொக்கிய பாவை அவனையே இமைக்க மறந்து ரசிக்கத் தொடங்கினாள்.
அவள் தன்னைப் பார்ப்பதை கவனித்துவிட்ட பாலா ‘என்ன?!’ என்பதுபோல் புருவம் உயர்த்திட, அதுவும் பேரழகாக இருக்க… கண்கொட்டாமல் அவனைப் பார்வையில் விழுங்கிக் கொண்டிருந்தாள்.
‘இதழ்கள் பொய் சொல்லுமே…
என்றால் கூட நீ சொல்வாயே…
இமைகள் மெய் சொல்லுமே…
உன் பார்வை போதுமே!
நெஞ்சம் தடுமாறுதே…
நீ தான் தேவை
என் மயில் இறகே…
கொஞ்சம் தடம் மாறுதே…
நீ என் பாதையே!’
பெண்ணவளின் செய்கைகளில் ஆண்மகனுக்குள் வெட்கம் பூக்க… கூடுதலாய் மிளிர்ந்தான்! அவளோ நாணத்தை விடுத்து, சுற்றம் மறந்து மிட்டாயை ஆசையாய்ப் பார்க்கும் சிறு குழந்தை போல கன்னத்தில் கை வைத்து, அவனது காந்த விழிகளில் தன்னைத் தொலைத்திருந்தாள்.
அவன் அந்த அலுவலகத்திற்கு வந்த முதல் நாளிலே, அவளை ஈர்த்தது அவனது விழிகள்தான்! ‘இவனை எங்கோ பார்த்திருக்கிறோமே?’ என்று அப்போதே யோசித்தவளது பார்வையோ, அவன் இதழ்களில் நிலைத்தது.
பார்க்கும் எவரையும் ஈர்த்துவிடும், மீண்டுமொரு முறை திரும்பிப் பார்க்கச் செய்திடும் அழகன் பாலா! அவள் மயங்கியதில் வியப்பொன்றுமில்லை.
பாலா மலரை நோக்கி வர, அவளோ கீழே குனிந்துகொண்டாள். கணினியில் பார்வையைப் பதித்தவாறு அவன் வருவதைக் கவனித்தாள். அவன் அருகே வர வர அவளது இதயமோ படபடத்தது!
பாலா அருகில் வந்து விட்டான்…
“மலர்…” அழைத்தும் விட்டான்…
அவள் மெல்ல நிமிர்ந்து அவனை நோக்கினாள். அவனது ஒளி வீசும் பார்வையில் மலருக்கு கண்கள் கூசின… இமைகள் படபடவென அசைந்தன.
அப்படியே அவள் மயங்கி சரிய, வேகமாக அவளைத் தோளில் தாங்கிக் கொண்டான் பாலா. “மலர்… மலர்…” என்று அவளது கன்னம் தட்டி எழுப்பினான்.
அவளோ கண்களை திறக்க முடியாமல், “ஹ்ம்ம்…” என அரை மயக்கத்தில் முனகினாள். சட்டென்று பாலா ஞாபகம் வந்தவனாய், அவளை இருக்கையில் சாய்ந்து படுக்க வைத்துவிட்டு, அவளது கைப்பையிலிருந்த பி.பி மாத்திரையை எடுத்தான். அவளைத் தன் மார்பில் சாய்த்துக்கொண்டு அதை விழுங்க வைத்தான்.
சிறிது நேரம் கழித்து கண் விழித்தவள், பெருமூச்சு விட்டவாறு அவனது மார்பிலிருந்து நிமிர்ந்து நோக்கினாள். அவனது விழியெங்கும் பதற்றம் நிரம்பியிருக்க, “மலர்… ஆர் யூ ஓகே? என்ன பண்ணுது?” என்று வினவினான்.
மெல்ல அவன் மார்பில் கரம் பதித்து விலகி நகர்ந்தவள், அவனை வெற்றுப் பார்வையோடு நோக்கினாள். “என்னாச்சு மலர்? ஏன் அடிக்கடி உனக்கு பி.பி லோ ஆகுது? வா… நாம முதல்ல ஹாஸ்பிட்டலுக்குப் போகலாம்” என்று அவன் அக்கறையோடு பேசிக் கொண்டிருக்க, அவளுக்கோ கண்கள் கலங்கியது.
“பாலா… நான் என்னை பார்த்துக்கிறேன். பிளீஸ்! என்னை கொஞ்சம் தனியா விடுங்க” என்று அவள் எரிச்சலுடன் கூறியதும், முகம் சுருங்கியவன் அங்கிருந்து வெளியேறினான். மலர் மேஜையின் மீது சாய்ந்து அழத் தொடங்கினாள்.
பாலாவின் எண்ணமெல்லாம் அவள் தான் நிறைந்திருந்தாள். ‘திடீரென ரசிக்கிறாள், திடீரென முறைக்கிறாள். நெருங்கி வருகிறாள்; அவளே விலக்கியும் வைக்கிறாள்’ என மனதிற்குள் புலம்பியவன் மீண்டும் அவளைக் காண அவளது கேபினுக்கு வந்தான்.
மலர் அதற்குள் இருந்த வேலையை மட்டும் முடித்துவிட்டு விடுப்பு போட்டு விடுதிக்கு கிளம்பிவிட்டாள். பாலா ரஞ்சனியிடம் அவளைப் பற்றி விசாரித்ததற்கு “அவங்க லீவ் போட்டு கிளம்பிட்டாங்க” என்ற பதிலே கிடைத்தது.
மாலை நேரத்தில் மலருக்கு அலைபேசியில் அழைத்தான். அவளோ ஏற்கவில்லை, குறுஞ்செய்தியும் அனுப்பிப் பார்த்தான், அங்கிருந்து எந்த பதிலும் வரவில்லை.
மறுநாள் மலர் அலுவலகத்திற்குள் நுழைந்ததும், ‘எதற்காக அழைத்திருந்தான்?’ என கேட்க நினைத்து பாலாவைத் தேடி அவனது கேபினுக்குச் சென்றாள். அங்கு அவன் இல்லை. சசியிடம் சென்று விசாரிக்கலாம் என்றால் அவனும் வந்திருக்கவில்லை.
தேநீர் இடைவேளையில் கேண்டீனில் ரகுவும் ராகவ்வும் இருக்க, ‘என்ன ரெண்டு டிக்கெட் வந்திருக்கு, ரெண்டு டிக்கெட் மிஸ்ஸிங்’ என நினைத்தவாறு அவர்களை நோக்கிச் சென்றாள்.
“ரகு… இன்னைக்கு பாலா வரலையா? ஏன்?” என்று வினவியதும், “பாலாவும் சசியும் எங்க கம்பெனி கேஸ் விஷயமாக கோர்ட்டுக்கு போயிருக்காங்க” என்றான்.
“என்ன விஷயம் ஃபிளவர்? எதுக்கு அவனைத் தேடுறீங்க? ஏதாவது முக்கியமா சொல்லணுமா?” என்று ராகவ் விசாரிக்க, “இல்ல… நத்திங் இம்பார்ட்டன்ட். ஒரு ப்ராஜெக்ட் பத்தி பேசணும்” என விளக்கம் தந்தவள், “ஆமா… உங்க கம்பெனி மேல என்ன கேஸ் இருக்கு?” என்றாள் கேள்வியாக.
“கம்பெனிக்கு பைனான்ஸ் பண்ணவங்க ஒர்க் நடக்கக் கூடாதுன்னு ஸ்டே ஆர்டர் வாங்கியிருக்காங்க. புரொடக்ஷன் இல்லாம பணம் வேணும்னு கேட்டா எப்படி? டைம் கேட்டிருக்கோம். அது விஷயமா தான்” என்று ராகவ் அவளிடம் விவரித்தான்.
“ஹ்ம்ம்… ஓகே. நான் பாலாகிட்ட கால் பண்ணி பேசிக்கிறேன்” என்று கூறியவள் அங்கிருந்து நகர்ந்தாள்.
‘எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் இந்த பாலா வெளியே காட்டாம, எப்படி சிரிச்ச முகமா இருக்கான்’ என தன்னோடு யோசித்து வியந்தாள்.
பாலா மறுநாளும் அலுவலகத்திற்கு வரவில்லை, மலருக்கு எதையோ இழந்ததுபோல இருந்தது. ஏனோ தானோ என்று வேலைகளைச் செய்துகொண்டிருந்தாள். அவனது அருகாமையும், புன்னகையும் இன்றி நாளைக் கடத்துவது சிரமமாக இருந்தது.
இருந்தாலும், அவனுக்கு அலைபேசியில் அழைத்தும் பேசவில்லை. அவன் அதைக் காதல் என்று புரிந்துகொண்டால் என்ன செய்வது? அவனது மனதில் வீணாக ஆசைகளை வளர்க்கக் கூடாது என்ற எண்ணத்தில் அப்படியே விட்டுவிட்டாள்.
அடுத்த நாள் அலுவலகத்தில் பாலாவைக் கண்டவளின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம். அவன் அலுவலகத்திற்குள் நுழைந்ததும், மலர் அவனருகே சென்றாள்.
“என்னாச்சு பாலா? ஏன் ரெண்டு நாளா நீங்க வரல?” என்று தவிப்போடு அவள் வினவியதும்,
“ஒரு பர்சனல் ஒர்க், வெளில போயிருந்தேன். எனிதிங் இம்பார்ட்டன்ட்?” அவனோ சாதரணமாக பதில் தந்தான்.
“உங்க கம்பெனி கேஸ் என்னாச்சு?” அவளது கேள்வியில் திடுக்கிட்டு அவளது முகத்தை நோக்கியவன், ‘இவளுக்கு எப்படி இந்த விஷயமெல்லாம் தெரியும்’ என்று அதிர்ந்து பதில் பேசாமல் மௌனமாக நின்றான்.
“சொல்ல இஷ்டம் இல்லன்னா சொல்ல வேணாம்” மலர் அவனது தயக்கத்தை கண்டு உரைக்க, “அதெல்லாம் ஒண்ணுமில்ல. பணம் தரணும், இன்வெஸ்டர்ஸ்கிட்ட டைம் கேட்டிருக்கோம், பணம் ரெடி பண்ணனும். ஸ்டே ஆர்டர் கேன்சல் ஆகிடுச்சுனா புரொடக்ஷன் ஸ்டார்ட் பண்ணிடுவோம்” என்றான்.
சட்டென்று முகம் மாறியவள், “அப்போ நீங்க இந்த ஆபீஸ்ல இருந்து ரிலீவ் ஆகிடுவீங்களா?” என்று தன்னையுமறியாமல் வினவிட, “ம்ம்… ஆமா…” என்றவாறு பாலா அவளை கூர்மையாக நோக்கினான்.
“ஓகே பாலா. மை பெஸ்ட் விஸ்ஸஷ்… சீக்கிரமே பணம் கிடைச்சிரும், உங்க கம்பெனி ரீஸ்டார்ட் பண்ணிடுவீங்க” என்று மெல்லிய புன்னகையுடன் கூறிவிட்டுத் தன் இருக்கைக்கு திரும்பினாள்.
இவர்களது உரையாடல்களை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த பாலாவின் நண்பர்கள், தாடையில் விரல் வைத்து யோசித்தபடி அவனை நோக்கினர்.
“என்னடா ஃபிளவர் இவ்வளவு அக்கறையா உன்னைப் பத்தி விசாரிச்சுட்டு போகுது?” என்று சசி அர்த்தமாய் புன்னகைக்க, “ஒரே ஆபீஸ்ல ஒர்க் பண்றோம், அந்த கார்ட்டஸி தான்” என்றான்.
“டேய்… நேத்து நானும்தான் வரல, ஆனா என்னை எதுவும் கேக்கலியே?” என்று நண்பனின் நியாயமான கேள்வியில் பாலா நமட்டுச் சிரிப்பு சிரித்தான்.
“என்னடா சிரிக்கிற? உண்மையா… லவ்வா? மச்சான்… சிங்கம் மாதிரி சுத்திட்டு இருந்த நீ… ஒரு புள்ளிமான் விரிச்ச வலையில விழுந்துட்டியே” ராகவ் கிண்டலாகச் சிரிக்க, “சூப்பர்டா… அப்படின்னா மலர்கிட்ட எப்போ ப்ரொபோஸ் பண்ணப் போற?” ரகுவோ ஆவலோடு வினவினான்.
“அவகிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன்” என்ற பாலாவின் கூற்றில் திகைத்துப் போன நண்பர்கள், “அடப்பாவி… அதுக்குள்ள கல்யாணம் எதும் பண்ணிட்டியா? உன் பையன் எந்த ஸ்கூல்ல படிக்கிறான்?” என்றனர் கேலியாக.
“இன்னும் அந்த அளவுக்குலாம் போகலடா…” பாலா ஆயாசமாகக் கூற, “நீ போனாலும் போவடா. எங்க கூடவே இருந்துக்கிட்டு, இத்தனை நாளா எங்ககிட்ட நீ எதுவுமே சொல்லல. அமுக்கினி மாதிரி இருந்துகிட்டு அந்த ஃபிளவர் பண்ண வேலையை பாரு” என்று பரிகசித்தான் ரகு.
“டேய் சும்மா இருங்கடா. அவ என்னை வேணாம்னு சொல்லிட்டா” என்று பாலா பெருமூச்சொன்றை வெளிப்படுத்த, நண்பர்கள் மூவரும் தங்களது மார்பில் கை வைத்து அதிர்ந்துபோய் அவனை நோக்கினர்.
காதல் மலரும்🌹
